சமீபத்தில் இந்தியாவில் அதிக மதிப்புள்ள ரூபாய் தாள்கள்
செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பிற்குப் பிறகு எல்லோரும் வங்கிகளுக்குப் படையெடுத்து
வருகிறோம். தொன்று தொட்டு எந்நேரத்திலும் கையில் பணத்தை வைத்துக்கொண்டுதான் நமது கொடுக்கல்
வாங்கல்களை நடத்தியிருக்கிறோம். கையில் இருக்கும் பணத்தின் சக்தியே வித்தியாசமானது
என்பது உண்மை பல கடைகளில் டெபிட் கார்டு, க்ரெடிட் கார்ட் என்றால்
உடனேயே ‘ஒன்று அல்லது ஒன்றரை சதவிகிதம் சார்ஜ் உண்டு’ என்பார்கள். முக்கியமாக தங்க
நகைக் கடைகளில். ‘பில் போடணும் சார். விற்பனை வரி 10-12 சதவிகிதம் உண்டு’ என்பார்கள்.
(அப்படியே நாம் விற்பனை வரி செலுத்த சம்மதித்தால் கூட உண்மையிலேயே நாம் கொடுக்கும் விற்பனை வரிப் பணம் அரசாங்கத்துப்
போய்ச் சேருமா என்பது எனக்கு எப்பொழுதுமே சந்தேகம். ) அல்லது ‘மெஷின் இருக்கு சார்.
ஆனா, வேலை செய்யறதில்லை’ என்பார்கள். ‘கரண்ட் இல்லை சார், மெஷின் வேலை செய்யாது’ என்பார்கள். எப்படி எப்படியெல்லாம்
கார்டு வாங்கிக்கொள்வதை தவிர்க்க முடியுமோ அதை கண்டிப்பாக (ஒரு சில பெரிய கடைகளைத்
தவிர) முயற்சி செய்வார்கள்.
சரி, காசோலையாக கொடுக்கலாம் என்றால் காசோலை வாங்கிக்கொண்டு
பண்டகப் பரிமாற்றம் என்பது நமது சரித்திரத்திலேயே கிடையாது. காசோலையை ஏற்றுக்கொள்வதில்
பல சந்தேகங்கள்.
பணமாக பெற்றுக்கொண்டால் கடைக்காரருக்குத் தேவையான
அளவு மட்டும் கணக்கில் காட்டிக்கொள்ளலாம். வரி செலுத்துவதை தவிர்க்கலாம்.
பணம் கையில் இருந்தால் பொருள் வாங்குபவர் தைரியமாகப்
பேரம் பேசலாம். நமது கையிருப்பின் மீது முழு
கட்டுப்பாடு நம் கையிலேயே இருக்கும். ரொக்கப் பணத்துக்கு சனி, ஞாயிறு விடுமுறை கிடையாது.
வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதற்கு ‘ஃபோலியோ’ கட்டணம், எஸ்.எம்.எஸ் கட்டணம், ஒரு குறிப்பிட்ட
தடவைக்கு மேல் ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கக் கட்டணம் –இது போன்று கட்டணம் பணத்தை கையில்
வைத்திருப்பதற்கு கிடையாது.
இருக்கிற பணத்தைப் வங்கிகளில் போட்டால் வங்கி திவாலாகி
விடுமோ என்று பயப்படுவது போல கையில் பணத்தை வைத்திருந்தால் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
(திருட்டு பயத்தை வேறு விதத்தில் சமாளித்துக் கொள்ளலாம்) ஒவ்வொரு வங்கியிலும் ‘டெப்பாசிட் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷனி’லிருந்து
டெப்பாசிட் செய்பவரின் பணத்திற்குக் கிடைக்கும் அதிக பட்ச உத்திரவாதம் ஒரு லட்சம் மட்டுமே.
எத்தனை வங்கிகளில் கணக்கு வைப்பது?
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வங்கியிலிருந்து வட்டி
கிடைத்தால் வட்டி கொடுக்கும் நேரத்திலேயே வருமான வரியைப் கழித்துக் கொண்டுவிடுவார்கள்.
