Total Pageviews

Showing posts with label SMART Goals. Show all posts
Showing posts with label SMART Goals. Show all posts

Tuesday, August 19, 2014

பெர்ஸனாலிடி வளர்ச்சி பற்றி: பகுதி 6C: வெற்றிப் பாதைக்கு ஏழு வகையான பெர்ஸனாலிடிகள்

மாணவர் உலகம் என்ற மாதப் பத்திரிகையில் நான் எழுதி வெளியிடப்பட்ட கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதி:

பகுதி 6C: வெற்றிப் பாதைக்கு ஏழு வகையான  பெர்ஸனாலிடிகள்

பெர்ஸனாலிடிகள் பல  வகைப்பட்டாலும் நமது ஆய்வுக்கு ஏழு வகையான பெர்ஸனாலிடிகளை, ஏழு படிகளாக நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் முதலாவதாக வரும் விவரமறிந்த, அறிவுடைய பெர்ஸனாலிடி யின் தொடர்ச்சி………………………….

குறிக்கோள்கள் வைத்துக்கொள்வதினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும், பெரும்பாலானாவர்கள் குறிக்கோள்களை ஏன் நிச்சயித்துக் கொள்வதில்லை என்பதைப் பற்றியும், குறிக்கோள்களை எப்படி நிச்சயித்துக் கொள்வது என்பதையும், நமது குறிக்கோள்கள் S.M.A.R.T குறிக்கோள்களாக இருக்க வேண்டும் என்பதையும் முந்தின இதழ்களில் பார்த்தோம். இனி……

S.M.A.R.T குறிக்கோள்கள் என்பது என்ன?

S IMPLE, S PECIFICசிக்கலற்றது, எளிமையானது, குறிப்பிடக்கூடியது

உதாரணத்திற்கு, நிறைய படிக்க வேண்டும் என்று மட்டும் விருப்பப்பட்டால் அது தெளிவில்லாத ஒரு இலக்கு.  ‘நிறைய’ ‘பெரியஎன்பதையெல்லாம் வரையறுக்க முடியாதது. ஒருவருக்குநிறைய’ ‘பெரிய’ என்பது இன்னொருவருக்குகுறைவாக,’ ‘சிறியதாக’ இருக்கலாம். ..டியில் படித்து ஒரு முதுநிலை இன்ஜினியர் பட்டதாரியாக வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது குறிப்பிடக்கூடியது. அதே போல,  நிறைய சம்பாதிக்க வேண்டும், ஒரு டாக்டராகவோ அல்லது வழக்கறிஞராகவோ வரலாம் என்று  நினைத்தால் அது சிக்கலானது, தெளிவில்லாதது. குறிப்பிட முடியாதது. சட்டப் படிப்பு படித்து, உயர்நீதி மன்றத்தில் ஒரு நீதிபதியாக என்னுடைய நாற்பது வயதுக்குள் உயர்ந்துவிட வேண்டும் என்று விருப்பப்பட்டால் அது தெளிவானது, வரையறுக்கக் கூடியது, எளிமையானது.

M EASURABLEஅளக்கக்கூடியது

உதாரணத்திற்கு, ஒரு பெரிய பணக்காரனாக வேண்டும் என்று நினைத்தால் அது அளக்க முடியாதது. ஒரு லட்ச ரூபாய் சேமிக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். ஆனால், ஆறு மாதத்தில் நாற்பதினாயிரம்தான் சேர்த்திருக்கிறேன். அதனால், மீதமிருக்கும் ஆறு மாதத்தில் இன்னும் கொஞ்சம் செலவைக் குறைத்து ஒரு லட்சம் ரூபாய் சேமிப்பு என்ற இலக்கை அடைந்து விடுவேன் என்று நினைத்தால் அது அளக்கக் கூடிய ஒரு இலக்காக இருக்கும்.

அதே போல, கணக்குப் பாடத்தை தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி செய்து பார்த்து அடுத்த அரை இறுதித் தேர்வில் 75 சதவிகித மத்ப்பெண்கள் வாங்குவதற்கு முயற்சி செய்வேன் என்று தீர்மானித்தால் அது அளக்கக் கூடியது.

