Pages

Monday, February 27, 2017

What I found in my laptop: உறவுகளைப் பற்றி

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது கண்ணில் பட்டது. கொஞ்சம் சரி செய்து கீழே கொடுத்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். நன்றி வணக்கம். 

26.02.17 
உறவுகளைப் பற்றி

நீ யார்?”
நான் ராமசாமி
அது உன் பெயர். நீ யார்?”
நான் சந்திரசேகரின் பையன்.”
நீ யார்?”
கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. “நான் சுந்தரம் அவர்களின் பேரன்.”
நீ யார்?”
விஜயின் சகோதரன்.”
நீ யார்?”
நான் யாரென்று எப்படி புரியவைப்பது. “நான் ஒரு மாணவன்.”
நீ யார்?”
மீண்டும் குழப்புகிறாரே? “நான் திருநெல்வேலியைச் சேர்ந்தவன்.”
நீ யார்?”
நான் ஒரு இந்தியன்.”
நீ யார்?”
நான் ஒரு தமிழன்,”
இப்பொழுது உங்களிடம் பதில் சொல்லிக்கொண்டிருப்பவன்,”
ஒரு ஆண்

இப்படிப் பல பதில்களைக் கூறிக்கொண்டே போகலாம்.

வேறொரு நபரோடு, அல்லது ஒரு கூட்டத்தோடு, அல்லது ஒரு தொழிலோடு, அல்லது வேறொன்றோடு நம்மை உறவு (தொடர்பு) படுத்திக்கொள்ளாமல் நம்மால் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள முடியாது. வேறொன்றும் இல்லையென்றால் நான் யார் என்று எனக்கே தெரியாது. நான் இன்னாருடைய மகன், இன்னாருடைய கணவன். இன்னாருடைய சகோதரி. இன்னாருடைய மாமாஒரு தமிழ்நாட்டுக்காரன்ஒரு சென்னைவாசி. லயோலா கல்லூரியின் மாணவன். விப்ரோ கம்பெனியில் வேலை பார்ப்பவன். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

முயற்சி செய்து பாருங்கள். உங்களை எப்படி மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்வீர்களென்று.

சிறிய ஆனால் மகத்தான இந்த உண்மையை எனக்கு ஒரு மகான் உணர்த்தினார். அது வரை நான் இதைப் பற்றி யோசித்தது கிடையாதுபெரும்பான்மையானவர்கள் என்னைப் போலத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

உறவுகள் இருக்கும் வரைதான் நான் இருக்கிறேன். உறவுகள் இல்லையென்றால் நானில்லை. தொடர்பு இருக்கும் வரைதான் உறவுகள் நீடிக்கும். சார்ந்தே தோன்றியிருக்கிறோம். சார்ந்தே மறைகிறோம். Everything in this world is dependently arising and dependently ceasing.

நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முயற்சிப்பதில்லை. தெரிந்து கொண்டிருந்தால் நமது உறவுகள் வித்தியாசமாக இருந்திருக்கும். நாம் நடந்து கொள்ளும் முறையும் வித்தியாசமாக இருந்திருக்கும்.

உறவுமுறைகள்தான் நமது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இந்த உலகத்தில் எல்லாமே மற்றொன்றை சார்ந்திருக்கின்றன.

"வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிசையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.
கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்.
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்." என்று பாடியிருக்கிறார் பாரதியார். நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதையே அவர் உணர்த்தியிருக்கிறார்.

ஒரு சமுதாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் விவசாயி. கஷ்டமோ நஷ்டமோ நிலத்தில் கஷ்டப்பட்டு உழைத்து பயிரிடுகிறார். பயிர் விளைந்தவுடன், தனது தேவைக்கு மேலான விளைச்சலை சந்தைக்கு எடுத்துச் செல்கிறார். அங்கே ஒரு வியாபாரி இவருடன் பேரம் பேசி ஒரு விலைக்கு அந்த விளைச்சலை வாங்கிக் கொள்கிறார். அலுவலகம் போய் வரும் இன்னொருவர் அந்த விளைச்சலை தனது வீட்டிற்காக வாங்கிக் கொண்டு போகிறார். அவருடைய மனைவி அந்த விளைச்சலை உணவாக சமைக்கிறார். குடும்பத்தில் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். குப்பை சேருகிறது - உள்ளேயும் வெளியேயும். நகராட்சியிலிருந்து குப்பை அள்ள மற்றொருவர் வருகிறார். குப்பையை எங்கேயோ கொண்டு கொட்டுகிறார். நாட்பட நாட்பட அந்த குப்பை உரமாகிறது. அந்த உரத்திலிருந்து சத்தை எடுத்துக்கொண்டு வேறொரு செடி வளர்கிறது. மரமாகிறது. பூ பூக்கிறது. காய் காய்க்கிறது. காய் மீண்டும் உணவாகிறது. பூவை வேறொருவர் பறிக்கிறார். அதை கோவிலில் கொண்டு போய் சேர்க்கிறார். ஒரு அர்ச்சகர் அந்த பூவைக்கொண்டு ஆண்டவனுக்கு அர்ச்சனை செய்கிறார். அந்த ஆண்டவன் மகிழ்ந்து பக்தனுக்கு நல்லது செய்கிறார். இப்படி எல்லாமே ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எல்லோருமே விவசாயிகளாகவே, அல்லது வணிகர்களாகவே அல்லது அலுவலகம் செல்வோர்களாகவே,  ஆண்களாகவே அல்லது பெண்களாகவே இருந்தால் எப்படி இருக்கும்?

