Pages

Wednesday, April 16, 2014

பெர்ஸனாலிடி - பகுதி 2 - அபிப்பிராயங்களைப் பற்றி

பெர்ஸனாலிடியை வளர்த்துக்கொள்வது எப்படி?

பகுதி 2 : நமது அபிப்பிராயங்களைப் (BELIEFS) பற்றி

“தத் த்வம் அஸி” – ஆதி சங்கரர் (“நீ அதாகவே இருக்கிறாய்.”)
உங்கள் மனப்பான்மைதான் உங்கள் எதிர்காலம்

உங்கள் எண்ணங்கள்தான் வார்த்தைகளாகவும் பின்பு உங்கள் நடத்தைகளாகவும், உங்கள் பழக்க வழக்கங்களாகவும்,  நீங்கள் மதிக்கக்கூடிய உயர்ந்த கருத்துக்களாகவும், முடிவாக உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் விதியாகவுமாகிறது. எனவே உங்கள் எண்ணங்களை நேர்மறையாகவும் தூய்மையாகவும் வைத்துக்கொள்ளுங்கள். – மஹாத்மா காந்தி


உங்களது வெற்றியைத் தீர்மானிக்கப் போவது  உங்களுடைய அறிவோ அல்லது திறமைகளோ மட்டுமில்லை. அதற்கும் மேலாக உங்களது மனப்பான்மைதான் (ATTITUDE) உங்கள் வெற்றியை தீர்மானிக்கும்


நமது அறிமுகப் பகுதியில் பெர்ஸனாலிடியை தீர்மானிப்பவை எவை என்பதில், நமது உடல் மற்றும் மன வலிமை முதலாவதாக வருவதாகவும் அடுத்ததாக நமது அபிப்பிராயங்கள்  வருவதாகவும் பார்த்தோம். வலிமையைப் பற்றி பகுதி 1-ல் சொல்லிவிட்டேன். இந்தப் 2-ஆம் பகுதியில் அபிப்பிராயங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம். மிகவும் முக்கியமான, ஆனால் புரிந்துகொள்வதற்கு கொஞ்சம் கடினமான பகுதி இது. எவ்வளவு எளிதாக இதைச் சொல்ல முடியுமோ அவ்வளவு எளிதாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.

ஆபிரஹாம் லிங்கன் ஒரு மரக்குடிலில் பிறந்தவர். இவர் தனது ஒன்பதாவது வயதில் 34 வயதான தாயை இழந்தார். இளம் பருவத்தில் பள்ளிக்கூடம் என்று சென்றது மொத்தமே சுமார் ஒரு வருடம்தான். தனது 21-ஆம் வயதில் வியாபார முயற்சியில் தோல்வி அடைந்தார். 22-ஆம் வயதில் உள்ளூர் சட்டசபை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். 26-ஆம் வயதில் காதலியின் திடீர் மரணத்தால் மனதுடைந்தார். பின்பு, வேறொரு பெண்ணுடன் திருமணமான பின் இவருக்குப் பிறந்த நான்கு குழந்தைகளில் ஒன்று மட்டுமே பிழைத்தது. தானாகவே சட்டப் புத்தகங்களைப் படித்து வக்கீலானார். வக்கீல் தொழில் சிறப்பாக நடந்து கொண்டிருந்தபோது மீண்டும் அரசியலில் புகுந்து செனட் என்கிற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்டீஃபன் டுக்ளஸ் என்பவரோடு போட்டியிட்டு தோல்வியுற்றார். ஆனால், ஆறு வருடங்கள் கழித்து அதே ஸ்டீஃபன் டுக்ளஸ்ஸை அமெரிக்க ஜனாதிபதி போட்டியில் பலத்த எதிர்ப்புகளுக்குகிடையே தோற்கடித்து ஜனாதிபதியானார். ஜனாதிபதி ஆனதும், அடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக அவர் எடுத்த முயற்சிகளை எதிர்த்த தென் மாநிலங்கள், தனியே பிரிந்து உள்நாட்டுப் போரைத் துவக்கின. தன்னுடைய தன்னம்பிக்கையாலும், வாதத் திறமையாலும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையினாலும், போர் யுக்திகளினாலும், உள்நாட்டுப் போரை வென்றார். இரண்டாவது முறை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, இவரது அடிமைத்தனத்தை ஒழிக்கும் கொள்கைகளை’ விரும்பாத ஜான் வில்கிஸ் பூத் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

எத்தனை தோல்விகள். எத்தனை சவால்கள். எத்தனை எதிர்ப்புகள். லிங்கன் எப்படி சமாளித்தார்?.

