Pages

Sunday, April 12, 2015

திருச்சி, செயின்ட் ஜோஸஃப் கல்லூரி - என் கல்லூரி வாழ்க்கையிலிருந்து ஒரு பக்கம்

பாளையங்கோட்டையில் செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் 1967-ல் நான் B.SC படித்து முடித்தேன். மறைந்த திரு.வேதசிரோண்மணி அவர்கள் கல்லூரியின் முதல்வராக இருந்த சமயம். அதுதான் அந்தக் கல்லூரியின் பொற்காலம் என்று சொல்ல வேண்டும். நான் படித்தது வேதியியல் (Chemistry). B.SC இறுதித் தேர்வில்  நெல்லை மாவட்டத்திலேயே வேதியியலில் நானும் என்னுடைய உற்ற  நண்பனுமாகிய ஆழ்வான் என்பவரும் மட்டுமே “D” (Distinction – 75 – 85%) வாங்கியிருந்தோம். என்னுடைய மற்ற  நல்ல நண்பர்கள் எல்லோருமே இயற்பியல் (Physics) சிறப்புப் பாடமாக (Major) எடுத்திருந்தார்கள். ஆழ்வான் ஐ.ஐ.டியில் ஐந்து வருட ஒருங்கிணைந்த M.Tech படிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவராம கிருஷ்ணன் ஐ.ஐ.டியில் சேர்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாதவன் திருச்சி செயின்ட் ஜோஸஃப் கல்லூரியில் M.SC படிப்பதற்குச் சேர்ந்து விட்டார்.

விடுபட்டது நானும், அப்பாக்குட்டி என்ற நண்பரும்தான். மேற்படிப்புக்குப் போக முடியவில்லையே என்று எனக்கு ரொம்ப வருத்தம். வீட்டில் சண்டை போட்டேன். அப்பாக்குட்டி இயற்பியல் படித்திருந்தார். அன்றைய காலங்களில் ஜான்ஸ் கல்லூரியில் B.SCயில் முதல் ஒன்றிரண்டு இடங்களில் வரும் மாணவனுக்கு அந்தக் கல்லூரியிலேயே லேப் அஸிஸ்டெண்ட்டாக (Demonstrator) மாணவர் விருப்பப் பட்டால் வேலைக்கு எடுத்துக்கொள்ளும் ஒரு மரபு இருந்தது. ஜாதி, மத பேதம் பார்த்ததில்லை. மேல் படிப்புக்குச் செல்ல அப்போதைக்கு வசதியில்லை என்று சொல்லி இயற்பியல் துறையில் demonstrator வேலைக்கு அப்பாக்குட்டி விண்ணப்பித்திருந்தான். உடனேயே கிடைத்து விட்டது.

என்னுடைய தகப்பனார் மாவட்ட நீதி மன்றத்தில் எழுத்தராக வேலை பார்த்து வந்தார். உடல் நிலை காரணமாக பல மாதங்கள் அடிக்கடி விடுப்பு எடுத்து வந்தார். தன்னால் தொடர்ந்து வேலை பார்க்க இயலாது என்று கூறி என்னை அவருடைய வேலையில் சேருமாறு மீண்டும் மீண்டும் வற்புறுத்தி வந்திருந்தார். கருணை அடிப்படையில் எனக்கு வேலை உடனேயே கிடைக்கும் என்று கூறினார். எனக்கோ மேற்படிப்புக்குப் போக வேண்டும் என்ற தீவிர ஆவல். அதனால் மறுத்து விட்டேன். மேற்படிப்புக்குச் செலவு செய்யவும் தன்னால் இயலாது என்பதையும் வருத்தத்துடன் தெரிவித்தார். எனக்குத் தெரிந்த விஷயம்தான். அதனால்தான் அவருக்குத் தெரியாமல் நானும் ஜான்ஸ் கல்லூரியில் DEMONSTRATOR வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன்.  ஒரு வருடம் வேலை பார்த்தால் சேமிப்பை வைத்துக்கொண்டு M.SC சேர்ந்து விடலாம் என்று எண்ணம். ஆனால், எனக்கு முந்தைய வருடத்தில் படித்த திரு.ஜெகன்னாதன் என்பவர் ஏற்கெனவே அங்கு demonstrator-ஆக பணியாற்றிக் கொண்டிருந்தார். ‘சிறந்த மாணவன்’ என்ற முறையில் ஒரு துறையில் ஒருவருக்குத்தான் கல்லூரியில் வேலை கிடைக்கும். அவர் மேற்படிப்பு செல்வதற்கு அந்த  வருடமும் வாய்ப்பில்லை என்பதால் என்னுடைய விண்ணப்பத்தை கல்லூரி முதல்வர் ஒத்தி வைத்திருந்தார்.

