Pages

Sunday, December 25, 2016

25.12.16 இந்த வார நாட் குறிப்பு பகுதி 2: என் இளமைக் கால தீவிர ஆசைகள்…

25.12.16 இந்த வார நாட் குறிப்பு
பகுதி 2: என் இளமைக் கால தீவிர ஆசைகள்…

என்னுடைய ஐந்து வயது பேத்தி பல நேரங்களில் எதை எதையோ கற்பனை செய்துகொண்டு என்னென்னவோ பேசுவாள் அல்லது கேட்பாள்…ஆங்கிலத்தில்தான்…அவள் பேசுவதில் பாதி எனக்குப் புரிவதில்லை…அவளது அமெரிக்கன் ஆங்கில உச்சரிப்பு எனக்குப் புரிவதில்லை. தமிழைப் புரிந்துகொள்கிறாள். ஆனால், பேசுவதில்லை. நாம் திருப்பி ஏதேனும் கேட்டால், JUST PRETEND என்று கூறுவாள். ஒரு ஆசிரியை போல, ஒரு பாடகி போல, ஒரு இசையமைப்பாளர் போல, இன்னும் பல கற்பனைகள் அவளுக்கு இந்த வயதிலேயே. அப்படியே நடித்துக் காட்டுகிறாள். ஆம், மனதில் எதையோ கற்பனை செய்துகொண்டு நடிக்கும் பழக்கம் சிறு வயதிலேயே ஆரம்பித்து விடுகிறது.

என்னுடைய  நினைவுகள் என் பழைய காலத்துக்கு ஓடியது. நானும் சிறு வயதில் என்னென்ன கற்பனை செய்திருக்கிறேன். என்னென்ன அடைய வேண்டும் என்று தீவிர ஆசை கொண்டிருக்கிறேன் என்று யோசித்துப் பார்த்தேன்.

நான் வளர்ந்த திருநெல்வேலியில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித் திருவிழா நடக்கும். அந்த சமயம் நகரசபைக்கு எதிரே இருந்த ஒரு திறந்த வெளியில் பொருட்காட்சி நடக்கும். பொருட்காட்சியில் என்னைக் கவர்ந்த ஒரு சில விஷயங்கள் மரணக் கிணறு, ஜி.டி. நாயுடுவின் ஷோ ரூம் (தொலைக்காட்சிப் பெட்டி, விவசாயத்தில் அவரின் புது முயற்சிகள், பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் இப்படி பல அம்சங்கள் இருக்கும்), சினிமாக் கலைஞர்களின் இன்னிசைக் கச்சேரி, சர்கஸ் இப்படி ஒரு சில.

எனக்கு என்றுமே திரையிசையின் மீது பலமான ஈர்ப்பு சிறு வயதிலிருந்தே இருந்திருக்கிறது. கோடை காலங்களில் பல தெரு முனைக் கோவில்களில் கொடை என்ற பெயரில் மழை வேண்டி விழாக்கள் நடக்கும். அந்த விழாக்கள் நடக்கும் சமயம் மாலை நேரங்களில் உள்ளூர் (சில சமயம் வெளியூர்) கலைஞர்களின் திரையிசை இன்னிசைக் கச்சேரி நடக்கும். அவர்கள் பல வித வாத்தியக் கருவிகளுடன் நிகழ்ச்சி நடத்துவதை திறந்த வாய் மூடாமல் பார்த்துக்கொண்டிருப்பேன். மறைந்த எம்.எஸ்.விஸ்வனாதன் – ராமமூர்த்தியின் இசை மீது தீராத காதல் வயப்பட்டிருக்கிறேன். (இன்று வரை அது மாறவில்லை). அவர்களைப் போல் ஒரு திரைப்பட ம்யூசிக் டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். வாத்தியக் கருவிகளை வாங்க வேண்டும் என்று ஆசை. அவைகளை வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. வீட்டிலோ பொருள் வசதி கிடையாது. நானும் எனது இளைய சகோதரனும் நன்றாகப் பாடுவோம். பலர் எங்களை விஸ்வநாதன் – ராமமூர்த்தி என்று கூப்பிட்டிருக்கின்றனர். தரையில் செய்தித் தாளை விரித்துப் போட்டு அதையே ‘பாங்கோஸ்’ என்ற கருவியாகக் கருதி கொட்டுப் போடுவேன். உடைந்த சிலேட்டு பலகையின் மீது சோடா பாட்டில் மூடிகளை ஆணி வைத்து வரிசையாக அடித்து அதையே ‘மொராக்கஸ்’-ஆக பயன்படுத்தி ‘சல், சல்’ என்று ஓசை வருமாறு தட்டுவேன். ஒரு பாதி தேங்காய் மூடியை நன்றாக மழிக்க சிரைத்து அதன் மீது ஒரு சிறிய கட்டையைக் கொண்டு தட்டுவேன். (ரயில்களில் பல பிச்சைக்காரர்கள் இப்படிப் பயன்படுத்துவதை பலர் பார்த்திருக்கலாம்) எங்களுடைய இள வயது நண்பர் – அவரை எஸ்.ஜி.எஸ் என்று சுறுக்கமாகக் கூப்பிடுவோம் – அவரும் எங்கள் இசைக்குழுவில் உறுப்பினர். ஒரு மொட்டை மாடியில் அமர்ந்து எங்களுடைய ‘மினி’ இன்னிசைக் கச்சேரியை நடத்துவோம். அப்பொழுதே திரைப்படங்களில் நான் ஒரு ம்யூசிக் டைரக்டர் ஆகி விட்டது போலவே கற்பனை செய்திருக்கிறேன். ‘அவளுக்கென்ன, அழகிய முகம்’ என்ற பாடல் காட்சியில் – சர்வர் சுந்தரம் என்ற படத்தில் – திரு விஸ்வநாதன் அவர்கள் அந்தப் பாட்டை ரிக்கார்டிங் செய்வது போல ஒரு காட்சி வரும். ‘ஆஹா...இப்படித்தான் ரிக்கார்டிங் நடக்கும் போலிருக்கிறது’ என்று நானும் ஒரு திரைப்படத்துக்கு இசையமைப்பது போல கற்பனை செய்து பார்த்துக்கொள்வேன்.

திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் முதுனிலை பட்டப் படிப்பின் போது ஓரளவு என்னால் பல வாத்தியக் கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. புல் புல் தாரா, ஹார்மோனியம், தபலா, பாங்கோஸ், இவைகளை எந்த ஆசிரியர் உதவியின்றி நானாகவே நன்றாக வாசிக்கக் கற்றுக்கொண்டேன். ஹாஸ்டலின் ஆண்டு விழாவின் போது நானாகவே டியூன் செய்த ஒரு இசைத் துண்டை புல் புல் தாராவில் ‘டைட்டில்’ இசையாக வாசித்துக் காட்டினேன். என்னுடன் என் ஹாஸ்டல் நண்பராகவும் எனக்குக் வழிகாட்டி குருவாகவும் இருந்த திரு.ஜெயக்குமாருக்கு நன்றி.

ஆனால், என்னுடைய இந்த ஆசை என் வாழ்வில் நிறைவேறவேயில்லை. நிறைவேற்றிக்கொள்ள நானும் தீவிர முயற்சிகள் எதுவும் எடுக்கவில்லை. வாழ்க்கைச் சுழலில் பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே என்னுடைய ஆசையை என்னுள்ளேயே புதைத்துக்கொண்டேன்.

சிறு வயதில் சர்கஸ் பல பார்த்ததில் எனக்குப் பிடித்த ‘ட்ரபீசியம்’ – உயரத்தில் நான்கு புறமும் தொங்கவிடப்பட்ட கம்பிகளிலிருந்து ஆண்களும், இளம் பெண்களும் – பல சமயம், கீழே வலை கூட கட்டாமல் – ஆடுவதை பிரமித்துப் பார்த்திருக்கிறேன். வளர்ந்து வந்த சிறு பிராயத்தில் ஏற்பட்ட ஒரு சில அனுபவங்கள் எனக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பையும், கோபத்தையும் உண்டாக்கியிருக்கின்றன. ஒரு சில நேரங்களில், வீட்டை விட்டு ஓடிப் போய் ஏதேனும் ஒரு சர்க்கசில் சேர்ந்து ‘பார்’ விளையாட்டு வீரனாகிவிடலாம் என்று தோன்றியிருக்கிறது. அது போன்ற ஆசை அடிக்கடி என் மனதில் உதித்து என்னை வாட்டியிருக்கிறது. நல்ல காலமாக, அப்படியெதுவும் எனக்கு நடக்கவில்லை. சர்க்கசில் சேரும் ஆசை மனதளிவிலேயே புதைந்து விட்டது. அந்த ஆசை தீவிரமாக என்னை உலுக்கியதென்னவோ உண்மைதான்.

கொஞ்சம் அறிவு வந்த பிறகு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த  காலத்தில் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்று தீவிர ஆசை என்னை பிடித்துக்கொண்டது. அதற்கு நான் தகுதியுடையவனா என்பதைப் பற்றியெல்லாம் நான் யோசித்ததில்லை. என்னுடைய ஒரே தகுதி கடுமையாக உழைப்பதற்கு நான் தயாராக இருந்தேன் என்ற ஒன்று மட்டுமே. முதுனிலை பட்டப் படிப்பின் போது திருச்சி, செயின்ட் ஜோஸஃப் கல்லூரியில் என்னுடைய வேதியியல் பிரிவின் தலைவராக இருந்த மதிப்புக்குரிய பாதிரியார் காஸ்மீர் அவர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். பொருளாதார வசதியில்லாமல் எனது படிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்த அந்த நாட்களில் அவரது ஆதரவில்லாமல் நான் என் படிப்பை முடித்திருக்க முடியாது. எனது தேர்வுகள் நெருங்கும்  நேரத்தில் ஒரு பொதுத் துறை வங்கியில் ஆஃபீசராகச் சேருவதற்கு  நான் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த நேரத்தில் மதிப்புக்குரிய பாதிரியார் காஸ்மீர் அவர்கள் என்னிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். இந்தியன் இன்ஸ்டிட்யூட்  ஆஃப் சயன்ஸில் என்னுடைய ஆராய்ச்சிப் படிப்புக்கும் அது முடித்தவுடன் ஃப்ரான்சில் அவர் படித்த பல்கலையில் அதற்கும் மேல் படிப்பதற்கும் முழு பொருளாதார ஆதரவைத் தருவதாக எனக்கு வாக்குறுதி கொடுத்தார். வேதியியல் படித்து விட்டு வங்கியில் போய் ஏன் என்னுடைய  நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று எவ்வளவோ வாதிட்டார். இருந்தும் குடும்ப சூழ்னிலை காரணமாக அவரது வார்த்தைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத நிலையை அவருக்கு எடுத்துக் கூறினேன். இறுதியில் என்னுடைய முதுனிலை படிப்பின் தேர்வுகளை முடித்துவிட்டு வங்கியிலேயே சேர்ந்து விட்டேன். விஞ்ஞானியாகும் என்னுடைய கனவையும் என்னுள்ளேயே புதைத்துக்கொண்டேன். அதே போல, அந்த வங்கியின் முதல்வராக வர வேண்டும் என்று ஆரம்ப நாட்களிலிருந்து தோன்றிய ஆசையை நாளாவட்டத்தில் என்னுள்ளேயே புதைத்து விட்டு ஒரு சமயத்தில் அந்த வங்கியை விட்டே வெளியேறிவிட்டேன்.

இசை மீது நாட்டம் இருந்தது போல கதை, கவிதை, கட்டுரை, நாடகம்,  எழுதுவதிலும் எனக்கு நல்ல ஈடுபாடு இருந்தது. உணர்ச்சிகளால் கட்டுப்பட்ட, விரைவில் உணர்ச்சி வசப்படக்கூடிய எனக்கு இயல்பாகவே எழுத முடிந்தது. பெரிய எழுத்தாளனாக வர வேண்டும் என்று குறிப்பாக ஆசையிருந்ததில்லை என்றாலும் எழுத வேண்டும் என்ற ஆசை மட்டும் நிலைத்து நின்றது. ஆனால் நான் வேலையிலிருந்து ஓய்வு பெறும் வரை அதற்கு நேரம் தான்  வரவில்லை.

