Pages

Friday, February 05, 2016

திகிலூட்டும் அண்டார்ட்டிக்கா - உண்மைக் கதைகள்: பகுதி 2 C – ஷெக்கெல்ட்டனின் கதை

திகிலூட்டும் அண்டார்ட்டிக்கா - உண்மைக் கதைகள்: பகுதி 2 C – ஷெக்கெல்ட்டனின் கதை

நவம்பர், 1915

கப்பலிலிருந்த எல்லாப் படகுகளையும், சரக்குகளையும், இழு வண்டிகளையும் கவசங்களையும் வெளியே கீழிறக்குமாறு ஷேக்கெல்டன் உத்தரவிட்டார். கப்பலுக்கு முன்னூறு அடி தள்ளி பனிக்கட்டியின் மீது ஐந்து கூடாரங்கள் அமைக்கப்பட்டனஆனால், அந்த கூடாரங்களுக்குக் கீழே இருந்த பனிக்கட்டிகளும் பிளக்கத் தொடங்கியதால் கூடாரங்கள் இன்னும் ஒன்றரை மைல் தள்ளி கனமான, அடர்ந்த பனிக்கட்டிகளின் மீது மாற்றியமைக்கப்பட்டன 

தூரத்தில் நொறுங்கிகொண்டிருந்த கப்பல் பாவமாக நின்று கொண்டிருந்தது. இறுதியில் நவம்பர் 21, 1915 அன்றுஎன்டியூரன்ஸ்’ முழுவதுமாக நொறுங்கி, முறிந்துவெடல்’ கடலில் மூழ்கத் தொடங்கியது. கப்பலிலிருந்த பெரும்பாலான பொருட்கள் சேதமில்லாமல் வெளியே மீட்கப்பட்டு விட்டன. அவற்றில் முக்கியமானது குழுவில் ஒருவரான ஃப்ராங்க் ஹர்லி என்பவரின் புகைப்பட தொகுப்புகள்.

28 பேர் அடங்கிய அந்த கப்பல் குழு நடுக் கடலில், பனிப் பாறைகளின் மேல், நிலப்பரப்புகளுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் தள்ளி தொடர்பு கொள்ளக்கூடிய எந்த வசதியுமில்லாமல், தனிமைப் படுத்தப்பட்டனர்.

அதில் மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால் குளிர் காலம் முடிந்து இளவேனிற் காலம் ஆரம்பித்த சமயத்தில் பனிக்கட்டிகள் சூட்டில் உருகி பிளக்கத் தொடங்கின. டிசம்பர் 20-ஆம் தேதி வாக்கில் இனியும் பனிப்பாறைகளின் மீது கூடாரம் அடித்து தங்கியிருப்பது மிகவும் ஆபத்தானது என்ற முடிவுக்கு ஷேக்கெல்ட்டன் வந்தார்.

மேற்குப் பக்கத்தில் பாலெட் தீவின் நிலப்பரப்பு இருக்க வேண்டும் என்று யூகித்து கூடாரங்களை கலைத்து விட்டு அதை நோக்கி நடக்கத் தொடங்க வேண்டும் என்று ஷேக்கெல்ட்டன் தீர்மானித்தார்.

நன்கொடையாக கிடைத்த மூன்று உயிர்காப்புப் படகுகள் அவர்களிடம்  இருந்தன. அதில் ஜேம்ஸ் கெயிர்ட் மற்றும் டட்லி டாக்கர் என்று பெயரிடப்பட்ட இரண்டு படகுகளை சிறு சிறு குழுக்களாக ஒருவர் மாற்றி மற்றவர் இழுத்தனர். ‘ஸ்டேங்கோம்ப் வில்ஸ்’ என்று பெயரிடப்பட்ட மூன்றாவது படகை அங்கேயே விட்டுச் சென்றனர். கூட எடுத்துச் சென்ற இரண்டு படகுகளில் ஒன்று இருபது அடி நீளம். பனிப்பாறைகள் உருகும் பட்சத்தில் அதை பயன்படுத்துவதாகத் திட்டம்.  

அங்கிருந்து இடம் மாறிய பிறகு அங்கங்கே எல்லோருமாகத் தங்குவதற்கு அதிக இடம் தேவைப்பட்டது. அதனால் கிளம்பிச் சென்றவர்களில்  ஒரு சிலர் ஃப்ரான்க் வொயில்ட் என்பவரின் தலைமையில் மீண்டும் ஸ்டேங்கோம்ப் படகை மீட்பதற்காகத் திரும்பி வந்தனர்அந்த முயற்சி பின்னால் நன்மையாகவே முடிந்தது.

