Pages

Friday, May 29, 2015

Things I liked about U.S.A/அமெரிக்காவில் எனக்குப் பிடித்த சில விஷயங்களைப் பற்றி:

முதலில் இன்று என்னை ஈர்த்த ஒரு செய்தியைப் பற்றி:

90,000 Indian students apply for US visa, 4,000 make the cut


அமெரிக்காவில் சென்று படிப்பதற்கான விசாவுக்கு விண்ணப்பித்த 90, 000 இந்திய மாணவர்களில் 4000 மாணவர்களுக்கு மட்டுமே விசா கிடைத்திருக்கிறது. ஏற்கெனவே, தற்பொழுது 103,000 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு, அமெரிக்க பொருளாதாரத்துக்கு இந்திய மாணவர்கள் மூலம் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (19,800 கோடி இந்திய ரூபாய்) கிடைத்திருக்கிறது. தொழிற்கல்வி, கம்ப்யூட்டர் கல்வி இரண்டுக்கும் இந்திய மாணவர்களிடையே பலத்த வரவேற்பு. அமெரிக்க கல்லூரிகளில் படிப்பதற்கு படிப்புக் கட்டணமாகவே ஒரு ஆண்டுக்கு குறைந்த பட்சம் சுமார் 30,000 அமெரிக்க டாலர்கள் செலவாகும். தங்குவது, சாப்பாடு, மேற்படி செலவு தனி. விசா கிடைப்பது என்பது குதிரைக் கொம்பு போல. நூறு விதமான எதிர்பார்ப்புகள். பெற்றோர்கள் தங்களிடம் இருக்கும் ஒவ்வொரு பைசாவையும் விசாவுக்காக கணக்குப் பண்ணி காட்டியும், பல வங்கிகளுக்கு படிப்புக் கடனுக்காக ஏறி இறங்கியும் பெரும்பாலான மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏமாற்றம்.  பத்து ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க பல்கலைக் கழகங்கள் பல மாணவர்களுக்குப் படிப்பதற்கு நிதி உதவி செய்து வந்தனர். இப்பொழுது அதுவும் பெரும்பாலும் கிடையாது. தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் செலவு செய்ய பல மாணவர்கள் கேண்டீன், நூலகம், பரிசோதனைக் கூடங்கள் என்று பல்கலைக் கழங்கங்களைச் சேர்ந்த இடங்களில் இரவும் பகலுமாக வேலை செய்து கொஞ்சம் டாலர்கள் சம்பாதித்து ஓட்டிவிடுகிறார்கள். அதுவும் எல்லா மாணவர்களுக்கும் கிடைப்பதில்லை.

எப்படியோ கஷ்டப்பட்டு படித்து முடித்து விட்டால் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை. ஆனால், இப்பொழுதெல்லாம் முன்பு போல அவ்வளவு சுலபமாக வேலை கிடைத்துவிடுவதில்லை. வேலை கிடைத்து விட்டால் ஒன்றிரண்டு ஆண்டுகளில் வாங்கிய கடனை அடைத்துவிடலாம். படிப்புக்காக செய்த செலவையும் மீட்டு விடலாம்.

இவ்வளவு கஷ்டங்களிருந்தும் பல மாணவர்களும் பெற்றோர்களும் அமெரிக்கா செல்லும் கனவை விடுவதில்லை.  பெரிய நம்பிக்கையோடு பல இந்திய மாணவர்கள் அமெரிக்காவுக்கு வந்து படிக்க வேண்டும், வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். காத்திருக்கிறார்கள்.

காரணம், இங்கே அவர்களுக்குக் கிடைக்கும் வாழ்க்கைத் தரம். பெரிய பெரிய கனவுகளை நிறைவேற்றிக்கொடுக்கும் பூமியாக நூற்றாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா இருப்பதினாலும்தான். திறமையிருந்தால் கண்டிப்பாக முன்னுக்கு வர முடியும் இங்கே. தகிடு தத்தங்கள் குறைவு. தினப்படி வாழ்க்கையில் அல்லல்களில்லை. வெளி நாடுகளிலிருந்து வரும் (எதிரி நாடுகளையும் சேர்த்து) மக்களின் திறமைகளை நன்கு பயன்படுத்தியே முன்னுக்கு வந்த நாடு அமெரிக்கா. ஒரு பெட்டிக்கு வெளியே சிந்தனையைச் செலுத்தக்கூடிய சுதந்திரம்.

நிற்க….

அமெரிக்காவில் எனக்குப் பிடித்தது என்பதைப் பற்றி எழுதத் தொடங்கும் பொழுது இன்றைய செய்தித் தாள்களில் வந்த இந்த செய்தி என்னைத் தாக்கியது. அதைப் பற்றி எழுத வேண்டும் என்றும் தோன்றியதால் எழுதியிருக்கிறேன்.

அமெரிக்காவுக்கு அடிக்கடி வந்து போகும் பொழுதெல்லாம்  நமது இந்திய மண்ணை பிரிந்து வந்த சோகம் அடி மனதில் ஒட்டிக்கொண்டிருக்கும். தினப்படி பல சங்கடங்கள், அசௌகரியங்கள். இருந்தும் அமெரிக்காவைப் பற்றிய பல விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

முதலாவது, இங்குள்ள பொது நூலகம். நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கும் இருக்கும் எனக்கு இது மிகவும் வசதியாக இருக்கிறது. நிறைய ஆங்கிலத் திரைப் படங்களும் பார்க்கலாம்.

இரண்டாவது, எல்லா வசதிகளையும் கொண்டிருக்கும் இங்கேயுள்ள இயற்கையான சுற்றுலா மையங்கள். ஊர் சுற்ற விரும்பும் எனக்கு இந்த மையங்கள் மிகவும் பிடித்திருக்கின்றன. சிகாகோ ஃபாக்ஸ் நதிக் கரையில் எடுத்த சில படங்களும் இங்கே:




மூன்றாவது, அதிக ஆள் அரவமில்லாத நடை பாதைகள், அடர்ந்த மரங்களூடே செல்லும் வழிப்பாதைகள். (Woods Trail) ஏரிகள். பூங்காக்கள். இங்கு வந்த பிறகு 50 ஆண்டு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சைக்கிள் ஒட்டத் தொடங்கியிருக்கிறேன்.  நடக்கப் போவதைத் தவிர தினமும் சிறிது நேரம் சைக்கிள் ஓட்டுவது வழக்கம். இன்றும் அப்படி ஒரு TRAIL வழியாகப் போனபோது எடுத்த சில புகைப்படங்கள் இதோ:






மனதுக்கும் அமைதியாக இருந்தது. அதைப் பற்றி எழுத வேண்டும் என்றும் தோன்றியது.

என்னுடைய பழைய பயணக்கட்டுரையைப் படிக்க:

http://neel48.blogspot.com/2014/07/our-trip-to-denver-colarado.html

No comments:

Post a Comment