Total Pageviews

Showing posts with label Assam. Show all posts
Showing posts with label Assam. Show all posts

Sunday, March 14, 2021

11.03.2021 வேளாண்மை மேம்பாட்டில் என்னுடைய பங்கு

 11.03.2021 வேளாண்மை மேம்பாட்டில் என்னுடைய பங்கு

நேற்று முகநூலில் யாரோ ஒருவரின் பக்கத்தில் மத்திய அமைச்சர் திரு கட்கரி அவர்கள் சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்காக அவர் எடுத்த ஒரு சில முயற்சிகளை பாராளுமன்றத்தில் விவரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். வித்தியாசமாக யோசித்துப் பார்த்தால் பல நேரங்களில் பல சாதனைகளைச் செய்யலாம் என்பதை அமைச்சருடைய பேச்சு எனக்கு நினைவூட்டியது. ஹிந்தியில் அமைச்சர் பேசியது, வார்த்தைக்கு வார்த்தை எனக்குப் புரியாவிட்டாலும், மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஆனால், அவரது முழுப் பேச்சையும் கேட்பதற்குள் நான் அப்படியே தூங்கிவிட்டேன். தூங்கி விழித்த பிறகு ஏனோ அந்த வீடியோ எனக்கு மீண்டும் கிடைக்கவில்லை.

என்னுடைய நினைவுகள் என்னுடைய ஒரு முக்கியமான பழைய அனுபவத்துக்கு ஓடிச் சென்றன.

1986-87-ஆம் ஆண்டு

நான் கௌஹாத்தியில் ஒரு பொதுத்துறை வங்கியில் பிராந்திய மேலாளராக அசாம் மற்றும் வடக்கு வங்காளம் பகுதியில் இருந்த சுமார் 22 கிளைகளுக்கு பொறுப்பாளராக இருந்த சமயம்.

அதே நேரத்தில் கௌஹாத்தியை தலைமையிடமாகக் கொண்டு நெராமேக் (NERAMAC – NORTHEASTERN REGIONAL AGRICULTURAL MARKETING CORPORATION) என்ற மத்திய அரசாங்கத்தின் ஒரு புதிய நிறுவனத்துக்கு கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தலைவராகவும் மேலாண் இயக்குனராகவும் பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஒரு சில வாரங்களிலேயே எனக்கு அவருடன் தொடர்பு ஏற்பட்டது. இருவருக்கும் விரைவில் நல்ல புரிதலும் ஏற்பட்டது. எங்கள் வங்கியிலே நெராமாக்கின் கணக்கும் துவக்கப்பட்டது. எங்கள் கௌஹாத்தி கிளை மேலாளரும் ஒரு கேரளாக்காரர். அதனால், அவருக்கும் அந்த அதிகாரியுடன் நல்ல தொடர்பும் நட்பும் ஏற்பட்டு விட்டது. எங்கள் கௌஹாத்தி கிளையின் மிகப் பெரிய கணக்காக நெராமேக்கின் கணக்கு இருந்தது மற்ற பல வங்கிகளுக்குப் பொறாமையாக இருந்தது.

நெராமேக்கின் முக்கியமான குறிக்கோள் வடகிழக்கு மானிலங்களின் வேளாண் விளைபொருட்களுக்கு நல்ல ஒரு சந்தையை உருவாக்கிக் கொடுப்பது. வடகிழக்கு மானிலங்கள் பொதுவாக நீர்வளம் நிறைந்த ஒரு பகுதி. அங்கே எது போட்டாலும் தானாக விளையும் என்ற நிலை. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய பகுதி. பெரும்பாலானவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் விவசாயிகள், கூலி வேலையாட்கள். அவர்களில் பலர் வங்க தேசத்திலிருந்து ஓடி வந்த அகதிகள். அவர்களின் விவசாய உற்பத்திப் பொருட்களை பல இடைத்தரகர்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கிக்கொண்டு பெரிய சந்தையில் பல மடங்கு அதிக விலையில் விற்று வந்தனர்.

உதாரணத்துக்கு, அன்றைய நிலைமையில் …

அசாமின் டின்சுகியாவில் ஆரஞ்சுத் தோட்டங்களில் ஒரு ஆரஞ்சுப்பழம் சுமார் 20 அல்லது 30 பைசா. அதே ஆரஞ்சு அசாம் தலை நகரில் 2 ரூபாய்.

திரிபுராவில் ஒரு கிலோ இஞ்சி சுமார் 50 பைசா. பெரிய நகரங்களில் 2 அல்லது மூன்று ரூபாய். அதே போல தேங்காய் ஒன்றுக்கு 50 பைசா. நகரங்களில் 2 ரூபாய்.

அசாமின் வடகோடியில் திக்பாய் என்ற இடத்தில் தேயிலைத் தோட்டங்களில் தேயிலை சீசன் முடிவடைந்த நிலையில் வெறும் களையாக வளரும் சிட்ரனெலா புல்லிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் அங்கே கிலோவுக்கும் 20 அல்லது முப்பது ரூபாய். அதே சிட்ரனெலா எண்ணெயை மும்பையில் பெரிய பெரிய நிறுவனங்கள் சுமார் 200 ரூபாய்க்கு இடைத் தரகர்களிடமிருந்து வாங்கி வந்தனர்.

இப்படிப் பல.

அதனால் விவசாயிகளுக்கு அவர்கள் நிலத்தின் விளைச்சலுக்குச் சரியான விலை கிடைக்காத நிலையிலும், இடைத்தரகர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட தொடர் கடன்களால் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இடைத்தரகர்கள் சொல்லும் விலைக்கு தங்கள் விளைபொருட்களை விற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

தகாத இந்த உறவுமுறையை மாற்ற வேண்டும் என்று நெராமேக்கின் மேலாண் இயக்குனர் விரும்பினார். “உங்கள் வங்கி எப்படி இதற்கு உதவி செய்ய முடியும்?” என்று கேட்டார். அதிர்ஷ்ட வசமாக எங்கள் கௌஹாத்தி மேலாளர் வேளாண் கல்வியில் ஒரு பட்டதாரி. என்ன செய்யலாம் என்பதை நானும் கௌஹாத்தி வங்கி மேலாளரும் பல முறை விவாதித்து ஒரு திட்டத்தை நெராமேக் இயக்குனரிடம் விவரித்தோம்.

அதன்படி …

1.     முதலில் திக்பாயில் கிடைக்கும் சிட்ரனெலா எண்ணெய் விவகாரத்தை எடுத்துக் கொள்வது.

2.     நெராமேக் நிறுவனம் அங்கேயுள்ள விவசாயிகளிடமிருந்து சிட்ரனெலா எண்ணையை கிலோவுக்கு சுமார் 50-60-க்கு வாங்கிக்கொள்ள வேண்டியது. அதை அவர்களே மும்பைக்கு எடுத்துச் சென்று சந்தை விலைக்கு விற்றுக்கொள்ள வேண்டியது.

3.     எண்ணெய் கொள்முதலை திக்பாய்க்கு அருகேயுள்ள கிராமங்களுக்கே சென்று செய்வது. விலைக்கான தொகையை அங்கேயே எங்கள் வங்கி அதிகாரிகள் மூலம் வினியோகித்து விடுவது. இதைத்தான் இடைத்தரகர்களும் செய்து வந்தார்கள். மேலும், அந்தக் காலத்தில் ஒரு வங்கிக் கிளைக்கும் இன்னொரு கிளைக்கும் வெகுதூரம் செல்ல வேண்டிய நிலை இருந்ததால் விவசாயிகளால் தங்கள் வேலையை விட்டு விட்டு பணத்துக்காக அலைய முடியாது. போக்குவரத்து வசதிகளும் மிகக் குறைவு.

4.     நெராமேக் நிறுவனத்துக்கு சிட்ரனெலா எண்ணெயை விற்கும் விவசாயிகளுக்கு ஒவ்வொருவரின் உற்பத்தி செய்யும் அளவைப் பொருத்து 5 முதல் 10 ஆயிரம் வரை எங்கள் வங்கி குறைந்த வட்டியில் கடன் கொடுத்து அவர்களை இடைத்தரகர்களின் கடனிலிருந்து மீட்டு விடுவது. ஒவ்வொரு முறை சிட்ரனெலா எண்ணெய் நெராமேக் நிறுவனத்துக்கு விற்கும்போது அந்தப் பணத்திலிருந்து ஒரு சிறிய தொகையை வங்கிக் கடனுக்காக கழித்துக் கொள்வது.

5.     விவசாயி, எங்கள் வங்கி, நெராமாக் நிறுவனம் மூவரும் இதற்கான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வது.

6.     இந்தத் திட்டத்தில் பயன்பெறும் ஒவ்வொரு விவசாயிக்கும் எங்கள் திக்பாய் கிளையில் கணக்கு திறந்து கொடுப்பது. வாரத்தில் ஒரு நாள் எங்கள் வங்கி ஊழியர்களே அந்த கிராமத்துக்குச் சென்று அந்த விவசாயிகளின் வங்கித் தேவைகளை நிறைவேற்றி வைப்பது.

7.     பரீட்சார்த்தமாக திக்பாய் அருகே ஒரே ஒரு கிராமத்தில் முயற்சி செய்து பார்ப்பது.

நெராமேக் மேலாண் இயக்குனருக்கு எங்கள் திட்டம் மிகவும் பிடித்துப்போய் விட்டது. உடனே செயல்படுத்த விரும்பினார்.

இந்த இடத்தில், வடகிழக்கு மானிலங்களின் அன்றைய நிலையைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். குறிப்பாக அசாமில்.