A CHIEVABLE, A TTAINABLE  – அடையக்கூடியது,

உயரம் தாண்டும் போட்டியில் பதினெட்டடி உயரத்தை எந்தத் துணையுமில்லாமல் தாண்டும் வீரனாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டால் அது முடியாத காரியமாக இருக்கலாம். ‘கடந்த ஆண்டு நடந்த விளையாட்டு தினப் போட்டிகளில், மிக அதிகமாக ஆறு அடி உயரத்தை ஒரு மாணவன் தாண்டியிருக்கிறான். என்னால் இதுவரை ஐந்தடி உயரத்தை மட்டுமே தாண்ட முடிந்திருக்கிறது. இன்னும் முயற்சி செய்தால் கடந்த ஆண்டின் சாதனைய என்னால் முறியடிக்க முடியும். என்று நம்பினால் அது அடையக்கூடியதாக இருக்கும்.

R EASONABLE, R EALISTICநியாயமானது, நிகழக்கூடியது

உதாரணத்திற்கு, இதுவரை கணக்குப் பாடத்தில் ஐம்பது மார்க்குகளைக் கூடத் தாண்டாத ஒரு மாணவன் அடுத்த தேர்வில் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது முடியக்கூடியதாக இருக்கலாம், ஆனால், அந்த மாணவனைப் பொருத்தவரை அது நியாயமானதாக இருக்காது. விரைவிலேயே அந்த மாணவனுக்கு விரக்தி ஏற்பட்டுவிடும். நாம் நிச்சயிக்கும் இலக்கு சற்று கடுமையாக முயற்சித்தால் அடையக்கூடியதாக, நியாயமானதாக, நமக்கு அறைகூறுவதாக, இருக்க வேண்டும்.

T ESTABLE AGAINST TIME, T ANGIBLE  -  நேரக்கட்டுப்பாட்டுக்குள் அடங்கக்கூடியது,  திட்பமானது, தொட்டுணரக்கூடியது

நன்றாக முயற்சி செய்து ஒரு பெரிய உத்தியோகத்தில் சேர்ந்துவிடுவேன் என்று நினைப்பது சரியான இலக்காக இருக்காது. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் பொருளியலில் முதுநிலை பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேறி, I.A.S அதிகாரியாக வருவதற்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்வதற்கான வகுப்புகளில் சேர்ந்து பயிற்சி பெற்று அந்த தேர்வுகளிலும் வெற்றி பெறுவேன் என்பது திட்பமானது, நேரக்கட்டுப்பாட்டுக்குள் அடங்கக்கூடியது. 

சரி, குறிக்கோளை நிச்சயித்தாகிவிட்டது. அடுத்தது என்ன?

உங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். SWOT ஆராய்ச்சி செய்து உங்களின் வலிமைகள், பலவீனங்கள், உங்களுக்குள்ள வாய்ப்புகள், எதிர்நோக்கியிருக்கும் சவால்கள், அச்சுறுத்தல்கள் இவற்றை புரிந்து கொள்ளுங்கள். இந்த புரிந்துகொள்ளுதல் உங்கள் குறிக்கோளை நோக்கி திட்டமிடுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.  

எப்படி குறிக்கோளை அடையப் போகிறோம் என்பது பற்றி திட்டமிடுவது மிக அவசியம். குறிக்கோளை அடைவதற்கு என்னென்ன செய்யவேண்டும், என்ன தகுதிகள் தேவை, அதில் நம்மிடம் இருப்பது எது, இல்லாதது எது, மேலும் என்னென்ன தகுதிகளை சேர்த்துக்கொண்டால் வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும், நமது குறைபாடுகளை எப்படிக் களைவது அல்லது அவற்றின் விளைவுகளை எப்படிக் கட்டுப்படுத்துவது, யார் யாருடைய உதவி நமக்கு தேவைப்படும், எவ்வளவு நேரம் எடுக்கும் இப்படி பல விதமாக யோசித்துத் திட்டமிட வேண்டும்.

சரி,  குறிக்கோளை நிச்சயித்து விட்டால் மட்டும் போதுமா?

                                                                                                                                                                                                                                                                                       தொடரும்………..

