Pages

Friday, March 20, 2015

நான் போட்ட நாடகம்: என் சிறு வயது நாட்களிலிருந்து இன்னொரு பக்கம்

சிறு வயதிலிருந்தே எனக்கு நாடகம், பாட்டு, இசை, சினிமா மீது தீவிரமான மோகம் இருந்தது. பள்ளி நாட்களில் திருநெல்வேலி டவுணில் பல இடங்களில் தெருக்கோவில்களில் கொடை விழா அங்கங்கே நடக்கும். (கோடை காலங்களில் மழை வேண்டி நடப்பதால் இது கொடை விழா என்று அழைக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்). இந்த விழாக்களின் போது உள்ளூர் இசைக் குழுக்களின் திரைப்பட இசை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். பல இசைக் கருவிகளுடன் இணைந்து அவர்கள் திரைப்பாடல்களைப் பாடும் பொழுது வாயில் ஈ புகுந்தது தெரியாமல் அதிசயித்து  நின்று பார்த்துக்கொண்டிருப்பேன்.  இதைப் பற்றி தனியாகத்தான் எழுத வேண்டும்.

ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது என்று ஞாபகம்.   நான் படித்த சாஃப்டர் உயர் நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவின் (பள்ளி தினம்) போது ஒரு இசை நாடகத்தில் நடிக்க என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். பல நாட்டுக்காரர்களைச் சித்தரிக்கும் ஒரு நாடகம். பர்மாக்காரராக நான் நடிக்க வேண்டும். ஆழ்ந்த வர்ணத்தில் ஒரு பட்டு வேட்டியும் குர்த்தா போன்ற உடையும் கொண்டு வர வேண்டும் என்றார்கள். என் வீட்டிலோ அப்படி ஒரு உடையும் இல்லை. புதியதாக தயாரிப்பதற்கும் வசதியில்லை. தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டுப் பார்த்தோம். கிடைக்கவில்லை. பள்ளி தினம் நெருங்கிக்கொண்டிருந்தது. எங்கள் நாடகத்துக்கு பொறுப்பேற்ற ஆசிரியருக்கு நாங்கள் உடையை இன்னும் தயார் செய்யவில்லை என்று என் மீது பயங்கரக் கோபம்.எப்படியோ தெரியவில்லை பள்ளி தினத்துக்கு ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்பு உடை தயாராகிவிட்டது. நாடகத்திற்கு நல்ல வரவேற்பு. எனக்கு ஏற்கெனவே  நன்றாகப் பாட வரும் என்பதால் என்னால் பர்மா நாட்டை வர்ணிக்கும்  ஒரு பாட்டை நன்றாகவே பாடியிருந்தேன்.

அந்த ஆண்டு அனுபவத்திற்குப் பிறகு பள்ளி தினத்து ஆண்டு விழா நாடகங்களில் கலந்துகொள்ள அனுமதி கொடுக்க என் வீட்டில் மறுத்து விட்டார்கள்.

ஆனால், எனக்கு நாடகம் மீது இருந்த ஆர்வம் குறையவேயில்லை. அந்த நாட்களிலேயே எனக்கு கதை, கட்டுரை, கவிதை, நாடகம் எழுத ஆர்வமும் இருந்தது. எங்கள் தெருவிலேயே இருக்கும் வேறு ஒன்றிரண்டு நண்பர்களுடன் இணைந்து கைப்பிரதி பத்திரிகை நடத்தியிருக்கிறேன். உணர்ச்சி வேகத்தில் பல பாடல்களை இயற்றியிருக்கிறேன். பள்ளியின் ஆண்டு மலருக்கு கட்டுரை எழுதி பெயர் பெற்றிருக்கிறேன். என் சகோதரர் ராமனுடனும், எஸ்.ஜி.எஸ் என்ற சந்தானம் போன்ற வேறு ஒன்றிரண்டு நண்பர்களுடனும் ஒரு இசைக்குழுவைத் தொடங்கியிருக்கிறேன். எங்கள் இசைக் கருவியெல்லாம் தரையில் விரிக்கப்பட்ட செய்தித்தாள்களும், சிலேட்டுக் கட்டையில் பதிக்கப்பட்ட சோடா பாட்டில் மூடிகளும், நன்றாக மழிக்கப்பட்ட தேங்காய் மூடிகளும்தான்.

நாடகத்தை மட்டும் விட்டு வைப்பதா? ஒரு சிவராத்திரியன்று நாடகம் போட வேண்டும் என்று தீர்மானித்தேன்.

