Pages

Wednesday, April 16, 2014

எனது இத்தாலி பயணம் – பகுதி 3

நேப்பிள்ஸ் நகரம் செல்வதற்கு ரோமிலிருந்து மாலை 4 மணிக்கு ரயில் கிளம்பியது. பார்க்கத் தவறிய இடங்களை பார்த்து முடிப்பதற்காக, நாங்கள் மீண்டும் ரோமுக்கு 20-ஆம் தேதி திரும்புவதாக திட்டம். எங்களுடைய இரண்டு பயணப்பெட்டிகளை ரோமில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே பாதுகாப்பாக விட்டு வந்திருந்தோம்.

இத்தாலியில் பிஸ்ஸா, பாஸ்டா, மற்றும் ஸ்பகெட்டி உணவுகள் ரொம்பவும் பிரபலம். பிஸ்ஸா உணவு வழங்கும் இடத்தை பிஸ்ஸாரியா (PIZZARIA) என்றும் மற்ற இடங்களை ரிஸ்டோரெண்ட் (RISTORENTE) என்றோ கேஃப்டேரியா (CAFETARIA) என்றும் அழைக்கிறார்கள். இதைத் தவிர மூலைக்கு மூலை ஜெலட்டேரியா (GELATARIA) என்கிற ஐஸ்க்ரீம் கடைகள் வேறு. ஆங்கில எழுத்துக்களை அப்படியே இத்தாலி மொழியில் பயன்படுத்துகிறார்கள். (சுவிட்ஸர்லாந்திலும் அப்படித்தான்) அதனால் பெயர் பலகைகளைப் படிப்பதில் அதிக சிரமம் இல்லை. கேப்புச்சினோ (CAPUCCINO) என்றழைக்கப்படும் காஃப்பி இங்கே ருசியாக இருக்கிறது.

இன்டெர்னெட்டில் ரயில் டிக்கட் பதிவு செய்யும்பொழுது இரண்டு விதமாக டிக்கெட் கொடுக்கிறார்கள். ஒன்று ஈ-டிக்கெட். விரைவு வண்டிகளுக்காக. இதற்குத் தனியாக பேப்பர் டிக்கட் தேவையில்லை. பயணம் செய்யும்பொழுது நம் டிக்கெட்டின் PNR நம்பரை டிக்கெட் சோதனையாளரிடம் காட்டினாலே போதும். இரண்டாவது வகை பேப்பர் டிக்கெட். சாதாரண ரயில்களுக்காக. இதில் ரயில் நிலையத்தில் வாங்கும் தேதி இடப்படாத எல்லா டிக்கெட்டுகளும் அடங்கும். இன்டெர்னெட்டில் பேப்பர் டிக்கெட் வாங்கியிருந்தால், பதிவு செய்த நம்பரையும் முக்கிய பயணியின் குடும்பப் பெயரையும் ப்ளாட்ஃபாரத்திலுள்ள ஒரு மிஷினில் பதிவு செய்ய வேண்டும். அது அட்டை டிக்கெட்டைக் கொடுக்கும். இந்த அட்டை டிக்கெட்டை இன்னொரு மிஷினில் நுழைத்து பயணம் செய்யும் வண்டியில் ஏறுமுன் VALIDATE செய்துகொள்ளவேண்டும். ரயில் நிலையத்தில் டிக்கட் வாங்கினாலும் அப்படித்தான். ஈ-டிக்கெட்டில் நாம் ஏறிக்கொள்ளவேண்டிய ரயில்பெட்டி நம்பர், சீட் நம்பர் எல்லாம் கொடுத்து விடுகிறார்கள். எல்லா ரயில்பெட்டிகளும் AIRCONDION செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொருவருக்கும் தாராளமான தனித்தனி குஷன் இருக்கை. சுமார் நூறு கிலோமீட்டர் வேகத்துக்கும் அதிகமாக ரயில் செல்கிறது. ஆனால், ஒரு அசங்கல் குலுங்கல், சத்தம் இல்லை.
நேப்பிள் நகரத்தை நபோலி என்றழைக்கிறார்கள். மாலை ஆறரை மணிக்கு ரயில் நேப்பிள்ஸ் நகரம் சென்றடைந்தது. ஏற்கெனவே கூகுள் மேப்பில், நான் பார்த்து வைத்திருந்ததால், நேரே நாங்கள் தங்கவேண்டிய ஹோட்டலுக்கு நடந்து விட்டோம். ஒரு பத்து நிமிட தூரம்தான். ஹோட்டல் கட்டிடம் பிரம்மாண்டமாக ஒரு வீதியின் முனையில் நின்றது.  நாங்கள் கொண்டு வந்திருந்த பிரெட், பழங்களோடு எங்கள் இரவு உணவை முடித்துக்கொண்டு படுத்துவிட்டோம்.