அல்லது இந்த பூமி முழுவதும் கடலாக இருந்தால் எப்படி இருக்கும்? அல்லது நாம் சுவாசிக்கும் காற்றில் பிராணவாயு மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்? அல்லது இந்த பிரபஞ்சத்தில் நமது பூமி மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்?

நமக்கு உணவு தேவைப்படுகிறது. உணவு(உற்பத்தி)க்கு மழை, வெயில் தேவை. மழைக்கு மேகங்கள் தேவை, மேகங்களுக்கு நீர் தேவை. வெயிலுக்கு சூரியன் தேவை. குழந்தைக்கு அம்மா தேவை. அம்மாவுக்கும்  குழந்தை தேவை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த படைப்பில் எல்லாமே ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கின்றன. உறவு கொண்டிருக்கின்றன. ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.

இப்படி ஒன்றோடொன்று சார்ந்திருக்கிற உறவுகளை நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்று கொஞ்சம் பார்த்தால்........?

பல உறவுகளில் விரிசல்கள். ஓட்டைகள். காயங்கள், உடைசல்கள். பெரும்பாலும் நம்மால் பிறரை சகித்துக்கொள்ள முடியவில்லை. நமது அஹங்காரம் மேலோங்கி நிற்கிறது. 'நான்' என்ற நினைப்பு பல உறவுகளை பிரித்து விடுகிறது. மற்றவர்களை நம்மால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மற்றவர்கள் நடந்து கொள்வதில்லை என்ற எண்ணமும் நம்மை ஏன் மற்றவர்கள் புரிந்து கொள்வதில்லை என்ற எண்ணமுமே மேலோங்கி நிற்கின்றன. மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நம்மை மாற்றிக்கொள்ளவும் முடிவதில்லை. பல உறவுகளில் சண்டை, சச்சரவு, அதையும் மீறி பகை. நம்பிக்கையின்மை, பொறாமை, குறை கூறுதல்  நிறைந்திருக்கின்றன. நம்மால் ஏன் மற்றவர்களுடன் - நமது மிக நெருங்கிய உறவுகளுடன் கூட - ஒத்துப் போக முடிவதில்லை.

பல உறவுகளில் சகிப்புத்தன்மை என்கிற பெயரில் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டும் இருக்கிறோம். ஒன்று நாம் காயப்பட்டவர்களாக இருக்கிறோம் (victim) அல்லது தியாகிகளாகிவிடுகிறோம் (martyr).

கணவன்மனைவி, அப்பாஅம்மா, குழந்தைகள், சகோதர சகோதரிகள், தாத்தாபாட்டி, பேரன்பேத்தி இப்படி நமது நெருங்கிய உறவுகளில் கூட நமக்கு பல குறைகள் இருக்கின்றன. இந்த குறுகிய வட்டத்திற்குள் கூட நல்ல உறவு கொண்டிருப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவு.

மற்றவரை புரிந்து கொள்ளும் முயற்சி பலருக்கும் குறைவாகவே காணப்படுகிறது. மற்றவர்களின் நிலையில் நம்மை நிறுத்தி யோசிப்பதென்பது மிக அரிதாக இருக்கிறது. நமது நிலையிலிருந்தே எல்லாவற்றையும் எடை போடுகிறோம்.

ஒரு உதாரணத்திற்கு: பல வீடுகளில் கணவனுக்கு  அலுவலகத்திலும் மனைவிக்கு அடுப்படியிலும் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இருவருமே அவரவர்கள் இடத்தில் வேலை செய்தால்தான் அடுத்தவர் சௌகரியமாக இருக்க முடியும். இருவருடைய வேலையிலும் கஷ்டங்கள் இருக்கின்றன. எதுவுமே எளிதான சமாச்சாரம் இல்லை. மாலையில் வீடு திரும்பிய கணவனுக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது. நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மனைவிக்கு மாலையிலாவது கொஞ்சம் வெளியே போனால் தேவலை என்று தோன்றுகிறது. இரண்டு முரண்பட்ட எதிர்பார்ப்புகளிலிருந்து இருவருமே மீள முடிவதில்லை.

வசதியில்லாத ஒரு தம்பி. தனிக்கட்டை. கூடப்பிறந்தவர்கள் மூன்று நான்கு பேர்கள். தம்பியின் வயதான காலத்தில் அவரை யார் கவனிப்பது? அவரை கவனித்துக் கொள்வதால் தனக்கு என்ன லாபம் என்று பல குடும்பங்களில் கணக்கு போடுகிறார்கள்.
               
பெற்றோர்கள் என்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்ற ஆதங்கம் பல குழந்தைகளுக்கும் வயதான காலத்தில் பிள்ளைகள் தன்னை சரியாக கவனிக்கவில்லை என்ற ஆதங்கம் பல பெற்றோர்களுக்கும் இருக்கிறது.

குறைகள் இல்லாத உறவு முறைகளை எங்கே காண முடிகிறது. பல உறவுகள் தள்ளி நின்று அழகு பார்த்துக்கொள்ளும் வரை சரியாகத்தான் இருக்கிறது. கிட்ட வந்தால் பிரச்சினைதான்

உறவு முறைகளில் நாம் எல்லோரும் காணத் துடிப்பது அன்பு மட்டுமே. ஆனால், நாம் பொதுவாக காண்பதென்னவோ மிஞ்சியிருக்கும் காயங்கள், ரணங்கள், குற்ற உணர்ச்சிகள், பொறாமை, கோபங்கள், குறைகள், போன்றவை தான். இந்த உணர்ச்சிகளெல்லாம் இல்லாமலேயே நம்மை அந்த கடவுள் படைத்திருக்க முடியாதா? முடியாது என்று சொன்னால் கடவுளுக்கு அவ்வளவுதான் சக்தி என்று ஆகி விடும். முடியும் என்று சொன்னால், அவர் ஏன் அப்படி செய்யவில்லை என்ற கேள்வி எழும். இந்த உணர்ச்சிகளெல்லாம் இயற்கையானதுதானா? இயற்கையாக இருந்தால் மாற்ற முடியாதா?

