Pages

Friday, February 05, 2016

திகிலூட்டும் அண்டார்ட்டிக்கா - உண்மைக் கதைகள்: பகுதி 2 A – ஷெக்கெல்ட்டனின் கதை

திகிலூட்டும் அண்டார்ட்டிக்கா - உண்மைக் கதைகள்: பகுதி 2 A – ஷெக்கெல்ட்டனின் கதை

சரித்திரப் புகழ் பெற்ற ஷேக்கெல்ட்டனின் அண்டார்ட்டிக்கா பயணம் நடந்து 2016 ஆண்டோடு 100 ஆண்டுகள் ஆகிறது. இந்தக் கட்டுரையை ஷேக்கெல்ட்டனுக்கும் அவருடன் பயணித்த 22 வீரர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு மிகவும் உதவியாக இருந்த வலைப் பதிவுகளுக்கு நன்றி.

ஷேக்கெல்ட்டனின் கதையை பல முறை வலையில் படித்து பிரமித்து விட்டேன்.  நான் ரசித்த இந்த உண்மைக் கதையை சுருக்கமாக ஒரு பக்கத்தில் எழுதினால் ரசிக்காது என்று தோன்றியதால் நான்கைந்து பகுதிகளாக ஒரே நாளில் வலைப்பக்கத்தில் கொடுத்திருக்கிறேன். 

ஆண்டு 1907-09

பலராலும் பாராட்டி பேசப்பட்ட நிம்ராட் ஆய்வுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியிருந்தார் இங்கிலாந்தின் ஏர்ன்ஸ்ட் ஷேக்கெல்ட்டன். அந்த ஆய்வுப் பயணத்தின் போது தென் துருவத்துக்கு மிக அருகில் – 880 அட்சரேகை, தென் துருவத்திலிருந்து 112 மைல் அருகே - சென்று விட்டார்.  அன்றைக்கு அது ஒரு பெரிய சாதனை. ஆனால் அவரால் துருவத்தை தொட முடியவில்லை. ஆனாலும், துணிகரமான, யாரும் அது வரை முயலாத ஒரு பயணம். ஷேக்கெல்ட்டனுக்கு தென் துருவத்தை தொடவில்லையே என்று ஏமாற்றம்தான்.  தன்னைத் தொடர்ந்து பலரும் தென் துருவத்தை தொடும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என்று அவருக்குத் தெரியும். அதனால் தன்னுடைய முந்தைய முயற்சியை விட மிகக் கடுமையான வேறொரு பயணத்தில் ஈடுபட வேண்டும் என்று மனதில் தீர்மானித்தார்.

அப்பொழுது அவர் மனதில் தோன்றியதுதான் இன்னும் சரித்திரத்தில் பேசப்படும் 1914-17களில் அவர் மேற்கொண்ட அண்டார்ட்டிக்கா பயணம். இந்த முறை தென் துருவம் வழியாக அண்டார்ட்டிக்காவின் ஒரு கரையிலிருந்து இன்னொரு கரைக்கு 1800 மைல் தூரம் கொண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும்.

தகவல் தொடர்பு வசதிகளோ, நவீன கருவிகளோ, கப்பல்களோ வரை படங்களோ இல்லாத அன்றைய காலத்தில் இப்படி ஒரு முயற்சியைப் பற்றி யாரும் கனவிலும் கூட எண்ணிப்பார்த்ததில்லை. 1914- 17-களில் அவர் மேற்கொண்ட அண்டார்ட்டிக்கா பயணம் நம்ப முடியாத, திகிலூட்டும் பல திருப்பங்களைக் கொண்டதாக அமைந்தது. அவரது பயணம் சரித்திரத்தில் நெருப்பக்களாலான எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று அவருக்கு முன்னால் அண்டார்ட்டிக்காவை எட்டிப் பார்த்த ரோல்ட் அமுண்ட்சென் என்பவர் கூறியிருக்கிறார்.

திட்டம்

தென் அமெரிக்காவின் தென் பக்கம் அமைந்துள்ளவெடெல்’ கடற்பகுதியிலிருந்து கிளம்பி அதுவரை யாரும் கண்டிராத அண்டார்ட்டிக்கா பகுதி வழியாக தென் துருவத்தை அடைந்து அங்கிருந்து ரோஸ் மற்றும் மக்முர்டோ என்ற குறுகிய கடல் பகுதியை (இன்றைய நியூசீலாந்துக்கு தென்புறம்) அடையவேண்டும் என்பதுதான் ஷேக்கெல்ட்டனின் திட்டம்.