எனக்கு ஒரே டென்ஷன். மேற்ப்படிப்பும் இல்லை. கல்லூரியில் DEMONSTRATOR வேலையும் இல்லை. என் தகப்பனார் சொன்ன நீதி மன்ற வேலையில் சேரவும் விருப்பமில்லை. ஒன்றிரண்டு மாதங்கள் ஒரே குழப்பத்தில் இருந்தேன். திடீரென்று ஜான்ஸ் கல்லூரி முதல்வர் திரு. வேதசிரோண்மணியை வந்து சந்திக்குமாறு என்னுடைய மிக நெருங்கிய குடும்ப நண்பரும் எனக்கு வழிகாட்டியுமாக இருந்த அதே கல்லூரியில் வேலை பார்த்து வந்த இயற்பியல் விரிவுரையாளர் திரு.சுப்பிரமணியன் மூலமாக செய்தி வந்தது. உடனேயே ஓடினேன்.

திரு. ஜகன்ன்னாதன் அவர்கள் M.SC படிக்கப் போவதாகவும் அதனால் அவர் இடத்தில் நான் உடனேயே DEMONSTRATOR வேலைக்குச் சேரலாம் என்றும் திரு. வேதசிரோண்மணி கூறினார். எனக்கு ஒரே மகிழ்ச்சி. என் தகப்பனாரிடம் கூட கலந்து கொள்ளாமல் சரி என்று சொல்லிவிட்டேன்.

‘நான் ஒரு வருடம் demonstrator-ஆக வேலை பார்த்து விட்டு மேற்படிப்புக்கு போகப் போவதாக’ என் தகப்பனாரிடம் கூறினேன். ‘உன் இஷ்டம் போல் செய்துகொள். ஆனால், மேற்படிப்புக்குத் தேவையான பண வசதி என்னிடம் இல்லை என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்’ என்று கூறிவிட்டார்.

மாதம் முன்னூறு ரூபாய் சம்பளம். பத்து மாதங்கள் வேலை பார்த்தால் மூவாயிரம் ரூபாய். M.SC படிப்பதற்கு பெரும் பகுதி செலவை சமாளித்து விடலாம் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் நடந்ததென்னவோ வேறு. மாதா மாதம் வீட்டுச் செலவுக்கு என் சம்பளத்தில் பெரும் பகுதி போய் விட்டது. என்னுடைய ஒரு சொந்தக்காரரின் ஆலோசனையின் பேரில் கனரா வங்கியில் மாதம் ஐம்பது ரூபாய்க்கு ஒரு ரெக்கரிங்க் டிப்பாசிட் அக்கௌண்ட் துவக்கினேன். பத்து மாதத்தில் வட்டியுடன் சேர்ந்து சுமார் 550 ரூபாய் என்னுடைய அக்கௌண்டில் இருந்தது. அதுதான் என்னுடைய மூலதனம்.

என்னுடைய இன்னொரு நெருங்கிய நண்பரான மாதவன் செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் M.SC (பிஸிக்ஸ்) முதல் வருடம் படித்துக்கொண்டிருந்தான். எங்களுக்குள் நெருங்கிய கடிதத் தொடர்பு இருந்தது. ஒவ்வொரு கடிதத்திலும் அந்தக் கல்லூரியைப் பற்றியும் அங்குள்ள வசதிகளைப் பற்றியும் விரிவுரையாளர்களைப் பற்றியும், பரிசோதனைக் கூடத்தைப் பற்றியும், விளையாட்டு மைதானத்தைப் பற்றியும் மிக விரிவாக, உயர்வாக எழுதி வந்திருந்தான். படித்தால் அந்தக் கல்லூரியில்தான்  படிக்கவேண்டும் என்ற திடமான எண்ணத்தையும் என்னுள்ளே தோற்றுவித்தான். நானும் செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் படிக்கப் போகும் நாட்களைப் பற்றி பல கற்பனைகளை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

மார்ச்/ஏப்ரல் 1968 வாக்கில் மதறாஸ் பல்கலைக் கழகத்தில் சேருவதற்கான விண்ணப்பங்கள் கிடைப்பதற்கு முப்பது ரூபாய் போஸ்டல் ஆர்டர் வாங்கி விண்ணப்பித்தேன். இரண்டு மாதங்களாக எதுவுமே வரவில்லை. வரும் வரும் என்று நம்பிக்கொண்டிருந்தேன். M.SC படிப்புக்கு விண்ணப்பிக்க இன்னும் மூன்று நாட்களே இருந்த நிலையில் வேறு வழியில்லாமல் நெல்லை எக்ஸ்பிரஸ் வண்டி ஏறினேன். என்னுடைய நெருங்கிய நண்பனான ஆழ்வானின் அண்ணன் திரு.நம்பி சென்னையில் அரசாங்க வேலையில் இஞ்சினியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். திருவல்லிக்கேணியில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தார். முன்னறிவிப்பில்லாமல் அவர் அறைக்கு நேராகச் சென்றேன். அதற்குள் எப்படியோ அவருக்கு அவர் வீடு மூலம் தகவல் கிடைத்திருக்கிறது. அவர் அறையிலேயே குளியலை முடித்துக்கொண்டு நேராக சேப்பாக்கத்திலிருந்த மதறாஸ் பல்கலைக் கழகத்துக்குச் சென்றேன்.

