Total Pageviews

Showing posts with label Writing books. Show all posts
Showing posts with label Writing books. Show all posts

Friday, July 27, 2018

27.07.18 என்னால் ஏன் சுருக்கமாக எழுத முடிவதில்லை! ஒரு தன்னிலை விளக்கம்


27.07.18 என்னால் ஏன் சுருக்கமாக எழுத முடிவதில்லை! ஒரு தன்னிலை விளக்கம்

“விஷப் பரிட்சை” என்ற தலைப்பில் கோடைகால பள்ளி விடுமுறை நாட்களில் என் பேரன் பேத்தியுடன் ஃபீனிக்சில் நான் கழித்த இரண்டு மாதங்களைப் பற்றி 5 பாகங்களாக நேற்றோடு எழுதி முடித்திருந்தேன்.

என்னுடைய பதிவு வழக்கத்துக்கும் மேலாக பலருடைய கவனத்தையும் கருத்துக்களையும் பாராட்டுக்களையும் பெற்றிருந்தது. ஒரே ஒருவர் மட்டும் பதிவு நன்றாக இருந்ததாகவும் ஆனால் மிக நீளமாக இருந்ததாகவும் கருத்து தெரிவித்திருந்தார். அவர்களுடைய கருத்துக்கு நன்றி.

“இந்த ஆண்டு இரண்டு மாத பள்ளி கோடை விடுமுறை காலத்தில் பேரன் பேத்தியை நான் கவனித்துக் கொள்கிறேன், அதனால் வழக்கமாக நடக்கும் கோடை கேம்புக்கு அவர்கள் போக வேண்டாம், விடுமுறையை சந்தோஷமாக வீட்டிலேயே கழிக்கட்டும் என்று நான் சொல்லி விட்டதால் மே கடைசி முதல் ஜூலை கடைசி வரை நாங்கள் ஃபீனிக்ஸில் குழந்தைகளுடன் இருந்தோம். நேரத்தை கொஞ்சம் பயனுள்ளதாக செலவழிக்கட்டுமே என்று அவர்களுக்கு தமிழ் எழுதவும் வாசிக்கவும் கற்றுக் கொடுத்தேன். பல ஸ்லோகங்களைக் கற்றுக் கொடுத்தேன். தினமும் கீபோர்டு பயிற்சி செய்ய வைத்தேன். அவர்கள் பல வகைகளில் முரண்டு பண்ணினாலும் மிகவும் கண்டிப்போடு இவற்றையெல்லாம் செய்ய வைத்தேன். இப்பொழுது ஓரளவு தமிழ் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். பல ஸ்லோகங்களை மனப்பாடமாகச் சொல்கிறார்கள். இப்பொழுது கோடை விடுமுறை முடிந்து விட்டது. பள்ளிக்குச் செல்லத் தொடங்கி விட்டார்கள். இதே பணியை இன்னும் மூன்று வாரங்களுக்கு என் பையன் வீட்டு பேரக் குழந்தைகளுக்கும் நான் செய்ய வேண்டியிருக்கிறது.”

இவ்வளவுதான் நான் 5 பகுதிகளாக விலாவாரியாக எழுதியதன் சாராம்சம்.
103 வார்த்தைகளில் எழுதி முடிக்க வேண்டியதை நான் ஐந்து பாகங்களாக சில ஆயிரம் வார்த்தைகளில் எழுதி முடித்திருக்கிறேன்.

என்னுடைய பதிவை இந்த 103 வார்த்தைகளில் எழுதியிருந்தால் எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியாது.

இன்டெர்னெட் தயவினால் இன்று பலரும் பத்திரிகையாளராக மாறியிருக்கியிருக்கிறார்கள்.  

ஆனால், பதிவாக எழுதுபவர்களில் – எழுத்தாளர்களில் – இரண்டு வகை. ஒரு சிலர் ரத்தினச் சுருக்கமாக தாங்கள் எழுத வந்ததை ஒரு சில வரிகளில் சொல்லி முடித்து விடுவார்கள். இன்னும் சிலர், விலாவாரியாக எழுதுவார்கள்.
சுருக்கமாக எழுதுபவர்களின் எழுத்துக்கள் சப்பென்று முடிவதுமுண்டு. விலாவாரியாக எழுதுபவர்களின் எழுத்துக்கள் சலிப்பை உண்டாக்குவதுமுண்டு.

