மற்றவர்கள்
மகிழ்ச்சியாக இருப்பதற்கு நாமும் ஒரு கருவியாக இருத்தல் ஒரு உயர்ந்த குணம் என்பதை எல்லோரும்
சொல்வார்கள். ஆனால், நம் எல்லோராலும் அப்படி இருக்க முடிகிறதா? இல்லை என்பதுதான் நிதர்சனமான
உண்மை. நானும் பல முறை முயன்று பார்த்திருக்கிறேன். என்னாலும் முடியவில்லை. ஏன் என்று
ஆராய்ந்து பார்த்து வருகிறேன்.
முதலில்
நான் மகிழ்ச்சியாக இருந்தால்தான் என்னாலும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்படியாக
இருக்க முடியும். நானே ஏதோ ஒரு வித வருத்தத்தில், ஏமாற்றத்தில், மன அழுத்தத்தில், குற்ற
உணர்ச்சியில் இருந்தால் என்னால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும். அவ்வப்பொழுது
வரும் கொஞ்சம் மகிழ்ச்சியை நான் குறிப்பிடவில்லை. வருத்தமும் அப்படித்தானே! அவ்வப்பொழுது
வரும், போகும். அதை நாம் ஒப்புக் கொள்வதில்லை. மூழ்கி விடுகிறோம்.
நான்
மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது மற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் ஒரு கருவியாக இருப்பதில்
எனக்கு எந்த சிரமமும் இல்லை. அந்த நேரங்களில் மற்றவர்கள் மகிழ்ச்சிக்காக நான் முயன்று
எதையும் செய்யத் தேவையில்லை. என்னுடைய சொல்லும், செயலும் மற்றவர்களுக்குத் தானாகவே
மகிழ்ச்சியைக் கொடுப்பதாக இருக்கும்.
ஆனால்,
நானே ஏதோ ஒரு காரணத்துக்காக வருத்தமாக இருந்தால் அந்த நேரத்தில் என்னுடைய சொல்லும்
செயலும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க முடியாது. பல நேரங்களில் அவர்களுக்கும்
வருத்தத்தைத் தான் கொடுக்கும்.
அதனால்
நான் மகிழ்ச்சியாக இருப்பது மிக முக்கியம். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
இப்பொழுது
ஒரு கேள்வி எழுகிறது? நான் செய்யக்கூடியது எல்லாமே எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா?
நேற்று எனக்குப் பிடித்த ஒரு பாட்டை கேட்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. இன்றும் அதே
பாட்டைக் கேட்டால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்குமா? தெரியாது. இது ஒரு பிரச்சினை.
எந்த
ஒரு காரியமும் எல்லா நேரங்களிலும் எனக்கு மகிழ்ச்சி கொடுக்கும் என்று எந்த உத்திரவாதமும்
கிடையாது. என்னுடைய மகிழ்ச்சி பல விஷயங்களைப் பொறுத்திருக்கிறது. நேரம், இடம், சூழல்,
மனம் இப்படி பல விஷயங்கள் நமது மகிழ்ச்சியைத் தீர்மானிக்கின்றன.
அப்படியானால்,
என்னால் எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க முடியாதா?
முடியும்.
எப்படி?
நானே
அந்த மகிழ்ச்சியாக இருந்தால்…அது எனக்குத் தெரிந்திருந்தால்…
ஒரு
விளக்கொளிக்கு தான் ஒளி வீசுகிறோம் என்ற நினைப்பு இருக்குமா? அந்த ஒளி விளக்கு தான்
தான் என்ற விழிப்புணர்வு வேண்டும். அந்த விழிப்புணர்வு எப்பொழுது வரும்? தானாகவே வருமா
அல்லது நாம் அதைத் தேட வேண்டுமா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
(ஸ்ரீ
ஆதி சங்கரர் எழுதிய நிர்வாண ஷட்கம் பாடலை சமீபத்தில் இன்னொருவர் பாடக் கேட்டு, மனம்
லயித்து ஈர்ர்க்கப்படு ‘சிதானந்த ரூப சிவோஹம் சிவோஹம்’ என்ற அந்தப் பாடலையும் அதன்
அர்த்தத்தையும் கற்றுக்கொண்டு வருகிறேன். தினமும் ஒரு முறையாவது அந்தப் பாடலைக் கேட்டு
விடுவேன். அதனுடைய தாக்கம் தான் இந்தப் பதிவு.)
No comments:
Post a Comment