Pages

Sunday, June 04, 2017

30.05.17 வாழ்க்கையின் ஐந்து பெரிய வருத்தங்கள் ..தொடர்ச்சி

30.05.17 வாழ்க்கையின் ஐந்து பெரிய வருத்தங்கள்

பொதுவாக நமது வருத்தங்களை ஒரு சில வகைகளாகப் பிரிக்கலாம்.

முதலாவது, நாம் ஒரு பொருளை விரும்பியிருப்போம் அல்லது ஏதோ ஒன்றுக்கு ஆசைப்பட்டிருப்போம். அதை அடையவில்லையே என்று வருத்தப்படலாம். அல்லது ஒரு பொருளை வெறுத்திருக்கலாம் அல்லது அதை விரும்பத்தகாதது என்று கருதி ஒதுக்க நினைத்திருக்கலாம். ஆனால், நாம் எதை வெறுத்தோமோ அல்லது ஒதுக்கி வைக்க நினைத்தோமோ அது நம்மோடு விடாமல் ஒட்டிக்கொண்டிருக்கிறதே என்று வருத்தப்படலாம்.

இரண்டாவது, ஒரு காரியத்தைச் செய்திருப்போம். பின்னர் அதன் விளைவுகளை கவனித்த பிறகு அதை ஏண்டா செய்தோம் என்று வருத்தப்படலாம். அல்லது ஏதோ ஒரு காரியத்தை செய்ய விட்டுப்போயிருக்கலாம். அதை செய்திருக்கலாமே என்று வருத்தப்படலாம்.

மூன்றாவது, பல காரியங்களை ஒரு எதிர்பார்ப்போடு செய்திருப்போம். அந்தக் காரியங்கள் நாம் எதிர்பார்த்த பலனை அளிக்காமல் எதிர்மறையாக, நம்மை பலமாகப் பாதிக்குமளவில் முடிந்திருக்குமானால் நமக்கு ஏமாற்றம் மட்டுமல்லாமால் மிகுந்த வருத்தத்தையும் கொடுத்திருக்கும்.

அடுத்ததாக, தெரிந்தோ தெரியாமலோ ஒரு சில பழக்கங்களுக்கு அடிமையாகியிப்போம். அந்தப் பழக்கங்களால் பல தீய பலன்கள் நமக்கு ஏற்பட்டிருக்கலாம். நாம் ஏன் அந்தப் பழக்கங்களுக்கு அடிமையானோம் என்று வருத்தப்படலாம்.

எனக்கு முக்கியமாக தோன்றும் அடுத்த விஷயம் … பலர் இளைய வயதில் காதல் வயப்பட்டிருக்கலாம். தெரிந்தோ தெரியாமலோ ஒரு பெண்ணுடன் ஒரு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். ஆரம்பத்தில், எல்லாம் அண்ணா, தங்கை பாசம் போலத்தான் தோன்றியிருக்கும். நாளாவட்டத்தில் அது காதலாக மலர்ந்திருக்கும். ஒரு நல்ல நட்போடு கூடிய காதல் பல காரணங்களினால் நிறைவேறாமல் போயிருக்கலாம். காதலை கை விட்டிருக்கலாம். அதனால், ஒரு குற்ற உணர்ச்சி ஆழ் மனதில் இருந்து வாட்டிக்கொண்டிருக்கலாம். இருவரும் வெவ்வேறு வழி சென்று அவரவர்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கலாம். காதல் சொல்லி வருவதில்லை. தானாக ஏற்படுவது. இன்று நமது வாழ்க்கை எப்படியிருந்தாலும், அந்த காதலின் இனிய நினைவுகள் நம்மை வாட்டி துன்பத்துக்கு ஆளாக்கலாம். காதலிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அன்று முடியவில்லையே! காதலைத் துறக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், அன்று முடியவில்லையே!