உணர்ச்சி பூர்வமாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி நமக்குத் துணை, தொடர்பு, சார்ந்திருத்தல் தேவைப் படுகிறது. அந்த துணைக்காக, தொடர்புக்காகத்தான் பல விதமாக ஏங்குகிறோம், பல காரியங்களைச் செய்கிறோம். இந்த தேவைகளே உறவை உருவாக்குகின்றன. உறுதிப் படுத்துகின்றன.

அன்பு, பாசம் என்பது ஒரு புறமிருந்தாலும் அதற்கும் கீழே ஒவ்வொருவரின் தேவை அடி மனதிலிருந்து வேலை செய்கிறது. பொதுவாக, வெகு சிலரைத் தவிர எதிர்பார்ப்புகளில்லாத   நிபந்தனைகளில்லாத அன்பையோ, பாசத்தையோ கொடுக்க முடிவதில்லை. It looks almost impossible to give or receive unconditional love to or from anyone. We all have expectations from our love, though many are subtle and unstated.

இந்த சார்ந்திருக்கும் நிலை தொடரும் வரை உறவுகள் விரிவதில்லை. சார்ந்திருக்கும் தேவை எங்கே அற்றுப் போய் விடுகிறதோ அங்கே உறவுகள் நீடிப்பதில்லை. சார்ந்திருப்பதில் ஒரு தனி சுகம் இருக்கிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை உறுதி படுத்திக்கொள்வதற்காக எதையும் தியாகம் செய்யலாம் என்றே தோன்றுகிறது. ஆனால், என் அஹங்காரம் தடுக்கிறதே? என்ன செய்வது?


Tuesday, February 21, 2017

What I found in my laptop!

While going through several files in my laptop I chanced upon a piece of my writing intended to be an Epilogue for my novel: WHAT, IF OUR DREAMS COME TRUE! AN UNCOMMON MEETING WITH LORD SIVA" but failed to appear in my novel in the end pages. I found it interesting and thought I should share it with my friends. Here is the intended Epilogue:

Quote:
...
Epilogue

Author’s note

Now that I concluded this novel, looking back, I wondered who the real hero of this book was. When I started this novel I presumed that the narrator would be the hero. But as the story progressed and got completed I realized that it was Lord Siva who was the hero. HE makes things happen. He was the Doer, He was the Done and He was the process called the Doing. The narrator was just a tool in the process – one of the several characters in HIS drama.

Dreams too come true! We all wish things to be different. We all have idealistic dreams, but very rarely we draw courage to bring them to reality. But history is also full of instances of people who dreamed and also brought them to reality. Gandhi Ji, Abraham Lincoln, Ramakrishna Paramahamsa, to name only a few.

“Dream!” was one of the very powerful messages from our former President Dr. A. P. J. Abdul Kalam. “We can make it!” was another powerful message from Mr. Barak Obama, the President of the United States of America.

We have to only know that it is He who makes everything possible. We have to only take the first step about our intentions, about what we deeply desire, and about what we truly dream.

“Do your duty. Do not develop attachment to the results. I provide the results.” is another powerful message from Bhagavad Gita.

Lord appears before all of us, all the time. Maybe some innocuous statement in a newspaper, a TV show, a stranger, a relative, an object, an obstacle and so on. They are all his messengers. HIS forms are so many, including his messengers. We have to only take notice. He is constantly with us All the Time, in All Ways, Always.

“Yadhaa Yadhaa hi Dharmasya Glaanir Bhavathi Bhaaratha
Abhyudhdhaanam adharmasya tadhaatmaanam Srijaamyaham
Paritranaaya Saadhoonam Vinaashaaya Cha dushkruthaam
Dharmasamsthaapanaarthaaya Sambhavaami Yuge Yuge!!”                      
-          Bhagavad Gita

Whenever dharma declines, O Bharat (Arjun), and the purpose of life is forgotten, I will manifest myself!
I am born in every age (yuga) to protect the good, to destroy the evil and establish dharma
-          Bhagavad Gita

I started this book sometime in March 2011, and just when I completed it during December 2012, I happened to be in Tirunelveli, visiting our family temple. Suddenly, I thought, ‘Why not I drive to Chepparai?’

Chepparai, on the banks of the river Tamirabarani, is very close to Tirunelveli. Lord Siva had arisen here as Lord Nellaiappar. Tamira Sabhai, one of the five important abodes of Lord Siva is located here. Lord Siva assumes the form of Dancing Nataraja – the Cosmic Dancer, in all these five places. Cosmic Dance right from the day of the Big Bang, as far as we know now. Rolling, revolving, rotating, spreading, contracting, diminishing, crashing, speeding, collapsing, shining, shimmering, appearing, disappearing, deluding, frightening, soothing, storming, thundering, lightning, twinkling, causing, preserving, destroying, growing, dying – all different dancing postures of Lord Nataraja.  A great Maya! A great delusion!

The annual Arudra Darshan festival was only a couple of days ahead. It was during the Tamil Margazhi month (usually December). The temple was in a festive mood and looked renovated for the festival.

