Total Pageviews

Sunday, October 16, 2016

16.10.2016: என்னுடைய இந்த வார நாட்குறிப்பு

16.10.16: என்னுடைய இந்த வார நாட்குறிப்பு

மதுரை மாநகரம் – சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு அதிசயமான தூங்கா நகரம். மதுரையிலேயே வசித்துப் பழகி விட்டவர்களுக்கு மற்ற ஊர்கள் பிடிக்காது.

என் மைத்துனர் இரண்டு வாரங்களுக்கு வட இந்தியா சுற்றுலா சென்றதால் வயதான அவர் தாயாரை கவனித்துக் கொள்வதற்காக நானும் என் மனைவியும் இங்கே வர நேர்ந்தது. பொதுவாக இது போன்ற நேரங்களில் என் மாமியாரை எங்கள் ஊரான தென்காசிக்கு கூட்டிக்கொண்டு போய்விடுவோம். அவர்களுக்கும் தென்காசி ஊர் மிகவும் பிடிக்கும். தென்காசி ஊர் யாருக்குத்தான் பிடிக்காது? அதிலும், நாங்கள் வசிக்கும் மேலகரம் அக்ரஹாரம் எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்த இடம். தெரு முனையில் அழகான சிறிய ஒரு பிள்ளையார் கோவில். சுத்தமான தெரு. பொதுவாக எந்நேரமும் காற்று வீசிக்கொண்டிருக்கும். அழகான குற்றாலம் மிக அருகே மூன்று கி.மீ தொலைவில். எந்த தேவையானாலும் அதிக நெரிசல் இல்லாமல் ஒன்றிரண்டு கி.மீ தொலைவுக்குள் கிடைத்துவிடும். காசி விஸ்வநாதரின் அழகான பெரிய கோவில். இப்படி தென்காசியின் அழகைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இன்று நிலைமை வேறு. தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் எல்லா ஏரிகளும், குளங்களும், கிணறுகளும் வற்றிப் போய்விட்டன. ஆண்டவன் புண்ணியத்தில் இன்று வரை எங்கள் வீட்டுக் கிணறு தப்பித்திருக்கிறது. இருந்தும் தண்ணீர் மட்டம் கிணற்றுக்குள் கீழிறக்கப்பட்ட குழாயை சற்றே தொட்டுக் கொண்டிருக்கும் நிலைக்கு வந்து விட்டது. மழை இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் பெய்யாவிட்டால் அதுவும் வற்றிப் போய்விடும். அதனால், இந்த முறை மதுரைக்கே சென்று ஒரு சில நாட்கள் இருந்து பார்ப்போமே என்று தோன்றியது. மேலும்,  நான் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட என் புத்தகங்களை பல பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கு எனக்கும் மதுரைக்கு வர வேண்டியிருந்தது. கடந்த திங்கட் கிழமை சரஸ்வதி பூஜையை முடித்துக்கொண்டு மதியம் தென்காசியிலிருந்து கிளம்பி மதுரைக்கு காரை ஓட்டிக்கொண்டு மாலையில் வந்து சேர்ந்துவிட்டோம். அப்படியாக, இதுதான் முதன் முறையாக தொடர்ந்து ஒரு வாரம் மதுரையில் தங்கியது.

மதுரைக்கு வீடு வரை முரண்டு பண்ணாமல் வந்த என்னுடைய மாருதி 800, வீடு வந்து சேர்ந்தவுடனேயே மக்கர் பண்ணியது. பாட்டரி அவுட். அடுத்த நாள் நல்ல வேளையாக ஏ.பீ. டி மாருதி திறந்திருந்தது. ‘செக்’ பண்ணிப் பார்த்துவிட்டு புது பாட்டரி மாட்டிக்கொண்டேன்.

எனக்கு இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டிப் பழக்கமில்லாததால் என்னுடைய குட்டி மாருதி 800-ஐ ஓட்டிக்கொண்டு பல சந்து பொந்துகளுக்குள் நுழைந்து பல பள்ளிகளுக்குச் சென்றேன். மதுரையில் வழிகள் எதுவும் பொதுவாக எனக்குத் தெரியாது. எத்தனையோ முறை இங்கே வந்திருந்தாலும் ரயில் நிலையத்திலிருந்து என் மைத்துனரின் வீட்டுக்கு  நேரே ஆட்டோவில் போய்விட்டு திரும்பி விடுவேன். அதற்கு மேல் வழி தெரியாது. தெரிந்து கொள்ளவும்  நான் விரும்பியதில்லை.