பயணத்துக்கு தயார் செய்தல்

‘வெடல்’ கடலிலிருந்து கிளம்புவதற்கு ஏற்றவாறு கப்பல் ஒன்றை தேடியபோது நார்வே நாட்டில் சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டப்பட்டஎன்டியுரன்ஸ்என்று பெயரிடப்பட்ட ஒரு புதிய கப்பல் கண்ணில் பட்டது. மறுபக்கம் ரோஸ் கடலிலிருந்து கிளம்புவதற்கு 1911-14-ல் இன்னொரு அண்டார்ட்டிக்கா பயணுத்துக்காக டக்ளஸ் மாசன் என்பவர் பயன்படுத்தியஆரோரா’ என்ற கப்பலை வாங்கினார்.

ஒரு வினோதமான விளம்பரத்தை ஷேக்கெல்ட்டன் பத்திரிகைகளில் வெளியிட்டதாக  ஓரு கதைஅந்த விளம்பரம் இப்படி இருந்தது:

“குறைந்த ஊதியம். கடும் குளிர், இருட்டினூடே நெடுதூரம் நீண்ட நாட்களுக்குப் பயணம், எந்நேரத்திலும் அபாயம் ஏற்படலாம்பாதுகாப்பாக, நிச்சயமாக திரும்பி வருவதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது பதவியோ, பணமோ, புகழோ, மரியாதையோ கிடைக்குமா என்பது சந்தேகம். அப்படிப்பட்ட ஒரு அபாயகரமான பயணத்துக்கு  ஆட்கள் தேவை.”

அண்டார்ட்டிக்கா பயணம் என்பது மிக ஆபத்தானது என்று எல்லோருக்கும் தெரியும். ஷேக்கெல்ட்டனின் பயணுத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ராபெர்ட்  ஃபால்கன் ஸ்காட் என்பவரின் தலைமையில் ஒரு குழு தென் துருவத்தை தொட்டு வந்திருக்கிறது. இருந்தும் முடிவில் ஸ்காட்டையும் சேர்த்து எல்லா பயணிகளும் அந்த துணிச்சலான பயணத்தின்போது உயிரிழக்க நேரிட்டது. இது தெரிந்தும் ஷேக்கெல்ட்டனின் பயணத்தில் கலந்துகொள்ள ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்தன.

பயணத்துக்குத் தேவையான அளவு பொருள் வசதியில்லாமலேயே ஷேக்கெல்டன் ஆட்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டிருந்தார். பயணத்துக்கு தயார் நிலையில் இருந்தபோது, இறுதியில் எப்படியோ ஜூலை 1914-ல் தேவையான பண வசதி கிடைத்து விட்டது.

முதலாம் உலகப்போர்

அந்த நேரம் பார்த்து முதலாம் உலகப் போரின் மேகங்கள் வெளிக் கிளம்பின. ஆகஸ்ட் 4, 1914  ‘என்டியூரன்ஸ்’ கப்பல்வெடல்’ கடலிலிருந்து கிளம்புவதற்கு தயாரான நிலையில் நங்கூரமிட்டுக் காத்திருந்தது. அப்பொழுது ஒரு செய்தித்தாளில் போருக்காக ஆட்களையும், தொண்டர்களையும், பொருட்களையும் சேர்ப்பதற்கு விளம்பரம் ஒன்றைக் ஷேக்கெல்ட்டன் கண்டார்.  

உடனே தனது அண்டார்ட்டிக்கா பயணுத்துக்காக சேகரித்த எல்லா ஆட்களையும் அழைத்துப் பேசினார். பேசி முடித்தவுடனேயே ராணுவத் தளபதிக்கு தன் பயணத்துக்காக சேர்க்கப்பட்ட எல்லோரும் போருக்காக ராணுவத்தில் சேர்வதற்கு தயாராக இருப்பதாகவும் தான் சேகரித்த எல்லா பொருட்களையும் , கப்பல் உட்பட போர் பணிகளுக்கு  உதவியாக இருப்பதற்கு அனுப்ப தயாராக இருப்பதாகவும் ஒரு தந்தி அனுப்பினார்.

ஒரு மணி நேரத்திலேயேபுறப்பட்டு வாருங்கள்என்று ராணுவ தளபதியிடமிருந்து அவருக்குப் பதில் தந்தியும் வந்துவிட்டது. ஆனால், அடுத்த இன்னொரு இரண்டு மணி நேரத்தில் ராணுவத்தில் உயர் பதவியிலிருந்த (பின்னாள் இங்கிலாந்தின் முதன் மந்திரியாக பதவியேற்ற) வின்ஸ்டன் சர்ச்சிலிடமிருந்து இன்னொரு தந்தி வந்தது. “உங்கள் உதவிக்கரங்களுக்கு நன்றி. இருந்தும் சரித்திரத்தில் நிற்கப்போகும் உங்கள் அண்டார்ட்டிக்கா பயணம் நிற்கக்கூடாது. பயணத்தைத் தொடருங்கள்” என்று அந்த தந்தியில் கூறியிருந்தது.

அன்று இரவே முதலாம் உலகப் போரும் துவங்கி விட்டது.

No comments:

Post a Comment