Pages

Saturday, October 29, 2016

30.10.2016 இந்த வார நாட்குறிப்பு

30.10.2016 இந்த வார நாட்குறிப்பு

கடந்த வாரம் மதுரையிலிருந்து தென்காசிக்கு திரும்பியாகிவிட்டது. என்னதான் மைத்துனர் வீட்டில் வசதியாக இரண்டு வாரங்களைக் கழித்திருந்தாலும் நம் வீட்டிற்கே திரும்பி வருவதில் ஒரு மகிழ்ச்சிதான். தென்காசி வீட்டில் உள்ள தண்ணீர் நிலவரம் தெரிந்ததுதான். அதனால் தென்காசி வந்து சேர்ந்த திங்கட் கிழமையன்றே கிணற்றில் தண்ணீர் இறைப்பதற்கு ஒரு வாளியும் கயிறும் வாங்கி விட்டேன். சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து எடுக்க வேண்டிய நிலை. மோட்டரிலிருந்து கிணற்றுக்குப் போகும் குழாய் கிணற்றில் தண்ணீரை சற்றே தொட்டுக்கொண்டிருந்தது. ‘ஏலேலோ ஐலசா’ பாடிக்கொண்டு கிணற்றிலிருந்து தண்ணீர் இறைப்பது இந்த வாரம் முழுவதும் உற்சாகமாகவே இருந்தது. கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து இறைத்து தலையில் கொட்டிக்கொள்வது அதை விட இன்னும் ஆனந்தமாகவே இருந்தது. புதன் கிழமை மாலை வேளையில் ஒரு 45 நிமிடங்கள் மழை கொட்டித் தீர்த்தது. ‘ஆஹா, இனி மழை தொடர்ந்து பெய்யும்’ என்ற எங்கள் எதிர்பார்ப்புக்கு பெரிய ஏமாற்றம் தான்.

நான் எழுதிய THE PATH என்ற கதைப் புத்தகம் கடந்த வாரம் சுகப் பிரசவமானது. சுமார் பத்து மாதங்கள் ஆயின இதை எழுதி, சரி பார்த்து, மீண்டும் சரி பார்த்து, அட்டை தயார் செய்து பிரசுரிக்க. www.pothi.com என்ற இணையதளப் பிரசுரத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. முதல் பிரதிக்கும் ஆர்டர் கொடுத்துவிட்டேன். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் ஒரு பாதையை தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு சிலருக்கு அந்தப் பாதை சுமுகமாக அமைந்து விடுகிறது. ஒரு சிலருக்கு அந்தப் பாதையை தேர்ந்தெடுக்க உதவி கிடைக்கிறது. பலர் தங்கள் பாதையிலிருந்து வழுவி தாறுமாறாகப் போகிறார்கள். ஒரு சில சம்பவங்கள் அவர்களை மீண்டும் ஒரு நல்ல பாதைக்குக் கொண்டு வருகின்றன. ஒரு சிலருக்கு பாதை தவறியிருக்கிறது என்பதை உணராமலேயே பல இன்னல்களோடு வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி எத்தனையோ வகைகள். 

The Path   கதைப் புத்தகத்தில் சாமி, ராசன், மற்றும் கோட்டி என்ற மூன்று அப்பாவியான கிராமத்து இளைஞர்களின் வாழ்வில் கமலா டீச்சர் என்ற  நல்லாசிரியர் குறுக்கிட நேர்கிறது. அதற்குப் பிறகு அவர்கள் வாழ்க்கையே மாறி விடுகிறது. எப்படி அந்த மூன்று பேரும் முதன் முதலில் சந்தித்துக் கொண்டார்கள், எப்படி கமலா டீச்சர் அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிட நேர்ந்தது, எப்படி அவர்கள் பாதை உருவானது, எப்படித் தடம் புரண்டது, பின்பு எப்படி கமலா டீச்சரின் நல்லெண்ணங்களால் அவர்கள் மீண்டும் தங்கள் பாதைக்குத் திரும்பினார்கள் என்பதைப் பற்றிய கதை. இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். புத்தகம் வாங்க வேண்டிய இடம் www.pothi.com

            நம் எல்லோருக்கும் ஒரு குரு அவசியம் தேவைப்படுகிறது. ஒரு சிலருக்கு இயற்கையாகவே குரு அமைந்துவிடுகிறார். குரு இல்லாமையால் பலர் பல இடங்களுக்கு அலைந்து அல்லல் பட்டு, அடிபட்டு இறுதியில் ஒரு குருவின் உதவியால் மீண்டுவிடுகிறார்கள். என் வாழ்க்கையிலும் எனக்கு அப்படி ஒரு குரு என்னுடைய 48-ஆவது வயதில்தான் கிடைத்தார். அதற்கு முன்பு கிடைத்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பேன். ஆனால், எப்பொழுது அமைய வேண்டுமோ அப்பொழுது ஒரு குரு அமைகிறார். நான் தயார் நிலையில்லாத நேரத்தில் ஒரு குரு தோன்றியிருந்தால் நான் ஏற்றுக்கொள்ளாமலும் போயிருக்கலாம் என்பதை எனக்கு என் குருவின் உதவியாளர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஒரு சீடன் தயார் நிலையிலிருக்கும் பொழுது தானாகவே ஒரு குருவும் தோன்றி விடுகிறார் என்பது வாசகம். இதில் நிறைய உண்மை இருப்பதாக இப்பொழுது நான் உணர்கிறேன். எனக்கும் என் குரு மூலமாக ஒரு சரியான பாதை 48 வயதான பிறகே தோன்றியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஆனால், இந்தப் பாதைக்கு வருவதற்கு 48 ஆண்டுகள் பல இடங்களுக்கு சுற்ற வேண்டியிருந்திருக்கிறது என்பதையும் உணர்கிறேன். ‘பாதை’ என்ற விவாதத்துக்குரிய ஒரு விஷயம் எனக்கு மிகவும் பிடித்தமானது. இந்த நூலை எழுதி முடிப்பதற்கு எனக்கு ‘அந்தர்யாமினாக’ இருந்து உதவிய என் குருவுக்கு நன்றி. என் புத்தகத்துக்கு அருமையான ஒரு அட்டையை தயார் செய்து கொடுத்த தென்காசி சுந்தரம் பிரஸ் உரிமையாளரின் மகன் திரு. பிரகாஷுக்கு நன்றி.

நான் எழுதி முடித்த மூன்றாவது சிறு கதைகளின் தொகுப்பு நூலும் அடுத்த கல்வியாண்டிற்காக ஒரு பள்ளியில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். என்னை ஊக்குவிக்கும் அந்த பாரத் மாண்டிசோரி பள்ளி முதல்வர் திருமதி காந்திமதி மற்றும் தாளாளர் திரு. மோகனகிருஷ்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி. இந்தப் புத்தகமும் இந்த வாரம் அச்சேறிக்கொண்டிருக்கிறது என்பதில் மிகவும் மகிழ்ச்சி.

கடந்த வார இறுதியில் தீபாவளித் திருநாள் விமரிசையாக எல்லா இடங்களிலும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பொதுவாக இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தில் வெடிகளின் சத்தம் கொஞ்சம் குறைவாகவே கேட்கப்பட்டது. எங்கள் தெரு தீபாவளியன்று காலைக்குப் பிறகும் சுத்தமாகவே அதிக குப்பையில்லாமல் காணப்பட்டது. ஆனால், மாலையில் நிலைமை முழுவதுமாக மாறிவிட்டது. இப்பொழுதெல்லாம், காலையில் சீக்கிரமாக எழுந்திருந்து தீபாவளியைக் கொண்டாடுவதை விட மாலையில் கொண்டாடுவதுதான் சௌகரியமாக இருக்கிறது போல.

‘என்றிலிருந்து தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிப்பது என்ற பழக்கம் தோன்றியது’ என்ற கேள்வி திடீரென்று எனக்குத் தோன்றியது. கிருஷ்ணர் நரகாசுரனை வதைத்ததாகக் கூறப்படும் நாட்களிலிருந்து இருக்க முடியாது என்பது என் தீவிரமான நம்பிக்கை. வெடிமருந்துகள் சீனாவில்தான் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்று ஆராய்ச்சிகள் கூறியிருக்கின்றன.  கி. மு. 200-ஆம் ஆண்டில் வெறும் மூங்கில் குழாய்களை தொடர்ந்து சூடுபடுத்தும் பொழுது அவை வெடித்து சிதறுவதைப் பார்த்திருக்கிறார்கள்.  துப்பாக்கிக் குண்டு மருந்து (Gun Powder) பின்னால் சுமார் 9-ஆம் நூற்றாண்டில்தான் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தீபாவளியன்று வெடிகளை வெடிப்பது என்பது பழமையான பழக்கமில்லை என்றே தோன்றுகிறது. தீபாவளி என்பது விளக்கேற்றி வைத்து லட்சுமிக்கு ஆராதனை செய்யும் ஒரு பண்டிகையாகவே இருந்திருக்கிறது. அதுவும் பெரும்பாலும் குஜராத் போன்ற வட பகுதிகளில்தான். மொகலாயர்களின் காலத்துக்கு முன்பு தீபாவளியையொட்டி பட்டாசுகள் வெடிப்பதைப் பற்றி எந்தத் தகவலுமில்லை. ஔரங்கசீப்பின் காலத்தில் தீபாவளியின் போது விளக்குகளை ஏற்றி வைப்பதற்குக்கூட தடையிருந்திருக்கிறது.