அந்தக் காலங்களில் 1959-ல் வெளிவந்த டைரக்டர் ஸ்ரீதரின் ‘கல்யாணப் பரிசு’ போன்ற திரைப்படங்கள்  பிரபலமாக இருந்தன. அந்தப் படத்தில் மறைந்த திரு.தங்கவேலு அவர்களின்  நகைச்சுவைப் பகுதிகள் மிகப் பிரபலமானவை. அந்த வசனம் முழுவதும் மனப்பாடமாகத் தெரியும். அது போன்று ஒரு நகைச்சுவை நாடகம் போட வேண்டும் என்று ஆசை. ‘சீட்டுக் கட்டும் சிவராத்திரியும்’ என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை நானே எழுதினேன். முழுவதும் நகைச்சுவை துணுக்குத் தோரணம்.  நன்றாகவே வந்திருந்ததாக இன்றும் எனக்கு நம்பிக்கை.

அதேபோல 1954-ல் வெளிவந்த எம்.ஆர். ராதாவின் ரத்தக்கண்ணீர் திரைப் படமும் மிகப் பிரபலமாக இருந்தது. 1956-ல் கலைஞர் கருணாநிதியின் வசனத்தில் வெளி வந்த ‘ராஜா ராணி’ திரைப்படமும் அந்தப் படத்தின் ஒரு பகுதியான சாக்ரெடீஸ் நாடகமும் மிகப் பிரபலமாக இருந்தது. ரத்தக்கண்ணீரின் பட வசனங்கள் மிகவும் கூர்மையாக சமுதாயத்தை விமரிசிப்பதாக இருக்கும். அதனால் அந்தப் படத்தின் வசனங்களை நாடகமாகப் போடுவதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால், ‘உன்னையே நீ அறிவாய்…உன்னையே நீ எண்ணிப்பார்…ஏன், எதற்காக, எப்படி என்று கேள்,….. குமுறும் எரிமலை, கொந்தளிக்கும் கடல் அவை விட பயங்கரமானவன் சாக்ரெடீஸ்…’ போன்ற வசனங்கள் என்னை மிகவும் ஈர்த்திருக்கின்றன.  அதனால் சாக்ரெட்டீஸ் நாடகம் போடுவது என்று தீர்மானம் ஆகியது.

ஆனால், சரித்திர நாடகம் போட வேண்டுமென்றால் நிறைய உடை தயாரிக்க வேண்டும். வேடம் போட வேண்டும். ‘இதோ நான் இருக்கிறேன்’ என்று ஆபத்பாந்தவனாக, ஆஞ்சனேயராக வந்து சேர்ந்தார் நாங்கள் இருந்த குடியிருப்பில் மாடிக்கு புதியதாக குடிபுகுந்த திரு.சுந்தரராமன் அவர்கள். எல்.ஐ.சி யில் வேலை பார்த்து வந்தார். திருநெல்வேலிக்கு மாற்றலாகி வந்திருந்தார்.  நாடகம் போடுவதில் அவருக்கும் தீவிர ஆர்வம். அவர் உதவியுடன் பல உடை அலங்காரங்களைத் தயாரித்தோம். அவருக்கு இரண்டு பெண்கள். முதலாவது மூன்று வயதிருக்கும். இரண்டாவது கைக்குழந்தை. மூத்த பெண் பயங்கர துடிப்பான குழந்தை. ‘ஏன், எதற்கு, எப்படி…’ என்று எல்லாவற்றையும் துளைத்தெடுப்பாள். அதே சமயம் எதைக் கையிலெடுத்தாலும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்தெடுத்து விடுவாள். ‘எங்க வீட்டு ஹிட்ச்காக்’ என்றுதான் திரு சுந்தரராமன் அவளை அழைப்பார். அந்தப் பெண் தூங்கும்பொழுதோ அல்லது வெளியே கூட்டிக்கொண்டு போயிருந்த போதோதான் எங்களது வேலையைச் செய்யமுடியும். இரண்டு வாரங்களாக முயன்று, கிரேக்க ராணுவ வீரர்களுக்கான உடை, சாக்ரடீசுக்கான தாடி, போன்ற பல தேவைகளை தயார் செய்தோம்.

இன்னொரு பக்கம் ஒத்திகை நடந்துகொண்டிருந்தது. எனக்கு சாக்ரடீஸ் வேடம். வசனம் எனக்குத் தலைகீழ் பாடம். நாடகம் பார்ப்பதற்கு டிக்கெட் உண்டு. விலை இருபத்தைந்து புளியமுத்து கொட்டைகள். அன்றைய காலத்தில் பல வீடுகளி புளியமுத்து கொட்டைகளை சேகரித்து வைத்திருப்பார்கள். ஒரு சிலர் வீடு வீடாகப் போய் டிக்கெட் விற்க வேண்டியது.

