Pages

Sunday, December 18, 2016

18.12.16 இந்த வார நாட்க்குறிப்பு

18.12.16 இந்த வார நாட்க்குறிப்பு

04.12.16-க்குப் பிறகு என்னால் முறையாக என்னுடைய நாட்குறிப்பை எழுத முடியவில்லை. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் உடல் நலக் குறைவு, பின்பு அவரது மரணம், அதைத் தொடர்ந்து தொங்கலில் நின்ற எனது வெளிநாட்டுப் பயணம், நிலைமை சீரான பின்பு சென்னைக்கும் பின்பு அங்கிருந்து அமெரிக்காவுக்கும் பயணம், இப்படி வேகமாக காட்சிகள் மாறிக்கொண்டிருந்தன. இப்பொழுது ஒரு மாதிரியாக வழக்கமான நடைமுறை வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறேன். அதனால் தொடர்ந்து நாட்க்குறிப்பை எழுதலாம் என்று எண்ணம்.

09.12.16 வெள்ளிக் கிழமை
8-ஆம் தேதி இரவு 12.30 மணிக்கெல்லாம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்குச் சென்று விட்டோம். விமான நிலையத்திற்குள் ஒரு முறை சென்று விட்டால் பின்பு வெளியே வர முடியாதாம். ஒரு சிறைக் கைதி போல காலை நான்கு மணி வரை நேரத்தை ஓட்டிக்கொண்டிருந்தோம். உள்ளே ஒரு கப் காஃபியின் விலை ரூபாய் 120க்கும் மேலே.

 9-அன்று சென்னையிலிருந்து லண்டனுக்கும் அங்கிருந்து நான்கு மணி நேரத்துக்குப் பிறகு சிகாகோவுக்கும் எங்களது பயணம் இனிதாகவே இருந்தது. எங்கள் இரண்டு பேருக்கும் ‘ஏசியன் வெஜிடேரியன்’ உணவுக்கு முன் பதிவு செய்திருந்தாலும் என்ன காரணத்தினாலோ லண்டனிலிருந்து சிகாகோ செல்லும் வழியில் ஒருவருக்கு மட்டுமே அந்த உணவு கிடைத்தது. மற்றது சாதாராண வெஜிடேரியன் பாஸ்டா உணவு. சின்னக் குழந்தைகள் சாப்பிடும் அளவே விமானத்தில் சாப்பாடு கிடைக்கிறது. வயிற்றை ரொப்புவதற்கென்று சாக்கலேட், இனிப்பு, ஜூஸ், சலாட், யோகர்ட் என்று பல ஐடங்களை வைத்து விடுகிறார்கள். எல்லாம் ‘ஹை கலோரி’ உணவு.

சென்னையிலிருந்து லண்டன் செல்லும் பொழுது விமான இருக்கையில் சிறிய அளவிலான தொலைக்காட்சி பெட்டி வைத்திருந்ததால் இரண்டு திரைப் படங்கள் பார்க்க முடிந்தது. ஒன்று ‘ஐ. டி’ என்ற பெயரில் பிரபல பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்த ஆங்கிலப் படம். இரண்டாவது அமிதாப் பச்சன் நடித்த TE3N என்ற இந்திப் படம். ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்திலேயே பார்த்துப் பழகிய பியர்ஸ் ப்ராஸ்னனை தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்குப் போராடும் ஒரு சாதாரண குடும்பத் தலைவனாகப் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தது. TE3N படத்தில் அமிதாப் பச்சனின் சிறப்பான நடிப்பை ரசிக்க முடிந்தது. நடிப்பில் இன்றும் அவர் சிகரம்தான் என்பதை படம் தோறும் நிருபிக்கிறார். ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் அவர் நடித்த PINK என்ற படத்தை மிகவும் ரசித்துப் பார்த்தேன். தனது 70-வயதில் பேரக் குழந்தைகள் வயதிலுள்ள பெண் நட்சத்திரங்களுடன் மரத்தைச் சுற்றி டூயட் பாடாமல் தன் நிஜ வயதுக்கேற்ற கதைகளைக் கொண்ட படங்களாகத் தேர்ந்தெடுத்து அமிதாப் நடிப்பதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

10.12.16 சனிக்கிழமை
சிகாகோ வந்து சேர்ந்த அடுத்த நாள் பேரனுடன் விளையாடுவதில் பொழுது கழிந்தது. அன்றிரவு பனிப்பொழிவு (SNOWFALL) தொடங்கி விட்டது. அடுத்த நாள் அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. வெளியே பனி கொட்டியிருந்ததை ரசித்துப் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன். ஒரு சுற்றுலாப் பயணியாக பனிப் பொழிவை பார்ப்பதற்கு ‘த்ரில்லிங்’காகத்தான் இருக்கிறது. அதுவே வாழ்க்கை என்றால் சிரமம்தான்.