ஸ்டீஃபன் ஹாக்கிங் – இவர் ஒரு சக்கர நாற்காலி விஞ்ஞானி. தற்போது 71 வயதான இவருக்கு அவருடைய 21-ஆம் வயதில் அமியோட்ரோபிக் லேடரல் ஸ்க்லோரோசிஸ் (ALS) என்கிற பயங்கரமான வியாதி இருப்பதாக கண்டறியப்பட்டது. தன்னுடைய உடலூனத்தைப் பொருட்படுத்தாமல் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளினால் இயற்பியலிலும், அண்ட முழுமை இயலிலும் (COSMOLOGY) இதுவரை யாருமே கண்டறியாத சில உண்மைகளை கண்டுபிடித்திருக்கிறார். இவரின் பெற்றோர்கள் படித்தவர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் இருந்தும் இரண்டாம் உலகப்போரினால் பல கஷ்டங்களுக்குட்பட்டு மிக சாதாரண குடும்பஸ்தர்களாகவே இருந்தனர். இவர் ஒரு மருத்துவராக வரவேண்டும் என்று இவரின் பெற்றோர்கள் ஆசைப்பட்டபோதிலும், ஹாக்கிங்கின் ஆர்வம் இயற்பியலிலும் விண்வெளியிலுமே இருந்தது. இளமையில் நல்ல அறிவாளியாக இருந்தபோதிலும் வகுப்பில் ஒரு சாதாரண பின்தங்கிய மாணவராகவே இருந்தார். பள்ளிப் படிப்பைவிட வெளி விளயாட்டுக்களிலேயே இவரது மனம் சென்றது. தனது 16-ஆம் வயதில் சில நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து வீணாக்கப்பட்ட பொருட்களிலிருந்து அடிப்படையான சில கணக்கீடுகளுக்கு (CALCULATIONS)  விடை காண, ஒரு கம்ப்யூட்டரை உருவாக்கினார். 1963-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டத்திற்குப் படித்துக் கொண்டிருக்கும் சமயம் தனக்கு சில உடல் உபாதைகள் இருப்பதை கவனித்தார். பேச்சு குழற ஆரம்பித்தது. நடை தளர்ந்து அடிக்கடி கிழே விழ ஆரம்பித்தார். ஆரம்பத்தில், ஹாக்கிங் தனது உடல் உபாதையை பொருட்படுத்தவில்லை. ஆனால், அடுத்த சில வாரங்களிலேயே பல சோதனைகளுக்குப் பிறகு அமியோட்ரோபிக் லேடரல் ஸ்க்லோரோசிஸ் – அதாவது தசைகளை இயக்கும் நரம்பு மண்டலம் முழுவதுமாக பழுதடைந்து போதல் – இருப்பதாக கண்டறியப்பட்டு, இன்னும் இரண்டரை வருடங்கள்தான் இவர் உயிரோடு இருக்க வாய்ப்பு இருப்பதாக தீர்மானிக்கப்பட்டது. இந்த செய்தியைக் கேட்ட – அதுவரை எதையுமே விளையாட்டாக எடுத்து வந்த – ஹாக்கிங் ஒரு புதிய தீர்மானத்துக்கு வந்தார். மருத்துவ மனையில் அவருடன் ஒன்றாக அறையில் இருந்த, லுகேமியாவால் (LEUKEMIA) பாதிக்கப்பட்ட இன்னொரு இளைஞரை விட தன்னுடைய நிலைமை எவ்வளவோ மேல் என்று கூற ஆரம்பித்தார். “எனக்கு வியாதி வருவதற்கு முன்புவரை வாழ்க்கை எனக்கு மிகவும் போரடித்தது” என்று கூறினார். தன்னுடைய ஆராய்ச்சிகளில் இன்னும் முனைப்பு காட்டத் தொடங்கினார். இவரது நீண்டகால ஆராய்ச்சியினால்,  1970-களில் விண்வெளியில் கருப்புக் குழிகளைப் (BLACK HOLES) பற்றிய புதிய உண்மைகள் தெரிய வந்தது. இவரது கண்டுபிடிப்புகளை உலகமே வியந்து பாராட்டியது. அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் பல பெரிய பல்கலைக் கழகங்கள் இவரை  நடமாடும் (VISITNG) பேராசியராக நியமித்தன. இவரது உடல் நிலை இன்னும் மோசமாகத் தொடங்கியது. பிறர் உதவியில்லாமல் இவரால் எதுவுமே செய்யமுடியாத நிலை. இதற்கு நடுவே காதல் திருமணம், ஒரு பெண் குழந்தை வேறு. இன்றைக்கும், இவர் மூளையிலும், கண்களிலும் ஏற்படும் மிக நுண்ணிய அதிர்வலைகளை பேச்சாகவோ, எழுத்தாகவோ மாற்றக்கூடிய கம்ப்யூட்டரின் உதவியாலேயே இவரது ஆராய்ச்சிகளும், புத்தகங்களும், விரிவுரைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இன்றைக்கும் விஞ்ஞான உலகத்தில் ஐஸக் நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீனிக்கு சமமாக ஒரு விஞ்ஞானி மதிக்கப்படுகிறார் என்றால், அவர் ஸ்டீஃபன் ஹாக்கிங்தான். இவரது துணிவுக்கு இன்னொரு அத்தாட்சி: 2007-ல் அவரது 65-ஆம் வயதில் உடல் பாதிக்கப்பட்ட நிலையிலும் இவர் இரண்டு மணி நேரத்துக்கு, மாற்றியமைக்கபட்ட ஒரு போயிங் விமானத்தில் சக்கர நாற்காலியில்லாமல் புவியீர்ப்பு சக்தியிலிருந்து விடுபட்ட எடையின்மைத் தன்மையை பரிசோதிக்கும் ஒரு சோதனையில் பங்கு கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். விண்வெளியில் சுற்றுப் பயணம் செய்ய ஒரு முதல் பயணியாகவும் தன்னை பதிவு செய்து கொண்டிருக்கிறார். ஆனால், இவரது அன்றாட வாழ்க்கை சக்கர நாற்காலியும், கம்ப்யூட்டரும்தான்.