நாடகம் போட வேண்டிய நாளும் நெருங்கிக் கொண்டிருந்தது. எங்கள் வீட்டு முன்பு ஒரு பரந்த வெளியிடம் உண்டு. அதுதான் மேடை. எதிர் புறம் இன்னொரு வீடு. இரண்டு வீட்டுக்கும் நடுவே பெரிய கயிறு கட்டி, நாடகம் போடுவதற்காக ஒரு திரையையும் திரு.சுந்தரராமன் தயாரித்துக்கொடுத்தார். அவருடைய பல்வேறு திறமைகளைக் கண்டு வியந்திருக்கிறேன். அவருடைய அம்மாவும் என்னனிடம் மிக அன்பாக  நடந்துகொள்வாள். ஒரே மகனின் நண்பனாயிற்றே!

நாடகம் தொடங்க நேரமாகிக்கொண்டிருந்தது. எங்கள் தெருவில் எதிர்புறம் வசித்த சங்குரு என்ற குஜராத்தி நண்பன் நாடகத் திரையை எப்படி இயக்குவது என்பதை பல முறை இயக்கிக் கற்றுக்கொண்டிருந்தான்.  நாடகம் ஆரம்பிக்க சரியாக ஒரு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு, கடைசியாக ஒரே ஒரு முறை மீண்டும் சரி பார்த்துக்கொள்கிறேன் பேர்வழி என்று முயன்று திரை ‘தொப்’பென்று கீழே விழுந்துவிட்டது.

நாங்கள் எல்லோரும் பழியாக அவனிடம் சண்டைக்குப் போக அவன் அப்பா எங்களிடம் கோபித்துக்கொண்டு எங்களிடம் சண்டைக்கு வந்தார். ‘நாடகத்தில் நடித்ததெல்லாம் போதும்,’ என்று சொல்லி அவனைக் கூட்டிக்கொண்டு போனார். ஒரு வழியாக சமாதானப் படுத்தி திரையில்லாமலேயே நாடகம்  நடத்தலாம் என்று தீர்மானித்தோம். எனக்கு ரொம்பவும் வருத்தம். தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பிலிருந்தே திரு.சுந்தரராமன் எங்களுக்கெல்லாம் மேக்கப் போடத் தொடங்கினார்.

இருபது இருபத்தைந்து பெரியவர்கள், பத்து பதினைந்து சிறுவர்கள் நாடகம் பார்க்க வந்திருந்தார்கள்.  மற்ற சிறுவர்கள் நாடகத்தில் பங்கேற்றவர்கள். சுமார் இருநுற்றைம்பது புளியமுத்துக் கொட்டைகள் வசூல். பாக்ஸ் ஆஃபீஸ் வசூல். எங்கள் தெருவில் வசித்து வந்த, பல விடலை பருவத்தினரின் ஒரு கனவுக் கன்னி நாடகத்துக்கு வரவில்லை என்பது எங்களில் ஒரு சிலருக்கு வருத்தம்.

நாடகம் முடிந்த கையோடு ‘சுடச் சுட’ எங்கள் அம்மா பண்ணிய பஜ்ஜி, கேசரி எல்லோரையும் வரவேற்றது. திரு.சுந்தரராமன் தயவில்லாமல் நாடகம் நடந்தேறியிருக்க முடியாது. அவருக்கு நன்றி. வயது வித்தியாசம் பார்க்காமல் சிறுவர்களோடு ஒருவராக அவரால் பழக முடிந்தது அவருடைய பெரிய பலம். ஏதோ எங்கள் நாடகத்துக்காகவே எங்கள் குடியிருப்புக்கு வந்த மாதிரி, நாடகம் நடந்தேறிய சில மாதங்களிலேயே அவர் நெல்லை ஜங்ஷனில் வீடு பார்த்துக்கொண்டு மாறிப் போய்விட்டார், எப்பொழுதாவது ஜங்ஷன் போகும் பொழுது அவர் வீட்டுக்குச் சென்று வருவேன்.


சிறு வயதிலிருந்தே பல துறைகளில் ஈடுபட்ட ஒரு திருப்தி எனக்கு.  A JACK OF ALL TRADE, BUT MASTER OF NONE. ஆனால், படிப்பிலும் நான் கெட்டி என்பதால் பொதுவாக என்னை என் வீட்டில் எதற்கும் தொந்தரவு செய்தது கிடையாது.

No comments:

Post a Comment