By Providence, as I just stepped into the temple, Lord Nataraja was being taken on a procession on a palanquin and in the process, the palanquin bearers were dancing along with the Utsava Moorthi of Lord Nataraja placed on the palanquin – moving forward and backward, left and right, gently and speedily, rocking the palanquin.  It looked to me as though Lord Nataraja Himself was dancing in all His Bliss. I went into an exalted state instantly, tears flowing down my eyes.

‘O Lord Nataraja! You brought me here! You inspired me to write a novel about You! It is You who wrote this book about Yourself! Thank you so much!’

‘You are again dividing and discriminating. Why don’t you say for once, ‘I wrote That. I am That. I am the Cause and I am the Effect.’ Lord Siva seemed to answer.

I sat for several minutes and meditated before HIM on what HE told me, ‘I am That. I am the Cause and I am the Effect. I wrote That.’

‘Aham Brahmasmi.’ : I Am the Brahman
‘Tat Tvam Asi’: You Are That
‘Ayam Atma Brahma’: My Soul is Brahman
Om Shanti!Shanti!Shanti!: Om! Peace! Peace! Peace!

*****

- UNQUOTE

Sunday, February 12, 2017

12.02.17 ஆன்மீக மலரும் நினைவுகள் - பகுதி 1

12.02.17 ஆன்மீக மலரும் நினைவுகள் - பகுதி 1

நேற்று மாலை எதேச்சையாக ‘ஓம் ஜெயஜகதீச ஹரே’ என்ற ஆரத்தி பாடலை என் பேத்தியுடன் சேர்ந்து பாட நேர்ந்தது. ஐந்து வயதேயான தமிழ் அறியாத அந்தப் பெண் மழலைத் தமிழில் என்னுடன் சேர்ந்து பாடத் தொடங்க அதைத் தொடர்ந்து ‘சதா மந்த ஹாசம்’ என்ற ஸ்ரீஅம்மா பகவான் சத்சங்கத்தில் நான் அடிக்கடி விரும்பிப் பாடும் பாடலைத் கண்ணை மூடி பாடிக்கொண்டிருந்தேன். என்னை அறியாமல் என் கண்களில் நீர் சுரந்து கொண்டிருந்தது. என் ஞாபகங்கள் என்னை பழைய நாட்களுக்கு இழுத்துச் சென்றது.

1978-79 என்று ஞாபகம். சென்னையில் வங்கியின் பிரதானக் கிளை ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்த நேரம். ஒரு நாள் வங்கி வாடிக்கையாளர் ஒருவரை முதன் முதலாக சந்திக்க நேர்ந்தது. அவருடைய கடன் கணக்கு சம்பந்தமான சில சிக்கல்களைப் பற்றி பேச்சு வார்த்தைகள் முடிந்த பின்னர் கிளம்பும் பொழுது அவர் எதேச்சையாக என்னிடம் கேட்டார், “நாளை பாபா அவர்கள் சென்னைக்கு வருகிறார்கள். அவரை தரிசனம் செய்ய உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா?” என்று. பகவான் சத்ய சாயிபாபா சென்னை வருகிறார் என்ற அளவில் செய்தித்தாள்களில் படித்திருந்தேனே தவிர அவரைத் தரிசிப்பது பற்றி நான் ஆலோசித்தது இல்லை. சென்னை சத்ய சாயி கமிட்டியில் தான் ஒரு முக்கிய அதிகாரி என்றும் பாபாவை தரிசனம் செய்ய  நான் வருவதென்றால் எனக்காக முன் வரிசையில் அமர்வதற்கு அவரால் ஏற்பாடு செய்து தர முடியும் என்றும் பின்பு அவரே கூறினார். நானும் வருவதற்கு சம்மதித்தேன்.

சொன்னபடி, அப்பொழுதிருந்த சென்னை ஆபட்ஸ்பரி மண்டபத்தில் நான் மதியம் ஆஜரானேன். அன்று விடுமுறை நாள். அதனால் கூட்டம் எக்கச் சக்கம். இந்தக் கூட்டத்தில் எப்படி நான் உள்ளே போக முடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அந்த வாடிக்கையாளர் என்னை முகப்பிலேயே அடையாளம் கண்டு கொண்டார். என்னை மட மடவென்று உள்ளே கூட்டிக்கொண்டு போய் முதல் வரிசையில் பத்து பதினைந்து பேரில் என்னை அமர்த்தினார். என் மனைவி பெண்கள் வரிசையில் அமர்ந்து கொண்டாள். “பாபா கிண்டியில் ஒரு நிகழ்ச்சிக்கு முதலில் செல்கிறார். அது முடிந்து இங்கே வருவார். இங்கே பஜனை நடந்து கொண்டிருக்கும். அமர்ந்து ரசித்துக் கொண்டிருங்கள். எனக்கு இன்னும் பலரை சந்திக்க வேண்டியிருப்பதால் என்னைத் தேட வேண்டாம். நானே பின்னர் உங்களை சந்திக்கிறேன்,” என்று கூறி விடை பெற்றுக் கொண்டார்.

சிறிது நேரத்திலெல்லாம் பஜனை தொடங்கி விட்டது. பஜனைக் குழுவின் பாடகர்கள், இசைக் கருவிகளை இசைப்பவர்கள் என்று ஒரு சிறிய கூட்டம் எனது வலது பக்கத்தில் அமர்ந்து கொண்டிருந்தது. மண்டபத்தில் ஆயிரத்துக்கும் மேலான பக்தர்கள் அமர்ந்திருந்தனர். பஜனை தொடங்கியவுடன் மண்டபத்தில் எல்லோரும் அமைதியாயினர்.

