Total Pageviews

Showing posts with label Blue Water Bridge. Show all posts
Showing posts with label Blue Water Bridge. Show all posts

Sunday, March 28, 2021

23.03.2021 மெத்தப் படித்த முட்டாள்கள்

 23.03.2021 மெத்தப் படித்த முட்டாள்கள்

மீண்டும் ஒரு சொந்த அனுபவத்தைப் பற்றியே எழுதுகிறேன்.

2000-ஆம் ஆண்டு என் மகளும், அதே ஆண்டில் படிக்கச் சென்ற என் மகனும் அமெரிக்காவிலேயே வேலை பார்த்து வந்ததினால் நானும் என் மனைவியும் அங்கே அடிக்கடி சென்று வருவது ஒரு வாடிக்கையாகி விட்டது.

அப்படி அங்கே போன ஒரு சமயம் - 2004-05-ஆம் ஆண்டு என்று நினைவு - என் மகன் டெட்ராய்ட்டில் வேலை பார்த்து வந்தான். நாங்கள் போயிருந்த சமயம் என் தம்பியும் எங்களுடன் ஒரு சில நாட்களைக் கழிப்பதற்கு சிகாக்கோவிலிருந்து ஒரு காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு டெட்ராய்ட் வந்திருந்தான்.

ஒரு வார இறுதியன்று  நான், என் மனைவி, என் தம்பி என் மகன் நால்வரும் என் மகனின் காரில் அருகிலுள்ள (சுமார் 60 மைல் தொலைவு) போர்ட் ஹ்யூரான் (PORT HURON) என்ற இடத்துக்குச் சுற்றிப்பார்க்கத் தீர்மானித்துக் கிளம்பினோம். அந்த இடத்துக்கு நான் செல்வது இரண்டாம் முறை.

போர்ட் ஹ்யூரான் மிக அழகான இடம். அங்கிருந்து ஒரு பிரம்மாண்டமான பாலத்தைக் கடந்தால் கனடா நாடு வந்து விடும். நீல நிறத்தில் ஓடும் செயின்ட் க்ளேர் ஆற்றுக்கு (ஹ்யூரான் ஆறு) குறுக்கே “ப்ளூ வாட்டர் ப்ரிட்ஜ்” என்றழைக்கப்பட்ட பாலம் கட்டப்பட்டிருந்தது. மொத்தம் 6109 அடி நீளம் (சுமார் 1.8 மைல்). ஆற்றின் குறுக்கே 922 அடி நீளம். கடல் போலத் தோற்றமளிக்கும் தெளிந்த நீர் ஏரி (Fresh Water Lake). உப்புத் தண்ணீர் இல்லை. ஆற்றையொட்டி அழகான பூங்கா, நடைபாதை, தரைதட்டிய கப்பல் ஒன்றின் அருங்காட்சியகம். ஒரு நாள் பொழுதை அமைதியாகக் கழிக்கச் சிறந்த இடம். எனக்கு மிகவும் பிடித்த இடமும் கூட.

ஆற்றின் அருகே இரண்டு மணி நேரத்தை ஜாலியாகக் கழித்து விட்டு அங்கிருந்து போர்ட் ஆஸ்டின் என்ற இன்னொரு இடத்துக்குப் போவதற்காகக் கிளம்பினோம்.

கொஞ்ச தூரம் வந்தவுடனேயே “கனடாவுக்குப் பாலம்” என்ற பெரிய பெயர் பலகையைக் கண்டோம்.

“ஆஹா, பாலத்தை அருகிலிருந்து பார்க்கலாமே? இன்னும் அழகாக இருக்குமே!’ என்று எங்களில் யாரோ ஒருவர் தூண்டில் போட, “Why not?” என்று அந்தப் பாலத்துக்குச் செல்லும் ஒரு சரிவுப்பாதையில் (Ramp) மேலே காரை விட்டோம். ஒரு பெரிய ஆபத்தில் மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பு எங்களில் யாருக்கும் வரவில்லை.

“After all, பாலத்தைப் பார்த்து விட்டு திரும்பிவிடப் போகிறோம்,” என்றுதான் எல்லோரும் நினைத்திருந்தோம்.

ஆனால், அந்த சரிவுப்பாதையில் காரைத் திருப்புவதற்கு வழியில்லை. சரிவுப்பாதை நேராக பாலம் தொடங்கும் இடத்துக்கு அருகே எங்களை கொண்டு சென்றது. அங்கே மட்டும் ஒரு சில கான்க்ரீட் தடுப்புகளும், போலீஸ் வாகனங்கள் மட்டும் செல்வதற்கு ஒரு சிறிய தற்காலிகத் தடுப்பும் இருந்தது.