1985-86-காலங்களில்தான் அசாமில் தீவிரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஒடுக்குவதற்கு, அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் ‘ஆசு’ (AASU) என்ற அசாம் மாணவர்களின் இயக்கத்தோடு ஒரு புரிதல் ஒப்பந்தம் செய்துகொண்டு பொதுத் தேர்தலை நடத்தினார். ‘ஆசு’ என்ற இயக்கம் அசாம் கண பரிஷத் என்ற அரசியல் கட்சியாக மாறி அசாமில் ஆட்சியைப் பிடித்திருந்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இருந்தும், பிரதமர் ராஜீவ் காந்தி வடகிழக்கு மானிலங்களின் வளர்ச்சிக்காக பல புதிய திட்டங்களை அறிவித்து, தேர்தலில் தோல்வியுற்றாலும் எதிர்கட்சியால் ஆட்சி செய்யப்பட்ட அசாம் அரசுக்குப் பலவிதங்களிலும் உதவி புரியத் தயாராக இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அசாமில் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி திரும்பிக் கொண்டிருந்தது.

அப்படிப்பட்ட பதட்டமான சூழ்னிலைகளில் ஒவ்வொரு முறையும் வங்கி அதிகாரிகள் கையில் நிறைய பணத்தை எடுத்துக்கொண்டு   நெராமேக் அதிகாரிகளுடன் எளிதில் அணுக முடியாத, தொலைவிலுள்ள சிறிய கிராமங்களுக்குச் சென்று விவசாயிகள் கையில் ஒப்படைப்பது என்பது மிகவும் ஆபத்தாக கருதப்பட்ட சமயம் அது. இந்த பொறுப்பை நெராமக் அதிகாரிகளிடம் ஒப்படைப்பது வங்கிகளின் விதிமுறைக்கு மீறியது.

இருந்தும், இந்தத் திட்டத்துக்கு கௌஹாத்தி மற்றும் திக்பாய் கிளை மேலாளர்களிடம் கலந்தாலோசித்து, வங்கி ஊழியர்களின் யூனியனிடமும் சம்மதம் பெற்று ஒத்துக்கொண்டேன்.

நெராமேக் அதிகாரிகள் மூலம் நாங்கள் செல்ல இருந்த கிராமத்து மக்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது.

நெராமக் மேலாண் இயக்குனர் அசாம் அரசின் காவல்துறையுடன் பேசி எங்கள் எல்லோருக்கும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தார்.

நாங்கள் நிச்சயித்திருந்த தேதியன்று அதிகாலையிலேயே கௌஹாத்தியிலிருந்து காரில் நான், கௌஹாத்தி கிளை மேலாளர், நெராமக் மேலாண் அதிகாரி மூவரும் திக்பாய் நோக்கி கிளம்பினோம். எங்களுக்கு முன்னேயே நெராமேக்கின் வேறு பல அதிகாரிகள் திக்பாய்க்கு சென்று விட்டார்கள்.

நாங்கள் கிளம்புவதற்கு முந்தின நாள் எனக்கு அலுவலகத்தில் யாரிடமிருந்தோ ஃபோன் வந்தது. எங்களின் முயற்சி மிக ஆபத்தானது. அதனால் அதனை கைவிட வேண்டும் என்றும் அதையும் மீறினால் நடப்பதற்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்றும் ஃபோனில் பேசிய ஒரு குரல் எனக்குத் தெரிவித்தது. நெராமேக் மேலாண் அதிகாரிக்கு உடனேயே ஃபோன் செய்து இதைச் சொன்னேன். “எனக்கும் அப்படி ஒரு ஃபோன் கால் வந்தது. கவலைப்படாதீர்கள். தேவையான பாதுகாப்புக்கு நான் ஏற்பாடு செய்து விட்டேன். இதெல்லாமே அந்த இடைத்தரகர்கள் செய்யும் நாசகார வேலைதான்.” என்று என்னை சமாதானப் படுத்தினார்.

இருந்தும் எங்களுக்குக் கொஞ்சம் நடுக்கம்தான். ஏனென்றால், அந்த சமயங்களில் ஒரு சில வங்கிக் கிளைகள் தீவிரவாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. கௌஹாத்தியில் என் அலுவலகத்துக்கு எதிரேயே இருந்த யூ. கோ வங்கியின் மேலாளர் பட்டப் பகலில் அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதே இந்தக் கொள்ளைக்கு பலியாகியிருக்கிறார்.

ஒரு மாதிரியாக துணிச்சலை வரவழைத்துக்கொண்டு கிளம்பிய நாங்கள் எங்கள் திக்பாய் கிளை சென்றடைந்து அங்கிருந்து தேவையான பணத்தையும் எடுத்துக்கொண்டு நாங்கள் நிச்சயித்திருந்த கிராமத்தை நோக்கி முன்னும் பின்னும் போலீஸ் படையுடனும் நெராமேக்கின் மற்ற அதிகாரிகள் மற்ற ஜீப் போன்ற வண்டிகளிலும் வர அணி வகுத்துச் சென்றோம்.

கிராமத்தில் நுழைந்து விட்டோம் என்று எங்களுக்குத் தெரிந்தது. நுழையும் இடத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிட்ரனெலா எண்ணெய் எடுக்கும் கச்சா இயந்திரங்கள் கண்ணில் தென்பட்டன. முன்னால் சென்ற நெராமக் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலமாக எங்கள் திட்டத்தைப் பற்றிய அறிவிப்பு செய்துகொண்டே சென்றது. ஒரு சிறிய டிரக்கில் சிட்ரனெலா எண்ணையை சேகரிக்க இரண்டு மூன்று பெரிய டிரம்கள் வைக்கப்பட்டு எங்களுடனேயே வந்து கொண்டிருந்தது.

கிராமத்தின் மையமான இடத்துக்கு வந்து விட்டோம். கிராம அதிகாரியும் எங்களுடன் இருந்தார். போகும் வழியில் பல எண்ணெய் பிழியும் கச்சா இயந்திரங்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தன. எல்லோரும் எங்களை உற்று உற்று ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மைய இடத்தில் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒரு கிலோ எண்ணெய்க்கு ஐம்பது ரூபாய் விலை கொடுத்து எடுத்துக் கொள்வதாக அறிவிப்பு தொடர்ந்து கொண்டிருந்தது.

நாங்கள் காத்திருந்தோம். ஒன்றிரண்டு விவசாயிகள் மட்டும் துணிச்சலோடு எங்களிடம் வந்து பேசினார்கள். ஆனால், யாரும் எண்ணையை விற்க எடுத்து வரவில்லை.

சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்தோம். ஒன்றிரண்டு விவசாயிகள் மெதுவாக எண்ணையோடு வந்தார்கள். நெராமேக் அதிகாரிகள் கையோடு அவர்களுக்கு பணத்தைக் கொடுத்தார்கள். விவசாயிகள் முகத்தில் மகிழ்ச்சி. அவர்களுக்கு அவர்களின் கடன் தொல்லையைத் தீர்க்க வங்கியில் கடன் கொடுப்பதாகவும் உறுதியளித்தோம்.

மேலும் சிலர் எண்ணையுடன் வந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் எடுத்துச்சென்ற டிரம் நிரம்ப ஆரம்பித்தது.

ஒரு பதட்டமான சூழ்னிலை நிலவுவதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது.

சுமார் இரண்டு மூன்று மணி நேரம் காத்திருப்புக்குப் பின் மெதுவாக அந்தி சாயத் தொடங்கியது. காவல்துறையினரும் எங்களை அதற்கு மேல் காத்திருப்பதில் பலனில்லை என்பதை சாடைமாடையாகத் தெரிவிக்கத் தொடங்கினர்.

டிரம்மின் கால் பங்கு அளவே நிரம்பியிருந்தது.

சரி, இந்த முறை இவ்வளவு போதும் என்று நெராமேக்கின் மேலாண் இயக்குனர் தீர்மானித்தார். கிராம அதிகாரிக்கும், மக்களுக்கும் நன்றி சொல்லி அந்த இடத்திலிருந்து விடைபெற்றோம்.

திக்பாய் கிளையில் மீதமிருக்கும் பணத்தையும் ஒப்படைத்து விட்டு அன்றிரவே கௌஹாத்தி திரும்பினோம்.

ஆண்டவன் கிருபையால் நாங்கள் பயந்தபடி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அந்த கிராமத்தில் சிட்ரனெலா எண்ணையின் விலை கிலோவுக்கு சுமார் 70 ரூபாயாக உயர்ந்திருப்பதாக தகவல் வந்தது.

“நம் திட்டத்தின் முதல் குறிக்கோள் நிறைவேறி விட்டது. விவசாயிக்கு சிட்ரனெலா எண்ணெய்க்கு கிடைக்கும் விலை கூடிவிட்டது. அதுவே ஒரு பெரிய வெற்றிதான்.” என்றார் நெராமக்கின் மேலாண் இயக்குனர். “ஆனால், உங்களுக்குத் தெரியாது, எனக்கு பல மிரட்டல்கள் வந்து விட்டன இதுவரை. நான் உங்களிடம் சொன்னால், நீங்கள் வயதில் இளையவர். பயந்து விடுவீர்கள் என்று நான் சொல்லவில்லை … சரி, இப்போதைக்கு இப்படியே போகட்டும் … என்ன நடக்கிறதென்று பார்க்கலாம் … இடைத்தரகர்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும். விவசாயிகளுக்கு சரியான விலை கொடுக்கவில்லையென்றால் அதை அதிக விலை கொடுத்து வாங்க இப்பொழுது நெராமேக் நிறுவனம் தயாராக இருக்கும் என்று .. கொஞ்சம் பொறுத்திருந்து அடுத்து நாம் என்ன செய்யலாம் என்று பார்ப்போம்,” என்று முடித்தார்.