Tuesday, August 12, 2014

பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது எப்படி? பகுதி 6 B வெற்றிப் பாதைக்கு ஏழு வகையான பெர்ஸனாலிடிகள்

மாணவ்ர் உலகம் என்ற மாதப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட என்னுடைய கட்டுரையின் தொடர்ச்சி.......................

பெர்ஸனாலிடிகளை பல விதமாக மனோதத்துவ நிபுணர்கள் வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்றாலும் நமது ஆய்வுக்கு ஏழு வகையான பெர்ஸனாலிடிகளை, ஏழு படிகளாக நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் முதலாவதாக வரும் விவரமறிந்த, அறிவுடைய பெர்ஸனாலிடி யின் தொடர்ச்சி………………………….

ஒரு நாடோடியாக இல்லாமல் ஒரு பயணியாக இருப்பதின் முக்கியத்துவத்தையும், குறிக்கோள் வைத்துக்கொள்வதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும், பெரும்பாலானாவர்கள் குறிக்கோள்களை ஏன் நிச்சயித்துக் கொள்வதில்லை என்பதைப் பற்றியும் சென்ற இதழில் பார்த்தோம். இனி……

குறிக்கோள்களை எப்படி தெரிந்து கொள்வது? எப்படி நிச்சயித்துக் கொள்வது?

ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால், மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதுதான் எல்லோருக்கும் இருக்கும் ஒரே குறிக்கோள். மகிழ்ச்சியாக இருப்பதற்காக நாம் பல விதங்களில் முயற்சி செய்கிறோம். பல காரியங்களைச் செய்கிறோம். பல பொருட்களை அடைய முயற்சிக்கிறோம்.

சுருக்கமாகச் சொல்லப் போனால், மகிழ்ச்சியடைவதற்க்காக உங்கள் மனதில் தோன்றும் ஆழ்ந்த விருப்பங்கள்தான் உங்களுடைய அடிப்படையான குறிக்கோள்கள். இந்த ஆழ்ந்த விருப்பங்கள்தான் பொதுவாக உங்களுடைய நெடுங்காலக் குறிக்கோள்களாக அமையும்.

இந்த ஆழ்ந்த விருப்பங்களை அடைவதற்கு பல படிகளைக் கடந்து போகவேண்டியிருக்கும். அந்த வெவ்வேறு படிகள் உங்களுடைய இடைக்கால குறிக்கோள்களாகவோ அல்லது குறுகிய காலக் குறிகோள்களாகவோ அமையும்.

உங்களுடைய ஆழ்ந்த விருப்பங்கள் என்ன என்று கண்டறிய வேண்டும்.
சில நிமிடங்கள் கண்ணை மூடி, உங்களை அமைதிப்படுத்திக்கொண்டு உங்களுடைய விருப்பங்கள் என்னென்ன என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நன்றாக யோசித்துப் பார்த்த பின், கண்களைத் திறந்து மட மடவென்று ஒரு காகிதத்தில் உங்கள் விருப்பங்களை பட்டியலிடுங்கள்.
இந்தப் பட்டியலை மீண்டும் மீண்டும் நன்றாக படித்துப் பாருங்கள்.

மீண்டும் கண்ணை மூடி, உங்களை அமைதிப்படுத்தி இந்தப் பட்டியலைப் பற்றி அசை போடுங்கள். விரைவில், இந்தப் பட்டியலில் நீங்கள் குறிப்பிட்ட ஆசைகளில் எது இன்றியமையாதது, எது நிச்சயமாக உங்களுக்கு மகிழ்ச்சியளிப்பது, எது முழு திருப்தியளிப்பது, எது ஆழமானது, எது தீவிரமானது என்பதைப் பற்றி அலசிப் பாருங்கள். அதுதான் உங்களுடைய நீண்டகால குறிக்கோள். அது ஒன்றாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்டதாகவோ இருக்கலாம்.

ஒரு பள்ளியில் நான் இந்த வகுப்பு  நடத்தியபோது, ஒரு மாணவி மட்டும் இருபத்தைந்து ஆசைகளை பற்றிக் குறிப்பிட்டிருந்தாள். ஆனால், தீவிரமாக ஆழ் நிலையில் ஆராய்ந்து பார்த்தபொழுது அதில் இரண்டு விருப்பங்களே அவளுடைய இதயத்திற்கு மிக மிக  நெருங்கியது என்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறினாள்.