ஸ்ரீஅம்மா பகவானின் தீவிர பக்தனாக இருந்த காலங்களில் (1998-2009 வரை) சுமார் 16 பாட்டுக்கள் எழுதி, நானே அதற்கு இசையமைத்து, பாடி, தபலா வாசித்து, ரிக்கார்ட் செய்து வைத்திருக்கிறேன். வாரா வாரம் நடந்த ‘சத் சங்கங்களில்’ என்னுடைய பாட்டுக்களையே பொதுவாகப் பாடுவேன். நான் இசையமைத்த பாடல்களில் மூன்று ஹிந்தி மொழியில் அமைந்தவை. (எனக்கு அவ்வளவாக ஹிந்தி தெரியாது என்பது இங்கே முக்கியமானது)

2006-க்குப் பிறகு தீவிரமாக எழுதத் தொடங்கினேன். முதலில் என்னுடை ‘ப்ளாக்’-கிலும் (வலை) பிறகு தனியாக புத்தகங்களாகவும் எழுதத் தொடங்கினேன். எல்லாம் வல்ல அந்த இறைவன் அருளால் இன்று வரை மூன்று சிறு கதைப் புத்தகங்களையும், மூன்று முழு நீளக் கதைப் புத்தகங்களையும், ஒரு பொது அறிவுப் புத்தகத்தையும் எழுதி நானே சொந்த வெளியீடாக வெளியிட்டிருக்கிறேன். என்னுடைய மூன்று சிறு கதை தொகுப்புகளையும் எங்கள் ஊருக்கு அருகிலுள்ள மூன்று பள்ளிகளில் ‘non-detailed book’ –க்காகப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பதில் எனக்குப் பெருமைதான்.

இரண்டு முக்கியமான விஷயங்கள்.

முதலாவது, என்னுடைய ஆசைகள் நிறைவேறவில்லையே என்று நான் என்றும் வருத்தப்பட்டு கொண்டதில்லை. ஆசைப்பட்டது நிறைவறவில்லையென்றால் கிடைத்ததைக் கொண்டு மகிழ்ந்துகொள்ளும் குணம் எனக்கு இயல்பாகவே அமைந்திருந்தது என்று  நம்புகிறேன். கிடைத்ததை விரும்பி ஏற்றுக்கொண்டதால் சறிவு என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் என் வாழ்க்கையில் நடந்ததாக நான் கருதவில்லை.

இரண்டாவது, ஒவ்வொருவருக்கும் ‘ஸ்வதர்மம்’ மற்றும் ‘ஸ்வபாவம்’ என்றிருக்கிறது என்பதை பின்னால் ஸ்ரீஅம்மா பகவானுடன் கழித்த நாட்களில் கற்றுக்கொண்டிருக்கிறேன். ஆண்டவனாகப் பார்த்து எனக்கு எது ‘ஸ்வதர்மமோ’ அந்த மாதிரியுள்ள செயல்களிலேயே என் வாழ்க்கை கழிந்திருக்கிறது. அவை என் ஸ்வபாவத்துக்கும் ஏற்றதாக அமைந்திருக்கின்றன. ‘ஸ்வதர்மாவுக்கு’ ஏற்காத செயல்களில் ஈடுபடும் பொழுதுதான் அவை வெற்றியடைய மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். பல நேரங்களில் அந்த செயல்கள் நமக்கு ஒத்து வராது. நமது ஸ்வதர்மா எது என்பதை நாம் கண்டுகொண்டு செயல்பட்டால் குறைந்த தடங்கல்களுடன் வெற்றியடையலாம் என்பது நான் கற்றுக்கொண்ட பாடம்.


இன்னும் எவ்வளவோ எழுதலாம்தான்…

25.12.16 இந்த வார நாட் குறிப்பு - பகுதி 1

25.12.16 இந்த வார நாட் குறிப்பு
பகுதி 1

அமெரிக்காவில் செலவிடும் நாட்களில் எனக்கென்று தனியாக ஒரு வெளி உலக வாழ்க்கை கிடையாது. அதனால், தினப்படியான தனிப்பட்ட வெளி உலக அனுபவமும் குறைவு. குழந்தைகளுடனும் பேரக் குழந்தைகளுடனும் செலவிடும் ஒரு சில மணி நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் தனிமைதான் நமது வாழ்க்கை. இங்கே வருவதென்றால் இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைக்கு நம்மை தயார் செய்துகொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால், வயதான பிறகு குழந்தைகளுடன் கொஞ்ச காலத்தை செலவிட அமெரிக்காவுக்கு அடிக்கடி வரும் என்னைப் போன்றவர்களுக்கு அமெரிக்க வாழ்க்கை நரகமாகிவிடும்.

பொதுவாக, குழந்தைகள் கூட்டிக்கொண்டு போகாமல் நம்மால் தனியாக வெளியே எங்கும் போக முடியாது. அதே போல குழந்தைகளின் நண்பர்கள்தான் நமக்கும் இங்கு நண்பர்கள். பொதுவாக சந்திக்கும் நேரங்களில் மிகவும் மரியாதையாகவே நம்மை நடத்துகிறார்கள். இருந்தும் என்ன காரணத்தினாலோ அவர்களுடன் நெருங்கிப் பழக முடிவதில்லை. அவர்களும் நம்மிடம் ரொம்ப நெருங்குவதில்லை. தனிமைதான் நமது முக்கிய நண்பர்.

என்னிடம் அமெரிக்க வாகன ஓட்டுனர் உரிமம் இருந்ததால் கடந்த வாரம் நானே என் மகளின் காரை ஓட்டிக்கொண்டு போய் பொது நூலகத்தில் நூலக உறுப்பினர் அட்டை பெற்றுக்கொண்டேன். புத்தகங்கள்தான் இங்கே வரும் நேரங்களில் என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள். மற்றபடி பொழுது போக்குவதற்கு NETFLIX, AMAZON PRIME VIDEO, ONLINE LIBRARY AP, இப்படி எல்லாம் ரெடி பண்ணிக்கொண்டு விட்டேன். இதற்கு முன்னால் வந்த நேரத்தில் BREAKING BAD, 24, HOUSE OF CARDS போன்ற தொலைக் காட்சித் தொடர்களை ரசித்துப் பார்த்திருக்கிறேன்.

என்னுடைய ஓய்வு நேரத்தை பொழுது போக்கிலேயே செலவிடுவதில் எனக்கு நம்பிக்கையில்லை. நமது வாழ்க்கை ஏதோ ஒரு விதத்தில் ஆக்கவளமுடையதாக இருக்க வேண்டும் என்று நம்புபவன் நான். புகார்கள் சொல்லாமல், உருப்படியாக எனது நேரத்தை செலவிடுவதற்காக இந்தியாவிலிருந்து பல ஸ்லோகப் புத்தகங்கள், ஒரு சில ரெஃப்ரென்ஸ் புத்தகங்கள் கொண்டு வந்திருக்கிறேன். இந்த முறையும் வழக்கம் போல ஒரு சில செயல் திட்டங்களுடன் தான் வந்திருக்கிறேன்.