நாள் 3
நேப்பிள்ஸ் கடலையொட்டி அமைந்த ஒரு நகரம். கம்பேனியா (COMPANIA) என்ற இத்தாலி நாட்டுப்பகுதியின் தலைநகரம். .இந்த நகரத்தைச் சுற்றி இயற்கை அழகோடு அமைந்திருக்கும் பல சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை அமால்ஃபி கடற்கரையோரம் (AMALFI COAST), வெசுவியஸ் மலை (VESUVIUS MOUNTAIN) மற்றும் கப்ரி தீவு (CAPRI ISLAND).

                                                                                 
 
 
 
 
 
  அமால்ஃபி கோஸ்ட்                      
 
கப்ரி தீவு                                   
 
 
                                                                                            
 
 
 
 
 வெசுவியஸ் மலை

 சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நேப்பிள்ஸ் பகுதியில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இத்தாலியின் இன்னொரு பகுதியான சிசிலிக்கும் நேப்பிள்ஸ்க்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டாம் உலகப்போரின் பொழுது இத்தாலியில் மிக அதிகமாக குண்டுகள் வீசப்பட்ட நகரம் நேப்பிள்ஸ்தான். ஹாங்காங்கிற்கு அடுத்தபடியாக மிக அதிகமாக பயணிகள் கடல் மார்க்கமாக வந்திறங்கும் நகரமும் இதுதான் என்று கேள்விப்படுகிறேன். புராதன நேப்பிள்ஸ் பகுதிகளில் முக்கியமானவை பொம்பே (POMPEII), காசர்டா அரண்மனை (CASARTA PALACE), மற்றும் ஹெர்கூலியனியம் நகரம் (HERCULANEUM).
      

                                                                                          காசர்டா அரண்மனை           
 
                                                                                            ஹெர்குலியன் நகரம்           
                                                                                                       பொம்பே