11.12.16 ஞாயிற்றுக் கிழமை
அன்று என்னுடைய புதிய பேரனுக்கு பெயர் சூட்டு மற்றும் தொட்டிலிடும் விழா. பல விருந்தினர்கள் வர இருந்தார்கள். வீட்டின் முன் பக்கத்தை சரி செய்து வைத்தால் தான் விருந்தினர்களின் கார்களை நிறுத்த முடியும். காலையிலேயே என் மகன் பனிப்பொழிவை அகற்றுவதற்கு கிளம்பி விட்டான். நானும் என் பங்குக்கு பனிப்பொழிவை அகற்றுவதற்கு கொஞ்சம் உதவி செய்ததாகக் காட்டிக்கொண்டேன்.

சனிக்கிழமை இல்லாத ‘ஜெட்லாக்’ (JETLAG) இன்று மாலை பிடித்துக்கொண்டது. மாலை சுமார் 5.30 மணிக்கு தூங்கப் போய்விட்டேன். எழுந்தது மறு நாள் காலை 04.30 மணிக்கு.

12.12.16 திங்கட் கிழமை
அடுத்த நாள் அதிகாலையில் ஃபீனிக்ஸுக்குக் கிளம்ப வேண்டும் என்பதால் இன்று எங்கள் சாமான்களை மீண்டும் தயார் செய்துகொண்டோம். வீட்டில் எல்லோரும் இருந்ததால் முதல் பேரனுக்குக் கொண்டாட்டம்தான். எல்லோரையும் மாறி மாறி அவனுடன் விளையாட வைத்தான்.

13.12.16 செவ்வாய்க் கிழமை
அன்று காலையில் ‘மிட் வே’ விமான நிலையத்துக்கு 4.00 மணிக்கு சென்றடைந்தோம். லேசாக பனித்தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஃபீனிக்சில் சிகாகோவுக்கு முற்றிலும் மாறுபட்ட பருவ நிலை. காலையிலும் மாலையிலும் மிதமான குளிர். பகல் நேரத்தில் பளிச்சென்று சூரிய வெளிச்சம் கண்ணைக் கூச வைத்தது.

வீட்டிற்கு மிக அருகே இரண்டு அழகான பூங்காக்கள். ஃபீனிக்சில் இந்தப் பூங்காக்கள் தான் எங்களுடைய நெருங்கிய தோழர்கள். தவிர்க்க முடியாத சூழ்னிலைகள் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக எங்கள் வாழ்க்கை அமெரிக்காவில் ஆறு மாதம் இந்தியாவில் ஆறு மாதம் என்று ஓடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் பொழுது நமது நேரத்தை யாரையும் எதிர்பார்க்காமல் நாமே செலவு செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு முக்கியமான தேவை. தினமும் இந்தப் பூங்காக்களைத்தான் சுற்றிச் சுற்றி வருவோம். பொழுதும் போகும். உடலுக்கும் நல்ல பயிற்சி. இல்லையென்றால் வீட்டுக்குள்ளேயே ஏ.சி யில் அடைந்து கிடந்து உடம்பைக் கெடுத்துக்கொள்ள வேண்டியதுதான். இந்தப் பூங்காக்கள் தான் எனக்கு கோவிலும் கூட. அடிக்கடி அங்கே அமர்ந்து தியானம் செய்வதற்கு வசதியாக அமைதியாக இருக்கும். ரம்மியமான சூழ்னிலை எப்பொழுதும் நிலவும்.

எங்களுடைய அமெரிக்க வாழ்க்கையில் முக்கியமான பங்கு இங்குள்ள பொது நூலகங்களைச் சேரும். பொது நூலகத்தில் ஆயிரக்கணக்கில் புத்தகங்களை அடுக்கியிருப்பார்கள். நிறைய நல்ல நூல்களை வாசிப்பதற்கு அமெரிக்கா ஒரு வசதியான நாடு. இங்கேயுள்ள பொது நூலகத்தை நான் முழுவதுமாக பயன்படுத்திக்கொள்வேன். ஃபீனிக்ஸ்  வந்தவுடன் எனக்குப் பிடித்த எழுத்தாளரான ‘ஜெஃப்ரி ஆர்ச்சர்’ சமீபத்தில் எழுதிய புத்தகங்களை வலையில் தேடினேன். ‘COMETH THE HOUR’ புத்தகம் கிடைத்தது. என்னுடைய ஸ்மார்ட் ஃபோனில் பொது நூலகத்தின் இணையதளத்திலிருந்து இந்தப் புத்தகத்தை பதிவிறக்கம் செய்துகொண்டேன்.

