Pages

Tuesday, May 06, 2014

My Italy Tour, March 2014: Final Part

எனது இத்தாலி பயணம்இறுதிப் பகுதி 6
நாள்: 9
எங்கள் இத்தாலி நாட்டுப் பயணத்தின் கடைசி நாள். காலை ஆறேகால் மணிக்கு வெனிஸிலிருந்து ரோமுக்கு ரயில் டிக்கெட் வாங்கியிருந்தோம். சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம்தான் என்பதை மீண்டும் மீண்டும் ஹோட்டல் வரவேற்பில் உறுதி செய்துகொண்ட பிறகு காலை ஐந்தரை மணிக்கு மென்மையான குளிருக்கூடே ரயில் நிலையத்துக்கு நடந்தோம். மெல்லிய பனிமூட்டம் இருட்டை அதிகப்படுத்தியிருந்தது. தெருவிளக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக மினிக்கிக் கொண்டிருந்தது. சிறிது தூரம் நடந்தால் ஒரு கேஃப்டேரியா திறந்திருந்தது. சுடச்சுட காஃபி கிடைத்தது. கையில் வாங்கிக்கொண்டு ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம்.

நாங்கள் பயணம் செய்த ரயில் FRECCIARGENTO என்ற வகுப்பைச் சேர்ந்தது. அதிக பட்சமாக 250 கிலோமீட்டர் வேகத்தில் எந்தவிதமான குலுக்கலுமில்லாமல் பறந்தது. நடுநடுவே பல ரயில்  நிலையங்களில் நிறுத்தம் இருந்தது. ஒன்பதரை மணிக்கு ரோம் வந்து சேர்ந்தது. ரயில் நிலையத்தின் வாசலிலேயே பஸ் நிறுத்தமும் கூட. ரயில் நிலையத்திலேயே ஒரு கடையில் பஸ் டிக்கட் வாங்கிக்கொண்டோம். ஹோட்டல் எதிரிலேயே இருந்த பஸ் நிறுத்தத்தில் இறங்கிக்கொண்டோம். ஹோட்டலின் வரவேற்பரையில் எங்கள் சாமான்களை விட்டுவிட்டு, ரோம்  நகரில் விட்டுப்போன இடங்களை சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.

ஹோட்டலின் பின் பக்கத்தில் ஒரு பத்து  நிமிடம் நடந்தால் மிக விஸ்தாரமான பியாசா நுவோனோ (PIAZZA NUONO) – பெரிய செவ்வக வடிவமான ஒரு கூடம். சுற்றுலாப் பயணிகள் சாரை சாரையாக கூடிக்கொண்டிருந்தனர். மத்தியில் நான்கு முக்கிய நதிகளின் நீரூற்று (FONTANA DEI QUATTRA FIUMI – Fountain of Four Rivers) 1651-ல் பெர்னினி என்ற பிரபல கட்டிடக் கலைஞரால் பத்தாவது இன்னொஸென்ட் போப்பின் அரண்மனக்கு எதிராக வடிவமைக்கப்பட்டது. ஆப்பிரிக்காவின் நைல், யூரோப்பின் டேன்யூப், இந்தியாவின் கங்கை மற்றும் தென் அமெரிக்காவின் பளாட்டா நதிக் கடவுள்களை குறிக்கும் இந்த நீருற்றை சுற்றி சுற்றுலாப் பயணிகளின் கூட்டம்.

 
 
அங்கங்கே கேளிக்கைக்காக மேஜிக் காட்டுபவர்கள். ஒருவர் அந்தரத்தில் யோகாவில் உட்கார்ந்திருந்தார். இன்னொருவரின் தலை கழுத்தைவிட்டு துண்டாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தது. எப்படி இந்த மேஜிக்கை அவர்கள் செய்திருப்பார்கள் என்று இன்று வரை புரியவில்லை.

