“ஒரு மனிதருக்கு என்னதான் திறமையிருந்தாலும், தன்னைத்தானே ஊக்குவித்துக்கொள்ளும் சுய தூண்டுதல் அவருக்கு இல்லையென்றால் ஒரு சாதாரண வாழ்க்கையோடு அவர் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.” – ஆன்ட்ரூ கார்னெகி
மிகச் சாதாரணக் குடும்பத்தில்
பிறந்து சுயமாக முன்னேறி மிகப் பெரிய தொழிலதிபராகவும் கொடையாளியாகவும் பெயர் பெற்றவர்
19-ஆம் நூற்றாண்டின்
ஆன்ட்ரூ கார்னெகி.
பிறப்பும் வளர்ப்பும்
1835-ல் ஸ்காட்லாந்தில்
ஒரு நெசவாளித் தந்தைக்கும் செருப்பு தைத்துக்கொடுக்கும்
தொழிலில் உதவியாளராக இருந்த ஒரு தாய்க்கும் இரண்டாவது மகனாக பிறந்த ஆன்ட்ரூகார்னெகி பள்ளியில் படித்ததென்னவோ ஒரு சில ஆண்டுகள்தான்.
1848-ல் தன்னுடைய பதிமூன்றாம் வயதில்
தன் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு குடிபுகுந்த கார்னெகி, பென்சில்வேனியா மாநிலத்தில்
தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். ஒரு பருத்தி ஆலையில் ஒரு-டாலர்-இருபது-சென்ட் வாரச்
சம்பளத்திற்கு வேலை பார்க்கத் தொடங்கி அடுத்த ஆண்டில் தபால் தந்தி தூதராக வேலை தேடிக்கொண்டார்.
1851 தபால் தந்தி இயக்குபவராக பதவி உயர்வு பெற்றார். 1853-ல் ரயில்வே துறைக்கு மாறியபோது
தாமஸ் ஸ்காட் என்கிற மேற்பார்வையாளருக்குக் உதவியாளராகவும் தந்தியாளராகவும் வேலை பார்த்தார்.
இந்த சமயத்தில் ரயில்வேத் துறையைப் பற்றி நிறையக்
கற்றுக்கொண்டார். மூன்று வருடங்களில் 1861-ல் இவரே
பிட்ஸ்பெர்க் ரயில்வேயில் ஒரு மேற்பார்வையாளராக பதவி உயர்வும் அடைந்தார்.
அதே சமயத்தில்தான் எட்வின் எல்ட்ரேக்
என்பவர் அருகிலுள்ள டிடுஸ்வில் என்கிற இடத்தில் எண்ணை இருப்பதைக் கண்டுபிடித்தார்.
எண்ணை வளம் பல புதிய முதலீடு செய்பவர்களை ஈர்த்தது. அதில் வில்லியம் கோல்மேன் என்பவரும்
ஒருவர். இவர் ஏற்கெனவே இரும்பு மற்றும் நிலக்கரிச் சுரங்களில் முதலீடு செய்து பெரும்
பணக்காரரானவர். கார்னெகியை தன்னுடைய எண்ணை வியாபாரத்தில் முதலீடு செய்யுமாறு கோல்மேன்
அழைத்தார். கார்னெகியும் ரயில்வேயில் சம்பாதித்து சேமித்த பணத்தை அப்படியே எண்ணைத்
தொழிலில் முதலீடு செய்து பல மடங்கு லாபம் சம்பாதித்தார். 1865-ல் தன்னுடைய
ரயில்வே வேலையை உதறித்தள்ளிவிட்டு சொந்தமாக தொழில் செய்வதற்கு முனைந்தார். தான் ஏற்கெனவே
சம்பாதித்ததை தன் சொந்த வியாபாரத்தில் மீண்டும் முதலீடு செய்தார்.