அடுத்ததாக, இந்த நீண்ட கால குறிக்கோளை அடைவதற்கு என்னென்ன படிகளைத் தாண்ட வேண்டியிருக்கும் என்பதை இதே போல் ஆராய்ந்து பார்த்து இன்று என்ன செய்யவேண்டும், இந்த வாரம் என்ன செய்ய வேண்டும், இந்த மாதம் என்ன செய்ய வேண்டும், இந்த ஆண்டு என்ன செய்ய வேண்டும் என்று பல வகைகளாக சிறிய சிறிய குறிக்கோள்களாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.

அப்படியாக உங்களுடைய நீண்ட கால, இடைக்கால, குறுகிய காலக் குறிக்கோள்களை நிச்சயித்துக்கொள்ளுங்கள்.

உங்கள் குறிக்கோள்கள் எப்படியிருக்க வேண்டும்?

ஆங்கிலத்தில் S. M. A. R. T.  GOALS - ஆக இருக்க வேண்டும் என்பார்கள். அதாவது:
S IMPLE, S PECIFICசிக்கலற்றது, எளிமையானது, குறிப்பிடக்கூடியது
M EASURABLEஅளக்கக்கூடியது
A CHIEVABLE, A TTAINABLE  – அடையக்கூடியது,
R EASONABLE, R EALISTICநியாயமானது, நிகழக்கூடியது
T ESTABLE AGAINST TIME, T ANGIBLE  

S.M.A.R.T  குறிக்கோள்களைப் பற்றி இன்னும் விவரமாக அடுத்த இதழில் காண்போம்.
                                                            தொடரும் ………………………………….

Thursday, August 07, 2014

பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது எப்படி? பகுதி 6 A வெற்றிப் பாதைக்கு ஏழு வகையான பெர்ஸனாலிடிகள்

மாணவர் உலகம் என்ற மாதப் பத்திரிகையில் நான் எழுதி வெளியிட்ட கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதி.

பெர்ஸனாலிடிகளை பல விதமாக மனோதத்துவ நிபுணர்கள் வகைப்படுத்தியிருக்கிறார்கள் என்றாலும் நமது ஆய்வுக்கு ஏழு வகையான பெர்ஸனாலிடிகளை, ஏழு படிகளாக நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் முதலாவது…….


1.விவரமறிந்த, அறிவுடைய பெர்ஸனாலிடி:

நீங்கள் ஒரு பயணியா அல்லது நாடோடியா?

நீங்கள் இப்பொழுது எங்கே இருக்கிறீர்கள்? எங்கே போகவேண்டும்? எப்படிப் போகப் போகிறீர்கள்? எந்தப் பாதை? போகுமிடத்திற்கு என்னென்ன வேண்டும்? எப்படித் தயார் செய்துகொள்ளப் போகிறீர்கள்? உங்களிடம் இருப்பது என்ன? இல்லாதது என்ன?  நீங்கள் போகுமிடம் எப்படிப்பட்ட இடம்? அபாயகரமானதா? சவால்கள் நிறைந்ததா? அங்கே போவதனால் உங்களுக்கு என்ன நன்மை தீமைகள் நடக்கக் கூடும்? போகும் பாதை கடுமையானதா? உங்களுக்கு வசதிப்படுமா?

நீங்கள் ஒரு பயணியாக இருந்தால் கண்டிப்பாக மேலே சொன்னது போன்ற கேள்விகள் உங்களூக்கு எழும். அதற்குப் பதில் தெரிந்துகொண்டு தயார் நிலையில் பயணத்தில் இறங்குவீர்கள்.

ஒரு நாடோடியாக, எந்த குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் அலைந்து திரிபவராக இருந்தால் இந்தக் கேள்விகள் உங்களுக்கு எழாது.