எங்கள் காருக்கு எதிரே சுமார் 500 அடி தூரத்தில் பாலம். பாலத்துக்கு முன்னே ஒரு சிறிய பூத். வேறு ஈ, காக்கை கண்ணில் படவில்லை.

காரை அங்கேயிருந்து திருப்பிவிடலாம் என்று பார்த்தால், திருப்புவதற்கு எந்த வழியும் இல்லை. நாமாகப் போய் அந்தத் தற்காலிக தடுப்பை நம்ம ஊரில் செய்வது போல எல்லாம் எடுக்க முடியாது. மாட்டிக்கொள்வோம். சரி, பூத்துக்குச் சென்று அங்கிருப்பவரிடம் உதவி கேட்கலாம் என்று நினைத்தோம்.

அப்பொழுதாவது, அங்கேயே காரை நிறுத்தி விட்டு வெளியே இறங்கி நடந்து சென்று கேட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு சிலர் காரில் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து விட்டால் காரை விட்டு இறங்க மாட்டார்கள். காரிலிருந்தபடியே ஜன்னலை இறக்கித் தான் விசாரிப்பார்கள்.

அந்தத் தவறை என் மகனும் செய்தான். எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்ற நினைப்பு வரவில்லை. இளம் கன்று பயம் அறியாது.

மேலும் அமெரிக்காவில் பல இடங்களில் சுதந்திரமாக, தைரியமாக எங்கு வேண்டுமானாலும் போகலாம், எந்த அதிகாரியிடமும் பேசலாம். அதிகாரிகள் உதவியாகவே இருப்பார்கள். யாரும் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பொதுவாகக் கண்டுகொள்ளாத நாடு. 2001-ல், World Trade Center –ஐத் தகர்த்தெறிந்த பிறகு நிலைமை பலவாக மாறியிருக்கிறது.

காரை நேரே அந்த பூத் அருகே என் மகன் எடுத்துச் சென்று விட்டான். கார் போகும் பாதையும் குறுகிக்கொண்டே போனது. இரண்டு கார்கள் போகும் அளவே ஒவ்வொரு பக்கத்திலும் இருந்தது.

பூத் அருகே சென்று அங்கே இருந்த அதிகாரியிடம் என் மகன் கேட்டான். “நாங்கள் எப்படித் திரும்பிப் போவது?” என்று.

கேள்விகளை எப்பொழுதும் சரியாகக் கேட்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சினை.

“நேராகச் சென்று ஒரு லூப் அடித்துத் திரும்பி வாருங்கள்” என்று விட்டார்.

வேறு கேள்விகளை நாங்கள் கேட்கவில்லை. கேட்டிருந்தால் சரியான பதில் கிடைத்திருக்குமோ என்னவோ?

காரை நேராகப் பாலத்துக்குள் எடுத்துச் சென்று விட்டான். நாங்கள் கடந்து வந்தது அமெரிக்க எல்லை என்ற பிரக்ஞையே எங்கள் யாருக்கும் இல்லை.

பாலத்தின் அழகை, தூரத்தே தெரிந்த ஏரியின் அழகை, பிரம்மாண்டத்தை ரசித்துக்கொண்டே பாலத்தை கடந்து முடிந்து விட்டோம்.

பாலத்தின் அடுத்த பக்கம் காரைத் திருப்புவதற்கு எந்த வசதியும் இல்லை. பாதை ஒரு பெரிய கட்டிடத்தையொட்டி எடுத்துச் சென்றது. ஒரு பக்கத்திலிருந்து ஒரு அதிகாரி எங்கள் காரை நிறுத்தச் சொன்னார். காரை நிறுத்தினோம். காரை ஓரமாக எடுத்து வரச் சொன்னார்.

“Your papers, please” என்றார் அதிகாரி.

அப்பொழுதுதான் மண்டையில் ‘பொட்’ என்று ஓங்கி சுத்தியலால் தட்டியது போல இருந்தது.

“This is Canada,” என்றார் அதிகாரி.

நாங்கள் புரிந்து கொண்டோம். சரியாகத் தெரிந்து கொள்ளாமல் அமெரிக்க எல்லையைக் கடந்து கனடா நாட்டுக்குள் வந்து விட்டோம் என்று.