அதற்கு மேல் வங்கியின் தரப்பிலும் நாங்கள் எதுவும் மேற்படி நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனென்றால் நெராமேக் போன்ற அரசு நிறுவனம் உதவி இல்லாமல் நாங்களாக எதுவும் செய்வது கடினம்.

அடுத்த ஒன்றிரண்டு மாதங்களில் இதே போன்ற ஒரு முயற்சியை திரிபுராவின் தலைநகரம் அகர்தலா அருகே அன்னாசிப் பழம், இஞ்சி, தேங்காய், பலாப்பழம் போன்ற பயிர்களுக்கு எங்கள் வங்கியை ஈடுபடுத்தாமல் நெராமேக் தரப்பிலேயே அதிகாரிகளைக் கொண்டு முயற்சி செய்து விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்கி சந்தையில் நெராமேக் தரப்பிலேயே வியாபாரம் செய்ததாக அந்த மேலாண் இயக்குனர் எனக்குக் கூறினார். திரிபுராவில் எங்களுக்கும் ஒரே ஒரு கிளை மட்டுமே இருந்ததால் என்னாலும் அவருடைய முயற்சிக்கு உறுதுணையாக நிற்க முடியவில்லை. அசாமை விட திரிபுராவில் நிலைமை இன்னும் மோசம்.

நெராமேக் நிறுவனத்துடன் இணைந்து விவசாயிகளுக்கு ஒரு நல்ல காரியத்தை செய்து கொடுத்ததில் எனக்கும் என்னுடன் சேர்ந்து பயணித்த வங்கி அதிகாரிகளுக்கும் மிகவும் திருப்தி. பொதுவாக எதற்கும் முரண்டு செய்யும் வங்கி ஊழியர்களுக்கும் மகிழ்ச்சி.

ஆனால், திக்பாய் அருகே ஒரு படை சூழ சென்று வந்த அனுபவத்தின் நினைவு இன்றும் – சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகும் – நினைவில் பசுமையாக நிற்கிறது.

வாழ்க வேளாண்மை!

Friday, January 15, 2016

பகுதி 4 – வடகிழக்கு மானிலங்கள் – மலரும் நினைவுகள்

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் பொதுவாக பதட்டமான ஒரு சூழ்னிலையே நிலவி வந்தது. நான் குவாஹாத்தி போய்ச் சேர்ந்த சில மாதங்களிலேயே பொதுத் தேர்தல்கள் நடந்தன. அதுவரை ஒரு புரட்சி இயக்கமாக செயல்பட்டு வந்த ‘ஆஸு’ (AASU என்ற மாணவர்களின் அமைப்பு தீவிரவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் கைவிட்டுவிட்டு பொதுத் தேர்தல்களில் ‘ஏ.ஜீ.பி’(AGP) என்ற அரசியல் கட்சியாக ஈடுபட்டது. அதுவரை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அவ்வளவு கோபம். ஏ.ஜீ.பி அசுர மெஜாரிட்டியுடன் பதவிக்கு வந்தது. ப்ரஃபுல்ல குமார் மொஹாந்தோ மிக இள வயதில் முதலமைச்சராக பதவியேற்றார். சட்டசபை முழுவதுமே இளைஞர்கள். நேற்றைய மாணவர்கள் இன்றைய அரசர்கள். மக்களின் எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாக இருந்தது.

வங்கியின் பயிற்சிப் பள்ளி

எங்கள் வங்கியின் அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் வங்கிப்பணியில் பயிற்சி கொடுக்க ஒரு வங்கிப் பயிற்சி பள்ளி திறக்கவேண்டியிருந்தது. அதுவரை அலுவலர்களை பயிற்சிக்கு கொல்கத்தாவுக்கே அனுப்ப வேண்டியிருந்தது. அதிக நாட்கள் பயணத்திலேயே வீணாகிப்போய்விடும். போக வர பயணச் செலவும், தங்குவதற்கானச் செலவும் அதிகம். எங்களிடமோ அலுவலர்களும் அதிகாரிகளும் கணக்காகவே இருந்தனர். பயிற்சிக்கு அனுப்பப்பட்ட நாட்களில் கிளைகளில் வேலையும் மந்தமாகிவிடும். அதனால் பயிற்சிக்கு அனுப்புவதற்கே கிளை மேலாளர்கள் தயங்கினர். அதனால் குவாஹாத்தியிலேயே ஒரு பயிற்சிப் பள்ளி திறப்பது மிகவும் இன்றியமையாததாக இருந்தது.

பயிற்ச்சிப் பள்ளி தொடங்குவதற்கு இடத்தைத் தேடினோம். குவாஹாத்தியில் ஜூ ரோடில் சரியான இடம் கிடைத்தது. அந்த இடத்தின் சொந்தக்காரர் சட்டசபை அலுவலகத்தில் செயலராக பணி புரிந்து வந்தார். 

திடீரென்று ஒரு யோசனை. பயிற்ச்சிப் பள்ளியை திறப்பதற்கு முதலமைச்சரை அழைத்தாலென்ன என்று.

ஆனால் முதலமைச்சரை எப்படி சந்திப்பது? அவரோ புதியவர். மிகவும் பிஸியாக இருப்பவர். காலை வேளையில் சென்றால் முதலமைச்சரை எளிதாக சந்திக்கலாம் என்று எங்கள் பயிற்சிப் பள்ளியின் இடத்துக்கு சொந்தக்காரர் கூறினார்.

எந்த விதமான முன்னேற்பாடும் இல்லாமல் போனோம். முதலமைச்சரின் வீட்டில் நுழைந்தோம். ஒரு செயலர் எங்களை உள்ளே அழைத்துச் சென்று அமர்த்தினார். ஒரு சில நிமிடங்களில் ப்ரஃபுல்ல குமார் மொஹந்தோ வரவேற்பரைக்குள் வந்தார். மிக எளிமையான, இளமையான தோற்றம். அவருடைய குறுந்தாடி மிகப் பிரபலம். அறிமுகப்படுத்திக்கொண்டு வந்த நோக்கத்தை எடுத்துக்கூறினேன். தன் செயலரிடம் எங்கள் முன்னரே கலந்தாலோசித்தார். உடனேயே தேதியையும் நேரத்தையும் கொடுத்தார். சட்டசபை சபாநாயகர் புலகேஷ் பருவா என்பவரையும் நாங்கள் அழைக்க இருப்பதாகக் கூறினோம். மிக்க மகிழ்ச்சி என்றார். அவர்கள் இருவரும் அப்பொழுது நல்ல நண்பர்களாக இருந்தனர். பின்னால், சட்டசபை சபாநாயகர் புலகேஷ் பருவாவையும் திறப்பு விழாவுக்கு தலைமை தாங்குவதற்கு அழைத்தோம். உடனேயே ஒப்புக்கொண்டார்.

எல்லா இடங்களிலும் நடப்பது போல், எங்கள் பள்ளிக்கு முதலமைச்சர் வருவதற்கு முதல் நாள் அவசர அவசரமாக தார்ச் சாலை போட்டனர். வெற்றிகரமாக எங்கள் வங்கியின் பயிற்ச்சிப் பள்ளி அசாமில் திறக்கப்பட்டது. திறப்பு விழாவுக்கு வங்கியின் மேலதிகாரிகளும் வந்திருந்தனர். வடகிழக்கு மானிலங்களில் பலம் பொருந்திய வங்கிகளாக இருந்த பாரத ஸ்டேட் வங்கி, யுனைடெட் வங்கி, யூ கோ வங்கிக்கு அடுத்த படியாக அசாமில் காலூன்றிய மற்ற வங்கிகளில் முதலாவதாக எங்களது வங்கியின் பயிற்சிப் பள்ளி அமைந்தது. அசாம் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும், கிராமப்புற மக்களுக்கு விவசாயத்துக்கும் சிறு தொழிலுக்கும் அதிக கடன் வசதி கொடுக்கவேண்டும் என்று முதலமைச்சர் வலியுறித்தினார். அசாமில் பொதுவாக எல்லா இடங்களிலும் வங்காளிகளின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ஏனென்றால் அவர்கள்தான் அதிகம் படித்தவர்களாக இருந்தனர். தேயிலைத் தோட்டங்களில் கூட ஒரு சிலவற்றைத் தவிர பெரும்பாலான தோட்டங்கள் வங்காளத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்த மார்வாரி சமூகத்தினருக்கே சொந்தமாக இருந்தது. ப்ளைவுட் தொழிற்சாலைகளும் அப்படியே. அரசாங்க உத்யோகத்தில் பெரும்பாலும் வங்காளிகள்தான். வியாபாரம் வங்காளிகளின் கையிலும் மார்வாரி சமூகத்தினர் கையிலும்தான் இருந்தது. கூலி வேலை செய்தவர்கள் பெரும்பாலும் பீஹாரிகள். அசாமியர்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவும் ஏழைகளாகவும் இருந்தனர். அதனால் வங்காளிகளுக்கும் அசாமியர்களுக்கும் கடும் பனிப்போர் நிலவி வந்தது. தங்களது வாழ்வாதாரத்தை வங்காளிகள் பறித்துக்கொண்டு விட்டனர் என்றே பெரும்பாலான அசாமியர்கள் நம்பி வந்தனர்.

