Pages

Sunday, January 01, 2017

01.01.17 இந்த வார நாட் குறிப்பு

01.01.17 இந்த வார நாட் குறிப்பு

ஆங்கிலத்தில் நான் எழுதும் புதிய முழு நீள கதைப் புத்தகமான LONELY II –வை கடந்த வாரத்தில் தொடங்கியிருக்கிறேன். LONELY முதல் புத்தகத்தைப் படித்த பலர் அதைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொடுத்தது என்னை இரண்டாவது புத்தகத்தை எழுத தூண்டியிருக்கிறது. முதல் புத்தகத்தில், தன் மனைவி கௌரியுடன் அமெரிக்கா செல்ல விருப்பமில்லாமல் திரு மணி சங்கர் மனைவியை விமானத்தில் ஏற்றிவிட்ட கையோடு திடீர் உந்துதலால் தன்னிடம் இருக்கும் ஒரே தோள்பையை மட்டும் சுமந்துகொண்டு இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஜோஷிமட் என்ற இடத்துக்குத் தனிமையைத் தேடிப் போகிறார். அங்கே, எதிர்பாராத விதமாக, ஷர்மிலி என்ற மனநிலை குன்றிய ஒரு பெண், ஒரு உணவு விடுதியில் வேலை செய்யும் கோபி என்ற ஒரு ஆதரவற்ற இளைஞன், தனது இளவயது நண்பரும் காதலியுமான பூமிகாவின் மகளான சித்ரா என்ற கிறிஸ்துவ சகோதரி பீட்ரீஸ், ஓடிப்போன தனது மனைவியை நினைத்து மனதிலேயே புழுங்கிக் கொண்டிருக்கும் கேர்னல் பணிக்கர், ஹரித்வார் கும்பமேளாவில் தங்கள் பையனை தவறவிட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த டாக்டர் விக்ரம், டாக்டர் சோனியா தம்பதிகள், இமாலயத்தில் தீர்த்த யாத்திரை சென்ற போது ஏற்பட்ட ஒரு விபத்தில் மனைவியை இழந்த கோவில் பூஜாரி மிஸ்ரா இவர்களை சந்திக்கிறார்.  அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் தன்னுடன் பிணைந்திருப்பதையும் அவர்கள் ஒவ்வொருவரின் சோகத்துக்கும் தான் ஒரு அருமருந்தாக இருப்பதையும் மணி சங்கர் ஜோஷிமட்டில் தங்கியிருக்கும் ஒரு சில மாதங்களில் கண்டுகொள்கிறார். தன் இளவயதுக் காதலை மனைவி கௌரியிடமிருந்து மறைத்து வைத்த இதய பாரத்தையும் அங்கே இறக்கி வைக்க நேருகிறது. ஒரு சில நாட்கள் தனிமையில் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஜோஷிமட் சென்ற மணி சங்கருக்கு அங்கே கிடைத்த புதிய நட்பு வட்டாரம், அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பல சோகங்கள், அந்த சோகங்களை நீக்குவதற்கு எப்படி தன்னை அறியாமலேயே தான் ஒரு கருவியாகப் பயன்பட்டிருக்கிறார் என்பது போன்ற மனதைப் பிழியவைக்கும் பல சம்பவங்களின் பின்னணியில் LONELY கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கதையைப் படித்து ஒரு சிலர் கண்ணீர் விட்டதாகவும் எனக்கு எழுதியிருந்தது எனக்கே பெருமையாக இருக்கிறது.

LONELY II-வில் மணி சங்கர் தனது குழந்தைகளின் விருப்பத்தை தட்ட இயலாமல் அமெரிக்கா செல்வதற்கு விமானம் ஏறுகிறார். எப்பொழுதும் தனிமையையே விரும்பும் மணி சங்கருக்கு அவரது அமெரிக்க பயணத்தின் போது என்ன நடக்கிறது என்பதுதான் LONELY II-வின் கதை.

