Pages

Sunday, March 28, 2021

23.03.2021 மெத்தப் படித்த முட்டாள்கள்

 23.03.2021 மெத்தப் படித்த முட்டாள்கள்

மீண்டும் ஒரு சொந்த அனுபவத்தைப் பற்றியே எழுதுகிறேன்.

2000-ஆம் ஆண்டு என் மகளும், அதே ஆண்டில் படிக்கச் சென்ற என் மகனும் அமெரிக்காவிலேயே வேலை பார்த்து வந்ததினால் நானும் என் மனைவியும் அங்கே அடிக்கடி சென்று வருவது ஒரு வாடிக்கையாகி விட்டது.

அப்படி அங்கே போன ஒரு சமயம் - 2004-05-ஆம் ஆண்டு என்று நினைவு - என் மகன் டெட்ராய்ட்டில் வேலை பார்த்து வந்தான். நாங்கள் போயிருந்த சமயம் என் தம்பியும் எங்களுடன் ஒரு சில நாட்களைக் கழிப்பதற்கு சிகாக்கோவிலிருந்து ஒரு காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு டெட்ராய்ட் வந்திருந்தான்.

ஒரு வார இறுதியன்று  நான், என் மனைவி, என் தம்பி என் மகன் நால்வரும் என் மகனின் காரில் அருகிலுள்ள (சுமார் 60 மைல் தொலைவு) போர்ட் ஹ்யூரான் (PORT HURON) என்ற இடத்துக்குச் சுற்றிப்பார்க்கத் தீர்மானித்துக் கிளம்பினோம். அந்த இடத்துக்கு நான் செல்வது இரண்டாம் முறை.

போர்ட் ஹ்யூரான் மிக அழகான இடம். அங்கிருந்து ஒரு பிரம்மாண்டமான பாலத்தைக் கடந்தால் கனடா நாடு வந்து விடும். நீல நிறத்தில் ஓடும் செயின்ட் க்ளேர் ஆற்றுக்கு (ஹ்யூரான் ஆறு) குறுக்கே “ப்ளூ வாட்டர் ப்ரிட்ஜ்” என்றழைக்கப்பட்ட பாலம் கட்டப்பட்டிருந்தது. மொத்தம் 6109 அடி நீளம் (சுமார் 1.8 மைல்). ஆற்றின் குறுக்கே 922 அடி நீளம். கடல் போலத் தோற்றமளிக்கும் தெளிந்த நீர் ஏரி (Fresh Water Lake). உப்புத் தண்ணீர் இல்லை. ஆற்றையொட்டி அழகான பூங்கா, நடைபாதை, தரைதட்டிய கப்பல் ஒன்றின் அருங்காட்சியகம். ஒரு நாள் பொழுதை அமைதியாகக் கழிக்கச் சிறந்த இடம். எனக்கு மிகவும் பிடித்த இடமும் கூட.

ஆற்றின் அருகே இரண்டு மணி நேரத்தை ஜாலியாகக் கழித்து விட்டு அங்கிருந்து போர்ட் ஆஸ்டின் என்ற இன்னொரு இடத்துக்குப் போவதற்காகக் கிளம்பினோம்.

கொஞ்ச தூரம் வந்தவுடனேயே “கனடாவுக்குப் பாலம்” என்ற பெரிய பெயர் பலகையைக் கண்டோம்.

“ஆஹா, பாலத்தை அருகிலிருந்து பார்க்கலாமே? இன்னும் அழகாக இருக்குமே!’ என்று எங்களில் யாரோ ஒருவர் தூண்டில் போட, “Why not?” என்று அந்தப் பாலத்துக்குச் செல்லும் ஒரு சரிவுப்பாதையில் (Ramp) மேலே காரை விட்டோம். ஒரு பெரிய ஆபத்தில் மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பு எங்களில் யாருக்கும் வரவில்லை.

“After all, பாலத்தைப் பார்த்து விட்டு திரும்பிவிடப் போகிறோம்,” என்றுதான் எல்லோரும் நினைத்திருந்தோம்.

ஆனால், அந்த சரிவுப்பாதையில் காரைத் திருப்புவதற்கு வழியில்லை. சரிவுப்பாதை நேராக பாலம் தொடங்கும் இடத்துக்கு அருகே எங்களை கொண்டு சென்றது. அங்கே மட்டும் ஒரு சில கான்க்ரீட் தடுப்புகளும், போலீஸ் வாகனங்கள் மட்டும் செல்வதற்கு ஒரு சிறிய தற்காலிகத் தடுப்பும் இருந்தது.

எங்கள் காருக்கு எதிரே சுமார் 500 அடி தூரத்தில் பாலம். பாலத்துக்கு முன்னே ஒரு சிறிய பூத். வேறு ஈ, காக்கை கண்ணில் படவில்லை.

காரை அங்கேயிருந்து திருப்பிவிடலாம் என்று பார்த்தால், திருப்புவதற்கு எந்த வழியும் இல்லை. நாமாகப் போய் அந்தத் தற்காலிக தடுப்பை நம்ம ஊரில் செய்வது போல எல்லாம் எடுக்க முடியாது. மாட்டிக்கொள்வோம். சரி, பூத்துக்குச் சென்று அங்கிருப்பவரிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்தோம்.

அப்பொழுதாவது, அங்கேயே காரை நிறுத்தி விட்டு வெளியே இறங்கி நடந்து சென்று கேட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு சிலர் காரில் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து விட்டால் காரை விட்டு இறங்க மாட்டார்கள். காரிலிருந்தபடியே ஜன்னலை இறக்கித் தான் விசாரிப்பார்கள்.

அந்தத் தவறை என் மகனும் செய்தான். எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பு வரவில்லை. இளம் கன்று பயம் அறியாது.

மேலும் அமெரிக்காவில் பல இடங்களில் சுதந்திரமாக, தைரியமாக எங்கு வேண்டுமானாலும் போகலாம், எந்த அதிகாரியிடமும் பேசலாம். அதிகாரிகள் உதவியாகவே இருப்பார்கள். யாரும் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொதுவாகக் கண்டுகொள்ளாத நாடு. 2001-ல், World Trade Center –ஐத் தகர்த்தெறிந்த பிறகு நிலைமை பலவாக மாறியிருக்கிறது.

காரை நேரே அந்த பூத் அருகே என் மகன் எடுத்துச் சென்று விட்டான். கார் போகும் பாதையும் குறுகிக்கொண்டே போனது. இரண்டு கார்கள் போகும் அளவே ஒவ்வொரு பக்கத்திலும் இருந்தது.

பூத் அருகே சென்று அங்கே இருந்த அதிகாரியிடம் என் மகன் கேட்டான். “நாங்கள் எப்படித் திரும்பிப் போவது?” என்று.

கேள்விகளை எப்பொழுதும் சரியாகக் கேட்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சினை.

“நேராகச் சென்று ஒரு லூப் அடித்துத் திரும்பி வாருங்கள்” என்று விட்டார்.

வேறு கேள்விகளை நாங்கள் கேட்கவில்லை. கேட்டிருந்தால் சரியான பதில் கிடைத்திருக்குமோ என்னவோ?

காரை நேராகப் பாலத்துக்குள் எடுத்துச் சென்று விட்டான். நாங்கள் கடந்து வந்தது அமெரிக்க எல்லை என்ற பிரக்ஞையே எங்கள் யாருக்கும் இல்லை.

பாலத்தின் அழகை, தூரத்தே தெரிந்த ஏரியின் அழகை, பிரம்மாண்டத்தை ரசித்துக்கொண்டே பாலத்தை கடந்து முடிந்து விட்டோம்.