இறுதியாக தோன்றுவது … நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அறியாமையால் ஒரு சில காரியங்களைச் செய்திருப்போம். அதனால் பல கெடுதல்கள் ஏற்பட்டிருக்கலாம். நமது அறியாமையை நினைத்து வருத்தப்படலாம்.

இப்படியெல்லாம் அலசும்போது எனக்குத் தோன்றியது … இந்தக் கணம்  நம்முடைய அந்திம நேரமாக இருந்தால்  நம்முடைய மிகப் பெரிய வருத்தங்கள் என்று எவற்றைச் சொல்லலாம்?

1. முதலாவதாக எனக்குத் தோன்றுவது நமது உறவுகளை சரியாக வைத்துக் கொண்டிருக்கலாமே என்பதுதான். உறவுகளால் நாம் எவ்வளவோ காயப்பட்டிருப்போம். இருந்தும் உறவுகளுக்காக எதையும் விட்டுக் கொடுக்கலாம் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன். நம்முடைய அஹங்காரத்தினால் பல உறவுகளை பல விதமாக சிதைத்திருக்கிறோம். மற்றவர்களைத் தெரிந்தே காயப்படுத்தியிருக்கிறோம். மற்றவர்கள் காயப்பட்டிருப்பது தெரிந்தும் அதைப் பற்றி நாம் கவலை கொண்டதில்லை. பல நேரங்களில்  நாம் காயப்பட்டதின் நினைவாக உறவுகளை வெட்டியிருக்கிறோம். பலரை நம்மால் மன்னிக்க முடிவதில்லை. வெறுப்பும், கோபமும் மேலோங்கி நிற்கிறது. எல்லாமே ‘நான்’ என்ற நினைப்பினால்தான். இந்த எண்ணத்தை விட்டொழிக்க முடிந்ததில்லை. கூடப் பிறந்ததோ என்னவோ? இந்த ‘நான்’ என்ற நினைப்பை கொஞ்சம் தளர்த்தியிருக்கலாமோ? ‘நான்’ என்ற அஹங்காரத்தை விட்டிருக்கலாமே? ஒவ்வொரு நெருங்கிய உறவையும் கூர்ந்து ஆராய்ந்து பார்த்ததில் எவ்வளவு காயப்பட்டிருக்கிறோம், எவ்வளவு காயப்படுத்தியிருக்கிறோம் என்பது தெரிகிறது. இந்தக் கடைசி நேரத்தில் ஒரு சிலரிடமாவது மன்னிப்புக் கோரியிருக்கலாம். அல்லது அவர்கள் நமக்கு ஏற்படுத்தியிருக்கிற காயத்துக்கு மன்னித்து விட்டிருக்கலாம். ஆனால், அவர்களில் சிலர் இன்று இல்லையே, என்ன செய்வது? நாம் அவர்களிடம் எப்படி மன்னிப்பு கோருவது? அவர்களை நாம் மன்னித்து விட்டோம் என்பதை அவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது?

2.  . நம் குழந்தைகளுக்கு ஒரு நல்ல தகப்பனாக இருப்பதற்கு பல விதமாக முயற்சி செய்து வந்திருக்கிறோம். பல தியாகங்களைச் செய்திருக்கிறோம். நமது சக்திக்கு மீறி முயன்றிருக்கிறோம். எல்லாம் அவர்கள் நன்மைக்காகவும் மகிழ்ச்சிக்காகவும். அதே நேரத்தில் நாமும் ஒரு தாய் தந்தையருக்குப் பிறந்தவர்கள் என்பது மட்டும் மறந்து போய் விடுகிறது. நமது மனைவியை, குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு எவ்வளவு முயன்றோமோ அதில் ஒரு சில அளவாவது நமது தாய், தந்தையரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கு முயன்றிருக்கலாமே? அவர்களும் நம்முடைய மகிழ்ச்சிக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள்! அவர்களுடைய வயதான காலங்களில் அவர்களுக்கு நாம் துணை கொடுத்திருக்கிறோமா? அவர்களின் தேவைகளை, அற்ப ஆசைகளை நிறைவேற்ற ஏதேனும் செய்திருக்கிறோமா? அவர்கள் மனதில் குறைகளில்லாமல் அல்லது குறைகளைக் குறைக்க ஏதேனும் முயற்சி செய்திருக்கிறோமா? குறைந்த பட்சம் அவர்கள் குறைகளைத் தெரிந்து கொள்ளவாவது முயற்சித்திருக்கிறோமா? அவர்களுக்கு நாம் ஒரு நல்ல பையனாகவோ பெண்ணாகவோ இருந்திருக்கிறோமா? இல்லையே.  