அப்படியென்றால் பட்டாசு வெடிப்பது எப்பொழுது தொடங்கியது. இணையதளத்தில் தேடிப் பார்த்ததில் எனக்குக் கிடைத்த சுவையான தகவல் என்னவென்றால், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது என்பது சிவகாசியைச் சேர்ந்த திரு ஐயா நாடார் அவர்களின் நேர்த்தியான வியாபார உத்திதான் என்பது. 1920-களில் கல்கத்தாவுக்குச் சென்று தீக்குச்சி தயாரிப்பதைக் கற்றுக்கொண்ட திரு ஐயா நாடார் அவர்கள் சிவகாசி திரும்பி வந்து இங்கேயும் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்கள் மூலமாக தீக்குச்சி தயாரிக்கும் தொழிற்சாலையைத் துவக்கியிருக்கிறார். பின்னால் வெடி மருந்துகள் தயாரிப்பதற்கு தனது தொழிலை விரிவுபடுத்தியிருக்கிறார். அந்தக் காலக் கட்டத்துக்குப் பிறகே பட்டாசு தயாரிக்கப்பட்டு தீபாவளியைக் கொண்டாடுவதற்கு பட்டாசுகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. 1940-களில் அவரும் அவரின் சகோதரரும் தொடங்கிய ‘அணில்’ மற்றும் ‘ஸ்டாண்டேர்ட்’ பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகள்தான் இந்தியாவில் முதன் முறையாக பட்டாசுத் தொழிற்சாலையாக இருக்கவேண்டும். 1940-க்குப் பின்புதான் பட்டாசு தீபாவளியின் ஒரு முக்கிய அங்கமாகியிருக்கிறது.

தீபாவளியைக் கொண்டாடுவதிலும் பல நுண்ணிய கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றவோ என்றும் தோன்றுகிறது. ஆல் இந்தியா ரேடியோ பிரபலமான அன்றைய காலத்தில் காலை 5 மணிக்கெல்லாம் ரேடியோவில் நாதஸ்வர இசையக் கேட்பது பல வீடுகளில் பழக்கமானது. 1940-களில் பட்டாசு வெடிப்பது துவங்கியது போல 1960-களில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், மற்றும் எம்.ஜி.ஆர் நடித்து தீபாவளியன்று வெளியிடப்பட்ட  படங்களை அன்றே பார்த்து விடுவது என்ற ஒரு புதுக் கலாச்சாரம் துவங்கியிருக்கிறது. தீபாவளியன்று காலை 7 மணிக்கு ஒரு ஷோ தியேட்டர்களில் ஓடும். படம் பார்ப்பதற்கு தியேட்டரில் சுவர் ஏறிக் குதித்து டிக்கெட் வாங்க வேண்டியிருக்கும். நானும் ஒன்றிரண்டு படங்களை அப்படிப் பார்த்திருக்கிறேன்.

1980-களில் தொலைக்காட்சிப் பெட்டி எல்லா இடங்களுக்கும் வந்த பிறகு காலை பட்டாசு வெடித்த பிறகு தொலைக்காட்சிப் பெட்டியில் நிச்சயமாக நடக்கும் பட்டி மன்றத்தையும் அதைத் தொடர்ந்து சினிமா சம்பந்தமான பல நிகழ்ச்சிகளையும் இருந்த இடத்தை விட்டு அசையாமல் பார்க்கும் கலாச்சாரம் தோன்றியது.

அடுத்த இருபது முப்பது ஆண்டுகளில் மீண்டும் ஒரு கலாச்சார மாற்றம். அங்கொன்றும் இங்கொன்றுமாக தங்கள் பொருட்களை தள்ளுபடி செய்து விற்று வந்த வியாபாரிகள் தீபாவளி, பொங்கலுக்கும் அந்தத் தள்ளுபடியை விரிவுபடுத்தி வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்றோ, தீபாவளி மற்றும் பொங்கலுக்கு முன்னே எல்லாமே தள்ளுபடி மற்றும் ‘ஆஃபர்’ வியாபாரம்தான். இதில் ஆன்-லைனில் வியாபாரம் மற்றவர்களைத் தூக்கி சாப்பிட்டுவிடும் ரகம். தீபாவளி சமயத்தில் ஈ-மெயில் பெட்டியைத் திறந்தால் கன்னா பின்னாவென்று விளம்பர மெயில்கள். தீபாவளிக்கு ‘கங்கா ஸ்னானம்’ ஆகி விட்டதா, என்ன புடவை வாங்கினாய் என்று கேட்ட காலம் போய் எந்தக் கடையில் அல்லது எந்த இணையதளத்தில் என்ன பொருட்கள் வாங்கினாய் என்று கேட்கும் காலமாக மாறி விட்டது. பட்டாசுக்கு செலவிடப்பட்ட பணம் இன்று மொபைல் ஃபோன், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சமையலறைப் பொருட்கள் வாங்குவதற்கான சீசனாக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் விளம்பரம்தான். இன்றோ, பக்கத்து ஊர்களுக்கும் நாடுகளுக்கும் தீபாவளி விடுமுறையை கழிக்க குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பறக்கத் துவங்கியிருக்கிறார்கள். என்ன சொல்வது?

            நான் பொதுவாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை என்று சொல்லியிருக்கிறேன். இருந்தும் அவ்வப்பொழுது வேறு எந்த வேலையும் செய்யப் பிடிக்காத ஒரு சில நேரங்களில் தொலைக்காட்சிப் பெட்டியில் சேனல்களை ஓட்டிப் பார்த்திருக்கிறேன். அதிக பட்சம் 5 நிமிடங்கள் சுற்றிவிட்டு பெட்டியை அணைத்து விடுவேன். இந்த தீபாவளியன்று மதிய நேரம். சாப்பிடுவதற்கு முன்னால் அதே போல ரிமோட்டை சுழற்றியதில் 1964-ல் வெளி வந்த ‘காதலிக்க நேரமில்லை’ படம் ஓடிக்கொண்டிருந்தது. பார்க்க வேண்டும் என்று தோன்றியது. பல நாட்களுக்குப் பிறகு மனம் விட்டு சிரித்து ஒரு படத்தைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது. என்ன அருமையான விரசமில்லாத காமெடி, நடிப்பு, துடிப்பான நடிகர்கள், துடிப்பான பாட்டுக்கள். நான் பார்க்க ஆரம்பித்த பிறகு சீர்காழி கோவிந்தராஜனின் பின்னணிப் பாட்டில் ‘காதலிக்க நேரமில்லை,’ பி. பீ. ஸ்ரீனிவாஸ் – சுசீலா வின் ‘நாளாம் நாளாம் திரு நாளாம்’ மற்றும் ஜேசுதாஸ் – சுசீலா பின்னணியில் ‘நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா..’ மூன்றின் படக்காட்சிகள் என் நரம்புகளைத் துள்ள வைத்தன. பாலையாவின் நடிப்பு – இனி இப்படி ஒரு நடிகரைப் பார்க்க முடியுமா? இந்தப் படமும் 1964-ல் தீபாவளியன்றுதான் வெளியிடப்பட்டது என்று ஞாபகம். பல படங்களை முதல் நாளில் முதல் ஷோவில் பார்த்திருந்தும் இந்தப் படத்தை முதல் நாள் பார்க்கவில்லை. ஆனால், என்னுடை பால்ய நண்பன் எஸ்.ஜி.எஸ் போய் பார்த்துவிட்டு வந்து என்னை பயங்கரமாக உசுப்பேத்தி விட்டான். இருந்தும் என்னுடைய ஞாபகப்படி இந்தப் படத்தை ஏனோ 10-15 நாட்கள் கழித்தே நான் பார்த்தேன். பிறகு தியேட்டரிலிருந்து இந்தப் படத்தை தூக்குவதற்குள் ஒரு 5-6 முறை பார்த்திருப்பேன். பாதிப் படமேயானாலும் நேற்று மீண்டும் பார்த்ததில் ஒரு பெரும் மகிழ்ச்சி. (நான் ஒரு சினிமா ரசிகன். அதிலும் எம்.எஸ்.வி – டீ.கே.ஆரின் இசைக்கு அடிமை என்பதை நினைவில் கொள்ளவும்.)

அப்படியாக இந்த வாரம் இனிதே முடிந்தது.

மீண்டும் அடுத்த வாரம் தொடரலாம்.

Friday, October 28, 2016

அமெரிக்கா வர ஆசைப்படும் அன்பானவர்களே … கொஞ்சம் சிந்தியுங்கள்’

‘அமெரிக்கா வர ஆசைப்படும் அன்பானவர்களே … கொஞ்சம் சிந்தியுங்கள்’ என்று தொடங்கும் முகநூல் நண்பரின் எழுத்துக்கள் என்னை இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டியது. அமெரிக்காவில் மருத்துவ வசதிகள், மருத்துவதற்கு ஏற்படும் செலவு, போக்குவரத்துக்கு பஸ் வசதி, இந்திய உணவுகள் கிடைப்பது, ரோட்டில் நடந்து செல்ல முடியாதது, விருப்பம் போல தனியே எங்கும் செல்ல முடியாதது இப்படி பல இன்னல்களைப் பட்டியலிட்டிருக்கிறார் அந்த நண்பர்.