வியாபாரத்தில் வளர்ச்சி
பென்சில்வேனியா ரயில்வேயின் புதிய
தலைவராக எட்கர் தாம்ஸன் என்பவர் பதவி ஏற்ற பொழுது, அவருடனும் நல்ல உறவை ஏற்படுத்திக்கொண்டார்.
தன் பழைய மேற்பார்வையாளரான தாமஸ் ஸ்காட்டுடனும் கொண்ட நல்லுறவையும் பயன்படுத்திக்கொண்டார்.
அமெரிக்க உள்நாட்டுப் போர் காலக் கட்டத்தில் மரத்தினாலான பல ரயில் பாலங்கள் பழுதடைந்து
அழுகிப்போகியிருந்தன. இந்தப் பாலங்களை இரும்பினாலான பாலங்களால் மாற்றியமைக்கத் தீர்மானித்திருந்தனர்.
அந்த வேலையை செய்து முடிக்கும் ஒப்பந்தம் கார்னெகிக்கு
கிடைத்தது. தாம்ஸனுடனும் ஸ்காட்டுடனும் இணைந்து இரும்புப் பாலங்கள் தயாரிக்க ஒரு புதிய
நிறுவனத்தை கார்னெகி தொடங்கினார். அந்த சமயத்தில் தாம்ஸனும் ஸ்காட்டும் ரயில்வேயில்
தொடர்ந்து வேலை பார்த்து வந்ததால். அவர்களுடைய உதவியாலும், மற்றும் பல பழைய நண்பர்களின்
உதவியாலும், மேலும் பல தில்லுமுல்லுகள் செய்தது மூலமும், நிறைய பாலங்கள் அமைப்பதற்கான
ஒப்பந்த வேலை கார்னெகிக்கு கிடைத்தது. வியாபாரம் செழித்தது.
இரும்புத் தொழிலின் தந்தையாக கருதப்பட்ட
ஹென்றி பெஸ்ஸிமெர் என்பவரை முதன் முதலாக ஐரோப்பாவில் 1872-ல் சந்தித்தார்.
கார்னெகி ஒரு இன்ஜினியர் அல்ல. ஆனால், ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட தொழில் நுணுக்கங்களை
செயல்படுத்துவதில் மிகவும் திறமைசாலி. பெஸ்ஸிமரைக் கையில் போட்டுக்கொண்டார். தனது தொழிலுக்கு
அவரை மூளையாக பயன்படுத்திக்கொண்டார். பெஸ்ஸிமருக்கும் தான் ஒரு விற்பனையாளராக செயல்
புரிந்தார். பெஸ்ஸிமரின் உதவியோடு மிகத் தரம் வாய்ந்த எஃகு தயாரிக்கும் தொழிற்சாலைகளை
நிறுவினார். கிடைத்த லாபத்தை பணப்பத்திரம் வாங்கி விற்கும் சூதாட்ட விளையாட்டில் முதலீடு
செய்து பெரும் பணம் சம்பாதித்தார்.
அமெரிக்க உள்நாட்டுப் போரின் பொழுது
போர் தளவாடங்களை எடுத்துச் செல்ல ரயில் பாதையை பயன்படுத்தினர். அப்பொழுதிருந்த ரயில்
தண்டவாளங்கள் வார்ப்பிரும்பில் செய்யப்பட்டிருந்ததால் துருப்பிடித்து உடைந்துபோகும்
தன்மையுடையதாக இருந்தன. எஃகினால் தயாரிக்கப்பட்டால் நல்ல உறுதியாக இருக்கும் என்று
ரயில்வேயில் கார்னெகியின் பழைய மேற்பார்வையாளர் தாம்ஸன் கருதினார். அந்த சந்தர்ப்பத்தையும்
நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட கார்னெகி பிட்ஸ்பர்க்குக்கு மீண்டும் திரும்பி வந்து வில்லியம்
கோல்மேனுடன் கூட்டு சேர்ந்து உயர் ரக எஃகு தயாரிக்கும் புதிய தொழிற்சாலையை பெஸ்ஸிமரின்
தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவினார். இரும்புத் தொழிற்சாலைகளின் தந்தையாக பெஸ்ஸிமர்
பல தொழிற்சாலைகளை நிறுவியிருந்தாலும் பிட்ஸ்பர்க்கில் ஒன்று கூட அவருடைய தொழிற்சாலையாக
இல்லாமலிருந்தது. போட்டிக்கு வேறு ஆளில்லை. இரண்டு வருடங்களில் எட்கர் தாம்ஸன் எஃகு
தொழிற்சாலை உற்பத்தியைத் தொடங்கியது. அந்த இடத்திலிருந்து கார்னெகியின் இரும்பு சாம்ராஜ்யம்
எந்த தடையுமில்லாமல் மேலும் மேலும் வளர்ச்சி பெறத் தொடங்கியது.