3. ஒவ்வொருவரும் அவரவர் குழந்தைகளை அவரவர்களுக்குத் தெரிந்த மாதிரிதான் வளர்த்து வருகிறார்கள். பலர் குழந்தைகளை அடித்து வளர்த்திருக்கிறார்கள். அடி வாங்கிய அந்தக் குழந்தைகளுக்கு அதனால் என்ன விதமான மனக் காயங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதைப் பற்றி அந்த பெற்றோர் அதிகமாக என்றும் யோசித்ததில்லை. கண்டிப்புடன் வளர்க்கிறோம் என்று சொல்லி நியாயப்படுத்தியிருக்கிறோம். குழந்தைகளைப் புரியவைப்பது மிகவும் கடினம்தான். எல்லா நேரங்களிலும் காரண காரியங்களைச் சொல்லி புரியவைக்க முடியாதுதான். அவ்வளவு பொறுமையும்  நேரமும் நம்மில் பலருக்கு இல்லை. நம் குழந்தைகளை அடித்து வளர்த்தது தவறோ என்ற ஒரு குற்ற உணர்வு இன்று நம்மைத் தாக்குகிறது.

4. அன்பு, பாசம், உதவி என்ற போர்வையில் நெருங்கிய சிலருக்கு ஒரு சில காரியங்களைச் செய்திருப்போம். ஒரு சில நேரம் அவர்கள் கேட்காமலேயே உதவி செய்திருப்போம். அப்பொழுது அதன் பின் விளைவுகளைப் பற்றி அதிகமாக யோசிக்கவில்லை. இன்று யோசித்துப் பார்த்தால் நம்முடைய அன்பினால், பாசத்தினால், உதவியால் எவ்வளவு கெடுதல் செய்திருக்கிறோம் என்று புரிகிறது. அன்று அப்படி செய்திருக்க வேண்டாமோ?

 5. ஆண் ஆதிக்கம் நிறைந்த இந்த உலகில் நம்மில் பலரும் மனைவியை ஒரு பெரிய பொருட்டாக மதித்து வந்ததில்லை. அவர்கள் கருத்துக்கு, ஆசைகளுக்கு, விருப்பங்களுக்கு பெரிய மரியாதை ஒன்றும் செய்ததில்லை. அவர்களை அடக்கியே வைத்திருந்திருக்கிறோம். ஆனால், அவர்களோ வாயில்லாப் பூச்சிகளாக, அமைதியாக, பொறுமையாக நாம் செய்த பல கொடுமைகளை சகித்துக் கொண்டிருக்கிறார்கள். வயதாகும் பொழுதுதான் அவர்களின் அருமை புரிகிறது.  நாம் அவர்களிடம் நடந்துகொண்ட விதத்தை நினைத்து வருத்தப்படுகிறோம்.

எனக்கு முக்கியம் என்று தோன்றிய ஒரு சில விஷயங்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். கண்டிப்பாக எனக்கும் இந்த விஷயங்களில் வருத்தம் உண்டு என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். அதனால்…

அந்திம நேரம் வரைக் காத்திருப்பானேன்… இந்த நிமிடம் முதலே அதற்குப் பரிகாரம் தேடலாமே? நம்மை,  நம் பார்வையை மாற்றிக்கொள்ளலாமே? இப்பொழுதே முயற்சியை தொடங்கி விடலாமே?


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்…

No comments:

Post a Comment