Pages

Tuesday, July 24, 2018

25.07.18 விஷப் பரிட்சை – பாகம் 4


25.07.18 விஷப் பரிட்சை – பாகம் 4

எனக்கு சிறு வயதிலிருந்தே ஆங்கிலத்தில் ஈடுபாடு நிறைய இருந்ததால் நிறைய ஆங்கிலப் புத்தகங்கள் படித்தேன். கட்டுரைகள் எழுதினேன். பேசினேன். இன்று ஆங்கிலத்தில்  நான் ஒரு எழுத்தாளர். ஆசிரியர். பேச்சாளர். (என்ன கர்வம் பாரு இவனுக்கு என்று யாரோ சொல்வது எனக்குக் கேட்கிறது)

ஆனால், எனக்கு ஒரு குறை இருந்தது (அப்பாடா… திருஷ்டிப் பரிகாரம்)

சிறு வயது முதலே வெளிநாட்டவர்கள் பேசும் ஆங்கிலம் எனக்குப் புரியவே புரியாது. ஆங்கிலப் படங்கள் நிறைய பார்த்தாலும் எனக்கு அவர்கள் பேசும் ‘டயலாக்’ புரியாது. ஏன் என்று இன்று வரை எனக்குப் புரியவில்லை. இன்றும் நிறைய ஆங்கிலப் படங்கள் பார்க்கிறேன். ஆனால், ‘சப்டைட்டில்’ போடவில்லையென்றால் ‘டயலாக்’ புரியாது. இந்தக் குறையைப் போக்க எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை. காது வேறு இப்பொழுது கொஞ்சம் மந்தமாகி விட்டது. (இப்ப ஒரு சாக்கு கிடைத்தது) கடைசியில் என் முயற்சிகளை விட்டு விட்டேன்.

என்னுடைய இந்தக் குறையினால் எனக்கு ஒரு பெரும் இடைஞ்சல் இருந்தது. என் பேரன் பேத்திகள் ஆங்கிலத்தில் தான் பேசுகிறார்கள். தமிழ் ஓரளவு புரிந்தாலும், அவர்கள் பேசுவது என்னவோ ஆங்கிலம் தான். இதற்கு முன்பு அவர்களை தமிழில் பேச வைக்க எடுத்த முயற்சிகள் எல்லாம் தோற்றுப் போய்விட்டன. அவர்கள் என்னுடன் பேசும் பொழுது அவர்களின் “ஆக்சென்ட்” எனக்குப் புரிவதில்லை. ஒரு முறைக்குப் பல முறை மீண்டும் மீண்டும் அவர்களை சொல்லச் சொல்லியே அவர்கள் சொல்ல வந்ததை புரிந்து கொள்கிறேன்.

“Thatha, you read English, write English, speak English … but you don’t understand English.” என்னுடைய பேரனின் பிரபல கமெண்ட்.  

அதனால் என்னுடைய முயற்சியை இந்த முறை மாற்றிக் கொண்டேன். தமிழில் எழுதவும், எழுதியதை உரக்க வாசிக்கவும் கற்றுக் கொண்டார்களேயானால் அவர்கள் கூடிய விரைவில் பேசவும் தொடங்குவார்கள் என்று நம்பினேன்.

Vocalization is very important while trying to learn to speak a language.

அதனால் இந்த விடுமுறையின் போது தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுக்க ‘அ, ஆ’ வன்னாவிலிருந்து முறையாக ஆரம்பித்தேன். முதலில் எழுத்துக்கள். பின்னர் வார்த்தைகள். பின்னர் வாக்கியங்கள்.

“தமிழில் 247 எழுத்துக்களா? ஐயோ… ஆங்கிலத்தில் வெறும் 26 எழுத்துக்கள் …”பேரனும் பேத்தியும் சலித்துக் கொண்டார்கள்.

தினமும் அரை மணி நேரம் ஸ்லோகங்கள் கற்றுக் கொள்வது, அரை மணி நேரம் தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்வது, அரை மணி நேரம் கீ போர்டு பயிற்சி செய்வது என்று பொது ஒப்பந்தம். ஒழுங்காக ப்ரேக்ஃபஸ்ட், லஞ்ச் சாப்பிட வேண்டும். இதை முறையாகச் செய்தால் மதியம் 1.30 முதல் 3.30 வரை (அது தான் நான் தினமும் தூங்கும் நேரம். என் தூக்கம் கெடக் கூடாது என்பதில் நான் குறியாக இருந்தேன்.) அவர்கள் ஐ-பேட்/ஐ-ஃபோன்/யூடியூப் பார்க்கலாம். அல்லது பக்கத்து வீட்டு நண்பனுடன் விளையாடலாம். இது கண்டிஷன். இல்லாவிட்டால் அதைத் துறக்க வேண்டி வரும்.

தினமும் பாரதப் போர் நடந்தது. நேரக் கட்டுப்பாட்டுக்குள் குழந்தைகள் வரவே மாட்டார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் எதை இழக்க வேண்டியிருக்கும் என்பதை ஞாபகப்படுத்தியே அவர்களிடம் காரியம் செய்ய வைக்க வேண்டியிருந்தது.