உடலூனமுற்ற ஹாக்கிங் ஒரு சாதனயாளரானது எப்படி?

சற்று யோசித்துப் பாருங்கள்.

இப்படி பலர். தொழிலதிபர் திருபாய் அம்பானி, திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன், எழுத்தாளர் சார்ல்ஸ் டிக்கன்ஸ், விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், கண் பார்வையற்று, காது கேளாமையுடன் வாழ்க்கையை ஓட்டிய உலகப்புகழ் பேச்சாளர் ஹெலன் கெலர், இன்று உலகம் முழுவதும் கிளைகள் கொண்ட KFC-யின் உரிமையாளர் கர்னல் ஸாண்டர்ஸ், நோபல் பரிசு பெற்ற அன்னை தெரஸா, இப்படிப் பலர் …… மிக மிக நீண்ட பட்டியல் – இவர்கள் சாதனையாளர்களானது எப்படி? இவர்களின் வெற்றிக்கு எது முக்கியமான உறுதுணையாக இருந்தது? உலகப் புகழ் வாய்ந்த பெர்ஸனாலிடியாக இவர்கள் மாறியது எப்படி?
இவர்கள் எல்லோருமே அடிப்படையில் சாதாரண குடும்பங்களில் பிறந்து வளர்ந்தவர்கள்தான். ராஜா வீட்டு கன்னுக்குட்டிகள் இல்லை. ஆதரவற்ற நிலையில், பல சவால்களை எதிர்கொண்டு, பல தடங்கல்களைத் தாண்டி, போராடித்தான் வெற்றியடைந்திருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருமே அடிப்படையில் நல்ல அறிவும், திறமையும் உடையவர்கள்தான். ஆனால் இவர்களின் சாதனைகளுக்கு இவர்களின் அறிவும் திறமையும் உதவியிருந்தாலும்கூட இவர்களின் மனப்பான்மையே வெற்றிக்கு வித்திட்டது. இவர்கள் தங்களைப் பற்றி ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். தன்னால் முடியும் என்ற மனப்பான்மையைக் கொண்டிருந்தார்கள். தனது எதிர்காலம் கண்டிப்பாக பிரகாசமாக இருக்கும் என்று நம்பினார்கள். வெற்றியடைய தனக்கு எல்லா தகுதிகளும் இருப்பதாக நம்பினார்கள். தங்களது குறைபாடுகளை தடங்கல்களாக எடுத்துக்கொள்ளவில்லை. சவால்களைக் கண்டு அஞ்சி ஓடவுமில்லை. எதிர்ப்புகளைக் கண்டு அச்சப்படவில்லை. தொல்விகளைக் கண்டு மனம் சோர்ந்துவிடவில்லை. தடங்கல்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதில்லை. இவைதான் அவர்களின் வெற்றியின் ரகசியம்.

