Pages

Friday, March 29, 2019

29.03.19 பயணக் கட்டுரைகள் – அமெரிக்காவின் தென் ஃப்ளோரிடா



































ஒரு காலத்தில் பயணக் கட்டுரைகள் தமிழகத்தில் மிகவும் பிரபலமாக இருந்தன. ஆனந்த விகடனில் மணியனின் கட்டுரைகள் மற்றும் சாவியின் பயணக் கட்டுரைகளைப் படிப்பதற்காகவே பலர் தமிழ் பத்திரிகைகளை வாங்கினர். சமீபத்தில் ஆன்மீக குரு திரு. ஜக்கி வாசுதேவின் இமாலயப் பயணக் கட்டுரைகள் பிரபலமாக இருந்தன.

அடிக்கடி சுற்றுப் பயணங்களை மேற்கொள்வது என்னுடைய விருப்பமான பொழுதுபோக்கு. அதிக செலவாகும் என்பது என்னமோ உண்மைதான்.

வங்கிப் பணியில் இருந்த காலத்தில் 1985-க்குப் பிறகு அடிக்கடி ஊர் சுற்ற வேண்டிய பல பொறுப்புகளை ஏற்றுக் கொண்டதால் ஒவ்வொரு மாதமும் பத்து பதினைந்து நாட்கள் வெளியூரில் சுற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்தது. அந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் நான் சென்ற ஒவ்வொரு இடத்துக்கு அருகிலும் இருந்த பல முக்கியமான சுற்றுலா மையங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  அப்படியாக இந்தியாவின் பெரும்பகுதியை – பீஹார் மானிலம் தவிர்த்து - நான் சுற்றிப் பார்த்திருக்கிறேன்.

பின்னர், துபாயில் வேலை பார்த்த நாட்களிலும் 2006-ல் பணி ஓய்வு பெற்ற பின்பும் யூ. எஸ். ஏ, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற சில நாடுகளையும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

சுற்றுலாப் பயணங்களில் அதிக ஆர்வம் காட்டிய நானும் என்னுடைய பல பயணங்களைப் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் கட்டுரைகள் எழுதி வருகிறேன். பலர் படித்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

பயணக் கட்டுரைகளை விட பயணங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. விரிவான கட்டுரைகளைப் படிப்பதற்குப் பலருக்கும் இன்று நேரமும் பொறுமையும் இல்லை போலும்.

பயணங்கள் பல விதங்களில் எனக்கு பயன்பட்டிருக்கின்றன. பயணங்கள் என்னுடைய உலகப் பார்வையை விரிவாக்கியிருக்கின்றன. வெறும் சுற்றுப் பயணியாகச் செல்லாமல் நான் போகும் இடங்களைப் பற்றி நிறையப் படித்து பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை வளர்த்திருக்கிறது. பொது அறிவை வளர்த்திருக்கிறது. அங்கங்கே வாழும் மக்களின் கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள், சரித்திரங்கள், என்னை வியக்க வைத்திருக்கின்றன. இயற்கையை இன்னும் அதிகமாக இன்று நேசிக்கிறேன். என் கற்பனைகளைத் தூண்டி விட்டிருக்கின்றன. பலருடனும் அனுசரித்துப் போகும் தன்மையை வளர்த்திருக்கின்றன.  நான் ஆரோக்கியமாக இருப்பதாக உணர்கிறேன்.

இதையெல்லாம் ஏன் இப்பொழுது எழுதுகிறேன்?

1950-60-களில் தமிழ்வாணன் என்ற எழுத்தாளர் பத்திரிகையாளரின் தீவிர ரசிகனாக இருந்திருக்கிறேன். அவருடைய ஒரு சில கதைகளில் அமெரிக்காவின் மையாமியைப் பற்றி (மியாமி என்றே எழுதுவார்) எழுதியிருக்கிறார். அங்கெல்லாம் சென்று வந்திருக்கிறாரா என்று தெரியாது.
அந்த மையாமிக்குச் சுற்றுப் பயணமாகப் போகும் வாய்ப்பு எனக்கும் இந்த மாதம்தான் கிடைத்தது.

மிக அழகான கடற்கரைகளைக் கொண்ட ஒரு மானிலம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா. நமது பெருங்குடலிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் ‘அப்பெண்டிக்ஸ்’ மாதிரி அமெரிக்காவின் தென்கிழக்குக் கோடியில் ஒரு சிறு வால்போல நீண்டு அமைந்திருக்கும் குறுகலான மானிலம். கிழக்கு, தெற்கு, மேற்கு என்று மூன்று புறங்களிலும் அட்லாண்டிக் பெருங்கடல் சூழ்ந்த ஒரு தீபகற்பம். சூறாவெளியால் அடிக்கடி பாதிக்கக் கூடிய, வெப்பமண்டலப் பருவ நிலையைக் கொண்ட ஒரு மானிலம்.  குறைந்த பட்சம் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட 4500-க்கும் மேற்பட்ட சின்னச் சின்ன தீவுகளை உள்ளடக்கிய மானிலம்.