இரும்பின் தேவை குறைந்த பொழுதும்
மற்றவர்களைப் போல் உற்பத்தியைக் குறைக்காமல் அதிகப்படுத்தினார். மிகப் பெரிய அளவில்
உற்பத்தி செய்ததாலும், வியாபாரத்தின் ஆதாய அளவைக் குறைத்தும் கூட்டியும் மிகப் பெரிய
ஒப்பந்தங்களை கார்னெகியால் எடுக்க முடிந்தது. கிடைக்கும் லாபத்தை மீண்டும் மீண்டும்
தொழிலை அபிவிருத்தி செய்வதிலேயே முதலீடு செய்தார். போட்டியாக இருந்த மற்ற பல தொழிற்சாலைகளையும்
அவரே விலை கொடுத்து வாங்கி தனக்கு போட்டியில்லாமல் பார்த்துக்கொண்டார்.
இரும்புத் தொழிலுக்குத் தேவையான
கச்சாப் பொருட்கள், அவற்றைக் கொண்டு செல்வதற்கு கப்பல்கள், ரயில் வண்டிகள், இரும்பாலைகளுக்குத்
தேவையான நிலக்கரிச் சுரங்கங்கள் போன்ற எல்லாமே தன் வசம் இருக்குமாறு பார்த்துக்கொண்டார்
. . அதனால், இரும்புத் தொழிலில் ஒரு மிகப் பெரிய சக்தியாக அவரால் வளர முடிந்தது. அமெரிக்காவிலும்
ரயில்வே மிகப் பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருந்தது. பல அமெரிக்கர்கள் கிழக்குக் கடற்கரையோரப்
பகுதிகளிலிருந்து மேற்கே குடிபெயர்ந்து கொண்டிருந்தனர். இரும்பை மிக அதிகமாக அமெரிக்காவின்
ரயில்வே பயன்படுத்தியது அந்த சூழ்நிலையை தனக்குச் சாதகமாக்கிக்கொண்டார். அவரது தொழில்
என்றும் காணாத அளவு வளர்ச்சியைக் கண்டது. 1889-வாக்கில்
“கார்னெகி இரும்புக் கழகம்” உலகிலேயே மிகப் பெரிய ஒரு தொழில் நிறுவனமாக முன்னேறியது.
1900-வாக்கில்
இங்கிலாந்தில் உற்பத்தியான மொத்த இரும்பை விட மிக அதிகமாக கார்னெகியின் தொழிற்சாலைகள்
உற்பத்தி செய்துகொண்டிருந்தன. அமெரிக்காவை உருவாக்கிய மனிதர்களில் கார்னெகி ஒரு முக்கிய
மனிதராக கருதப்படுவதற்கும் இதுவே காரணமானது.
கார்னெகிக்கு ஏற்பட்ட
கறை
கார்னெகிக்கு கிடைத்த செல்வம்
அவருடைய உழைப்பினாலும், புத்திசாலித்தனத்தினாலும் மட்டுமே கிடைத்துவிடவில்லை. தொழிலாளர்களை
கசக்கிப் பிழிந்தும் அவர்களுடைய ஊதியத்தைக் குறைத்தும் அதிக நேரம் வேலை வாங்கியதாலும்
கிடைத்தது என்ற அவதூறு உண்டு. .