பாலத்தின் அடுத்த பக்கம் காரைத் திருப்புவதற்கு எந்த வசதியும் இல்லை. பாதை ஒரு பெரிய கட்டிடத்தையொட்டி எடுத்துச் சென்றது. ஒரு பக்கத்திலிருந்து ஒரு அதிகாரி எங்கள் காரை நிறுத்தச் சொன்னார். காரை நிறுத்தினோம். காரை ஓரமாக எடுத்து வரச் சொன்னார்.

“Your papers, please” என்றார் அதிகாரி.

அப்பொழுதுதான் மண்டையில் ‘பொட்’ என்று ஓங்கி சுத்தியலால் தட்டியது போல இருந்தது.

“This is Canada,” என்றார் அதிகாரி.

நாங்கள் புரிந்து கொண்டோம். சரியாகத் தெரிந்து கொள்ளாமல் அமெரிக்க எல்லையைக் கடந்து கனடா நாட்டுக்குள் வந்து விட்டோம் என்று.

என் மகனிடம் கார் ஓட்டும் உரிமம் இருந்தது எடுத்துக் காட்டினான். அந்த சமயத்தில் அவன் அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கான H1 விசாவில்தான் இருந்தான். அமெரிக்காவில் நிரந்தரமாகக் தங்கும் உரிமை (PERMANENT RESIDENTS/US GREEN CARD HOLDERS) பெற்றவர்களும் அமெரிக்க குடிமக்களும் சுதந்திரமாக பாஸ்போர்ட் மட்டும் காட்டி கனடாவுக்குள் உள்ளே நுழையலாம். மற்றவர்களிடம் விசா இருக்க வேண்டும். இல்லையென்றால் கனடாவுக்குள் நுழைய முடியாது.

“Where is your visa?”

எங்களுடைய ஆவணங்களைக் கேட்டார். என்னிடமும் என் மனைவியிடமும் எங்கள் பாஸ்போர்ட்டின் ஜெராக்ஸ் நகல் மட்டுமே வைத்திருந்தோம். ஒரிஜினலை நாங்கள் பொதுவாக வெளியில் எடுத்துச் செல்வதில்லை. எங்கேனும் தொலைந்துவிடுமோ என்று பயம்.

“Where is the original?” என்றார். பேந்தப் பேந்த முழித்தோம்.

என் தம்பியிடம் அவனுடைய கார் ஓட்டும் உரிமத்தின் ஜெராக்ஸ் நகல் மட்டுமே இருந்தது. அவனும் ஒரிஜினலைக் கொண்டு வரவில்லை.

“You know, you are trying to enter Canada illegally without any papers?” என்றார் அதிகாரி.

எனக்கும் என் மனைவிக்கும் உடலெல்லாம் வியர்த்தது. என் மகன் நடந்ததை விவரித்தான். நாங்கள் கனடாவுக்குச் செல்வதற்காக வரவில்லை. அந்தப் பாலத்தை மட்டும் பார்த்து விட்டு திரும்புவதாகத்தான் இருந்தோம். ஆனால், திரும்புவதற்கு வழியில்லை. மேலும் பாலத்தின் அந்தப் பக்கத்தில் இருந்த பூத்தில் அமர்ந்திருந்த அதிகாரி எங்களைப் பாலத்தை கடந்து லூப் எடுத்து திரும்புங்கள் என்று கைகாட்டி விட்டு விட்டார். எங்களுக்கு இந்தப் பக்கம் கனடா நாடு என்ற பிரக்ஞை இல்லை. தவறு செய்து விட்டோம் என்று விவரித்தான்.

என் மகனும் ‘நெர்வசாக’ இருந்தானா என்பது எனக்குத் தெரியாது. என் தம்பியும் எங்கள் நிலையை எடுத்துச் சொல்ல முயற்சி செய்தான்.

எங்கள் நால்வரையும் அலுவலகத்துக்குள்ளே அழைத்துச் சென்றனர். எங்களிடம் இருந்த நகல்களையும் என் மகனின் ஓட்டுனர் உரிமத்தையும் உள்ளே எடுத்துச் சென்று விட்டனர். மாட்டிக்கொண்ட திருடர்கள் போல நாங்கள் ஒரு பெஞ்சில் உள்ளம் பதைபதைக்க உட்கார்ந்திருந்தோம்.

ஒன்றிரண்டு முறை வேறு சில அதிகாரிகள் வந்து எங்களை விசாரித்தனர். நாங்கள் செய்த தவறை ஒத்துக்கொண்டோம். ஒரிஜினல் பாஸ்போர்ட் இருந்தால் கூட ஒரு மாதிரியாக தைரியமாகச் சமாளிக்கலாம். ஆனால், ஒரிஜினல் எங்களிடம் இல்லை.

அவர்கள் எங்களை கைது செய்துவிடுவார்களோ என்று பயம் வேறு பிடித்துக்கொண்டது.

சுமார் ஒரு மணி நேரம் எங்களைத் தவிக்கவிட்ட பிறகு ஒரு அதிகாரி எங்களிடம் தனித்தனியாக ஒரு காகிதத்தைக் கொடுத்து கையெழுத்து கேட்டார்.

“எங்களுக்கு வேறு வழியில்லை … எங்கள் நாட்டிற்குள் சட்டத்தை மீறி நுழைய முனைந்ததாகக் கூறி உங்களை நாங்கள் கைது செய்திருக்க முடியும் … உங்களைப் பார்த்தால் அப்பாவியாகவும் இருக்கிறது. இதில் கையெழுத்துப் போட்டுவிட்டு நீங்கள் திரும்பிப் போகலாம் …” என்றார்.

அந்தப் படிவத்தில், நாங்கள் கனடாவில் குடியுரிமை கேட்டதாகவும் எங்களிடம் சரியான ஆவணங்கள் இல்லாததால் மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. அதிகாரியின் முகத்தைப் பார்த்தோம். “இது எங்களுடைய அமெரிக்க விசாவில் பிரச்சினையாகுமே” என்றோம்.

“வேறு வழியில்லை…” என்றார்.

ஆண்டவனைப் பிரார்த்தித்துக்கொண்டு நாங்கள் எல்லோரும் அந்தப் படிவத்தில் கையெழுத்திட்டு அவரிடம் கொடுத்தோம்.

“திரும்பப் போகும்போது அமெரிக்க எல்லையில் பிரச்சினை வருமா?” என்று அந்த படிவத்தை சுட்டிக்காட்டிக் கேட்டோம்.

“அதை அவர்கள் சொல்வார்கள் … நீங்கள் போகலாம்.” என்று சொல்லி எங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட எல்லா காகிதங்களையும் திரும்பக் கொடுத்துவிட்டு எங்கள் பதிலுக்குக் கூடக் காத்திராமல் அவர் அறைக்குள் சென்று விட்டார்.

எங்கள் எல்லோருக்கும் ‘திக், திக்.’ ரத்தம் கொதித்துக்கொண்டிருந்தது. காரில் ஏறி மீண்டும் ப்ளூ வாட்டர் பிரிட்ஜின் அழகைக்கூட ரசிக்க முடியாமல் பாலத்தைக் கடந்து அமெரிக்க எல்லைக்கு வந்து விட்டோம்.

இங்கேயும் எங்களை நிறுத்தி வைத்து விட்டார்கள். நாங்கள் நடந்ததை முழுவதும் சொன்னோம். கனடா எல்லையில் அதிகாரிகள் கொடுத்த காகிதத்தையும் காட்டினோம். எங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டோம். ஒரிஜினல் காகிதங்கள் எடுத்து வராமல், பாலத்தைப் பார்க்கும் ஆசையில், அமெரிக்க எல்லையில் ஒரு பூத் ஏஜெண்ட்டிடம் சரியான தகவலைப் பெற்றுக்கொள்ளாமல் கனடாவுக்குள் நுழைந்து திரும்பி வந்ததை எடுத்துச் சொன்னோம்.