தாமஸ் ஆல்வா எடிசனைப் பற்றி ஒரு சுவையான செய்தி. அரைகுறையாகவே காது கேட்கும் திறனுடைய இவரை “இவருக்கு படிப்பு வராது, இவருக்குச் சொல்லிக் கொடுப்பது மிகக் கடினம்.’ என்று கூறி பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். இவர் படித்ததெல்லாம் இவரின் அம்மாவிடம்தான். ஃபோனோகிராஃப், சினிமா படம் பிடிக்கும் கேமிரா, மின்சார விளக்கு போன்ற 1093 கண்டுபிடிப்புகளுக்கு உரிமையாளர். 1914-ல் இவரது 67-ஆம் வயதில் கோடிக்கணக்கான மதிப்புள்ள இவரது தொழிற்சாலை தீக்கிரையாகியது. தொழிற்சாலைக்கு அவசியமான போதுமான காப்பீடும் இல்லை. அவரது வாழ்நாளின் முழு முதலீட்டையும் இழந்ததைப் பற்றி பெரியதாக கவலைப்படாமல், அவர் கூறியது என்ன தெரியுமா? “ரொம்ப நல்லதாகப் போய்விட்டது. என்னுடைய தவறுகள் எல்லாமே எரிந்து சாம்பலாகிவிட்டன. பேரிடர்களிலும் நன்மைகள் உள்ளன. இனி, புதியதாக எல்லாவற்றையுமே தொடங்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த அந்தக் கடவுளுக்கு நன்றி.” எப்படி இருக்கிறது? அந்த மனப்பான்மை நம்மில் எத்தனை பேருக்கு வரும்?

ஆதலினால், மீண்டும் சொல்கிறேன். உங்களை உருவாக்குவது உங்கள் மனப்பான்மைதான். உங்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைதான். ‘எனக்குத் திறமை இருக்கிறது. தகுதி இருக்கிறது. இது என்னால் முடியும்.” என்கிற உங்களைப் பற்றிய நீங்களே கொண்டுள்ள அபிப்பிராயங்கள்தான் உங்கள் வெற்றியை நிர்ணயிக்கிறது. உங்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள அபிப்பிராயங்கள் நேர்மறையாக இருக்கும்பொழுது, தானாகவே அறிவையும், திறமையையும் நீங்கள் தேடிச்சென்று அடைவீர்கள்.

ஆனால், அறிவும், திறமையும் மட்டும் இருந்து, சரியான மனப்பான்மையும், உங்களைப் பற்றிய சரியான அபிப்பிராயங்களும் உங்களுக்கு இல்லையென்றால், வெற்றியடைந்தால் கூட அது தாற்காலிகமாகவே இருக்கும். சீக்கிரமே உயர் நிலையிலிருந்து கீழிறங்க ஆரம்பித்துவிடுவீர்கள். அதற்கும் ஆதாரங்கள் இருக்கின்றன. வெற்றி பெற்ற பலர் அவர்களது மனப்பான்மையினாலேயே அழிந்திருக்கிறார்கள். அதிலும் சிலர், தங்கள் தவறை உணர்ந்து திருத்திக்கொண்டு, தன்னம்பிக்கையினால் மீண்டும் எழுந்து வந்திருக்கிறார்கள்.

ஒருவருக்குத் தன்னைப் பற்றிய நம்பிக்கையும், அபிப்பிராயமும் எப்படி உருவாகுகிறது என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.


                                                                           ………… தொடரும்

T.N.NEELAKANTAN

www.tnneelakantan.com


இதன் முந்தைய பகுதிகளைப் படிப்பதற்கு www.thiruvaadhirai48.blogspot.com என்கிற blog-ல் பார்க்கவும்

No comments:

Post a Comment