என்னுடைய எழுத்துக்கள் சப்பென்று இருக்கிறதா அல்லது சலிப்புட்டுகின்றதா என்பதை வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.

சிறிய வயதிலிருந்தே நாவல்களையும் ­– தமிழிலும், ஆங்கிலத்திலும் - தமிழ் பத்திரிகைகளில் வெளி வந்த தொடர்கதைகளையும் மிகவும் விரும்பிப் படித்தவன் நான். ஒரு சிறிய நூற்கண்டை வைத்துக் கொண்டு முழ நீளச் சேலையை உருவாக்கியவர்களை விரும்பிப் படித்திருக்கிறேன். என்னை அறியாமலேயே என்னுள் சிறு கதைகளை விட நீண்ட கதைகளை, தொடர் கதைகளை விரும்பியிருக்கிறேன் என்று தோன்றுகிறது.

நான் முறையாக எழுத்தாளனான போது என்னுடைய முதல் முயற்சி ஆங்கிலத்தில் ஒரு சிறுகதைப் புத்தகமே. SHORT STORIES FOR YOUNG READERS – BOOK 1 ஆங்கிலத்தில் 7 கதைகளைக் கொண்டது. ஒவ்வொரு கதையும் சுமார் 1500-2000 வார்த்தைகளுக்குள் அடங்கியது. ஒரு சில பள்ளிகளில் இந்தப் புத்தகத்தையும் என்னுடைய இன்னும் இரண்டு சிறு கதைப் புத்தகங்களையும் பள்ளி மாணவர்களுக்காக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், என்னுடைய இயல்பான அணுகுமுறை என்னை விட்டுப் போகவில்லை. என்னுடைய இரண்டாவது முயற்சி சுமார் 400 பக்கங்கள் கொண்ட ஒரு ஆங்கில நாவல்: WHAT IF OUR DREAMS COME TRUE! AN UNCOMMON MEETING WITH LORD SIVA.

இப்படி சிறு கதைகளையும் நீண்ட கதைகளையும் மாறி மாறி முயற்சி செய்து வருகிறேன்.

இன்னொரு விஷயம்.

நான் விரும்பிப் படிக்கும் பல எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் பல புதிய தகவல்களைக் கொடுத்து எழுதியிருப்பார்கள். வர்ணனைகள் நிறைய இருக்கும். உதாரணத்துக்கு, ஒருவர் எக்மோர் ரயில் நிலையத்திற்குள் நுழைவதை எழுதினால் அந்த ரயில் நிலையத்தைப் பற்றி, அங்கே வேலை பார்ப்பவர்களைப் பற்றி, ரயில் பெட்டிகளைப் பற்றி, பயணிகளைப் பற்றி, ஒருவர் நுழையும் நேரத்தில் ரயில் நிலையத்தில் நிலைமை எப்படி இருந்தது, இப்படிப் பல உண்மையான தகவல்களை எழுதியிருப்பார்.

அதே சமயத்தில் தமிழில் ஒரு சில கதாசிரியர்கள் இதே எக்மோர் ரயில் நிலையத்தைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமலேயே ‘சென்னை எக்மோரிலிருந்து ஜோலார்பேட்டைக்கு ரயில் கிளம்பத் தயாராக இருந்தது,’ என்று கூட எழுதியிருக்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு சிலவற்றைப் பற்றி எதுவும் தெரிந்து கொள்ளாமலேயே ஏதோ நேரிலேயேப் பார்த்தது போல கதை விட்டிருப்பார்கள். இப்படிப் பட்ட எழுத்தாளர்களை நான் விரும்பியதில்லை.

பல ஆங்கில எழுத்தாளர்கள் நிறைய ஆராய்ச்சிகள் செய்து தங்கள் கதைகளை, கட்டுரைகளை, புத்தகங்களை எழுதுகிறார்கள். பல நுண்ணியத் தகவல்களைத் திரட்டிக் கொடுத்திருப்பார்கள். அந்தத் தகவல்களை நான் விரும்பிப் படிப்பேன். புத்தகத்தைச் சீக்கிரமாக படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக பலரைப் போல அந்தப் பகுதிகளை விட்டுவிட்டு படிக்க மாட்டேன். அவர்கள் எழுதியதைப் படிக்கும் பொழுது என்னுள்ளே அவர்கள் விவரித்ததைப் போலவே ஒரு வீடியோ ஒடிக்கொண்டிருக்கும். ஏதோ நானே நேரில் பார்ப்பது போல.