அதிர்ச்சி தந்த இன்னொரு நாள்

ஒரு நாள் காலை பத்தரை மணியிருக்கும் என்று நினைக்கிறேன். எனது அலுவலகம் குவாஹாத்தியில் பிரதான சாலையான ஜீ.என்.போர்டலாய் சாலையில் முதல் மாடியில் அமைந்திருந்தது. அதுதான் குவாஹாத்தியின் மௌண்ட் ரோடு. நாங்கள் எங்கள் அலுவலகத்தில் எங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தோம். சாலையில் மிதமான வாகனப் போக்குவரத்துதான் இருந்தது. அதனால் வாகனங்களின் சத்தம் அதிகமாக இல்லாமலிருந்தது.  

திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது போலிருந்தது. ஏதோ வாகனத்தின் டயர்தான் வெடித்துவிட்டது என்று நினைத்து நாங்கள் அதிகமாக அந்த சத்தத்தைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் அதைத் தொடர்ந்து பல வாகனங்கள் வேக வேகமான ‘சர், சர்’ என்ற சத்தத்துடன் போய்க்கொண்டிருந்தன. இன்னும் சற்று நேரத்தில் பல போலீஸ் வாகனங்கள், ஆம்புலன்சுகளின் இரைச்சல் எங்கள் அலுவலகம் முன்னே. என்னவோ ஏதோ என்று பதற்றத்தில் எங்கள் அலுவலகத்திலிருந்த பால்கனிக்கு விரைந்தோம்.

எங்கள் அலுவலகத்துக்கு நேரெதிரே யூ கோ வங்கியின் கிளை இருந்தது. அந்த வங்கியின் மேலாளரை ஒரு கொள்ளைக்காரக் கும்பல் சுட்டுத் தள்ளி வங்கியின் இரும்புப்பெட்டியிலிருந்து கணிசமான பணத்தையும் கொள்ளையடித்து நிமிடத்தில் ஓடிவிட்டனர்.  எல்லாம் கண்மூடிக் கண் திறப்பதற்குள் நடந்து முடிந்திருக்கிறது. வங்கியின் பல வாடிக்கையாளர்களும் மற்ற அலுவலர்களும் ஒன்றும் செய்யமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்திருக்கின்றனர்.

எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. பட்டப்பகலில் இப்படி ஒரு துணிச்சலான கொள்ளை. கொள்ளைக்காரர்கள் உள்ளே நுழைந்து மேலாளரிடம் துப்பாக்கியைக் காட்டியிருக்கிறார்கள். மேலாளர் அசையாமல் இருந்திருந்தால் அவரை கொள்ளைக்காரர்கள் விட்டுவைத்திருப்பார்களோ என்னவோ. அவர் பாதுகாப்பு எச்சரிக்கை மணியை அழுத்த முயற்சி செய்திருக்கிறார். சுட்டுவிட்டார்கள். வேறு யாருக்கும் பாதகம் ஏற்படவில்லை. சில லட்சம் ரூபாய் வங்கிக்கு நஷ்டம். மிகவும் சங்கடமாக இருந்தது. அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் வங்கிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக உயர் மட்ட கூட்டம் நடந்தது. வங்கிகளுக்கு பல கடுமையான உத்திரவுகளை காவல் துறையினர் பிறப்பித்தனர். 

அவற்றையெல்லாம் அமல்படுத்த நடைமுறையில் பல சிரமங்கள் இருந்தன.

இருந்தும்…

ஒரு சில மாதங்களிலேயே யுனைடெட் வங்கியின் முக்கிய கிளையில் இன்னொரு பட்டப்பகல் கொள்ளை. வங்கியிலிருந்து ரிசர்வ் வங்கிக்கு எடுத்து செல்வதற்காக பணத்தை வங்கியின் பாதுகாப்பு வண்டியில் ஏற்றிகொண்டிருந்தனர். துப்பாக்கியேந்திய வீரர் மேற்பார்வை செய்துகொண்டிருந்தார். திடீரென்று ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர். ஒரு சில நிமிடங்களில் வண்டியில் ஏற்றப்பட்ட பல கோடி ரூபாய்கள் அடங்கிய பணப்பெட்டியுடன் கொள்ளையர்கள் மறைந்து விட்டனர். இரண்டு மூன்று நாட்கள் சல்லடை போட்டு அரித்ததில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர். தொலைந்த பணத்தில் ஒரு பகுதி மீட்கப்பட்டது.

வங்கிகளை குறி வைத்து இப்படி அடிக்கடி கொள்ளைகள் அங்கங்கே நடந்து வந்தன. எவ்வளவோ முயன்றும் எல்லா வங்கிகளிலுமே பாதுகாப்பு ஏற்பாடுகள் பொதுவாகக் குறைவாகவே இருந்தன. நிர்வாகிகளை அலுவலர்கள் குறை கூறினர். பாதுகாப்பு உணர்ச்சியில்லாமல் செயல்படுவதாக அலுவலர்களை நிர்வாகிகள் குறை கூறினர்.


பொதுவாக வடகிழக்கு மானிலங்கள் எல்லாவற்றிலுமே இதே கதைதான். 

                                                       .... இன்னும் முடியவில்லை

Saturday, January 02, 2016

3-ஆம் பகுதி - வடகிழக்கு மானிலங்கள் – மலரும் நினைவுகள்

3-ஆம் பகுதி - வடகிழக்கு மானிலங்கள் – மலரும் நினைவுகள்

நான் வங்கியில் பணி புரிந்த 25 ஆண்டுகளில் மிகவும் ரசித்த பகுதி என்று சொல்லக்கூடியவற்றில் குவாஹாத்திக்கு முக்கிய பங்கு உண்டு. அங்கே பணி புரிந்த நாட்களில் பல சுவையான அனுபவங்கள். அதில் குறிப்பாக ஒன்றைப் பற்றி இங்கே கண்டிப்பாக கூற வேண்டும்.


வடகிழக்கு மானிலங்களில் விவசாயம் மிக முக்கியமான தொழில். நீர் வளம், நில வளம் மிக்க இடம் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். ஆனால் விவசாயம் செய்வதற்கு பல தடங்கல்கள் என்றும் கூறியிருந்தேன். அவற்றில் மிக முக்கியமானது ப்ரம்மபுத்ராவில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது. விவசாய முறைகள் பழமையானவை. விவசாயிக்கு விளைபொருளுக்கான உரிய விலை கிடைக்காததால் தங்களுக்குத் தேவைக்கு மேல் மக்கள் அதிகம் அவர்கள் பாடுபடுவதில்லை. இடைத் தரகர்களே அதிகமாக பயன்பெற்றனர்.


வடகிழக்கு மானிலங்களின் விவசாயப் பொருட்களை சரியான முறையில் சந்தைக்கு கொண்டு வந்து விவசாயிக்கு விவசாயம் செய்வதன் பலன் நேரடியாகப் போய்ச் சேரவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு மத்திய அரசாங்கத்தின் ஒரு நிறுவனம் NERAMAC செயல்பட்டு வந்தது.அதற்கு புதியதாக ஒரு தலைவர் நியமனம் செய்யப்பட்டிருந்தார். மிகவும் துடிப்பானவர். விவசாயிகளின் நலனில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். வங்கிக் கணக்கு தொடங்குவதில் எங்களுக்கு அவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவருடைய கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன.


சிட்ரோனலா எண்ணை பற்றி அவர் கூறிய தகவல் என்னை அதிர வைத்தது. சிட்ரோனலா புல்லிலிருந்து எண்ணை பிழிந்தெடுக்கப்படுகிறது. தேயிலைத் தோட்டங்களில் தேயிலை சீசன் முடிந்த பிறகும் அடுத்த சீசன் தொடங்குவதற்கு முன்பும் எலுமிச்சை புல், சிட்ரோனலா புல் போன்ற புல் வகைகள் ஒரு களையாக காடுபோல வளரும். இந்தப் புல்லை வெட்டியெடுத்து கரும்புச்சாறு பிழிந்தெடுக்கும் இயந்திரம் பொல ஒரு சிறிய இயந்திரத்தில் பிழிந்தெடுத்து எண்ணையை பிரித்தெடுக்கிறார்கள். மிகவும் பழமையான முறை. வயல்களிலிருந்து புல்லை வெட்டி எடுக்கவேண்டும். மிகக் கடினமான உடல் உழைப்பு தேவைப்படும். நிறைய வேலையாட்களும் கூலியாட்களும் தேவைப்படும். பெரும்பாலான கூலியாட்கள் பிஹாரிலிருந்து பிழைப்புக்கு அசாமுக்கு வந்தவர்கள். பெரிய நகரங்களில் மருந்து, சோப், சென்ட் போன்ற ஆடம்பர அழகுப்பொருட்களில் இந்த எண்ணை அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. பெரிய நகர மார்க்கெட்டுகளில் கிலோவுக்கு 200-300-க்கு விற்று வந்தார்கள். ஆனால் அசாமிலோ அதற்கு விவசாயிக்கு கிடைத்த விலை ரூபாய் 20-30தான். பல இடைத்தரகர்கள் இந்த கூலி விவசாயிகளுக்கு ரூபாய் 5000 – 10000 என்று கடன் கொடுத்து வைத்து அவர்களை கொத்தடிமைகளாகவே நடத்தி வந்தார்கள்.