14.12.16 புதன் கிழமை
என் மகள் வழிப் பேரன் படிப்பதென்னவோ இரண்டாம் வகுப்புதான். ஆனால், அவனுக்கு கம்ப்யூட்டரில் ‘POWER POINT PRESENTATION’ பண்ணுவதற்கும், சிறிய ப்ரோக்ராம்கள் எழுதுவதற்கும் கூடப் பள்ளியில் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஜியார்ஜ் வாஷிங்கடனைப் பற்றி அவன் உருவாக்கிய ஒரு POWER POINT PRESENTATION’-ஐ மிகவும் ரசித்துப் பார்த்தேன். ஒரு COMPUTER GAMES-க்கு அவன் எழுதிய ஆரம்ப ப்ரோக்ராமைப் பற்றி எனக்கு விவரமாக எடுத்து சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கோ சுத்தமாகப் புரியவில்லை. புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் மிகவும் முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி மாறுவதற்கான தேர்வில் வெற்றி பெறுவதற்காக TESTING MOTHER.COM என்ற இணையதளத்திலிருந்து மாதிரிக் கேள்வித்தாள்களை பதிவிறக்கம் செய்து LOGICAL AND ANALYTICAL REASONING SKILLS TEST-க்குத் தேவையான பயிற்சியை செய்திருக்கிறான். 

இது போன்ற பயிற்சியை தென்காசியில் ஒன்றிரண்டு அரசுப் பள்ளிகளில் எங்கள் செலவிலேயே அறிமுகம் செய்ய நாங்கள் தயாராக இருந்தும் அரசு பள்ளிகளிலிருந்து இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில்லை. எட்டு வகுப்புகள் வரை ‘ஃபெயில்’ என்பதையே அறியாத மாணாக்கர்கள் 9-ஆம் வகுப்பில் தேறியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினால் அவர்களுக்கு பாடங்களைச் சொல்லிக்கொடுத்து தேர்ச்சி பெற வைப்பதிலேயே பல அரசுப் பள்ளிகள் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர்.

அமெரிக்காவில் TALENTED CHILD PROGRAM என்ற பிரிவின் கீழ் பல சிறுவர் சிறுமியர்கள் தங்கள் வயதுக்கு மீறிய பாடங்களைப் படிப்பதற்கு வசதி செய்து கொடுக்கிறார்கள்.

17.12.16 வெள்ளிக் கிழமை
டிசம்பர் மாதம் வந்து விட்டால் போதும். இங்கே பல வீடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அலங்கார மின் விளக்குகளால் வீட்டை அலங்கரித்து விடுவார்கள். பலர் இரவு நேரத்தில் ஒவ்வொரு காலனியாகச் சென்று யார் யார் தங்கள் வீட்டை மிக அழகாக அலங்கரித்திருக்கிறார்கள் என்று ஆராயத் தொடங்கி விடுவார்கள். நாங்களும் அதையேதான் செய்தோம்.

18.12.16 சனிக் கிழமை
சனி மற்றும் ஞாயிறு வந்துவிட்டால் COSTCO, INDIAN STORES, WHOLE FOODS, SPROUTS, FRYS என்று அந்தந்த ஏரியாவுக்கு அருகாமையிலுள்ள கோவில்களுக்குச் செல்வது இங்கே வேடிக்கையான வாடிக்கை. அடுத்த வாரத்துக்குத் தேவையான எல்லா பொருட்களையும் வாங்கிக்கொண்டு வந்து விடுவார்கள்.

COSTCO என்ற பெரிய ஸ்டோரைப் பற்றி கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். சுமார் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஸ்டோர் அமைந்திருக்கும். எல்லா பெரிய நகரங்களிலும் ஒன்று போல அமைந்திருக்கும் இந்த ஸ்டோரில் உள்ளே நுழைந்தால் போதும். எல்லா பொருட்களையும் அள்ளிக்கொண்டு வந்து விடலாம் போலத் தோன்றும். இவர்களின் BUSINESS MODEL எப்படியென்றால் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் 50 அல்லது 100 அமெரிக்க டாலர்கள் சந்தாவாக வாங்கிக் கொள்கிறார்கள். சந்தாதார்கள் தங்கள் உறுப்பினர் அட்டையைக் காட்டினால் மட்டுமே உள்ளே போக முடியும். இங்கே எல்லா பொருட்களும் மற்ற ஸ்டோர்ஸ்களை விட மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். என்ன, எல்லா பொருட்களையும் பெரிய பெரிய பாக்கெட்டுகளிலேயே விற்பனை செய்வார்கள். பொதுவாக எல்லா பொருட்களும் நல்ல தரமாகக் கிடைக்கும். இங்கே வாங்கிய பொருட்களை நமக்கு திருப்தியில்லையென்றால் திருப்பிக் கொடுப்பது  மற்ற கடைகளை விட சுலபம். முன்னொரு சமயம்  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கிய ஒரு வாட்ச் ஓடவில்லை என்று புகார் செய்த போது (எங்கள் கையில் அதை வாங்கிய பில் கூட இல்லாமல்) அப்படியே அந்த வாட்சைத் திருப்பி எடுத்துக்கொண்டு முழுப் பணத்தையும் திருப்பிக் கொடுத்தார்கள். அதற்கு மேலும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அதே ப்ராண்ட் வாட்ச் அதே விலைக்கு மீண்டும் கிடைத்தது.  நான்கு ஆண்டுகளில் விலை ஏறவேயில்லை.

   அமெரிக்கா ஒரு வித்தியாசமான நாடு. இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.
                                                                        … மீண்டும் தொடர்வோம்


No comments:

Post a Comment