எந்த ஒரு இடத்திலும்  நமக்குத் தேவையான எல்லா வசதிகளும் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சில வசதிகள் இருக்கும். ஒரு சில அசௌகரியங்களும் இருக்கும். இரண்டும் கலந்தேதான் ஒருவருக்கு எதுவுமே கிடைக்க முடியும்.

இந்தியா என்பது சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெரிய நகரங்கள் மட்டுமல்ல. லட்சக்கணக்கான கிராமப் புறங்களைக் கொண்டது.  நகர் புறங்களில் கிடைக்கும் பல வசதிகள் கிராமப் புறங்களில் கிடைப்பதில்லை. அதற்காக கிராமவாசிகள் எல்லோரும் நகர் புறத்துக்கு இடம் பெயர்ந்து விடுவதில்லை. உதாரணமாக நான் வசிக்கும் தென்காசியில் பேர் சொல்லிக்கொள்ளும்படியாக, நவீன சிகிச்சைகள் கொடுக்கக் கூடிய மருத்துவ மனை என்று ஒன்று கூட கிடையாது. ஏதேனும் எமெர்ஜென்சி என்றால் அவசரத்துக்கு மருந்தைக் கொடுத்து திருநெல்வேலிக்கோ மதுரைக்கோ அனுப்பி விடுவார்கள். பல சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மதுரையிலிருந்தும், திருநெல்வேலியிலிருந்தும் ஒரு சில மணி நேரங்களுக்காக இங்கே வருகிறார்கள். அவர்கள் வரும்  நாளன்று அந்த க்ளினிக்கில் பேய்க்கூட்டம் கூடியிருக்கும். ஒரு  நோயாளிக்கு அதிக பட்சம் 3 நிமிடங்கள்தான் அந்த சிறப்பு மருத்துவரால் கொடுக்க முடியும். அதில் என்ன பிரயோஜனம்? அந்த க்ளினிக்கில் ஒரு நாளைக்கு அதிக பட்சமாக 100 டோக்கன்கள் வரை வழங்குவார்கள்.  பொதுவாக எந்த சிறப்பு மருத்துவரிடம் சென்றாலும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும். அவ்வளவு அதிகமான நோயாளிகள். அவ்வளவு குறைவான மருத்துவர்கள். தென்காசியைப் போலத்தான் பல கிராமப் புற ஊர்கள் இருக்கின்றன. பெரிய மருத்துவர்கள் எல்லாம் பெரிய நகரங்களிலேயே தங்கி விடுகிறார்கள். எந்த தீவிர சிகிச்சைக்கும் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி அல்லது மதுரைக்குத்தான் ஓட வேண்டியிருக்கிறது. இங்கே என்ன மருத்துவச் செலவு குறைச்சலா? அமெரிக்க டாலரை ரூபாய்க்கு மாற்றிக் கணக்குப் போட்டால் அங்கே மருத்துவச் செலவு அதிகம் போலவே தோன்றும். இந்தியாவிலும் பல மருத்துவ மனைகள் பணம் கறப்பதற்காகவே நடத்துவது போலத் தோன்றுகிறது. இதற்கு நடுவே மனிதாபிமானம் கொண்ட நல்ல பல மருத்துவர்களும் பல இடங்களிலும் இருக்கிறார்கள்.

இந்தியாவில் நிலைமை இப்படி இருக்க…

வட அமெரிக்காவில், சிறப்பு மருத்துவர்களின் அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பது கடினம் என்பது உண்மைதான். இருந்தும் எமெர்ஜென்சிக்கென்றே பல சிறிய மருத்துவ மனைகள் இருக்கின்றன. அங்கே நாம் நினைத்த உடனேயே சிறப்பு மருத்துவரைப் பார்க்க முடியாது. குடும்ப மருத்துவரைப் போன்ற ப்ரைமரி மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே சிறப்பு மருத்துவரை பொதுவாக பார்க்க முடியும். எமெர்ஜென்சி மருத்துவர் பல இடங்களில் ஒரு நர்சாகத்தான் இருப்பார். அவர்களுக்கு மருத்துவர்களுக்கு சமமாக மருந்து எழுதிக் கொடுக்க அதிகாரம் உண்டு. அவர் தேவையென்று கருதினால் வேறொரு மருத்துவருக்கு அவரே ஏற்பாடு செய்வார். பல நகரங்களில் பெரிய மருத்துவ மனைகள் இருக்கின்றன. இங்கே எப்பொழுது வேண்டுமானாலும் ஒரு நோயாளி அணுகலாம். ஆனால், ஒரு மருத்துவரிடம் போனால் நோயாளியின் முழு சரித்திரத்தைத் தெரிந்து கொள்கிறார்கள். ஒரு நோயாளியின் மருத்துவ ரெக்கார்ட் பத்திரமாக ஆண்டுக்கணக்காக ஒவ்வொரு மருத்துவரிடமும் பாதுகாக்கப்படுகிறது. இங்கு போல துண்டு சீட்டை எழுதிக் கொடுப்பதில்லை. அங்கே தொட்டால் துடைத்தால் மருத்துவர்களின் கவனக் குறைவுக்காக நியாயம் கேட்க நீதிமன்றங்களுக்கு மக்கள் போக முடியும் என்பதால் மருத்துவர்கள் மிகக் கவனமாக நோயாளிகளை கவனிக்கிறார்கள். கவனக் குறைவினால் ஏற்படும் தவறுகளுக்கு மருத்துவர்கள், மருத்துவ மனைகள் பொறுப்பேற்க வேண்டும். இங்கு போல தப்பிக்க முடியாது. (சமீபத்தில் எனக்குத் தெரிந்த குடும்பத்தில் மார்பு வலியால் அவதிப்பட்ட ஒரு முதியவருக்கு இந்தியாவில் ஒரு பெரிய நகரத்தில் ஒரு பெரிய மருத்துவ மனையில் சுமார் 5-6 லட்ச ரூபாய் செலவு செய்த பிறகு ஊருக்குக் கூட்டிக்கொண்டு வந்த பிறகு ஏற்பட்ட தொடர் சிக்கலில் இன்னொரு பெரிய ஊரில் இன்னொரு பெரிய மருத்துவ மனைக்குக் கூட்டிக்கொண்டு போய் இன்னும் 2-3 லட்ச ரூபாய் செலவழிக்க நேரிட்டது. மருத்துவ மனைக்கு பொறுப்பு என்பது எங்கே இருக்கிறது?

உண்மைதான். அமெரிக்காவில் இன்ஷூரன்ஸ் இல்லாமல் மருத்துவம் பார்ப்பது என்பது ஒருவரை திவாலாவாக்கும் விஷயம்தான். அதனால்தான் அங்கே வேலை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்கள் அலுவலகம் மூலமாக க்ரூப் இன்ஷூரன்ஸ் மூலம் தங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும் முழுக் காப்பீடு செய்துகொள்கிறார்கள். இப்போதைய அமெரிக்க குடியரசு அதிபரின் ‘எல்லோருக்கும் இன்ஷுரன்ஸ்’ திட்டம் பல குறைகள் இருந்தாலும் பல ஏழை குடிமக்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. இன்ஷுரன்ஸ் இருந்து விட்டால் பொதுவாக பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது.  இருந்தும் சில நேரங்களில் ஒருவரின் மருத்துவச் செலவை இன்ஷுரன்ஸ் கம்பெனிகள் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளாமல் பணம் கட்டச் சொல்லி நோயாளிகளுக்கு பில் அனுப்புகிற பழக்கமும் அங்கே உண்டு. அது போன்ற நேரங்களில் இன்ஷுரன்ஸ் கம்பெனியுடன் பேச்சு வார்த்தை நடத்தி பில் தொகையை குறைக்கவும் முடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அங்கே ஒருவருக்கு கிடைக்கும் மருத்துவம் மிக உயர் தரமாக இருப்பதினால்தான் நம் நாட்டிலுள்ள வசதி படைத்தவர்கள் (பல முக்கிய அரசியல் வாதிகளும் இதில் அடங்கும்) மருத்துவத்துக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் என்று பறக்கிறார்கள். ஏன், அவர்களெல்லாம் இந்தியாவிலேயே தங்களைக் குணப்படுத்திக் கொள்ளலாமே? ஏன் தயங்குகிறார்கள்.