ஏப்ரல், 1916

ஏப்ரல் 9, 1916 அன்று பனிக்கட்டிகள் உருகி, உடையும் தன்மையுடைய  மெல்லிய பனித்தகடுகளான மாறின. அதனால்  திறந்த நீர் பாதைகள் வழியாகவே  தங்கள் பாதையை தொடர வேண்டியிருந்தது. மாலையில் அந்த பாதைகள் மீண்டும் இறுகி பனிக்கட்டிகளாகின. மீண்டும் கூடாரத்தில் புகலிடம் கொண்டனர். தென் துருவத்தின் பிடியிலிருந்து தப்பித்தாக வேண்டுமே!

இப்படி பல இன்னல்களுக்கிடையேயும் பனிப்பாறைகளின் மீது ஷேக்கெல்ட்டனின் குழு தொடர்ந்து சென்றதென்றால் அவர்களுக்கு ஊக்கமும் தைரியமும் கொடுத்து, மனம் தளர விடாமல் நடத்திச் சென்ற ஷேக்கெல்ட்டனின் தலைமையேற்று நடத்தும் ஆற்றலினாலேயே முடிந்தது. எல்லா பொருட்களையும் ஏற்றிச் சுமந்த கனமான படகை அபாயகரமான, உடைந்த, பிளந்த, வழுக்கும் பனிப்பாறைகளுக்கூடே உடல் வருத்தி இழுக்கும் வேலையில் ஒரு  குழுவை ஒருங்கிணைத்து அழைத்துச் சென்றது ஷேக்கெல்ட்டனின் தலைமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

என்டியூரன்ஸ் கப்பல் பனிக்கட்டிகளில் சிக்கி தரையிறக்கப்பட்டு இப்பொழுது 14 மாதங்கள் ஆகிவிட்டன. உறைந்த பனிக் கடலில்  மூழ்கி 5 மாதங்கள் கடந்து விட்டன.

ஏப்ரல், 1916

ஏப்ரல் 12 வாக்கில்தான் ஒரு பெரிய தவறு நடந்திருப்பதை ஷேக்கெல்டன் உணர்ந்தார்.

பனிப்பாறைகள் அசையாமல் இருப்பது போல் மேலெழுந்தவாரியாக தோன்றினாலும், உண்மையில் மிதந்து நகர்ந்து கொண்டிருந்ததால் அவரின் குழு மேற்குப்பக்கமாக செல்லாமல் கிழக்கு திசையில் 30 மைல்கள் வழி தவறி வந்திருக்கின்றனர்

அப்படியிருந்தும் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைச் சேர்ந்த எலிஃபென்ட் தீவு கண்ணில் பட்டது.  இப்பொழுது படகுகள் நீரில் செல்ல முடிந்தது.

497 நாட்களுக்குப் பின்பு அவர்கள் எலிஃபென்ட் தீவில் கால் வைத்தபோது அவர்கள் அடைந்த உற்சாகத்துக்கு அளவே கிடையாது.

அவர்களின் ஆரம்ப உற்சாகம் அதிக நாள் நீடிக்கவில்லை. எலிஃபென்ட்    தீவு அவ்வளவு பெரிய குழு தங்குவதற்கு லாயக்கான இடமில்லை என்பதை விரைவிலேயே கண்டுகொண்டார்கள்கூடிய சீக்கிரம் இன்னொரு இடத்தை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது  அப்படி ஒரு நல்ல இடத்தை கரை கரையாகத் தேடி சிரமப்பட்டு  கண்டுபிடித்தது ஷேக்கெல்ட்டன் குழுவில் ஒருவரான ஃப்ரான்க் வொயில்ட். அந்த இடத்தையும் அவர் பெயரிலேயே பாயின்ட் வொயில்ட் என்று அழைத்தனர்.

தற்போதைக்கு பாயின்ட் வொயில்ட் பாதுகாப்பான இடமாக இருந்தாலும் அங்கேயும் அதிக நாட்கள் தங்க முடியாது என்பதையும் உணர்ந்து கொண்டார்கள்

நாகரீகம் அறிந்த மனிதர்கள் வாழும் பகுதிகளிலிருந்து வெகு தள்ளி வந்து விட்டார்கள்.  அந்தக் குழுவினர் எங்கே இருக்கிறார்கள் என்றோ, அல்லது இருக்கிறார்களா, இல்லையா என்பது கூட உலகுக்குத் தெரியாத நிலைஅவர்களை மீட்பதற்கு யாருமில்லை. யாருக்கும் தகவல் கொடுப்பதற்கும் வழியில்லை. வேறு கப்பல்கள் எதுவும் அந்த வழியே வரவுமில்லை. முழுமையாக தனிமைப் படுத்தப்பட்டிருந்தார்கள்.