இந்த பாதிப்பு என்னையும் என் எழுத்துக்களில் தாக்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். முடிந்த அளவு என்னுடைய எழுத்துக்களைச் சுருக்குவதற்கு முயற்சி செய்தாலும் அதை ‘precis writing’ போல எழுதுவது எனக்குப் பிடிக்காது. ஓரு சில தகவல்களைச் சேர்த்தால் சுவாரசியமாக இருக்கும் என்று நான் நினைத்து சேர்ப்பதுண்டு. அப்படித்தான் என்னுடைய WHAT IF OUR DREAMS COME TRUE! AN UNCOMMON MEETING WITH LORD SIVA புத்தகத்தை எழுதி முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எடுத்துக் கொண்டேன்.  நானே நேராகப் போய் பல சிறிய ஊர்களைப் பார்த்து தகவல்களைத் திரட்டி எழுதியிருந்தேன்.

என்னுடைய ஆத்ம திருப்திக்காகத்தான் எழுதி வருகிறேன். வியாபார அணுகுமுறை தெரியாது. தெரிந்திருந்தால் என்னுடைய புத்தகங்கள் இன்று லட்சக்கணக்கான பிரதிகள் விற்றிருக்கும். என்னுடைய எழுத்துக்களின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையினால் இப்படிச் சொல்கிறேன். அகம்பாவாத்தினால் அல்ல. என்னுடைய புத்தகங்களை ஒரு சிலரே படித்திருந்தாலும் என் எழுத்துக்களை மிகவும் பாராட்டியிருக்கிறார்கள்.  

எப்படி இருந்தும் என் முக நூல் பதிவுகளையும் என்னுடைய இணையதளத்தின் பதிவுகளையும் என் நூல்களையும் படித்தவர்களுக்கும் கருத்து சொன்னவர்களுக்கும் மீண்டும் நன்றி சொல்கிறேன்.

என்னுடைய புத்தகங்கள் பல www.pothi.com என்ற இணையதளத்தில் விலைக்குக்  கிடைக்கும்.

வணக்கம்.

டீ. என். நீலகண்டன்

Sunday, May 14, 2017

14.05.17 இந்த வார நாட் குறிப்பு

14.05.17 இந்த வார நாட் குறிப்பு

ஒவ்வொரு வாரமும் எனக்கேற்படும் அனுபவங்களைப் பற்றி என்னுடைய கருத்துக்களையும் பதிய வேண்டும் என்றுதான் இந்தப் பகுதியை ஆரம்பித்தேன். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களினால் ஒவ்வொரு வாரமும் எழுதுவதற்கு என்னால் நேரம் ஒதுக்க முடிவதில்லை.

இதன் பின்னணியைப் பற்றி ஒரு சில வரிகள்:

சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முழு நேர ‘குழந்தை கவனிப்பு.’ (Baby Sitting). அது போக கிடைக்கும் சிறிது நேரத்தில் என்னுடைய கவனத்தை எனக்குப் பிடித்த ஒரு சில விஷயங்களில் சிதறவிட்டு விடுகிறேன். கீ போர்ட் வாசிக்கக் கற்றுக் கொள்வது, புத்தகங்கள் வாசிப்பது, கதை, கட்டுரை எழுதுவது, இந்திய பங்குச் சந்தையில் வாங்கி விற்பது, உடற் பயிற்சி.. இப்படியாக பல மரம் பார்த்தவனாக இருப்பதால் ஒரு மரத்தையும் முழுமையாக வெட்ட முடியாமல் நிற்கிறேன்.

ஒரு குறு நாவல் தமிழில் எழுதி முடித்திருக்கிறேன். இன்னமும் வரைவு வடிவத்தில்தான் இருக்கிறது. ஒரு முறையாவது சரி பார்த்த பிறகு நண்பர்களுக்கு அந்த நாவலை அறிமுகப்படுத்தலாம் என்று எண்ணம்.