1882-ல் கார்னெகியின்
ஹோம்ஸ்டெட் எஃகுத் தொழிற்சாலையில் தொழிலாலர்களின் ஊதிய ஒப்பந்தம் முடிவடையும் சமயத்தில்
தொழிலாளர்கள் சங்கங்களின் செல்வாக்கைக் குறைக்கும் நோக்கத்துடனும், எஃகு உற்பத்தி செய்யும்
செலவைக் குறைக்கும் வழியாகவும் தொழிலாளர்களின் ஊதியத்தை மிக அதிகமாகக் குறைத்தார்.
தொழிலாளர்களின் சங்கம் இந்த ஊதியக் குறைப்பை ஒத்துக்கொள்ளவில்லை. லாபத்திலும் பங்கு
கேட்டு போராடினர். ஹோம்ஸ்டெட் எஃகுத் தொழிற்சாலையின் முதன்மை மேற்பார்வையாளரான ஹென்றி
க்ளே ஃப்ரிக் தொழிற்சாலையை இழுத்து மூடி தொழிலாளிகளை வீட்டுக்கு அனுப்பினார். தொழிற்சாலையைச்
சுற்றி உயரமான இரும்பு முட்கம்பி வேலியமைத்தார் உயரமான கூண்டுகளை அமைத்து தொழிற்சாலைக்கு
எந்த பாதகமும் வந்துவிடாமல் காப்பதற்கு துப்பாக்கியேந்திய பாதுகாவலர்களை அமர்த்தினார்.
ஆனால், பாதுகாவலர்களின் ஒரு குழு தொழிற்சாலைக்கு வரும் வழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த
தொழிலாளர்களுடன் ஏற்பட்ட மோதலில் பலர் குண்டடி பட்டு இறந்தனர். இது நடந்த சமயத்தில்
கார்னெகி ஸ்காட்லாந்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். இருந்தாலும் தன்னுடைய மேலாளர்
எடுத்த முடிவை ஆதரித்தார். முடிவில் கார்னெகியே வென்றார். தொழிலாளிகளுக்கு ஊதியக் குறைப்பை
செயல்படுத்தினார். தொழிலாளர் சங்கங்கள் மூடப்பட்டன. இந்த வெற்றி கார்னெகிக்கு அவப்பெயரைத்தான்
தேடித் தந்தது. அவருடைய கடுமையான நடவடிக்கைகளால் அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு தொழிற்ச்
சங்கங்களின் நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டன.
கார்னெகியின் பொதுநலச்
சேவை
1848-ல், ஸ்காட்லாந்திலிருந்து
ஒரு நெசவுத் தொழிலாளியின் மகனாக ஒரு பென்னி கூட இல்லாமல் அமெரிக்கா வந்திறங்கிய கார்னெகி,
1863-ல், தன்
தொழிலை ஆரம்பித்த சமயத்தில் அவருடைய வருமானம் ஆண்டுக்கு 50000
அமெரிக்க
டாலர்களாக இருந்தது. (இன்றைக்கு சுமார் ஒரு மில்லியன்) 1901-ல் தன்னுடைய
65-ஆம் வயதில்
மொத்த இரும்பு வியாபாரத்தையும் ஜே.பி.மோர்கனுக்கு 480 மில்லியன்
டாலர்களுக்கு (இன்றைக்கு 13 பில்லியன்) விற்ற போது அமெரிக்க
வர்த்தகத்தில் அன்று வரை இருந்த பரிவர்த்தனையில் அதுதான் மிகப் பெரியதாகப் பேசப்பட்டது.
அதன் பிறகு அவருடைய நேரத்தையும் செல்வத்தையும் பொது நலத்துக்காகவும் நன்கொடைகளுக்காகவுமே-
முக்கியமாக பல நூலகங்களுக்காக - கார்னெகி செலவிட்டார்.