ஏனென்றால், மதுரை நகரம் பொதுவாக எனக்குப் பிடிக்காத நகரம். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். வாகனங்களின் கூட்டம், போக்குவரத்து.  நெரிசல். மூலைக்கு மூலை குப்பை. திறந்த அசுர சாக்கடைகள். ஒரு சில பெரிய பாதைகளைத் தவிர்த்து எல்லாப் பாதைகளின் அலங்கோலம். வாகனங்களின் விதிமுறையற்ற போக்குவரத்து. சுற்றுப்புற சூழல் தூய்மைக் கேடு. மதுரையைப் பற்றி என்னால் இப்படி அடுக்கிக்கொண்டே போக முடியும். எப்பொழுது மதுரை வந்தாலும் அதிக பட்சமாக ஒரு இரவுதான் தங்குவேன். அடுத்த நாள் மதுரையை விட்டு ஓடிவிடுவேன். (மதுரைக்காரர்கள் என் மேல் கோபப்பட வேண்டாம்)

வியாழனன்று என்னுடைய காரை நானே ஓட்டிக்கொண்டு சிவகாசியிலிருக்கும் பள்ளிகளுக்கு சென்று வந்தேன். கிடைத்த நேரத்தில் ஒரு சில பள்ளிகளின் முதல்வர்களையே பார்க்க முடிந்தது. முன் பின் அறிமுகம் இல்லாதவர்கள். நானே என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு என் புத்தங்களைப் பற்றியும் ‘பெர்சனாலிடி டிவலப்மெண்ட்,’ ‘மோட்டிவேஷன்,’ ஆங்கிலத்தில் பேசுவதற்கு பயிற்சி போன்ற என்னுடைய மற்ற வகுப்புகளைப் பற்றியும் எடுத்துக் கூறினேன். பொதுவாக நல்ல வரவேற்பு கிடைத்தது. இரண்டு பள்ளிகளில் என்னுடைய இரண்டு புத்தகங்களை மாதிரிக்காக விலை கொடுத்து வாங்கிக்கொண்டார்கள். படித்துப் பார்த்து மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்குவது பற்றி தீர்மானிப்பதாகக் கூறினார்கள். மதியம் எங்கும் சாப்பிடப் போவதற்கு நேரம் கிடைக்கவில்லை. ஒரு ரஸ்தாளி, மாம்பழ ஜூஸ் அதோடு முடித்துக்கொண்டேன். மாலை மணி 4.15க்கு மேல் எந்தப் பள்ளிக்கும் போக முடியாது என்பதால் கடைசியாக ஒரு பள்ளிக்குச் செல்லும்பொழுது பலமாக மழை பிடித்துக்கொண்டது. மழையை சபிக்கவில்லை. வரவேற்றேன். வேலை நிமித்தமாக மட்டும் வரவில்லையென்றால் வெளியே இறங்கி ஆசை தீர மழையில் நனைய முனைந்திருப்பேன். இந்த மழைக்காகத்தானே மக்கள் இரண்டு மூன்று மாதங்களாக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். மழையில்  நனைந்தவாரே பேருந்து நிலையத்துக்கருகில் பாலாஜி பவன் ஹோட்டலில் பூரிக்கிழங்கும், காஃபியும் குடித்து விட்டு மதுரைக்குக் கிளம்பினேன்.