ஒரு தியான ஸ்லோகத்தோடு பஜனையை கணீரெனத் தொடங்கிய ஒரு பெண்மணி ‘கஜவதனா கஜானனா’ என்ற பாடலை உச்சஸ்தாயியில் பாட ஓரு நிமிடம் நான் ஸ்தம்பித்து  நிமிர்ந்து உட்கார்ந்தேன். அப்படியொரு இனிமையான, சுண்டி இழுக்கக்கூடிய ஒரு குரலை முதன் முதலாக நேராகக் கேட்ட பொழுது எனக்கு மயிர் சிலிர்த்தது. என்னை அறியாமல் என் கண்களில் நீர் முட்டியது. தொடர்ந்து பல பஜனைப் பாடல்கள். நான் கண்களை மூடி பாடல்களைக் கேட்கத் தொடங்கினேன். ஒவ்வொரு பாடலுக்கு என் கண்களிலிருந்து கண்ணீர் முட்டிக்கொண்டு கொட்டத் தொடங்கியது.

இடையில் மேடையிலிருந்து ஒரு அறிவிப்பு. பாபா அவர்கள் கிண்டி நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்து விட்டார். அது முடிந்ததும் நேரே ஆபட்ஸ்பரிக்குத் தான் வரப் போகிறார். அது வரை பஜனைகள் தொடரும் என்று.

பஜனை தொடர்ந்தது. முதன் முறையாக பஜனைப் பாட்டுகளில் என்னை இழந்தேன். சிறு வயதில் எங்கள் தெருவிலிருந்த பஜனை மடத்தில் மார்கழி மாத பஜனைக்கு விளையாட்டாக சென்று வந்திருக்கிறேன். திரு முருகதாஸ் அவர்களின் பஜனை கேட்டிருக்கிறேன். டீ.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பக்திப் பாடல்களை விரும்பிக் கேட்டிருக்கிறேன். அவை எதிலிலுமே இல்லாத ஒரு ஈர்ப்பு, ஈடுபாடு அன்று நான் கேட்ட பாபா பஜனையில் இருந்தது. என்னவென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியவில்லை. ஆனால், தொடர்ந்து ஒன்றரை மணி நேரத்துக்கு பஜனை நடந்து கொண்டிருந்தது. நேரம் கடந்து கொண்டிருப்பதை நான் கவனிக்கவில்லை. என் கவனம் முழுவதும் பாட்டிலிலேயே இருந்தது. தொடர்ந்து நான் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தேன். கண்களிலிருந்து நீர் என்னால் அடக்க முடியாமல் கொட்டிக் கொண்டிருந்தது. பாபாவைப் பற்றியெல்லாம் கூட நான் யோசிக்கவில்லை.

மீண்டும் ஒரு அறிவிப்பு. பாபா அவர்கள் அன்றைக்கு ஆபட்ஸ்பரி வருவது ரத்தாகிவிட்டது. கிண்டியிலேயே அதிக தாமதமாகி விட்டதால் அவரால் வர இயலவில்லை என்று.
பஜனையும் அடுத்த ஒன்றிரண்டு பாடல்களுடன் நிறைவு செய்யப்பட்டது. ஆயிரத்துக்கும் மேலாக கூடியிருந்த அந்தக் கூட்டம் எந்த அமளியுமில்லாமல் அமைதியாக வெளியேறியது. யாருக்கேனும் பாபா வரவில்லையே என்ற ஏமாற்றம் இருந்திருந்தால் கூட அதை யாரும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

வெகு நேரத்திற்குப் பிறகு கண்களைத் திறந்து நானும் அமைதியாக வெளியேறினேன். என் நண்பரைக் கூடத் தேடவில்லை. மனைவியிடமும் அதிகமாக பேசவில்லை. மனதில் ஏதோ இனம் புரியாத ஒரு உணர்ச்சி. சோகம் என்றும் சொல்லலாம். பஜனைப் பாடல்களோடு பாடல்களாக உள்ளுக்குள்ளே அழுதிருக்கிறேன். ஏன் என்று எனக்குப் புரியவில்லை. பாபா வரவில்லையே என்ற ஏமாற்றமோ வருத்தமோ எனக்கு ஏற்படவில்லை.

அதற்குப் பிறகு பல ஞாயிற்றுக் கிழமைகளில் ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்த பாபாவின் சுந்தரம் கோவிலுக்குப் போய் கூட்டத்தோடு கூட்டமாக பஜனையைக் கேட்டு வருவேன். சரியான நேரத்துக்கு துவக்குவார்கள். சரியான நேரத்துக்கு முடித்து விடுவார்கள்.

ஆனால், 1980-ல் வட இந்தியாவுக்கு மாற்றலாகிப் போன பின்பு பாபா இயக்கத்துடன் எனக்கு ஏற்பட்ட ஒரு பிணைப்பு அறுந்து விட்டது. ஆனால், பாபா பஜனையில் எனக்கு ஏற்பட்ட உணர்வு பூர்வமான அனுபவம் பின்பு ஸ்ரீஅம்மா பகவான் இயக்கத்தில் மீண்டும் கிடைத்தது. அப்பொழுதுதான் ஒரு தெய்வீக சக்தியுடன் எனக்கு ஒரு பிணைப்பு இருப்பதை முதன் முதலில் உணர்ந்து கொண்டேன்.