- 1901-ல் நியூயார்க் பொது நூலக வளர்ச்சி மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்காக ஐந்து மில்லியன் டாலர்களை நன்கொடையாகக் கொடுத்தார்.
- 1904-ல் பிட்ஸ்பர்க்கில் கார்னெகி தொழிற்கல்வி நிறுவத்தை தொடங்கினார். அது இன்றும் கார்னெகி - மெலன் பல்கலைக்கழகம் என்ற பெயரில் மிகப் பிரபலமாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
- 1905-ல் கற்றுக்கொடுக்கும் முறைகளைப் பலப்படுத்துவதற்காக CARNEGIE FOUNDATION FOR THE ADVANCEMENT OF TEACHING என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.
- உலக அமைதியில் மிகவும் நாட்டம் கொண்ட அவர் 1910-ல் CARNEGIE ENDOWMENT FOR INTERNATIONAL PEACE என்ற நிறுவனத்தையும் தொடங்கி வைத்தார்.
- அவருடைய பண உதவியால் 2800-க்கும் மேற்பட்ட நூலகங்கள் திறக்கப்பட்டன.
- பல சர்ச்சுகளுக்கு 7500-க்கும் மேற்பட்ட ஆர்கன் என்ற வாத்தியக் கருவிகளை நன்கொடையாகக் கொடுத்தார்.
அவருக்கு தொழில் மற்றும் பொது நலத்தொண்டுகளின் மீதுள்ள ஈடுபாட்டைத் தவிர பல
இடங்களைச் சுற்றிப்பார்ப்பதிலும் பிரபலமான நபர்களுடன் தொடர்புகொண்டு நட்பு ஏற்படுத்திக்
கொள்வதிலும் மிகவும் ஆர்வம் இருந்தது. மாத்யூ ஆர்னால்ட், மார்க் ட்வெயின், வில்லியம்
கிளாட்ஸ்டோன், தியோடர் ரூஸ்வெல்டு போன்ற மிகப் பிரபலமானவர்களுடன் நட்புக் காட்டினார்.
1889-ல் அவர் எழுதிய “செல்வம்”
பற்றிய கட்டுரை மிகப் பரவலாகப் பேசப்பட்டது. பின்னர் இதுவே ‘GOSPEL OF WEALTH’ (செல்வத்தின் சுவிசேஷம்) என்ற பெயரில் ஒரு புத்தகமாக
வெளியிடப்பட்டது. இதைத் தவிர பல நூல்களை எழுதிய பெருமையும் அவருக்கு உண்டு.
இவரைப் பற்றிய ஒரு உபரிச் செய்தி. அமெரிக்க உள் நாட்டுப் போரின் போது ராணுவத்தில்
சேர இவருக்கு உத்திரவு வந்தபொழுது ராணுவத்தில் சேர விருப்பமில்லாமல் இன்னொருவருக்கு
850 அமெரிக்க டாலர்களைக் கொடுத்துத் தனக்குப் பதிலாக பணியாற்ற அனுப்பினார் என்று
கேள்வி. அந்தக் காலத்தில் இது ஒரு வழக்கம்தான் என்றும் கேள்வி.
இரும்புத் தொழிலின் தந்தையாக மதிக்கப்பட்ட
ஹென்றி பெஸ்ஸிமரின் பெயர் பிரபலமாகாவிட்டாலும் அவருடைய யோசனைகளை நன்கு பயன்படுத்திக்கொண்ட
கார்னெகி தன்னுடைய பரோபகாரத்தால் உலகம் முழுவதும் மிக அதிகமாகப் பேசப்பட்டார். கார்னெகி
தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் பரோபகாரக் காரியங்களுக்காக செலவிட்டதோடல்லாமல் தன்னைப்
போன்ற மற்ற செல்வந்தர்ககளையும் நல்ல காரியங்களுக்கு தங்கள் செல்வத்தை செலவிடச் சொல்லி
வற்புறுத்தினார். அந்த காலத்தில் பல அமெரிக்கர்கள் வறுமையில் வாடிக்கொண்டிருந்தனர்.