47 ஆண்டுகளுக்கு பிறகு நான் கல்லூரியில் படித்த கெமிஸ்ட்ரியை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறேன். எடுத்துக் கொண்ட தலைப்பு: “அணுவுக்குள்ளே” (Inside the Atom). Quantum Mechanics இப்பவும் எனக்குப் புரியவில்லை. அணுவைப் பற்றி நடு நிலைப் பள்ளி மாணவர்களுக்காக ஒரு புத்தகம் ஆங்கிலத்தில் எழுதலாமா என்றும் எண்ணம்.

பவர் பாண்டி படம் பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது. ஆர்ப்பாட்டம் அதிகமில்லாத மனதைத் தொடும் படம். ஒரு நல்ல படத்தைக் கொடுத்ததற்கு தனுஷுக்கு வாழ்த்துக்கள்.

கடந்த வார இறுதியில் தென்னிந்திய நொறுக்குத் தீனிகள் வாங்க வேண்டும் என்று அருகாமையிலிருக்கும் (சுமார் ஐந்தரை கி.மீ தூரம்) இந்தியன் ஸ்டோர்ஸுக்கு சைக்கிள் மிதித்து சென்று வந்த பிறகு முதுகுத் தண்டின் கீழ் புறம் பிடித்துக் கொண்டதில் இரண்டு நாள் முழு நேர ஓய்வு. நான் வாங்கி வந்த தின் பண்டங்களுக்காக டாக்டருக்கு ஐம்பது டாலர்கள் தண்டம் கட்டும் படியாகி விட்டது. என்ன செய்வது நாக்கைக் கட்டுப் படுத்த முடியவில்லை.
சென்ற வாரம் The Fourth Industrial Revolution என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரைக்கு பலர் பாராட்டு தெரிவித்திருப்பது எழுத்தாளன் என்ற முறையில் திருப்தி. சந்தோஷம்.

கடந்த வாரம் படித்த செய்திகளில் என்னை ஈர்த்தவை சில.

முதலாவது,

செய்தி: Uttar Pradesh government considering 'no school bag' Saturdays in schools
உத்திரப் பிரதேசத்தில் பள்ளிகளில் சனிக் கிழமையன்று புத்தகச் சுமையை பள்ளிக்குத் தூக்கிப் போக வேண்டிய அவசியமில்லாத ஒரு முறையை அறிமுகப் படுத்த இருக்கிறார்களாம். நல்லதுதான். பல மெட்ரிக் பள்ளிகளில் வாரம் ஒரு நாள் co-curricular activities-க்கு ஒதுக்கியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அன்று, வழக்கமான பாடங்களைத் தவிர்த்து இசை, பாட்டு, நடனம், யோகா, கராத்தே, மற்ற விளையாட்டுக்கள் போன்றவற்றில் மாணாக்கர்களை ஈடுபடுத்துகிறார்கள். அரசுப் பள்ளிகளிலும் இந்த முறை இருக்கிறதா என்று தெரியவில்லை. இன்றைய மாணவர்களுக்கு, சிறிய வகுப்புகளிலிருந்தே critical thinking, analytical ability, communication skill, interpersonal skill, language skill, creative thinking போன்ற திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து. அதே போல சிறு வயதிலிருந்தே இன்டெர்னெட்டிலிருந்து தகவல்கள் சேகரித்து அதை ஒரு சிறிய presentation –ஆகக் கொடுக்கப் பழக்க வேண்டும். தான் கற்றுக் கொண்ட விஷயங்களைப் பற்றி எடுத்துச் சொல்ல பழக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு சொந்த முனைப்பு வளரும்.