 கி.பி 79-ல் வெசுவியஸ் மலையில் ஏற்பட்ட எரிமலையினால் போம்பே மற்றும் சில புராதன நகரங்கள் அழிந்துவிட்டன. கடந்த நூற்றாண்டில் மிக அதிகமாக தீயைக் கக்கிய எரிமலையும் இதுதான். சுமார் மூன்று லட்சம் மக்கள் இந்த எரிமலையை சுற்றி வாழ்வதால் மிகவும் அபாயகரமான எரிமலையாக இது கருதப்படுகிறது. இத்தாலியின் முக்கிய உணவான பிஸ்ஸா  நேப்பிள்ஸில்தான் உதயமானது.  இசைக்கலைக்கு முக்கியத்துவம் கொடுத்த இடம் நேப்பிள்ஸ். மாண்டலின், மற்றும் காதலர்களின் (ROMANTIC GUITAR) சிறிய கிடார் இங்கேதான் முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது.
அடுத்த நாள் காலை, வழக்கம் போல், ஹோட்டலிலேயே காலை உணவை முடித்துக்கொண்டோம். எல்லா ஹோட்டல்களிலும் பிரெட், ஜூஸ், க்ரிஸாண்ட் (CROISSANT), கேக், பழங்கள், பிஸ்கட், காஃபி தாராளமாக காலை உணவுக்குக் கொடுத்தார்கள். பழமையான சரித்திரகால இடங்களை ரோம் நகரில் ஏற்கெனவே கொஞ்சம் பார்த்துவிட்டதால்,  நேப்பிள்ஸில் இயற்கையாக அழகாக இருக்கும் இடம் ஒன்றைப் பார்க்கலாம் என்று தீர்மானித்து அன்று கப்ரி மற்றும் அனக்கப்ரி (CAPRI AND ANACAPRI) என்ற ஒரு அழகான தீவை சுற்றிப்பார்ப்பதற்கு ஹோட்டல் மூலமாக முன்பதிவு செய்திருந்தோம். விலை மிக அதிகமான டூர்தான். ஒரு நபருக்கு மொத்தமாக நூற்றி இருபது யூரோக்கள், மதிய உணவுக்கும் சேர்த்து. எட்டு மணிக்கு ஹோட்டலிலிருந்து எங்களை ஒரு வேனில் கூட்டிச்சென்றார்கள்.  நேப்பிள்ஸ் துறைமுகத்தில் எங்களை, ஐநூறுக்கும் மேலே பயணிகள் உட்காரக்கூடிய ஒரு பெரிய நீராவிப் படகில் ஏற்றிவிட்டார்கள். படகு நிரம்பியிருந்தது. 45  நிமிடங்கள் படகில் பயணம். கப்ரி துறைமுகத்தில் எங்கள் சட்டையில் ஒட்டப்பட்ட ஒரு சிவப்பு ஸ்டிக்கரை வைத்து கைடு ஒருவர் எங்களை அடையாளம் கண்டுகொண்டார். எங்களுடன் வேறு சில பயணிகளையும் சேர்த்து ஒரு சிறிய வேனில் ஏற்றிக்கொண்டார். கைடு பார்ப்பதற்கு இத்தாலியை சேர்ந்த, GOD FATHER படப் புகழ், பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பஸினோ (AL PACINO) போல் இருந்தார். மிகக்குறுகிய ஒரு மலைப்பாதையின் வழியே வேன் மலை ஏறியது.

எங்களுடன் வந்தவர்களில் சிலர் ஒரு BLUE GROTTOS என்றழைக்கப்படும் இயற்கையாக அமைந்த மலைக்குகையைப் பார்ப்பதற்காக இறங்கிக்கொண்டார்கள். எல்லாவற்றிற்கும் தனித்தனியே கட்டணம் என்பதால் நாங்கள் போகவில்லை. ஆனால், மிக நன்றாக இருந்தது என்று மற்றவர்கள் மூலம் பின்னால் கேள்விப்பட்டோம்.  நாமும் போயிருக்கலாமோ என்று தோன்றியது.


                           
நாங்கள் அனக்கப்ரியில் (அதாவது மேல் கப்ரி) இறங்கி ஒரு மலை உச்சிக்கு ROPE CAR மூலம் போனோம். கீழே பயங்கரப் மலைப் பாறைகள். பாறைகளையொட்டி கடல். அதை மூடி மூடிக் காட்டும் மேகங்கள்.  நடுவே தனியாக நிற்கும் பெரிய துளையுள்ள உயர்ந்த இரண்டு பாறைக்கற்கள். மயிர்கூச்செரியும் கண்கொள்ளா காட்சி.






                
அங்கேயே சிறிது நேரம் சுற்றிவிட்டு பின் கீழே அதே ROPE CAR மூலம் இறங்கி வந்தோம். ஒரு ரெஸ்டாரென்டில் வெஜிடபிள் சூப், ஸ்பகெட்டி கிடைத்தது.

பின் கீழிறங்கி கப்ரி வந்தோம். அங்கே கடைத்தெருக்கள், வாசனைப்பொருட்கள் தயாரிக்கும் ஒரு ஃபாக்டரி, ஒரு பெரிய பூங்கா. கடைகள் வரக்கூடிய சீசனுக்காக தயாராகிக்கொண்டிருந்தன. பூங்காவிலிருந்து மேலே அனக்கப்ரியில் மேகமூட்டத்தினால் பார்க்க முடியாத காட்சி கீழே மிக அருமையாக கிடைத்தது. இணைத்திருக்கும் புகைப்படங்களைப் பார்த்து நீங்களே வியந்து கொள்ளுங்கள்.