என் மகனிடம் கார் ஓட்டும் உரிமம் இருந்தது எடுத்துக் காட்டினான். அந்த சமயத்தில் அவன் அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கான H1 விசாவில்தான் இருந்தான். அமெரிக்காவில் நிரந்தரமாகக் தங்கும் உரிமை (PERMANENT RESIDENTS/US GREEN CARD HOLDERS) பெற்றவர்களும் அமெரிக்க குடிமக்களும் சுதந்திரமாக பாஸ்போர்ட் மட்டும் காட்டி கனடாவுக்குள் உள்ளே நுழையலாம். மற்றவர்களிடம் விசா இருக்க வேண்டும். இல்லையென்றால் கனடாவுக்குள் நுழைய முடியாது.

“Where is your visa?”

எங்களுடைய ஆவணங்களைக் கேட்டார். என்னிடமும் என் மனைவியிடமும் எங்கள் பாஸ்போர்ட்டின் ஜெராக்ஸ் நகல் மட்டுமே வைத்திருந்தோம். ஒரிஜினலை நாங்கள் பொதுவாக வெளியில் எடுத்துச் செல்வதில்லை. எங்கேனும் தொலைந்துவிடுமோ என்று பயம்.

“Where is the original?” என்றார். பேந்தப் பேந்த முழித்தோம்.

என் தம்பியிடம் அவனுடைய கார் ஓட்டும் உரிமத்தின் ஜெராக்ஸ் நகல் மட்டுமே இருந்தது. அவனும் ஒரிஜினலைக் கொண்டு வரவில்லை.

“You know, you are trying to enter Canada illegally without any papers?” என்றார் அதிகாரி.

எனக்கும் என் மனைவிக்கும் உடலெல்லாம் வியர்த்தது. என் மகன் நடந்ததை விவரித்தான். நாங்கள் கனடாவுக்குச் செல்வதற்காக வரவில்லை. அந்தப் பாலத்தை மட்டும் பார்த்து விட்டு திரும்புவதாகத்தான் இருந்தோம். ஆனால், திரும்புவதற்கு வழியில்லை. மேலும் பாலத்தின் அந்தப் பக்கத்தில் இருந்த பூத்தில் அமர்ந்திருந்த அதிகாரி எங்களைப் பாலத்தை கடந்து லூப் எடுத்து திரும்புங்கள் என்று கைகாட்டி விட்டு விட்டார். எங்களுக்கு இந்தப் பக்கம் கனடா நாடு என்ற பிரக்ஞை இல்லை. தவறு செய்து விட்டோம் என்று விவரித்தான்.

என் மகனும் ‘நெர்வசாக’ இருந்தானா என்பது எனக்குத் தெரியாது. என் தம்பியும் எங்கள் நிலையை எடுத்துச் சொல்ல முயற்சி செய்தான்.

எங்கள் நால்வரையும் அலுவலகத்துக்குள்ளே அழைத்துச் சென்றனர். எங்களிடம் இருந்த நகல்களையும் என் மகனின் ஓட்டுனர் உரிமத்தையும் உள்ளே எடுத்துச் சென்று விட்டனர். மாட்டிக்கொண்ட திருடர்கள் போல நாங்கள் ஒரு பெஞ்சில் உள்ளம் பதைபதைக்க உட்கார்ந்திருந்தோம்.

ஒன்றிரண்டு முறை வேறு சில அதிகாரிகள் வந்து எங்களை விசாரித்தனர். நாங்கள் செய்த தவறை ஒத்துக்கொண்டோம். ஒரிஜினல் பாஸ்போர்ட் இருந்தால் கூட ஒரு மாதிரியாக தைரியமாகச் சமாளிக்கலாம். ஆனால், ஒரிஜினல் எங்களிடம் இல்லை.

அவர்கள் எங்களை கைது செய்துவிடுவார்களோ என்று பயம் வேறு பிடித்துக்கொண்டது.

சுமார் ஒரு மணி நேரம் எங்களைத் தவிக்கவிட்ட பிறகு ஒரு அதிகாரி எங்களிடம் தனித்தனியாக ஒரு காகிதத்தைக் கொடுத்து கையெழுத்து கேட்டார்.

“எங்களுக்கு வேறு வழியில்லை … எங்கள் நாட்டிற்குள் சட்டத்தை மீறி நுழைய முனைந்ததாகக் கூறி உங்களை நாங்கள் கைது செய்திருக்க முடியும் … உங்களைப் பார்த்தால் அப்பாவியாகவும் இருக்கிறது. இதில் கையெழுத்துப் போட்டுவிட்டு நீங்கள் திரும்பிப் போகலாம் …” என்றார்.

