Pages

Tuesday, August 22, 2017

23.08.17 இன்றைய நாட்குறிப்பு - சிஸ்டம் சரியில்லை

23.08.17 இன்றைய நாட்குறிப்பு

நீட் தேர்வின் அடிப்படையிலேயே இந்த ஆண்டின் மருத்துவப் படிப்புக்கு சேர்க்கை நடக்க வேண்டும் என்பது இறுதியாகி விட்டது. எல்லா மானினலங்களும் இதே போல விலக்கு கேட்பார்கள் என்ற காரணம் காட்டி தமிழக அரசின் அவசரச் சட்டத்தை மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. சரியான முடிவு.

“இங்கே தான் சிஸ்டம் சரியில்லையே” என்று ரஜினிகாந்த் கூறியது திடீரென்று நினைவுக்கு வந்தது.

நாடு முழுவதிலும், முக்கியமாக, தமிழ் நாட்டில் கடந்த காலங்களில் லஞ்சமும் ஊழலும் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தது என்றால் அதற்குக் காரணம் மக்களின் மனப்பான்மை மட்டும்தானா? இல்லையென்றே நினைக்கிறேன். நமது சிஸ்டம் பொதுவாக எங்கேயும் சரியில்லை என்பதும் உண்மைதான். குறைபாடுகள் நிறைந்த சிஸ்டத்தை மக்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். இன்னமும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

திரு. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பல புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தினாலும் சிஸ்டத்தை சரி செய்ய அதிகம் முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை. ஏனென்றால் பலமாக ஷாக் அடிக்கும்.

மோடி அவர்கள் பிரதமரான பிறகு சிஸ்டத்தை சரி செய்வதற்கும் பல முயற்சிகள் எடுத்திருக்கிறார். அதனால், பல இடங்களில் ஷாக் அடிக்கிறது. உதாரணத்துக்கு:
ஜி. எஸ். டி முறையை அறிமுகப்படுத்தியது; அதிக மதிப்புள்ள ரூபாய்த் தாள்களை செல்லாததாக்கியது; ஆதார் எண்ணை பல இடங்களிலும் இணைக்க வற்புறுத்தியது; எல்லா வர்த்தகங்களையும் டிஜிட்டல் முறையில் நடைபெற வழி வகுப்பது … இப்படி ஒரு சில

இன்னும் ஆலோசனையில் இருப்பது: மத்திய மானிலத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது; பட்ஜெட்டை ஒவ்வொரு ஆண்டும் நவம்பருக்கு மாற்றி நிதியாண்டை ஜனவரி – டிசம்பருக்கு மாற்றுவது; அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்படும் நன்கொடைகளை வெளிப்படையாக்குவது … இப்படி ஒரு சில.

எல்லா சிஸ்டத்தையும் ஒரேயடியாக மாற்ற முடியாது. எல்லா சிஸ்டமும் ஓரிரவில் சரியாகாது. ஏன் பல ஆண்டுகள் கூட ஆகலாம். சிஸ்டத்தில் கொண்டுவரப்படும் மாற்றங்கள் எல்லாம் சிறந்தது என்றும் சொல்லி விட முடியாது. எல்லாம் பரிட்சை செய்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்த வகையில் வருவதுதான் நீட் தேர்வுகளும். மருத்துவப் படிப்புக்கு எல்லா இடங்களிலும் நடக்கும் ஊழல்கள் எல்லோருக்கும் தெரியும்தான். மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு சிஸ்டத்தை சரி செய்யும் ஒரு முயற்சியே நீட் தேர்வுகள். இதற்கும் குறுக்கு வழி கண்டிப்பாக கண்டு பிடிப்பார்கள்.

வருமான வரியை முழுவதுமாக எடுத்து விட வேண்டும் என்ற திரு சுப்பிரமணிய சுவாமியின் கருத்து எனக்கு ஏற்புடையதாக  இருக்கிறது. இந்த வருமான வரிக்கு பயந்துதானே பலரும் அரசை ஏமாற்றுகிறார்கள். வருமான வரித்துறையில் இருப்பவர்களும் ஒன்றும் சத்திய சீலர்கள் இல்லையே. ஒரு பத்து வருடத்துக்கு வருமான வரி கிடையாது என்று அறிவித்து விட்டால் பதுங்கியிருக்கிற பணமெல்லாம் வெளியே வந்து விடும். எவ்வளவோ முன்னேற்றத் திட்டங்களுக்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்தலாமே. இன்றும் அமெரிக்காவில் கூட பல தொழிலாளிகள் தங்களது சேவைக்கு பணமாகவே பெற்றுக் கொள்கிறார்கள். கண்டிப்பாக வரிக் கணக்கில் வராது என்று நினைக்கிறேன். ஆனால், அவர்கள் மொத்த ஜனத்தொகையில் மிக மிக சிறிய பகுதியினர்தான். அதனால் பெரியதாக பாதிப்பு ஏதும் கிடையாது. ஆனால், பில் இல்லாமல் எந்தப் பொருளும் வாங்க முடியாது.

ஜி. எஸ். டி-யை படிப்படியாக எல்லாத் தரப்பு வர்த்தகர்களும் பின்பற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் நாளாவட்டத்தில் வந்து விடும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வர்த்தகப் பரிவர்த்தனையும் டிஜிட்டல் மயமாக்கி விட்டால் வரியேய்பு செய்வது கஷ்டம்.  வளர்ந்த நாடுகள் போல எந்த வர்த்தகப் பரிவர்த்தனையானாலும் பில் இல்லாமல் செய்ய முடியாது என்ற நிலை இந்தியாவிலும் வர வேண்டும்.


சிஸ்டத்தைப் பற்றி இன்னும் எவ்வளவோ எழுதலாம்தான்…

No comments:

Post a Comment