Pages

Wednesday, January 11, 2017

08.01.17 இந்த வார நாட்க்குறிப்பு

08.01.17 இந்த வார நாட்க்குறிப்பு

என்னுடைய நாட்க்குறிப்பு பகுதியில் அந்தந்த வாரத்தில் நான் சந்தித்த, என்னைத் தாக்கிய அனுபவங்கள், உணர்ச்சிகள், பார்த்தவை, கேட்டவை இவைகளைப் பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். என் வலையில் எழுதி முக நூலில் அதற்கு இணைப்பும் கொடுத்து வந்தேன்.

நான் கவனித்த வரை, என்னுடைய எழுத்துக்களை முக நூலில்  நேரடியாக பதிவு செய்யும் பொழுது ஒரு சிலராவது அதைப் படித்து சில சமயங்களில் கருத்தும் தெரிவிக்கும் பொழுது எனக்கு ஒரு நிம்மதி. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் இந்த எதிர்பார்ப்பு இருக்கும் என்று நம்புகிறேன். எத்தனை பேர் நாம் எழுதியதைப் படிக்கிறார்கள் என்று பார்ப்பதில் ஒவ்வொரு எழுத்தாளனும் ஒரு சிறு குழந்தையாக மாறிவிடுகிறார் என்று நினைக்கிறேன். வலையில் மட்டுமே எழுதும் பொழுது கூகுள் அனலடிக்ஸ் கொடுக்கும் தகவல் பேரில் எத்தனை பேர் என் பக்கத்தைப் பார்த்தார்கள் என்று தெரிய வருகிறது. ஆனால், அவர்கள் நான் எழுதியதை முழுவதுமாக படித்தார்களா என்று தெரிவதில்லை. கமென்ட் கொடுப்பதற்குண்டான வசதியிருந்தும் முகநூல் போலல்லாமல் யாரும் பொதுவாக கமென்ட் கொடுப்பதில்லை. இண்டெர்னெட் வசதி பெருகிவிட்ட பிறகும் சமூக வலைகள் பெருகிவிட்ட பிறகும் பலரும் எழுத்தாளராக முயற்சி செய்து வருகிறார்கள். எல்லோருடைய எழுத்துக்களையும் எல்லோராலும் படிக்க முடிவதில்லை.

மேலும், யாருக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை மட்டுமே படிக்கிறார்கள், எழுதுகிறார்கள். நானுமே அப்படித்தான். அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு வெளி உலகத் தொடர்பு என்று சொல்லிக்கொள்ளக் கூடிய அளவிற்கு எதுவுமில்லாத போது எதைப் பற்றி எழுதுவது என்பது எனக்கு ஒவ்வொரு வாரமும் சவால்தான். அமெரிக்க வாழ்க்கையைப் பற்றியே மீண்டும் மீண்டும் எழுதினால் படிப்பவர்களுக்கு போரடிக்கலாம். அதனால் படித்த செய்திகளைப் பற்றி, பார்த்த திரைப்படங்களைப் பற்றி, படித்த புத்தகங்களைப் பற்றியே பொதுவாக அதிகமாக எழுதி வருகிறேன்.

அப்படித்தான் கடந்த வாரம் நான் படித்த புத்தகத்திலிருந்து நான் தெரிந்து கொண்ட ரிச்சர்ட் ப்ரான்சன் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரைப் பற்றி எழுதினேன். இது போன்ற மனிதர்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் பொழுது எனது வாழ்க்கையில் எவ்வளவு தவறுகள் செய்திருக்கிறேன், எப்படி என் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளத் தவறியிருக்கிறேன் என்ற  நினைப்புதான் மேலோங்கி நிற்கிறது. என்னுடைய 68 வயதிலும் உருப்படியாக ஏதேனும் செய்யலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. ஒவ்வொரு நாளும் என்னையே திருத்திக்கொள்ள முயன்று வருகிறேன். இருந்தும் பிறந்து வளர்ந்த காலத்திலிருந்து எனக்குள்ளே நான் ஏற்படுத்திக்கொண்ட பல கருத்துக்கள் என்னைக் கட்டுப்படுத்துவதிலிருந்து இன்னும் மீள முடியவில்லை.

பொதுவாக, NON FICTION புத்தகங்களைப் படிப்பதையே அதிகமாக விரும்புகிறேன். இடையிடையே ஒரு சில க்ரைம் த்ரில்லர்களையும் பொழுது போக்குக்காக படிக்கிறேன். க்ரைம் த்ரில்லர் படங்களையும் பார்க்கிறேன். நான் படிக்கும் புத்தகங்களிலிருந்து மாணவர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், பெற்றோர்களுக்காகவும் நான் நடத்தும் வகுப்புகளுக்கு நல்ல கருத்துக்கள் எனக்குக் கிடைக்கின்றன. எழுதுவதற்கும் புதிய புதிய கருத்துக்கள் கிடைக்கின்றன. சிந்தனைகள் எழுகின்றன. அந்த INSPIRATION-ல்தான் என்னுடைய வலையில் ‘தெரிந்ததும் தெரியாததும்’ என்ற தலைப்பில் பல கட்டுரைகள் முன்னால் எழுதியிருக்கிறேன்.

பொதுவாகப் பார்த்ததில் அரசியலைப் பற்றி முக நூலில் எழுதும் பொழுது பலர் ஆதரித்தும் பலர் எதிர்த்தும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். என்னைப் போலவே பலரும் அரசியல் ரீதியாக வலுவான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், மற்ற விஷயங்களைப் பற்றி எழுதும் பொழுது படிப்பவர்கள் மிக குறைவு. முகநூலில் அதிகமாக ‘LIKE’ வாங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பிலிருந்து விடுபட விரும்புகிறேன். நல்ல விஷயங்களைப் பற்றியே எழுத விரும்புகிறேன்.  

