Total Pageviews

Wednesday, January 29, 2020


27.01.2020 சைக்கிள்


ஏழைகளின் வாகனமாகக் கருதப்பட்ட இரண்டு சக்கர சைக்கிள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது என்பது மிகவும் வருத்தமான விஷயம். சிறிய கிராமங்களில் கூட சைக்கிள் ஓட்டியவர்கள் எல்லாம் இன்று பெட்ரோலில் ஓடும் மோட்டர் சைக்கிள்தான் ஓட்டுகிறார்கள். நான் வசிக்கும் தென்காசியில் பல சாலைகளைக் கடப்பதற்கு இன்றெல்லாம் மூன்று முதல் ஐந்து  நிமிடங்கள் ஆகின்றன. அவ்வளவு சாலைப் போக்குவரத்து. அதிலும் மோட்டர் சைக்கிள்கள். பல வங்கிகளில், நிதி நிறுவனங்களில் எளிதாகக்  கடன் வாங்க முடிகிறது. எறும்புப் புற்றிலிருந்து கிளம்பும் எறும்புகள் போல மோட்டர் சைக்கிள்கள் சாலையில் பறந்து கொண்டிருக்கின்றன. பல இளைஞர்களிடம் வேகக் கட்டுப்பாடு கிடையாது.

தமிழ்நாட்டில் பல ஊர்களிலும் சிறுவர்களுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்வது ஒரு முக்கியமான தேவையாக இருந்து வந்திருக்கிறது. சுமார் ஆறு ஏழு வயதிலேயே சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டு விட வேண்டும் என்ற நிலை இருந்தது.

நான் சிறுவனாக திருநெல்வேலி டவுணில் வளர்ந்து வந்த போது, கீழ ரதவீதியில் ஒரு வாடகை சைக்கிள் கடை உண்டு. அரை மணி நேரம் சைக்கிள் வாடகை எடுப்பதற்கு 25 காசுகளோ எவ்வளவோ சரியாக நினைவில்லை. அதிலும் பெரிய சைக்கிள், சிறுவர்களுக்கான சைக்கிள் தனித்தனியே உண்டு. அந்த சைக்கிள் கடைக்காரருக்கு எல்லா குடும்பங்களையும் தெரியும். டெப்பாசிட் எல்லாம் கொடுக்க வேண்டாம். சிறிய சைக்கிள் கிடைக்கவில்லையென்றால் பெரிய சைக்கிளில் குரங்குப் பெடல் போட்டு ஓட்ட வேண்டியிருக்கும். நான் வசித்த அம்மன் சன்னிதித் தெருவில் மாலை நேரங்களில் யாரோ ஒரு அண்ணனோ, மூத்த நண்பனோ, அல்லது ஒரு தகப்பனோ சிறியவர்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுப்பதற்கு அவர்கள் பின்னாலேயே ஓடிக்கொண்டிருப்பதை தினமும் பார்க்கலாம். தெருவில் பம்பரம் ஒரு சிலர் விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் கோலி. ஒரு சிலருக்கு வட்டில் உருட்டுதல். இதற்கு நடுவேதான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். பல நேரங்களில் ஒரு சிறுவன்/சிறுமி சைக்கிளை வாடகைக்கு எடுத்தால் வாடகை நேரத்தை மற்ற நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளவும் வேண்டியிருக்கும். பொதுவாக நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த எந்த சிறுவர்களுக்கும் சொந்தமாக சைக்கிள் இருந்தது கிடையாது.

வளர்ந்து வரும் பருவத்தில் என் குழந்தைகளுக்கு நான் சைக்கிள் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ள பலர் தங்கள் நேரத்தையும் உடலுழைப்பையும் செலவழித்திருக்கிறார்கள்.