எங்களை உட்கார வைத்து விட்டு, எங்களுடைய காகிதங்களை உள்ளே எடுத்துச் சென்று வெகு நேரம் கழித்து திரும்பி வந்தார்.

“Look, நீங்களெல்லாம் வெளிநாட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கோ அல்லது சுற்றிப் பார்பதற்கோ வந்தவர்கள். ஒரு வெளிநாட்டில் இருக்கும்போது எல்லா நேரத்திலும் உங்களுடைய ஒரிஜினல் பாஸ்போர்ட், விசா காகிதம், ஓட்டுனர் உரிமம் எல்லாமே உங்களுடன் இருக்க வேண்டும். முக்கியமாக அண்டை நாடுகள் எல்லைப் பக்கம் சுற்றும்போது அவசியம். அது இல்லாமல் இப்படிச் சுற்றுவது சட்டப்படி குற்றம். இங்கேயும் உங்களை கைது செய்யலாம். ஆனால், உங்களைப் பார்த்தால் அப்பாவியாகத் தான் இருக்கிறீர்கள். அதனால், இந்த முறை உங்களை உள்ளே போக விடுகிறேன். இது போல மீண்டும் தவறு செய்யாதீர்கள். All the best.” என்று சொல்லி எங்களை விட்டு விட்டார்.

அவருக்கு நன்றி கூறி “தப்பித்தோம், பிழைத்தோம்” என்று கடவுளுக்கும் நன்றி கூறி விடை பெற்றுக்கொண்டோம்.

கடவுள் கிருபையால் வேறு எந்தத் தொந்திரவும் எங்களுக்கு இருந்ததில்லை.

படித்தவர்களாக இருந்தும் முட்டாள்தனமாக நடந்துகொண்டோமே என்று எங்களை நாங்களே கடிந்துகொண்டோம்.

என்னதான் மனதில் ஒரு நடுக்கம் இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்த பிறகு ஆஸ்டின் போர்ட்டைப் பார்க்காமல் போகக்கூடாது என்று அங்கும் சென்று பெயரளவுக்குப் பார்த்து விட்டு வீடு திரும்பினோம்.

இப்படி முட்டாள்தனமாக நடந்து கொண்டது அது முதன் முறையல்ல.

Friday, March 19, 2021

19.03.2021 நானும் பரீட்சைகளும்

 19.03.2021 நானும் பரீட்சைகளும்

சிறிய வயதிலிருந்தே நன்றாகப் படிக்கும் மாணவனாக நான் இருந்து வந்திருக்கிறேன். பள்ளி நாட்களிலும் சரி கல்லூரி நாட்களிலும் சரி வகுப்பில் முதல் இடத்தில் (தவறிப்போனால், இரண்டாம் இடத்தில்) எப்போதும் இருந்திருக்கிறேன். அந்தப் பெருமை, இறுமாப்பு இன்று வரை எனக்கு உண்டு.

ஆனால், நான் ஒரு புத்திசாலி என்று என்னைப் பற்றி என்றும் நினைத்தது கிடையாது. கடுமையாக உழைக்கத் தயாராக இருப்பவனாகவே என்னைப் பார்த்திருக்கிறேன். என்னுடன் படித்த ஒரு சில மாணவர்கள் என்னை விட அதிக புத்திசாலிகளாக இருந்திருக்கிறார்கள்.

அனுபவம் 1

அது போன்ற ஒரு நிலையில் - நான் ஏழாம் வகுப்போ, எட்டாம் வகுப்போ - சரியாக நினைவில்லை – படிக்கும் நேரம் திருநெல்வேலி டவுணில் எங்கள் தெருவில் ஒரு ஹிந்தி டீச்சர் இருந்தார். நன்றாகச் சொல்லிக்கொடுப்பார். குடும்பப் பெண்மணி. பல மாணவர்களை தக்ஷிண பாரத் ஹிந்தி பிரச்சார சபா நடத்தி வந்த பரீட்சைகளுக்கு பாடங்களைச் சொல்லிக் கொடுத்து தயார் செய்து அனுப்பி வந்தார். அவரிடம் நான் ஹிந்தி கற்றுக்கொள்வதற்குச் சேர்ந்தேன்.

நான் நன்றாகப் படிக்கும் மாணவன் என்ற முறையில் ‘ப்ராத்மிக்’ என்ற முதல் நிலை பரீட்சையைத் தாவி இரண்டாம் நிலையில் இருந்த ‘மத்யமா’ பரீட்சையை நேராக எழுதலாம் என்று அந்த டீச்சர் கருதினார்.  

நானும் ஒத்துக்கொண்டேன். என்ன, கொஞ்சம் கூடுதலாகக் கடினமாக உழைக்க வேண்டும்.

நான் ஒத்துக்கொண்டதற்கு ஒரு காரணமும் உண்டு.

எங்கள் தெருவில் இருந்த ஒரு தொடக்கநிலைப் பள்ளியில் நான் இரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். நல்ல பள்ளிக்கூடமாக இருந்தும் ஏனோ அந்தப் பள்ளிக்கு “ஊசை வடைப் பள்ளி” என்ற ஒரு பட்டப்பெயர் நிலவி வந்தது. அந்தப் பள்ளி என்னை இரண்டாம் வகுப்பிலிருந்து நான்காம் வகுப்புக்கு உயர்த்தி அனுப்பியது. அதாவது இரட்டை உயர்த்தல். (Double promotion). மிகவும் அரிதாக இது போல அன்றெல்லாம் வழக்கம் இருந்து வந்தது.

அப்படிக் கிடைத்த இரட்டை உயர்த்தலால் பின்னால் எஸ். எஸ். எல். சி பரீட்சை எழுதும்போது எனக்கு பரீட்சை எழுதும் வயதுக்கான தகுதி இல்லை என்பது போல ஒரு நிலையை ஏற்படுத்தியது. ஆனால், ஒரு சில மாதங்கள் கணக்கில் நான் தப்பித்து விட்டேன்.

இரட்டை உயர்த்தல் பெற்ற மாணவன் என்ற இறுமாப்பும் எனக்கு சிறிய வயதிலிருந்தே இருந்து வந்தது. அதனால், அபரிதமான தன்னம்பிக்கை எனக்கு இருந்தது. பரீட்சையில் தோல்வி என்பது எனக்குக் கிடையாது என்ற இறுமாப்பும் இருந்தது.

அதனால், நேராக ஹிந்தி பிரச்சார சபாவின் மத்யமா பரீட்சை எழுதுவதற்கு எனக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. பரீட்சைக்கு என்னைத் தயார் செய்துகொண்டு எழுதினேன்.

Straight pass…

எனக்கு மீண்டும் பெருமிதம். அதே பெருமையில் அடுத்த பரீட்சையான ராஷ்ட்ர பாஷா பரீட்சையை எழுதினேன். நன்றாகத்தான் படித்திருந்தேன். எழுதியிருந்தேன்.

ஆனால், நான் வெற்றி பெறவில்லை. முதன் முறையாகத் தோல்வியைத் தழுவினேன். பெரிய அவமானமாக இருந்தது.

“சீச்சி, இந்தப் பழம் புளிக்கும்” என்று ஹிந்தி பரீட்சைகளையே உதறித் தள்ளினேன். அதன் பின்பு ராஷ்ட்ரபாஷா பரீட்சையை மீண்டும் எழுத முயற்சிக்கவில்லை. என்னுடைய இறுமாப்பு இடம் கொடுக்கவில்லை.

அதன் பிறகு நான் எஸ். எஸ். எல். சி பரீட்சையில் மதிப்பெண்கள் வரிசையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மூன்றாவது மாணவனாக தேர்ச்சி பெற்றேன்.