அமெரிக்கா வந்திறங்கிய பல இளைஞர்களையும் தம்பதிகளையும் கண்டிருக்கிறேன். இந்தியாவிலிருக்கும் பொழுது சோம்பேறியாக, ஹோட்டல் சாப்பாட்டையே நம்பியிருந்த பல இளைஞர்களும் மாணவ மாணவிகளும் கூட அங்கே போனவுடன் சொந்தமாக சமையல் செய்யவும் வீட்டு வேலை செய்யவும் கற்றுக்கொண்டு விடுகிறார்கள். திருமணமான இளைஞர்கள் தங்கள் மனைவிக்கு வீட்டு வேலையில் உதவி செய்கிறார்கள். அவ்வப்பொழுது வெளியேயும் (இங்கே போல) சாப்பிடுகிறார்கள். இங்கே பர்கர், பிட்சா சாப்பிடுவது பலரிடையே பீத்திக் கொள்ளும் சமாச்சாரம். அங்கே அது சிக்கனமாக வயிற்றை கழுவும் சமாச்சாரம்

அமெரிக்காவில் போக்குவரத்துக்கு பல இடங்களில் பஸ் வசதியில்லை என்பது என்னவோ உண்மைதான். ட்ராஃபிக் ஜாம் என்பது இந்தியாவிலும் மற்றும் எல்லா  நாடுகளிலும் பெரிய நகரங்களில் காணப்படுவதுதான். அமெரிக்காவில் மட்டும் என்றில்லை. இங்கே பங்களூரில், சென்னையில், மும்பையில், டில்லியில் என்ன வாழ்கிறது? அமெரிக்காவில் ட்ராஃபிக் எப்பொழுதும் சீரோடு சென்று கொண்டிருக்கும். அங்கே காணப்படும் ‘லேன் டிஸ்சிப்ளின்’ மற்றும் ஓட்டுனர் டிஸ்சிப்ளின் என்பது நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிகவும் பாராட்டப் பட வேண்டிய விஷயம். இங்கே போல தாறு மாறாக அங்கே வண்டி ஓட்ட முடியாது. இங்கே போல லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்ட முடியாது. விதிமுறையை மீறினால் விதிப்படி வெளிப்படையான அபராதம். அமெரிக்க அதிபரின் குழந்தைகள் கூடத் தப்பிக்க முடியாது. இங்கே போல காவல்காரரிடம் பல்லிளிக்க வேண்டியதில்லை.

சாலைகளின் தரம் மிக நன்றாக இருக்கிறது அமெரிக்காவில். ஒரு முறை டென்வர் நகருக்கருகே 14000 அடி உயரத்திலிருக்கும் ஒரு சுற்றுலாத் தலத்துக்குப் போயிருந்தோம். 14000 அடி உயரம் வரை நேர்த்தியான பாதை.  கார் வழுக்கிக் கொண்டு செல்கிறது. சின்னஞ்சிறு கிராமங்களில் கூட பாதைகள்  நன்றாகப் போட்டிருக்கிறார்கள். இங்கேயோ எங்கு பார்த்தாலும் சந்திரனில் இருக்கும் க்ரேட்டர்கள் போல பள்ள மேடுகள். சமீபத்தில் சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், மதுரை ஊர்களுக்கு காரில் சென்று வந்த அனுபவத்தை மறக்க முடியாது. முதல் கியர், இரண்டாம் கியருக்கு காரை மாற்றி மாற்றி ஓட்டி என் கை கால்களில் நோவு இன்னும் போகவில்லை.

பெரிய பேரிடர் என்றிருந்தாலொழிய அங்கே மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்கிறது. பொதுவாக எந்த வீட்டிலும் போர் கிணறு போட்டதாகக் கிடையாது. எல்லோருக்கும் அரசாங்கமே தண்ணீர் கொடுக்கிறது. பணம் வாங்கிக் கொள்கிறார்கள். இலவசம் என்பது நம் நாட்டில்தான். அங்கே எதுவும் இலவசம் கிடையாது. அதனால், மக்கள் உழைத்தாக வேண்டும். வேலையிலிருப்பவர்கள் குறைந்தது 67 வயது வரை வேலை செய்தாக வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் கால்களில் நிற்கப் பழகிக் கொள்ளவேண்டும். ஒரு நபர் 16 வயது எட்டிவிட்டால் அவரைக் காப்பாற்றும் பொறுப்பு பெற்றோர்களுக்குக் கிடையாது. அந்த நபர் சுயமாக தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கும் ஒரு பொறுப்பும் வரும். அதே போல எண்பது வயதடைந்த பல முதியவர்கள் கூட தானே காரை ஓட்டிக்கொண்டு போய் தனக்கு வேண்டிய வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டியதுதான். இதனாலெல்லாம் குடும்பத்தின் மீது அவர்களுக்கு தனி அன்பு கிடையாது என்று அர்த்தமில்லை. அந்த அன்பை அவர்கள் வெளிப்படுத்தும் விதம் வித்தியாசமானது. அவ்வளவுதான். விவாகரத்து வாங்கிக் கொண்ட பல தம்பதிகள் விவாகரத்துக்குப் பிறகு ஒருவருக்கொருவர்   நட்புடன் பழகி வருகிறார்கள். (நான் ஏற்கெனவே சொன்னது போல இந்த மாதிரி சுதந்திரங்களிலும் பல எதிர்மறை விளைவுகள் அங்கே ஏற்படுகின்றன என்பதும் உண்மைதான்)

அமெரிக்கா செல்பவர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

முதலாவது வகை அமெரிக்காவை ஓய்வுக்காகவும் சுற்றிப் பார்க்கவும் செல்பவர்கள். பொதுவாக இந்த வகையைச் சேர்ந்தவர்கள் கொஞ்சம் வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். அவர்களைப் பற்றி அதிகம் கவலையில்லை.

இரண்டாவது வகை வேலைக்காக அங்கே செல்பவர்கள். அல்லது அங்கேயே படித்து முடித்துவிட்டு வேலை பார்ப்பவர்கள். இவர்களின் நாட்கள் பொதுவாக பிசியாகவே ஓடிக்கொண்டிருக்கும் – சனி, ஞாயிறு நீங்கலாக. இங்கேயிருந்து போகும் இந்தியர்கள் பொதுவாக நல்ல வசதிகளை அனுபவித்து சந்தோஷமாகவே வாழ்கிறார்கள்.

மூன்றாவது வகை அங்கேயே தங்கிவிட்டவர்களின் பெற்றோர்கள். இவர்கள் அடிக்கடி தங்கள் பிள்ளைகளுடன் சில மாதங்களைக் கழிப்பதற்காக அமெரிக்கா செல்பவர்கள். பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகள் வகைதான். ஆறு மாதம் அதிக பட்சம் அங்கே தங்கியிருக்கலாம். ஒரு சில  சொந்தக் காரணங்களுக்காக ‘க்ரீன் கார்ட்’ அல்லது அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே வசிக்கும் ஒரு சிலர் அமெரிக்காவில் தங்கியிருப்பது பற்றி அதிகக் குறை பட்டுக்கொள்ள முடியாது. அது அவர்கள் எடுத்த முடிவு. இங்கேயிருந்து அடிக்கடி தங்கள் பிள்ளைகளுடன் ஒரு சில மாதங்களைக் கழிப்பதற்காக அமெரிக்கா செல்லும் பெற்றோர்கள் பாடுதான் கொஞ்சம் திண்டாட்டம் போலத் தோன்றுகிறது. அவர்களுக்கு ஏற்படும் பொதுவான சில சிரமங்களைத்தான் ஒரு பெரிய பிரச்சினை போல எழுதிவிடுகிறோம்.

அவர்களுக்கு தங்கள் குழந்தைகள் வேலைக்குச் சென்ற பிறகு வீட்டில் தனியே போரடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டும். அவர்கள் இஷ்டம் போல எங்கும் போக முடியாது. அவர்கள் குழந்தைகள் வார விடுமுறை நாட்களிலோ அல்லது மாலை வேளையிலோ எங்கேயோ கூட்டிச் சென்றால்தான் உண்டு.  ஆரம்ப நாட்களில் பல இடங்களுக்குச் சுற்றிப் பார்க்கக் கூட்டிக்கொண்டு போகும்பொழுது அங்கே வாழ்க்கை சுவாரசியமாகத்தான் இருக்கும். பல இடங்களைப் பார்த்து முடித்துவிட்ட பிறகோ அல்லது பிள்ளைப் பேறு போன்ற நிகழ்வுகள் ஏற்பட்ட பிறகோ வெளியே போவது குறைந்து போகும். அந்த நேரங்களில் வயதானவர்களுக்கு போரடிக்கத் துவங்கலாம். என்ன செய்வது அதுவும் ஒரு காலத்தின் கட்டாயம்தான். அந்த மாதிரி நேரங்களில் வயதானவர்கள் தங்களை ஆரோக்கியமான நல்ல பொழுது போக்குகளில் ஈடுபடுத்திக்கொண்டால் வாழ்க்கை போரடிக்காமல் போகும். இங்கேயோ வயதான பல பெரியவர்கள் தங்கள் வயதான நாட்களை தொலைக்காட்சி பெட்டி முன்பு அமர்ந்தோ அல்லது மற்ற வயதானவர்களுடன் வெட்டிப் பேச்சு பேசியோதான் பொழுதைக் கழிக்கின்றனர் என்று தோன்றுகிறது. 