            
             அதைப் பற்றி அடுத்த பகுதியில் எழுதுகிறேன்…

Thursday, February 09, 2017

05.02.17 ஞாபக சக்தி (MEMORY)

05.02.17 ஞாபக சக்தி (MEMORY)

கடந்த ஒரு வாரத்தில் மதிய உணவு என்ன சாப்பிட்டேன் என்று நினைவு படுத்திப் பார்த்தேன்.
04.2.17 சனிக் கிழமை – பொங்கல், கொத்சு, சட்னி, மோர் சாதம், மோர் மிளகாய்   வற்றல், கூட்டு
03.02.17 வெள்ளிக் கிழமை – சப்பாத்தி, பயங்கன் பர்த்தா
02.02.17 வியாழக் கிழமை – நினைவில்லை
01.02.17 புதன் கிழமை – நினைவில்லை
31.01.17 செவ்வாய்க் கிழமை – நினைவில்லை
30.01.17 திங்கட் கிழமை – நினைவில்லை
29.01.17 ஞாயிற்றுக் கிழமை – கோவிந்தா ரெஸ்டாரண்டில் சலாட், சாதம், தால், பழங்கள் கலந்த யோகர்ட், பேன் கேக், டோரிட்டோ, பக்கோடா, வறுத்த உருளைக் கிழங்கு

நேற்று சாப்பிட்டது தெளிவாக நினைவு இருந்தது. முந்தா நேற்று சாப்பிட்டது ஒரு மாதிரியாகத்தான் நினைவு இருந்தது. அதற்கு முந்தின தினங்களில்…எனக்கு நினைவில்லை. ஆனால் ஒரு வாரம் முன்பு சாப்பிட்டது மட்டும் ஏன் நினைவிருக்கிறது? ஏனென்றால் அன்று நாங்கள் கார்ட்ச்னர் குகைகளுக்குச் செல்லும் வழியில் டூசான் என்ற இடத்தில் இருந்த ‘ஹரே க்ருஷ்ணா’ இயக்கத்தைச் சேர்ந்த ‘கோவிந்தா’ ரெஸ்டாரண்ட்டில் சாப்பிட்டோம். பல உள்ளூர் அமெரிக்கர்கள் கும்பல் கும்பலாக வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். உள்ளூர் மக்களுக்காக மசாலா, உப்பு காரமில்லாத ‘சாத்விக்’ உணவு. எப்படி மறக்க முடியும்?

இடைப்பட்ட நாட்களில் வழக்கமான சலிப்பூட்டக்கூடிய (சுவையாக இருந்தாலும்) ROUTINE சாப்பாடு. விசேஷமாக நினைவில் வைத்துக்கொள்ள எதுவுமில்லை.

எப்படி ஞாபகப்படுத்திக்கொள்வது? சரி மனைவியிடம் கேட்போம் என்று விசாரித்தேன். அவள் நினைவு கூர்ந்தது படி:

வியாழக் கிழமை – சப்பாத்தி, மட்டர் பன்னீர் (அதில் ஒரு பகுதி இன்னும் ஃப்ரிட்ஜில் உட்கார்ந்து கொண்டிருப்பதால் அவளுக்கு இன்னும் நினைவில் இருக்கிறது)
புதன் கிழமை – சாதம், வற்றல் குழம்பு, பீன்ஸ் கரி
செவ்வாய் கிழமை – சப்பாத்தி. என்ன கறி சமைத்தோம் என்று அவளுக்கும் நினைவில்லை. அதைப் பற்றிக் கொஞ்சம் அலசிப் பார்த்தோம். சட்டென்று நினைவுக்கு வந்தது. திங்களன்று மாலையிலேயே அடுத்த நாளுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் நண்பர் ஒருவர் எங்களுக்கு சமைத்துக் காட்டிய ஒரு விதக் கூட்டை சமைத்தோம் என்று ஞாபகம் வந்தது.
திங்கட் கிழமை – லெமன் ரைஸ், பீட்ரூட் கறி (ஞாயிற்றுக் கிழமையன்று  வெளியே டூர் போய் வந்த பின்பு அடுத்த நாள் சமையலுக்காக பீட்ரூட்டை நான் நறுக்கிய போது ‘ஒரே ஓரு பீட்ரூட் நறுக்கினால் போதும்’ என்று மனைவி சொன்னது அவளுக்கு  ஞாபகம் வந்தது.)

சமையல், சாப்பாடு என்று மட்டுமில்லை, எல்லா விஷயத்திலும் அவளுக்கு என்னை விட ஞாபக சக்தி அதிகம்தான்.

என்னடா, இவன் என்னென்ன சாப்பிட்டான் என்று தெரிந்து கொள்வது அவ்வளவு முக்கியமான வேலையா என்று நினைக்கிறீர்களா?

இல்லை. ஞாபக சக்தியைப் பற்றிய MOONWALKING WITH EINSTEIN என்ற ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் எழுதியிருந்த பல கருத்துக்களைப் பற்றிக் கொஞ்சம் யோசனை பண்ணிப் பார்த்ததில் எழுந்ததுதான் இந்த ஆராய்ச்சி.