மீட்புக்குத் திட்டம்

தன்னை நம்பி அந்த அபாயகரமான பயணத்துக்கு வந்தவர்களை காப்பாற்ற வேண்டுமானால் அந்த இடத்திலேயே தங்கியிருப்பதில் எந்த பயனுமில்லை. 800 மைல் தொலைவிலுள்ள தெற்கு ஜியார்ஜியாவின்வேல்’ மீன் நிலையத்துக்கு எப்படியாவது சென்றால்தான் ஏதேனும் உதவி கிடைக்கும் என்று ஷேக்கெல்டன் விரைவில் உணர்ந்து கொண்டார்ஆனால், அங்கே போவதற்கு உலகிலேயே மிக அதிகமாக புயல் காற்று வீசும் கடற்பகுதியை கடந்தாக வேண்டும். 50 அடி வரை உயரக்கூடிய அலைகளைக் தங்களின் 22 அடி நீளமுள்ள படகில் கடக்க வேண்டும். படகில் இருப்பதோ பழைய திசைகாட்டும் கருவிகள். சரியாக வேலை செய்யுமா என்று தெரியாது. சூரியன் இருக்கும் திசையை மட்டும் நம்பி இறங்க வேண்டும். சூரியனோ வாரக்கணக்கில் கண்ணுக்கு தெரியமாட்டான். மிகவும் இக்கட்டான நிலை.

ஷேக்கெல்ட்டன் ஒரு முடிவுக்கு வந்தார். அவருடன் பயணித்த ஃப்ரான்க் வொயில்ட் என்பவரை அவருடைய திட்டத்துக்கு சரியான ஆளாக தேர்ந்தெடுத்தார். முந்தைய சமயங்களில் ஃப்ரான்க் சிறப்பாக தன் குழுவுக்கு உதவியிருக்கிறார். எலிஃபென்ட் தீவில் அவருடைய தலைமையில் குழுவின் பெரும் பகுதியினரை நிறுத்தி வைத்துவிட்டு ஒரு சிலரோடு மட்டும் தான் அங்கிருந்து கிளம்புவது என்று தீர்மானித்தார். இளவேனிற்காலம் முடிவதற்குள் அந்த அணிக்கு சரியான வழியில் மீட்புப் படை வந்து சேராவிட்டால் ஃப்ரான்க் தலைமையில் அந்தக் குழு டிசெப்ஷன் தீவு’ என்ற இடத்துக்கு எப்படியேனும் வந்து சேர வேண்டியது. அங்கேயும் வேல், சீல் மீன்களைப் பிடிப்பவர்கள் வருவதுண்டு என்பதால் எப்படியேனும் மீட்கப்படலாம் என்று நம்பினார்.

இருக்கும் வசதிகளையும் கருவிகளையும் கொண்டு ஜேம்ஸ் கெயிர்ட் படகை தயார் செய்தார்கள். அந்தப் படகை தண்ணீரில் செலுத்துவதற்கு முயன்றபோது குளிர்ந்த தண்ணீருக்குள் பல முறை விழுந்து, உடைகள் நனைந்து போக, அவைகள் காயும் வரை காத்திருந்து மீண்டும் அவைகளையே அணிந்துகொண்டு, இப்படி பல முறை முயன்று படகை தண்ணீரில் இறக்கினார்கள்.   

எலிஃபென்ட் தீவிலேயே தங்கிவிட்டவர்கள் தங்களிடம் மீதமிருந்த இரண்டு படகுகளையும் தலைகீழாக கவிழ்த்துப் போட்டு ஒரு கூடாரம் போல் அமைத்து குட்டையான கல் சுவர்களின் மீது நிறுத்தி வைத்து, தங்களிடம் இருந்த கனத்த கூடாரத் துணிகளை கட்டி பலமாக வீசும் காற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொண்டனர். பழைய ஃபோட்டோ சட்டங்களை கூடாரத்தின் ஜன்னல்களாக மாற்றி அமைத்துக்கொண்டனர். கடல்வாழ் நீரினங்களின் மேற்தோலுக்கு அடியில் காணப்படும் ப்ளப்பரை (BLUBBER) எரிபொருளாக பயன்படுத்தும் அடுப்பு ஒன்றை கூடாரத்தை சூடு படுத்துவதற்கும், உணவு தயாரிப்பதற்கும் பயன்படுத்தினர். உணவுப் பொருட்களுக்கோ தட்டுப்பாடு.  தங்குவதற்கு இடமோ குறுகியது. தங்கியிருந்தவர்களில் ஒருவருக்கு பனிக்கடியினால் (Frost bite) பளப்பர் அடுப்பின் குறைந்த வெளிச்சத்தை வைத்தே அவருடைய கால்களை துண்டிக்க வேண்டியிருந்தது.

 ...........................................................................................................................................................

முந்தைய பகுதிகளுக்குச் செல்ல:


No comments:

Post a Comment