முன்னே பின்னே யாரையும் தெரியாது. தனியாக சென்னைக்குச் சென்றதும் அதுதான் முதல் தடவை. விண்ணப்பங்கள்  வழங்கும் அதிகாரியிடம் சென்று எனக்கு விண்ணப்பம் வந்து சேரவில்லை என்ற குறையைக் கூறினேன். நான் அனுப்பிய  ரெஜிஸ்டெர்ட் தபாலின் ரசீதையும் காட்டினேன். அவர் தன்னால் ஒன்றும் செய்யமுடியாது. வேண்டுமானால் இன்னொரு முப்பது ரூபாய்கு போஸ்டல் ஆர்டர் வாங்கிக்கொண்டு வந்தால் விண்ணப்பத்தைக் கொடுப்பதாகக் கூறினார்.

ஏற்கெனவே குறைவாக இருந்த சேமிப்பில் செலவு செய்து சென்னைக்கு வந்த எனக்கு ஏமாற்றம், கோபம், வருத்தம். இன்னும் முப்பது ரூபாய் செலவு செய்யவேண்டுமென்றால் எப்படி? துணிச்சலாக நேராக பல்கலைக் கழகத்தின் ரெஜிஸ்டிரார் முன்பு போய் நின்றேன். அவரை சந்திப்பது ஒன்றும் கடினமாக இல்லை. என் குறையைக் கேட்ட அவர், ‘சரி, நான் இன்னொரு விண்ணப்பம் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். ஆனால், நாளைதான் விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள். அதனால், இங்கேயே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து விடு.’ என்றும் அறிவுரை கூறினார்.

விண்ணப்பத்தை வாங்கிக்கொண்டு அங்கேயே அதை பூர்த்தியும் செய்தேன். அன்றைய வழக்கப்படி விண்ணப்பத்தில் மூன்று கல்லூரிகளின் பெயரை  நாம் விருப்பத் தேர்வு செய்ய வேண்டும். முதல் விருப்பமாக திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரி பெயரையும் இரண்டாவதாக மதுரையிலிருந்த மதுரைக் கல்லூரியையும், (மூன்றாவதாக எனக்கு ஞாபகம் இல்லை) பூர்த்தி செய்து அங்கேயே கொடுத்து அதற்கு ஒரு பற்றுச் சீட்டையும் பெற்றுக்கொண்டேன்.

Distinction கிரேடு வாங்கியிருந்ததால் கண்டிப்பாக கல்லூரி சேருவதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்று நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் சேருவற்குப் போட்டி அதிகம். அந்தக் கல்லூரியிலேயே நன்றாகப் படிக்கும் பல மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தக் கல்லூரியில் சேருவதற்கு அனுமதி கிடைக்கவேண்டுமே என்று ஒரே கவலை.

அன்று மதியம் என்னுடைய சொந்தக்காரர் வேலை பார்த்து வந்த பாரிமுனையிலிருந்த அலுவலகத்திற்குச் சென்றேன். ‘நீயே நேரே போய் அந்தக் கல்லூரி முதல்வரைப் பார்த்துவிட்டு வாயேன்’ என்றார். அதுவும் சரியான யோசனையாகத் தோன்றியது.

அன்று இரவே ஒரு பஸ் பிடித்து திருச்சி வந்தேன். நேராக என் நண்பன் மாதவன் தங்கியிருந்த ‘நியூ ஹாஸ்டல்’ அறைக்குச் சென்றேன். என்னை அதிசயமாகப் பார்த்தான். ஹாஸ்டலிலேயே குளியலையும் காலை உணவையும் முடித்துக்கொண்டேன். அந்த ஹாஸ்டலிலேயே தங்கியிருந்த திரு.கிருஷ்ணன் மற்றும் விஜயராகவன் (அன்றைய நாட்களில் புகழ்பெற்ற கிரிக்கெட் விளையாட்டின் நேர்முக வர்ணனையாளராக இருந்த திரு பார்த்தசாரதி அவர்களின் மகன்) என்ற சீனியர்களிடம் கூட்டிச் சென்றான். அந்தக் கல்லூரியில் M.SC Chemistry-ஐப் பொறுத்தவரை அந்தத் துறையின் தலைவர் (Head of the Chemistry Department) காசிமீர் என்ற பாதிரியார்  முடிவே இறுதியானது என்றும், மேலும் அவர்தான் அந்தக் கல்லூரியின் ரெக்டர், கல்லூரி முதல்வருக்கும் மேலான பொறுப்பில் இருப்பவர் என்றும் விளக்கினார்கள். அவரைப் போய் பார்த்தால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார் என்றும் கூறினார்கள்.

