Pages

Friday, July 24, 2015

நயாகரா நீர்வீழ்ச்சி







கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பன்னாட்டு எல்லையில் கனடாவின் ஒன்டோரியா மானிலத்துக்கும், அமெரிக்காவின் நியுயார்க் மானிலத்துக்கும்  நடுவே மூன்று நீர்வீழ்ச்சிகளாக நயாகரா நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. வட அமெரிக்காவின் ஐந்து பெரிய ஏரிகளிலில் ஒன்றான எர்ரீ ஏரியிலிருந்து (Lake Erie) நீர் நயாகரா நதியாக ஓடி, நீர்வீழ்ச்சியாக விழுந்து  நயாகரா மலைப்பள்ளத்தாக்கு வழியே ஓடி ஓன்டோரியோ ஏரியில் (Lake Ontario) சென்று கலக்கிறது. இந்த மூன்று நீர்வீழ்ச்சிகளில் பெரியது கனடா பகுதியிலிருக்கும் குதிரைலாடம் வடிவிலான நீர்வீழ்ச்சி (Horseshoe Falls). இரண்டாவதும் மூன்றாவதும் அமெரிக்க பகுதியிலிருக்கும் அமெரிக்கா நீர்விழ்ச்சி (American Falls), மற்றும் ‘ப்ரைடல் வெயில்’ நீர்வீழ்ச்சி (Bridal Veil Falls).  ‘கோட்’ தீவு (Goat Island) அமெரிக்க நீர்வீழ்ச்சியையும், ‘லூனா’ தீவு (Luna Island) ‘ப்ரெய்டல் வெயில்’ நீர்வீழ்ச்சியையும்  பெரிய நீர்வீழ்ச்சியிடமிருந்து பிரிக்கிறது. 165 அடி உயரமே இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சிகளில் தான் உலகிலேயே மிக அதிகமாக கொள்ளளவு தண்ணீர் விழும் நீர்வீழ்ச்சியாகும் (ஒரு நிமிடத்துக்கு 110,000 கன மீட்டர் அளவு). நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க் மானிலத்தின் பஃபலோ நகரத்திலிருந்து 27 கி.மீ  தூரத்திலும் கனடாவின் டொரோன்டோ நகரத்திலிருந்து 121 கி.மீ  தூரத்திலும் அமைந்திருக்கிறது. நயாகரா நீர்வீழ்ச்சி கடைசி பனியுகத்தில் (the last Ice Age) விஸ்கான்சின் உறைபனிப்படலம் (Wisconsin Glaciers) பின் வாங்கியபோது தோன்றியிருக்கிறது. இதன் தண்ணீர் அட்லாண்டிக் கடலில் சென்று கலக்கிறது. மிகப் பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்க இந்த நீர்வீழ்ச்சிகள் பயன்படுகின்றன.