இந்த நிலையை மாற்றவேண்டும் என்று கருதினார் நெராமாக்கின் தலைவர். விவசாயிக்கு குறைந்தது 50-60 ரூபாய் கிலோவுக்கு கிடைக்குமாறு ஏற்பாடு செய்யவேண்டும் என்றார். ஆனால் அந்த ஏழை விவசாயிகள் இடைத் தரகர்களையே காலம் காலமாக அதிகமாக நம்பினர். புதிய இடைத்தரகர்களை – அது அரசாங்கமாகவே இருந்தாலும் கூட அவர்கள் நம்புவார்களா என்று தெரியவில்லை.


விவசாயிக்கு நியாயமான விலை கிடைக்கவேண்டும் என்ற முதல் குறிக்கோளுடன் ஒரு திட்டம் தீட்டினோம். விவசாயிகளுக்கு எங்களது வங்கி அவர்களது பழைய கடனை அடைப்பதற்கும் புதிய தேவைகளுக்கும் நேரடியாகக் கடன் வழங்கும். இடைத்தரகர்களின் கிடுக்குப்பிடியிலிருந்து விவசாயிகள் வெளிவர இது உதவும். இரண்டாவது எண்ணை கொள்முதல் செய்ய சிட்ரோனலா எண்ணை உற்பத்தி செய்யும் இடத்துக்கே நாம் சென்று விட வேண்டும். விவசாயிகளை பெரிய ஒரு நகரத்துக்கு எண்ணையைக் கொண்டு வந்து கொடு என்றால் வர மாட்டார்கள். வாரம் ஒரு முறையாவது இப்படி அவர்கள் இடத்துக்கே சென்று எண்ணையை கொள்முதல் செய்து கையோடு பணத்தையும் கொடுத்துவிட வேண்டும். கையோடு பணத்தையும் கொடுத்துவிடுவது மிகவும் முக்கியம். அப்பொழுதுதான் விவசாயிகள் நம்மை நம்புவார்கள். ஒவ்வொரு முறையும் எண்ணைக்காக கொடுக்கும் பணத்தில் ஒரு சிறிய பகுதியை அவர்களது வங்கிக் கடனை அடைப்பதற்கு பிடித்துக்கொள்ள வேண்டும். இதற்கு நேராமேக், வங்கி, விவசாயி மூன்று பேரும் ஒரு கூட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். இதுதான் எங்கள் திட்டம்.


முதலில் திக்பாய் என்ற ஊரைத் தேர்ந்தெடுத்தோம். அந்த ஊருக்கு வெளியே உள்ள ஒரு சில கிராமங்களில் தண்டோரா போட்டு எங்கள் திட்டத்தை அறிவிக்க வைத்தோம். கிராம அதிகாரிகள் நன்கு ஒத்துழைத்தார்கள். அந்த கிராமத்துக்கு நாங்கள் கொள்முதல் செய்ய வரப்போகும் தேதியையும், ஒரு கிலோ எண்ணைக்கு ரூபாய் 60 கொடுப்போம் என்ற தகவலையும் முன்னறிவிக்க ஏற்பாடு செய்தோம்.


வங்கியும், நெராமேக் நிறுவனமும் கொள்முதலில் தலையிடப்போகிறது என்ற தகவல் கண்டிப்பாக இடைத்தரகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கவேண்டும். கொள்முதல் செய்வதற்கு நாங்கள் நிச்சயித்திருந்த நாளுக்கு ஒன்றிரண்டு நாட்கள் முன்னதாக எங்களுக்குத் தொலைபேசி மூலமாக மிரட்டல்கள் வந்தன. ஊரில் காலெடுத்து வைத்தால் கை, கால்கள் முறிக்கப்படும் என்று மிரட்டல்கள் விட்டார்கள். எனக்கு உள்ளூரக் கொஞ்சம் நடுக்கம்தான்.


நெராமேக் தலைவர் அசாம் டி.ஜி.பியிடம் பேசினார். நானும் பேசினேன். நம்மூர்காரர்தான் ஐ.ஜி.பியாக இருந்தார். எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதாக உறுதியளித்தனர்.


நிச்சயிக்கப்பட்ட நாளன்று ஒரு பெரிய போலீஸ் படையுடன், ஒரு ஜீப்பில் பெரிய பீப்பாய் ஒன்றை ஏற்றிக்கொண்டு, ஒரு பெட்டி நிறைய வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட கணிசமான பணத்தையும் வைத்துக்கொண்டு திக்பாயில் ஒரு கிராமத்துக்குள் நுழைந்தோம். அங்கங்கே சிட்ரோனலா எண்ணை பிழிவது நடந்து கொண்டிருந்தது. வழியில் கிராம மக்கள் வரிசையாக நின்று எங்கள் பரிவாரத்தை அதிசயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.


கிராமத்தின்  நடுவில் ஒரு திறந்த கீத்துக்கொட்டகைக்குள் எங்கள் கடையைத் திறந்தோம். ஒலிப்பெருக்கியில் எங்கள் அறிவிப்பு தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. நெராமேக்கின் தலைவரும் எங்களில் ஒருவராக நின்று கொண்டிருந்தார்.


சிறிது நேரத்துக்கு யாருமே முன் வரவில்லை. எங்களுக்கெல்லாம் ஏமாற்றம். கிலோவுக்கு அறுபது ரூபாய் போதவில்லையோ என்றும் ஒரு சந்தேகம். நாங்கள் கொண்டுசென்ற பீப்பாய் காலியாக வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது.


மெதுவாக ஒரு விவசாயி ஒன்றிரண்டு லிட்டர் எண்ணையை கொண்டுவந்து கொடுத்து கையோடு பணத்தையும் பெற்றுக்கொண்டார். அவர் முகத்தில் பெருமிதம். மகிழ்ச்சி. பிறகு இன்னொருவர் வந்தார். அப்புறம் இன்னொருவர்… ஒரு இரண்டு மணி நேரத்தில் சுமார் நூறு கிலோ எண்ணை கொள்முதலாகியது.


முதல் முயற்சி வெற்றி. அடுத்த நாள் எங்களுக்கு கிடைத்த செய்தி எங்களை இன்னும் அதிக வியப்பில் ஆழ்த்தியது. சிட்ரோனலா எண்ணையின் கொள்முதல் விலையை இடைத்தரகர்கள் எழுபது ரூபாக்கு ஏற்றியிருந்தனர்.


“இந்த திருப்பத்தைத்தான் நான் எதிர்பார்த்தேன். விவசாயிக்கு நியாயமான விலை கிடைக்கவேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள். இந்த வியாபாரத்தை நாமே நடத்த வேண்டும் என்பதில்லை,” என்று நெராமேக் தலைவர் கூறினார்.


இதே போல் டின்சுகியாவில் ஆரஞ்சு பழம், திரிபுராவில் தேங்காய், இஞ்சி, அன்னாசிப் பழம் இவற்றின் மார்க்கெட்டிங்கையையும் விரிவுபடுத்த நாங்கள் திட்டமிட்டோம். டின்சுகியாவில் தோட்டத்தில் ஆரஞ்சுப் பழத்தின் கொள்முதல் விலை 20-30 பைசா. அதே ஆரஞ்சு குவாஹாத்தியில் மார்க்கெட்டில் இரண்டு ரூபாய். திரிபுராவில் தேங்காய் தோப்பில் ஒரு தேங்காய்க்குக் கிடைப்பது ஐம்பது பைசா. மார்க்கெட்டிலோ இரண்டு, மூன்று ருபாய். இஞ்சியும் அப்படித்தான். அன்னாசி, பலாப்பழம் அடிமட்ட விலையில் கொட்டிக்கிடக்கும். திரிபுராவில் பழங்களைப் பதப்படுத்தி பழரசம், ஜாம் தயாரிப்பதற்கு நெராமேக்கின் தலைவர் திட்டம் தீட்டினார். தொழிற்சாலைக்கு தேர்ந்தெடுத்த இடத்தில் பயங்கரவாதிகள், ஊடுருவிகளின் தொந்தரவையும் மீறி துணிவோடு செயல்பட்டார். திரிபுராவின் அன்றைய முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு எல்லா வசதிகளையும் செய்துகொடுத்தார் என்று கேள்விப்பட்டேன்.


விவசாயிகளின் இடத்திலேயே வங்கியின் வேலைப்பாடுகளை வைத்துக்கொள்ள வேண்டுமானால், அன்றைய காலக்கட்டத்தில் ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவைப்பட்டது. மேலும் பல இடங்கள் பாதுகாப்பில்லாதவை. ரிசர்வ் வங்கியில் வரையறைக்குள் உட்பட்டு சில திட்டங்களைச் செயல்படுத்துவது என்பது இயலாதது என்பதால் நெராமேக்கின் எல்லா திட்டங்களிலும் எங்களால் ஈடுபடமுடியவில்லை. மேலும் எங்களுக்கு கிளைகள் குறைவாகவே இருந்தன. நல்ல எண்ணம் இருந்தாலும் செயல்பட முடியாத சூழ்னிலை.                                                                                                                                       

         …இன்னும் தொடரும்

Wednesday, December 30, 2015

பகுதி 2 - வடகிழக்கு மானிலங்கள் – மலரும் நினைவுகள்

வட கிழக்கு மானிலங்கள் – பகுதி 2
 வட கிழக்கு மானிலங்களில்  நான் பணி புரிய நேரிட்டதே ஒரு எதிர்பாராத திடீர் திருப்பம்.