மாதவனுடன் கல்லூரிக்குச் சென்றேன். கல்லூரியும், ஹாஸ்டலும் என்னை பிரமிக்க வைத்தன. மதிப்புக்குரிய பாதிரியார் காசிமீரைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தேன். என்ன சொல்வாரோ என்று மனதில் ஒரு பயம். அவர் வந்தவுடன் அவரை பார்ப்பதற்கு காத்திருப்பதாக கடை நிலை ஊழியர் மூலமாக சொல்லி அனுப்பினேன். என்னை அவர் அறைக்குள் கூப்பிட்டு அனுப்பினார்.

முதன் முதலாக அவரை நான் சந்தித்த போது அவர் முகத்தில் நான் கண்ட அமைதியையும் புன்னகையையும் பார்த்தவுடனேயே என் எல்லா கவலைகளும் ஏனோ பறந்து போய்விட்டன. கருணையே உருவாக புன்னகைத்தார்.

என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் Distinction வாங்கிய இரண்டு மாணவர்களின் நான் ஒருவன் என்றும் கூறினேன். பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

கவலைப் பட வேண்டாம். கண்டிப்பாக இடம் கொடுக்கிறேன் என்று கூறியபோது எனக்கு பெரிய நிம்மதி கிடைத்தது.

பிறகு எனது குடும்ப சூழ்னிலையைப் பற்றியும் எடுத்துச் சொன்னேன். என்னிடம் படிப்பதற்குத் தேவையான நிதி வசதியும் இல்லை என்றும் கூறினேன். என்னுடைய கானரா வங்கியின் பாஸ்புக் என்னுடனேயே இருந்தது. அதையும் எடுத்துக் காட்டினேன். அதையும் புரட்டிப் பார்த்தார். சுமார் ஐநூறு சொச்சம் ரூபாய் இருப்பு இருந்தது. பிறகு அவர் கூறியதுதான் எனக்கு மிகப் பெரிய நிம்மதியைக் கொடுத்தது. “நீ எதற்காகவும் யோசிக்க வேண்டாம். உனக்கு எங்கள் கல்லூரியில் சேருவதற்கான கடிதம் வந்து சேரும். நேராக என்னிடம் வந்து விடு. மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன்.” என்றார்.

அவர் கொடுத்த உறுதியை நான் M.SC படித்து முடித்து வெளியே வரும் வரை தொடர்ந்து காப்பாற்றி வந்தார். அது ஒரு தனிக் கதை.

ஒரு ஐநூறு ரூபாயுடன்தான் அந்தக் கல்லூரியில் சேர்ந்தேன். ஆரம்பத்தில் முன்னூறு ரூபாய் வாக்கில் ஃபீஸ் கட்டும்படியாக இருந்தது. என்னிடம் மீதி இருந்தது இருநூறு ரூபாய்தான். அதை வைத்துக்கொண்டுதான் என் படிப்பை தொடங்கினேன்.

படிப்பு முடிந்த பிறகு மூன்று நான்கு வருடங்களுக்கு அவருடன் எனக்கு தொடர்பு இருந்தது. பின்னர் அவர் இத்தாலியில் வாடிகன் நகரத்துக்கு சென்று விட்டார். அவருடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. பிற்காலத்தில், 1988-89 என்று ஞாபகம். மதிப்புக்குரிய பாதிரியார் காசிமீர் அவர்கள் சென்னையின் ஆர்ச் பிஷப்பாக பதவியேற்றார். அவரை சாந்தோம் சர்ச்சில் சென்று மலர் கொத்து கொடுத்து வணங்கிவிட்டு வந்தேன். என்னை நன்றாக  ஞாபகம் வைத்துக்கொண்டிருந்தார்.


எனது உயர் கல்வியில் மிகப் பெரிய உறுதுணையாக இருந்த மதிப்புக்குரிய பாதிரியார் காசிமீர் இன்று நம்மிடையே இல்லை. அவர் போன்ற கருணையுள்ளம் படைத்த பல மனிதர்கள் பல இடங்களிலும், பல மதங்களிலும், பல சமூகங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்க அவர்கள் பணி. அந்தப் பாதிரியார் எனக்கு செய்த உதவிதான் பிற்காலத்தில் நான் பணியிலிருந்து ஓய்வெடுத்த பிறகு 2007-ல் எல்.என். சேரிடபிள் டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை சொந்த செலவிலேயே நிறுவி இளைஞர்களின் நலனுக்காக பல முயற்சிகளில் என்னை ஈடுபடத் தூண்டியது. 

No comments:

Post a Comment