 
எங்களை மீண்டும் கப்ரி துறைமுகத்தில் இறக்கி விட்டார்கள். படகுப் பயணம் முடிந்தபொழுது, எங்களுக்காக காத்துக்கொண்டிருந்த டிரைவர் எங்களை ஹோட்டலில் இறக்கிவிட்டார். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அருகேயே மிகப்பெரிய கடைவீதி இருந்தது. ஹோட்டலில் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, கடைகளை சுற்றிப்பார்த்தோம்.

இரவு ஓய்வெடுத்துக்கொண்டு அடுத்த நாள் HOP ON HOP OFF பஸ்ஸில் உள்ளூரை சுற்றிப் பார்க்க தயாரானோம்.
நாள் 4

காலையில் எழுந்த பொழுது அன்று எங்களுக்கு ஒரு துரதிர்ஷ்டமான நாள் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. காலை எட்டு மணிக்கு ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு, சாமான்களை ஹோட்டலிலேயே பாதுகாப்பாக விட்டுவிட்டு, வழக்கம்போல் உற்சாகமாக ஊர் சுற்றிப் பார்க்க கிளம்பிவிட்டோம். பக்கத்திலிருந்த ஒரு நியூஸ் பேப்பர் கடையிலிருந்து பஸ்/டிராம் இரண்டிலும் செல்லக்கூடிய டிக்கெட் வாங்கிக்கொண்டோம். HOP ON HOP OFF பஸ் கிளம்பும் நிலையத்துக்க்குப் போவதற்கு ஹோட்டல் எதிரிலேயே இருந்த பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தோம். பஸ் நிறுத்தத்தில் அதிகமாக கூட்டம் ஒன்றும் இல்லை. டிராம் வந்தது. ஏறிக்கொண்டோம்.

வினோதமாக, டிராமில் யாரோ ஒருவர் வழியை அடைத்துக்கொண்டு நின்ற மாதிரி இருந்தது. பின்னாலிருந்தும் யாரோ தள்ளியதுபோல் தோன்றியது. ‘ஏன் நம்மூர் மாதிரி இடித்துத் தள்ளுகிறார்கள்.’ என்று சலித்துக்கொண்டேன்.. திடீரென்று, பஸ் உள்ளே பலர் எதேதோ உரக்கச் சொல்லிக்கொண்டார்கள். அவர்கள் மொழி புரியாததால் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தோம். டிக்கெட்டை மிஷினில் பஞ்ச் செய்யச் சொல்கிறார்கள் போலிருக்கிறது என்று மிஷினைக் கூட்டத்துக்கு நடுவே தேடினேன். அதற்குள் டிராம் கிளம்பிவிட்டது. அப்பொழுதுதான் ஒரு பெண்மணி ஆங்கிலத்தில் ‘உங்கள் பாக்கெட்டிலிருந்து பர்ஸ் பிக்பாக்கெட் செய்துவிட்டு ஒருவர் இறங்கி ஓடி விட்டார்’ என்று சொன்னார். பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தேன். என்னுடைய பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு பர்ஸ் காணவில்லை. பிக்பாக்கெட் அடிப்பதை எல்லாரும் கவனித்திருக்கிறார்கள், ஆனால், யாரும் அவனைத் தடுத்து நிறுத்தவில்லை. யாருக்கும் தைரியமில்லை போலிருக்கிறது. என் மனைவி உரக்க அழுதேவிட்டாள். டிராமை நிறுத்தவும் வழியில்லை. அடுத்த நிறுத்தத்தில் போலீஸில் புகார் கொடுப்பதற்காக இறங்கிக்கொண்டோம். ஒரு பயணி மட்டும் உதவுவதாகச் சொல்லி எங்களுடன் இறங்கிக்கொண்டு,  நடத்திக்கூட்டிச் சென்றார். சிறிது தூரத்தில், ஒரு கட்டடத்தில்  நுழைந்தோம். பலத்த செக்யூரிட்டி வேறு. உள்ளே ஒரே ஒருவர் மட்டும் இருந்தார். எங்களுடன் வந்தவரும் அவரும் பேசிக்கொண்டபொழுது இருவருக்கும் சண்டையாகிவிட்டது. என்ன என்பது எங்களுக்கு புரியவில்லை. எங்களுடன் வந்தவர் சைகையில் வெளியே வேறு இடத்துக்குப் போவோம் என்று கூறி வெளியே போனார். ஆனால், உள்ளிருந்தவர் சைகையில் எங்களை இருக்குமாறு கூறினார். அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. பின் எவருடனோ தொலைபேசியில் தொடர்புகொண்டு எங்களை அவரிடம் பேசச்சொன்னார். நாங்கள் விவரம் சொன்னபிறகு, மீண்டும் அதே அதிகாரியிடம் தொலைபேசியை கொடுத்தோம். எல்லா விவரங்களையும் எங்களிடம் அரைகுறை ஆங்கிலத்தில் கேட்டு வாங்கிக்கொண்டு புகாரை பதிவு செய்து ஒரு நகலை எங்களிடம் கொடுத்தார்.
எங்கள் சக்தியெல்லாம் உறிஞ்சியதுபோல் இருந்தது. வெளியே வந்து ஹோட்டலை நடையாக வந்தடைந்தோம். வரவேற்பில் இருந்தவர் மிகவும் உதவியாக இருந்தார். என்னுடைய பர்ஸிலிருந்து என்னுடைய கிரெடிட் கார்டுகள், இந்தியாவின் டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் பதிவு அட்டை,  மற்றும் அமெரிக்க டாலர் பணம் எல்லாம் போச்சு. க்ரெடிட் கார்ட் கம்பெனிகளுக்கு ஃபோன் செய்து அந்த கார்டுகளை செயலிழக்கச் சொல்லி கேட்டுக்கொண்டோம்.