அந்தப் படிவத்தில், நாங்கள் கனடாவில் குடியுரிமை கேட்டதாகவும் எங்களிடம் சரியான ஆவணங்கள் இல்லாததால் மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. அதிகாரியின் முகத்தைப் பார்த்தோம். “இது எங்களுடைய அமெரிக்க விசாவில் பிரச்சினையாகுமே” என்றோம்.

“வேறு வழியில்லை…” என்றார்.

ஆண்டவனைப் பிரார்த்தித்துக்கொண்டு நாங்கள் எல்லோரும் அந்தப் படிவத்தில் கையெழுத்திட்டு அவரிடம் கொடுத்தோம்.

“திரும்பப் போகும்போது அமெரிக்க எல்லையில் பிரச்சினை வருமா?” என்று அந்த படிவத்தை சுட்டிக்காட்டிக் கேட்டோம்.

“அதை அவர்கள் சொல்வார்கள் … நீங்கள் போகலாம்.” என்று சொல்லி எங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட எல்லா காகிதங்களையும் திரும்பக் கொடுத்துவிட்டு எங்கள் பதிலுக்குக் கூடக் காத்திராமல் அவர் அறைக்குள் சென்று விட்டார்.

எங்கள் எல்லோருக்கும் ‘திக், திக்.’ ரத்தம் கொதித்துக்கொண்டிருந்தது. காரில் ஏறி மீண்டும் ப்ளூ வாட்டர் பிரிட்ஜின் அழகைக்கூட ரசிக்க முடியாமல் பாலத்தைக் கடந்து அமெரிக்க எல்லைக்கு வந்து விட்டோம்.

இங்கேயும் எங்களை நிறுத்தி வைத்து விட்டார்கள். நாங்கள் நடந்ததை முழுவதும் சொன்னோம். கனடா எல்லையில் அதிகாரிகள் கொடுத்த காகிதத்தையும் காட்டினோம். எங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டோம். ஒரிஜினல் காகிதங்கள் எடுத்து வராமல், பாலத்தைப் பார்க்கும் ஆசையில், அமெரிக்க எல்லையில் ஒரு பூத் ஏஜெண்ட்டிடம் சரியான தகவலைப் பெற்றுக்கொள்ளாமல் கனடாவுக்குள் நுழைந்து திரும்பி வந்ததை எடுத்துச் சொன்னோம்.

எங்களை உட்கார வைத்து விட்டு, எங்களுடைய காகிதங்களை உள்ளே எடுத்துச் சென்று வெகு நேரம் கழித்து திரும்பி வந்தார்.

“Look, நீங்களெல்லாம் வெளிநாட்டிலிருந்து வேலை பார்ப்பதற்கோ அல்லது சுற்றிப் பார்பதற்கோ வந்தவர்கள். ஒரு வெளிநாட்டில் இருக்கும்போது எல்லா நேரத்திலும் உங்களுடைய ஒரிஜினல் பாஸ்போர்ட், விசா காகிதம், ஓட்டுனர் உரிமம் எல்லாமே உங்களுடன் இருக்க வேண்டும். முக்கியமாக அண்டை நாடுகள் எல்லைப் பக்கம் சுற்றும்போது அவசியம். அது இல்லாமல் இப்படிச் சுற்றுவது சட்டப்படி குற்றம். இங்கேயும் உங்களை கைது செய்யலாம். ஆனால், உங்களைப் பார்த்தால் அப்பாவியாகத் தான் இருக்கிறீர்கள். அதனால், இந்த முறை உங்களை உள்ளே போக விடுகிறேன். இது போல மீண்டும் தவறு செய்யாதீர்கள். All the best.” என்று சொல்லி எங்களை விட்டு விட்டார்.

அவருக்கு நன்றி கூறி “தப்பித்தோம், பிழைத்தோம்” என்று கடவுளுக்கும் நன்றி கூறி விடை பெற்றுக்கொண்டோம்.

கடவுள் கிருபையால் வேறு எந்தத் தொந்திரவும் எங்களுக்கு இருந்ததில்லை.

படித்தவர்களாக இருந்தும் முட்டாள்தனமாக நடந்துகொண்டோமே என்று எங்களை நாங்களே கடிந்துகொண்டோம்.

என்னதான் மனதில் ஒரு நடுக்கம் இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்த பிறகு ஆஸ்டின் போர்ட்டைப் பார்க்காமல் போகக்கூடாது என்று அங்கும் சென்று பெயரளவுக்குப் பார்த்து விட்டு வீடு திரும்பினோம்.

இப்படி முட்டாள்தனமாக நடந்து கொண்டது அது முதன் முறையல்ல.