Pages

Saturday, October 29, 2016

30.10.2016 இந்த வார நாட்குறிப்பு

30.10.2016 இந்த வார நாட்குறிப்பு

கடந்த வாரம் மதுரையிலிருந்து தென்காசிக்கு திரும்பியாகிவிட்டது. என்னதான் மைத்துனர் வீட்டில் வசதியாக இரண்டு வாரங்களைக் கழித்திருந்தாலும் நம் வீட்டிற்கே திரும்பி வருவதில் ஒரு மகிழ்ச்சிதான். தென்காசி வீட்டில் உள்ள தண்ணீர் நிலவரம் தெரிந்ததுதான். அதனால் தென்காசி வந்து சேர்ந்த திங்கட் கிழமையன்றே கிணற்றில் தண்ணீர் இறைப்பதற்கு ஒரு வாளியும் கயிறும் வாங்கி விட்டேன். சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து எடுக்க வேண்டிய நிலை. மோட்டரிலிருந்து கிணற்றுக்குப் போகும் குழாய் கிணற்றில் தண்ணீரை சற்றே தொட்டுக்கொண்டிருந்தது. ‘ஏலேலோ ஐலசா’ பாடிக்கொண்டு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பது இந்த வாரம் முழுவதும் உற்சாகமாகவே இருந்தது. கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து இறைத்து தலையில் கொட்டிக்கொள்வது அதை விட இன்னும் ஆனந்தமாகவே இருந்தது. புதன் கிழமை மாலை வேளையில் ஒரு 45 நிமிடங்கள் மழை கொட்டித் தீர்த்தது. ‘ஆஹா, இனி மழை தொடர்ந்து பெய்யும்’ என்ற எங்கள் எதிர்பார்ப்புக்கு பெரிய ஏமாற்றம் தான்.

நான் எழுதிய THE PATH என்ற கதைப் புத்தகம் கடந்த வாரம் சுகப் பிரசவமானது. சுமார் பத்து மாதங்கள் ஆயின இதை எழுதி, சரி பார்த்து, மீண்டும் சரி பார்த்து, அட்டை தயார் செய்து பிரசுரிக்க. www.pothi.com என்ற இணையதளப் பிரசுரத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. முதல் பிரதிக்கும் ஆர்டர் கொடுத்துவிட்டேன். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் ஒரு பாதையை தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு சிலருக்கு அந்தப் பாதை சுமுகமாக அமைந்து விடுகிறது. ஒரு சிலருக்கு அந்தப் பாதையை தேர்ந்தெடுக்க உதவி கிடைக்கிறது. பலர் தங்கள் பாதையிலிருந்து வழுவி தாறுமாறாகப் போகிறார்கள். ஒரு சில சம்பவங்கள் அவர்களை மீண்டும் ஒரு நல்ல பாதைக்குக் கொண்டு வருகின்றன. ஒரு சிலருக்கு பாதை தவறியிருக்கிறது என்பதை உணராமலேயே பல இன்னல்களோடு வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி எத்தனையோ வகைகள். 

The Path   கதைப் புத்தகத்தில் சாமி, ராசன், மற்றும் கோட்டி என்ற மூன்று அப்பாவியான கிராமத்து இளைஞர்களின் வாழ்வில் கமலா டீச்சர் என்ற  நல்லாசிரியர் குறுக்கிட நேர்கிறது. அதற்குப் பிறகு அவர்கள் வாழ்க்கையே மாறி விடுகிறது. எப்படி அந்த மூன்று பேரும் முதன் முதலில் சந்தித்துக் கொண்டார்கள், எப்படி கமலா டீச்சர் அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிட நேர்ந்தது, எப்படி அவர்கள் பாதை உருவானது, எப்படித் தடம் புரண்டது, பின்பு எப்படி கமலா டீச்சரின் நல்லெண்ணங்களால் அவர்கள் மீண்டும் தங்கள் பாதைக்குத் திரும்பினார்கள் என்பதைப் பற்றிய கதை. இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். புத்தகம் வாங்க வேண்டிய இடம் www.pothi.com