      1. நமது ஞாபக சக்தியை ஒரு பெரிய பொருட்டாக நாம் கருதுவதில்லை. WE TAKE IT FOR GRANTED.  நமது நினைவு கூறும் ஆற்றல் கூடப் பிறந்ததா அல்லது அது நாம் வளர, வளர நமது அனுபவங்களையொட்டி நமது மூளையில் ஏற்படும் மாற்றங்களா என்பது பற்றி விஞ்ஞானம் இன்னும் தீர்மானமாகச் சொல்லவில்லை.
       2.     ஒரு வேற்று நபரோடு அல்லது பொருளோடு, அல்லது  நிகழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்காமல் நம்மால் பல  நினைவுகளை வெளிக்கொணர முடிவதில்லை. அதே போல எந்த ஒரு வேற்றுப் பொருளோடும் சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தை நாம் ஞாபகம் வைத்துக்கொள்வதுமில்லை.
       3.     ஒரு விஷயத்தைப் பற்றிய சீரிய கவனம் இருந்தால் மட்டுமே அது நினைவு வைத்துக்கொள்ளத் தகுதியுடையதாகிறது. இல்லையென்றால், அந்த விஷயம்  நிராகரிக்கப்பட்டு நமது நினைவை விட்டு அகன்று விடுகிறது.
          4.     காலம் என்று ஒன்று இல்லையென்றால் நினைவு என்பதற்கு தேவையோ இடமோயிருக்காது. ஆனால், நினைவு என்று ஒன்று இல்லையென்றால் காலத்துக்கு ஏதேனும் வேலையிருக்குமா? WITHOUT TIME THERE MAY BE NO NEED FOR MEMORY. BUT WITHOUT MEMORY THERE MAY NOT BE ANY TIME. நினைவுகள் என்று ஒன்று இருப்பதினாலேயே காலம் கடந்து செல்வதை நம்மால் உணர முடிகிறது.  ஒருவருக்கு அம்னீஷியா என்ற ஞாபக மறதி வியாதி வந்து விட்டால்  ஒரு குறிப்பிட்ட காலத்தின் நிகழ்வுகள் எல்லாம் மறந்து போய்விடக் கூடும். நேற்று என்பது என்ன, கடந்த வாரம் என்பது என்ன என்பது கூட அவருக்கு மறக்கக் கூடும். 1967-ல் கே. ஆர். விஜயா, ரவிச்சந்திரன், சோ இணைந்து நடித்து சோ அவர்கள் கதை, வசனம் எழுதி வெளிவந்த ‘நினைவில் நின்றவள் என்ற படம்தான் தமிழில் அம்னீஷியாவை கருத்தாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் படம் என்று  நினைக்கிறேன்.  
    5.     காலத்தை வேகமாக போவதாகவோ அல்லது மெதுவாக ஊர்ந்து போவதாகவோ உணர்வது அவரவருடைய தனிப்பட்ட கணிப்பு. ஒரு மருத்துவ மனையில் ஒரு நோயாளி அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அவரை கவனித்துக் கொள்ளும் இன்னொருவர் அவரருகேயே போரடித்து விழித்திருக்கிறார். அவருக்கு நேரம் மிக மெதுவாக  ஊர்வது போல ஒரு உணர்வு. வெகு நேரம் கழித்து விழித்துக் கொண்ட நோயாளியோ ‘நேரம் போனதே தெரியவில்லை’ என்கிறார். கடந்ததென்னவோ ஒரே நேரம்தான். ஆனால் இரண்டு நபர்கள் வெவ்வேறு விதமாக உணர்கிறார்கள்.  ஒரு சுவாரசியமான புத்தகத்தைப் படிக்கும் பொழுது நேரம் போவதே தெரிவதில்லை. அதே சமயம், தெரியாத்தனமாக நடு ராத்திரியில் விழிப்பு வந்து தூக்கம் கெட்டுப் போய்விட்டால் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மணி நேரம் போவது போலத் தொல்லையாகத் தோன்றும். 
6. ஞாபக சக்தியில் இரண்டு முக்கிய வகைகள் உண்டு.
Ø  முதலாவது, ஒரு சில விஷயங்களைப் பற்றிய ஞாபகம் நமக்கு இருக்கிறது என்ற உணர்வு. நமது காரின்  நிறம், குழந்தையின் பிறந்த தேதி, ஒரு சில எண்கள்…இதிலும் இடம், காலம் சாராதது, சார்ந்தது, என்று இரண்டு வகைகள் உண்டு.
§  முதலாவது என்னுடைய அல்லது நெருங்கிய உறவினர், நண்பர் அவர்களின் தொலைபேசி எண், தி. நகரிலிருந்து பாரி முனைக்குப் போவதற்கு எந்த  எண் பஸ்ஸில் போக வேண்டும் …இது போன்றது. இவை இடம் காலம் சம்பந்தப்படாதது.
§  இரண்டாவது எப்பொழுது, எங்கே, எப்படி போன்ற கேள்விகளுக்கு பதில் கொடுக்கக் கூடியவை. வழக்கமாக சாப்பிடும் கோப்பையில்தான் இன்று காஃப்பி குடித்தோமா என்ற ஞாபகம். இன்று பஸ்ஸில் போகும் பொழுது வழக்கமாக வரும் ஓட்டியோ அல்லது கண்டக்டர்தான் இருந்தாரா..இது போன்றது.
§  முதலாவது பல தகவல்களைப் பற்றிய நம்மிடைய அறிவு. இரண்டாவது அந்த விஷயங்களைப் பற்றிய நமது அனுபவங்களின் ஞாபகம். 
Ø  இரண்டாவது: ஒரு சில விஷயங்கள் நமக்குத் தெரியும் என்ற குறிப்பிட்ட விழிப்புணர்வு இல்லாமல் இருத்தல். சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட பின் நம்மை அறியாமலேயே கீழே விழாமல் சைக்கிளை ஓட்டுவது, நம்மை அறியாமல் நமது கால்கள் நம்மை நம் வீடு நோக்கி நகர்த்துவது, சிறிய வயதில் அம்மாவின் கைப் பிடித்து எழுதக் கற்றுக் கொண்டது…  போன்றவை இதில் அடங்கும்…
        7.     பல தகவல்களை  உருவங்களாக (IMAGES)  ஞாபகப் படுத்திக்கொள்ளும் பழக்கம் இயற்கையாகவே மனிதனுக்கு இருந்திருக்கிறது. உதாரணத்துக்கு ஒருவரிடம் இரண்டு புகைப்படங்களைக் காட்டி ஒரு படத்தில் இருப்பவர் பெயர் பூஜாரி என்றும் இன்னொரு படத்தில் இருப்பவர் பூஜாரியாக இருப்பவர் என்று கூறுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஒரு சில நாட்களுக்குப் பிறகு அதே இரண்டு புகைப்படங்களையும் காட்டி அந்தப் புகைப்படங்களோடு தொடர்புடைய பெயர்களை நினைவு கூறச் சொன்னால் பெரும்பாலும் கோவிலில் பூஜை செய்யும் பூஜாரியை ஞாபகம் வைத்திருப்பார். மற்ற பெயரை மறந்திருப்பார். ஏனென்றால் கோவிலில் பூஜை செய்பவரை தன்னை அறியாமலேயே மனதில் உருவகப்படுத்தி  நினைவில் வைத்திருந்திருப்பார்.
   8.     அடிப்படையில், ஞாபக சக்தி என்பது நமது மூளையில் நியூரான்களுக்கிடையே ஏற்படும் ஒரு நெட்வொர்க். நம்முடைய ஒவ்வொரு எண்ணமும், உணர்வும், இந்த நெட்வொர்க்கை மாற்றியமைக்கக் கூடிய தன்மை வாய்ந்தது. ஆனால், நமது உடம்பின் செல்கள் எப்படி இந்த ‘நினைவு மையத்தை’ ஏற்படுத்திக்கொள்கின்றன என்பதை இன்னமும் விஞ்ஞானம் கண்டுபிடிக்கவில்லை.
    9.     சாதாரணமாக ஒருவரின் மூளையில் ஒரு சமயத்தில்  சுமார் 7 தகவல்களைத்தான் கையாள முடியும் என்று  கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுவும் கூட அந்த 7 தகவல்களின் மீது அவரது முழு கவனமும் இருந்தால்தான்.
    10.  ஒருவருக்கு அதீதமான ஞாபக சக்தி இருந்தாலோ அல்லது அதீதமான ஞாபக மறதி இருந்தாலோ விபத்துதான். மறதி என்பது இறைவன் கொடுத்த வரம்.

