Pages

Wednesday, March 11, 2015

முதுகில் நான் வாங்கிய பலமான குத்து – திருநெல்வேலி சாஃப்டர் பள்ளி வாழ்க்கையிலிருந்து ஒரு பக்கம்

அந்த நாட்களில் சாஃப்டர் பள்ளியில் அவ்வளவு மணி மணியான ஆசிரியர்கள். பள்ளியும் நல்ல பெயர் பெற்றிருந்தது. தலைமையாசிரியர் திரு ஜான் ஆசீர்வாதமும் மிகவும் கண்டிப்பானவர். பள்ளியை மிக சிறப்பாக நடத்தி வந்தார்.

எனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்களில் மிக முக்கியமானவரான திரு.ஜெசுமணி என்ற கணக்கு ஆசிரியரைப் பற்றி கண்டிப்பாக சொல்லவேண்டும். இவருடைய வகுப்புகள் என்றால் மாணவர்களுக்கு சிம்ம சொப்பனம். செம அடி விழும். கன்னா பின்னாவென்று திட்டுவார். வகுப்பிலிருந்து நோட்டுகளும் புத்தகங்களும் ஏவுகணைகள் போல வெளியே பறந்து கொண்டிருந்தால் அது கண்டிப்பாக திரு ஜெசுமணியுடைய வகுப்பாகத்தான் இருக்கவேண்டும் என்ற அளவுக்கு பெயர். கணக்கில் புலி. எந்த கடினமான கணக்கானாலும் வினாடிக்குள் தீர்த்துவிடுவார். மிகப் பிரமாதமாக சொல்லிக்கொடுப்பார். அவருடைய கண்டிப்பு காரணமாக பொதுவாக எந்த மாணவனுக்கும் அவரைப் பிடிக்காது. ஒரு மூன்று பேரைத் தவிர. அதில் நான் ஒன்று. மாதவன் மற்றும் சிவராம கிருஷ்ணன் என்ற மற்ற இரு நண்பர்களும் உண்டு. நானும் அவரிடம் நிறைய அடி, உதை, திட்டு எல்லாம் வாங்கியிருக்கிறேன்.

பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வுக்கு முன்னால் நடத்தப்பட்ட மாதிரித் தேர்வில் கணக்கில் மோசமாக செய்து அவரிடம் கட்டி வாங்கிக்கொண்டிருக்கிறேன். இருந்தும் என் மீதும் என் மற்ற இரு நண்பர்கள் மீதும் பொதுத் தேர்வில் கண்டிப்பாக நூறு மதிப்பெண்கள் வாங்குவோம் என்று மிகவும் நம்பிக்கை வைத்திருந்தார்.  தேர்வுக்கு ஓரிரண்டு மாதங்கள் முன்பிலிருந்தே எங்கள் மீது தனிக் கவனம் வைக்கத் தொடங்கினார்.

தினமும், மாலை வேளையில் சுமார் ஆறு மணி அளவில் எங்கள் மூவரையும் நயினார் குளக்கரை முழுவதும் எங்கள் தோள்கள் மீது தன் இரண்டு கைகளையும் போட்டுக்கொண்டு நடத்திச் சென்று பல பாடங்களை மீண்டும் மீண்டும் விளக்கிச் சொல்லி, மனக்கணக்குப் போட வைப்பார்.  ‘செயின் ஸ்மோக்கர்’ வேறு. பள்ளி வேளைத் தவிர மற்ற நேரங்களில் அவர் கையில் கண்டிப்பாக சிகரெட் இருக்கும். சரியாக கணக்குப் போடவில்லையென்றால் தலையில் பலமாக குட்டு விழும். அல்லது கன்னத்தில் குழி விழும். எழுதித்தான் காட்டவேண்டுமென்றால் குளக்கரையில் கிடக்கும் ஏதேனும் ஒரு குச்சியை கையில் எடுத்து மண் தரையிலேயே எழுதிக் காட்டுவார்.

எங்கள் மூவரிலும் மாதவன் என்ற நண்பன் நல்ல புத்திசாலி. கற்பூர புத்தி. மிகவும் ஒல்லி உடம்பு. ஒரு ஆசிரியரின் பையன். திரு.ஜெசுமணி சொல்லிக்கொடுத்த பின்பும் எனக்குத் தோன்றும் சந்தேகங்களை அவன் தான் விளக்கிச் சொல்வான். முந்திய வருடங்களில் பொதுத் தேர்வில் கொடுக்கப்பட்ட கேள்விகளை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்ப்போம்.