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் குழந்தைகளை அமெரிக்காவுக்கு அனுப்பிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள்தான் இங்கே மிக அதிகம் என்பது என் எண்ணம். ஒரு சிலருக்கு அந்த எண்ணம் நடந்தேறியிருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு நடந்தேறவில்லை. இந்தியாவில் இவ்வளவு வசதிகள் கூடியும் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா என்று மேல் நாடுகளுக்கு அனுப்புவதையே விரும்புகிறார்கள். அதில் அவர்களுக்கு மிகவும் பெருமையும் கூட. வாய்ப்பு கிடைத்தால் எல்லா இளைஞர்களும் அமெரிக்கா சென்று ஒரு சில ஆண்டுகளுக்காகவாவது வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள்தான். வெளியே காட்டிக்கொள்ளாமல் இருக்கலாம். அல்லது அங்கே போக முடியாத சில நிர்பந்தங்கள் இருக்கலாம்.

மற்றபடி அமெரிக்க வாழ்க்கை, இந்திய வாழ்க்கை எல்லாவற்றிலும் குறை, நிறைகள் இருக்கின்றன.  எல்லா வசதிகளையும், எல்லா நேரங்களிலும் நாம் எதிர்பார்க்க முடியாதுதான். என்ன செய்வது. உலகம் தட்டையாகி விட்டது. மக்கள் எல்லா இடங்களிலும் சென்று வேலை பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். 

கடந்த 16  ஆண்டுகளில் பல முறை அமெரிக்கா சென்று அங்கேயே ஆறு மாதங்கள் வரை தங்கி வந்திருக்கிறேன் என்ற அனுபவத்தில் இந்தக் கருத்துக்களை எழுதியிருக்கிறேன். அமெரிக்காவில் வசிக்கும் நம் குழந்தைகளில் பெரும்பான்மையோர் நாம் அவர்களுடன் தங்கியிருப்பதையே விரும்புகிறார்கள். அவர்கள் சுதந்திரத்தில் அதிகமாக மூக்கை நுழைக்காமல் முடிந்தவரை அவர்களுக்கு உதவியாக இருந்துவிட்டு போவோமே! என்ன நஷ்டம்!


Saturday, October 22, 2016

23.10.16: என்னுடைய இந்த வார நாட்குறிப்பு

23.10.16: என்னுடைய இந்த வார நாட்குறிப்பு

ஒவ்வொரு வாரமும் அந்தந்த வாரத்தில் ஏற்பட்ட சில சுவையான அனுபவங்களைப் பற்றியும் என்னை பாதித்த செய்திகளைப் பற்றியும் எழுத ஆரம்பிக்கலாம் என்று கடந்த வாரம் இந்தத் தொடரை ஆரம்பித்தேன். இது இரண்டாவது வாரம். பார்க்கலாம் எத்தனை வாரங்கள்தான் எழுத முடிகிறது என்று.

கடந்த வாரமும் நான் எழுதி வெளியிட்ட இளைஞர்களுக்கான புத்தகங்களை அறிமுகப்படுத்துவதற்காக பல பள்ளிகளுக்கு விஜயம் செய்தேன். மதுரைக்கு வெளியே சில பள்ளிகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பொதுவாக மதுரை நகரத்தில் பெரிய ஏமாற்றமே எனக்குக் கிடைத்தது. மதுரையில் பெரிய பள்ளிகளில் முதல்வரை சந்திப்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது. இதை அவர்களின் நஷ்டமாகவே நான் கருதுகிறேன்.

திருத்தங்கல் மற்றும் விருதுநகர் சென்று திரும்பும்பொழுது நாலு வழிச்சாலையில் கும்பகோணம் டிகிரி காஃப்பி என்ற விளம்பரப் பலகை என்னை ஈர்த்தது. இந்தப் பலகையை பல இடங்களில் நான் பார்த்திருந்தாலும் எங்கேயும் அந்த காஃபிக்காக நான் நின்றதில்லை. ஒரே ‘ப்ராண்டின்’ பல காஃப்பிக் கடைகள். நல்ல விளம்பர யுத்தி – அமெரிக்காவில் மேக் டோனால்ட், ஸ்டார் பக்ஸ், பர்கர் கிங்  போன்று. எந்தக் கிளைக்குப் போனாலும் ஒரே தரத்தில் உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. நம்மூர் சரவண பவனும் இதே யுத்தியைத்தான் கடைபிடிக்கின்றனர். காஃபி – சிக்கரி கலந்ததுதான் – நன்றாகவே, சூடாக இருந்தது. பெரும்பாலும், பல ஹோட்டல்களில் காஃபி நமது டேபிளுக்கு வரும்பொழுது ஆறிக் குளிர்ந்திருக்கும். நான் காஃப்பி சாப்பிட்ட இடத்தில் பலர் குடும்பத்தோடு அமர்ந்திருந்தனர். குறைந்தது பத்து – பன்னிரண்டு கார்கள் நின்று கொண்டிருந்தன. காஃபிக் கடையின் ஒரு மூலையில் ஒரு பெண்மணி சுடச் சுட பஜ்ஜி, வாழைப்பூ வடை தயார் பண்ணிக்கொண்டிருந்தார். என் நாக்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பஜ்ஜியும், வடையும் மிகச் சுவையாகவே இருந்தன.

இந்த degree coffee- க்கு ஏன் அப்படியொரு பெயர் என்பதைப் பற்றி இணைய தளம் ‘கோரா’வில் பல வித விளக்கங்கள் படிப்பதற்கு சுவையாக இருந்தது. அதில் ஒன்று 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் ஒரு முறை தஞ்சாவூரின் கலெக்டருக்கு கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு சமையற்காரர் அளித்த காஃபியை அவர் மிகவும் விரும்பி அருந்தியிருக்கிறார். அதற்குப் பிறகு அதே போன்ற காஃபியையே தனக்கு எல்லா இடங்களிலும் வழங்க வேண்டும் என்று decree (order) போட்டிருக்கிறார். அதனாலேயே அந்த காஃப்பிக்கு கும்பகோணம் டிக்ரி காஃபி என்று பெயராம்.

மதுரை மாட்டுத்தாவணி அருகே ஒரு பள்ளிக்குச் சென்று திரும்பும் வழியில் பாதையோரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த சில குடும்பங்கள் ‘பிளாஸ்டர் ஆஃப் பாரிசி’ல் செய்யப்பட்ட அழகிய கொலு பொம்மைகளை விலைக்காக வைத்திருந்தார்கள். அதில் நான்கைந்து பொம்மைகளை வாங்கிக்கொண்டேன். பல பத்தாண்டுகளாக தமிழ் நாட்டிலேயே இப்படி பாதையோரத்தில் வசித்துக்கொண்டு அவர்கள் பொம்மைகள் தயாரித்து வருவதாக அங்கே என்னுடன் பேரம் பேசிய சிறுவன் கூறினான். அவனுக்கு பன்னிரண்டு வயதிருந்தால் அதிகம். அவனுடன் நான் ஹிந்தியிலேயே பேசினேன்.  ஒரு சிறுவனுடன் பேரம் பேசுவதற்கு எனக்குக் கூச்சமாகத்தான் இருந்தது. இருந்தும் இரட்டிப்பாக விலை சொல்கிறானோ என்று எனக்கு ஒரு சந்தேகம். பேரம் பேசியதில் சுமார் நாற்பது சதவிகிதம் விலையைக் குறைத்துக் கொண்டான். ‘ஏம்பா, நீ பள்ளிக்குப் போவதில்லையா’ என்று கேட்டதற்கு ‘ஓ, போகிறேனே, எங்கள் ராஜஸ்தானில். அப்பப்போ விடுமுறை எடுத்துக்கொண்டு விடுவேன்’ என்றான். கூடவே ஒரு சிறுமியும் வந்து விட்டாள். பொம்மைகளை வாங்கிக்கொண்டு காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பும்பொழுது அந்தச் சிறுவன் ‘சார், டீக்கு பணம் கொடுங்க சார்’ என்றான். அவன் கேட்ட விதம் மனதை நெருடியது. ‘ஏம்பா, எல்லாத்துக்கும் சேர்த்துதானே பணம் கொடுத்தேன்’ என்றேன். ‘இல்லை, சார். அந்தப் பணம் அந்தப் பெரியவருக்குப் போய் விட்டது. எனக்கு டீ குடிப்பதற்குப் பணம் கொடுங்க சார்’ என்றான். ஒரு முப்பது ரூபாயைக் கொடுத்த போது ‘ரொம்ப நன்றி, சார்’ என்றான். காரை ஓட்டிக்கொண்டு வந்தபோது இது போன்ற உழைப்பாளிகளிடம் பேரம் பேசியது தவறோ என்று என் மனம் மீண்டும் மீண்டும் குத்திக் காட்டியது.