            நம் எல்லோருக்கும் ஒரு குரு அவசியம் தேவைப்படுகிறது. ஒரு சிலருக்கு இயற்கையாகவே குரு அமைந்துவிடுகிறார். குரு இல்லாமையால் பலர் பல இடங்களுக்கு அலைந்து அல்லல் பட்டு, அடிபட்டு இறுதியில் ஒரு குருவின் உதவியால் மீண்டுவிடுகிறார்கள். என் வாழ்க்கையிலும் எனக்கு அப்படி ஒரு குரு என்னுடைய 48-ஆவது வயதில்தான் கிடைத்தார். அதற்கு முன்பு கிடைத்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பேன். ஆனால், எப்பொழுது அமைய வேண்டுமோ அப்பொழுது ஒரு குரு அமைகிறார். நான் தயார் நிலையில்லாத நேரத்தில் ஒரு குரு தோன்றியிருந்தால் நான் ஏற்றுக்கொள்ளாமலும் போயிருக்கலாம் என்பதை எனக்கு என் குருவின் உதவியாளர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஒரு சீடன் தயார் நிலையிலிருக்கும் பொழுது தானாகவே ஒரு குருவும் தோன்றி விடுகிறார் என்பது வாசகம். இதில் நிறைய உண்மை இருப்பதாக இப்பொழுது நான் உணர்கிறேன். எனக்கும் என் குரு மூலமாக ஒரு சரியான பாதை 48 வயதான பிறகே தோன்றியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால், இந்தப் பாதைக்கு வருவதற்கு 48 ஆண்டுகள் பல இடங்களுக்கு சுற்ற வேண்டியிருந்திருக்கிறது என்பதையும் உணர்கிறேன். ‘பாதை’ என்ற விவாதத்துக்குரிய ஒரு விஷயம் எனக்கு மிகவும் பிடித்தமானது. இந்த நூலை எழுதி முடிப்பதற்கு எனக்கு ‘அந்தர்யாமினாக’ இருந்து உதவிய என் குருவுக்கு நன்றி. என் புத்தகத்துக்கு அருமையான ஒரு அட்டையை தயார் செய்து கொடுத்த தென்காசி சுந்தரம் பிரஸ் உரிமையாளரின் மகன் திரு. பிரகாஷுக்கு நன்றி.

நான் எழுதி முடித்த மூன்றாவது சிறு கதைகளின் தொகுப்பு நூலும் அடுத்த கல்வியாண்டிற்காக ஒரு பள்ளியில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். என்னை ஊக்குவிக்கும் அந்த பாரத் மாண்டிசோரி பள்ளி முதல்வர் திருமதி காந்திமதி மற்றும் தாளாளர் திரு. மோகனகிருஷ்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி. இந்தப் புத்தகமும் இந்த வாரம் அச்சேறிக்கொண்டிருக்கிறது என்பதில் மிகவும் மகிழ்ச்சி.

கடந்த வார இறுதியில் தீபாவளித் திருநாள் விமரிசையாக எல்லா இடங்களிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பொதுவாக இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தில் வெடிகளின் சத்தம் கொஞ்சம் குறைவாகவே கேட்கப்பட்டது. எங்கள் தெரு தீபாவளியன்று காலைக்குப் பிறகும் சுத்தமாகவே அதிக குப்பையில்லாமல் காணப்பட்டது. ஆனால், மாலையில் நிலைமை முழுவதுமாக மாறிவிட்டது. இப்பொழுதெல்லாம், காலையில் சீக்கிரமாக எழுந்திருந்து தீபாவளியைக் கொண்டாடுவதை விட மாலையில் கொண்டாடுவதுதான் சௌகரியமாக இருக்கிறது போல.

‘என்றிலிருந்து தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பது என்ற பழக்கம் தோன்றியது’ என்ற கேள்வி திடீரென்று எனக்குத் தோன்றியது. கிருஷ்ணர் நரகாசுரனை வதைத்ததாகக் கூறப்படும் நாட்களிலிருந்து இருக்க முடியாது என்பது என் தீவிரமான நம்பிக்கை. வெடிமருந்துகள் சீனாவில்தான் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்று ஆராய்ச்சிகள் கூறியிருக்கின்றன.  கி. மு. 200-ஆம் ஆண்டில் வெறும் மூங்கில் குழாய்களை தொடர்ந்து சூடுபடுத்தும் பொழுது அவை வெடித்து சிதறுவதைப் பார்த்திருக்கிறார்கள்.  துப்பாக்கிக் குண்டு மருந்து (Gun Powder) பின்னால் சுமார் 9-ஆம் நூற்றாண்டில்தான் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தீபாவளியன்று வெடிகளை வெடிப்பது என்பது பழமையான பழக்கமில்லை என்றே தோன்றுகிறது. தீபாவளி என்பது விளக்கேற்றி வைத்து லட்சுமிக்கு ஆராதனை செய்யும் ஒரு பண்டிகையாகவே இருந்திருக்கிறது. அதுவும் பெரும்பாலும் குஜராத் போன்ற வட பகுதிகளில்தான். மொகலாயர்களின் காலத்துக்கு முன்பு தீபாவளியையொட்டி பட்டாசுகள் வெடிப்பதைப் பற்றி எந்தத் தகவலுமில்லை. ஔரங்கசீப்பின் காலத்தில் தீபாவளியின் போது விளக்குகளை ஏற்றி வைப்பதற்குக்கூட தடையிருந்திருக்கிறது.