பைபாஸ் பாதையில் வந்தால் ஊருக்குள்ளேயிருக்கும் டிராஃபிக்கைத் தவிர்க்கலாம் என்று நினைத்து சாத்தூர் பாதையில் காரை திருப்பினேன். மழை கொட்டிக்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பாதையில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. எதிரே வரும் லாரி, பஸ் தாராளமாக தண்ணீரை வாரி என் காரின் மேல் தெளித்துக்கொண்டே வேகமாக சென்றன. என்னால் வேகமாக காரை செலுத்த முடியவில்லை. சுமார் 18 கி.மீ தாண்டிய பின், சாத்தூருக்கு அருகே பைபாஸ் பாதை செல்வதற்கான பாதைப் பிரிவு கிடைத்தது. காலையில் மதுரையிலிருந்து சிவகாசிக்கு வரும்பொழுது விருதுநகர் வழியாக வந்தேன். விருதுநகர் வரை நான்கு வழிச் சாலையில் வேகமாகச் செல்ல முடி.ந்தது. ஆனால், விருதுநகரிலிருந்து சிவகாசி வரை பாதை ஒரேயடியாக தூக்கித் தூக்கிப் போட்டது. அவ்வளவு பிரமாதமான பாதை. அதில் செல்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதனாலேயே, கடுமையான மழை பெய்துகொண்டிருந்த இருட்டும் மாலை நேரத்தில் அந்தப் பாதையை தவிர்த்துவிட்டு சற்று தூரம் அதிகமானாலும் பரவாயில்லை என்று நினைத்து பைபாஸ் பாதையை தேர்ந்தெடுத்தேன்.  

நான்கு வழிச்சாலையில் திருமங்கலத்துக்கு பத்து கி.மீ தூரம் முன்னே வரை மழை கொட்டித் தீர்த்தது. வெளிச்சம் கம்மி. இருபது முப்பது அடிக்கு மேலே பாதை தெளிவாகத் தெரியவில்லை. கவனமாக ஓட்டிக்கொண்டு மதுரை வந்து சேர்ந்து விட்டேன். ஆனால், மதுரையில் ஒரு சில நிமிடங்களுக்கு சிறிய தூறலோடு  நின்று விட்டது.

நான்கு வழிப் பாதை வேகமாகச் செல்வதற்கு வசதியாக இருக்கிறது என்பதைத் தவிர மிகவும் ஆபத்தான பாதை என்பது என் கருத்து. மேல் நாடுகளைப் போல இல்லாமல் இங்கே அங்கங்கே குறுக்கே பாதைகள் செல்கின்றன. மெதுவாகச் செல்லும் வண்டிகள் விதியை மீறி ஏனோ வலது பக்கமாகவே செல்கின்றனர். மழை  நேரங்களில் மழைத் தண்ணீரை வெளியேற்றுவதற்கு சரியான ஓடைகள் அமைத்திருப்பதாகத் தெரியவில்லை. எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. போகும் வழியில் எல்லாம் என் காருக்கு மற்ற வாகனங்களிலிருந்து அபிஷேகம்தான். எதிர்த் திசையில் செல்லும் வாகனங்களிலிருந்து வரும் முகப்பு விளக்கு ஒளி நேராக கண்ணைக் கூசுகிறது. யாரும் ‘டிப்பர்’ ‘லோ பீம்’ வெளிச்சத்தை உபயோகிப்பதில்லை. பல இடங்களில் ‘டிவைடர்கள்’ இருப்பதே தெரிவதில்லை. அதனாலேயே இரவு நேரத்தில் வலது பக்கமாக  நான்கு வழிப்பாதையில் செல்வது மிகவும் அபாயகரமானது. மேலும் பாதை வளைந்து செல்லுமிடங்களில் ‘ரிஃப்ளெக்டர்கள்’ வைக்கப்படாததால் வலது பக்கமோ இடது பக்கமோ எந்தப் பக்கத்திலிருந்தும் ஆபத்து வரலாம். பல ஊர்களுக்குச் செல்ல பாதைகள் பிரிவதை ஏன் பெரிய பலகையில் எழுதி வைப்பதில்லை என்று புரியவில்லை. பாலங்கள் வருமிடத்திலெல்லாம் மிகவும் கவனமாக ஓட்ட வேண்டியிருக்கிறது. பாலத்தையும் பாதையையும் இணைக்குமிடம் பொதுவாக சமதளமாக இருப்பதில்லை. அதனால், பாதையிலிருந்து பாலத்தில் ஏறுமிடத்திலும் சரி, இறங்குமிடத்திலும் சரி வேகமாக காரை ஓட்டிச் சென்றால் நம்மைத் தூக்கிப் போடும். இங்கே நான் குறிப்பிட்ட குறைகள் எல்லாப் பாதைகளிலும் இருந்தாலும் நான்கு வழிப் பாதைகளில் குறிப்பாக காணப்படுவது வெட்கக்கேடு. மொத்தத்தில் நல்ல எண்ணத்தோடு இந்த நான்கு வழிப்பாதைகள் அமைக்கப் பட்டாலும் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் பல ஓட்டைகள். எப்பொழுதுதான் நாம் மேல் நாட்டவர்களிடமிருது நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ளப் போகிறோமோ தெரியவில்லை. தேவையில்லாதவற்றை உடனேயே ஏற்றுக்கொண்டு விடுகிறோம்.

