Pages

Monday, February 27, 2017

What I found in my laptop: உறவுகளைப் பற்றி

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது கண்ணில் பட்டது. கொஞ்சம் சரி செய்து கீழே கொடுத்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். நன்றி வணக்கம். 

26.02.17 
உறவுகளைப் பற்றி

நீ யார்?”
நான் ராமசாமி
அது உன் பெயர். நீ யார்?”
நான் சந்திரசேகரின் பையன்.”
நீ யார்?”
கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. “நான் சுந்தரம் அவர்களின் பேரன்.”
நீ யார்?”
விஜயின் சகோதரன்.”
நீ யார்?”
நான் யாரென்று எப்படி புரியவைப்பது. “நான் ஒரு மாணவன்.”
நீ யார்?”
மீண்டும் குழப்புகிறாரே? “நான் திருநெல்வேலியைச் சேர்ந்தவன்.”
நீ யார்?”
நான் ஒரு இந்தியன்.”
நீ யார்?”
நான் ஒரு தமிழன்,”
இப்பொழுது உங்களிடம் பதில் சொல்லிக்கொண்டிருப்பவன்,”
ஒரு ஆண்

இப்படிப் பல பதில்களைக் கூறிக்கொண்டே போகலாம்.

வேறொரு நபரோடு, அல்லது ஒரு கூட்டத்தோடு, அல்லது ஒரு தொழிலோடு, அல்லது வேறொன்றோடு நம்மை உறவு (தொடர்பு) படுத்திக்கொள்ளாமல் நம்மால் நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள முடியாது. வேறொன்றும் இல்லையென்றால் நான் யார் என்று எனக்கே தெரியாது. நான் இன்னாருடைய மகன், இன்னாருடைய கணவன். இன்னாருடைய சகோதரி. இன்னாருடைய மாமாஒரு தமிழ்நாட்டுக்காரன்ஒரு சென்னைவாசி. லயோலா கல்லூரியின் மாணவன். விப்ரோ கம்பெனியில் வேலை பார்ப்பவன். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

முயற்சி செய்து பாருங்கள். உங்களை எப்படி மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொள்வீர்களென்று.

சிறிய ஆனால் மகத்தான இந்த உண்மையை எனக்கு ஒரு மகான் உணர்த்தினார். அது வரை நான் இதைப் பற்றி யோசித்தது கிடையாதுபெரும்பான்மையானவர்கள் என்னைப் போலத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

உறவுகள் இருக்கும் வரைதான் நான் இருக்கிறேன். உறவுகள் இல்லையென்றால் நானில்லை. தொடர்பு இருக்கும் வரைதான் உறவுகள் நீடிக்கும். சார்ந்தே தோன்றியிருக்கிறோம். சார்ந்தே மறைகிறோம். Everything in this world is dependently arising and dependently ceasing.

நாமெல்லோரும் ஒருவருக்கொருவர் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முயற்சிப்பதில்லை. தெரிந்து கொண்டிருந்தால் நமது உறவுகள் வித்தியாசமாக இருந்திருக்கும். நாம் நடந்து கொள்ளும் முறையும் வித்தியாசமாக இருந்திருக்கும்.

உறவுமுறைகள்தான் நமது வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. இந்த உலகத்தில் எல்லாமே மற்றொன்றை சார்ந்திருக்கின்றன.

"வங்கத்தில் ஓடி வரும் நீரின் மிசையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.
கங்கை நதிப்புறத்து கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்.
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்." என்று பாடியிருக்கிறார் பாரதியார். நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதையே அவர் உணர்த்தியிருக்கிறார்.