LONELY முதல் புத்தகத்தை கண்டிப்பாகப் படித்துப் பாருங்கள். www.pothi.com என்ற வலைப்பக்கத்தில் கிடைக்கும். கூகுள் தேடலில் LONELY www.pothi.com என்று தட்டினால் போதும். அந்த வலைப் பக்கத்துக்குப் போய்விடலாம். அச்சடிக்கப்பட்ட புத்தகத்தின் விலை கொஞ்சம் அதிகம்தான். ஏனென்றால் PRINT ON DEMAND என்ற ப்ளாட்ஃபாரத்தில் அந்தப் புத்தகத்தை ஒவ்வொன்றாக ஆர்டர் வர வர அச்சடித்துக் கொடுக்கிறார்கள். அதே வலையில் என்னுடைய இன்னொரு நாவலான THE PATH என்ற புத்தகமும் கிடைக்கும்.

விரைவில் இந்த இரண்டு புத்தகங்களையுமே eBook –ஆக வெளியிட உத்தேசம்.

கடந்த வாரத்தில் 1) THE CODE OF THE EXTRAORDINARY MINDS 2) THE CULT NEXT DOOR AND 3) BRIDGE OF SPIES என்ற மூன்று புத்தகங்களை ஒரே நேரத்தில் வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். நான் தான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேனே, அமெரிக்கா வந்தால் புத்தகங்களும் பொது நூலகமும்தான் என்னுடைய நெருங்கிய தோழர்கள் என்று. THE DIARY OF HARRY FOX என்ற உப்பு சப்பில்லாத ஒரு புத்தகத்தை அதில் என்னதான் இருக்கிறது என்று கண்டு பிடிப்பதற்காக படித்துத் தீர்த்தேன். ஏற்கெனவே எனக்குத் தெரிந்த ஆங்கில எழுத்தாளர்களின் சமீப கால புத்தகங்களில் மீண்டும் மீண்டும் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைக்கிறார்கள் என்ற உணர்வு எனக்கு வந்து விட்டது. ஆரம்ப எழுத்தாளனான எனக்கும் நாளாவட்டத்தில் இது நடக்கலாம் என்ற அறிவும் எனக்கு இருக்கிறது. ஒரு கலைஞனுக்கு கற்பனை வளம் நாளாக நாளாக குறைந்து விடும் போலிருக்கிறது. ஆரம்பகாலத்தில் இருந்த சூடு போகப் போகக் குறைந்து விடுகிறது. ஏ.ஆர். ரகுமான் சமீபத்தில் எங்கேயோ குறிப்பிட்டிருந்தார், ‘எனக்கும் வயதாகிறது. முன்னைப் போல் இல்லை’ என்று. அது அவரின் இசையிலும் தெரிகிறது. முன்னர் இந்தச் சரிவு எம்.எஸ்.விஸ்வனாதன், இளையராஜா இருவருக்கும் நேர்ந்திருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களான NEALE DONALD WALSCH, DEEPAK CHOPRA, DAVID BALDACCI, JOHN GRISHAM போன்ற பலருக்கும் நேர்ந்திருக்கிறது. முக்கியமாக, வியாபார நோக்கத்தோடு கலையைத் தொடர்கிற போதுதான் இந்தக் கற்பனைச் சரிவு அதிகமாக ஏற்படுகிறது என்று நினைக்கிறேன்.

கடந்த வாரம் ரஜனிகாந்த் நடித்த கபாலி படத்தை வலையில் முதன் முதலாகப் பார்த்தேன். ஜவ்வு போல இழு இழு என்று இழுத்துக்கொண்டு போன இந்த படத்துக்கு நடிக்க ரஜனிகாந்த் எப்படி ஒத்துக்கொண்டார் என்று தெரியவில்லை. பழைய GOD FATHER படத்தை ரீமேக் செய்தது போலத் தோன்றியது. என்ன செய்வது ரசிப்பதற்கு மக்கள் இருக்கிறார்கள். WHAT THEY DESERVE THEY GET.

அதே போல வலையில் ‘தொடரி’ என்று ஒரு படம் பார்த்தேன். பரவாயில்லை. பல ஆங்கிலப் படங்களைப் பார்த்துப் பார்த்து INSPIRATION என்ற பெயரில் எடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால், காமெடி என்ற பெயரில் அவர்கள் செய்யும் கலாய்ப்புதான் சகிக்க முடியவில்லை.

இந்த முறை அமெரிக்கா வந்த பிறகு யோகா பயிற்சியை முன்னைவிட அதிக  நாட்களில் செய்து வருகிறேன் என்பதில் எனக்கு ஒரு திருப்தி.