அப்பொழுது சென்னையில் பிரதானக் கிளையின் முக்கிய மேலாளராக பணி புரிந்துகொண்டிருந்தேன். வங்கியின் பொது மேலாளரிடமிருந்து அவரை உடனே வந்து சந்திக்குமாறு உத்திரவு வந்தது. என்னவோ, ஏதோ என்று கவலைப்பட்டபடியே ஓடினேன். அவரை சந்தித்தபோது அவர் கூறியது:


“வடகிழக்கு மானிலங்களில் ஆறு புதிய கிளைகள் திறப்பதற்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து அனுமதி கிடைத்திருக்கிறது. அந்த அனுமதி மார்ச் 31-ன்றோடு முடிந்துவிடும். மீண்டும் அனுமதி வாங்குவது கடினம். வடகிழக்குப் பகுதியில் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியைக் காண வங்கி துடிக்கிறது. நீ நாளைக்கே விமானத்தைப் பிடிக்கமுடியுமானால் குவாஹாத்தி போக வேண்டும். உன்னை அங்கே பிராந்திய மேலாளராக மாற்றுகிறோம். என்ன சொல்கிறாய்?”


இந்த சந்திப்பு நடந்தது 1985 பிப்ரவரி முதல் வாரம். இரண்டு மாதத்துக்குள் ஆறு கிளைகளைத் திறக்கவேண்டும். ஆறு கிளைகளும் கிராமப்புற பகுதிகளில். திறக்க முடிந்தால் எனக்குப் பெருமை. திறக்க முடியாவிட்டால் நான் பலிகடா. இக்கட்டான நிலை எனக்கு.


சவாலை ஏற்றுக்கொண்டேன். அந்த நிமிடத்திலேயே குவாஹாத்தி செல்வதற்கு ஒத்துக்கொண்டேன். வீட்டில் மனைவியுடன் சண்டை, அவளை கலந்தாலோசிக்காமல் நான் முக்கியமான பல முடிவுகளை எடுத்து வருகிறேன் என்று.


அடுத்த நாள் இல்லை, ஐந்தாவது நாள் விமானத்தில் கல்கத்தா வழியாக குவாஹாத்திக்குப் பறந்தேன். குவாஹாத்தியில் இறங்கியவுடனேயே  புதிய கிளைகள் திறப்பதற்கு அனுமதி கிடைத்த ஊர்களை முதலில் பார்வையிடவேண்டும் என்று தீர்மானித்தேன். நவகான் என்ற பக்கத்து ஊரிலிருந்த கிளையைச் சேர்ந்த ஜீப்பில் இரண்டாவது நாள் பயணம் மேற்கொண்டேன். முன்பின் யாரையும் தெரியாது. அசாம் மொழி தெரிந்த உள்ளூர் அதிகாரி ஒருவரையும், எங்கள் அலுவலகத்தில் வேலை பார்த்த விவசாய அதிகாரியையும் துணைக்கு வைத்துக்கொண்டேன். குவாஹாத்திக்கு வெளியே நவகான் செல்லும் பாதையில் பாதையோர ஆஞ்சனேயர் கோவில். ஜீப்பை நிறுத்தி ஆஞ்சனேயரிடம் என்னுடன் துணையிருந்து எடுத்த வேலையை முடித்துத் தருமாறு பிரார்த்திக்கொண்டேன்.


ஒரு புதிய கிளை திறப்பதற்கு ரிசர்வ வங்கியின் வழிகாட்டல் படியான ஒரு கட்டிடம் கிடைக்கவேண்டும். பின்னர் அதை நிர்வகிப்பதற்கு உள்ளூர் மேலாளர் வேண்டும். அசாம் மொழி தெரிந்த இடை நிலை, கடை நிலை ஊழியர்கள் வேண்டும். இவையெல்லாம் மார்ச் 31-க்குள் நடக்க வேண்டும்.  


வடக்கு நோக்கி ஜீப் பறந்தது. முதல் நிறுத்தம் நவகான் என்ற ஊர். எங்களுடைய கிளை இங்கே ஏற்கெனவே இருந்தது.


நவகான் ஊருக்கருகில் இரண்டு புதிய கிளைகளைத் திறக்க வேண்டும். அந்த இரண்டு கிராமங்களைச் சென்று பார்த்தேன். சுற்று வட்டாரங்களில் விவசாயம்தான் முக்கியமான தொழில். தண்ணிருக்கு பஞ்சமில்லை. ஊரை அடைவதற்கு கிராமப்புற பாதை. ஜீப், மோட்டர் பைக் செல்லலாம். மழை காலத்தில் பாதைகள் துண்டிக்கப்படலாம். நடந்துதான் போக வேண்டியிருக்கும். ஒரு ஊர் –ஹாத்திபுக்ரி - பரவாயில்லை. முயற்சி செய்தால் இடம் கிடைத்துவிடும். இரண்டாவது இடத்தில் – பெயர் நினைவில் இல்லை -கட்டிடங்கள் என்று சொல்ல எதுவுமேயில்லை. எல்லாம் குடிசைகள். நாங்கள் போனவுடன் ஊர் மக்கள் எங்களை சூழ்ந்துகொண்டார்கள். வங்கியின் கிளை திறக்கப்போகிறது என்ற செய்தி காட்டுத் தீ போல ஊர் முழுவதும் பரவியிருக்கவேண்டும். “எப்பொழுது திறக்கப் போகிறீர்கள்? எங்களுக்கெல்லாம் கடன் கொடுப்பீர்களா?” போன்ற பல கேள்விகளால் என்னை துளைத்தெடுத்தார்கள். சூழ்ந்திருந்த எல்லோரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி ஒரே அச்சில் வடித்தவர்கள் போல் இருந்தார்கள். பெரும்பாலானவர்கள் பங்களாதேஷிலிருந்து ஓடி வந்த அகதிகள். அவர்களுக்குச் சொந்தம் என்று எதுவும் கிடையாது. மிகவும் பாவப்பட்ட ஏழைகள். கண்டிப்பாக அவர்களுக்கு உதவ வேண்டும். ஆனால், பிரச்சினை என்னவென்றால் ஊரிலுள்ள மசூதியைத் தவிர வேறு கட்டிடம் எதையும் பார்க்கமுடியவில்லை. கிளை திறப்பதற்கு ஒரு இடம் வேண்டும் என்றேன். எங்கள் மசூதியில் திறந்துகொள்ளுங்கள் என்றார்கள். ‘மசூதியிலேயே கிளையா? ரிசர்வ் வங்கி அதை அனுமதிக்குமா?’ போன்ற கேள்விகளுக்கு என்னிடம் அப்பொழுது விடையில்லை. “இல்லை, தனியார் இடம் கிடைத்தால் நல்லது,” என்றேன். எல்லோரும் தங்கள் இடத்தை எடுத்துக்கொள்ளுமாறு முன் வந்தார்கள். ஆனால், ஒரு கட்டிடத்தை ரிசர்வ் வங்கியின் வழிகாட்டலின் படி கட்டித்தர அவர்களில் யாருக்கும் வசதியில்லை. யாருக்கும் அவர்கள் வசிக்குமிடம் சொந்தமில்லை. எல்லாம் புறம்போக்கு நிலம். விரைவில் முடிவெடுக்கிறோம் என்று மட்டும் கூறி அங்கிருந்து விடை பெற்றுக்கொண்டேன். மனதுக்கு சங்கடமாகத்தான் இருந்தது.


அடுத்த இடம் ஜோர்ஹாட். அங்கேயும் இரண்டு கிராமப்புறங்களில் கிளைகள் திறக்கவேண்டும். ஒன்று- கொசைன்சத்ரா. கோலாகாட் என்ற ஒரு ஊருக்கு மிக அருகாமையிலிருந்தது. பிரச்சினையில்லை. இன்னொன்று – ஹாத்திகோவா - உள்ளே தள்ளிப் போகவேண்டும். மிக எளிமையான, அழகான கிராமம். முதல் பார்வையிடலிலேயே உள்ளூரில் கொஞ்சம் வசதியான ஒருவர் தன் வீட்டின் இன்னொரு பகுதியை மாற்றியமைத்து கிளை திறப்பதற்கு இடம் கொடுப்பதாக வாக்களித்தார். இடமும் சரியாக இருந்தது. உடனேயே ஒப்புக்கொண்டென். ஒரே நாளில் இரண்டு கிளைகளுக்கான அஸ்திவாராம் போட்டாயிற்று. குவாஹாத்திக்குத் திரும்பிவிட்டேன்.


வந்தவுடன் அலுவலக ஊழியர்களின் யூனியனுடன் பேச்சு வார்த்தை. அவர்களின் முக்கியமான வேண்டுகோள் எல்லா புதிய கிளைகளையும் உடனே திறந்துவிட வேண்டும். பல அசாமிய இளைஞர்களூக்கு வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.  நான் குவாஹாத்தியில் இறங்கியவுடனேயே வேலையில் இறங்கிவிட்டது பற்றி அவர்களுக்கு மகிழ்ச்சி.