ஒரு சமுதாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருவர் விவசாயி. கஷ்டமோ நஷ்டமோ நிலத்தில் கஷ்டப்பட்டு உழைத்து பயிரிடுகிறார். பயிர் விளைந்தவுடன், தனது தேவைக்கு மேலான விளைச்சலை சந்தைக்கு எடுத்துச் செல்கிறார். அங்கே ஒரு வியாபாரி இவருடன் பேரம் பேசி ஒரு விலைக்கு அந்த விளைச்சலை வாங்கிக் கொள்கிறார். அலுவலகம் போய் வரும் இன்னொருவர் அந்த விளைச்சலை தனது வீட்டிற்காக வாங்கிக் கொண்டு போகிறார். அவருடைய மனைவி அந்த விளைச்சலை உணவாக சமைக்கிறார். குடும்பத்தில் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். குப்பை சேருகிறது - உள்ளேயும் வெளியேயும். நகராட்சியிலிருந்து குப்பை அள்ள மற்றொருவர் வருகிறார். குப்பையை எங்கேயோ கொண்டு கொட்டுகிறார். நாட்பட நாட்பட அந்த குப்பை உரமாகிறது. அந்த உரத்திலிருந்து சத்தை எடுத்துக்கொண்டு வேறொரு செடி வளர்கிறது. மரமாகிறது. பூ பூக்கிறது. காய் காய்க்கிறது. காய் மீண்டும் உணவாகிறது. பூவை வேறொருவர் பறிக்கிறார். அதை கோவிலில் கொண்டு போய் சேர்க்கிறார். ஒரு அர்ச்சகர் அந்த பூவைக்கொண்டு ஆண்டவனுக்கு அர்ச்சனை செய்கிறார். அந்த ஆண்டவன் மகிழ்ந்து பக்தனுக்கு நல்லது செய்கிறார். இப்படி எல்லாமே ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றது.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் எல்லோருமே விவசாயிகளாகவே, அல்லது வணிகர்களாகவே அல்லது அலுவலகம் செல்வோர்களாகவே,  ஆண்களாகவே அல்லது பெண்களாகவே இருந்தால் எப்படி இருக்கும்?

அல்லது இந்த பூமி முழுவதும் கடலாக இருந்தால் எப்படி இருக்கும்? அல்லது நாம் சுவாசிக்கும் காற்றில் பிராணவாயு மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்? அல்லது இந்த பிரபஞ்சத்தில் நமது பூமி மட்டுமே இருந்தால் எப்படி இருக்கும்?

நமக்கு உணவு தேவைப்படுகிறது. உணவு(உற்பத்தி)க்கு மழை, வெயில் தேவை. மழைக்கு மேகங்கள் தேவை, மேகங்களுக்கு நீர் தேவை. வெயிலுக்கு சூரியன் தேவை. குழந்தைக்கு அம்மா தேவை. அம்மாவுக்கும்  குழந்தை தேவை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த படைப்பில் எல்லாமே ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கின்றன. உறவு கொண்டிருக்கின்றன. ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.

இப்படி ஒன்றோடொன்று சார்ந்திருக்கிற உறவுகளை நாம் எப்படி வைத்திருக்கிறோம் என்று கொஞ்சம் பார்த்தால்........?

பல உறவுகளில் விரிசல்கள். ஓட்டைகள். காயங்கள், உடைசல்கள். பெரும்பாலும் நம்மால் பிறரை சகித்துக்கொள்ள முடியவில்லை. நமது அஹங்காரம் மேலோங்கி நிற்கிறது. 'நான்' என்ற நினைப்பு பல உறவுகளை பிரித்து விடுகிறது. மற்றவர்களை நம்மால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மற்றவர்கள் நடந்து கொள்வதில்லை என்ற எண்ணமும் நம்மை ஏன் மற்றவர்கள் புரிந்து கொள்வதில்லை என்ற எண்ணமுமே மேலோங்கி நிற்கின்றன. மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நம்மை மாற்றிக்கொள்ளவும் முடிவதில்லை. பல உறவுகளில் சண்டை, சச்சரவு, அதையும் மீறி பகை. நம்பிக்கையின்மை, பொறாமை, குறை கூறுதல்  நிறைந்திருக்கின்றன. நம்மால் ஏன் மற்றவர்களுடன் - நமது மிக நெருங்கிய உறவுகளுடன் கூட - ஒத்துப் போக முடிவதில்லை.

பல உறவுகளில் சகிப்புத்தன்மை என்கிற பெயரில் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டும் இருக்கிறோம். ஒன்று நாம் காயப்பட்டவர்களாக இருக்கிறோம் (victim) அல்லது தியாகிகளாகிவிடுகிறோம் (martyr).

கணவன்மனைவி, அப்பாஅம்மா, குழந்தைகள், சகோதர சகோதரிகள், தாத்தாபாட்டி, பேரன்பேத்தி இப்படி நமது நெருங்கிய உறவுகளில் கூட நமக்கு பல குறைகள் இருக்கின்றன. இந்த குறுகிய வட்டத்திற்குள் கூட நல்ல உறவு கொண்டிருப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவு.

மற்றவரை புரிந்து கொள்ளும் முயற்சி பலருக்கும் குறைவாகவே காணப்படுகிறது. மற்றவர்களின் நிலையில் நம்மை நிறுத்தி யோசிப்பதென்பது மிக அரிதாக இருக்கிறது. நமது நிலையிலிருந்தே எல்லாவற்றையும் எடை போடுகிறோம்.