பேரக் குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸுக்காக பள்ளி விடுமுறையென்பதால் அவர்களுடன் அதிக நேரம் செலவிட முடிகிறது. அவர்கள் எனக்கு நிறைய பொறுமையைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதும் ஏதேனும் செய்த வண்ணம் இருக்கும் நான் எதுவும் செய்யாமல் அவர்கள் ‘லெவலு’க்கு கீழிறங்கி வந்து நேரத்தைச் செலவிடுவதைத் தொடர்ந்து கற்றுக்கொண்டு வருகிறேன்.

ஃபீனிக்சில் பருவ நிலை நன்றாக இருக்கிறது. பாலைவனப் பகுதியானதால் காலையும் மாலையும் மிதமான குளிரும் பகல் நேரத்தில் நல்ல சூரிய வெளிச்சமும்  நிலவுகிறது.

இந்த வாரத்தின் மூன்று முக்கிய நிகழ்வுகளான 1) அ.தி.மு.காவில் சசிகலாவின் பதவியேற்பு 2) அதிக மதிப்புள்ள ரூபாய் 500 மற்றும் 1000  நோட்டுக்களை வங்கியில் செலுத்துவதற்குண்டான கால அவகாசம் 31.12.2016-ஓடு முடிவடைவது, பிரதமரின் உரை, முந்தைய நிதி மந்திரி சிதம்பரத்தின்  நேர்காணல், வருமான வரித்துறையின் தடாலடியால் வெளியே வரும் கோடி கோடியான கறுப்புப் பணம் மற்றும் 3) உ.பி யில் அப்பாவும் பிள்ளையும் பதவிக்கு அடித்துக்கொள்ளும் நாடகம் இவையெல்லாமே ஒரு விதத்தில் மனக் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்று நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது. நான் ஏற்கெனவே எழுதியபடி மக்கள் இப்பொழுதாவது சுதாரித்துக் கொண்டு புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால்தான் அவர்களின் கர்மவினைப் பலன்களிலிருந்து தப்பிக்க முடியும் என்று நம்புகிறேன். WE GET WHAT WE DESERVE என்பதை முழுவதுமாக நம்புகிறேன். நமது தகுதியை மேம்படுத்திக்கொள்வதன் அவசியத்தை இவை உணர்த்துகின்றன. நாம் எல்லோரும் ஒருவருக்கொருவர் ஏதோ ஒரு விதத்தில் பிணைக்கப் பட்டிருக்கிறோம். அதனால் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் செய்யும் காரியங்களுக்கு அவர்களுடன் நாம் பிணைக்கப்பட்டிருக்கிறோம் என்ற ஒரே காரணத்தினால் எல்லோரும் அந்தச் செயல்களின் விளைவுகளை அனுபவித்தேயாக வேண்டும். இதிலிருந்து தப்பிக்க முடியாது. எல்லாம் வல்ல இறைவன் நம்மைக் காக்கட்டும்.

வேதத்தில் சொல்லியிருக்கிற “சஹனாவவது. சஹனௌபுகத்து. சகவீர்யம் கர்வாவஹை. தேஜஸ்வி. நா அதீதமஸ்து. மா வித்விஷாவஹை: ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி://” என்ற மந்திரத்தை மீண்டும் மீண்டும் நாம் எல்லோரும் சொல்வது மிகவும் அவசியம் என்று கருதுகிறேன்.

“(எல்லாம் வல்ல அந்த) இறைவன் நம்மைக் காக்கட்டும்.  நமக்கு சக்தியளித்து ஊக்குவிக்கட்டும். எல்லோரும் ஒன்றாக இணைந்து சக்தியுடனும், உற்சாகத்துடனும் உழைப்போமாக.  நாம் கற்பது நல்லதாக இருக்கட்டும். கற்பது நம்மை மேம்படுத்தட்டும். நம்மை விரோத மனப்பான்மையிலிருந்து விலகியிருக்கச் செய்யட்டும். எங்கும் அமைதி நிலவட்டும்.”

நன்றி. எல்லோருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.


                                                …மீண்டும் சந்திக்கலாம்

No comments:

Post a Comment