அந்த வரியை முறையாக அரசாங்கத்துக்குச் செலுத்தி நமது வருமான வரி நிரந்தரக் கணக்கில்
(PERMANENT ACCOUNT NUMBER WITH THE INCOME TAX DEPARTMENT) சேர்த்து விடுவார்கள் என்பதற்கு
எந்த உத்திரவாதமும் கிடையாது. அதிலும் பல குளறுபடிகள். முன்னெல்லாம் ஆண்டுக்கு ஒரு
முறைதான் TAX DEDUCTED AT SOURCE CERTIFICATE கொடுப்பார்கள். அதில் தவறிருந்தால் சரி
செய்வது பிரம்ம பிரயத்தனம்தான். 26AS என்ற ஒரு ரிப்போர்ட்டில் நமது கணக்கில் எவ்வளவு
வரி பிடித்தம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். ஆனால்,
வரி பிடித்தம் சான்றிதழுக்கும் 26AS ரிப்போர்ட்டுக்குமிடையே வித்தியாசம் இருந்தால்
நமது வரி பிடித்தம் சான்றிதழைப் பற்றி வருமான வரி இலாக்கா கவலைப்படுவதில்லை. 26AS ரிப்போர்ட்டில்
எவ்வளவு தொகை காட்டப்பட்டிருக்கிறதோ அதை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு நமக்கு ரீஃபண்டு
கொடுப்பார்கள் அல்லது கூடுதல் வரி அபராதத்தோடு கட்டச் சொல்வார்கள். எனக்கு இந்த அனுபவம்
ஏற்பட்டிருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய பொதுத்துறை வங்கி என்னுடைய டெப்பாசிட்டிலிருந்து
பிடித்த வரி விவரமும், எனக்கு கொடுத்த வட்டியிலிருந்து வரி பிடித்தம் பற்றிய சான்றிதழும்,
26AS ரிப்போர்ட்டில் காட்டப்பட்டிருக்கும் தொகையும் ஒத்துப் போகவில்லை. அந்த வங்கியின்
சேர்மனுக்கு புகார் கொடுத்தும் அந்த வங்கிக் கிளையால் அவர்களது தவறை சரி செய்யமுடியவில்லை.
விளைவு வருமான வரி இலாக்காவிலிருந்து எனக்கு திரும்ப வர வேண்டிய ‘ரீஃபண்டு’ தொகை இதுவரை
வரவேயில்லை. வெறுத்துப் போய் அந்த வங்கியிலிருந்து என் கணக்கையே முடித்துக் கொண்டேன்.
வங்கிகள் செய்யும் தவறுக்கு நாம் தான் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. (இவ்வளவுக்கும்
நானே ஒரு பொதுத் துறை வங்கியில் உயர் அதிகாரியாக பணி புரிந்திருக்கிறேன்)
ஒரு நடுத்தர மளிகைக் கடைக்காரர் கூட ஒரு நாளைக்கு 20000 ரூபாய்க்கு வியாபாரம் செய்கிறார். ஆண்டிற்கு சுமார் 75 லட்சம். எல்லாம் ரொக்கப் பணமாக. எவ்வளவு வரி கட்டுவார் என்று யோசித்துப் பார்த்தேன். கண்டிப்பாக எதுவும் கட்ட மாட்டார் என்றுதான் தோன்றுகிறது. இப்படி எத்தனை வியாபாரிகள் அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள்? ஆனால் என்னுடை வங்கி டிப்பாசிட்டில் ஒரு பைசாகூட குறைக்காமல் வட்டி கொடுக்கும்பொழுது வரியைப் பிடித்துக்கொள்கிறார்கள். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் வங்கியில் பிராந்திய
மேலாளராக பணி புரிந்துகொண்டிருந்த போது ஒரு பெரிய பணக்கார வியாபாரி தன் வியாபாரத்துக்காக
சுமார் 30 லட்சம் ரூபாய்க்கான வங்கி உத்திரவாதம் (BANK GUARANTEE) பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தார்.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள தன் சொத்துக்களை அடமானம் வைப்பதற்கு தயாராக இருந்தார். அவரது
வருமான வரி சான்றிதழைப் பார்த்த போது எனக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. அவரது ஆண்டு வருமானம்
9000 ரூபாயாகக் காட்டப்பட்டிருந்தது. ஆண்டுக்கு 9000 ரூபாய் வருமானமே உள்ள ஒருவருக்கும்
சொத்து இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக 30 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள வங்கி உத்திரவாதத்துக்கு
எப்படி பரிந்துரைப்பது. அவரது விண்ணப்பத்தை அன்றே நிராகரித்து அவர் கொடுத்த காகிதங்களையெல்லாம்
திருப்பிக் கொடுத்து விட்டேன். இப்படித்தான் பல பெரிய வியாபாரிகள் செயல்பட்டு வந்திருக்கிறார்கள்.