எங்கள் உற்சாகம் எல்லாம் புஸ் என்று போய்விட்டது. ‘போனது திரும்ப வராது’ என்பதை நான் விரைவில் புரிந்து கொண்டு சமாதானமானேன். என் மனைவிக்கு வெகு நேரம் பிடித்தது. இருந்தாலும், HOP ON  பஸ்ஸுக்கு ஏற்கெனவே ரிசெர்வேஷன் செய்துவிட்டதால், மீண்டும், வேறொரு பஸ் பிடித்து HOP ON  பஸ் கிளம்பும் நிலையத்துக்குச் சென்றோம். சுமார் மூன்று மணி நேரமும் வீணாகிவிட்டது.
அருகே NUONO PALACE என்கிற ஒரு பழைய அரண்மனைக் கோட்டை. அதை சுற்றிப் பார்த்தோம். கட்டணம் உண்டு.


        
பின்பு, HOP ON  பஸ்ஸில் ஏறி ஊர் முழுவதும் ஒரு இடம் கூட இறங்காமல் சுற்றிப் பார்த்தோம். அவ்வளவு நேரம்தான் எங்களுக்கு கிடைத்தது. ஏனென்றால், மாலை நான்கு மணிக்கு எங்களுக்கு ஃப்ளாரென்ஸ் செல்வதற்கு ரயில் இருந்தது.


 

எங்களை ஏற்றிச் செல்லவேண்டிய ரயில் ப்ளாஃபாரத்துக்கு வந்து சேர்வதற்கு மிகத் தாமதமானது. வண்டி வந்த பொழுது ஐந்து நிமிட இடைவெளியில் எங்கள் பெட்டிக்கு ஓடினோம். தாமதமாக வந்தபோதிலும் சரியான நேரத்துக்கு வண்டி கிளம்பிவிட்டது. கனத்த இதயத்துடன் நேப்பிள்சை சபித்துக்கொண்டு ரயில் ஏறினோம். என் வாழ்வில் முதல் பிக்பாக்கட் அனுபவம்.

                                                                                                                                  தொடரும்....................................

No comments:

Post a Comment