இரண்டாவது,
செய்தி: Now, each block to get generic med store
ஒவ்வொரு கிராம வட்டாரத்திலும் ஜெனரிக் மருந்துக் கடைகளை மத்திய அரசு திறக்க உத்தேசித்திருக்கிறது. ஒரு புதிய மருந்தை ஆராய்ந்து கண்டு பிடித்து, அதை பரிசோதனைக்குள்ளாக்கி, அரசாங்க அங்கீகாரம் பெற்று சந்தைக்கு கொண்டு வருவதற்கு பல ஆண்டுகள் ஆகின்றன. பல  நூறு கோடி டாலர் கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு மருந்து தயாரிக்கும் கம்பெனி இவ்வளவு செலவு செய்து ஒரு மருந்தைக் கொண்டுவந்த பின்பு செலவு செய்த பணத்தையும் அதன் மேல் தனக்கு வேண்டிய லாபத்தையும் சம்பாதிக்காமல் என்ன செய்யும்? அதில் தவறு எப்படிக் காண முடியும்? இருந்தாலும், லட்சக்கணக்கான மக்கள் அந்த மருந்தை பயன்படுத்தும் பொழுது முதலீடு செய்த பணத்தையும் லாபத்தையும் நிச்சயமாக ஒரு சில ஆண்டுகளில் மீட்டு விடலாம். அதன் பிறகு எல்லாமே லாபம்தான். அப்படிப்பட்ட சமயத்திலாவது மருந்து விலையைக் குறைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதில் ஒவ்வொரு கம்பெனியும் அதே ஃபார்முலாவைப் பயன்படுத்தி வெவ்வேறு பெயர்களில் மார்க்கெட்டிங் செய்யும் பொழுது நிறைய லாபம் அடைய முயற்சிக்கிறார்கள். ஜெனரிக்கான மருந்துகளை விற்றால் அவ்வளவு லாபம் கிடைக்காது. பொது மக்களுக்காக வட்டாரம் தோறும் ஒரு ஜெனரிக் மருந்துக் கடையை ஆரம்பிக்கும் முயற்சி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்றே தோன்றுகிறது. ஆனால், அரசே வியாபாரம் செய்யத் துவங்கினால் உருப்படாது.

அடுத்தது,
செய்தி: தமிழக மின்சார வாரியத்துக்கு மத்திய ஊரக மின்மயமாக்கல் கழகம் ரூ.85 ஆயிரம் கோடி நிதி உதவி அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்
தடங்கலில்லாமல் எல்லா இடங்களிலும் மின்சார வசதி கிடைக்க வேண்டும். மின்சாரம் இல்லாமல் இன்றைக்கு எதுவுமே இயங்க முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நிலவிய மின் கட்டுப்பாடு, மின் தடை வரலாறு காணாத அளவு இருந்தது. பலர் கடும் தொல்லைக்கு ஆளாகினர். புதிய தொழில்கள் வேறு மானிலங்களுக்குச் சென்று விட்டன. தொழிலதிபர்கள் தமிழ் நாட்டைத் தவிர்ப்பதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. எப்பொழுதும் மத்திய அரசாங்கத்துடன் மோதல் போக்கையே கடைபிடித்து வந்ததால் தமிழ் நாட்டுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மத்திய அரசின் உதய் திட்டத்தில் பல மானிலங்கள் சேர்ந்த பின்னும் தமிழ்நாடு முரண்டு பண்ணியது. சமீபத்தில் தான் சேர்ந்து கொண்டது. வரும் காலத்திலாவது தமிழ் நாட்டில் மின் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க வேண்டும். 85000 கோடி ரூபாய் கடன் எப்படி உதவப் போகிறது என்று பார்ப்போம்.

அடுத்ததாக…
செய்தி: அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ.க்கு நிகராக புதிய பாடத் திட்டம் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
அமைச்சரின் ஒப்புதல் படி இது வரை தமிழகத்தில் பாடத் திட்டங்கள் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்துக்கு நிகராக இருந்ததில்லை என்பதை தெளிவாக்குகிறது. அதாவது சி.பி.எஸ்.இயின் உயர்ந்த தரம் தமிழகத்தில் இல்லை என்பதை நேரடியாக ஒப்புக் கொண்டிருக்கிறார். இனியாவது சரி செய்தால் நல்லதுதான். இனி மேலாவது மாணவர்களின் முன்னேற்றத்துக்கு வழி செய்யும்.

