Pages

Saturday, June 11, 2016

‘நான்கு போலீசும் நல்லா இருந்த ஊரும்’

கடந்த வாரம் ‘நான்கு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ என்ற படத்தை இணையதளத்தில் பார்த்தேன். இப்படி ஒரு படம் எப்பொழுது வெளியிடப்பட்டது என்று தெரியவில்லை. படத்தின் கருத்து வித்தியாசமாக இருக்கவே, ‘சரி, என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்’ என்ற நினைப்பில் பார்க்கத் தொடங்கினேன்.

படத்தின் ஆரம்பமே வித்தியாசமாக இருந்தது. ஒரு கிராமத்து பெரியவருடன் சிங்கப்பூரிலிருந்து தனது திருமணத்துக்காக ஊர் மக்களுக்கு பத்திரிகை கொடுக்க வந்த ஒரு இளைஞர் ஊருக்குள் நுழைகிறார். ஊர் எல்லையிலேயே தெரிந்துவிடுகிறது. அந்த கிராமம் வித்தியாசமானது என்று.

அந்த ஊரில் எந்த குற்றங்களும் பல ஆண்டுகளாக நடைபெறவில்லையாம். ஊர் மக்கள் குடிப்பதில்லையாம். அப்படியே ஒன்றிரண்டு பேர் குடித்துவிட்டு வந்தால், அவர்களாகவே ஊர் எல்லையில் படுத்திருந்துவிட்டு, மறுநாள் காலையில்தான் ஊருக்குள் வருவார்களாம்.

ஒரு டீக்கடை முன்னே தரையில் ஒரு தங்கச் சங்கிலி கிடக்கிறது. புதியவர், ‘என்னங்க, தங்கச் சங்கிலி கிடக்கிறது, யாரும் கவனிக்க மாட்டேங்கிறாங்களே’ என்று கேட்கிறார். ‘அது அப்படித்தாங்க, யாரு தொலைச்சாங்களோ அவங்களே வந்து எடுத்துக்கிட்டுப் போய்விடுவாங்க’ என்று பெரியவர் பதில் கூறுகிறார். புதிய இளைஞருக்கோ பொறுக்கவில்லை. அந்த தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டு டீக்கடைக்காரரிடம் சென்று காட்டுகிறார். ‘என்னங்க, தங்கச் சங்கிலி, தரையிலே கிடக்கிறது, இதை யாரும் கவனிக்கவில்லையா?’ என்று கேட்கிறார். அந்த டீக்கடைக்காரரும் அதே பதிலைக் கூறுகிறார். ‘அங்கேயே போட்டுடுங்க. யாரோடதோ அவங்களே வந்து எடுத்துக்குவாங்க.’

இளையவருக்கு ஒரே ஆச்சரியம். அதுவரை, ‘இதெல்லாம் என்னங்க, ஊரு. சிங்கப்பூரைப் பார்க்கணும். எவ்வளவு தூய்மை, எவ்வளவு ஒழுக்கம், எவ்வளவு நாணயம்,’என்று கூறி வந்தவருக்கு இந்த கிராமம் சிங்கப்பூருக்கு சமம் போலிருக்கிறது என்று  நினைப்பு தோன்றுகிறது.

ஒரு பலசரக்கு கடை. கடை முன்னே கிராமத்து பஞ்சாயத்து தலைவர் சைக்கிளில் வருகிறார். எதிரே வந்த ஒருவர், ‘என்ன தலைவரே, இந்த சாக்கடையிலிருந்து ஒரே வாடையடிக்கிறது’ என்று ஒரு பேச்சுக்குச் சொல்கிறார். உடனேயே அந்த பஞ்சாயத்து தலைவர், வேட்டியையும், சட்டையையும் அங்கேயே கழட்டுக்கிறார். கையில் ஒரு மஞ்சப்பையில் கட்டு கட்டாகப் பணம். ஊர் மக்களிடமிருந்து எதற்காகவோ வசூலித்தது. அந்தக் கடை வாசலில் ஒரு மூட்டையின் மீது வைக்கிறார். மடமடவென்று சாக்கடையை சுத்தம் செய்யத் தொடங்குகிறார். அந்தக் கடைக்கு பலர் சாமான் வாங்க வருகிறார்கள். தலைவர் விட்டுவைத்த பையிலிருக்கும் பணம் வெளியே எல்லோருக்கும் தெரிகிறது, ஆனால், யாரும் அதை தொடுவதில்லை.

இப்படி ஆச்சரியப்படுத்தும் பல காட்சிகள். கடையில் சாமான் வாங்க சிறுவர்கள் வருகிறார்கள்.  அவர்கள் கையில் முழுப்பணம் இல்லை. கடைக்காரர் தாராளமாக பொருளை எடுத்துக் கொடுக்கிறார்.

ஆச்சரியத்துக்கும் மேலே ஆச்சரியம் இளையவருக்கு. ஒவ்வொருவருக்காக திருமணப் பத்திரிகை கொடுத்துக்கொண்டு வந்த அந்த சிங்கப்பூர் இளைஞர் சொல்கிறார். ‘திருமணமானவுடன் முதல் வேலையாக இந்த ஊருக்குத்தாங்க நான் என் மனைவியுடன் வருவேன்.’ என்று.

