Pages

Friday, August 26, 2016

2. நாள் 2: லடாக் சுற்றுப் பயணம் - புத்த மடங்கள், அரண்மனைகள் பார்வையிடல்

08.08.16

டிரைவர் யாசீன் அன்று காலை  சரியாக 9 மணிக்கு தன்னுடைய டோயோட்டா காருடன் ஹோட்டல் வாசலில் வன்து நின்றார். முதல் நாளிலிருந்தே யாசீன் எங்களுடன் மிகவும் தோழமையுடன் பழகத் தொடங்கிவிட்டார். இளமையானவர். துடிப்பானவர். எப்பொழுதும் ஒரு புன்சிரிப்புடன் காணப்படுவார்.  இனிமையாகப் பழகக்கூடிய சுபாவம் உள்ளவராகத் தெரிந்தார். லடாக்கைச் சேர்ந்தவர். 7-8 ஆண்டுகளாக ஒரு உள்ளூர் சுற்றுலாக் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். லடாக் மலைப் பகுதிகளில் டோயோட்டா காரையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். மலைப் பகுதிகளில் தினமும் கார் ஓட்டும் வேலை எவ்வளவு கடினமானது என்பதை எங்கள் சுற்றுலாவின் இறுதியில்தான் நாங்கள் முழுவதுமாக உணர்ந்தோம்.

அன்று காலை உணவு ‘மெனு’வில் ப்ரெட் பக்கோடாவுக்கு பதிலாக கட்லெட். மிகவும் சுவையாகவே இருந்தது. இருந்தும், ஏற்கெனவே சொன்னபடி  நாக்கைக் கட்டுப்படுத்திக்கொண்டு அரை வயிற்றுக்கே உண்டோம். உடலில் தண்ணீர் வறட்சி (DEHYDRATION) உண்டாகும் அபாயம் இருந்ததால் எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டிலை சுமந்துகொண்டே சென்றோம். அன்று பல புத்த விஹாரங்களுக்கு செல்லவேண்டியிருந்ததால் மலையேற வேண்டியிருக்கும். அரை வயிறு காலியாக இருந்தது அன்று நல்லதாகப் போய்விட்டது.

அன்று நாங்கள் முதலில் சென்றது லடாக்கிலேயே மிகப் பெரிய ‘திக்சே’ புத்த விஹாரம். திபெத் மொழியில் கோம்பா (GOMPA) என்றழைக்கிறார்கள். லே-யிலிருந்து சுமார் 19 கி.மி. தொலைவில் அமைந்திருக்கிறது. 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, பின்பு பல கட்டங்களாக புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டிருக்கிறது. 11800 அடி உயரத்தில் ஒரு குன்றின் உச்சியில் அமைந்துள்ள இந்த விஹாரம் 12 அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. புத்த மதத்துக்கே உரியதான ஸ்தூபங்கள், சிலைகள், சுவரில் மாட்டப்படக் கூடிய வர்ண ஓவியங்கள், வீர வாள்கள், தங்க்கா (THANKA) என்ற வகைப்பட்ட பௌத்த துறவிகளால் கான்வாஸ் திரைகளில் வரையப்பட்ட ஓவியங்கள், இப்படி பலவற்றை இந்த விஹாரத்தில் காணலாம்.  திபெத்தில் இருக்கும் லாசா விஹாரத்தையொட்டி இந்த திக்சே விஹாரம் அமைந்திருப்பதாக நான் வலையில் படித்திருக்கிறேன். 1970-ல் 14-ஆவது தலாய் லாமாவின் வருகையை கௌரவிப்பதற்காக கட்டப்பட்ட இரண்டு அடுக்கு மாடிகளை நிரப்பிய 49 அடி உயரமுள்ள மைத்திரேயாவின் சிலை இந்த விஹாரத்தில் மிக முக்கியமானது. இந்த விஹாரத்தில்  நுழைவுக்கட்டணம் உண்டு. ஒரு நபருக்கு முப்பது ரூபாய். திக்சே விஹாரத்தின் அழகையும் பிரம்மாண்டத்தையும் இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் கண்டு மகிழலாம்.








            நாங்கள் லடாக் சென்றிருந்தபோது லே-யைச் சுற்றியுள்ள சிந்து நதிப் பள்ளத்தாக்கு முழுவதிலுமே செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் ஹிமாலயன் கும்பமேளாவுக்காக தயார் செய்து கொண்டிருந்தார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்க இருக்கும் இந்த மேளா ஒரு மாத காலம் வரை சிறப்பாக நடைபெறும் என்று கேள்விப்பட்டேன். பல புத்த விஹாரங்களிலும் அதை ஒட்டிய கட்டிடங்களிலும் புதியதாக வர்ணம் பூசப்பட்டும், வர்ணக் கொடிகள் அங்கங்கே பறக்கவிடப்பட்டும், வருகை தர இருக்கும் மத குருமார்களுக்கு வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டும் கோலாகலமாகக் காணப்பட்டன.  