  1.    துப்பறியும் சங்கர் என்ற தலைப்பில் ஐந்து நீண்ட சிறு கதைகள் அடங்கிய புத்தகம் எழுத வேண்டும். சங்கர் ஒரு பள்ளி மாணவன். இளம் துப்பறிஞர். சேகர், சுதா இவரது இணை பிரியா நண்பர்கள். இந்த மூவர் அணி பல சின்னச் சின்ன குற்றங்களை துப்பறிந்து கண்டு பிடித்திருக்கிறது. இந்தப் புத்தகத்தின் முதல் கதையைத் தொடங்கி விட்டேன். பாதிக்கு மேல் கதையை எப்படி எடுத்துச் செல்வது என்று தெரியாமல் நிறுத்தி வைத்திருக்கிறேன். துப்பறியும் கதைகளை எழுதுவதற்கு குறுக்கு வழிகளில் யோசிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பதை இப்பொழுது உணர்கிறேன். ஃபேஸ்புக்கில் நண்பர்களிடம் ஐடியா கேட்கலாம் என்று நினைக்கிறேன். (எழுத்தாளர் சுஜாதா முன்னொரு சமயம் ஒவ்வொரு வாரமும் வாசகர்கள் கருத்தைக் கேட்டு ஒரு தொடர் கதையை எழுதியிருக்கிறார் என்று ஞாபகம்.) (என்னுடைய முதல் ஆங்கில சிறு கதைகள் அடங்கிய புத்தகத்தில் இதே சங்கர் பாத்திரத்தைக் கொண்டு ஒரு சிறு கதை எழுதியிருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதனால்தான் அது போன்று தமிழிலும் எழுதலாம் என்று நினைத்தேன்.)
  2.    ஆங்கிலத்தில் LONELY என்ற ஒரு முழு நீளக் கதைப் புத்தகத்தை ஏற்கெனவே எழுதி வெளியிட்டிருக்கிறேன். அதனுடைய தொடர்ச்சியாக LONELY 2 என்ற இன்னொரு முழு நீளக் கதையை எழுதலாம் என்று எண்ணம். கதைக்கான கரு தயாராகிவிட்டது.
   3.    மாணவர்களுக்காக கடந்த ஆண்டு I WANT TO KNOW ABOUT…INDIA, ITS STATES, AND THE IMPORTANT CITIES” என்ற தலைப்பில் ஒரு பொது அறிவு புத்தகத்தை E-BOOK-ஆக வெளியிட்டிருந்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அந்தப் புத்தகத்தையொட்டி ஜூலை 2016-ல் ஒரு வினாடி-வினா போட்டியும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிடையே வெற்றிகரமாக நடத்தியிருக்கிறேன். அதே போல இன்னொரு பொது அறிவுப் புத்தகம் எழுதலாம் என்று எண்ணம். எதைப் பற்றி என்று இன்னும் தீர்மானமாகவில்லை.
    4.    கர்னாடக சங்கீதத்தை எனக்கு ரசிக்கத்தான் தெரியுமே தவிர அதைப் பற்றி அதிகமாக ஒன்றும் தெரியாது. பல பாட்டுக்களைக் கேட்டுக் கேட்டு என்ன ராகத்தில் அவை அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொண்டிருக்கிறேன். இந்த முறை ஒரு சில ராகங்களைத் தேர்ந்தெடுத்து அந்த ராகத்தில் அமைந்த பல பாடல்களை உன்னிப்பாகக் கேட்டு ராகங்களைப் பற்றிய அறிவை இன்னும் கொஞ்சம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு தீர்மானமும் வைத்திருக்கிறேன்.
  5.    ஏற்கெனவே எனக்குத் தெரிந்த சமஸ்க்ருதம் மொழியை இன்னும் கொஞ்சம் நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு சில புத்தகங்களை இந்தியாவிலிருந்து கொண்டு வந்திருக்கிறேன்.
  6.    இந்தியாவில் இருக்கும் பொழுது எவ்வளவு முயன்றும் யோகா பயிற்சியை தினமும் செய்ய முடியவில்லை. டயபடிக் என்பதால் எப்படியும் தினமும் நடப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அதில் சமரசம் செய்வதில்லை. அமெரிக்கா வந்த இந்த முறையாவது யோகாவை தினமும் செய்ய வேண்டும் என்றும் ஒரு தீர்மானம்.

ஒவ்வொரு முறையும் இப்படி ஒரு செயல் திட்டத்துடன் தான் நான் அமெரிக்க வருகிறேன். ஒரு சில செயல் திட்டங்களை செயல்படுத்த முடிகிறது. ஒரு சில முடிவதில்லை.   நிறைவேறிய குறிக்கோளைப் பற்றி மகிழ்ச்சி. நிறைவேறாமல் விட்டுப்போனவைகளைப் பற்றி மன வருத்தம் கிடையாது. எதிர்மறையான அபிப்பிராயங்களை சுமந்துகொண்டு வாழ்க்கையை நான் நடத்த விரும்பவில்லை. எது வாழ்க்கையில் நடக்கிறதோ அதை விரும்பி ஏற்றுக்கொண்டு அதையே எனக்கு சாதகமாக்கிக்கொள்வது தான் என்னுடைய நெடு நாளைய பழக்கம். வாழ்க்கை எனக்கு நிறையக் கற்றுக்கொடுத்திருக்கிறது.

பார்க்கலாம், இந்த முறை எது எதை என்னால் நிறைவேற்ற முடிகிறது என்று.

*****

Sunday, December 18, 2016

18.12.16 இந்த வார நாட்க்குறிப்பு

18.12.16 இந்த வார நாட்க்குறிப்பு

04.12.16-க்குப் பிறகு என்னால் முறையாக என்னுடைய நாட்குறிப்பை எழுத முடியவில்லை. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் உடல் நலக் குறைவு, பின்பு அவரது மரணம், அதைத் தொடர்ந்து தொங்கலில் நின்ற எனது வெளிநாட்டுப் பயணம், நிலைமை சீரான பின்பு சென்னைக்கும் பின்பு அங்கிருந்து அமெரிக்காவுக்கும் பயணம், இப்படி வேகமாக காட்சிகள் மாறிக்கொண்டிருந்தன. இப்பொழுது ஒரு மாதிரியாக வழக்கமான நடைமுறை வாழ்க்கைக்குத் திரும்பியிருக்கிறேன். அதனால் தொடர்ந்து நாட்க்குறிப்பை எழுதலாம் என்று எண்ணம்.