ஒரு சில தினங்களுக்குப் பிறகு வடக்கு லக்கிம்பூருக்குப் பயணம், அங்கே இரண்டு கிளைகளுக்கு அனுமதி கிடைத்திருந்தது. முதன் முதலாக ப்ரம்மபுத்ராவை விமானத்தில் மூன்று முறை கடந்து பிரமித்தேன். ஒரு ஊரின் பெயர் கோய்லாமாரி. இன்னொன்று இப்பொழுது நினைவில் இல்லை. கோய்லாமாரியை ஒரு ஊர் என்று சொல்வதைவிட ஒரு தேயிலைத் தோட்டம் என்றுதான் சொல்லவேண்டும். அங்கே தேயிலைத் தோட்டத்தை விட்டால் வேறெதுவுமேயில்லை. தோட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கான பல குடிசைகள். பரம ஏழைகள். தோட்டத்தில் மேலாளரின் ஒரு பெரிய பங்களா. முன்பின் அறிமுகமில்லாவிட்டாலும் அந்த மேலாளர் நன்கு உபசரித்து அந்த தோட்டத்தைப் பற்றி விவரமாகக் கூறினார்.  அவர் சொன்னதில் முக்கியமான தகவல் என்னவென்றால் அந்த தோட்டத்தில் அடிக்கடி புலிகள் சுற்றி வருமாம். குறைந்தது இரண்டு மூன்று குடும்பங்கள் புலியால் அழிந்திருக்கின்றன என்றார். ஒரு ஐம்பது அறுபது தொழிலாளிகளுக்காக ஒரு புதிய கிளையை எப்படித் திறப்பது?


மற்றொரு ஊருக்கு - பெயர் மறந்துவிட்டது - அப்பொழுது போக முடியாது என்று சொன்னார்கள். கனமழை இல்லாத நாட்களில் படகு மூலமாக ஒரு ஆற்றை கடந்துதான் அந்த ஊருக்கு போகமுடியுமாம். மழை காலங்களில் போவது சாத்தியமில்லை. ஒரு ஊரையே அணுக முடியாது என்றால் அங்கே ஒரு வங்கியின் கிளையை எப்படித் திறப்பது?


வடகிழக்கு மானிலங்களில் பெரும்பாலான கிராமங்கள் இப்படித்தான். மிகவும் பின் தங்கியவை. ஒரு வங்கியின் கிளையைத் திறப்பதற்கு பாதுகாப்பான கட்டிடம் தேவை. அந்த பகுதிகளில் ஊடுருவிகள், பயங்கரவாதிகளினால் அடிக்கடி பல அசந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எளிதாக எட்டமுடியாத இடங்களில் வேலை பார்ப்பதற்கு அலுவலர்கள் கிடைப்பது மிகக் கடினம். உள்ளுரிலேயே படித்த இளைஞர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்ளலாம் என்றால் சட்டம் அனுமதிக்கவில்லை. இந்த ஊர்கள் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் மிகக் கடினமாக தன்னலமற்று உழைப்பும், பலரின் ஒத்துழைப்பும் வேண்டும்.


ஒன்றிரண்டு மாதங்களில் மூன்று கிளைகளை மட்டுமே என்னால் திறக்க முடிந்தது.


நவ்கானில் எங்களுக்கு அனுமதி கிடைத்த ஊரில் ஒன்று அந்த நேரத்தில் அசாமின் நிதி அமைச்சரின் தொகுதியில் அமைந்திருந்தது. சரி, அவரைப் போய் சந்திக்கலாம். உதவி கேட்கலாம் என்று போனேன். எந்தவித படாடோபமுமில்லாமல் தன்னைக் காண எனக்கு அனுமதி கொடுத்தார். மிக எளிமையானவர். நானும் அவரிடம் அந்த ஊரில் மசூதியைத் தவிர வேறு கட்டிடமேயில்லை, கட்டிடம் கட்டுவதற்கு கடன் வசதி செய்துகொடுத்தாலும் ரிசர்வ் வங்கியின் பல வரைமுறைகளுக்குட்பட்டு அங்கே ஒரு கட்டிடத்தை உருவாக்குவது சிக்கனமற்றது என்பதையும் எடுத்துக்கூறி அரசாங்கமே ஒரு சிறிய கட்டிடத்தை கட்டித் தருமாறு கேட்டுக்கொண்டேன். எவ்வளவோ முயன்றும் அது நடக்கவில்லை. மற்ற இரண்டு ஊர்களும் கிளைகள் திறப்பதற்கு அப்பொதைக்கு லாயக்கற்ற இடங்கள் என்பதையும் என் மேலதிகாரிகளுக்கும், உள்ளூர் ரிசர்வ் வங்கிக்கும் தெரிவித்து விட்டேன். இடையில் தேர்தல்கள் வந்துவிட்டன. அசாம் கன பரிஷத்தின் சூறைக்காற்றில் அரசாங்கமே மாறிவிட்டது. புதிய அரசாங்கம், புதிய கொள்கைகள், புதிய எதிர்பார்ப்புகள். மத்தியில் ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்தார். புதிய உற்சாகம். வடகிழக்கு மானிலங்களின் வளர்ச்சிக்காக வடகிழக்கு கௌன்சில் ஒன்றை நிறுவி அதை செயல்படுத்துவதற்கு மத்திய அரசாங்கத்திலிருந்து ஒரு பெரிய அணியையே ஏவினார். 

                                                                                                                                                இன்னும் தொடரும்………. 

Saturday, December 26, 2015

மலரும் நினைவுகள் - இந்தியாவின் வடகிழக்கு மானிலங்களைப் பற்றி

முன்னுரை:

பல இடங்களுக்கு மாற்றல்கள் கொடுக்கக்கூடிய பொதுத்துறை வங்கியின் ஒரு மேலதிகாரி பதவியை வகித்த காரணத்தால் இந்தியாவில் பல இடங்களில் வேலை பார்க்கக்கூடிய சந்தர்ப்ப சூழ்னிலை எனக்குக் கிடைத்தது. புதுப் புது இடங்கள். புதுப் புது மக்கள். புதுப் புது சூழ்னிலைகள். புதுப் புது சவால்கள், புதுப் புது அனுபவங்கள். அவற்றில் சிலவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களாக இருந்தது.  நினைவில் நின்றவை சில. நினைவுக்குக் கொண்டுவந்தவை சில. மறந்ததும் சில. ஆரம்பித்து வைக்கிறேன். தொடர்வேனா, முடிப்பேனா தெரியாது. நடக்க  நடக்க நாராயணன் செயல். பார்க்கலாம்.

முதலில் நான் தேர்ந்தெடுத்திருப்பது இந்தியாவின் வடகிழக்கு மானிலங்களைப் பற்றியது….

வட கிழக்கு மானிலங்கள்

1985-87-களில் வடகிழக்கு மானிலங்களில் அசாமின் தலைநகரமான குவாஹாத்தியை அலுவலகமாகக் கொண்டு இரண்டரை ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறேன். புதிய தலை நகரமான டிஸ்பூர் அப்பொழுதுதான் உருவாகிக்கொண்டிருந்தது.

இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் ஏழு மானிலங்கள் – அசாம், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோராம். மிக அதிக அளவில் நீர், நில, கனிம, மனித வளங்களைக்கொண்ட இந்த மானிலங்கள்தான் பொதுவாக எல்லையோரப் பகுதிகளில் பதட்டமானதும் மிகவும் பின் தங்கிய மானிலங்களுமாகும். இந்திய நாட்டுக்கு வடகிழக்கு எல்லையில் அரணாக விளங்கும் இந்த மானிலங்களில் தான் எல்லையோர பாதுகாப்புக்காக இந்திய அரசாங்கம் கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து வருகிறது. அதே சமயம் பாதுகாப்புக்காக செலவிடும் பணத்தில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே இந்த மானிலங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசாங்கம் செலவிடுகிறது என்ற குற்றச்சாட்டும் இன்றும் தொடர்ந்து வருகிறது.

நீர்வளம்

ப்ரம்மபுத்ரா இங்குள்ள மிகப் பெரிய ஆறு. இமயமலையின் திபெத் பகுதிகளில் உற்பத்தியாகும் இந்த நதி இந்தியாவில் அருணாசலப் பிரதேசத்தில் புகுந்து அசாம் வழியாக பங்களாதேஷ் நாட்டுக்குள் ஓடி கடலில் கலக்கிறது. எந்த கட்டுப்பாடுமில்லாமல் தன் இஷ்டப்படி ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு சில இடங்கள் தவிர பொதுவாக ஆழமில்லாத பரந்து ஓடும் ஆறு. பல இடங்களில் இந்த ஆற்றின் ஓட்டம் பல முறை மாறியிருக்கிறது.

கல்கத்தாவிலிருந்து குவாஹாத்தி வழியாக திப்ருகர் நகரம் வரை தாவித் தாவிச் செல்லும் இந்தியன் ஏர்லயின்ஸ் விமான சர்வீஸ் இருந்தது. இந்தியாவின் பிற இடங்களிலிருந்து அசாம் சென்றடைய ப்ரம்மபுத்ராவின் குறுக்கே 1962-ல் கட்டப்பட்ட ஒரே ஒரு பாலம்தான் இருந்தது. சராய்கட் பகுதியில் இந்தப் பாலம் அசாமில் பொங்கைகான் என்ற இடத்தை குவாஹாத்தியுடன் இணைக்கிறது. இந்தப் பாலத்தில் மேலும் கீழுமாக இரண்டு அடுக்குகள். ஒன்றில் மோட்டார் வாகனங்களும், இன்னொன்றில் ரயிலும் போக முடியும். கல்கத்தாவிலிருந்து குவாஹாத்திக்கு விமானத்தில் செல்லும்பொழுதெல்லாம் இந்தப் பிரம்மாண்ட பாலத்தைக் கண்டு வியந்திருக்கிறேன். பிந்தைய காலங்களில் இன்னும் இரண்டு பாலங்களைக் கட்டி முடித்திருக்கிறார்கள். மூன்றாவது பாலத்தின் வேலை இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. கல்கத்தாவிலிருந்து காம்ரூப் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினால் குறைந்தது 24 மணி நேரம் பயணம். சரியான நேரத்துக்குப் போய் சேர்ந்ததாக சரித்திரமே கிடையாது.