திக்சே விஹாரத்திலிருந்து லே திரும்பும் வழியில் ஷே (SHEY) அரண்மனை மற்றும் அதையொட்டிய புத்த விஹாரத்தில்  இறங்கினோம். இங்கும் விஹாரம் ஒரு உயர்ந்த குன்றின் மேல் அமைந்திருந்தது. மேல் நோக்கிய வாட்டமான ஒரு பாதை வழியே சென்று மேலும் பல படிக்கட்டுக்கள் வழியாக ஏறி விஹாரத்தை அடைய வேண்டியிருந்தது. சரித்திர காலத்தில் ஷே லடாக்கின் கோடைகாலத் தலைநகராக இருந்திருக்கிறது. டெல்டான் நாங்கியால் என்ற மன்னர் காலத்தில் 1655-ல் முதலில் கட்டப்பட்டிருக்கிறது. இன்று ஒரு புராதனச் சின்னமாக மிகவும் பாழடைந்து காணப்படுகிறது. தாமிரத்திலும், தங்கத் தகடுகளிலும்  செய்யப்பட்ட பிரம்மாண்ட சாக்யமுனி புத்தாவின் சிலை இங்கே முக்கியமானது. சாக்ய நாட்டின் தலைநகரான கபிலவஸ்துவின் மலையடிவாரத்தில் வசித்து வந்த மக்களுக்கு ஒரு குருவாக புத்தர் இருந்ததால் அவருக்கு சாக்யமுனி புத்தா என்ற பெயரும் வந்திருக்கிறது. மிகப் பழமையாக இருந்தாலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய அழகான இடம். இங்கே கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்களேன்.







ஷே விஹாரத்திலிருந்து லே அரண்மனைக்குச் சென்றோம். சூரியன் கடுமையாக எங்களை வாட்டிக்கொண்டிருந்தான். கண்கள் கூசும் அளவு எங்கு பார்த்தாலும் பளிச்சென்று சூரிய வெளிச்சம். மேலும், மலைப் பாறைகளின் மீது சூரிய வெளிச்சம் பட்டு பிரதிபலித்ததால் கண்களுக்கு குளுமைக் கண்ணாடியில்லாமல் எதையுமே பார்க்கமுடியவில்லை.  

லே நகரத்தினுள்ளேயே ஒரு குன்றின் மேல் அமைந்திருக்கும் இந்த மாளிகை 17-ஆம் நூற்றாண்டில் செங்கே நாங்கியால் என்ற மன்னரால் கட்டப்பட்டது. ஒன்பது அடுக்குகளைக் கொண்டது. காஷ்மீரத்தின் டோக்ரா மன்னர்கள் லடாக்கை 19-ஆம் நூற்றாண்டில் கைப்பற்றியபோது, நாங்கியால் அரச குடும்பம் லே மாளிகையைக் காலி செய்துகொண்டு ஸ்டோக் என்ற இடத்தில் இன்னொரு மாளிகைக்கு குடி புகுந்தது. இப்பொழுது இந்த மாளிகை மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கே 15 ருபாய் நுழைவுக் கட்டணம் உண்டு.  என் மனைவி மூன்றாம் தட்டிலேயே  நின்று விட்டாலும், நான் மட்டும் எட்டாம் தட்டு வரை பல குறுகிய படிகளின் வழியே மேலெ ஏறிச்சென்று பரந்த லே நகரத்தின் காட்சியை கண்டுவிட்டு வந்தேன்.  9-ஆம் தட்டுக்குப் போகும் வழி தெரியவில்லை.




திபெத்தின் தங்க்கா வகை ஓவியத்தைப் பற்றி விசேஷமாகச் சொல்லவேண்டும். இவை கைகளால் துணிகளில் வரையப்பட்ட பல வண்ண ஓவியங்கள். நுண்ணிய வடிவமைப்புகளைக் கொண்டது.  பிரகாசமானதும், ரம்மியமானதுமான வர்ணங்களையும் கொண்டது புத்த துறவிகள் இந்த ஓவியங்களை மிகப் பொறுமையுடன் வரைகிறார்கள்.  இதற்கான வண்ணக்கலவை விலை மதிப்புள்ள வர்ணக் கற்களை பொடி செய்து தயாரிக்கப்படுவதால்  ஓவியங்கள் நீண்ட காலங்களுக்கு கெட்டுப்போவதில்லை. புத்த விஹாரங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட ஓவியங்கள் காட்சிப் பொருளாக தொங்கவிடப்பட்டிருக்கின்றன.  பழமையாக இல்லாவிட்டால் கூட, மார்க்கெட்டில் இந்த ஓவியங்களுக்கு எக்கச்சக்க விலை.  ஒரு சிறிய 9 x 9” அளவுடைய ஓவியத்தை 1200 ரூபாய்க்கு வாங்கினேன்.  கொஞ்சம் பெரிய படங்கள் 20 – 25 ஆயிரம் ரூபாய் கூட விலை சொன்னார்கள்.  நிறைய பேரம் பேச வேண்டியிருந்தாலும் சொல்லி வைத்தாற்போல எல்லா வணிகர்களும் ஒரு விலைக்கு மேல் குறைப்பதில்லை.



