நானும்
என் ஸ்தோத்திரங்களும் அதன் பலன்களும்
21.01.17
அன்று முகநூல் நண்பர் ஒருவரின் ‘நேரக் கோட்டில்’ (TIMELINE) ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரத்தைப்
பற்றி எழுதியதை படிக்க நேர்ந்தது. உடனேயே என் எண்ணங்கள் 1985-87-ல் கௌஹாத்தியிலிருந்து
திப்ரூகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த என்
விமானப் பயணத்துக்குத் தாவியது.
அலுவலக
வேலை நிமித்தமாக பயணித்துக்கொண்டிருந்தேன். என்னுடன் இரண்டு மேலதிகாரிகள் பயணித்தனர்.
எனக்கருகில் அமர்ந்திருந்தவர் வங்கியில் பொது மேலதிகாரி. அவர் கையில் ஒரு புத்தகம்
வைத்து ஏதோ படித்துக்கொண்டிருந்தார். வாய் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அவர்
என்ன படிக்கிறார் என்று தெரிந்து கொள்வதில் ஒரு ஆர்வம் எனக்கு. ஆனால், அவர் என் மேலதிகாரி.
அவரிடம் சட்டென்று கேட்பதற்கு தயக்கம். மீண்டும் ஓரக்கண் கொண்டு பார்த்தேன். அவர் கையில்
புத்தகத்துக்குள் சிறியதாக இன்னொரு புத்தகம். என் ஆவலைத் தூண்டியது. உற்று உற்று பார்த்துக்கொண்டே
இருந்தேன். சிறிது நேரம் கழித்து அந்த மேலதிகாரி புத்தகத்தை மூடிவிட்டார். நான் உன்னிப்பாக
பார்த்துக் கொண்டிருந்ததை அவர் கண்டிப்பாக கவனித்திருக்க வேண்டும். அவராகவே என்னிடம்,
“நான் ஆதித்ய ஹ்ருதயம் என்கிற ஸ்தோத்திரத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். நீ அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்றார்.
நான் இல்லை என்று தலையாட்டினேன். அதன் மஹிமையைப் பற்றி சுருக்கமாக எனக்குக் கூறினார்.
இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சிரத்தையோடு சொல்லிக்கொண்டு வந்தால் மனதிலுள்ள வீணான பீதிகள்,
பயங்கள் நீங்கி தைரியம் வரும். எதிரிகள் அழிந்து விடுவார்கள். வெற்றி கிடைக்கும் என்றளவு
புரிந்து கொண்டேன். ‘நீயும் முடிந்தால் இந்த ஸ்லோகத்தை தினமும் படிக்க முயன்று பார்.’
என்று கூறி தன் கண்களை மூடிக்கொண்டு விட்டார்.
ஆனால்,
அந்த ஸ்லோகத்தை பற்றிய புத்தகம் கௌஹாத்தியில் உடனேயே எனக்கு கிடைக்கவில்லை. 87-ல் சென்னைக்கு
மாற்றலாகி வந்த பிறகு எங்கேயோ (ஞாபகம் இல்லை) ‘ததோ யுத்த பரிச்ராந்தம்’ என்று தொடங்கும்
ஆதித்த ஹ்ருதய ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்த (சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் செய்தது
என்று நினைவு) ஒரு ஆடியோ கேசட் கிடைத்தது. அதை உதவியாக வைத்துக்கொண்டு அந்த ஸ்லோகத்தை
முழுமையாக முறையாகக் கற்றுக்கொண்டேன். அப்பொழுது முதல் நான் தினமும் பாராயணம் பண்ணுகிற
ஸ்லோகங்களில் அதுவும் ஒன்றாகியது.
இப்பொழுது மீண்டும் நினைவலைகள் பின் நோக்கி
ஓடுகிறது…
1960-களில் திருநெல்வேலி டவுண் அம்மன்
சன்னதித் தெரு. புகழ் பெற்ற திரு. ஹரிதாஸ் கிரி அவர்கள் எங்கள் ஊருக்கு வந்திருந்தார்.
தெருவிலிருந்த வசதியுள்ள ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து தினமும் மாலை வேளையில் பிரசங்கம்,
பஜனை செய்வார். அவர் அடிக்கடி பாடும் ஒரு ஸ்தோத்திரப் பாடல் எனக்கும் எங்கள் அம்மாவுக்கும்
மிகவும் பிடித்த “ஞான கணேசா சரணம் சரணம்” என்றும் “ஆக்கும் தொழில் ஐந்தரனாற்ற நலம்”
என்றும் துவங்கும் “லலிதா நவரத்தின மாலை” எங்கள் மனதில் உரு ஏறியது.