09.12.16 வெள்ளிக் கிழமை
8-ஆம் தேதி இரவு 12.30 மணிக்கெல்லாம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்குச் சென்று விட்டோம். விமான நிலையத்திற்குள் ஒரு முறை சென்று விட்டால் பின்பு வெளியே வர முடியாதாம். ஒரு சிறைக் கைதி போல காலை நான்கு மணி வரை நேரத்தை ஓட்டிக்கொண்டிருந்தோம். உள்ளே ஒரு கப் காஃபியின் விலை ரூபாய் 120க்கும் மேலே.

 9-அன்று சென்னையிலிருந்து லண்டனுக்கும் அங்கிருந்து நான்கு மணி நேரத்துக்குப் பிறகு சிகாகோவுக்கும் எங்களது பயணம் இனிதாகவே இருந்தது. எங்கள் இரண்டு பேருக்கும் ‘ஏசியன் வெஜிடேரியன்’ உணவுக்கு முன் பதிவு செய்திருந்தாலும் என்ன காரணத்தினாலோ லண்டனிலிருந்து சிகாகோ செல்லும் வழியில் ஒருவருக்கு மட்டுமே அந்த உணவு கிடைத்தது. மற்றது சாதாராண வெஜிடேரியன் பாஸ்டா உணவு. சின்னக் குழந்தைகள் சாப்பிடும் அளவே விமானத்தில் சாப்பாடு கிடைக்கிறது. வயிற்றை ரொப்புவதற்கென்று சாக்கலேட், இனிப்பு, ஜூஸ், சலாட், யோகர்ட் என்று பல ஐடங்களை வைத்து விடுகிறார்கள். எல்லாம் ‘ஹை கலோரி’ உணவு.

சென்னையிலிருந்து லண்டன் செல்லும் பொழுது விமான இருக்கையில் சிறிய அளவிலான தொலைக்காட்சி பெட்டி வைத்திருந்ததால் இரண்டு திரைப் படங்கள் பார்க்க முடிந்தது. ஒன்று ‘ஐ. டி’ என்ற பெயரில் பிரபல பியர்ஸ் ப்ராஸ்னன் நடித்த ஆங்கிலப் படம். இரண்டாவது அமிதாப் பச்சன் நடித்த TE3N என்ற இந்திப் படம். ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்திலேயே பார்த்துப் பழகிய பியர்ஸ் ப்ராஸ்னனை தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்குப் போராடும் ஒரு சாதாரண குடும்பத் தலைவனாகப் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தது. TE3N படத்தில் அமிதாப் பச்சனின் சிறப்பான நடிப்பை ரசிக்க முடிந்தது. நடிப்பில் இன்றும் அவர் சிகரம்தான் என்பதை படம் தோறும் நிருபிக்கிறார். ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் அவர் நடித்த PINK என்ற படத்தை மிகவும் ரசித்துப் பார்த்தேன். தனது 70-வயதில் பேரக் குழந்தைகள் வயதிலுள்ள பெண் நட்சத்திரங்களுடன் மரத்தைச் சுற்றி டூயட் பாடாமல் தன் நிஜ வயதுக்கேற்ற கதைகளைக் கொண்ட படங்களாகத் தேர்ந்தெடுத்து அமிதாப் நடிப்பதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

10.12.16 சனிக்கிழமை
சிகாகோ வந்து சேர்ந்த அடுத்த நாள் பேரனுடன் விளையாடுவதில் பொழுது கழிந்தது. அன்றிரவு பனிப்பொழிவு (SNOWFALL) தொடங்கி விட்டது. அடுத்த நாள் அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. வெளியே பனி கொட்டியிருந்ததை ரசித்துப் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன். ஒரு சுற்றுலாப் பயணியாக பனிப் பொழிவை பார்ப்பதற்கு ‘த்ரில்லிங்’காகத்தான் இருக்கிறது. அதுவே வாழ்க்கை என்றால் சிரமம்தான்.

11.12.16 ஞாயிற்றுக் கிழமை
அன்று என்னுடைய புதிய பேரனுக்கு பெயர் சூட்டு மற்றும் தொட்டிலிடும் விழா. பல விருந்தினர்கள் வர இருந்தார்கள். வீட்டின் முன் பக்கத்தை சரி செய்து வைத்தால் தான் விருந்தினர்களின் கார்களை நிறுத்த முடியும். காலையிலேயே என் மகன் பனிப்பொழிவை அகற்றுவதற்கு கிளம்பி விட்டான். நானும் என் பங்குக்கு பனிப்பொழிவை அகற்றுவதற்கு கொஞ்சம் உதவி செய்ததாகக் காட்டிக்கொண்டேன்.

சனிக்கிழமை இல்லாத ‘ஜெட்லாக்’ (JETLAG) இன்று மாலை பிடித்துக்கொண்டது. மாலை சுமார் 5.30 மணிக்கு தூங்கப் போய்விட்டேன். எழுந்தது மறு நாள் காலை 04.30 மணிக்கு.

12.12.16 திங்கட் கிழமை
அடுத்த நாள் அதிகாலையில் ஃபீனிக்ஸுக்குக் கிளம்ப வேண்டும் என்பதால் இன்று எங்கள் சாமான்களை மீண்டும் தயார் செய்துகொண்டோம். வீட்டில் எல்லோரும் இருந்ததால் முதல் பேரனுக்குக் கொண்டாட்டம்தான். எல்லோரையும் மாறி மாறி அவனுடன் விளையாட வைத்தான்.

13.12.16 செவ்வாய்க் கிழமை
அன்று காலையில் ‘மிட் வே’ விமான நிலையத்துக்கு 4.00 மணிக்கு சென்றடைந்தோம். லேசாக பனித்தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஃபீனிக்சில் சிகாகோவுக்கு முற்றிலும் மாறுபட்ட பருவ நிலை. காலையிலும் மாலையிலும் மிதமான குளிர். பகல் நேரத்தில் பளிச்சென்று சூரிய வெளிச்சம் கண்ணைக் கூச வைத்தது.

வீட்டிற்கு மிக அருகே இரண்டு அழகான பூங்காக்கள். ஃபீனிக்சில் இந்தப் பூங்காக்கள் தான் எங்களுடைய நெருங்கிய தோழர்கள். தவிர்க்க முடியாத சூழ்னிலைகள் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக எங்கள் வாழ்க்கை அமெரிக்காவில் ஆறு மாதம் இந்தியாவில் ஆறு மாதம் என்று ஓடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் பொழுது நமது நேரத்தை யாரையும் எதிர்பார்க்காமல் நாமே செலவு செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு முக்கியமான தேவை. தினமும் இந்தப் பூங்காக்களைத்தான் சுற்றிச் சுற்றி வருவோம். பொழுதும் போகும். உடலுக்கும் நல்ல பயிற்சி. இல்லையென்றால் வீட்டுக்குள்ளேயே ஏ.சி யில் அடைந்து கிடந்து உடம்பைக் கெடுத்துக்கொள்ள வேண்டியதுதான். இந்தப் பூங்காக்கள் தான் எனக்கு கோவிலும் கூட. அடிக்கடி அங்கே அமர்ந்து தியானம் செய்வதற்கு வசதியாக அமைதியாக இருக்கும். ரம்மியமான சூழ்னிலை எப்பொழுதும் நிலவும்.