ஒரு அவசர வேல நிமித்தமாக மீண்டும் தென்காசிக்குத் திரும்ப வேண்டியிருந்தது. வீட்டிற்குச் சென்று பார்த்தால் கிணற்றில் தண்ணீரில்லை. குழாயின் ஆழத்துக்கும் கிழே தண்ணீர் இறங்கி விட்டது. அடுத்த வாரம் தென்காசிக்கு நிரந்தரமாக மீண்டும் திரும்பும்பொழுது எப்படி சமாளிப்பது என்ற கவலை தொற்றிக் கொண்டது. யாரிடம் பேசினாலும் தண்ணீர் பிரச்சினையைப் பற்றித்தான் பேசுகிறார்கள். மூன்று மாதமாக தென்காசியில் சொட்டு மழை இல்லை. விவசாய நிலங்கள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் எல்லாம் காய்ந்து கிடக்கின்றன. வடகிழக்கு பருவ காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் வீணே கடலில் கலக்கிறது. மழை பெய்யாத காலங்களில் பல ஏரிகளையும், குளங்களையும் சீர் செய்யலாம்.  மழை பெய்யும் பொழுது உதவியாக இருக்கும். மக்களுக்கோ அரசாங்கத்துக்கோ இதைப் பற்றியெல்லாம் நினைத்துப் பார்ப்பதற்கு நேரம் இருப்பது போலத் தெரியவில்லை. எங்கள் வீட்டைச் சுற்றி வீட்டுக்குள் யாருக்கும் குடிதண்ணீர் கிடைக்காதது பற்றி இரண்டு முறை பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் கதை தமிழ் நாட்டின் பல இடங்களில் நடக்கிறது என்பது உண்மை. அவர்களுக்கு எது எதைப் பற்றியெல்லாமோ கவலைப்பட வேண்டியிருக்கிறது … தேர்தல்கள், காவிரி மேலாண்மை வாரியம், தலைவர்/தலைவியின் உடல் நிலை அல்லது அவர்களின் குடும்பப் பிரச்சினை … இப்படிப் பலவற்றின் நடுவே சாதாரண மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை கவனிப்பதற்கு எங்கே நேரம். தமிழ்நாட்டின் தலையெழுத்து.

அன்றைக்கு ஜெயகாந்தன் எழுதிய ‘பிரம்மோபதேசம்’ என்ற இரண்டு  நீண்ட சிறு கதைகள் அடங்கிய புத்தகத்தைப் இந்த வாரத்தில் படித்து முடித்தேன். அதில் முதல் கதை ‘பிரம்மோபதேசம்’. இதில் சாஸ்திரங்களை கடுமையாக பின் பற்றும் ஒரு பிராமணரின் மகள் சாஸ்திரங்களை கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு இளைஞனுடன் அவரை மீறி திருமணம் செய்துகொள்ள முனைப்படுகிறாள். அதே நேரத்தில் கோவிலில் தேவாரம் பாடும் எந்த ஜாதியையோ சேர்ந்த இன்னொரு இளைஞருக்கு அவருடைய கட்டுப்பாடான, நெறி தவறாத பண்புகளைக் கண்டு அந்த பிராமணர் பூணுல் அணிவிக்கிறார். ஜெயகாந்தன் காலத்தில் அவர் எழுதிய பல கதைகள் பிராமணக் குடும்பங்களைப் பற்றியது என்று ஞாபகம். பிராமண குடும்பங்களில் பல அவலங்களைப் பற்றி துணிந்து எழுதியிருக்கிறார். அவரது எழுத்துக்களை மிக அதிகமாக ரசித்தவர்களும் பிராமணர்கள்தான் என்பது என் கருத்து. பிராமணர்களின் பண்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அப்படி கதைகளை அமைத்தாரா அல்லது பிராமணர்களின் பல பழக்க வழக்கங்களை எதிர்ப்பதாக நினைத்து எழுதினாரா என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம். மேலும் கம்யூனிசத்தை மிகவும் விரும்பியவர் அவர். இரண்டாவது கதை ‘இலக்கணம் மீறிய கவிதை’ இதில் ஒரு வேசி தன் தொழிலின் நிர்பந்தத்துக்காக செய்யக்கூடிய பல செயல்களை மீறி எப்படி அதே தொழிலில் தனக்குப் போட்டியாக இருக்கும் இன்னொருத்திக்கு உதவி செய்கிறாள். அந்த வேசியால் ஈர்க்கப்பட்ட இலக்கணத்தை மீறி கவிதை எழுதும் ஒருவர் எதிர்பாராமல் அதற்கு எப்படி துணை போகிறார் என்பது பற்றிய கதை. ஜெயகாந்தன் பல கதைகளில் வேசிகளைப் பற்றியும் வாழ்க்கையில் தடம் புரண்ட சில குடும்பப் பெண்மணிகளைப் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறார் என்று ஞாபகம்.

இரண்டு கதைகளும் இன்றைக்கும் படிப்பதற்கு நன்றாகவே இருந்தது.

அடுத்ததாக நான் படித்துக்கொண்டிருப்பது “HEALTHY MIND, HEALTHY BODY: NEW THOUGHTS ON HEALTH” என்ற ராமகிருஷ்ண மடத்தின் வெளியீட்டில் வந்த ஒரு புத்தகம். இன்னும் முடிக்கவில்லை.  உடம்பு ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியமான மனது தேவை என்பதைப் பற்றி எங்கள் அம்மா பகவானின் பல நிகழ்ச்சிகளில் கேட்டு உணர்ந்திருக்கிறேன். கோபம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி, பழி தீர்க்கும் மனோபாவம், குற்ற உணர்ச்சி, ஏமாற்றம், வெட்க உணர்ச்சி, தன்மானமின்மை, இப்படி மனதின் பல வியாதிகள்தான் உடம்பில் பல பகுதிகளில் வியாதிகளாக பெரும்பாலும் தோன்றுகின்றன என்பதை நான் முழுவது நம்புகிறேன். ஆனால், மனதின் வியாதிகளிலிருந்துதான் விடுபட முடியவில்லை. ஒரு சில ஆன்மீக வகுப்புகளுக்குப் போகும்பொழுது ஏதோ கொஞ்சம் இந்த வியாதிகளிலிருந்து விடுபடுவதுபோலத் தோன்றுகிறது ஆனால் அந்த வகுப்புகள் முடிந்து மீண்டும் அன்றாட அல்லல் வாழ்க்கையில் உழலும்போது மீண்டும் இந்த வியாதிகள் தங்கள் பலத்தைக் காட்டுகின்றன. நிரந்தரமாக விடுதலையடைவதற்கு பயிற்சி செய்யவேண்டும். ஆனால் ஒரு நாளில் பல வேலைகளுக்கு நடுவே இந்தப் பயிற்சிகளுக்கு மட்டும் நேரம் ஒதுக்குவதற்கு முடிவதில்லை. நம்முடைய முக்கியத்துவங்கள் எவை என்பதைப் பற்றி நாம் பொதுவாக சிந்தித்துப் பார்ப்பதில்லை என்று நினைக்கிறேன். தினப்படி வாழ்க்கையை ஒரு விழிப்புணர்ச்சியோடு நடத்தி வருவதில்லை. இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுது மீண்டும் மனதில் ஒரு தீர்மானத்தை எடுத்துக்கொள்கிறேன். தீர்மானத்தைத் தொடரவேண்டும்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாக தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளை பார்ப்பதை நான் தவிர்த்து வருகிறேன். முன்பெல்லாம் தூர்தர்ஷனின் ஒரு சேனல் மட்டுமே இருந்த காலங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்வளவு விளம்பரங்கள் நடு நடுவே வருவதில்லை. ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிகளை மட்டும் இந்தியாவில் இருக்கும் பொழுது தவறாமல் பார்த்து விடுவேன். முன்பெல்லாம் திரைப் படங்களை மிகவும் விரும்பிப் பார்த்தவன் நான். ஆனால், இப்பொழுது வெளியாகும் பல படங்கள் என்னை ஈர்ப்பதில்லை. ஒரு சில பிரபலங்கள் நடித்த ஒரு சில படங்களைப் பார்த்த போதிலும் அவற்றில் பெரும்பாலும் குறைகளையே அதிகமாக கண்டிருக்கிறேன். ‘உனக்கு வயதாகி விட்டது. உன்னுடைய ரசனை மாறிப் போனால் யாரைக் குற்றம் சொல்ல முடியும்’ என்று சென்னையில் வசிக்கும் என் தம்பி சொல்கிறான். நேற்று இரவு சாப்பிட்டு முடித்த பிறகு உடனடியாக வேறு எதுவும் செய்வதற்க்கு இல்லாத நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியை ‘ஆன்’ செய்ததில் ‘ராசுக்குட்டி’ என்ற பாக்கியராஜ் படம் ஓடிக்கொண்டிருந்தது. பல பாக்கியராஜ் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறேன். பொதுவாக பல படங்களில் ஒன்றும் அறியாத சாது போல வருவார். ஒரு பெண்ணை விரும்புவார். பல குழப்பங்கள் வரும். நடு நடுவே நன்கு சிரிக்கக்கூடிய விரசமில்லாத (ஒரு சில நேரங்களில் விரசமான) நகைச்சுவைக் காட்சிகள் வரும். பல வித்தியாசமான திருப்பங்கள் இருக்கும். இப்படி ஒரு கூட்டுக் கலவையாக ஜனரஞ்சகமாக படம் போகும். அப்படித்தான் ‘ராசுக்குட்டி’யும் இருந்தது. பொழுது போனது தெரியவில்லை. பாக்கியராஜைப் போல விசுவின் படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
          
          மதுரை நகரம் எனக்குப் பிடிக்காது என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். இருந்தும், மதுரை ஒரு அதிசயமான ஊர் என்பதை நான் ஒத்துக்கொண்டாக வேண்டும். கடந்த வாரத்தில் ஒரு நாள் என் பேரனுக்காக பொம்மை வாங்க இணையதளத்திலிருந்து ஒன்றிரண்டு பொம்மைக் கடைகளின் விலாசத்தைத் தெரிந்துகொண்டு மதுரை ஊருக்குள் சென்றேன். ‘அப்பப்பா!’ மேல ஆவணி மூல வீதியிலும் அதற்கருகிலும்தான் எவ்வளவு கடைகள். எவ்வளவு சந்துகள். வித விதமாக என்னென்னவோ பொருட்கள் வாங்கலாம். எல்லாவற்றையும் கூட வாங்கலாம் என்று கவரக்கூடிய கடைகள். தீபாவளி வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது. கையை இறுக்கக் கட்டிக்கொண்டு பல ஈர்ப்புகளையும் தாண்டி (நான் தேடிய பொம்மைகள் கிடைக்கவில்லை.) வேறு ஒன்றிரண்டு பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். டில்லியில் அஜ்மல்கான் ரோட்டிலும் சாந்தினி சௌவுக்கிலும் இது போன்ற ஈர்ப்புகளை அனுபவித்திருக்கிறேன்.

