Pages

Tuesday, May 27, 2014

பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது எப்படி? பகுதி 4 : நமது அபிப்பிராயங்களைப் (BELIEFS) பற்றி


3-2-1 என்ற மனதை வயப்படுத்தும் பயிற்சி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

பெர்ஸனாலிடி என்றால் என்ன?

ஒருவருடைய நடை, உடை, உயரம், நிறம், பாவனை, பேசும் முறை, பழகும் முறை, வசிக்கும் வீடு, இவைகளையே பெர்ஸனாலிடியாக பொதுவாக நினைத்துக் கொள்கிறோம். ‘அவன் பயங்கர கருப்பு.’ ‘அவள் ரொம்ப குள்ளம்’ ‘அவர் ஒரு குண்டு’ ‘அவர் போடற உடையைப் பார்க்கணுமே’ ‘அப்பா! எவ்வளவு  நகைகள், கழுத்திலே’ இப்படி பல கருத்துக்களை ஒருவரை சந்திக்கும்போது மனதில் ஏற்படுத்திக்கொள்கிறோம். இதுதான் அவருடைய பெர்ஸனாலிடி என்றும் மனதுக்குள் தீர்மானித்துக் கொள்கிறோம்.

ஆனால், ஒருவருடைய நடை, உடை, பாவனை ஒருவரின் பெர்ஸனாலிடியின் அடையாளமே தவிர அவரது பெர்ஸனாலிடி அல்ல. பெர்ஸனாலிடி என்பது ஒருவரது அடிப்படையான, மையப்பகுதியான தன்னைப் பற்றிய கருத்தும் அதை சுற்றியிருக்கும் அதைப் பின்னி பிணைத்திருக்கும் குணாதிசயங்களும், தனிப்பண்புகளும்தான். .

பெர்ஸனாலிடி எப்படி உருவாகிறது?

நீங்கள் உங்களைப் பற்றி கொண்டிருக்கிற அபிப்பிராயம்
நீங்கள் அடுத்தவரைப் பற்றிக் கொண்டிருக்கிற அபிப்பிராயம்
அந்த அடுத்தவர் உங்களைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருப்பார் என்கிற உங்களது அபிப்பிராயம்

அதேபோல்,

அடுத்தவர் தன்னைப் பற்றி கொண்டிருக்கிற அபிப்பிராயம்
அடுத்தவர் உங்களைப் பற்றி கொண்டிருக்கிற அபிப்பிராயம்
நீங்கள் அவரைப் பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருப்பீர்கள் என்கிற அவரது அபிப்பிராயம்

இந்த ஆறு அபிப்பிராயங்களின் மோதலில் ஏற்படுவதுதான் ஒருவரது பெர்ஸனாலிடி.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

ஒரு ஊருக்கு புதியதாக ஒரு குடும்பம் மாறி வந்திருக்கிறது. நல்ல வசதியான குடும்பம். ஆனால், அவர்கள் குடி வந்திருக்கிற இடமோ பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கிற ஒரு பகுதி. அவர்கள் வீட்டில் ஒரு பையன். நல்ல வளர்ச்சியான எடுப்பான தோற்றமுடையவன். கொஞ்சம் பருமன் வேறு. புதிய குடியிருப்பு. கூடி விளையாடுவதற்கு அந்தப் பையனுக்கு யாருமில்லை. அந்த பகுதியில் வசிக்கும் மற்ற பையன்களில் சிலர் ஒல்லி, நொடிசல், பலர் சாதாரணத் தோற்றம், எளிமையையும், வறுமையையும் பிரதிபலிப்பவர்கள். இந்த புதுப் பையனை விளையாடக் கூப்பிடலாம்தான். ஆனால், எப்படி கூப்பிடுவது என்று அங்குள்ள மற்ற பையன்களுக்கு தயக்கம். ‘அவங்கல்லாம் பணக்காரங்கப்பா. நம்மகூட எல்லாம் விளையாட மாட்டாங்க.’ என்ற நினைப்பு. இருந்தாலும், ஒரு நாள் அந்த புதுப் பையனை விளையாடக் கூப்பிடுகிறார்கள். ‘இவங்ககூடெல்லாம் நான் போய் எப்படி விளையாடறது? நான் எவ்வளவு வளர்ச்சியா இருக்கிறேன். அவங்கல்லாம் ரொம்ப சின்ன பையன்கள் மாதிரி இருக்காங்களே.’ என்று நினைத்து அந்த புதுப் பையன் அவர்கள் கூட விளையாட மறுத்து விடுகிறான். ‘பாரு, ரொம்ப இறுமாப்பு, அந்த புதுப்பையனுக்கு. பணக்காரங்களே இப்படித்தான்’ என்ற முடிவுக்கு மற்ற பையன்கள் வருகிறார்கள். பிறகு அவனைக் கூப்பிடுவதேயில்லை. புதுப் பையனுக்கோ, ‘இன்னொரு தடவை கூப்பிட்டிருந்தா போயிருக்கலாம்தான். ஆனா, அவங்கதான் என்னை ஒதுக்கிவிட்டாங்களே’ என்று ஆதங்கம்.

அந்த புதுப்பையன் ஆரம்பத்திலேயே இறங்கி வந்து விட்டால், ‘எவ்வளவு நல்ல பையன், இவ்வளவு பணம் இருந்தும் எவ்வளவு எளிமையாக எல்லோருடனும் நட்பாக இருக்கிறான். அதனால், அவன் ஒரு நேசமான பெர்ஸனாலிடி’ என்று மற்றவர்கள் கருதுவார்கள். விளையாட மறுப்பதினால், ‘பண கர்வம் பிடித்த ஒரு பெர்ஸனாலிடி’ என்பார்கள்.

இப்படி அபிப்பிராயங்களை ஒட்டியே ஒருவருடைய பெர்ஸனாலிடி என்ன என்பதை மற்றவர்கள் எடை போடுவார்கள். இருப்பது ஒன்றுதான். ஆனால், அவரவர்கள் என்ன நினைக்கிறார்களோ அப்படியே அவர்கள் பெர்ஸனாலிடியாக மற்றவர்களுக்கு தோற்றமளிப்பார்கள்.

காந்திஜி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த மிகப்பெரிய தியாகி என்று நினைப்பவர்களும் உண்டு. இல்லை, ஒற்றுமை என்கிற பெயரில் இந்துக்களையே மற்ற மதத்தினருக்கு விற்று விட்டவர் என்று நினைத்த ஒரு கும்பலும் உண்டு. அதனால்தான் அவரை சுட்டுக் கொன்றார்கள். காந்திஜியின் பெர்ஸனாலிடி என்ன?

ராவணன் என்கிற பாத்திரம் ராமாயணத்தில் சீதையை தூக்கிச் சென்ற ஒரு அரக்கன் என்று நினைப்பவர்களும் உண்டு. அதே சமயம் சீதையை மிகவும் விரும்பினாலும் ஒரு முறைகூட அவளை தொட்டது கிடையாது. அரக்கனாக இருந்தும் எவ்வளவு உத்தமன் என்று விவாதிப்பவர்களுன் உண்டு. ராவணனின் பெர்ஸனாலிடி என்ன?


இரண்டும் உங்கள் பார்வையி்ல்தான் இருக்கிறது. உங்களுடைய அபிப்பிராயங்களிலேயே ஒருவரின் பெர்ஸனாலிடியை நீங்கள் முடிவு செய்கிறீர்கள். 
                                          …… தொடரும்

No comments:

Post a Comment