பி. எஸ். சி இளநிலை பட்டதாரி படிப்பில் மாவட்டத்தில் “D” (DISTINCTION – 75% AND ABOVE) பெற்ற இரண்டு மாணவர்களில் நான் ஒருவனாக இருந்தேன்.

பின்னர், திருச்சியில் செயின்ட் ஜோஸஃப் கல்லூரியில் எம். எஸ். சி படித்து முதல் வகுப்பில் பாஸ் செய்தேன். பல்கலைக் கழகத்தின் அறிவிக்கப்படாத தர வரிசையில் நான்காம் இடத்தில் இருந்ததாக அதிகாரமற்றத் தகவல்கள் எனக்குக் கிடைத்தன.  

அனுபவம் 2

அதற்கடுத்து, வங்கியில் 1970-ல் அதிகாரியாக சேர்ந்தவுடன் மீண்டும் ஒரு பரீட்சைக்குத் தயார் செய்ய வேண்டியிருந்தது. CAIIB என்ற ஒரு வங்கித் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றால் என் சம்பளத்தில் ஒரு படி (increment) – மாதத்துக்கு முப்பது ரூபாய் – கிடைக்கும் என்று ஒரு விதி இருந்தது. அந்த முப்பது ரூபாய் அன்று எனக்கு மிக முக்கியமாக இருந்தது. ஒவ்வொரு அதிகாரியும் கண்டிப்பாக அந்த CAIIB பரீட்சையை விரைவில் பாஸ் செய்யவேண்டும் என்று வங்கியும் எதிர்பார்த்தது.

CAIIB பரீட்சையில் இரண்டு பகுதிகள். ஒவ்வொன்றிலும் ஐந்து பாடங்கள் - தாள்கள். CA படிப்பது போன்று மிகவும் கடினமான பரீட்சை CAIIB பாஸ் செய்வது அவ்வளவு சுலபமில்லை. தேர்வு விகிதமும் மிகவும் குறைவாகவே இருந்து வந்தது.  நான்கில் ஒருவரே பாஸ் செய்து வந்தனர் என்று நினைவு.

என்னுடன் வேலை பார்த்து வந்த கௌரிசங்கர் என்ற நல்ல நண்பர் – என்னை விட வயதில் மூத்தவர் - என் அண்ணனைப் போல நான் கருதும் இனிய நண்பர் – வங்கியில் சேருவதற்கு முன்பாக திருச்சியில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணி புரிந்து வந்தவர் – என்னை நன்றாக ஊக்குவித்தார்.

நானும் சரி, கௌரிசங்கரும் சரி விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர்கள். வங்கித் தொழிலுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இருந்தும் குடும்ப நிலையைக் கருதியும், கூடுதல் வருமானத்திற்காகவும், எதிர்காலத்தில் பதவி உயர்வுகளையும் மனதில் கொண்டும் வங்கியில் சேர்ந்தவர்கள். என்னைப் போல மேலும் பலர் அன்று இருந்தனர்.

நானும் கௌரிசங்கரும் கோயம்புத்தூரில் ராஜா வீதிக்கு அருகில் ஒரு லாட்ஜில் ஒரே அறையில் தங்கி வந்தோம். இருவரும் தினமும் மாலை வேளைகளில் அந்த லாட்ஜின் மொட்டை மாடிக்குச் சென்று CAIIB பரீட்சைக்குத் தயார் செய்தோம். அதற்காக, பயிற்சி வகுப்புகள் எதிலும் சேரவில்லை. நன்றாகவேத் தயார் செய்தோம். புரியாத கடினமான பாடங்களையும் எப்படியோ புரிந்துகொண்டு தயார் செய்தோம். கௌரிசங்கர் நல்ல புத்திசாலி. கல்லூரியில் விஞ்ஞானத்தில் படித்திருந்தாலும் எப்படியோ புதிய பாடங்களை என்னை விட நன்றாக, எளிதாகப் புரிந்து கொண்டவர். என் சந்தேகங்களுக்கு அவரே எனக்கு குரு.

பொதுவாக, பலரும் பாடம் பாடமாக எழுதித்தான் CAIIB பரீட்சையை எழுதி வந்தார்கள். ஆனால், நாங்கள் இருவரும் CAIIB பரீட்சையில் முதல் பகுதியில் எல்லா 5 தாள்களையும் ஒரே முயற்சியில் பாஸ் செய்யத் தீர்மானித்து உழைத்தோம்.

CAIIB முதல் பகுதி 5 தாள்களையும் ஒரே முயற்சியில் எழுதினோம். ஆவலுடன் பரீட்சை முடிவுகளுக்குக் காத்திருந்தோம். முடிவுகளும் வந்தன.

இருவரும் ஒரே முயற்சியில் CAIIB பரீட்சையின் முதல் பகுதியில் பாஸ்.

வானத்துக்கும் பூமிக்கும் என்று குதித்தேன். மிகப் பெரிய வெற்றி. எங்களுடன் வேலை பார்த்த பலருக்கு எங்கள் மேல் பொறாமை. முதலாவது ஊக்கப் படி முப்பது ரூபாய் எனக்குக் கிடைத்தது. பெரு மகிழ்ச்சி.

அதே சூட்டில், இரண்டாம் பகுதிக்கும் தயார் செய்யத் தீர்மானித்தோம். எல்லாப் பாடங்களுமே எங்களுக்கு முற்றிலும் புதியதான பாடங்கள். புரிந்துகொள்வதும் கடினமாக இருந்தது என்பதால் ஐந்து தாள்களையும் ஒரே தவணையில் எழுதும் விஷப் பரீட்சை வேண்டாம் என்று தீர்மானித்து இரண்டு தவணைகளாக எழுத முடிவெடுத்தோம். முதல் தவணையில் மூன்று தாள்களை முயற்சித்தோம். என்னென்ன பாடங்கள் என்பது இப்பொழுது மறந்து விட்டது.

கடினமாக உழைத்து CAIIB பரீட்சையின் இரண்டாம் பகுதியின் மூன்று பாடங்களுக்கான தாள்களை எழுதினோம். முடிவுகளுக்காக ஒரு மூன்று மாதம் காத்திருந்தோம். அதீத தன்னம்பிக்கையோடு, மீதமிருந்த இரண்டு தாள்களுக்கும் தொடர்ந்து தயார் செய்ய ஆரம்பித்தோம். தொய்வு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்தோம்.

முடிவுகளும் வெளியாயின. மூன்று பாடங்களில் Commercial Law பாடத்தில் 49 மதிப்பெண்கள் பெற்று நான் தோல்வியுற்றேன். குறைந்த பட்சம் 50 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

துவண்டு விட்டேன். இரண்டாம் முறையாக பரீட்சையில் ஒரு தோல்வியைச் சந்தித்தேன். கௌரிசங்கர் வெற்றி பெற்று விட்டார்.  

அதிர்ஷ்டவசமாக, கௌரிசங்கர் ஊக்குவித்ததால் மனதைத் தேற்றிக்கொண்டு மீண்டும் மீதமுள்ள மூன்று பாடங்களுக்கான (தோல்வியடைந்த பாடத்தையும் சேர்த்து) பரீட்சைக்குத் தயார் செய்யத் தொடங்கினேன். மீண்டும் கடினமாக உழைத்துப் படித்தேன். பரீட்சையையும் எழுதினேன்.

ஆனால், மீண்டும் அதே Commercial Law பாடத்தில் 48 மதிப்பெண்கள் பெற்று தோல்வியுற்றேன். பரீட்சையில் தோல்வியின் தாக்கத்தை உணர்ந்தேன். அந்தப் பரீட்சை மிது ஒரு வெறுப்பு ஏற்பட்டது.