அங்கிருந்து இன்னொரு ஐந்து நிமிட தூரத்தில் மிகப் பிரபலமான பேந்தியன். (PANTHEON) எல்லாக் கடவுள்களுக்குமாக கட்டப்பட்ட இந்தக் கோவில் கி.மு 27 – கி.பி 14 காலங்களில் அகஸ்டஸ் என்ற மன்னரின் ஆணையில் முதலில் கட்டப்பட்டு, பிறகு கி.பி 126-ல் ஹேட்ரியான் பேரரசரால் மீண்டும் கட்டப்பட்டது. (இதே போன்ற ஒரு பேந்தியன் கோவிலை அமெரிக்காவில் டென்னிஸி மாநிலத்தின் தலைநகரமான  நேஷ்வில் (NASHVILLE) என்ற இடத்தில் பிரம்மாண்ட வடிவில் கட்டியிருக்கிறார்கள்)
வட்ட வடிவமான இந்தக் கோவிலின் முகப்பில் கிரானைட் கற்களாலான எட்டு தூண்கள் முன் வரிசையிலும், நான்கு நான்காக அதன் பின் பக்கத்தில் இன்னும் எட்டு தூண்களும் தாங்கிக்கொண்டிருக்கின்றன. 142 அடி உயரமுள்ள கான்க்ரீட்டினால் கட்டப்பட்ட வட்ட வடிவமான மேற்கூரையின் மத்தியில் வானம் தெரிகிறார் போல மாதிரி ஒரு வாசல். ஆயிரம் ஆண்டுகளாக இந்தக் கட்டிடம் மிடுக்கோடு இன்றும் நின்று கொண்டிருக்கிறது. இதைப் பார்த்தபின்பு மனதில் ஒரு வருத்தம். நமது தமிழ்நாட்டில் பல ஊர்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் பல கோவில்களைப் சுற்றிப்பார்ப்பதற்கு எத்தனை சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர் என்பதை நினைத்துப் பார்த்தேன். சுற்றுலாவுக்காக நாம் ஒன்றுமே செய்வதில்லையோ என்றுதான் தோன்றுகிறது, நமது பண்டைய கலாச்சாரத்தை, நாகரீகத்தை, கலைவளத்தை வெளிப்படுத்தும் பல விஷயங்களைப் பற்றி நாம் அதிகமாக தெரிந்துவைத்துக் கொள்வதுமில்லை, மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதுமில்லை. முக்கியமாக நமது வீட்டில் குழந்தைகளுக்குச் சொல்வதுமில்லை.  

பேந்தியனிலிருந்து நேராக இம்மானுவேல் நினைவு மண்டபத்துக்கு (இன்றைக்கு ஒரு போர் நினைவுச் சின்னமாகத் திகழ்கிறது) நடந்தோம். ஒரு அரை மணி நேர தூரம். பியாஸா வெனிஸியாவுக்கும் கேபிடோலின் குன்றுக்கும் நடுவே அமைந்திருக்கும் இந்த கட்டிடம் ஒன்றிணைக்கப்பட்ட இத்தாலியின் முதல் மன்னரான இரண்டாம் விக்டரின் நினைவாகக் கட்டப்பட்டது. முழுவதும் வெள்ளை சலவைக் கற்களால் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் முகப்பு மிகமிக பிரம்மாண்டமாக தூரத்திலிருந்தே தெரிகிறது. 440 அடி அகலம் 230 அடி உயரம். 1885-ல் ஜோஸஃப் சக்கோனி என்பவரால் வடிவமைக்கப்பட்டு 1925-ல் மிகச் சிறந்த இத்தாலிய நிபுணர்களால் கட்டி முடிக்கப்பட்டது. புராதன சின்னமான கேபிடோலின் குன்றின் பல இடங்களை இந்த மண்டபம் விழுங்கிவிட்டதாக குறை கூறுபவர்களும் நிறைய உண்டு.  


அதன் பிறகு, கேபிடோலின் ம்யூசியம் பார்ப்பதற்குச் சென்றோம். இன்னும் சற்று தூரம் நடை. மைக்கேல் ஏஞ்செலோவால் 1536-ல் வடிவமைக்கப்பட்ட இந்த சதுரத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 400 ஆண்டுகள் எடுத்திருக்கிறது. கணக்கிலடங்காத அளவுக்கு பழங்காலத்து ரோமர்களின் சிலைகள், சிற்பங்கள், ஓவியங்கள், நகைகள், விலை மதிக்க முடியாத ஆபரணக் கற்களை இங்கே பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு சிலைக்கும், சிற்பத்திற்கும் அருகில் நின்று மணிக்கணக்காக நேரத்தை செலவிடலாம். எல்லாம் நேர்த்தியான சலவைக் கற்கள்.
சில சிற்பங்களின் அருகே செல்ல விடுவதில்லை. சில இடங்களில் ஃபோட்டோ எடுப்பதற்கும் அனுமதியில்லை. ஆனாலும், திருட்டுத்தனமாக எல்லோரும் ஃபோட்டோ எடுக்கிறார்கள். மார்க்கஸ் ஆரேலியஸ் (MARCUS AURELIUS) என்ற பேரரசரின் வெண்கலச் சிலை இங்கு ஒரு முக்கியமான சிலை. இதன் நகலை ம்யூசியத்தின் நுழைவில் வெட்டவெளியில் வைத்திருக்கிறார்கள். பழைய ரோமர்கள் காலத்தின் பல சிற்பங்களை மத விரோத காரணமாக மத்திய காலங்களில் அழித்து விட்டதாகப் படித்தேன்.  கிறிஸ்துவ மதத்தை ரோமர்களின் அங்கீகரிக்கப்பட்ட மதமாக ஏற்றுக்கொண்ட கான்ஸ்டன்டைன் என்ற மன்னரின் சிலை என்று நினைத்து, இந்த மார்க்கஸ் ஆரேலியஸின் சிலையை விட்டு வைத்திருக்கிறார்கள். சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலேயே இந்த ம்யூசியத்துக்குள்ளே நடந்து கால்கள் கெஞ்சின.

