Pages

Sunday, July 22, 2018

23.07.18 விஷப் பரிட்சை – பாகம் 2


23.07.18 விஷப் பரிட்சை – பாகம் 2

உறுதி கொடுத்தபடி கோடை விடுமுறைக்கு ஃபீனிக்ஸ் வந்தாகி விட்டது. விடுமுறையும் வந்து விட்டது.

மே கடைசி வாரம்.

எனக்கு எல்லாமே சிஸ்டமேடிக்காக இருக்க வேண்டும்.

என் பேரன் (வயது 9) பேத்தியுடன் (வயது 6) உட்கார்ந்து பேச்சு வார்த்தையைத் தொடங்கினேன். பேச்சு வார்த்தை மூலம் சிறுவர்கள் ஒத்துக் கொண்ட விஷயங்களில் அவர்கள் ஒத்துழைப்பு அதிகமாக இருக்கும் என்று படித்திருக்கிறேன்.

தியரியை ப்ராக்டிகலாக பரிசோதனை செய்ய நல்ல சந்தர்ப்பம்.

‘சரி, சொல்லுங்கள். இந்த விடுமுறையில் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள், என்னென்ன செய்ய விரும்பவில்லை. யோசித்து ஒரு காகிதத்தில் எனக்கு எழுதிக் காட்டுங்கள். அதே போல நானும் நீங்கள் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது என்று எழுதிக் காட்டுகிறேன். பின் இருவரும் பேசி ஒரு பொதுவான ஒப்பந்தத்துக்கு வருவோம். அதுபடி கண்டிப்பாக நடந்து கொள்வோம்.’

Management by consensus and agreement.

எதையும் வித்தியாசமாகச் செய்வதில் பசங்களுக்குக் ஒரு உற்சாகம்.
எழுதிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் பட்டியலிலிருந்து:

அவர்கள் செய்ய விரும்பியவை: ஐ-பேட் பார்ப்பது, பக்கத்து வீட்டு நண்பனுடன் விளையாடுவது, மற்ற விளையாட்டுக்கள், புத்தகம் படிப்பது, படம் வரைவது, புதியதாக ஏதேனும் கட்டுவது

அவர்கள் செய்ய விரும்பாதது: கணக்கு வீட்டுப் பாடம் செய்வது, கீ போர்டு வாசித்து பயிற்சி செய்வது, ஹோம்வொர்க்

நான் எதிர்பார்த்தபடியே அவர்கள் பட்டியல் அமைந்திருந்தது.

நான் எழுதிய பட்டியலிலிருந்து:

அவர்கள் என்ன செய்ய வேண்டும்: தமிழ் கற்றுக் கொள்வது, ஸ்லோகங்கள் கற்றுக் கொள்வது, சைக்கிளில் சுற்றுவது, தானாகவே யாரும் ஊட்டாமல் சாப்பிடுவது, காலை 6.30க்கு எழுந்திருப்பது, கீ போர்டு பயிற்சி செய்வது, தாத்தா/பாட்டியுடன் விளையாடுவது, சமையல் கற்றுக் கொள்வது, டிஷ் வாஷர் லோட் செய்வது, தோட்டத்தில் தண்ணீர் பீய்ச்சி விளையாடுவது, புத்தகம் படிப்பது, படம் வரைவது, கதைகள், கட்டுரைகள் எழுதுவது, வீட்டை சுத்தம் செய்வது, படிப்பு தொடர்பான வீடியோக்கள் பார்ப்பது, ஆராய்ச்சிக் கட்டுரை/ விஞ்ஞானக் கட்டுரைகள் தயாரிப்பது, தினப்படி டயரி எழுதுவது, நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொள்வது….

அப்பா! எழுதுவதற்கே மூச்சு வாங்குகிறது … இதைப் பின்பற்ற வேண்டுமென்றால்…

அவர்கள் என்ன செய்யக் கூடாது: எல்லாவற்றிற்கும் கத்துவது, அழுது முரண்டு செய்வது, தங்கையை சீண்டுவது, சோம்பேறித்தனமாக நேரத்தை ஓட்டுவது, மதியம் 1.30 முதல் 3.30 மணி நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் ஐ-பேட், ஐ-ஃபோன், கம்ப்யூட்டர் பார்ப்பது …

தமிழ் தெரிந்திருந்தால் ‘வந்திட்டாரய்யா … வந்திட்டார்’ என்று பசங்க கமெண்ட் அடித்திருப்பார்கள்.

பிறகு ஆரம்பித்தது … பேச்சு வார்த்தை … negotiations, hard bargaining, compromise 

நான் ஒரு ராணுவத் தளபதி என்பதை வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் நிருபித்துக் கொண்டிருந்தேன்.

பேச்சு வார்த்தையில் பேரனும் பேத்தியும் நிறைய சமரசம் செய்து கொண்டார்கள். இல்லையென்றால் கோடை காம்ப்தான் என்பது அவர்களுக்கு நன்றாகப் புரிந்திருந்தது.

They perfectly understood the rewards-punishments system, better than me. அவர்களது ஒரே குறிக்கோள் கேம்புக்குப் போகக் கூடாது. அதற்காக எந்த தியாகத்துக்கும் தயாராக இருந்தார்கள். பொதுவாக என்னுடைய பட்டியலில் எல்லாவற்றிற்கும் ஒத்துக் கொண்டார்கள்.

“சரி, நீங்கள் ஒத்துக் கொண்டதை நிறைவேற்றா விட்டால் எதைத் துறப்பதற்குத் தயாராக இருப்பீர்கள்?” என்று என்னுடைய அடுத்த agreed solution to problem-க்குத் தாவினேன்.

Again, hard negotiation was involved.

“நாங்கள் ஒத்துக் கொண்டபடி செய்யாவிட்டால், எங்களுடைய ஐ-பேட் டைம், நண்பர்களுடன் விளையாடும் டைம், அடிக்கடி வெளியே போய் உணவு உண்பது – இவற்றை விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறோம்.”

சண்டிக் குதிரைகளை வழிக்குக் கொண்டு வரவேண்டுமே? இந்திய தத்துவப் படி சாம, தான, பேதத்தை உபயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லை. தண்டம் உபயோகிக்க முடியாது அமெரிக்காவில்.

பின் என்ன நடந்தது?

கொஞ்சம் பொறுங்கள்.  நாளை பார்க்கலாம்.


No comments:

Post a Comment