பொதுத் தேர்வும் வந்தது. அன்று கணக்குப் பாடத் தேர்வு. நிறைய அறிவுரைகளுடன் எங்களை தேர்வு அறைக்குள் அனுப்பினார். எனக்கு டென்ஷன் ஆகக்கூடாது என்று முக்கியமாக அறிவுரித்தினார். மாதிரித் தேர்வில் டென்ஷனாலேயே நான் கோட்டைவிட்டேன் என்று அவருக்குத் தெரியும். முன்று மணி நேரம் கொண்ட தேர்வை மாதவன் வெகு விரைவிலேயே முடித்து விட்டான். நானும் விரைவிலேயே முடித்து விட்டு மீண்டும் மீண்டும் சரி பார்த்துக்கொண்டேன்.

தேர்வு முடிந்து வெளியே வந்தவுடன் எங்கள் மூன்று பேரையும்  திரு ஜெசுமணி வழி மடக்கினார்.

“எப்படிடா பண்ணியிருக்கீங்க?” மிரட்டல் தொனியில் திரு.ஜெசுமணியிடமிருந்து கேள்வி வந்து எங்களைத் தாக்கியது.

‘நூறு மார்க் நிச்சயமாக,’ என்று எந்த சந்தேகமும் இல்லாமல் மாதவன் சொன்னான். சபாஷ் போட்டார் ஆசிரியர்.

“நி எப்படிடா?” என்று சிவராமகிருஷ்ணனை மிரட்டினார். கொஞ்சம் தயங்கி, எப்படியும் நூறு வந்துவிடும் என்று சிவராம கிருஷ்ணன் சொன்னான்.

ஜெசுமணியின் பார்வை என் மீது திரும்பியது.

நான் ஏற்கெனவே என்னுடைய விடைத்தாளை சரி பார்த்து துல்லியமாக என்ன கிடைக்கும் என்று பார்த்து விட்டேன். “தொண்ணுத்தைந்து வரும்” என்று நான் பதில் சொல்லும் முன்பேயே என் தலையைப் பிடித்து என்னைக் குனிய வைத்து முதுகில் ஓங்கி ஒரு குத்து விட்டாரே பார்க்கலாம்.  “என்னடா தொண்ணுத்தைந்து……அவன்  …..  யைப் போய் நக்குடா” என்று அசிங்கமாகத் திட்டினார். எனக்கு ஒரே அவமானம். திரு.ஜெசுமணி இவ்வளவு சொல்லிக்கொடுத்தும் என்னால் நூறு மார்க் எடுக்க முடியவில்லையே என்று வருத்தம் இன்னொரு பக்கம். என் மீது அவருக்கு பயங்கரக் கோபம் என்பது எனக்கு புரிந்ததால் நைசாகக் கழண்டுகொண்டேன்.

தேர்வு முடிவுகள் வந்த பொழுது யாருமே  நூற்றுக்கு நூறு வாங்கவில்லை என்பது அவருக்கும் மிகப் பெரிய ஏமாற்றம்.  நான் ஏற்கெனவே கணக்கு பண்ணியது பொல தொண்ணுத்தைந்து வாங்கியிருந்தேன். இருந்தும் திரு.ஜெசுமணியை நான் இன்றளவும் ஞாபகம் வைத்துக்கொண்டிருப்பது போல வேறு எந்த ஆசிரியரையும் நினைவில் வைத்துக்கொள்ளவில்லை. ஒரு சுயநலமும் இல்லாமல், மாணவனின் நலனை மட்டுமே மனதில் கொண்டு, ஒரு பைசா கூட எங்களிடம் வாங்கிக்கொள்ளாமல் மனதிலேயே பல கணக்கு கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்கக் கற்றுக்கொடுத்த ஒரு சிறந்த ஆசிரியரை எப்படி நினைவில் வைத்துக்கொள்ளாமல் இருக்க முடியும். அவரது கண்டிப்பு, அடி, உதை, திட்டு எல்லாமே மாணவனை உசுப்பேற்றுவதற்குத்தான் என்றே நான் இதுவரை நம்பி வருகிறேன். பல நல்ல ஆசிரியர்கள் வகுப்பில் கண்டிப்பாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் கண்டிப்பும் அவர்களிடம் காட்டும் பயம்தான் பல மாணவர்களை நல்வழிப்படுத்தியிருக்கிறது என்றும் நம்புகிறேன். வாழ்க திரு.ஜெசுமணி போன்ற ஆசிரியர்கள்.


No comments:

Post a Comment