நயாகரா நீர் வீழ்ச்சிகளைப் பற்றிய சில சுவையான தகவல்கள்:
·        நயாகரா நதியின் வேக ஓட்டத்தில் நிமிடத்துக்கு 60 டன் அளவு கரைந்த உப்புக்களும் மிக மெல்லியதாக அரைக்கப்பட்ட பாறை மாவும் நீரில் கலந்து தண்ணிருக்கு ஒரு பச்சை நிறத் தோற்றத்தைக் கொடுக்கின்றன. பாறைகள் கரைந்து கரைந்து இன்னும் சுமார் 50000 ஆண்டுகளில் நயாகரா நீர்வீழ்ச்சியே காணாமல் போய்விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்திருக்கிறார்கள். கடந்த 10,900 ஆண்டுகளில் இந்த நீர்வீழ்ச்சி சுமார் 11 கி.மீ தூரம் தென் பக்கமாக பின் வாங்கியிருக்கிறது.
·        சுமார் கி.பி 1604 சமயத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி பகுதிகளை துணிச்சலான பல  நில ஆராய்ச்சியாளர்கள் கண்டுகொண்டிருக்கிறார்கள்.
·        கி.பி 1848-ல், நதி உறைந்து சுமார் 40 மணி நேரத்துக்கு பனிக்கட்டியாக மாறி அருவியில் நீர்வீழ்ச்சி நின்றிருக்கிறது. அதே ஆண்டில்தான் முதன் முதலில் இந்த நதிக்கு குறுக்கே நடந்து செல்ல ஒரு பாலம் கட்டப்பட்டது. 1855-ல் ஜான் அகஸ்டல் ரோப்ளிங் என்ற ஜெர்மானியரின் உதவியால் அந்த தொங்கு பாலம் கட்டி முடிக்கப்பட்டது. ரெயில் செல்ல வசதியாக கட்டப்பட்ட முதல் தொங்குபாலம் உலகிலேயே இதுதான். கற்களாலும், மரத்தினாலும் கட்டப்பட்ட இந்த பாலம் பின்பு 1886-ல் வளைவான இரும்புப் பாலமாக மாற்றியமைக்கப்பட்டு 1897-ல் முடிக்கப்பட்டது. இந்தப் பாலம் வழியே மேலே ரயிலும், கீழே மோட்டர் வாகனங்களும், நடைசாரிகளும் கனடாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே செல்ல முடியும். 1941-ல் இன்று காணப்படும் வானவில் வடிவிலான இன்னொரு பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
·        ஜூன், 1969-ல் அமெரிக்க ராணுவ இன்ஜினியர்கள் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் தேங்கிக்கிடந்த பாறைகளை அகற்றுவதற்காகவும், பராமரிப்பு வேலைகளுக்காகவும் நயாகரா நதியின் குறுக்கே 600- அடி நீளமான ஒரு சிறிய அணையைக் கட்டி தண்ணிரை தற்காலிகமாக திருப்பி விட்டார்கள். பாறைகள் கரைந்து கரைந்து நீர்வீழ்ச்சியின் அமெரிக்கப் பகுதி பாதுகாப்பில்லாத பகுதியாக மாறுவதை தடுப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. நவம்பர் 25, 1969-ல், அடிவாரப் பகுதிகளை சீர் செய்த பிறகு, தற்காலிகமாக கட்டப்பட்ட அணை டைனமைட்டினால் தகர்த்தெறியப்பட்டு மீண்டும் தண்ணீர்  நீர்வீழ்ச்சிக்கு திருப்பி விடப்பட்டது. தொடர்ந்து அமெரிக்க பகுதிகளில் பல இடங்களில் கரைகளும் பாறைகளும் பலப்படுத்தப் பட்டன. அந்த முயற்சிகளின் காரணமாக அமெரிக்க பகுதியில் குதிரைலாட வடிவமான  நீர்வீழ்ச்சியின் நீளத்தில் 400 அடி காணாமல் போனது.
·        1829, அக்டோபரில் சாம் பாட்ச் என்ற சாகச வீரர், நீர்வீழ்ச்சியின் அருகேயிருக்கும் ஒரு உயரமான கட்டிடத்திலிருந்து அருவியின் தண்ணீர் விழும் பள்ளத்தில் முதன் முதலாகக் குதித்து உயிர் தப்பியிருக்கிறார். தொடர்ந்து பல வீரர்கள் இந்த அருவியில் சாகச விளையாட்டுக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அக்டோபர், 1901-ல் மிசிகனைச் சேர்ந்த 63 வயதான ஆனி எடிசன் டெய்லர் என்ற பள்ளி ஆசிரியை முதன் முதலாக ஒரு பீப்பாய்க்குள் அமர்ந்து நீர்வீழ்ச்சியில் விழுந்து பலத்த காயங்களுடன் உயிர் தப்பியிருக்கிறார். அருவியின் மீது இது போல சாகச விளையாட்டுக்கள் கனடா, அமெரிக்கா இரண்டு நாடுகளிலும் தடை செய்யப்பட்டிருந்தாலும், டெய்லரின் முயற்சிக்குப் பிறகு 14 பேர் இதே போன்று முயன்றிருக்கிறார்கள்.
·  நயாகரா அருவிப் பள்ளத்தாக்கை கயிற்றுக் கம்பி மேல் நடந்து பலர் சாகசம் புரிந்திருக்கின்றனர். அதில் ப்ளாண்டின் என்பவர் மூன்று முறை நடந்து காட்டியிருக்கிறார். அவரது கடைசி முயற்சியை, இங்கிலாந்து வேல்சின் இளவரசர் முன்னிலையில் நடத்திக் காட்டியிருக்கிறார் –அதுவும் ப்ளாண்டின் தன் அதிகாரியை தோளில் சுமந்துகொண்டு. ஜூன் 15, 2012-ல் நிக் வாலெண்டா என்ற சாகச வீரர் குதிரைலாட அருவிக்கு மேல் 1800 அடி  நீளமான கம்பியில் எந்த உதவியுமின்றி நடந்து காட்டியது 116 ஆண்டுகளில் முதல் முறையாகும். வேடிக்கை என்னவென்றால், கம்பியில் நடந்து சென்றபோது தன்னுடன் தனது பாஸ்போர்ட்டையும் எடுத்துச் சென்றிருக்கிறார். கனடாப் பகுதியில் இறங்கியதும் அதிகாரிகளிடம் காட்ட வேண்டுமே!
· பல இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், லட்சக்கணக்கான பன்னாட்டு சுற்றுலாப் பயணிகள் நயாகராவை சுற்றிச் சுற்றி வந்திருக்கிறார்கள்.
·   இரவு நேரத்தில் நயாகரா அருவி மின் ஒளியில் ஜொலிக்கிறது. கனடா, யூ.எஸ்.ஏ இரண்டு நாட்டுப் பகுதிகளிலிருந்தும் படகு மூலமாக குதிரைலாட அருவிக்கு மிக அருகே சுற்றுலாப் பயணிகளை எடுத்துச் செல்கிறார்கள். அருவியின் நீர்த் துளிகள் மழை போல் வானில் தெரித்து பயணிகளை குளிப்பாட்டி உற்சாகப்படுத்துகிறது. தண்ணீரில் நனையாமல் இருப்பதற்காக எல்லோருக்கும் மெல்லிய ப்ளாஸ்டிக் அங்கி கொடுக்கிறார்கள். அமெரிக்க பகுதியில்  ப்ரைடல் வெய்ல் அருவிக்குக் கீழே போவதற்கு எலிவேட்டர்கள் கட்டியிருக்கிறார்கள் (Cave of the Winds) . கனடா பகுதியில் குதிரை லாட அருவிக்குப் பின்னே போய் பார்ப்பதற்கு குகை குடைந்திருக்கிறார்கள் (Journey behind the falls).
·     கனடா பகுதியில் நயாகரா நதிப் பள்ளத்தாக்கை மேலிருந்து பார்ப்பதற்கு கம்பியில் பயணிக்கும் ஆகாய கார் அமைத்திருக்கிறார்கள். சுமார் முப்பது பேர் நிற்கக் கூடிய இந்த டிராலி பிரம்மாண்டமான  நதிப்பள்ளத்தாக்கின் கனடா பகுதியில் இரண்டு முனைகளுக்கிடையே செல்கிறது. ஊர் முழுவதும் சுற்றிக் காட்டுவதற்கு ட்ராலி, சுற்றுலா பஸ் ஓடுகின்றன. இதைத் தவிர  நயாகரா நதிக் கரையோரமாகவே நடந்து சென்று பார்ப்பதற்கும் பாதை அமைத்திருக்கிறார்கள். கனடாப் பகுதியில் பல காசினோக்கள் (சூதாட்டம் நடக்கும் ஹோட்டல்கள்), தண்ணீர் பூங்காக்கள், இயற்கை பூங்காக்கள், ஆகாயத்தில் கட்டப்பட்ட ஸ்கைலான் ஹோட்டல் இப்படிப் பல பொழுது போக்கு அம்சங்கள்.