“இனி இந்தப் பரீட்சையை நான் எழுத மாட்டேன். சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும். எனக்கு ஒத்து வராதது. மீண்டும் மீண்டும் முயற்சிப்பதில் எந்தப் பலனும் இல்லை,” என்ற முடிவுக்கு வந்தேன்.

அந்த நேரத்தில் நானும் கௌரிசங்கரும்  கோயம்புத்தூர் கிளையிலிருந்து பிரிந்து விட்டோம். வெவ்வேறு கிளைகளுக்குச் சென்று விட்டோம். ஒரு வேளை நாங்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் இருந்திருந்தால் நான் மீண்டும் முயற்சித்திருப்பேனோ என்னவோ?

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு CAIIB பரீட்சையை மீண்டும் தொடர நான் முயற்சிக்கவில்லை. ஒரு வேளை முயற்சித்திருந்தால் வெற்றி பெற்றிருப்பேனோ என்று தெரியாது அதனால் அடுத்த சுமார் நான்கு ஆண்டுகளுக்கு எனக்குக் கிடைக்கவிருந்த ஊக்கப் படியும் கிடைக்காமல் போனது.

இடையில் எனக்குத் திருமணம் ஆனது. ஓரு குழந்தையும் பிறந்தது. வீட்டின் செலவுக்கும் அதிக பணம் தேவைப்பட்டது.

1976-ல் என் மனைவிதான் என்னிடம் பேச்சை எடுத்தாள். விட்டுப்போன அந்த Commercial Law பாடத்தை மீண்டும் படித்து எழுதி முடித்து விட்டால் இன்னொரு முப்பது ரூபாய் சம்பளம் உயருமே, நீங்கள் ஏன் எழுதக்கூடாது என்று என்னைக் கேட்க ஆரம்பித்தாள்.

இருதலைக் கொள்ளியாகத் தவித்தேன். என் தன்மானமும் அகம்பாவமும் என்னை விட்டுப்போன ஒரு பாடத்தில் பரீட்சையை எழுதி முடிக்கத் தடுத்தன. ஆனால், முப்பது ருபாய் மாதா மாதம் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்ற நப்பாசை ஒரு பக்கம் என்னை இழுத்தது.

எதற்கும் இருக்கட்டும் என்று பரீட்சைக்கு பதிவு செய்வதற்கான பணத்தை அனுப்பி வைத்தேன். ஆனால், பரீட்சைக்குப் படிக்கவில்லை.

என் மனைவி என்னை தொந்திரவு செய்ய ஆரம்பித்தாள். படிக்காமல் எப்படி பரீட்சை எழுத முடியும் என்று என்னை துளைத்து எடுத்தாள்.

பரீட்சைக்கு இன்னும் ஒரு வாரமே இருந்த சமயம்.

என்ன தோன்றியதோ தெரியவில்லை. Commercial Law பாடத்துக்குத் தேவையான Bare Act சட்டப் புத்தகங்களை மட்டும் எடுத்து வைத்து சட்டங்களை மட்டும் ஒரு பார்வை பார்த்து ஓட்டினேன். விவரமான விளக்கங்கள் எதையும் படிக்கவில்லை.

குருட்டு தைரியத்தில் மீதமிருந்த ஒரே பாடத்தின் - Commercial Law-வின் - பரீட்சையையும் எழுதி முடித்தேன். முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் என்று உதாசீனமாக இருந்தேன்.

முடிவுகளும் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு வெளி வந்தது.

என்னால் நம்ப முடியவில்லை. 51 மதிப்பெண்கள் பெற்று நான் பாஸ் செய்திருந்தேன்.

தோற்றாலும் 48 அல்லது 49 மதிப்பெண்கள். வெற்றி பெற்றாலும் – சரியாக தயார் செய்யாவிட்டாலும் 51 மதிப்பெண்கள். அந்தப் பரீட்சையைப் பற்றி நினைத்து அழுவதா அல்லது சிரிப்பதா என்று அந்த நாட்களில் எனக்குப் புரியவில்லை.

அடுத்த முப்பது ரூபாய் ஊதிய உயர்வும் எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சிதான்.

அனுபவம் 3

காலம் 1997 – 2006. வங்கியை விட்டு வெளியேரி நான் துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் நிதி ஆலோசகராகப் பணி புரிந்த காலம்.

2000-ஆண்டு என் மகள் அமெரிக்காவில் வேலை கிடைத்து அங்கு சென்று விட்டாள். என் மகனும் இன்ஜினியரினிங் முடித்து விட்டு மேற்படிப்புக்கு அமெரிக்கா சென்று படித்து அங்கு அவனுக்கும் வேலை கிடைத்து விட்டது. நானும் மனைவியும் மட்டும் துபாயில். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாத விடுமுறையில் அமெரிக்கா சென்று வந்தோம். பல இடங்களுக்குச் சுற்றினோம். எனக்கும் அமெரிக்காவில் குடிபுகுந்து விடலாம் என்ற நப்பாசை தோன்றத் தொடங்கியது.

ஆனால், அமெரிக்கா சென்று வேலை பார்க்க வேண்டுமென்றால் அதற்கான படிப்புத் தகுதி வேண்டும். அதனால் பென்சில்வேனியா மானிலத்தில் இருந்த பிரபலமான ப்ரையன் மார் பல்கலையில் CHARTERED FINANCIAL PLANNER (CFP) பட்டத்துக்குத் தகுதி பெறும் ஆரம்ப பாடங்களுக்கு தொலைவழிக் கல்வியில் சேர்ந்து கொண்டேன்.

இதுவும் நமது CA போன்று கடினமான பரீட்சைதான். ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெற்றால் CFP பரீட்சை எழுத தகுதியுடையவன் ஆவேன். என்னுடைய 56-57-ஆவது வயதில் விழுந்து விழுந்து தயார் செய்து ஒவ்வொரு பாடமாக பரீட்சை எழுதினேன். எல்லாம் கம்ப்யூட்டர் வழி ஆன்லைனில் பரீட்சை எழுத வேண்டும். ஒவ்வொன்றிலும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றேன்.

அதனால் CFP பரீட்சை எழுதுவதற்குத் தகுதியுடையவன் ஆனேன். அதற்குத் தேவையான பதிவுகளையும் முடித்துக்கொண்டேன். அமெரிக்காவில் சென்று எழுத வேண்டும். ஆனால், நான் முதலில் தகுதித் தேர்வுகள் எழுதியது போல கம்ப்யூட்டர்கள் முலம் அல்ல, பேப்பர் – பென்சில் பரீட்சை.

நன்றாகவே தயார் செய்திருந்தேன். ஏற்கெனவே வங்கியில் பணி புரிந்திருந்ததால் புதிய பாடங்களைப் புரிந்து படிப்பது எனக்குக் கடினமாக இருக்கவில்லை. அதுவும் அமெரிக்க சட்டமுறைகள், விதிமுறைகளைப் பற்றிப் படிக்க வேண்டும்.

இருந்தும் எனக்கு ஒரு குறைபாடு தொடர்ந்து பல ஆண்டுகளாக இருந்து வந்தது. வருகிறது. ஏதோ ஒரு காரணத்தால் எனக்கு விரல்கள் நடுக்கம் (HAND TREMOR) 1988-89-களில் ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகிக்கொண்டு வருகிறது. அதனால், என்னால் வேகமாக எழுத முடியாது. பேப்பரில் பென்சில் பேனாவை வைத்தால் கை நடுங்கத் தொடங்கிவிடும். மருத்துவ ரீதியாக இதை சரி செய்வது கடினம் என்று  நரம்புயியல் மருத்துவர்கள் கூறி விட்டார்கள். A KIND OF DISCONNECT BETWEEN BRAIN ANS FINGERS. FINGERS UNABLE TO COPE WITH THE SPEED OF MY MIND.