நானும் சிறிய வயதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டதோடு சரி. அதன் பிறகு 2008-ல், சுமார் 48 ஆண்டுகளுக்குப் பிறகே மீண்டும் சைக்கிளை எடுத்திருக்கிறேன். அதுவும் அமெரிக்காவில். இங்கே சைக்கிள் என்று அழைப்பதில்லை. பைக் என்றே இதற்குப் பெயர். என் பையன் தனக்காக ஒன்று தன் மனைவிக்காக ஒன்று என்று இரண்டு பைக் வாங்கியிருந்தான். அமெரிக்கா வரும் பொழுதெல்லாம் சிக்காகோவில் பைக்கை எடுத்துக் கொண்டு பல ‘சந்து பொந்து’களையெல்லாம் ஆராய்ந்து வந்திருக்கிறேன். மனதில் கற்பனையை ஓட்டிக் கொண்டோ, அல்லது நல்ல பாட்டுக்களை காதில் மாட்டியிருக்கும் ஹெட் ஃபோனில் ரசித்துக் கொண்டோ பல இடங்களைச் சுற்றியிருக்கிறேன். பைக் ஓட்டி ‘பராக்’ பார்த்துக் கொண்டே சுற்றுவது எனது இனிமையான பொழுது போக்கு.

ஓரே ஒரு முறை மட்டும் வெகு தொலைவுக்கு பைக்கில் போய் வந்த பிறகு முதுகில் பிடித்துக் கொண்டது. டாக்டருக்கும் மருந்துக்கும் தண்டம் அழுத பின்பு இரண்டு மூன்று நாட்களில் முதுகு சரியானது.

என் மனைவிக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது. அதனால் அவளைத் தனியாக விட்டு விட்டு நான் மட்டும் பைக் ஓட்டப்போகும் நேரம் மனதில் குற்ற உணர்ச்சி மேலோங்கியிருக்கும். அதனால் அவளது 60 வயதுக்கு பிறகு அவளுக்கும் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுக்க முயற்சி செய்தேன். விருப்பத்துடன் அவளும் பயிலத் தொடங்கினாள். ஆனால், ஒரு முறை பலமாக கீழே விழுந்த பின் எங்களுக்கு பயம் பிடித்துக் கொண்டது. எதற்கு வீண் வம்பு என்று முயற்சியைக் கை விட்டோம். ஏதேனும் ஒன்றென்றால், மருத்துவத்துக்கு யார் செலவு செய்வது?

சிக்காகோவின் அனுபவத்தில் பெண் இருக்கும் ஃபீனிக்ஸிலும் ஒரு பைக் வாங்கிக் கொண்டேன். என் பேரனோடு ஓடி அவனுக்கும் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தேன். ஒவ்வொரு சனி ஞாயிறன்றும் நான், என் பேரன், பேத்தி மூவரும் பைக்கில் வீட்டுக்கருகில் இருக்கும் இடங்களுக்கு சுற்றி வருவோம். இங்கே சாலையில் ஆள் நடமாட்டம் என்பது கிடையவே கிடையாது என்பது ஓரு அனுகூலம்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆம்ஸ்டெர்டாம் நகருக்குச் சென்றிருந்தோம். அங்கே சுமார் 1 மில்லியன் சைக்கிள் இருப்பதாகக் கேள்வி. அங்கே சைக்கிள் ஓட்டுபவருக்கே முன்னுரிமை எல்லா சாலைகளிலும். கார் பார்க்கிங், மோட்டர் சைக்கிள் பார்க்கிங் போல மெகா சைஸில் சைக்கிள் பார்க்கிங் ஏற்படுத்தியிருக்கிறார்கள். வயது வித்தியாசமில்லாமல் எல்லோரும் சைக்கிள் ஓட்டுகிறார்கள்.

ஆனால், அமெரிக்காவில் பைக் ஓட்டுவது என்பது ஏறக்குறைய ஒரு ஸ்போர்ட் மாதிரி. தலையில் ஹெல்மெட், உடம்பையொட்டிய ஒரு அரை டிரௌசர், மேலே பனியன், முதுகில் ஒரு சிறிய பேக்பேக், முன்னால் தண்ணீர் பாட்டில் சகிதம் மணிக்கணக்கில் பைக்கில் ஒரு சிலர் சுற்றுவதைப் பார்க்கலாம்.

நேற்று என்னுடைய பைக்கிற்கு புது டியூப் மாட்டி ஒரு ஏழு-எட்டு கி. மீ ஓட்டியதில் என்னுடைய Post prandial sugar 143-க்கு இறங்கி விட்டது. அந்த மகிழ்ச்சியில் சைக்கிளைப் பற்றிய இந்த நினைவோட்டத்தை எழுதத் தொடங்கினேன்.

No comments:

Post a Comment