“உன்னையே நீ எண்ணிப்பார்” – சாக்ரடீஸ்
உங்கள் திறமைகளை கண்டுகொள்ளுங்கள்
நமது
அபிப்பிராயங்கள் நமது பெர்ஸனாலிடியை தீர்மானிப்பதில்
மற்ற காரணக்கூறுகளை விட மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதைப் பார்த்தோம். நமது அபிப்பிராயங்கள்
இல்லாமல், நாம் இல்லை. “நான்” என்பதே என்னுடைய ஒரு அபிப்பிராயம்தான். நான் என்னைப்
பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டிருக்கின்றேனோ அதாகவேதான் நான் இருக்கிறேன்.
நமது
அபிப்பிராயங்களை மாற்றியமைக்க பல வழிமுறைகள் இருப்பதாக கூறப்பட்டாலும் எனக்குத் தெரிந்த,
எனக்குப் பலன் கொடுத்த சில்வா ஜோஸின் 3-2-1 என்கிற ஒரு வழிமுறையையும் உங்களுக்கு சொல்லிவிட்டேன்.
அடுத்து நாம் பார்க்க
இருப்பது சுய அறிவைப் பற்றி.
நம்
வலிமை என்ன, நம் பலவீனம் என்ன, நம்மை எதிர் நோக்கியிருக்கும் வாய்ப்புகள் என்னென்ன,
நம்மை சூழ்ந்திருக்கும் அச்சுறுத்தல்கள் என்னென்ன என்பதைப் பற்றிய ஒரு புரிதல் ஒருவருக்கு
மிக முக்கியம். ஆங்கிலத்தில் இதை STRENGTHS, WEAKNESSES, OPPORTUNITIES AND
THREATS (SWOT) என்கிறார்கள்.
SWOT என்கிற இந்த சுய ஆய்வைப் பற்றி இதே “மாணவர்
உலகம்” ஆகஸ்ட், 2013 மாத இதழில் மிக அருமையாக திரு. சுரேஷ்குமார் அவர்கள் எழுதியிருக்கிறார். இதில் – முக்கியமாக
- நம் வலிமையைப் பற்றி நான் இன்னொரு கோணத்திலிருந்து பார்த்து இப்பொழுது உங்களுக்கு
கொடுக்கப் போகிறேன்.
பொதுவாக
பலருக்கும் அவர்களுடைய வலிமை என்ன என்பதே தெரிவதில்லை. அப்படியே தெரிந்திருப்பதாக நினைத்தாலும்
அது ஒருதலை பட்சமாக அமைந்து விடுகிறது. மேலும், பெரும்பாலானோர் அவர்களுடைய இயலாமையைப்
பற்றியே அதிகம் சிந்தித்துப்பார்த்து சோர்ந்துவிடுகிறார்கள். அதனால் அவர்களுக்கிருக்கும்
ஆற்றல்கள்கூட பயனற்றதாகப் போய்விடுகிறது.
இன்று,
பெற்றோர்களிடையே தங்கள் குழந்தைகள் எல்லா துறைகளிலும் தேர்ச்சியடைந்தவர்களாக இருக்க
வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மையுடைய
ஒரு பிறவி என்ற நினைப்பு பொதுவாக இருப்பதில்லை. இந்த எதிர்பார்ப்புகளே மாணாக்கர்களின்
மன அழுத்தத்திற்கு முக்கிய காரணம். போட்டி, பொறாமை, மன உளச்சல் போன்ற பல எதிர்மறை மனோ
வியாதிகளுக்கு இந்த எதிர்பார்ப்பு காரணமாகிறது.
ஆனால்
வெற்றியின் ரகசியமே நமது ஆற்றல்களை அறிந்து கொள்வதிலும், அதையொட்டி நமது வாழ்க்கையை
அமைத்துக் கொள்வதிலும்தான் இருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தனித்தன்மையும்,
ஆற்றலும் இருக்கிறது. நமக்குத்தான் தெரிவதில்லை. தெரிந்தாலும் அதை நம்ப மறுக்கிறோம். இதில், பெற்றோர்களின் பங்கும் ஒத்துழைப்பும் மிகவும்
அவசியம். பெரும்பாலும், பெற்றோர்கள் தங்களால் அடைய முடியாததை தங்கள் குழந்தைகள் மூலம்
அடைந்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதில் தவறில்லைதான். ஆனால், நம் ஆசைகளை
முழுவதுமாக நமது குழந்தைகள் மீது திணிக்கும்பொழுது, அவர்களுக்கு தங்களின் சுயமான ஆர்வத்தை,
தனித்திறமையை வெளிப்படுத்த அல்லது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள்
கிடைக்காமல் போகிறது. அவர்களுக்கு மன அழுத்தம் கூடுகிறது.
No comments:
Post a Comment