Pages

Sunday, May 28, 2017

வலைப் பக்கங்களும் முகநூலும் பிரபலமாகி விட்ட பிறகு ....

வலைப் பக்கங்களும் முகநூலும் பிரபலமாகி விட்ட பிறகு எல்லோருமே எழுத்தாளராகி விட்டார்களோ என்று தோன்றுகிறது. முக நூலைத் திறந்தால் பக்கம் பக்கமாக ஓடுகிறது பதிவுகள். இதைத் தவிர புகைப்படங்கள், வீடியோக்கள் வேறு. பலருக்கும் நூற்றுக்கணக்கான முகநூல் நண்பர்கள். யார் எழுதியதைப் படிப்பது, பார்ப்பது என்பது மிகப் பெரிய பிரச்சினை.

அதிலும், மடிக் கணினி ஒரு விதமாகவும், ஐ-ஃபோன் ஒரு விதமாகவும், ஐ-பேட் ஒரு விதமாகவும் பலருடைய பதிவுகளைக் காட்டுகின்றன. செட்டிங்க்ஸில் இதை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை.

ஒவ்வொரு பதிவையும் படிப்பவர்களின் – அதுவும் முழுவதுமாகப் படிப்பவர்களின் – எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது என்று தெரிகிறது. வெறும் பொழுது போக்குக்காக மட்டும் முக நூலா? கருத்துக்களைச் சொல்வதற்கும் பரிமாறிக்கொள்வதற்கும் இல்லையா? மாற்றுக் கருத்துக்களை ஒரு மரியாதையுடன் சொல்லவும் ஏற்கவும் முடியுமா? எல்லாவற்றையும் ட்விட்டரில் இருப்பது போல இரண்டு வரிகளில்தான் சொல்ல வேண்டுமா? 

முன்பெல்லாம் காசு கொடுத்து பத்திரிகைகள் வாங்கும் பொழுது ஏதோ நமக்குப் பிடித்த ஒன்றிரண்டு பத்திரிகைகளை மட்டும் வாங்குவோம். விரும்பி படிக்கவும் செய்வோம். எல்லாப் பத்திரிகைகளும் இலவசமாக தினம் தினம்  நமது வீட்டு வாசலில் கிடந்தால் எத்தனை பத்திரிகைகளை திருப்பிப் பார்ப்போம்? அந்த நிலைதான் இன்றைய முக நூல் வாசம் என்று தோன்றுகிறது.


எழுதுபவர்கள் ஏராளம். படிப்பவர்கள் வெகு சிலர் என்ற நிலையில் முக நூலில் இன்னமும் எழுதி வருவதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா? ஓன்றும் புரியவில்லை.

No comments:

Post a Comment