இதற்கிடையில் என் மாமியாருக்குத் திடீரென்று உடல் நலமில்லாமல் மருத்துவ மனையில் ‘இன்டென்சிவ் கேரி’ல் சேர்க்கப் பட்டதால் மனைவி இந்தியாவுக்குப் பறக்க நேரிட்டது.

தனி ஆவர்த்தனம் பண்ண வேண்டிய நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். ஒரு ஆசிரியராக, ஒரு தாயாக, ஒரு பாதுகாவலனாக, ஒரு காவல்காரனாக … தொப்பியை அடிக்கடி மாற்ற வேண்டியிருந்தது.  நேரத்துக்குத் தகுந்தாற் போல் என்னுடைய அணுகுமுறையையும் குரலையும் கண்டிப்பையையும் மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது. நானும் நிறைய விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது.

ஒரு தாயின் பொறுமை எவ்வளவு முக்கியம் என்பதை முதன் முறையாக உணர்ந்தேன். மனைவியில்லாமல் நாளைக் கழிப்பது எவ்வளவு கடினம் என்பதையும் உணர்ந்தேன். சமயத்தில் அழுகை வரும் எனக்கு.

என் பேரனின் பக்கத்து வீட்டு நண்பனுக்கு இது போல கட்டுப்பாடு எதுவும் இருக்கவில்லை போலும். அடிக்கடி வந்து வாசலில் ‘பெல்’லை அழுத்துவான். விளையாடுவதற்கு அழைப்பான்.

“நாம் ஒப்புக் கொண்ட வேலைகளை முடித்து விட்டு விளையாடு, ஐ-பேடு பாரு… என்ன வேண்டுமானாலும் செய்துகொள்… அதற்கு முன்… மூச்” நான் கண்டிப்போடு சொல்லி விடுவேன். எனக்கு குறிக்கோள் முக்கியம்.

“Tiger Mom” என்ற புத்தகத்தில் படித்திருக்கிறேன். “என்னுடைய வேலை உங்களை என் மீது அன்பு செலுத்த வைப்பதல்ல. என்னுடைய வேலை உங்களை சொந்தக் காலில் நிற்க வைப்பதுதான்” என்று அந்தத் தாய் தன் இரு மகள்களிடம் கண்டிப்பு காட்டி வளர்த்திருக்கிறார்.

“My job is not to make you love me; but to make you stand on your own legs.” எனக்கு மிகவும் பிடித்த வாசகம்.

என்னுடைய கண்டிப்பினாலும், எங்கே கேம்புக்கு அனுப்பி விடுவார்களோ என்ற பயத்திலும் குழந்தைகள் முனகியும் அழுதும் ஆர்ப்பாட்டம் செய்தும் தினமும் தமிழ் கற்றுக் கொண்டார்கள். ஸ்லோகங்கள் கற்றுக் கொண்டார்கள். அதிசயமாக தினமும் 15 நிமிடங்கள் கீபோர்டு வாசித்தார்கள். ஒழுங்காகச் சாப்பிட்டார்கள்.

என் பேரன் இப்பொழுது 247 தமிழ் எழுத்துக்களையும் தெரிந்து கொண்டிருக்கிறான். எழுத்துக் கூட்டி முதலில் வார்த்தைகளையும், பின்னர் வார்த்தைகளைக் கூட்டி வாக்கியங்களையும் வாய் விட்டுப் படிக்கத் தெரிந்து கொண்டிருக்கிறான். (கொஞ்சம் சிரமப் படுவான். கொஞ்சம் ‘ப்ராம்ப்டிங்’ செய்ய வேண்டியிருக்கும்.) இருந்தாலும் குறைந்த நாட்களில் பெரிய சாதனை. பேத்தி தமிழில் 30% எழுத்துக்களை மட்டுமே கற்றுக் கொண்டாள். கற்றுக்கொண்ட எழுத்துக்கள் அடங்கிய வார்த்தைகளை வாய்விட்டு படிக்கவும் செய்வாள்.

கோடை விடுமுறை ஆரம்பித்த நாட்களில் தாங்கள் செய்வதாக ஒப்புக்கொண்ட மற்ற விஷயங்களை நான் அதிகமாக வற்புறுத்தவில்லை.

I felt it was better to have a tall objective and achieve whatever you can rather than aim little and achieve nothing.

இப்பொழுது கோடை விடுமுறை முடிந்து திங்கள் முதல் பள்ளிக்குச் செல்ல தொடங்கி விட்டார்கள். இனி தலைவலி அம்மா அப்பாவுக்கு மட்டும். முழு ஒரு மாதம் தனியாக பகல் வேளையில் இரு ஹைப்பர்-ஆக்டிவ் குழந்தைகளை சமாளித்திருக்கிறேன். பல நாட்கள் எல்லோருக்கும் சமையல் செய்திருக்கிறேன். என் மனைவி இதே வேலைகளை அசால்டாக செய்து முடித்திருப்பாள்.

நானும் என் பொறுப்பு எப்படி முடிந்தது என்பதைப் பற்றி எழுதவும் அமர்ந்து விட்டேன்.

சரி, இதில் எனக்கு என்ன கிடைத்தது? What was in it for me?

அடுத்த பகுதியில் கண்டிப்பாக முடித்து விடுகிறேன்.


No comments:

Post a Comment