CFP பரீட்சையையும் எழுதினேன். என் கை விரல்கள் ஒத்துழைக்க மறுத்தன. வேகமாக என்னால் பரீட்சை எழுத முடியவில்லை. அதனால் எனக்கு எல்லா கேள்விகளுக்கு பதில் எழுதி முடிக்க முடியவில்லை. ஒரு மாதிரியாக எழுதி முடித்தேன். இறுதியில் RANDOM MARKING தான் பண்ண முடிந்தது.

இந்தப் பரீட்சையிலும் நான் பாஸ் செய்யவில்லை. பரீட்சைகளில் என்னுடைய மூன்றாவது தோல்வி. என் குறைபாடுகள் எனக்குத் தெளிவாகத் தெரிந்ததினால் ஒரு மாதிரியாக மனதை ஒரு வழியாகத் தேற்றிக்கொண்டேன்.

அதே அமெரிக்க பல்கலையில் இன்னும் மூன்று பாடங்களுக்கான தேர்வு எழுதினால் எனக்கு CHARTERED FINANCIAL CONSULTANT (CFC) என்ற பட்டம் கிடைத்திருக்கும். ஆனால், மீண்டும் எழுத எனக்கு மனம் வரவில்லை. அப்படியே விட்டுவிட்டேன்.

முடிவுரை

இருந்தும் என் அஹம்பாவத்திற்கும் இறுமாப்புக்கும் எல்லையே இல்லை என்பதை இன்று நான் உணர்கிறேன். அதனால், நான் திருந்திவிட்டேன் என்று பொருளில்லை.

நான் ஒரு முடியாத ஒரு WORK IN PROCESS .

முழுமையை, நிறைவைத் தேடி நகர்ந்துகொண்டிருக்கிறேன்.

“பூர்ணமத: பூர்ணமித; பூர்ணாத் பூர்ணம் உதச்யதே |

பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஸ்யதே |

ஒம் ஷாந்தி, ஷாந்தி, ஷாந்தி ஹி ||”

Sunday, March 14, 2021

11.03.2021 வேளாண்மை மேம்பாட்டில் என்னுடைய பங்கு

 11.03.2021 வேளாண்மை மேம்பாட்டில் என்னுடைய பங்கு

நேற்று முகநூலில் யாரோ ஒருவரின் பக்கத்தில் மத்திய அமைச்சர் திரு கட்கரி அவர்கள் சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்காக அவர் எடுத்த ஒரு சில முயற்சிகளை பாராளுமன்றத்தில் விவரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். வித்தியாசமாக யோசித்துப் பார்த்தால் பல நேரங்களில் பல சாதனைகளைச் செய்யலாம் என்பதை அமைச்சருடைய பேச்சு எனக்கு நினைவூட்டியது. ஹிந்தியில் அமைச்சர் பேசியது, வார்த்தைக்கு வார்த்தை எனக்குப் புரியாவிட்டாலும், மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஆனால், அவரது முழுப் பேச்சையும் கேட்பதற்குள் நான் அப்படியே தூங்கிவிட்டேன். தூங்கி விழித்த பிறகு ஏனோ அந்த வீடியோ எனக்கு மீண்டும் கிடைக்கவில்லை.

என்னுடைய நினைவுகள் என்னுடைய ஒரு முக்கியமான பழைய அனுபவத்துக்கு ஓடிச் சென்றன.

1986-87-ஆம் ஆண்டு

நான் கௌஹாத்தியில் ஒரு பொதுத்துறை வங்கியில் பிராந்திய மேலாளராக அசாம் மற்றும் வடக்கு வங்காளம் பகுதியில் இருந்த சுமார் 22 கிளைகளுக்கு பொறுப்பாளராக இருந்த சமயம்.

அதே நேரத்தில் கௌஹாத்தியை தலைமையிடமாகக் கொண்டு நெராமேக் (NERAMAC – NORTHEASTERN REGIONAL AGRICULTURAL MARKETING CORPORATION) என்ற மத்திய அரசாங்கத்தின் ஒரு புதிய நிறுவனத்துக்கு கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தலைவராகவும் மேலாண் இயக்குனராகவும் பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஒரு சில வாரங்களிலேயே எனக்கு அவருடன் தொடர்பு ஏற்பட்டது. இருவருக்கும் விரைவில் நல்ல புரிதலும் ஏற்பட்டது. எங்கள் வங்கியிலே நெராமாக்கின் கணக்கும் துவக்கப்பட்டது. எங்கள் கௌஹாத்தி கிளை மேலாளரும் ஒரு கேரளாக்காரர். அதனால், அவருக்கும் அந்த அதிகாரியுடன் நல்ல தொடர்பும் நட்பும் ஏற்பட்டு விட்டது. எங்கள் கௌஹாத்தி கிளையின் மிகப் பெரிய கணக்காக நெராமேக்கின் கணக்கு இருந்தது மற்ற பல வங்கிகளுக்குப் பொறாமையாக இருந்தது.

நெராமேக்கின் முக்கியமான குறிக்கோள் வடகிழக்கு மானிலங்களின் வேளாண் விளைபொருட்களுக்கு நல்ல ஒரு சந்தையை உருவாக்கிக் கொடுப்பது. வடகிழக்கு மானிலங்கள் பொதுவாக நீர்வளம் நிறைந்த ஒரு பகுதி. அங்கே எது போட்டாலும் தானாக விளையும் என்ற நிலை. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய பகுதி. பெரும்பாலானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் விவசாயிகள், கூலி வேலையாட்கள். அவர்களில் பலர் வங்க தேசத்திலிருந்து ஓடி வந்த அகதிகள். அவர்களின் விவசாய உற்பத்திப் பொருட்களை பல இடைத்தரகர்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கிக்கொண்டு பெரிய சந்தையில் பல மடங்கு அதிக விலையில் விற்று வந்தனர்.

உதாரணத்துக்கு, அன்றைய நிலைமையில் …

அசாமின் டின்சுகியாவில் ஆரஞ்சுத் தோட்டங்களில் ஒரு ஆரஞ்சுப்பழம் சுமார் 20 அல்லது 30 பைசா. அதே ஆரஞ்சு அசாம் தலை நகரில் 2 ரூபாய்.

திரிபுராவில் ஒரு கிலோ இஞ்சி சுமார் 50 பைசா. பெரிய நகரங்களில் 2 அல்லது மூன்று ரூபாய். அதே போல தேங்காய் ஒன்றுக்கு 50 பைசா. நகரங்களில் 2 ரூபாய்.

அசாமின் வடகோடியில் திக்பாய் என்ற இடத்தில் தேயிலைத் தோட்டங்களில் தேயிலை சீசன் முடிவடைந்த நிலையில் வெறும் களையாக வளரும் சிட்ரனெலா புல்லிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் அங்கே கிலோவுக்கும் 20 அல்லது முப்பது ரூபாய். அதே சிட்ரனெலா எண்ணெயை மும்பையில் பெரிய பெரிய நிறுவனங்கள் சுமார் 200 ரூபாய்க்கு இடைத் தரகர்களிடமிருந்து வாங்கி வந்தனர்.

இப்படிப் பல.

அதனால் விவசாயிகளுக்கு அவர்கள் நிலத்தின் விளைச்சலுக்குச் சரியான விலை கிடைக்காத நிலையிலும், இடைத்தரகர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட தொடர் கடன்களால் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இடைத்தரகர்கள் சொல்லும் விலைக்கு தங்கள் விளைபொருட்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

தகாத இந்த உறவுமுறையை மாற்ற வேண்டும் என்று நெராமேக்கின் மேலாண் இயக்குனர் விரும்பினார். “உங்கள் வங்கி எப்படி இதற்கு உதவி செய்ய முடியும்?” என்று கேட்டார். அதிர்ஷ்ட வசமாக எங்கள் கௌஹாத்தி மேலாளர் வேளாண் கல்வியில் ஒரு பட்டதாரி. என்ன செய்யலாம் என்பதை நானும் கௌஹாத்தி வங்கி மேலாளரும் பல முறை விவாதித்து ஒரு திட்டத்தை நெராமேக் இயக்குனரிடம் விவரித்தோம்.