சிறிது நேரம் அங்கங்கே உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் ஹோட்டலுக்கு நடந்தோம். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி ரோம் நகரை மட்டும் பார்ப்பதற்கு ஒரு வாரத்துக்கு மேலேயே பிடிக்கும். ஒரு சில முக்கியமான இடங்களைப் பார்க்க முடியவில்லை.

ஸ்பெயின் படிக்கட்டுகள் (SPANISH STEPS)

ஸிஸ்டைன் சேப்பல் (SISTINE CHAPEL)

பியாஸா டெல் போப்போலோ (PIAZA DEL POPPOLO)

பியாஸா டெல் ரிபப்ளிக்கா (PIAZA DEL REPUBLICA) (பஸ்ஸில் போகும் பொழுது பார்த்ததுதான்)
போர்கீஸ் வில்லா (VILLA BORGHESE AND BORGHESE GARDEN)

புனித ஏஞ்செலோவின் கோட்டை (CASTLE SANT ANGELO)
பல பழமையான கிறிஸ்துவக் கோவில்கள் (BASCILLICA)

முடிந்தால் இன்னொரு முறை இத்தாலிக்கு வரலாம்தான். பத்தாவது நாள் மதியம் பன்னிரண்டு மணிக்கு எங்களுக்கு லண்டன் வழியாக சிகாகோ நகர் செல்வதற்கு விமான டிக்கெட் இருந்தது. நிறைய பணம் செலவழித்து இத்தாலியை ஒரளவு பார்த்து முடித்த திருப்தியோடு விமானம் ஏறினோம்.
முடிவுரை

ஊர் ஊராகச் சுற்றுவதில் எனக்கு மிகவும் விருப்பமுண்டு. இந்தியாவில் என் வேலை நிமித்தமாக பல இடங்களுக்கு மாற்றப்பட்டு ஊர் சுற்றியிருக்கிறேன். இந்தியாவில் பார்க்காத இடங்கள் மிகக் குறைவு. வெளிநாடுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, சுவிட்சர்லாந்து, இப்பொழுது இத்தாலி பார்த்திருக்கிறேன். இன்னும் பல இடங்களுக்கு போக வேண்டும் என்ற ஆசை இருந்துகொண்டே இருக்கிறது. பல இடங்களைப் போய் பார்ப்பதற்கு எனக்கு வசதி ஏற்படுத்திக்கொடுத்த இறைவனுக்கு மிக்க நன்றி. இன்னும் பல இடங்களை தொடர்ந்து பார்ப்பதற்கான ஆரோக்கியத்தையும் வசதியையும் கொடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. எல்லா பெருமையும் இறைவன் ஒருவனுக்கே.

இந்தத் தொடரை முடிப்பதற்கு முன், ஒரு சிறிய குறிப்பு: நான் ஏற்கெனவே சென்று வந்த YELLOW STONE NATIONAL FORESTS/GRAND TITON NATIONAL FORESTS, ALASKA, SWITZERLAND இடங்களைப் பற்றி ஆங்கிலத்தில் என்னுடைய BLOG-ல் எழுதியிருக்கிறேன். வெகு சிலர் மட்டுமே படித்திருக்கிறார்கள். ஆனால், இத்தாலியைப் பற்றி நான் தமிழில் எழுதியதை உலகில் பல இடங்களிலிருந்து, முக்கியமாக அமெரிக்கா, யூரோப், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலிருந்து மிக அதிக மக்கள் படித்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதினால் மக்கள் படிப்பதில்லையோ என்று தோன்றுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குச் சொன்னால் எதிர்காலத்தில் எழுதுவதற்கு ஊக்கமாக இருக்கும். கண்டிப்பாக உங்களுடைய கருத்தை எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு

டீ.என்.நீலகண்டன்
www.tnneelakantan.com
 

 

No comments:

Post a Comment