ஒரு தகவலை ஞாபகம் வைத்துக்கொள்ள  மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்து மனப்பாடம் செய்யும் ROTE METHOD-ஐயே நம்பி வந்திருக்கிறோம். இப்பொழுதுள்ள கல்வி முறையில் ஒரு பெருங்குறை என்னவென்றால் ‘டன்’ கணக்கில் புதுப் புதுத் தகவல்களை மாணவர்கள் மீது திணிக்கிறோம். ஆனால், அந்தத் தகவல்களை எப்படி நினைவு வைத்துக்கொள்வது என்பதைப் பற்றி  எந்த யுக்தியைப் பற்றியும் பொதுவாக சொல்லிக் கொடுப்பதில்லை. உதாரணத்துக்கு, ஒரு பெரிய எண்ணை நினைவு வைத்துக்கொள்ள அதை மூன்று அல்லது நான்கு துண்டுகளாக பிரித்துக்கொண்டால் எளிதாகி விடுகிறது. உதாரணத்துக்கு 9846123594 என்ற செல்ஃபோன் எண்ணை நினைவு வைத்துக்கொள்ள 984 612 3594 என்று மூன்று துண்டுகளாகவோ அல்லது 98 46 12 35 94 என்று ஐந்து துண்டுகளாகவோ நினைவு வைத்துக்கொள்வது எளிது.

ஒரு முக்கியமான கேள்வி: 15 வயதில் நான் எப்படி இருந்தேன் என்பது எனக்கு ஓரளவு ஞாபகம் இருக்கிறது. இன்று எப்படி இருக்கிறேன் என்பதும் எனக்குத் தெரிகிறது. அந்த 15 வயதே ஆன என்னை இன்றைய எனக்குப் பக்கத்தில் நிறுத்தி வைத்தால் எத்தனையோ மாற்றங்கள். என்னுள்ளே அன்று இருந்த கோடிக் கணக்கான அணுக்கள் இறந்து போய் புதிய அணுக்கள் தோன்றி விட்டன. இருந்தும் அன்று இருந்த என்னையும் இன்றைய என்னையும் பிணைத்து அந்த இருவருக்கும் ஒவ்வொரு பொழுதிலும் ஏதோ ஒரு தொடர்ச்சி இருப்பது போல எனக்கு ஒரு மாயத் தோற்றத்தை என்னுள்ளே ஏதோ ஒன்று ஏற்படுத்துகிறது.   அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது எது? ஆத்மா ,  ஆவி ,  கடவுள் என்று எந்தப் பெயரும் வைத்துக்கொள்ளலாம் ஆனால் ஞாபக சக்தி என்று மட்டும் ஒன்று இல்லாதிருந்தால்  தொடர்ச்சி இருப்பது போன்ற எண்ணம் நமக்கு ஏற்படுமா?

…ஒரு முழு நீள புத்தகமே எழுதலாம் போலிருக்கிறது. அவ்வளவு தகவல்கள் இணைய தளத்தில்.