                                                                                    … தொடரும்

Sunday, October 16, 2016

16.10.2016: என்னுடைய இந்த வார நாட்குறிப்பு

16.10.16: என்னுடைய இந்த வார நாட்குறிப்பு

மதுரை மாநகரம் – சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு அதிசயமான தூங்கா நகரம். மதுரையிலேயே வசித்துப் பழகி விட்டவர்களுக்கு மற்ற ஊர்கள் பிடிக்காது.

என் மைத்துனர் இரண்டு வாரங்களுக்கு வட இந்தியா சுற்றுலா சென்றதால் வயதான அவர் தாயாரை கவனித்துக் கொள்வதற்காக நானும் என் மனைவியும் இங்கே வர நேர்ந்தது. பொதுவாக இது போன்ற நேரங்களில் என் மாமியாரை எங்கள் ஊரான தென்காசிக்கு கூட்டிக்கொண்டு போய்விடுவோம். அவர்களுக்கும் தென்காசி ஊர் மிகவும் பிடிக்கும். தென்காசி ஊர் யாருக்குத்தான் பிடிக்காது? அதிலும், நாங்கள் வசிக்கும் மேலகரம் அக்ரஹாரம் எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்த இடம். தெரு முனையில் அழகான சிறிய ஒரு பிள்ளையார் கோவில். சுத்தமான தெரு. பொதுவாக எந்நேரமும் காற்று வீசிக்கொண்டிருக்கும். அழகான குற்றாலம் மிக அருகே மூன்று கி.மீ தொலைவில். எந்த தேவையானாலும் அதிக நெரிசல் இல்லாமல் ஒன்றிரண்டு கி.மீ தொலைவுக்குள் கிடைத்துவிடும். காசி விஸ்வநாதரின் அழகான பெரிய கோவில். இப்படி தென்காசியின் அழகைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இன்று நிலைமை வேறு. தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் எல்லா ஏரிகளும், குளங்களும், கிணறுகளும் வற்றிப் போய்விட்டன. ஆண்டவன் புண்ணியத்தில் இன்று வரை எங்கள் வீட்டுக் கிணறு தப்பித்திருக்கிறது. இருந்தும் தண்ணீர் மட்டம் கிணற்றுக்குள் கீழிறக்கப்பட்ட குழாயை சற்றே தொட்டுக் கொண்டிருக்கும் நிலைக்கு வந்து விட்டது. மழை இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் பெய்யாவிட்டால் அதுவும் வற்றிப் போய்விடும். அதனால், இந்த முறை மதுரைக்கே சென்று ஒரு சில நாட்கள் இருந்து பார்ப்போமே என்று தோன்றியது. மேலும்,  நான் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட என் புத்தகங்களை பல பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கு எனக்கும் மதுரைக்கு வர வேண்டியிருந்தது. கடந்த திங்கட் கிழமை சரஸ்வதி பூஜையை முடித்துக்கொண்டு மதியம் தென்காசியிலிருந்து கிளம்பி மதுரைக்கு காரை ஓட்டிக்கொண்டு மாலையில் வந்து சேர்ந்துவிட்டோம். அப்படியாக, இதுதான் முதன் முறையாக தொடர்ந்து ஒரு வாரம் மதுரையில் தங்கியது.

மதுரைக்கு வீடு வரை முரண்டு பண்ணாமல் வந்த என்னுடைய மாருதி 800, வீடு வந்து சேர்ந்தவுடனேயே மக்கர் பண்ணியது. பாட்டரி அவுட். அடுத்த நாள் நல்ல வேளையாக ஏ.பீ. டி மாருதி திறந்திருந்தது. ‘செக்’ பண்ணிப் பார்த்துவிட்டு புது பாட்டரி மாட்டிக்கொண்டேன்.

எனக்கு இரண்டு சக்கர வாகனங்கள் ஓட்டிப் பழக்கமில்லாததால் என்னுடைய குட்டி மாருதி 800-ஐ ஓட்டிக்கொண்டு பல சந்து பொந்துகளுக்குள் நுழைந்து பல பள்ளிகளுக்குச் சென்றேன். மதுரையில் வழிகள் எதுவும் பொதுவாக எனக்குத் தெரியாது. எத்தனையோ முறை இங்கே வந்திருந்தாலும் ரயில் நிலையத்திலிருந்து என் மைத்துனரின் வீட்டுக்கு  நேரே ஆட்டோவில் போய்விட்டு திரும்பி விடுவேன். அதற்கு மேல் வழி தெரியாது. தெரிந்து கொள்ளவும்  நான் விரும்பியதில்லை.

ஏனென்றால், மதுரை நகரம் பொதுவாக எனக்குப் பிடிக்காத நகரம். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். வாகனங்களின் கூட்டம், போக்குவரத்து.  நெரிசல். மூலைக்கு மூலை குப்பை. திறந்த அசுர சாக்கடைகள். ஒரு சில பெரிய பாதைகளைத் தவிர்த்து எல்லாப் பாதைகளின் அலங்கோலம். வாகனங்களின் விதிமுறையற்ற போக்குவரத்து. சுற்றுப்புற சூழல் தூய்மைக் கேடு. மதுரையைப் பற்றி என்னால் இப்படி அடுக்கிக்கொண்டே போக முடியும். எப்பொழுது மதுரை வந்தாலும் அதிக பட்சமாக ஒரு இரவுதான் தங்குவேன். அடுத்த நாள் மதுரையை விட்டு ஓடிவிடுவேன். (மதுரைக்காரர்கள் என் மேல் கோபப்பட வேண்டாம்)

வியாழனன்று என்னுடைய காரை நானே ஓட்டிக்கொண்டு சிவகாசியிலிருக்கும் பள்ளிகளுக்கு சென்று வந்தேன். கிடைத்த நேரத்தில் ஒரு சில பள்ளிகளின் முதல்வர்களையே பார்க்க முடிந்தது. முன் பின் அறிமுகம் இல்லாதவர்கள். நானே என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு என் புத்தங்களைப் பற்றியும் ‘பெர்சனாலிடி டிவலப்மெண்ட்,’ ‘மோட்டிவேஷன்,’ ஆங்கிலத்தில் பேசுவதற்கு பயிற்சி போன்ற என்னுடைய மற்ற வகுப்புகளைப் பற்றியும் எடுத்துக் கூறினேன். பொதுவாக நல்ல வரவேற்பு கிடைத்தது. இரண்டு பள்ளிகளில் என்னுடைய இரண்டு புத்தகங்களை மாதிரிக்காக விலை கொடுத்து வாங்கிக்கொண்டார்கள். படித்துப் பார்த்து மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்குவது பற்றி தீர்மானிப்பதாகக் கூறினார்கள். மதியம் எங்கும் சாப்பிடப் போவதற்கு நேரம் கிடைக்கவில்லை. ஒரு ரஸ்தாளி, மாம்பழ ஜூஸ் அதோடு முடித்துக்கொண்டேன். மாலை மணி 4.15க்கு மேல் எந்தப் பள்ளிக்கும் போக முடியாது என்பதால் கடைசியாக ஒரு பள்ளிக்குச் செல்லும்பொழுது பலமாக மழை பிடித்துக்கொண்டது. மழையை சபிக்கவில்லை. வரவேற்றேன். வேலை நிமித்தமாக மட்டும் வரவில்லையென்றால் வெளியே இறங்கி ஆசை தீர மழையில் நனைய முனைந்திருப்பேன். இந்த மழைக்காகத்தானே மக்கள் இரண்டு மூன்று மாதங்களாக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். மழையில்  நனைந்தவாரே பேருந்து நிலையத்துக்கருகில் பாலாஜி பவன் ஹோட்டலில் பூரிக்கிழங்கும், காஃபியும் குடித்து விட்டு மதுரைக்குக் கிளம்பினேன்.