அந்த நாட்களிலெல்லாம் எங்கள் அப்பா சுப்ரமண்ய
புஜங்க ஸ்தோத்திரத்தை தினமும் படிப்பார். காலையில் நிச்சயமாக சந்தியா வந்தனம் செய்வார்.
மாலையில் திருநெல்வேலி கொக்கிரகுளத்திலிருந்த அலுவலகத்திலிருந்து டவுணுக்கு நடந்தேதான்
பெரும்பாலும் வருவார். வரும் வழியில் அவர் கைகள் ஏதோ எண்ணிக்கொண்டே இருப்பதை கவனித்திருக்கிறேன்.
பின்னர்தான் தெரிந்து கொண்டேன் அவர் காயத்ரி ஜபத்தை நடந்து வரும் வழியெல்லாம் ஜபித்துக்
கொண்டு வந்திருக்கிறார் என்று. அந்த மந்திரங்கள்தானோ என்னவோ நரம்புத் தளர்ச்சியினால் அடிக்கடி வலிப்பு வரும்
அவருக்கு பல இக்கட்டான சூழ்னிலைகளிலிருந்து பாதுகாப்பு கொடுத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
1950-களின் கடைசியில் என்று நினைக்கிறேன்.
திருவனந்தபுரத்தில் இருந்த எங்கள் அத்தை வீட்டுக்கு விடுமுறைக்கு அடிக்கடி செல்வோம்.
அங்கே தினமும் ஒரு பெரியவர் மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்து விஷ்ணு சகஸ்ரநாமமும் இந்திராக்ஷி
சிவகவசமும் வாசிப்பார். எனக்கு அப்பொழுது விஷ்ணு சகஸ்ரநாமம் தெரியாது. காதால் கேட்டுக்கொள்வேன்.
ஏனோ தெரியவில்லை ஒரு சில மந்திரங்களையாவது
தினப்படி கண்டிப்பாக சொல்ல வேண்டும் என்று என் அம்மாவோ அல்லது அப்பாவோ எங்களை வற்புறுத்தியதில்லை.
நானும் எந்த மந்திரத்தையும் தினசரி பாராயணம் பண்ணாமலேயேதான் வளர்ந்திருக்கிறேன்
1970 வரை.
1970 டிசம்பர். வங்கியில் கோயம்புத்தூர்
கிளைக்கு மாற்றலாகி வந்த பிறகு திரு. கௌரிசங்கர் என்ற சக ஆஃபீசரின் நட்பு கிடைத்தது.
அவருடன் பத்து மாதங்கள் ஒன்றாக ஒரு லாட்ஜில் ஒரே அறையில் தங்கியிருக்கும் வாய்ப்பு
கிடைத்தது. என்னை விட ஒன்றிரண்டு வயது மூத்தவர். ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக இருந்த
வேலையைத் துறந்து விட்டு வங்கியில் சேர்ந்தவர். இன்றைய நாட்களில் அதிகமாக அவருடன் தொடர்பில்
இல்லாவிட்டாலும் என்னுடைய அண்ணனாகவே இன்றும் மனதளவில் மதித்து வந்திருக்கிறேன். லாட்ஜில்
தங்கியிருந்த சமயம்தான் கந்த சஷ்டி கவசத்தை எனக்கு அறிமுகப் படுத்தினார். ‘தினமும்
இதைப் படி. மிகவும் நல்லது. எல்லா நன்மைகளும் நடக்கும்’ என்று கூறினார். அவர் சொன்னதை
அப்படியே ஏற்றுக்கொண்டு நம்பிக்கையோடு தினப்படி
கந்த சஷ்டி கவசத்தை சொல்ல ஆரம்பித்தேன். சுமார் 28 ஆண்டுகள் தொடர்ந்து கந்த சஷ்டி கவசத்தை
தினப்படி சொல்லியிருக்கிறேன்.
இடையில்
1977-78-ல் வட இந்தியாவில் வேலை பார்த்து வந்த போது இன்னொரு சக ஆஃபீசர் எனக்கு கந்தரலங்காரம்,
கந்தர் அனுபூதி இவைகளின் கேசட் கொடுத்தார். அவற்றையும் கற்றுக் கொண்டேன். ஆனால், தொடர்ச்சியாக
சொன்னதில்லை. இன்றும் சீர்காழி கோவிந்தராஜனின் கந்தர் அலங்காரம் அவ்வப்பொழுது கேட்டு
கண்ணை மூடி அமர்ந்து விடுவேன்.