இந்த ஓவியங்களைத் தவிர, லே-யின் பல கடைகளிலும் வெண்கலத்தினாலான பலவித உருவச் சிலைகளையும் – முக்கியமாக புத்தருடைய சிறிய சிலைகள் - பாத்திரங்களையும், மணிகளையும், அரிய பலவித வர்ணக் கற்களாலான மாலைகளையும் விற்கிறார்கள். இவை பொதுவாக நேபாலிலிருந்தும், திபெத்திலிருந்தும் வருவதாகக் கேள்விப்பட்டேன்.  அவை தவிர காஷ்மீரத்திலிருந்து பஷ்மினா தரைவிரிப்புகள், மேல் அங்கிகள், ஷால்கள், பல கைவினைப் பொருட்களும் கிடைக்கின்றன. லடாக்கின் சுற்றுலா சீசன் 4-5 மாதங்கள்தான் என்பதாலோ என்னவோ, எல்லா பொருட்களுக்கும் யானை விலை, குதிரை விலை சொல்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட மணி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெண்கலக் கிண்ணம் போலத் தோற்றமளிக்கும் ஒரு மணி. திறந்த உள்ளங்கையில் இதை வைத்துக்கொண்டு ஒரு சிறிய உருண்டைக் கட்டையினால் வெளியே ஒரு தட்டு தட்டி, மெதுவாக அந்தக் கட்டையை அந்தக் கிண்ணத்தின் வெளி விளிம்பின் மேல் உரசிக்கொண்டு சுற்றினால் ‘ஓம்’ என்ற ஓசை மிகத் துல்லியமாக வெகு நேரம் கேட்கும். இந்த மணியை பல புத்த விஹாரங்களிலும் காணலாம். ஒரு 3” அகலம் கொண்ட ஒரு சின்னக் கிண்ணத்துக்கு விலை 800 ரூபாய்க்கு மேல்.  

திருநெல்வேலியில் நான் சிறுவனாக வளர்ந்து வந்த காலத்தில் ஏதோ ஒரு மாதத்தில் (எந்த மாதம் என்று ஞாபகமில்லை) வெள்ளையுடை அணிந்தும் தலையில் சிகப்பு அங்கியை ஒரு தொப்பி போலச் சுற்றிக்கொண்டும் வீடு வீடாக ஒருவர் வாசலில் வந்து நிற்பார். அவர் ஒரு கையில் ஒரு பெரிய வெண்கல மணியை வைத்திருப்பார். இன்னொரு கையில் ஒரு நீளக் கம்பை வைத்திருப்பார். அந்தக் கம்பால் அந்த மணியை ஒரு சிறிய தட்டு தட்டி, அந்த கம்பை மணியின் விளிம்பில் வைத்துச் சுற்றுவார். கணீரென்று ‘ஓம்’ என்ற சத்தம் நெடு நேரம் வரும். ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருப்போம். அந்த ஞாபகம் வந்தது. நீங்களும் அவரை சந்தித்திருக்கலாம்.

மூன்று குன்றுகளின் மீது ஏறி முடித்த நாங்கள் எல்லோருமே மிகவும் களைத்துப் போய்விட்டோம். மேலும் சூரியன் கொதித்துக்கொண்டிருந்தான். மதியம் மணி இரண்டு. அதோடு போதும் என்று நிறுத்திவிட்டு மார்க்கெட்டில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஹோட்டல் அறைக்கு வந்து நன்றாகத் தூங்கினோம்.  அன்று மாலை எங்களுக்கு வெளியே செல்லும் ஏற்பாடு எதுவுமில்லை. பாக்கியிருந்த ஷாந்தி ஸ்தூபத்துக்கு அழைத்துப் போக யாசீன் தயாராக இருந்தார். ஆனால், நாங்கள் யாரும் தயார் நிலையில் இல்லை. நான் மட்டும் மாலை வேளையில் மார்க்கெட்டை சுற்றி வந்தேன்.  

இரவு உணவில் சூப், தால், காய்கறிகள், சாதம், சப்பாத்தி, சலாட் பச்சைக் காய்கறிகள், பொரிக்கப்பட்ட அப்பளம், குலோப் ஜாமுன் என்று அசத்தினார்கள். நாக்கில் நீர் சுரந்தது. இருந்தும் அடுத்த நாள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்த நூப்ரா பள்ளத்தாக்குக்கு உலகிலேயே மிக அதிக உயரத்தில் வாகனங்கள் செல்ல வசதியுள்ள பாதை வழியாக 18380 அடி உயரத்திலிருந்த கார்டங் லா (கணவாய்) வழியாக நீண்ட கார் பயணம் செல்லவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு அளவோடு சாப்பிட்டு இரவு தூங்கப் போய்விட்டோம்.

                                                                        … தொடரும்


No comments:

Post a Comment