அப்படியென்றால் பட்டாசு வெடிப்பது எப்பொழுது தொடங்கியது. இணையதளத்தில் தேடிப் பார்த்ததில் எனக்குக் கிடைத்த சுவையான தகவல் என்னவென்றால், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது என்பது சிவகாசியைச் சேர்ந்த திரு ஐயா நாடார் அவர்களின் நேர்த்தியான வியாபார உத்திதான் என்பது. 1920-களில் கல்கத்தாவுக்குச் சென்று தீக்குச்சி தயாரிப்பதைக் கற்றுக்கொண்ட திரு ஐயா நாடார் அவர்கள் சிவகாசி திரும்பி வந்து இங்கேயும் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் மூலமாக தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலையைத் துவக்கியிருக்கிறார். பின்னால் வெடி மருந்துகள் தயாரிப்பதற்கு தனது தொழிலை விரிவுபடுத்தியிருக்கிறார். அந்தக் காலக் கட்டத்துக்குப் பிறகே பட்டாசு தயாரிக்கப்பட்டு தீபாவளியைக் கொண்டாடுவதற்கு பட்டாசுகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. 1940-களில் அவரும் அவரின் சகோதரரும் தொடங்கிய ‘அணில்’ மற்றும் ‘ஸ்டாண்டேர்ட்’ பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகள்தான் இந்தியாவில் முதன் முறையாக பட்டாசுத் தொழிற்சாலையாக இருக்கவேண்டும். 1940-க்குப் பின்புதான் பட்டாசு தீபாவளியின் ஒரு முக்கிய அங்கமாகியிருக்கிறது.

தீபாவளியைக் கொண்டாடுவதிலும் பல நுண்ணிய கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றவோ என்றும் தோன்றுகிறது. ஆல் இந்தியா ரேடியோ பிரபலமான அன்றைய காலத்தில் காலை 5 மணிக்கெல்லாம் ரேடியோவில் நாதஸ்வர இசையக் கேட்பது பல வீடுகளில் பழக்கமானது. 1940-களில் பட்டாசு வெடிப்பது துவங்கியது போல 1960-களில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், மற்றும் எம்.ஜி.ஆர் நடித்து தீபாவளியன்று வெளியிடப்பட்ட  படங்களை அன்றே பார்த்து விடுவது என்ற ஒரு புதுக் கலாச்சாரம் துவங்கியிருக்கிறது. தீபாவளியன்று காலை 7 மணிக்கு ஒரு ஷோ தியேட்டர்களில் ஓடும். படம் பார்ப்பதற்கு தியேட்டரில் சுவர் ஏறிக் குதித்து டிக்கெட் வாங்க வேண்டியிருக்கும். நானும் ஒன்றிரண்டு படங்களை அப்படிப் பார்த்திருக்கிறேன்.

1980-களில் தொலைக்காட்சிப் பெட்டி எல்லா இடங்களுக்கும் வந்த பிறகு காலை பட்டாசு வெடித்த பிறகு தொலைக்காட்சிப் பெட்டியில் நிச்சயமாக நடக்கும் பட்டி மன்றத்தையும் அதைத் தொடர்ந்து சினிமா சம்பந்தமான பல நிகழ்ச்சிகளையும் இருந்த இடத்தை விட்டு அசையாமல் பார்க்கும் கலாச்சாரம் தோன்றியது.