இறுதியாக..
செய்தி: The lowdown on the directive to RBI on bad loans
பல வங்கிக் கடன்கள் வாராக் கடன்களாக மாறி வாராக் கடன்கள் அபாயகரமாக ஏறிக்கொண்டே இருக்கின்றன. 1990-களில் என்று ஞாபகம். இது போன்றே ஒரு நிலை நீடித்தது. வாராக் கடன்களால் பல வங்கிகள் திண்டாடிக் கொண்டிருந்தன. இந்த  வாராக் கடன்களால் பல வங்கி அதிகாரிகள் சி.பி.ஐ, கோர்ட், பணி நீக்கம், தண்டனை, ஜெயில் என்று அவதிப் பட்டிருக்கிறார்கள். கடன் கொடுப்பதற்கு அங்கீகாரம் கொடுக்கும் நியாயமான அதிகாரிகளுக்கு கொடுக்கும் கடன் திரும்ப வருமா, வராதா என்று என்றுமே ஒரு பதட்டம்தான். 

Past performance is not a guarantee for future என்று மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு விளம்பரத்தில் போடுகிறார்கள். அது போலத் தானே வங்கிக் கடன்களும். ஓரு மனிதரின், அல்லது ஒரு நிறுவனத்தின் பழைய ரெக்கார்டுகளைப் பார்த்து எதிர்காலத்தைப் பற்றி ஒரு கணிப்பும் செய்துதான் கடன் கொடுக்கிறார்கள். ஆனால், கணிப்பு தவறாகி விட்டால் அந்த அதிகாரியின் பாடு திண்டாட்டம்தான். கடன் கொடுப்பதில் பல அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பது எல்லோருக்கும் தெரியும். 

இந்த வாராக் கடன்களைப் பற்றி நடுவில் கொஞ்ச காலம் அதிகமாக யாரும் பேசவில்லை. எல்லா வங்கிகளும் வாராக் கடன்களை கணிசமாக குறைத்து விட்டதாக பறைசாற்றிக் கொண்டார்கள். இப்பொழுது மீண்டும் அது பற்றிய பரபரப்பு தலை தூக்கியிருக்கிறது. ஐந்து லட்சம் ரூபாய் கடன் கொடுக்க அனுமதி கொடுக்கும் பொழுதே அப்பொழுதெல்லாம் கை நடுங்கும். இன்றைக்கு பல நூறு கோடி ரூபாய் கடன்கள் சர்வ சாதாரணமாகப் பேசப்படுகிறது. 

அன்றைக்கு consortium என்ற முறை இருந்தது. ஒரு நிறுவனத்துக்கு பல வங்கிகள் இணைந்து கடன் கொடுக்கும் பொழுது எல்லோரும் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள். இந்த நல்ல வழி முறை இடையில் கைவிடப்பட்டது. ஒரு நிறுவனம் எத்தனை வங்கிகளிடம் வேண்டுமானாலும் கடன் கேட்டு வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை வந்தது. வங்கிகளின் வழிமுறைகளை  நான் மறந்து 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இன்றைக்கு நடைமுறையில் என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. ஏதோ நல்லது நடந்தால் சரிதான்.

இறுதியாக..

அட, இன்னுமா முடிக்கவில்லை.


ஆமாம். ஒரே ஒரு கனவைப் பற்றி எழுத வேண்டியிருக்கிறது. அதைத் தனியாக இன்னும் ஒரு சில நாட்களில் எழுதுகிறேன்.

Saturday, November 05, 2016

06.11.16 இந்த வார நாட்குறிப்பு

06.11.16 இந்த வார நாட்குறிப்பு

கடந்த வாரத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நிகழ்வுகள் எதுவுமில்லை.

சிறு கதைகள் அடங்கிய ஒரு புதிய புத்தகம் தமிழில் எழுத வேண்டும் என்பது இந்த வாரத்தின் தீர்மானம். என் சிறு வயதிலிருந்தே துப்பறியும் கதைகளையும், வீர சாகசங்களைப் பற்றிய கதைகளையும் மிகவும் ரசித்துப் படித்திருக்கிறேன். தேவனின் ‘துப்பறியும் சாம்பு’, தமிழ்வாணனின் ‘துப்பறியும் சங்கர்லால்’ ஜாவர் சீதாராமனின் ‘உடல், பொருள், ஆனந்தி’, வீர விஜயன் என்ற தொடர் சித்திரக் கதை (எழுதியவர் பெயர் ஞாபகமில்லை). பின்னர் ஆங்கிலத்தில் ஏர்ல் ஸ்டேன்லி கார்டனர் எழுதிய பெரி மேசன் நாவல்கள், ஆர்தர் கானன் டாயில் எழுதிய ஷெர்லக் ஹோம்ஸ் கதைகள், சாண்டில்யனின் பல சரித்திரக் கதைகள், கல்கியின் பொன்னியின் செல்வன் இப்படி எத்தனையோ கதைப் புத்தகங்களைப் படித்து ‘நானும் இது போல ஒரு கதாசிரியராக முடியுமா’ என்று ஏங்கியது உண்டு. இன்று ஆகியிருக்கிறேன். இது வரை மூன்று சிறு கதைப் புத்தகங்களையும், இரண்டு முழு நீளக் கதைப் பத்தகங்களையும், பொது அறிவுக்கான ஒரு புத்தகத்தையும் எழுதி வெளியிட்டிருக்கிறேன்.