எங்களுடைய அமெரிக்க வாழ்க்கையில் முக்கியமான பங்கு இங்குள்ள பொது நூலகங்களைச் சேரும். பொது நூலகத்தில் ஆயிரக்கணக்கில் புத்தகங்களை அடுக்கியிருப்பார்கள். நிறைய நல்ல நூல்களை வாசிப்பதற்கு அமெரிக்கா ஒரு வசதியான நாடு. இங்கேயுள்ள பொது நூலகத்தை நான் முழுவதுமாக பயன்படுத்திக்கொள்வேன். ஃபீனிக்ஸ்  வந்தவுடன் எனக்குப் பிடித்த எழுத்தாளரான ‘ஜெஃப்ரி ஆர்ச்சர்’ சமீபத்தில் எழுதிய புத்தகங்களை வலையில் தேடினேன். ‘COMETH THE HOUR’ புத்தகம் கிடைத்தது. என்னுடைய ஸ்மார்ட் ஃபோனில் பொது நூலகத்தின் இணையதளத்திலிருந்து இந்தப் புத்தகத்தை பதிவிறக்கம் செய்துகொண்டேன்.

14.12.16 புதன் கிழமை
என் மகள் வழிப் பேரன் படிப்பதென்னவோ இரண்டாம் வகுப்புதான். ஆனால், அவனுக்கு கம்ப்யூட்டரில் ‘POWER POINT PRESENTATION’ பண்ணுவதற்கும், சிறிய ப்ரோக்ராம்கள் எழுதுவதற்கும் கூடப் பள்ளியில் சொல்லிக் கொடுக்கிறார்கள். ஜியார்ஜ் வாஷிங்கடனைப் பற்றி அவன் உருவாக்கிய ஒரு POWER POINT PRESENTATION’-ஐ மிகவும் ரசித்துப் பார்த்தேன். ஒரு COMPUTER GAMES-க்கு அவன் எழுதிய ஆரம்ப ப்ரோக்ராமைப் பற்றி எனக்கு விவரமாக எடுத்து சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கோ சுத்தமாகப் புரியவில்லை. புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் மிகவும் முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இந்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி மாறுவதற்கான தேர்வில் வெற்றி பெறுவதற்காக TESTING MOTHER.COM என்ற இணையதளத்திலிருந்து மாதிரிக் கேள்வித்தாள்களை பதிவிறக்கம் செய்து LOGICAL AND ANALYTICAL REASONING SKILLS TEST-க்குத் தேவையான பயிற்சியை செய்திருக்கிறான். 

இது போன்ற பயிற்சியை தென்காசியில் ஒன்றிரண்டு அரசுப் பள்ளிகளில் எங்கள் செலவிலேயே அறிமுகம் செய்ய நாங்கள் தயாராக இருந்தும் அரசு பள்ளிகளிலிருந்து இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில்லை. எட்டு வகுப்புகள் வரை ‘ஃபெயில்’ என்பதையே அறியாத மாணாக்கர்கள் 9-ஆம் வகுப்பில் தேறியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினால் அவர்களுக்கு பாடங்களைச் சொல்லிக்கொடுத்து தேர்ச்சி பெற வைப்பதிலேயே பல அரசுப் பள்ளிகள் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர்.

அமெரிக்காவில் TALENTED CHILD PROGRAM என்ற பிரிவின் கீழ் பல சிறுவர் சிறுமியர்கள் தங்கள் வயதுக்கு மீறிய பாடங்களைப் படிப்பதற்கு வசதி செய்து கொடுக்கிறார்கள்.

17.12.16 வெள்ளிக் கிழமை
டிசம்பர் மாதம் வந்து விட்டால் போதும். இங்கே பல வீடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அலங்கார மின் விளக்குகளால் வீட்டை அலங்கரித்து விடுவார்கள். பலர் இரவு நேரத்தில் ஒவ்வொரு காலனியாகச் சென்று யார் யார் தங்கள் வீட்டை மிக அழகாக அலங்கரித்திருக்கிறார்கள் என்று ஆராயத் தொடங்கி விடுவார்கள். நாங்களும் அதையேதான் செய்தோம்.

18.12.16 சனிக் கிழமை
சனி மற்றும் ஞாயிறு வந்துவிட்டால் COSTCO, INDIAN STORES, WHOLE FOODS, SPROUTS, FRYS என்று அந்தந்த ஏரியாவுக்கு அருகாமையிலுள்ள கோவில்களுக்குச் செல்வது இங்கே வேடிக்கையான வாடிக்கை. அடுத்த வாரத்துக்குத் தேவையான எல்லா பொருட்களையும் வாங்கிக்கொண்டு வந்து விடுவார்கள்.

COSTCO என்ற பெரிய ஸ்டோரைப் பற்றி கண்டிப்பாகச் சொல்ல வேண்டும். சுமார் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் இந்த ஸ்டோர் அமைந்திருக்கும். எல்லா பெரிய நகரங்களிலும் ஒன்று போல அமைந்திருக்கும் இந்த ஸ்டோரில் உள்ளே நுழைந்தால் போதும். எல்லா பொருட்களையும் அள்ளிக்கொண்டு வந்து விடலாம் போலத் தோன்றும். இவர்களின் BUSINESS MODEL எப்படியென்றால் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் 50 அல்லது 100 அமெரிக்க டாலர்கள் சந்தாவாக வாங்கிக் கொள்கிறார்கள். சந்தாதார்கள் தங்கள் உறுப்பினர் அட்டையைக் காட்டினால் மட்டுமே உள்ளே போக முடியும். இங்கே எல்லா பொருட்களும் மற்ற ஸ்டோர்ஸ்களை விட மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். என்ன, எல்லா பொருட்களையும் பெரிய பெரிய பாக்கெட்டுகளிலேயே விற்பனை செய்வார்கள். பொதுவாக எல்லா பொருட்களும் நல்ல தரமாகக் கிடைக்கும். இங்கே வாங்கிய பொருட்களை நமக்கு திருப்தியில்லையென்றால் திருப்பிக் கொடுப்பது  மற்ற கடைகளை விட சுலபம். முன்னொரு சமயம்  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நான் வாங்கிய ஒரு வாட்ச் ஓடவில்லை என்று புகார் செய்த போது (எங்கள் கையில் அதை வாங்கிய பில் கூட இல்லாமல்) அப்படியே அந்த வாட்சைத் திருப்பி எடுத்துக்கொண்டு முழுப் பணத்தையும் திருப்பிக் கொடுத்தார்கள். அதற்கு மேலும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அதே ப்ராண்ட் வாட்ச் அதே விலைக்கு மீண்டும் கிடைத்தது.  நான்கு ஆண்டுகளில் விலை ஏறவேயில்லை.