மயாமியிலிருந்து கீ வெஸ்ட் என்ற தென்முனைப் பகுதிக்குச் செல்வதற்கு 163 மைல் நீளமான அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை 1 வழியாக சின்னச் சின்னத் தீவுகளுக்கிடையே அமைந்த 42 பாலங்களைக் கடக்க வேண்டியிருந்தது. அதில் முக்கியமானது 1978-82-ல் கட்டப்பட்ட புதிய 7-மைல் பாலம். அருகிலேயே உடைந்த பழைய பாலமும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது.

நாங்கள் சென்ற மார்ச் மாதம் சுற்றுலாவுக்கு நல்ல நேரம் என்பதால் சுற்றுலாப் பயணிகளுக்குக் குறைவில்லை. ஒன்றிரண்டு கடற்கரைகளில் நீரில் இறங்கிக் குளிக்க முடிந்தது. கடலில் குளித்துவிட்டு வெளிவருவோருக்கு கடற்கரையிலேயே நல்ல தண்ணீரில் இலவசமாக குளிப்பதற்கு வசதி எல்லா இடங்களிலும் இருந்தது.

பல இயற்கையான அழகான இடங்களைப் பார்த்த திருப்தி கிடைத்தது. எவர்க்ளேட் தேசியப் பூங்காவின் சதுப்பு நிலங்களில் முதலைகளையும் பலவிதமான பறவைகளையும் காண முடிந்தது. பல இடங்கள் எனக்கு நமது கேரளாவை நினைவூட்டின. மயாமி டௌண்டவுண் பிரம்மாண்டமாக காட்சியளித்தது. மயாமியைச் சுற்றிப் பல இந்தியர்களின் மளிகைக் கடைகளும் உணவு விடுதிகளும் இருப்பது இந்தியர்களுக்கு மிகவும் வசதியானது. மயாமி தெற்கு பீச் அருகில் ஒரு இந்திய உணவு விடுதியில் திருப்தியாக ‘தால் மக்கனி’ ‘டண்டூரி ரொட்டி’ சாப்பிட்டது குறிப்பிட வேண்டியது.

எங்கள் பயணத்தில் குறிப்பிடத்தக்க மற்ற அம்சங்கள்:
  1.     1.5 மில்லியன் ஏக்கர் பரப்பளவு கொண்ட எவர்க்ளேட்ஸ் சதுப்பு நில (Wetlands) தேசியப் பூங்காவில் ‘கூப்பர்டவுண்’ நிறுவனத்தின் காற்றுப் படகுகளில் பயணித்தது. அங்குள்ள சதுப்பு நிலத் தன்மையையும் அதில் வாழும் உயிரனங்களும் பாதிக்கக் கூடாதென்பதற்காக படகின் மோட்டரை உயரத்தில் வைத்து இயக்குகிறார்கள். வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
   2.     கீ வெஸ்ட் என்ற தென்முனையில் எங்களை - அடிப்பகுதியில் கண்ணாடி பொறுத்தப்பட்ட - கண்ணாடிப் படகுகளில் கடலுக்குள் வெகு தூரம் கூட்டிச் சென்று ஆழ்கடலில் வாழும் மீன் மற்றும் தாவர இனங்களைக் காட்டினார்கள். அடிவானத்தில் சூரியன் மறைவதைப் பார்ப்பதற்கு ரம்யமாக இருந்தது.
    3.     எவர்க்ளேட்ஸ் தேசியப் பூங்காவின் வடப் பகுதிக்கு செல்லும் வழியெங்கும் தாவர இனங்களின் வளர்ப்புப் பூங்காக்கள் (NURSERIES) நிறைந்து காணப்பட்டன.
  4.     எல்லா இடங்களிலும் மோட்டர் கார்கள் செல்வதற்கு வசதியான அருமையான சாலைகள் இருந்தன. அமெரிக்காவில் சுற்றுலாவுக்கும் அடிப்படை கட்டுமான வசதிகளுக்கும் அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் தெரிந்தது.

மொத்தத்தில் மயாமியும் கீ வெஸ்ட் பகுதிகளும் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று.

எனக்குத் தெரிந்து இந்தியாவிலும் சுற்றுலாவுக்கு தகுதியான பல இடங்கள் இருக்கின்றன. இருந்தும் அடிப்படை கட்டமைப்புகள், சாலை வசதிகள், தங்கும் விடுதிகள் போன்ற வசதிகள் இன்னும் எவ்வளவோ முன்னேற வேண்டியிருக்கிறது. முந்தின காலத்தை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது இப்பொழுது எவ்வளவோ தேவலாம் என்பதை கடந்த ஆண்டு குஜராத், மத்தியப் பிரதேசம் சுற்றுலாவின் போது கண்டு கொண்டோம்.

உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

No comments:

Post a Comment