அதன்படி …

1.     முதலில் திக்பாயில் கிடைக்கும் சிட்ரனெலா எண்ணெய் விவகாரத்தை எடுத்துக் கொள்வது.

2.     நெராமேக் நிறுவனம் அங்கேயுள்ள விவசாயிகளிடமிருந்து சிட்ரனெலா எண்ணையை கிலோவுக்கு சுமார் 50-60-க்கு வாங்கிக்கொள்ள வேண்டியது. அதை அவர்களே மும்பைக்கு எடுத்துச் சென்று சந்தை விலைக்கு விற்றுக்கொள்ள வேண்டியது.

3.     எண்ணெய் கொள்முதலை திக்பாய்க்கு அருகேயுள்ள கிராமங்களுக்கே சென்று செய்வது. விலைக்கான தொகையை அங்கேயே எங்கள் வங்கி அதிகாரிகள் மூலம் வினியோகித்து விடுவது. இதைத்தான் இடைத்தரகர்களும் செய்து வந்தார்கள். மேலும், அந்தக் காலத்தில் ஒரு வங்கிக் கிளைக்கும் இன்னொரு கிளைக்கும் வெகுதூரம் செல்ல வேண்டிய நிலை இருந்ததால் விவசாயிகளால் தங்கள் வேலையை விட்டு விட்டு பணத்துக்காக அலைய முடியாது. போக்குவரத்து வசதிகளும் மிகக் குறைவு.

4.     நெராமேக் நிறுவனத்துக்கு சிட்ரனெலா எண்ணெயை விற்கும் விவசாயிகளுக்கு ஒவ்வொருவரின் உற்பத்தி செய்யும் அளவைப் பொருத்து 5 முதல் 10 ஆயிரம் வரை எங்கள் வங்கி குறைந்த வட்டியில் கடன் கொடுத்து அவர்களை இடைத்தரகர்களின் கடனிலிருந்து மீட்டு விடுவது. ஒவ்வொரு முறை சிட்ரனெலா எண்ணெய் நெராமேக் நிறுவனத்துக்கு விற்கும்போது அந்தப் பணத்திலிருந்து ஒரு சிறிய தொகையை வங்கிக் கடனுக்காக கழித்துக் கொள்வது.

5.     விவசாயி, எங்கள் வங்கி, நெராமாக் நிறுவனம் மூவரும் இதற்கான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வது.

6.     இந்தத் திட்டத்தில் பயன்பெறும் ஒவ்வொரு விவசாயிக்கும் எங்கள் திக்பாய் கிளையில் கணக்கு திறந்து கொடுப்பது. வாரத்தில் ஒரு நாள் எங்கள் வங்கி ஊழியர்களே அந்த கிராமத்துக்குச் சென்று அந்த விவசாயிகளின் வங்கித் தேவைகளை நிறைவேற்றி வைப்பது.

7.     பரீட்சார்த்தமாக திக்பாய் அருகே ஒரே ஒரு கிராமத்தில் முயற்சி செய்து பார்ப்பது.

நெராமேக் மேலாண் இயக்குனருக்கு எங்கள் திட்டம் மிகவும் பிடித்துப்போய் விட்டது. உடனே செயல்படுத்த விரும்பினார்.

இந்த இடத்தில், வடகிழக்கு மானிலங்களின் அன்றைய நிலையைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். குறிப்பாக அசாமில்.

1985-86-காலங்களில்தான் அசாமில் தீவிரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஒடுக்குவதற்கு, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் ‘ஆசு’ (AASU) என்ற அசாம் மாணவர்களின் இயக்கத்தோடு ஒரு புரிதல் ஒப்பந்தம் செய்துகொண்டு பொதுத் தேர்தலை நடத்தினார். ‘ஆசு’ என்ற இயக்கம் அசாம் கண பரிஷத் என்ற அரசியல் கட்சியாக மாறி அசாமில் ஆட்சியைப் பிடித்திருந்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இருந்தும், பிரதமர் ராஜீவ் காந்தி வடகிழக்கு மானிலங்களின் வளர்ச்சிக்காக பல புதிய திட்டங்களை அறிவித்து, தேர்தலில் தோல்வியுற்றாலும் எதிர்கட்சியால் ஆட்சி செய்யப்பட்ட அசாம் அரசுக்குப் பலவிதங்களிலும் உதவி புரியத் தயாராக இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அசாமில் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி திரும்பிக் கொண்டிருந்தது.

அப்படிப்பட்ட பதட்டமான சூழ்னிலைகளில் ஒவ்வொரு முறையும் வங்கி அதிகாரிகள் கையில் நிறைய பணத்தை எடுத்துக்கொண்டு   நெராமேக் அதிகாரிகளுடன் எளிதில் அணுக முடியாத, தொலைவிலுள்ள சிறிய கிராமங்களுக்குச் சென்று விவசாயிகள் கையில் ஒப்படைப்பது என்பது மிகவும் ஆபத்தாக கருதப்பட்ட சமயம் அது. இந்த பொறுப்பை நெராமக் அதிகாரிகளிடம் ஒப்படைப்பது வங்கிகளின் விதிமுறைக்கு மீறியது.

இருந்தும், இந்தத் திட்டத்துக்கு கௌஹாத்தி மற்றும் திக்பாய் கிளை மேலாளர்களிடம் கலந்தாலோசித்து, வங்கி ஊழியர்களின் யூனியனிடமும் சம்மதம் பெற்று ஒத்துக்கொண்டேன்.

நெராமேக் அதிகாரிகள் மூலம் நாங்கள் செல்ல இருந்த கிராமத்து மக்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது.

நெராமக் மேலாண் இயக்குனர் அசாம் அரசின் காவல்துறையுடன் பேசி எங்கள் எல்லோருக்கும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தார்.

நாங்கள் நிச்சயித்திருந்த தேதியன்று அதிகாலையிலேயே கௌஹாத்தியிலிருந்து காரில் நான், கௌஹாத்தி கிளை மேலாளர், நெராமக் மேலாண் அதிகாரி மூவரும் திக்பாய் நோக்கி கிளம்பினோம். எங்களுக்கு முன்னேயே நெராமேக்கின் வேறு பல அதிகாரிகள் திக்பாய்க்கு சென்று விட்டார்கள்.

நாங்கள் கிளம்புவதற்கு முந்தின நாள் எனக்கு அலுவலகத்தில் யாரிடமிருந்தோ ஃபோன் வந்தது. எங்களின் முயற்சி மிக ஆபத்தானது. அதனால் அதனை கைவிட வேண்டும் என்றும் அதையும் மீறினால் நடப்பதற்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்றும் ஃபோனில் பேசிய ஒரு குரல் எனக்குத் தெரிவித்தது. நெராமேக் மேலாண் அதிகாரிக்கு உடனேயே ஃபோன் செய்து இதைச் சொன்னேன். “எனக்கும் அப்படி ஒரு ஃபோன் கால் வந்தது. கவலைப்படாதீர்கள். தேவையான பாதுகாப்புக்கு நான் ஏற்பாடு செய்து விட்டேன். இதெல்லாமே அந்த இடைத்தரகர்கள் செய்யும் நாசகார வேலைதான்.” என்று என்னை சமாதானப் படுத்தினார்.