பைபாஸ் பாதையில் வந்தால் ஊருக்குள்ளேயிருக்கும் டிராஃபிக்கைத் தவிர்க்கலாம் என்று நினைத்து சாத்தூர் பாதையில் காரை திருப்பினேன். மழை கொட்டிக்கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பாதையில் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. எதிரே வரும் லாரி, பஸ் தாராளமாக தண்ணீரை வாரி என் காரின் மேல் தெளித்துக்கொண்டே வேகமாக சென்றன. என்னால் வேகமாக காரை செலுத்த முடியவில்லை. சுமார் 18 கி.மீ தாண்டிய பின், சாத்தூருக்கு அருகே பைபாஸ் பாதை செல்வதற்கான பாதைப் பிரிவு கிடைத்தது. காலையில் மதுரையிலிருந்து சிவகாசிக்கு வரும்பொழுது விருதுநகர் வழியாக வந்தேன். விருதுநகர் வரை நான்கு வழிச் சாலையில் வேகமாகச் செல்ல முடி.ந்தது. ஆனால், விருதுநகரிலிருந்து சிவகாசி வரை பாதை ஒரேயடியாக தூக்கித் தூக்கிப் போட்டது. அவ்வளவு பிரமாதமான பாதை. அதில் செல்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதனாலேயே, கடுமையான மழை பெய்துகொண்டிருந்த இருட்டும் மாலை நேரத்தில் அந்தப் பாதையை தவிர்த்துவிட்டு சற்று தூரம் அதிகமானாலும் பரவாயில்லை என்று நினைத்து பைபாஸ் பாதையை தேர்ந்தெடுத்தேன்.  

நான்கு வழிச்சாலையில் திருமங்கலத்துக்கு பத்து கி.மீ தூரம் முன்னே வரை மழை கொட்டித் தீர்த்தது. வெளிச்சம் கம்மி. இருபது முப்பது அடிக்கு மேலே பாதை தெளிவாகத் தெரியவில்லை. கவனமாக ஓட்டிக்கொண்டு மதுரை வந்து சேர்ந்து விட்டேன். ஆனால், மதுரையில் ஒரு சில நிமிடங்களுக்கு சிறிய தூறலோடு  நின்று விட்டது.

நான்கு வழிப் பாதை வேகமாகச் செல்வதற்கு வசதியாக இருக்கிறது என்பதைத் தவிர மிகவும் ஆபத்தான பாதை என்பது என் கருத்து. மேல் நாடுகளைப் போல இல்லாமல் இங்கே அங்கங்கே குறுக்கே பாதைகள் செல்கின்றன. மெதுவாகச் செல்லும் வண்டிகள் விதியை மீறி ஏனோ வலது பக்கமாகவே செல்கின்றனர். மழை  நேரங்களில் மழைத் தண்ணீரை வெளியேற்றுவதற்கு சரியான ஓடைகள் அமைத்திருப்பதாகத் தெரியவில்லை. எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. போகும் வழியில் எல்லாம் என் காருக்கு மற்ற வாகனங்களிலிருந்து அபிஷேகம்தான். எதிர்த் திசையில் செல்லும் வாகனங்களிலிருந்து வரும் முகப்பு விளக்கு ஒளி நேராக கண்ணைக் கூசுகிறது. யாரும் ‘டிப்பர்’ ‘லோ பீம்’ வெளிச்சத்தை உபயோகிப்பதில்லை. பல இடங்களில் ‘டிவைடர்கள்’ இருப்பதே தெரிவதில்லை. அதனாலேயே இரவு நேரத்தில் வலது பக்கமாக  நான்கு வழிப்பாதையில் செல்வது மிகவும் அபாயகரமானது. மேலும் பாதை வளைந்து செல்லுமிடங்களில் ‘ரிஃப்ளெக்டர்கள்’ வைக்கப்படாததால் வலது பக்கமோ இடது பக்கமோ எந்தப் பக்கத்திலிருந்தும் ஆபத்து வரலாம். பல ஊர்களுக்குச் செல்ல பாதைகள் பிரிவதை ஏன் பெரிய பலகையில் எழுதி வைப்பதில்லை என்று புரியவில்லை. பாலங்கள் வருமிடத்திலெல்லாம் மிகவும் கவனமாக ஓட்ட வேண்டியிருக்கிறது. பாலத்தையும் பாதையையும் இணைக்குமிடம் பொதுவாக சமதளமாக இருப்பதில்லை. அதனால், பாதையிலிருந்து பாலத்தில் ஏறுமிடத்திலும் சரி, இறங்குமிடத்திலும் சரி வேகமாக காரை ஓட்டிச் சென்றால் நம்மைத் தூக்கிப் போடும். இங்கே நான் குறிப்பிட்ட குறைகள் எல்லாப் பாதைகளிலும் இருந்தாலும் நான்கு வழிப் பாதைகளில் குறிப்பாக காணப்படுவது வெட்கக்கேடு. மொத்தத்தில் நல்ல எண்ணத்தோடு இந்த நான்கு வழிப்பாதைகள் அமைக்கப் பட்டாலும் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் பல ஓட்டைகள். எப்பொழுதுதான் நாம் மேல் நாட்டவர்களிடமிருது நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ளப் போகிறோமோ தெரியவில்லை. தேவையில்லாதவற்றை உடனேயே ஏற்றுக்கொண்டு விடுகிறோம்.

மதுரையில் பல பெரிய பள்ளிகளின் முதல்வர்கள் தங்களைச் சுற்றி பெரிய அரணை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எளிதில் அவர்களைப் பார்க்க முடியாது. ஒரு சில இடங்களில் வாசலில் நிற்கும் காவலாளிகளே நமக்குப் பதில் சொல்லி அனுப்பிவிடுகிறார்கள். பள்ளி முதல்வர்களையும் சொல்லிக் குற்றமில்லை. அவர்கள் நிலைமை அப்படி. பல சூழ்னிலைகளையும் பல தரப்பட்ட மக்களையும் அவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஒரு சில பள்ளிகளில் பார்வையாளர்களை சந்திப்பதற்கென்று நேரம் ஒதுக்கியிருக்கிறார்கள். நல்ல விஷயம். ஆனால், அதை அவர்களின் இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தால் பார்க்க வருபவர்களின் நேரமாவது சேமிக்கப் பட்டிருக்கும். இன்று பொதுவாக எல்லோருமே ‘பிசி’யாக இருக்கிறார்கள். மற்றவர்கள் நேரம் வீணாவதைப் பற்றி பொதுவாக நாம் கவலைப் படுவதில்லை. பெரிய பள்ளிகளில் பார்வையாளர்களைச் சந்தித்துப் பேசுவதற்கென்றே தனியாக ஒரு சீனியர் ஆசிரியரை நியமிக்கலாம். தேவைப் பட்டால் மட்டுமே முதல்வரிடம் எடுத்துச் செல்லலாம். அல்லது ஃபோன் செய்தால் வசதி போல நேரம் ஒதுக்கலாம். ஒரு சில பள்ளிகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது. திறந்த மனதுடன் நாம் சொல்ல வருவதைக் கேட்டுக் கொள்கிறார்கள். நமக்கும் நிம்மதியாக இருந்தது. விற்பனை என்று வந்து விட்டால் எதைப் பற்றியும் கவலைப் படாமல் தொடர்ந்து முயன்று கொண்டே இருக்க வேண்டும்.

பொதுத் தேர்வில் மாணாக்கர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதற்காக பல பள்ளிகளில் ஒரு சில தனியார் நிறுவனங்கள்  நடத்தும் தனிப்பட்ட பயிற்சி வகுப்புகள், மாதிரித் தேர்வுகளுக்கான விளம்பர அட்டைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. என்றுதான் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்ற பைத்தியம் தீருமோ தெரியவில்லை. என்ன செய்வது? தமிழ்நாட்டில் பொதுத் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்களை மட்டுமே வைத்து கல்லூரிகளில் நுழைய முடியும் என்ற நிலைமை. கல்லூரிகளில் சேர்வதற்கு தனித் தேர்வுகளை என்றோ ரத்து செய்துவிட்டார்கள். மாணாக்கர்களுக்கும் வேறு வழியில்லை. முட்டி மோதி எப்படியும் மதிப்பெண்கள் வாங்கிவிட வேண்டும். பாடங்கள் புரியாவிட்டாலும் பரவாயில்லை.

வெள்ளிக்கிழமை மதுரை பைபாஸ் பாதையில் மாலை நேரத்தில் காய்கறி சந்தை மிகவும் பிடித்திருந்தது. வாடாத, இளமையான காய்கறிகளைப்  பார்த்தாலே போதும். தேவையோ, தேவையில்லையோ எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு வந்து விடும் கெட்ட பழக்கம் எனக்கு. சாப்பிடும் பொழுது சோறு எவ்வளவு சாப்பிடுவேனோ அந்த அளவு காய்கறிகளும் தட்டில் இருக்க வேண்டும் எனக்கு.

அப்படியாக இந்த வாரம் இனிதே கழிந்தது.

ஒவ்வொரு வாரமும் அந்த வார அனுபவங்களில் முக்கியமானவற்றைப் பற்றி எழுதலாம் என்று ஒரு எண்ணம். பார்க்கலாம். தொடர்ந்து எழுத முடியுமா என்று.


நன்றி. வணக்கம்.