“உலகின் பல மக்களிடையே காணும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீக்கி உண்மையான சகோதரத்துவம்
உண்டாகவேண்டுமென்றால் பெரும் பணக்காரர்கள் தங்கள் சொத்துக்களை ஏழைகளுக்காக செலவிடத்
தயாராக இருக்கவேண்டும். எளிமையான ஆடம்பரமில்லாத வாழ்க்கையை பெரிய பணக்காரர்கள் நடத்திக்காட்ட
வேண்டும்” என்ற சித்தாந்தத்தை அறை கூவினார்.
1916-ல் உலகின்
முதல் கோடீஸ்வரர் (பில்லியனைர்) என்று பெயர் பெற்றவர் ராக்ஃபெல்லர். அவரையும் சேர்த்து
அமெரிக்காவின் மற்ற பல பணக்காரர்களுக்கு கார்னெகியின் அறிவுரை பிடிக்கவில்லை. தன் தொழிலாளிகளை
நசுக்கி பிழிந்தெடுத்து சேர்த்த செல்வத்தைத்தான் கார்னெகி பொது நலத்துக்குச் செலவழிக்க
முனைந்தார் என்று குறைபட்டுக்கொண்டனர். கார்னெகி தன்னுடைய பெரும் செல்வத்தை மக்கள்
தங்களை சுயமாக முன்னேற்றிக்கொள்ள ஏதுவான வழிகளுக்காக மட்டுமே செலவிட்டார். பணத்தை வாரியிறைத்துவிடவில்லை.
அதனால் கல்விக்காகவும், பொது நூலகங்களுக்காகவும், ஸ்காட்டிஷ் பல்கலைக் கழக மாணாக்கர்களுக்கு
இலவச வகுப்புகளுக்காகவும் செலவிட்டார். பல ஆராய்ச்சி நிறுவனங்கள், இசை வளர்க்கும் ஆடிட்டோரியங்கள்,
கலைக்கூடங்கள், போன்றவற்றை தொடங்கி வைத்தார். போட்டியாளராக இருந்தாலும் ராக்ஃபெல்லர்
அவர்கள் இவருடைய பொதுப் பணியைப் பாராட்டி, “உங்களுடைய முன்னுதாரணம் எங்களுக்கெல்லாம்
சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.” என்று கூறினார்.
ஒரு மனிதன் இறுதியில் என்ன சாதித்தான்
என்பதைத்தான் உலகம் இன்றும் என்றும் நினைவு கொள்கிறது. அவன் அதை எப்படி சாதித்தான்
என்பதை பொதுவாக மறந்து விடுகிறது என்பதற்கு ஐந்தடி மூன்றங்குலம் உயரமே இருந்த கார்னெகியின்
வாழ்க்கை ஒரு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.
கார்னெகியின் முன்னேற்றத்தில்
முக்கியப் பங்கு வகித்த அவரது தாயார் அவருடனேயே இறுதி வரை வசித்து வந்தார். 1886-ல் தாயார்
இறந்த பிறகு தனது 51-ஆவது வயதில் தன்னைவிட இருபது வயது
இளைமையான, இன்னொரு தொழிலதிபரின் மகளை மணம்
புரிந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருந்தாள். மிகப் பெரிய செல்வந்தர்கள் வசிக்கும்
நியூயார்க்கில் மேன்ஹேட்டன் என்ற பகுதியில் வசித்து வந்தார்.. கோடைகாலத்தில் தன்னுடைய
28000 ஏக்கர்
பரப்பளவுடைய ஸ்காட்லாந்து பண்ணையில் செலவிட்டார். கார்னெகி ஆகஸ்டு 1919-ல் மாதம்
காலமானார்.
No comments:
Post a Comment