வங்கியில் பணி புரிந்த காலத்திலிருந்தே எனக்கு HUMAN RESOURCES DEVELOPMENT –ஐப் பற்றிய ஈடுபாடு அதிகமிருந்தது. அதன் தொடர்ச்சியாகத்தான் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு YOUTH DEVELOPMENT-ஐ என்னுடைய ஒரு குறிக்கோளாக எடுத்துக்கொண்டு முடிந்த வரை ஒரு சில நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன். என்னுடைய முயற்சிகள் அடிக்கடி நான் மேற்கொள்ளும் வெளி நாட்டுப் பயணங்களினால் தடைபட்டு ஒரு தொடர்ச்சியில்லாமல் முழுமை பெறாமலேயே இருக்கின்றன. இது ஒரு குறைபாடுதான் என்பதையும் உணர்கிறேன்.

ஆலன் லைட்மேன் என்பவர் எழுதிய ACCIDENTAL UNIVERSE என்ற புத்தகத்தை படித்து வருகிறேன். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்பொழுது விஞ்ஞானத்தின் கடைசி எல்லையில்தான் வேதாந்தம் அமர்ந்திருக்கிறது என்று தோன்றுகிறது. இந்தப் பிரபஞ்சம் எப்படித் தோன்றியது, தோன்றுவதற்கு எது காரணமாக இருந்திருக்கிறது, கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா, அவர்தான் இந்த உலகத்தைப் படைத்தாரா, ஒரு அணுவுக்குள் இருப்பதும் நிகழ்வதும் தான் இந்தப் பிரபஞ்சத்திலும் இருக்கிறதோ, நிகழ்கிறதோ, விஞ்ஞானத்தால் தெரிந்து கொள்ள முடியாததை வேதாந்தத்தால் தெரிந்துகொள்ள முடியுமா, இந்த உலகம் ஒரு சீரான உலகமா, ஒரு விபத்தா, எல்லாமே MATERIALISTIC என்றால் மனம் என்பதை எப்படி வர்ணிப்பத்து….இப்படிப் பல கேள்விகள் என்னுள்ளேயே எழுகின்றன. ஒரு விஞ்ஞானியால் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் பல சுவாரசியமான கேள்விகளை எழுப்புகிறது. ஒரு சில இடங்களை ஆழ்ந்து படித்தாலொழிய புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது. இது போன்ற புத்தகங்களை தமிழாக்கம் செய்யலாம் என்று தோன்றுகிறது. எப்படித் தொடர்பு கொள்வது என்று புரியவில்லை.

VISHEN LAKHIANI எழுதிய THE CODE OF EXTRAORDINARY MINDS என்ற இன்னொரு புத்தகத்தையும் ஒரு பெண்ணின் நிஜ வாழ்க்கையில் நடைபெற்றதைப் பற்றிய THE CULT NEXT DOOR என்ற புத்தகத்தையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக படித்து வருகிறேன்.

இடையில் கபாலி படத்தை இணையதளத்தில் பார்த்தேன். ஒரே வார்த்தையில் சொல்வதானால் ‘போர்’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இது போன்ற எவ்வளவோ ஆங்கிலப் படங்களை பார்த்துவிட்டதன் விளைவோ என்னவோ?

GOLIATH என்ற தொலைக்காட்சித் எட்டு பகுதிகள் அடங்கிய தொடரை AMAZON PRIME-ல் பார்த்து முடித்தேன். ஒரு பெரிய வழக்குறைஞர்கள் நிறுவனத்தை முன்பு துவக்குவதற்குக் காரணமாக இருந்த ஒரு வழக்கறிஞர் இப்பொழுது தனது நேரத்தை ‘பார்’களில் கழித்து வீணாக்கிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு நண்பரின் வழக்கை நடத்துவதற்கு விருப்பமில்லாமல் ஒத்துக்கொள்கிறார். சிறிது நாட்களிலேயே அந்த வழக்கில் ‘சீரியசா’கி விடுகிறார். தோண்டத் தோண்ட பல பயங்கரமான உண்மைகள் வெளிவருகின்றன.  அவரது வாதத் திறமையால் அந்தப் பெரிய நிறுவனத்தின் முறைகேடுகளுக்காக நீதிமன்றத்தில் தண்டனை வாங்கிக்கொடுக்கிறார். முதல் இரண்டு பகுதிகள் மிகவும் SLOW MOTION-ல் போவது போலத் தோன்றினாலும் மற்ற பகுதிகள் விறுவிறுப்பாகச் சென்றன. மொத்தத்தில் விறு விறுப்பான ஒரு தொடரைப் பார்த்த திருப்தி ஏற்பட்டது. DAVID AND GOLIATH பைபிளில் வரும் மிகவும் சுவாரசியமான எனக்கு மிகவும் பிடித்த கதை. ஒரு பெரிய அரக்கனை எப்படி ஒரு சிறுவன் தனது திடமான இறை நம்பிக்கையினாலேயே வென்றான் என்பதைப் பற்றியது. FAITH என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான தேவை என்பதை உணர்த்தும் கதை. இதை என்னுடைய SHORT STORIES FOR YOUNG READERS: FOR PERSONALITY DEVELOPMENT என்ற புத்தகத்தில் பயன்படுத்தியிருக்கிறேன்.  இதே DAVID AND GOLIATH என்ற தலைப்பில் MALCOM GLADWEL எழுதிய இன்னொரு சுவாரசியமான புத்தகத்தை ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படித்திருக்கிறேன்.

                                                            …அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கலாம்

No comments:

Post a Comment