ஸ்கைலான் கோபுரமும் ஆகாயத்தில் கட்டப்பட்ட ஹோட்டலும்


 முடிவுரை
கடந்த வார இறுதியில் கனடா பகுதியிலிருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். யூ.எஸ்.ஏ பகுதிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பேயே நாங்கள் போயிருக்கிறோம். இயந்திரப் படகில் குதிரைலாட நீர்வீழ்ச்சிக்கு மிக அருகே படகு சென்றபோது, அருவியின் நீர் காற்றில் தெரித்து படகையும் எங்களையும் ஒரு சேர நனைத்தது. படகின் விளிம்பில் நின்று அந்தக் காற்றையும் நீரையும் உள்வாங்கிய போது ‘வேறெதுவும் இனித் தேவையில்லை, எல்லாம் நிறைந்து விட்டது’ என்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. கண்ணை மூடி தியானித்த போது எங்கோ வேறு ஒரு உலகத்துக்குப் போவது போலத் தோன்றியது. நயாகரா வேர்ல்பூல் பள்ளத்தாக்கின் மேலே கயிற்றுக் கம்பிக் காரில் பயணித்து தண்ணீரின் வேகத்தைப் பார்த்தபோது இயற்கையின் வேகத்தை உணர முடிந்தது. குதிரைலாட அருவிக்குப் பின்னே குகையில் நடந்த போது மனிதன் இயற்கையை ஆட்கொளத் துடிக்கும் துடிப்பு புரிந்தது.
பின் குறிப்பு
இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையில் பத்ரினாத் க்ஷேத்திரத்துக்குப் போயிருந்த போது, கங்கை நதியின் பிரம்மாண்டத்தை பல இடங்களில் கண்டு பிரமித்திருக்கிறேன்.

 







No comments:

Post a Comment