ஒரு உதாரணத்திற்கு: பல வீடுகளில் கணவனுக்கு  அலுவலகத்திலும் மனைவிக்கு அடுப்படியிலும் கடுமையாக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இருவருமே அவரவர்கள் இடத்தில் வேலை செய்தால்தான் அடுத்தவர் சௌகரியமாக இருக்க முடியும். இருவருடைய வேலையிலும் கஷ்டங்கள் இருக்கின்றன. எதுவுமே எளிதான சமாச்சாரம் இல்லை. மாலையில் வீடு திரும்பிய கணவனுக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது. நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மனைவிக்கு மாலையிலாவது கொஞ்சம் வெளியே போனால் தேவலை என்று தோன்றுகிறது. இரண்டு முரண்பட்ட எதிர்பார்ப்புகளிலிருந்து இருவருமே மீள முடிவதில்லை.

வசதியில்லாத ஒரு தம்பி. தனிக்கட்டை. கூடப்பிறந்தவர்கள் மூன்று நான்கு பேர்கள். தம்பியின் வயதான காலத்தில் அவரை யார் கவனிப்பது? அவரை கவனித்துக் கொள்வதால் தனக்கு என்ன லாபம் என்று பல குடும்பங்களில் கணக்கு போடுகிறார்கள்.
               
பெற்றோர்கள் என்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்ற ஆதங்கம் பல குழந்தைகளுக்கும் வயதான காலத்தில் பிள்ளைகள் தன்னை சரியாக கவனிக்கவில்லை என்ற ஆதங்கம் பல பெற்றோர்களுக்கும் இருக்கிறது.

குறைகள் இல்லாத உறவு முறைகளை எங்கே காண முடிகிறது. பல உறவுகள் தள்ளி நின்று அழகு பார்த்துக்கொள்ளும் வரை சரியாகத்தான் இருக்கிறது. கிட்ட வந்தால் பிரச்சினைதான்

உறவு முறைகளில் நாம் எல்லோரும் காணத் துடிப்பது அன்பு மட்டுமே. ஆனால், நாம் பொதுவாக காண்பதென்னவோ மிஞ்சியிருக்கும் காயங்கள், ரணங்கள், குற்ற உணர்ச்சிகள், பொறாமை, கோபங்கள், குறைகள், போன்றவை தான். இந்த உணர்ச்சிகளெல்லாம் இல்லாமலேயே நம்மை அந்த கடவுள் படைத்திருக்க முடியாதா? முடியாது என்று சொன்னால் கடவுளுக்கு அவ்வளவுதான் சக்தி என்று ஆகி விடும். முடியும் என்று சொன்னால், அவர் ஏன் அப்படி செய்யவில்லை என்ற கேள்வி எழும். இந்த உணர்ச்சிகளெல்லாம் இயற்கையானதுதானா? இயற்கையாக இருந்தால் மாற்ற முடியாதா?

உணர்ச்சி பூர்வமாகவும் சரி, உடல் ரீதியாகவும் சரி நமக்குத் துணை, தொடர்பு, சார்ந்திருத்தல் தேவைப் படுகிறது. அந்த துணைக்காக, தொடர்புக்காகத்தான் பல விதமாக ஏங்குகிறோம், பல காரியங்களைச் செய்கிறோம். இந்த தேவைகளே உறவை உருவாக்குகின்றன. உறுதிப் படுத்துகின்றன.

அன்பு, பாசம் என்பது ஒரு புறமிருந்தாலும் அதற்கும் கீழே ஒவ்வொருவரின் தேவை அடி மனதிலிருந்து வேலை செய்கிறது. பொதுவாக, வெகு சிலரைத் தவிர எதிர்பார்ப்புகளில்லாத   நிபந்தனைகளில்லாத அன்பையோ, பாசத்தையோ கொடுக்க முடிவதில்லை. It looks almost impossible to give or receive unconditional love to or from anyone. We all have expectations from our love, though many are subtle and unstated.

இந்த சார்ந்திருக்கும் நிலை தொடரும் வரை உறவுகள் விரிவதில்லை. சார்ந்திருக்கும் தேவை எங்கே அற்றுப் போய் விடுகிறதோ அங்கே உறவுகள் நீடிப்பதில்லை. சார்ந்திருப்பதில் ஒரு தனி சுகம் இருக்கிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை உறுதி படுத்திக்கொள்வதற்காக எதையும் தியாகம் செய்யலாம் என்றே தோன்றுகிறது. ஆனால், என் அஹங்காரம் தடுக்கிறதே? என்ன செய்வது?


No comments:

Post a Comment