1980-ல் சென்னைக்கு மாற்றலாகி வந்த சமயத்தில் வங்கியில் என்னுடைய மானசீக குருவாக மதித்து
வந்த மறைந்த திரு. ராஜாராம் அவர்கள் ‘சங்க்ஷேப சுந்தர காண்டம்’ என்ற ஒரு புத்தகத்தைக்
கொடுத்து அதை தினமும் படிக்கச் சொன்னார். அன்றைய காலக் கட்டத்தில் அலுவலகம் சம்பந்தமாக
ஒரு சில பிரச்சினைகள் எனக்கு இருந்து வந்தன. அந்தப் பிரச்சினைகள் எல்லாம் பறந்து போய்
விடும் என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அவர் சொன்னபடியே பல ஆண்டுகள் அந்த சங்க்ஷேப
சுந்தர காண்டத்தை படித்து வந்தேன்.
வங்கியில் பணி புரிந்த காலங்களில் எனக்கு
வாழ்க்கையில் எல்லா வசதிகளும் நிறைந்திருந்தன – பண வசதியைத் தவிர. ஒவ்வொரு மாதமும்
செலவுகளை சமாளிப்பது சிரமமாகத்தான் இருந்தது. என்னிடம் ஓட்டியுடன் கூடிய கார், நல்ல
வீடு, தொலை பேசி, ஏ.சி வண்டியில் ரயில் பயணம் எல்லாம் இருந்தது. ஆனால், வங்கிக் கணக்கில்
எதுவுமிருக்காது. 1985-ல் எனக்கு கௌஹாத்திக்கு மாற்றலானது. அந்தக் காலத்தில் வட கிழக்கு
மானிலங்களுக்கு மாற்றலாகிப் போனால் இரட்டை உயர்வூதியம் கிடைக்கும். அதே திரு. ராஜாராம்
அவர்கள் ‘நீ திருப்பதி வெங்கடாஜலபதியை வேண்டிக்கொள். நிறைய பணம் கொடுப்பார். வங்கியில்
உன்னுடைய வருடாந்திர டார்கெட்டை அடைவதற்கும் உதவுவார். கூடுதலாக கனகதாரா ஸ்தோத்திரத்தையும்
கற்றுக்கொள்,’ என்று எனக்கு நம்பிக்கை கொடுத்தார். அப்பொழுது தொடங்கியது தினமும் வெங்கடேஸ்வர
சுப்ரபாதமும், கனகதாரா ஸ்தோத்திரமும். அது மட்டுமல்லாமல் ஆண்டு தோறும் இரண்டு முறை
திருப்பதி வெங்கடாஜலபதியை கீழ்த் திருப்பதியிலிருந்து நடந்து படியேறிப் போய் தரிசனம்
செய்து வரும் வழக்கத்தையும் தொடங்கினேன். வேலைக்குச் சேர்ந்து 15 ஆண்டுகள் கழித்துதான்
என் முதல் சிறு சேமிப்பும் அந்த நாட்களில்தான் துவங்கியது.
அப்படியாக, 1987- வாக்கில் தினமும் கணேச
பஞ்சரத்னம், கந்த சஷ்டி கவசம், வெங்கடேச சுப்ரபாதம், கனகதாரா ஸ்தோத்திரம், ஆதித்ய ஹ்ருதய
ஸ்தோத்திரம், நவக்ரஹ ஸ்தோத்திரம், சங்க்ஷேப சுந்தர காண்டம் அத்தனையும் காலையில் குளித்து
முடித்தவுடன் அலுவலகத்துக்கு கிளம்ப சாப்பிட உட்கார்வதற்கு முன்பு சொல்லி முடித்து
விடுவேன். மாலையில் சீக்கிரம் வீட்டுக்குத் திரும்பும் நாட்களில் உடல் நலமில்லாமல்
படுத்துக் கிடந்த அம்மாவுடன் சேர்ந்து விஷ்ணு சஹஸ்ர நாமம் சொல்வேன்.
1997-ல் முதன் முறையாக ஸ்ரீஅம்மா பகவானின்
தொடர்பு கிடைக்கும் வரை என்னுடைய தினப்படி வாழ்க்கையில் இந்த எல்லா மந்திரங்களும் இணைந்திருந்திருக்கின்றன.
