23.08.18 மீண்டும் அமெரிக்காவுக்கு ‘டாட்டா’
சரியாக
ஐந்து மாதங்கள் கழித்து இரட்டை மனதோடு அமெரிக்காவிடமிருந்து மீண்டும் விடை பெறுகிறேன்.
நம் இடத்துக்குத் திரும்புகிறோம் என்பதில் ஒரு பக்கம் மகிழ்ச்சி. அப்படி என்னதான் நம்மூரில்
இருக்கிறதோ? சுகமாகக் கழிந்த ஐந்து மாத அமெரிக்க வாழ்க்கையை விட்டுவிட்டுப் போகிறோம்
என்பதில் இன்னொரு பக்கம் தவிப்பு. அப்படி என்னதான் அமெரிக்க வாழ்க்கையில் இருக்கிறது?
ஆண்டு
தோறும் இதே கேள்விகளுடன் அமெரிக்காவுக்குப் வருகிறோம். அமெரிக்காவிலிருந்து திரும்புகிறோம்.
சமயத்தில் சலிப்பாகவும் இருக்கிறது. எங்கள் குழந்தைகள் வளர்ந்து வரும் பருவத்தில் அவர்களுக்கு
அமெரிக்க கனவை ஊட்டி இருவரையும் அங்கேயே குடியேற வைத்த பின்பு நாங்கள் மட்டும் இந்தியாவிலேயே
இருப்போம் என்று எப்படி அடம் பிடிப்பது?
பசுமையான
சுற்றுப் புறம். நல்ல பருவனிலை. பிக்கல் பிடுங்கல் இல்லாத நாட்கள். எல்லாவற்றிற்கும்
மேலாக சிறு குழந்தைகளுடன் அன்னியோன்னியம். இது அமெரிக்க வாழ்க்கையின் சாராம்சம்.
பிக்கல்
பிடுங்கல் எல்லாம் இந்தியாவிலிருந்து வந்ததுதான். ஆக்சிஸ் வங்கியுடன் வங்கிக் கணக்கு
சம்பந்தமான போராட்டங்கள், இறுதி நாளுக்கு முன் வருமான வரித் தாக்கலுக்காக பிசியான ஆடிட்டருடன்
தொடர்ந்து விரட்டல், தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி சம்பந்தமான உப்புப் பெறாத சின்ன
விஷயங்களுக்குத் தேவையில்லாத விளக்கங்கள், இப்படிச் சில.
இதெல்லாவற்றுக்கும்
மேலாக ஒன்று மாற்றி ஒன்றாக ரத்த அழுத்தத்தை ஏற்றும் இந்தியாவிலிருந்து வரும் திக்,
திக் செய்திகள் … அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிடும் அறிக்கைகள் எல்லாம் தினப்படி
வாழ்க்கையைப் பாதிப்பதில்லை. இங்கே வாழ்க்கை சீராக ஓடுகிறது. இந்தியாவில் …?
ஒரு
பக்கம் தண்ணீர் சூழ்ந்து எல்லாவற்றையும் அழித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் இன்னமும்
வறண்டு கிடக்கிறது.
மோடி
நின்றால் குற்றம், நடந்தால் குற்றம், எழுந்தால் குற்றம்… எல்லாவற்றுக்கும் மோடிதான்
பதில் சொல்ல வேண்டும்
ஒரு
பக்கம் விவசாயிகளும் நடுத்தர மக்களும் தவித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் வங்கிகளை
ஏமாற்றிய பெரிய பண முதலைகள் வெளி நாட்டில் போய் பதுங்கிக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்.
அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பாராளுமன்றம்
ஒரு விவாத மேடையா அல்லது அரசியல் கட்சி மேடையா, குத்துச் சண்டை அரங்கமா என்ற சந்தேகம்
பல நேரங்களில் வருகிறது.
பெரும்பான்மை
சமூகத்தினர்தான் எல்லாவற்றுக்கும் பயப்பட வேண்டியிருக்கிறது. சிறுபான்மையினரை தொட முடியாது.
ஷாக் அடிக்கும்.
தமிழ்நாட்டுக்
கோவில்கள் பெரிய சுரண்டல் சுரங்கங்களாகி விட்டன.
பல
மானிலங்களில் ஒன்றிரண்டு பெரிய அரசியல் கட்சிகள். ஒன்றிரண்டு சிறிய கட்சிகள். தமிழ்நாட்டில்
தடுக்கி விழுந்தால் கட்சி. போராட்டங்களுக்காகவே ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன போல.
தமிழகத்தில்
எதைத் தொட்டாலும் போராட்டம். தெரியாமல் கூட எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் தமிழகத்துக்கு
வந்து விடக்கூடாது என்பதில் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு அரசியல் செய்கிறார்கள்.
தேசிய
அளவில் தொலை நோக்குத் திட்டத்துடன் எது செய்தாலும் எதிர்ப்பு. திரு மன்மோகன் சிங் நிதித்
துறை அமைச்சராக இருந்த போதே எதிர்த்தவர்கள்தான். இன்று மோடியின் திட்டங்களையும் எதிர்க்கிறார்கள்.
நூற்றுக்கணக்கான
கோடிகள் அளவுக்கு பணம் அங்கங்கே பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
அடுக்கிக்
கொண்டே போகலாம் போலிருக்கிறது. இது ஒன்றொன்றும் சராசரி மனிதனின் தினப்படி வாழ்க்கையை
ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது.
அமெரிக்காவிலிருந்து
திரும்பும் பொழுது எதை முக்கியமாக தொலைக்கப் போகிறேன்?
எந்த
மாற்றமுமில்லாத இயந்திரத் தனமான தினப்படி வாழ்க்கையின் நேரங்களைத் தொலைக்கப் போகிறேன்.
குழந்தைகளோடும்
பேரக் குழந்தைகளோடும் இருந்தாலும் ஒரு வெறுமையை, தனிமையை பல நேரங்களில் உணர்ந்ததைத்
தொலைத்து விட்டு வரப் போகிறேன். இந்தியாவிலும் நான் ஒரு தீவுதான். இருந்தும் என் தீவுக்கு
பலர் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். இந்தத் தீவும் மிதந்து ஊர்ந்து கொண்டேயிருக்கும்.
கடந்த
இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒரு தனி மனிதனாக சிறு குழந்தைகளை கவனித்துக் கொண்ட நேரங்களை
– இனிமையான நினைவுகளையல்ல – தொலைத்து விட்டு வரப் போகிறேன்.
இறுதியாக,
எது எப்படியிருந்தாலும் இந்த முறை என்னுடைய அமெரிக்க விஜயத்தின் போது என் பேரக் குழந்தைகளான
சிறு குழந்தைகளை புரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறேன். இதைப் பற்றித் தனியாகத் தான்
எழுத வேண்டும்.
இந்தியாவில்
காலடி எடுத்து வைக்கும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். வந்தே மாதரம்.
No comments:
Post a Comment