Pages

Sunday, April 14, 2019

14.04.19 இயற்கை மற்றும் உயிரினங்கள் பாதுகாப்பு ஆர்வலர்களுக்கு ஓர் நற்செய்தி - ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் பற்றி


14.04.19 இயற்கை மற்றும் உயிரினங்கள் பாதுகாப்பு ஆர்வலர்களுக்கு ஓர் நற்செய்தி - ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் பற்றி


தமிழ்நாடு வனத்துறையினரால் அமைக்கப்பட்ட மூன்று குஞ்சு பொரிப்பகங்களிலிருந்து 45 நாட்கள் பாதுகாக்கப்பட்டு தன் முட்டையிலிருந்து வெளி வந்த 950 ஆலிவ் ரிட்லி கடல் ஆமைக் குஞ்சுகள் கடந்த வெள்ளியன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கடலுக்குள் விடப்பட்டன. இந்த ஆண்டு இதுவரை 50000-க்கும் மேற்பட்ட குஞ்சுகள் சென்னை கடற்கரையிலிருந்து இது போன்று கடலுக்குள் விடப்பட்டிருக்கின்றன என்ற செய்தி இயற்கை ஆர்வலர்களைக் கண்டிப்பாக மகிழ்வூட்டும் செய்தி. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40000 முட்டைகள் சேகரிக்கப்பட்டு ஆமைக் குஞ்சுகள் கடலில் செலுத்தப் பட்டிருக்கின்றன. இந்த ஆண்டுதான் இது வரை சேகரித்ததில் மிக அதிகம். ஒரிசாவின் காஹிர்மாதா கடற்கரையும் இந்த ஆமைக் குஞ்சுகள் பொரிப்பதற்கு பெயர் பெற்ற இடம் என்றும் அறிகிறேன்.

ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளைப் பற்றிய சில சுவையான செய்திகள்:
    ·         உலகின் மறையக் கூடிய ஆபத்தில் இருக்கும் உயிரினங்களில் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் இனமும் ஒன்று
     ·         சுமார் 60 முதல் 70 செ. மீ நீளமான இந்த ஆமைகள் சாதாரணமாக 25 முதல் 46 கிலோ கிராம் வரை எடையுள்ளவை
      ·         இவை முட்டையிடும் வழக்கம் வினோதனமான ஒன்று. ஒரே பருவத்தில் சுமார் ஒரு லட்சம் ஆமைகள் கூட்டம் கூட்டமாக இரவு பகலாக பல நாட்களூடே முட்டையிடுவதற்கு வெப்பமண்டல பகுதியிலிருக்கும் ஒரு சில கடற்கரைகளுக்கு வந்து சேருகின்றன. ஸ்பானிஷ் மொழியில் இதை “அர்ரிபடஸ்” என்று அழைக்கின்றனர். “அர்ரிபடஸ்” என்றால் “வந்து சேர்வது” என்று அர்த்தமாம். இந்த “அர்ரிபடஸ்” நிகழ்வு உலகில் ஒரு சில கடற்கரைகளில் மட்டுமே நடக்கின்றது. அதில் முக்கியமானவை தென் அமெரிக்காவின் கோஸ்டா ரீக்கா, மெக்சிகோ, மற்றும் இந்தியா. எதனால் இப்படி ஒரு வழக்கம் இந்த இனத்துக்கு ஏற்பட்டது என்பது இதுவரை புரியாத ஒரு புதிர்.
    ·         உலகம் முழுவதிலும் சுமார் பத்து லட்சத்துக்கும் மேலான ஆலிவ் ரிட்லி ஆமைகள் வாழ்வதாக ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
  
உலகின் பல நாடுகளிலும் இந்த இன ஆமைகளின் முட்டைகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டிருந்தாலும் தென் அமெரிக்கா போன்ற இடங்களில் இந்த ஆமை இனத்தின் சுவையான முட்டைகளை உணவுக்காக வேட்டையாடும் பழக்கம் காணப்படுவதால் இந்த இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது என்று ஒரு நூலில் படித்தது ஞாபகம்.

அது தவிர, கடலில் மீன் பிடிக்கும் கருவிகளில் மாட்டிக் கொள்வதாலும், பல நாடுகளில் கடற்கரை விரிவாக்கத் திட்டங்களாலும் இந்த இனத்தின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கோஸ்டா ரிக்காவில் ஆஸ்சனல் (Ostional) என்ற இடத்தில் ஆலிவ் ரிட்லீ ஆமைகளின் முட்டைகளை சேகரிக்கும் திட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு உள்ளூர் பொருளாதாரத்துக்கு மிகவும் உதவியிருக்கிறது என்றும் அதனால் அங்கீகரிக்கப்படாத முட்டைகள் வேட்டையாடுவது தடுக்கப்பட்டு இந்த உயிரினத்துக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கிறது என்றும் சிலர் கூறுகிறார்கள்.
பொதுவாக ஆலிவ் ரிட்லி ஆமைகள் பசிஃபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் போன்ற வெப்பமண்டலத்தைச் சேர்ந்த கடற் பகுதிகளில் வாழ்கின்றன.

மேலும் தகவல் விரும்புவோர் கீழ்கண்ட வலையில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்: https://en.wikipedia.org/wiki/Olive_ridley_sea_turtle#Economic_importance