மனம் மிகவும் சோர்ந்து கிடந்த 1997-ல் ஸ்ரீஅம்மா பகவானின் அறிமுகம் என் வாழ்க்கையையே
புரட்டிப் போட்டு விட்டது. 1998-லிருந்து எளிமையாகவும் சுலபமாகவும் இருந்த ஸ்ரீபகவானின்
“ஓம் சச்சிதானந்த பரப்ப்ரம்மா புருஷோத்தம
பரமாத்மா
ஸ்ரீ பகவதி சமேத ஸ்ரீ பகவதே நம: \\
என்ற மூல மந்திரத்தை மட்டுமே
சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டு மற்ற எல்லா மந்திரங்களையும் விட்டு விட்டேன்.
2005 என்று ஞாபகம். அமெரிக்காவில் என்
குழந்தைகளைப் பார்க்கப் போன போது அந்த முறை ‘ருத்ரம், சமகம்’ கற்றுக்கொள்ள வேண்டும்
என்று தீர்மானித்தேன். ஸ்ரீ அம்மா பகவானையே என் மானசீக குருவாக வைத்து கேசட் போட்டுக்
கேட்டுக் கேட்டு ஸ்ரீ ருத்ரம், சமகம், ஸ்ரீபுருஷ சுக்தம், ஸ்ரீ நாராயண சுக்தம், ஸ்ரீ
சுக்தம், ஸ்ரீமேதா சுக்தம், ஸ்ரீ துர்கா சுக்தம் எல்லாவற்றையும் புத்தகத்தைப் பார்த்து
படிக்குமளவிற்குத் தேறினேன். ஸ்ரீ சர்மா (முழுப் பெயர் நினைவில்லை) அவர்களின் கேசட்
எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆனால், தொடர்ந்து சொல்லி வராததால் மனப்பாடமாகவில்லை.
இடையில், உடல் நலமில்லாதவர்களுக்காக
HEALING எனப்படும் குணப்படுத்தும் பிரார்த்தனை முறையை ஸ்ரீஅம்மா பகவான் இயக்கத்தில்
கற்றுக்கொண்டேன். என் மனைவியையும் சேர்த்து பலருக்கு ஹீலிங் செய்திருக்கிறேன். சுவாமி
விவேகானந்தர் தன்னுடைய சீடர் ஒருவர் உடல் நலமில்லாத போது ‘அக்ஷீப்யாம் தே சுக்தம்’
என்றொரு சுக்தத்தைப் பற்றிச் சொல்லி ஹீலிங் செய்திருக்கிறார் என்று படித்திருந்தேன்.
உடனேயே அந்த சுக்தத்தையும் கற்றுக்கொண்டேன்.
இத்தனை மந்திரங்களையும் ஸ்லோகங்களையும்
தினப்படி நம்பிக்கையுடன் சொல்லி வந்ததால் எனக்கு ஏற்பட்ட பல பிரச்சினைகளிலிருந்து விடுதலை
கிடைத்திருக்கிறது. செல்வம் சேர்ந்திருக்கிறது. வீணான பீதி, பயம் போய் மனதில் அமைதி
கிடைத்திருக்கிறது. மனோ தைரியம் கிடைத்திருக்கிறது. எதிர்ப்புகளைத் தாங்கிக் கொள்ளும்
சக்தி கிடைத்திருக்கிறது. வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைத்திருக்கிறது. குழந்தைகள்
நன்றாக வளமாக இருக்கிறார்கள். தவறான பாதையில் செல்லாமல் என்னைத் தடுத்திருக்கிறது.
மனம் ஒன்றியிருக்கிறது. பல தவறுகளை நான் இழைத்திருந்தாலும்
அவற்றின் தீய பலன்களிலிருந்து எனக்கு பாதுகாப்பு கிடைத்திருக்கிறது. இப்படி எவ்வளவோ
நன்மைகள்…
ஆனால், இன்றோ…
தினப்படி எந்த மந்திரங்களும் ஸ்லோகங்களும்
நான் சொல்வதில்லை. எல்லாம் துறந்து ஞானசூனியமாக நிற்கிறேன். இதுவும் ஒரு நாள் துறந்து
போகும்.
(பின் குறிப்பு: நீண்ட ஆங்கில நாவல்கள் எழுதத் தொடங்கிய பிறகு சுருங்கச் சொல்வது
விட்டுப் போய்விட்டது.)