நமது வாழ்க்கையும் இப்படித்தான்.  நாம் ஒரு நாடோடியாக இருந்தால், எதை அடைய வேண்டுமென்று  தெரியவில்லையென்றால் அல்லது அதில் குழப்பம் இருந்தால், அல்லது இப்பொழுது எப்படியிருக்கிறோம் என்பதைப் பற்றி ஒரு பிரஞ்ஞை இல்லையென்றால் வாழ்க்கை தாறுமாறாகப் போய்கொண்டிருக்கும்.

நாம் எங்கேயிருக்கிறோம், நாம் அடைய வேண்டிய இலக்கு என்ன என்று தெரிந்திருப்பது மிகவும் அவசியம். இலக்கே இல்லாதவர்க்கு வெற்றி தோல்வி ஏது? வாழ்க்கையில் வருத்தப்படுவதற்கும் என்ன இருக்கிறது. ஆனால், பொதுவாக குறிக்கோளே இல்லாமல் காலத்தை ஓட்டுபவர்கள் இறுதியில் வருத்தப்பட்டவர்களாக முடிவார்கள். நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டோமே என்று புலம்பிக்கொள்வார்கள். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்? குறிக்கோளே இல்லாமல் புலன்கள் செல்கிற வழியிலேயே சென்றுவிட்டு பின்பு வருத்தப்படுவானேன்?

நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒரு குறிக்கோள் வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

குறிக்கோள் வைத்துக்கொள்வதனால் ஏற்படும் நன்மைகள்:
  • .       வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படும் 
  •    திட்டமிடுவதற்கு வசதியாக இருக்கும் 
  •   போகின்ற பாதையை ஒரு சவாலாகத்தான் எடுத்துக்கொள்வோம். கடினமானதாகக் கருத மாட்டோம்.

  • குறிக்கோளை நோக்கிச் செல்லும் பயணம் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகிறது. 
  • தேவையில்லாத கவனச் சிதைவுகளை தவிர்க்கலாம். 
  • உங்களுடைய சுய மரியாதை உயரும்  
  • குறிக்கோள்களை தொடும்பொழுது முழுமையடைந்த ஒரு உணர்வு ஏற்படும்.  
  • குறிக்கோளை அடைந்த பின்னே கிடைக்கும் மகிழ்ச்சியை வேறெதற்கும் ஒப்பிட முடியாது.

ஆனால், பெரும்பாலானாவர்கள் குறிக்கோள்களை நிச்சயித்துக் கொள்வதில்லை. ஏன்?
  1. பயம்தான் முக்கியமான காரணம். இப்பொழுது இருக்குமிடத்திலுள்ள சௌகரியங்களைத் துறக்க வேண்டியிருக்குமோ என்று பயம். தெரியாததைப் பற்றிய ஒரு பயம். எதிர்காலத்தைப் பற்றிய பயம். குறிக்கோளை அடைவதில் ஒரு வேளை தோல்விடைந்து விடுவோமோ என்று பயம். ஒரு வேளை தோற்றுவிட்டால் மானபங்கம் ஏற்படுமே என்று பயம். இப்படி பல விதமாக பயப்பட்டு குறிக்கோளை நிச்சயித்துக் கொள்வதைத் தவிர்க்கிறோம் அல்லது தள்ளிப் போடுகிறோம்.
  2. நமது குறிக்கோள் என்னவென்றே தெரியாததினால் பலர் குறிக்கோளை நிச்சயித்துக் கொள்வதில்லை. தெரியாததைப் பற்றி எப்படி நிச்சயம் செய்துகொள்வது?
  3. குறிக்கோளை எப்படி நிச்சயிப்பது என்று தெரியவில்லை. யாரும் சொல்லிக் கொடுப்பதில்லை. இதற்கென்று யாரும் வகுப்புகளை நடத்துவதில்லை.
  4. நேரமின்மை, உற்சாகமின்மை, ஊக்கமின்மை, கடந்த காலத்தில் நேர்ந்த தோல்விகளால் ஏற்பட்ட விரக்தி
  5. மெத்தனம், சோம்பேறித்தனம், சந்தேகம்
  6. மற்றவர்களின் எதிர்மறை கருத்துக்கள்…. இப்படிப் பல காரணங்களைக் கூறலாம்.

                                                                                                                          ………………….. தொடரும்