ஆனால், இது வரை நான் எழுதி வெளியிட்டதெல்லாம் ஆங்கிலத்தில்தான். தமிழிலும் என்னால் எழுத முடியும் என்று நம்புகிறேன். ‘கூட்டணி’ என்ற தலைப்பில் ஒரு முழு நீள கதையை எழுதி வைத்திருக்கிறேன். இதை எழுதி ஒரு பத்து ஆண்டுகளாகியிருக்கும். அரசியலைப் பற்றியது. ஒரு நல்ல நோக்கத்தோடு இரண்டு எதிரிகள் கூட்டணி ஆட்சி அமைத்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து எழுதியிருக்கிறேன். இதில் பல புதுமையான  நிகழ்வுகள் நடப்பதாகவும் எழுதியிருந்தேன். வெளியிட ஏனோ தைரியம் வரவில்லை. பல சர்ச்சைகளை உண்டாக்கலாம் என்று ஒரு பயம்.  நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்த ஒரு சில பகுதிகள் இன்று உண்மையாகவே நடந்தேறியிருக்கின்றன போலத் தோன்றுகிறது. எந்தவித சர்ச்சைக்கும் இடம் கொடாமல் இன்று ஒரு எழுத்தாளன் பார்த்து எழுத வேண்டியிருக்கிறது. ‘ஏதோ, கற்பனைக் கதை தானே’ என்று ஊடகங்களும், அரசியல்வாதிகளும் விட்டு விடுவதில்லை.

நேற்று அமெரிக்காவில் நடந்ததாக ஒரு செய்தி படித்தேன். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் களம் மிகவும் சூடாகி என்றும் இல்லாத அளவு தனிப்பட்ட முறையில் எதிர்த்து நிற்கும் வேட்பாளரைப் பற்றி கேவலமான பேச்சுக்கள், குற்றச்சாட்டுக்கள் என்று போய்க்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஒபாமா ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அதில் கலந்து கொண்ட ராணுவ உடையணிந்த ஒருவர் குடியரசுக் கட்சியின் கொடியைத் தூக்கிப் பிடித்துக் காட்டியிருக்கிறார். உடனேயே கூட்டத்தில் எல்லோரும் அவரைத் திட்டி கோஷங்களை எழுப்பியிருக்கின்றனர். (நம்மூராக இருந்தால் அவருக்கு உதை விழுந்திருக்கும்) கூட்டத்தில் ஒரே அமளி. ஒபாமாவால் பேச முடியவில்லை.

கோபம் கொண்ட ஒபாமா தன் குரலை எழுப்பி கூட்டத்தை கடிந்துகொண்டு இப்படிச் சொல்லியிருக்கிறார்: “நீங்கள் கோஷம் எழுப்புவதை நிறுத்திவிட்டு நான் சொல்வதைக் கொஞ்சம் அமைதியாகக் கேளுங்கள். முதலாவதாக, இங்கே குடியரசுக் கட்சியின் கொடியை பிடித்துக்கொண்டிருப்பவர் ஒரு வயோதிகர். அவர் தனது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அவ்வளவுதான். வேறு எதுவும் செய்துவிடவில்லை. அவரைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவருடைய வயதுக்கு நாம் மரியாதை காட்ட வேண்டும்.