மதுரையில் பல பெரிய பள்ளிகளின் முதல்வர்கள் தங்களைச் சுற்றி பெரிய அரணை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எளிதில் அவர்களைப் பார்க்க முடியாது. ஒரு சில இடங்களில் வாசலில் நிற்கும் காவலாளிகளே நமக்குப் பதில் சொல்லி அனுப்பிவிடுகிறார்கள். பள்ளி முதல்வர்களையும் சொல்லிக் குற்றமில்லை. அவர்கள் நிலைமை அப்படி. பல சூழ்னிலைகளையும் பல தரப்பட்ட மக்களையும் அவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஒரு சில பள்ளிகளில் பார்வையாளர்களை சந்திப்பதற்கென்று நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள். நல்ல விஷயம். ஆனால், அதை அவர்களின் இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தால் பார்க்க வருபவர்களின் நேரமாவது சேமிக்கப் பட்டிருக்கும். இன்று பொதுவாக எல்லோருமே ‘பிசி’யாக இருக்கிறார்கள். மற்றவர்கள் நேரம் வீணாவதைப் பற்றி பொதுவாக நாம் கவலைப் படுவதில்லை. பெரிய பள்ளிகளில் பார்வையாளர்களைச் சந்தித்துப் பேசுவதற்கென்றே தனியாக ஒரு சீனியர் ஆசிரியரை நியமிக்கலாம். தேவைப் பட்டால் மட்டுமே முதல்வரிடம் எடுத்துச் செல்லலாம். அல்லது ஃபோன் செய்தால் வசதி போல நேரம் ஒதுக்கலாம். ஒரு சில பள்ளிகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது. திறந்த மனதுடன் நாம் சொல்ல வருவதைக் கேட்டுக் கொள்கிறார்கள். நமக்கும் நிம்மதியாக இருந்தது. விற்பனை என்று வந்து விட்டால் எதைப் பற்றியும் கவலைப் படாமல் தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும்.

பொதுத் தேர்வில் மாணாக்கர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதற்காக பல பள்ளிகளில் ஒரு சில தனியார் நிறுவனங்கள்  நடத்தும் தனிப்பட்ட பயிற்சி வகுப்புகள், மாதிரித் தேர்வுகளுக்கான விளம்பர அட்டைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. என்றுதான் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்ற பைத்தியம் தீருமோ தெரியவில்லை. என்ன செய்வது? தமிழ்நாட்டில் பொதுத் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்களை மட்டுமே வைத்து கல்லூரிகளில் நுழைய முடியும் என்ற நிலைமை. கல்லூரிகளில் சேர்வதற்கு தனித் தேர்வுகளை என்றோ ரத்து செய்துவிட்டார்கள். மாணாக்கர்களுக்கும் வேறு வழியில்லை. முட்டி மோதி எப்படியும் மதிப்பெண்கள் வாங்கிவிட வேண்டும். பாடங்கள் புரியாவிட்டாலும் பரவாயில்லை.

வெள்ளிக்கிழமை மதுரை பைபாஸ் பாதையில் மாலை நேரத்தில் காய்கறி சந்தை மிகவும் பிடித்திருந்தது. வாடாத, இளமையான காய்கறிகளைப்  பார்த்தாலே போதும். தேவையோ, தேவையில்லையோ எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு வந்து விடும் கெட்ட பழக்கம் எனக்கு. சாப்பிடும் பொழுது சோறு எவ்வளவு சாப்பிடுவேனோ அந்த அளவு காய்கறிகளும் தட்டில் இருக்க வேண்டும் எனக்கு.

அப்படியாக இந்த வாரம் இனிதே கழிந்தது.

ஒவ்வொரு வாரமும் அந்த வார அனுபவங்களில் முக்கியமானவற்றைப் பற்றி எழுதலாம் என்று ஒரு எண்ணம். பார்க்கலாம். தொடர்ந்து எழுத முடியுமா என்று.


நன்றி. வணக்கம்.

No comments:

Post a Comment