குவாஹாத்தியிலிருந்து விமானம் மூலமாக ப்ரம்மபுத்ராவைக் கடந்து தேஜ்பூர். மீண்டும் ப்ரம்மபுத்ராவைக் கடந்து ஜோர்ஹாட். மீண்டும் ப்ரம்மபுத்ராவைக் கடந்து வடக்கு லக்கிம்பூர். மீண்டும் ப்ரம்மபுத்ராவைக் கடந்து திப்ரூகர். அங்கிருந்து சில விமானங்கள் அருணாச்சல பிரதேசத்தில் ஜீரோ. பல முறை பறந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ப்ரம்மபுத்ராவைப் பார்த்து பிரமித்திருக்கிறேன்.

ப்ரம்மபுத்ரா ஆற்றின் கரையோரமாக பல நேரங்களில் காரை ஓட்டிக்கொண்டு திப்ரூகர் சென்றிருக்கிறேன். அருணாச்சல பிரதேசத்தில் இந்த ஆற்றின் முகத்துவாரம் ஒன்றில் ஒரு பெரிய அணை ப்ரம்மபுத்ரா போர்ட் என்ற மத்திய அரசாங்க நிறுவனத்தால் கட்டுவதாக இருந்தது. இடத்தின் பெயர் மறந்து விட்டது. நான் பணி புரிந்த வங்கிக்கு அங்கே கிளை திறப்பதற்கான அனுமதி ரிசர்வ் வங்கியிடம் பெறப்பட்டிருந்தது. அணை கட்டப்பட இருக்கும் இடத்தைப் போய் பார்த்திருக்கிறேன். அத்வானக்காடு. அங்கங்கே ஆதிவாசிகளின் குடிசைகள். ஆனால் இங்கே அணை கட்டுவதற்கு அன்றைய முதலமைச்சராக இருந்த அபாங்க் எதிர்ப்புத் தெரிவித்ததால் திட்டம் இழுத்துக்கொண்டிருந்தது. அங்கே வசித்து வரும் சுமார் 50000 ஆதிவாசிகளை இடம்பெயர வைக்க முடியாதென்று காரணம் காட்டப்பட்டது. அந்த திட்டத்தையே நாளடைவில் கைவிட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன். விளைவு, தொடர்ந்து ஆண்டு தோறும் ப்ரம்மபுத்ராவில் வெள்ளம். கோடிக்கணக்கில் வெள்ள நிவாரணத்துக்கு செலவிடப்பட்டு வருகிறது. ஆனால் சீனா தன் பகுதியில் பிரம்மாண்டமான அணையைக் கட்டத் துவங்கியிருக்கிறது.

பல இடங்களில் ஆங்காங்கே வயல் பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் நிற்கும். எல்லாம் பிரம்மபுத்திராவிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் தான். தண்ணிருக்கு நடுவே நெற்பயிரும் உயர்ந்து நிற்கும்.  நெல் விதைத்தால் போதும். தானாகவே வளரும். வேறு எதுவும் செய்யவேண்டாம். தேங்கி நிற்கும் தண்ணீரில் வேண்டிய அளவு மீன்கள் வளர்கின்றன. மீன் பிடிக்கும் தூண்டிலை தண்ணீரில் போட்டால் போதும். வேண்டிய அளவு மீன் பிடித்துக்கொள்ளலாம். சாப்பாட்டுக்கு அரிசியும், பருப்பும் மீனும்தான். மக்கள் அதிகமாக உழைக்காமலேயே உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு கிடைக்கிறது. பொதுவாக மக்கள் எதற்கும் அவசரப்பட வேண்டியதில்லை. ‘லஹே, லஹே’ (மெதுவா, மெதுவா) இங்கே அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. மக்களுக்கு சுறுசுறுப்பு குறைவு என்று நாம் கருதினால் அதற்கு சரியான காரணம் இருக்கிறது.

மேலும், வடகிழக்கு மானிலங்கள் பொதுவாக மழை அதிகமாக பெய்யும் பகுதியும் கூட.  பல இடங்கள் மேடும் பள்ளமுமாக இருக்கும், நமது கேரளாவைப் போல. மழை அதிகமாக பெய்வதால் மரங்களுக்கும், செடி கொடிகளுக்கும் பஞ்சமேயில்லை. எங்கு பார்த்தாலும் மனித முயற்சியையும் மீறி மரக்காடுகள்தான். மரங்களை வெட்டி ப்ளைவுட்டாக மாற்றும் தொழிற்சாலைகள் அனேகம். அசாமிலிருந்துதான் ப்ளைவுட் இந்தியாவின் பல பகுதிகளுக்குச் செல்கின்றன. இந்த ப்ளைவுட் வியாபாரத்திலும் பல கோல்மால்கள். ஏ, பீ, சீ தரத்துக்கேற்ற எக்சைஸ் வரிகள். தரத்தை குறைத்து மதிப்பிட்டு அரசாங்கத்தை பல தொழிற்சாலைகள் ஏமாற்றுவதாக பேச்சு இருந்தது.

மரத்துக்கு அடுத்ததாக அங்கு அதிகமாக விளையும் பயிர் தேயிலை. உலகிலேயே மிக அதிக அளவில் தேயிலை உற்பத்தி செய்யும் பிரதேசம் அசாம்தான். தேயிலையைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மிக அதிகமாக ஆங்காங்கே இருக்கின்றன. வங்காளத்தில் டார்ஜிலிங்கில் பச்சைத் தேயிலை கிடைக்கிறது. ஆனால், வட கிழக்கு மானிலங்களில் விளையும் தேயிலையை பதப்படுத்தி சி.டி.சி தேயிலையாக விற்கின்றனர். குவாஹாத்தியில் தேயிலைக்கு பெரிய சந்தை இருக்கிறது. வாரம் தோறும் ஏலம் நடக்கும். உலக அளவில் வியாபாரிகள் பங்கேற்பர். பொதுவாக அக்டோபர் நவம்பரில் தொடங்கி, மார்ச்சில் முதல் அறுவடையும் தொடர்ந்து ஜூன்/ஜூலை வரை இரண்டாவது அறுவடையும் நடக்கும். பின் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒன்றும் இருக்காது. அந்தப் பருவத்தில் தேயிலைச் செடிகளின் வேண்டாத பகுதிகளை வெட்டி சுத்தம் செய்து அடுத்த பருவத்துக்கு காத்திருப்பார்கள்.

மரத்திலும் சரி, தேயிலையிலும் சரி பல நலிந்த தொழிற்சாலைகளும் மிக அதிகமாக காணப்பட்டன.

ஆரஞ்சுப் பழம், தேங்காய், பலாப்பழம், இஞ்சி, அன்னாசிப் பழம், எலுமிச்சைப் புல், சிட்ரனலா புல் போன்ற நறுமண மூலிகைகள் மற்றும் பல விவசாயப்பொருட்களுக்கும் வடகிழக்கு மானிலங்கள் பெயர் பெற்றவை. ஆனால், விளைந்த பொருட்களை சேமித்து வைத்து, சரியான விலைக்கு விற்பனை செய்து உற்பத்தியாளரான விவசாயிக்கு சரியான லாபம் கிடைக்க ஏதுவான கிடங்குகள், குளிர்சாதன கிடங்குகள், மார்க்கெட்டுகள், விவசாயிகளுக்கு வங்கிகளில் கடன் வசதி, தொலைதூரம் விவசாயப்பொருட்களை எடுத்துச்செல்லும் வாகன வசதி இவைகள் கம்மி. அதனால் இடைத்தரகர்களே அதிக லாபம் பார்த்தனர்.

பொதுவாக அசாமின் மேல் பகுதிகள் தேயிலைத் தோட்டங்களினாலும், மரத் தொழிற்சாலைகளினாலும் செழிப்பாக காணப்படுகின்றன. கீழ்ப் பகுதிகள் வெறும் விவசாயத்தை நம்பி இருப்பதால் மக்கள் அவ்வளவு செல்வ செழிப்போடு இருப்பதாகத் தெரியவில்லை.

வட கிழக்கு மானிலங்களில், முக்கியமாக அசாமில் நீர் வளத்தை சரியாகப் பேணிப் பாதுகாத்தால், ஓரளவு நவீன விவசாய முறைகளைப் பயன்படுத்தினால், மக்களுக்கு நவீன ஒருங்கிணைக்கப்பட்ட விவசாய முறைகளை சொல்லிக்கொடுத்தால், ப்ரம்மபுத்ராவின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டால்,   நதி நீர் வழி போக்குவரத்தை மேம்படுத்தினால், மேலும் சில முக்கிய இடங்களில் ப்ரம்மபுத்ராவின் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டு அசாமுக்கும் மற்ற இந்திய பகுதிகளுக்குமிடையேயுள்ள தூரத்தை குறைத்தால்,….இப்படிச் சில கனவுகள் நிறைவேறினால், இந்தியா முழுவதற்கும் தேவையான பெரும்பாலான உணவுப் பொருட்களை வட கிழக்கு மானிலங்களிலேயே உற்பத்தி செய்து விடலாம் என்று நான் நம்புகிறேன். இந்தியாவின் மற்ற பகுதிகளை தொழிற்சாலைகள் மயமாக்கிவிடலாம்.
                                                                                                                                                …தொடரும்


எனக்கு எதையையுமே மேலெழுந்தவாரியாக சுருக்கமாக எழுதத் தெரியவில்லை. உணர்ந்ததை உணர்ந்தபடியே எழுத வேண்டும் என்று ஆசை. தொடர்ந்து பொறுமையாகப் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.