   அமெரிக்கா ஒரு வித்தியாசமான நாடு. இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.
                                                                        … மீண்டும் தொடர்வோம்


Monday, December 12, 2016

எனக்கு நேர்ந்த ‘சத்திய சோதனை’

எனக்கு நேர்ந்தசத்திய சோதனை

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மறைந்து விட்டார்கள் என்ற சோகச் செய்தியைக் கேட்டு ஸ்தம்பித்திருந்த செவ்வாய்க் கிழமைக்கு மறு நாள் (அதாவது புதன் கிழமை 07.12.16) தமிழகத்தின் இயல்பு வாழ்க்கை காலையிலேயே திரும்பிவிட்டது. ஒரு முறைகான்ஸல்செய்து மீண்டும்புக்செய்யப்பட்டபஸ் டிக்கெட்என்னிடம் தயாராக இருந்ததால் அன்று மாலையே சென்னைக்கு கிளம்பிவிட்டோம்.

சென்னையிலிருந்து அமெரிக்கா செல்ல இருந்ததால் எங்களிடம் நான்கு பெரிய பெட்டிகளும் இரண்டு சிறிய ட்ராலிகளும், தோளில் போட்டுக்கொள்ள இரண்டு பேக் பேக்குகளும் (Back Bag) இருந்தன. என்ன செய்வது? ஒவ்வொரு முறை அமெரிக்கா செல்லும் பொழுதும்இந்த முறையாவது ஓரு சிறிய ட்ராலிக்கு மேல் எதையும் எடுத்துச் செல்லக்கூடாது’ என்ற சபதம் தூள்தூளாகிவிடுகிறது. ‘ஏர்லைன்ஸ் கம்பெனியில்’ எவ்வளவு லக்கேஜ் அலவன்ஸ் கொடுக்கிறார்களோ அதை முழுமையாக ஒவ்வொரு முறையும் பயன்படுத்திக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

எங்களுடைய நான்கு பெட்டிகளுடன் தனியார் பஸ் நிற்கும் இடத்துக்குப் போனால் பஸ்ஸின் உதவியாளர் பையன்ட்ரங்க்கை’ திறந்து கொடுத்து ம்ம்ம்ஏத்துங்க,’ என்று ஆட்டோக்காரரிடம்ஆர்டர்செய்தான். ஆட்டோக்காரர் அந்தப் பையனை விட வயதில் மிகவும் மூத்தவர். அதைப் பற்றி  அந்தப் பையன் கண்டுகொள்ளவேயில்லை. கொஞ்சம் சிரமப்பட்டு ஆட்டோக்காரர் சாமான்களை ஏற்றிவிட்டார். சாமான்களை ஏற்றுவது தன் வேலையில்லை என்பது போலத்தான் அந்த பையன்  நடந்து கொண்டான் என்று தோன்றியது. எனக்கு உள்ளுக்குள் கோபம்ஆனால், காட்டிக்கொள்ளவில்லை. ஆட்டோக்காரருக்கு வழக்கமாக கொடுப்பதற்கு மேலேயே பணம் கொடுத்து நன்றி கூறி திருப்பி அனுப்பினேன்.

மறு நாள் காலையில் சென்னையில் உதயம் தியேட்டர் அருகில் இறங்கிக் கொண்டோம். என்ன தோன்றியதோ தெரியவில்லை. பஸ்ஸின் அந்த உதவியாளர் பையன் சாமான்களை இறக்கிக் கொடுத்து விட்டான். இறக்கிக் கொடுத்ததற்கு நான் கொடுத்த பணத்தையும் வாங்கிக் கொண்டான்.

நடு ரோட்டில் விடப்பட்டு விட்ட அந்த நான்கு பெட்டிகளையும் ஒரு மாதிரியாக ரோட்டோரத்துக்கு இழுத்துக்கொண்டு வந்து விட்டேன். பின் ஒருஓலா டாக்சிக்கு’ புக் செய்து கொண்டேன்.

தெரியாமல் தவறுதலாகஎஸ்.யூ.வி’க்கு பதிலாகப்ரைம் செடனைபுக் செய்துவிட்டேன். புதிய டெக்னாலஜியை அடிக்கடி பயன்படுத்திக் கொண்டாலும் இன்னும் அதனுடன்  போராட்டம்தான். சின்னச் சின்னத் தவறுகள் நம்மை பிரச்சினையில் மாட்டிவிடுகின்றன.

ஓலா வண்டியோட்டி நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்துக்கு சற்றுத் தள்ளியே தன் வண்டியை நிறுத்தினார். நான்கு பெட்டிகளையும் அவருடைய இடத்துக்கு இழுத்துக்கொண்டு வரச் சொன்னார்

பெரிய பெட்டிகளைப் பார்த்ததுமேஇவ்வளவு லக்கேஜை இந்த வண்டியில் ஏற்றுவதற்கு அனுமதி கிடையாதே?’ என்றார்.

சரி, காலையிலேயே தகராறு செய்வதற்குத் தயாராகி விட்டார்என்று தோன்றியது.  

வருவதற்கு இஷ்டம் இருக்கிறதா, இல்லையாஅல்லது நான் வேறு வண்டி புக் செய்துகொள்ளட்டுமா?’ என்று கேட்ட பின்னர்சரி, ஓரு நூறு ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுங்க, ஏத்திடலாம்என்றார்.

அந்த நூறு ரூபாய்க்காகத்தானா தகராறு? சரி, கொடுக்கிறேன். வண்டியில் சாமானை ஏத்துங்க என்றேன். அவருக்கு சுருக்கென்று இருந்திருக்க வேண்டும்.