வருமான வரி, விற்பனை வரி, சுங்க வரி, கலால் வரி இவையெல்லாம் கட்டாமல் எப்படி எப்படியெல்லாம்
அரசாங்கத்தை ஏய்க்க முடியுமோ அப்படியெல்லாம் பலர் ஏய்த்து வந்திருக்கிறார்கள். நிலைமை கொஞ்சம் இப்பொழுது மாறியிருந்தாலும் சாதாராண
நடுத்தர அலுவலர்கள் மட்டுமே ஒழுங்காக வரி கட்டி வருகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு
அடிக்கடி வருவதுண்டு.
இணையதளம் மூலமாக வங்கிக் கணக்கை நடத்துவது (ON
LINE BANKING) வசதியாகத் தான் இருக்கிறது. ஆனால், கம்ப்யூட்டர் செயல்பாடு பற்றியும்,
வங்கிகளில் அவ்வப்பொழுது அவர்களது வலைதளத்தில் செய்யும் மாற்றங்களுக்கேற்ப அதைப் புரிந்துகொண்டு
நமது செயல்பாட்டை மாற்றவும் ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். COMPUTER
LITERACY மிக அவசியம். ஆனால் சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் இருக்கும் மக்களால்
வேக வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்களோடு போட்டி போட்டுக்கொண்டு எப்படி தங்களை மாற்றிக்கொள்ள
முடியும் என்பது சந்தேகமே. அதனால் செல்ஃபோன் இயக்கத்தை எப்படி எளிமையாக்கியிருக்கிறார்களோ
அதே போல வங்கிக் கணக்குகளையும் ரொக்கப் பணம் பரிவர்த்தனையில்லாமல் ‘ஆன் லைனி’-ல் பரிவர்த்தனை
செய்யும்படி எளிதாக்க வேண்டும். இது வரை அதற்கு ஒரு வழியுமில்லை. இல்லையென்றால், இன்னும்
குழப்பங்கள் கூடும். கிராமப் புற மக்களுக்கு நிச்சயமாக பல சிரமங்கள் ஏற்படும். இன்றைக்குக்
கூட வங்கி ஏ.டி.எம் மெஷின்களில் பணம் எடுப்பதற்கோ போடுவதற்கோ வேறொருவரின் உதவியில்லாமல்
எதுவும் செய்யமுடியாமல் தவிக்கிற கிராம மக்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம்
ஏ. டி. எம்- வாசலில் பணி புரியும் காவலாளிதான் உதவி புரிந்து வருகிறார். பல பொது மக்கள் அவரை நம்புகிறார்கள். நம்பிக்கை
மற்றும் நாணயம் இன்னும் முழுவதுமாக செத்துவிடவில்லை. இன்றும் கிராமப் புறங்களில் கையெழுத்துப்
போடத் தெரியாமல் கை நாட்டு வைத்து பணம் எடுப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது.
வங்கிகளை மட்டும் நம்பியிருந்தால் நமது நாட்டில் இன்றும் கஷ்டம்தான். அதுவும் ஒரே வங்கியை நம்பியிருந்தால் கஷ்டம் இன்னும் அதிகம். ஒருவருக்கு குறைந்தது இரண்டு வங்கியில் கணக்கு வைத்திருப்பது
நல்லது என்று நினைப்பவர்களுள் நானும் ஒருவன்.
திடீர் திடீரென்று வங்கிகளில் இணையதள வங்கி சேவையில் பல மாற்றங்களைக் கொண்டு வருவார்கள்.
டெபிட் கார்டை மாற்றுவார்கள். ‘பாச் வேர்டை’ மாற்றச் சொல்வார்கள். ONE TIME
PASSWORD என்ற புதிய தலைவலிக்கு உங்கள் செல்ஃபோன் எப்பொழுதும் உங்கள் வசமே இருக்க வேண்டும்.
தப்பித் தவறி வெளி நாடுகளுக்குச் சென்றுவிட்டால் ‘ஆன் லைனில்’ பல வங்கிச் சேவைகளைப்
பயன்படுத்துவதில் தடங்கல்கல் ஏற்படும். இப்படி எத்தனையோ…
இதையெல்லாம் பார்க்கும் பொழுது கையிலே பணமாகவே வைத்துக்கொள்வதே
சிறந்ததோ என்ற ஒரு நினைப்பும் வருகிறது. பின் எப்படித்தான் ஊழலையும் கருப்புப் பணத்தையும்
ஒழிப்பது?
ஏதோ, மனதில் பட்டதைக் கொட்டித் தீர்த்துவிட்டேன்…
No comments:
Post a Comment