அடுத்த இருபது முப்பது ஆண்டுகளில் மீண்டும் ஒரு கலாச்சார மாற்றம். அங்கொன்றும் இங்கொன்றுமாக தங்கள் பொருட்களை தள்ளுபடி செய்து விற்று வந்த வியாபாரிகள் தீபாவளி, பொங்கலுக்கும் அந்தத் தள்ளுபடியை விரிவுபடுத்தி வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்றோ, தீபாவளி மற்றும் பொங்கலுக்கு முன்னே எல்லாமே தள்ளுபடி மற்றும் ‘ஆஃபர்’ வியாபாரம்தான். இதில் ஆன்-லைனில் வியாபாரம் மற்றவர்களைத் தூக்கி சாப்பிட்டுவிடும் ரகம். தீபாவளி சமயத்தில் ஈ-மெயில் பெட்டியைத் திறந்தால் கன்னா பின்னாவென்று விளம்பர மெயில்கள். தீபாவளிக்கு ‘கங்கா ஸ்னானம்’ ஆகி விட்டதா, என்ன புடவை வாங்கினாய் என்று கேட்ட காலம் போய் எந்தக் கடையில் அல்லது எந்த இணையதளத்தில் என்ன பொருட்கள் வாங்கினாய் என்று கேட்கும் காலமாக மாறி விட்டது. பட்டாசுக்கு செலவிடப்பட்ட பணம் இன்று மொபைல் ஃபோன், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சமையலறைப் பொருட்கள் வாங்குவதற்கான சீசனாக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் விளம்பரம்தான். இன்றோ, பக்கத்து ஊர்களுக்கும் நாடுகளுக்கும் தீபாவளி விடுமுறையை கழிக்க குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பறக்கத் துவங்கியிருக்கிறார்கள். என்ன சொல்வது?

            நான் பொதுவாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை என்று சொல்லியிருக்கிறேன். இருந்தும் அவ்வப்பொழுது வேறு எந்த வேலையும் செய்யப் பிடிக்காத ஒரு சில நேரங்களில் தொலைக்காட்சிப் பெட்டியில் சேனல்களை ஓட்டிப் பார்த்திருக்கிறேன். அதிக பட்சம் 5 நிமிடங்கள் சுற்றிவிட்டு பெட்டியை அணைத்து விடுவேன். இந்த தீபாவளியன்று மதிய நேரம். சாப்பிடுவதற்கு முன்னால் அதே போல ரிமோட்டை சுழற்றியதில் 1964-ல் வெளி வந்த ‘காதலிக்க நேரமில்லை’ படம் ஓடிக்கொண்டிருந்தது. பார்க்க வேண்டும் என்று தோன்றியது. பல நாட்களுக்குப் பிறகு மனம் விட்டு சிரித்து ஒரு படத்தைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது. என்ன அருமையான விரசமில்லாத காமெடி, நடிப்பு, துடிப்பான நடிகர்கள், துடிப்பான பாட்டுக்கள். நான் பார்க்க ஆரம்பித்த பிறகு சீர்காழி கோவிந்தராஜனின் பின்னணிப் பாட்டில் ‘காதலிக்க நேரமில்லை,’ பி. பீ. ஸ்ரீனிவாஸ் – சுசீலா வின் ‘நாளாம் நாளாம் திரு நாளாம்’ மற்றும் ஜேசுதாஸ் – சுசீலா பின்னணியில் ‘நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா..’ மூன்றின் படக்காட்சிகள் என் நரம்புகளைத் துள்ள வைத்தன. பாலையாவின் நடிப்பு – இனி இப்படி ஒரு நடிகரைப் பார்க்க முடியுமா? இந்தப் படமும் 1964-ல் தீபாவளியன்றுதான் வெளியிடப்பட்டது என்று ஞாபகம். பல படங்களை முதல் நாளில் முதல் ஷோவில் பார்த்திருந்தும் இந்தப் படத்தை முதல் நாள் பார்க்கவில்லை. ஆனால், என்னுடை பால்ய நண்பன் எஸ்.ஜி.எஸ் போய் பார்த்துவிட்டு வந்து என்னை பயங்கரமாக உசுப்பேத்தி விட்டான். இருந்தும் என்னுடைய ஞாபகப்படி இந்தப் படத்தை ஏனோ 10-15 நாட்கள் கழித்தே நான் பார்த்தேன். பிறகு தியேட்டரிலிருந்து இந்தப் படத்தை தூக்குவதற்குள் ஒரு 5-6 முறை பார்த்திருப்பேன். பாதிப் படமேயானாலும் நேற்று மீண்டும் பார்த்ததில் ஒரு பெரும் மகிழ்ச்சி. (நான் ஒரு சினிமா ரசிகன். அதிலும் எம்.எஸ்.வி – டீ.கே.ஆரின் இசைக்கு அடிமை என்பதை நினைவில் கொள்ளவும்.)

அப்படியாக இந்த வாரம் இனிதே முடிந்தது.

மீண்டும் அடுத்த வாரம் தொடரலாம்.

No comments:

Post a Comment