அந்த ஊர் காவல் நிலையத்தில்  வேலை பார்க்கும் நான்கு காவல்காரர்களுக்கும் எந்த வேலையுமில்லை. தொடர்ந்து ஐந்து ஆறு ஆண்டுகளாக குற்றங்கள் இல்லாத அந்த ஊர் ஜனாதிபதியின் விருதைப் பெற்று வந்திருக்கிறது. அந்த நான்கு காவல்காரர்களும் காவல் நிலையத்தில் ‘கேரம்போர்டு’ விளையாடிக்கொண்டும், தொலைக்காட்சிப் பெட்டியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக்கொண்டும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

வந்தது வினை.

குற்றங்களே இல்லாத அந்த ஊருக்கு காவல்காரர்கள் எதற்கு என்ற சிந்தனை அரசாங்க அதிகாரிகளுக்கு வருகிறது. அருகிலுள்ள ராமநாதபுரத்தில் பெரிய கலவரம், அங்கே அந்த நான்கு காவல்காரர்களையும் மாற்றிவிடத்  தீர்மானிக்கிறார்கள்

அதற்குப் பிறகுதான் பல சுவாரசியமான சம்பவங்கள்.. (சில சம்பவங்கள் பேத்தலானதுதான்) இருந்தாலும் படம் ரசிக்கும்படியாக இருக்கிறது. பெரிய ஆடல், பாடல்கள், டப்பாங்கூத்து  நடனங்கள், வில்லன்கள், சண்டைகள் எதுவுமில்லாமல் படம் போகிறது.

அந்தப் படத்தைப் பார்த்த பிறகு அப்படி ஒரு கிராமம் இருக்கமுடியுமா என்று சந்தேகம். ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய WHAT, IF OUR DREAMS COME TRUE! AN UNCOMMON MEETING WITH LORD SIVA என்ற ஆங்கில நாவலை எழுதும் பொழுது திருச்செந்தூர் அருகிலுள்ள காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே இதேபோல ஒரு டீக்கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தபொழுது நான் சந்தித்த ஒருவர் (நன்கு படித்தவர், சென்னையில் ஏதோ வியாபாரம் செய்துகொண்டிருந்தார்) மூலம் காயல்பட்டினத்தைப் பற்றிய பல தகவல்களைத் தெரிந்துகொண்டேன். அந்த ஊரில் குற்றங்கள் மிக மிகக் குறைவாகவே நடப்பதாகவும், அந்த ஊரிலும் காவல் நிலையத்துக்கு அதிக வேலையில்லை என்றும் கூறினார். மதுக்கடைகள் அரிது. நான் பார்த்தவரை அந்த ஊர் எளிமையாகவும், சுத்தமாகவுமே இருந்தது. அவர் சொன்னதை முழுவதுமாக நம்புவது எனக்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், அவர் சொன்னதில் பல உண்மைகள் இருக்கலாம் என்றும் தோன்றியது. வேற்று மதத்தைச் சேர்ந்த அந்தப் பெரியவர் அந்த ஊரிலிருந்த ஒரு அரிய சிவன் கோவிலைப் பற்றியும் விவரமாக என்னிடம் எடுத்துச் சொன்னது எனக்கு ஒரு நம்பிக்கையக் கொடுத்தது.

இந்தப் படத்தில் காட்டியபடி உள்ள ஊரைப் போல வேறு ஊர்களைப் பற்றி நீங்கள் தெரிந்திருக்கிறீர்களா?

1976-80-களில் நான் சண்டிகரில் வேலை பார்த்தபொழுதும் சரி, 1985-87-களில் கௌஹாத்தியில் வேலை பார்த்த பொழுதும் சரி, தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு பயமின்றி வாழ்ந்திருக்கிறோம். முக்கியமாக, சண்டிகரில் எங்கள் வீட்டைப் பூட்டாமலேயே கடைகளுக்குப் போய் வந்திருக்கிறோம். இரவில் வீட்டின் வெளியே புல்லில் படுத்து உறங்கியிருக்கிறோம். ஒருவர் பொருளை மற்றவர் யாரும் திருடியதாகக் கேள்விப்பட்டதில்லை. கடைக்காரர்கள் நாணயமாக நடந்துகொண்டிருக்கிறார்கள். கௌஹாத்தியில் பெண்களிடம் மிகவும் கண்ணியமாகவே நடந்துகொண்டிருக்கிறார்கள். மலையுச்சியிலிருந்த பள்ளியிலிருந்து தனியாகவே வீட்டுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்த ஆறு வயதே ஆன என் மகனை முன்பின் தெரியாத ஒரு ரிக்ஷாக்காரர் இலவசமாக வீட்டிற்கு பத்திரமாக கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். இப்படி பல நிகழ்ச்சிகள்.

ஒரு ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நமது தமிழ் நாட்டிலும் பல கிராமங்கள் இந்தப் படத்தில் காட்டியதுபோலத்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

முடிந்தால் ‘நான்கு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ என்ற படத்தை கண்டிப்பாக பாருங்கள். எந்த பெரிய  நட்சத்திர அந்தஸ்தும் இல்லாத பல நடிகர்களை வைத்து அந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஆனால், வழக்கம் போல அந்தப் படத்துக்கு பொதுவான ரேட்டிங் மிகக் குறைவு என்று எனக்குத் தெரியும். ஏதோ ஸ்வீடன் நாட்டுப் படத்தையொட்டி எடுத்திருக்கிறார்கள் என்று விக்கிப்பீடியா சொல்கிறது.

  

No comments:

Post a Comment