இரண்டாவதாக, நாம் ஒரு சுதந்திர அமெரிக்காவில் வாழ்கிறோம். இங்கே ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்தை வெளியிட சுதந்திரம் இருக்கிறது. அந்த முதியவர் தன் கருத்தை ஒரு கொடியைத் தூக்கிக் காட்டி வெளிப்படுத்தியிருக்கிறார். அவ்வளவே.

மூன்றாவதாக அவர் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவர் அமெரிக்கா நாட்டுக்காக போராடிய வீரர். அவரை நாம் மதிக்க வேண்டும்.

கடைசியாக,  நீங்கள் எல்லோரும் வெறுமனே கோஷம் போடுவதை நிறுத்தி விட்டு (ஜனநாயகக் கட்சிக்கு) ஓட்டுப் போடுங்கள்.”

இப்படி ஒபாமா பேசி முடித்த போது பலத்த கரகோஷம். ஒபாமா ஒரு நல்ல தலைவர். அவர் பேசியது போல இங்கே எத்தனை அரசியல்வாதிகளால் பேச முடியும்? அது மட்டுமல்லாமல் சமயோஜிதமாக இக்கட்டான ஒரு சூழ்நிலையை தன் கட்சிக்கு சாதகமாக தன் சகிப்புத் தன்மையை வெளிக்காட்டி மாற்றிக்கொண்டார்.

அதே சமயம், ‘உன்னுடைய சுதந்திரத்தின் எல்லை என் மூக்கு  நுனி வரைதான்’ என்றும் நம்புவர்கள் அமெரிக்கர்கள்.

இங்கே எவ்வளவு தூரம் நமது கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தலாம் என்பது எனக்கு புரியாததால் என் கதையை பத்திரமாக சிறையில் அடைத்துவிட்டேன். இன்று நாட்டில், முக்கியமாக, தமிழ் நாட்டில் நடக்கும் பல அவலங்களைப் பார்த்து மனதில் வருத்தப்பட்டுக்கொள்ளத்தான் முடிகிறது. வெறும் பார்வையாளனாகத்தான் இருக்க வேண்டியிருக்கிறது.

இன்னொரு கதைப் புத்தகம். “நான்கு பாதைகள்” என்ற தலைப்பில். இதுவும் எழுதி ஒரு பத்து ஆண்டுகள் இருக்கும். தமிழ் எழுத்துக்கள் கம்ப்யூட்டரில் அதிகமாக கிடைக்காத நாட்களில் ஒரு நண்பர் கொடுத்த ஏதோ  ஒரு எழுத்தைப் பயன்படுத்தி எழுதி முடித்திருந்தேன். ஆனால், என் கம்ப்யூட்டரை மாற்றிய பின்பு ஏனோ அந்த எழுத்தை பயன்படுத்த முடியவில்லை. இரண்டு, மூன்று கம்ப்யூட்டர்கள் மாற்றியதில் அந்த கதையின் ஃபைல் திறக்க முடியாமற் போயிற்று. கஷ்டப்பட்டு பாதி வரை எழுதி முடித்தது வீணாகப் போய்விட்டது. இன்றும் எனக்கு தமிழ் தட்டெழுத்து தெரியாததால், ‘அழகி’ என்ற ஒரு எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தியே எழுதி வருகிறேன்.

இப்பொழுது நான் எழுதத் தொடங்கிய ‘துப்பறியும் சங்கர்’ என்ற சிறு கதைகளின் தொகுப்பு ஒரு பள்ளி மாணவனைப் பற்றியது. சங்கர் ஒரு காவல் அதிகாரியின் மகன். பள்ளியில் படிக்கும்  நாட்களிலேயே துப்புத் துலக்குவது அவனது பொழுதுபோக்கு. இதை மையமாகக் கொண்டு என்னுடைய முதல் ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் ஒரு துப்பறியும் கதை எழுதியிருந்தேன். அந்தக் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதைப் போன்று தமிழிலும் தொடரலாமே என்ற நினைப்பில் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன். எழுதி முடிக்க நேரமாகலாம். அவ்வப்பொழுது எனது இணையதளத்தில் வெளியிடுகிறேன். படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.  நீங்கள் உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தால்தான் என்னுடைய எழுத்துக்களை அவ்வப்பொழுது சரி  செய்துகொள்ளவும் முடியும்.


மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கலாம்.