வேண்டா வெறுப்பாக ஒன்றிரண்டு பெட்டிகளை வண்டிக்குள் ஏற்றியவாறு  ‘நீங்களும் ஒன்றிரண்டு பெட்டிகளை  ஏத்துங்க. ஆளுக்கொரு பெட்டியாக சீக்கிரமாக ஏற்றிடலாம்,’ என்றார்.
               
ஏம்பா, உன்னைப் போல இரண்டு மடங்கு வயதானவன் நான். வயதானவுக்குரிய மரியாதையைக் கூட உனக்குக் கொடுக்கத் தெரியலையே,’ என்றேன்.  (மரியாதையை நாம் சம்பாதித்துக்கொள்ள வேண்டும், எதிர்பார்க்கக்கூடாது என்று நூறாவது தடவையாக கற்றுக்கொண்டேன்.)

ஒத்துழைக்க விருப்பமில்லாத அவருடைய மனப்பான்மை புரிந்தது. ‘சரி, இறங்கும் பொழுதும் இன்றைக்கு இவரோடு போராட்டம்தான்’  என்று தோன்றியது.

வீடு வந்தவுடன் தன்னுடைய இருக்கையிலிருந்து அவர் நகரவில்லை. சாமான்களை கீழே இறக்குவதற்கு அவர் உதவி செய்யத் தயாராக இல்லை என்பது புரிந்தது. இருந்தும் அவரிடம்சாமானை இறக்கிக் கொடுங்கஎன்று கேட்டேன்.

நீங்களே இறக்கிக்கொள்ளுங்க, எனக்கு என்ரெக்கார்ட்’ எல்லாம் எழுத வேண்டியிருக்கிறதுஎன்று சொல்லி அவர் பாட்டுக்கு ஏதோ தன்னுடைய நோட்டுப் புத்தகத்தில் எதையோ எழுதியவாறேபணம் கொடுங்கஎன்றார்  


எனக்கும் அந்த நேரத்தில் கோபம் வந்ததால், ‘சரி, மீட்டருக்குள்ள பணத்தை மட்டுமே நான் கொடுப்பேன்லக்கேஜுக்கான ஒத்துக்கொண்ட பணத்தை  கொடுக்கவேண்டுமென்றால்  நீங்கள் எனக்கு ரசிது கொடுக்க வேண்டும்என்று சொல்லியவாறு நானே அந்தப் பெரிய பெட்டிகளை வண்டியிலிருந்து மூச்சைப் பிடித்துக்கொண்டு மடமடவென்று இறக்கி விட்டேன்.

பின்பு, மீட்டரில் காட்டிய பணத்தை மட்டும் அவரிடம் கொடுத்தேன். வாங்க மறுத்தார்.  லக்கேஜுக்கான பணத்தை கொடுப்பதற்கு மறுத்து விட்டேன். தகராறு செய்தார். ‘லக்கேஜுக்கான பணம் நான் கொடுக்க வேண்டுமென்றால் ஒன்று நீங்கள் எனக்கு அதை ஏற்றி இறக்க உதவி செய்திருக்கவேண்டும் அல்லது அதற்கான ரசீது கொடுக்க வேண்டும். இரண்டு இல்லாததால்  அந்த அதிகப் பணத்தை கொடுக்க முடியாது,’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டேன். அவர் குரல் ஏறியது அவருடைய வார்த்தைகளும் தடித்தன.

அந்த வழியே சென்று கொண்டிருந்த இன்னொரு வழிப்போக்கர் என்னிடம், ‘சார், சாமானை வீட்டுக்குள் எடுத்துச்சென்று விடுங்கள், நான் அந்த ஓட்டியிடம் பேசிக்கொள்கிறேன்.  நான் யாரென்று அவருக்குத் தெரியாது. கவலைப்படாமல் உள்ளே போங்கள்,’ என்று சொன்னார்.

ஓட்டி உரத்த குரலில் இன்னும் கொஞ்சம் கத்தினார். ‘போலீசைக் கூப்பிட்டுவிடலாம்என்று எனக்குத் தோன்றியது. ஆனால், அந்த வழிப்போக்கர் மீண்டும் என்னை உள்ளே போகச் சொன்னதால் நான் சாமான்களைத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்துவிட்டேன். அடுத்த ஒன்றிரண்டு நிமிடங்களில் வண்டியை எடுத்துக்கொண்டு அந்த ஓட்டி போய்விட்டார்.

சென்னையில் இப்படியும் ஓட்டிகள் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் புரிந்துகொண்டேன். முன்பு ஆட்டோக்காரர்களுடன் போராட்டமாக இருந்தது. இப்பொழுது ஓலா டாக்சி ஓட்டியுடனுமா என்று வெறுப்பு.

இருந்தும், நான் அவருக்கு கொடுப்பதாகச் சொன்ன நூறு ரூபாயைத் தர மறுத்தது சரியில்லையோ என்று ஒரு குற்ற உணர்வும் எனக்கு ஒரு சில நிமிடங்களுக்கு நீடித்தது.
               
அதே   நேரத்தில்நான் இருப்பது கலியுகம். நான் ஒன்றும் ஞானியில்லை. எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தத் தெரியாத ஒரு சராசரி மனிதன். ப்ராக்டிக்கலாக நடந்துகொள்ள வேண்டும். அராஜகத்துக்கு பணிந்தால் இது போலத்தான் அந்த ஓட்டி எல்லோருடனும் நடந்துகொள்வார் என்றும் எனக்குத் தோன்றியதால் என்னுடைய நடத்தையை அந்த ஆண்டவனுக்கே அர்ப்பணித்து விட்டு மன நிம்மதியை நாடிக்கொண்டேன்.

அன்று இரவு விமான நிலையத்துக்கு வருவதற்கும் வேறொருஓலாஎஸ்.யூ.வியை இந்த முறை சரியாகபுக்’ செய்துகொண்டேன். ‘புக்’ செய்தபடி சரியாக இரவு 11.45க்கு வந்த அந்த ஓட்டி காலையில் சந்தித்த ஓட்டிக்கு முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார். அவரே எல்லா சாமான்களையும் வண்டியில் ஏற்றி இறக்கிக் கொடுத்தார். விமான நிலையத்தில் இறங்கிக் கொண்டவுடன் மீட்டருக்கு மேலேயே அவருக்குத் தாராளமாகப் பணத்தைக் கொடுத்து கொஞ்சம் மிச்சமிருந்த குற்ற உணர்ச்சிக்குப் பரிகாரம் தேடிக்கொண்டேன்.

மனிதர்கள் பலவிதம்.  நான் செய்தது சரியா, தவறாநீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?