இருந்தும் எங்களுக்குக் கொஞ்சம் நடுக்கம்தான். ஏனென்றால், அந்த சமயங்களில் ஒரு சில வங்கிக் கிளைகள் தீவிரவாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. கௌஹாத்தியில் என் அலுவலகத்துக்கு எதிரேயே இருந்த யூ. கோ வங்கியின் மேலாளர் பட்டப் பகலில் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதே இந்தக் கொள்ளைக்கு பலியாகியிருக்கிறார்.

ஒரு மாதிரியாக துணிச்சலை வரவழைத்துக்கொண்டு கிளம்பிய நாங்கள் எங்கள் திக்பாய் கிளை சென்றடைந்து அங்கிருந்து தேவையான பணத்தையும் எடுத்துக்கொண்டு நாங்கள் நிச்சயித்திருந்த கிராமத்தை நோக்கி முன்னும் பின்னும் போலீஸ் படையுடனும் நெராமேக்கின் மற்ற அதிகாரிகள் மற்ற ஜீப் போன்ற வண்டிகளிலும் வர அணி வகுத்துச் சென்றோம்.

கிராமத்தில் நுழைந்து விட்டோம் என்று எங்களுக்குத் தெரிந்தது. நுழையும் இடத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிட்ரனெலா எண்ணெய் எடுக்கும் கச்சா இயந்திரங்கள் கண்ணில் தென்பட்டன. முன்னால் சென்ற நெராமக் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலமாக எங்கள் திட்டத்தைப் பற்றிய அறிவிப்பு செய்துகொண்டே சென்றது. ஒரு சிறிய டிரக்கில் சிட்ரனெலா எண்ணையை சேகரிக்க இரண்டு மூன்று பெரிய டிரம்கள் வைக்கப்பட்டு எங்களுடனேயே வந்து கொண்டிருந்தது.

கிராமத்தின் மையமான இடத்துக்கு வந்து விட்டோம். கிராம அதிகாரியும் எங்களுடன் இருந்தார். போகும் வழியில் பல எண்ணெய் பிழியும் கச்சா இயந்திரங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தன. எல்லோரும் எங்களை உற்று உற்று ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மைய இடத்தில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒரு கிலோ எண்ணெய்க்கு ஐம்பது ரூபாய் விலை கொடுத்து எடுத்துக் கொள்வதாக அறிவிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது.

நாங்கள் காத்திருந்தோம். ஒன்றிரண்டு விவசாயிகள் மட்டும் துணிச்சலோடு எங்களிடம் வந்து பேசினார்கள். ஆனால், யாரும் எண்ணையை விற்க எடுத்து வரவில்லை.

சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தோம். ஒன்றிரண்டு விவசாயிகள் மெதுவாக எண்ணையோடு வந்தார்கள். நெராமேக் அதிகாரிகள் கையோடு அவர்களுக்கு பணத்தைக் கொடுத்தார்கள். விவசாயிகள் முகத்தில் மகிழ்ச்சி. அவர்களுக்கு அவர்களின் கடன் தொல்லையைத் தீர்க்க வங்கியில் கடன் கொடுப்பதாகவும் உறுதியளித்தோம்.

மேலும் சிலர் எண்ணையுடன் வந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் எடுத்துச்சென்ற டிரம் நிரம்ப ஆரம்பித்தது.

ஒரு பதட்டமான சூழ்னிலை நிலவுவதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது.

சுமார் இரண்டு மூன்று மணி நேரம் காத்திருப்புக்குப் பின் மெதுவாக அந்தி சாயத் தொடங்கியது. காவல்துறையினரும் எங்களை அதற்கு மேல் காத்திருப்பதில் பலனில்லை என்பதை சாடைமாடையாகத் தெரிவிக்கத் தொடங்கினர்.

டிரம்மின் கால் பங்கு அளவே நிரம்பியிருந்தது.

சரி, இந்த முறை இவ்வளவு போதும் என்று நெராமேக்கின் மேலாண் இயக்குனர் தீர்மானித்தார். கிராம அதிகாரிக்கும், மக்களுக்கும் நன்றி சொல்லி அந்த இடத்திலிருந்து விடைபெற்றோம்.

திக்பாய் கிளையில் மீதமிருக்கும் பணத்தையும் ஒப்படைத்து விட்டு அன்றிரவே கௌஹாத்தி திரும்பினோம்.

ஆண்டவன் கிருபையால் நாங்கள் பயந்தபடி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த கிராமத்தில் சிட்ரனெலா எண்ணையின் விலை கிலோவுக்கு சுமார் 70 ரூபாயாக உயர்ந்திருப்பதாக தகவல் வந்தது.

“நம் திட்டத்தின் முதல் குறிக்கோள் நிறைவேறி விட்டது. விவசாயிக்கு சிட்ரனெலா எண்ணெய்க்கு கிடைக்கும் விலை கூடிவிட்டது. அதுவே ஒரு பெரிய வெற்றிதான்.” என்றார் நெராமக்கின் மேலாண் இயக்குனர். “ஆனால், உங்களுக்குத் தெரியாது, எனக்கு பல மிரட்டல்கள் வந்து விட்டன இதுவரை. நான் உங்களிடம் சொன்னால், நீங்கள் வயதில் இளையவர். பயந்து விடுவீர்கள் என்று நான் சொல்லவில்லை … சரி, இப்போதைக்கு இப்படியே போகட்டும் … என்ன நடக்கிறதென்று பார்க்கலாம் … இடைத்தரகர்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும். விவசாயிகளுக்கு சரியான விலை கொடுக்கவில்லையென்றால் அதை அதிக விலை கொடுத்து வாங்க இப்பொழுது நெராமேக் நிறுவனம் தயாராக இருக்கும் என்று .. கொஞ்சம் பொறுத்திருந்து அடுத்து நாம் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்,” என்று முடித்தார்.

அதற்கு மேல் வங்கியின் தரப்பிலும் நாங்கள் எதுவும் மேற்படி நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனென்றால் நெராமேக் போன்ற அரசு நிறுவனம் உதவி இல்லாமல் நாங்களாக எதுவும் செய்வது கடினம்.

அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் இதே போன்ற ஒரு முயற்சியை திரிபுராவின் தலைநகரம் அகர்தலா அருகே அன்னாசிப் பழம், இஞ்சி, தேங்காய், பலாப்பழம் போன்ற பயிர்களுக்கு எங்கள் வங்கியை ஈடுபடுத்தாமல் நெராமேக் தரப்பிலேயே அதிகாரிகளைக் கொண்டு முயற்சி செய்து விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்கி சந்தையில் நெராமேக் தரப்பிலேயே வியாபாரம் செய்ததாக அந்த மேலாண் இயக்குனர் எனக்குக் கூறினார். திரிபுராவில் எங்களுக்கும் ஒரே ஒரு கிளை மட்டுமே இருந்ததால் என்னாலும் அவருடைய முயற்சிக்கு உறுதுணையாக நிற்க முடியவில்லை. அசாமை விட திரிபுராவில் நிலைமை இன்னும் மோசம்.

நெராமேக் நிறுவனத்துடன் இணைந்து விவசாயிகளுக்கு ஒரு நல்ல காரியத்தை செய்து கொடுத்ததில் எனக்கும் என்னுடன் சேர்ந்து பயணித்த வங்கி அதிகாரிகளுக்கும் மிகவும் திருப்தி. பொதுவாக எதற்கும் முரண்டு செய்யும் வங்கி ஊழியர்களுக்கும் மகிழ்ச்சி.

ஆனால், திக்பாய் அருகே ஒரு படை சூழ சென்று வந்த அனுபவத்தின் நினைவு இன்றும் – சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகும் – நினைவில் பசுமையாக நிற்கிறது.

வாழ்க வேளாண்மை!