Pages

Sunday, July 20, 2014

தெரிந்ததும் தெரியாததும்: குட்டென்பெர்க்கின் அச்சு இயந்திரம்

முன்னுரை

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் உலகையே புரட்டிப்போட்ட விஷயங்களில் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதைக் கண்டுபிடித்தவர் ஜோஹன்ஸ் குட்டென்பெர்க். இவர் 14-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் மெயின்ஸ் நகரில் பிறந்தவர். தொழில்முறையில் ஒரு கொல்லன்.  தங்க ஆசாரி.  20-ஆம் நூற்றாண்டு வரை எந்தவிதமான பெரும் மாற்றமும் இல்லாமல்  தொடர்ந்து பயன்படுத்தப்படும்  “அசையும் முறையில் அச்சடிக்கும் இயந்திரத்தை" (MOVEABLETYPE PRINTING) கண்டுபிடித்தவர்.

அச்சடிக்கும் தொழிலின் சரித்திரம்

மரக்கட்டைகளை பயன்படுத்தி எழுத்துக்களையும், உருவங்களையும் அச்சடிக்கும் முறையில் துணிகளிலும், பின்பு காகிதத்திலும் அச்சடிக்கும் தொழில்நுட்பம் முதன் முதலாக சைனாவில் கி.பி 220-லேயே இருந்திருக்கிறது. . 

ஒன்பதாவது நூற்றாண்டில் காகிதத்தில் அச்சடிப்பது நடைமுறைக்கு வந்திருக்கிறது. முழுவதுமாக காகிதத்தில் கி.பி.868-ல் அச்சடிக்கப்பட்ட முதல் புத்தகமானவைர சூத்திரங்கள் ப்ரிட்டிஷ் பொதுநூலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது

அச்சடிக்கும் தொழில்நுட்பம் பின்பு கொரியா, ஜப்பான், வியட்னாம்,, பாரசீகம் மற்றும் ரஷ்யாவுக்கும் பரவியிருக்கிறது. ஆனால், அரபு நாட்டுக்காரர்கள் குர்ரானை அச்சடிக்கவில்லை.
ஒன்பதாம்-பத்தாம் நூற்றாண்டுகளில் எகிப்தில் ப்ளாக் பிரிண்டிங் (BLOCK PRINTING) என்ற அச்சடிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மரம் தவிர்த்து களிமண், ஈயம் மற்றும் தகரக் கட்டைகளில் அச்சு வடித்திருக்கிறார்கள். ஆனால், ஆரம்ப காலங்களில் அரபு நாடுகளுக்கு வெளியே இந்த முறை பரவவில்லை. .

ப்ளாக் பிரிண்டிங் முறை முதலில் ஐரோப்பாவில் துணிகளில் அச்சடிக்க கி.பி 1300-களில் வந்தது.
அசையும்  முறையில் அச்சடிக்கும் உத்தி முதன் முதலாக சைனாவில் 1040-ல் கொண்டு வரப்பட்டது. ஆரம்பத்தில் களிமண்ணையும் பின்பு 12-ஆம்  நூற்றாண்டில் செப்பு உலோகத்தையும் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். செலவாணி நோட்டுக்கள் அச்சடிக்க வடக்கு சைனாவில் காகிதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 1230-ல் வெண்கலத்தைப் பயன்படுத்தி அசையும் அச்சை கொரியாவில் கண்டுபிடித்திருக்கிறார்கள். .

குட்டென்பெர்க் கண்டுபிடிப்பின் தனிச்சிறப்பு 
·        உருவம் அல்லது வார்ப்பு (MOULD),
·        அச்சின் முகவாயை உருவாக்கும் உலோக பட்டகம் (PRISM),
·        இவற்றைப் பயன்படுத்தி   துல்லியமாக, அதிக அளவில் அச்சு தயாரிக்கக்கூடிய தொழில் நுட்பம்,
·        அச்சு-உலோக கலவை,
·        விவசாயத்திலும், ஒயின், மற்றும் காகிதம்  தயாரிப்பிலும், மற்றும் புத்தகம் கட்டமைப்பிலும் பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தை ஒட்டிய மரத்தினாலான ஒரு புதிய அச்சு இயந்திரம், மற்றும்
·        எண்ணெய் கலப்பில் தயாரிக்கப்பட்ட  அச்சடிக்கும் மை

இவைகள்தான் குட்டென்பெர்க்கின் அச்சடிக்கும் முறையின் தனிச்சிறப்புக்கள். இவற்றில் எதுவுமே சீனா, கொரியா மற்றும் ஐரோப்பாவில் ஏற்கெனவே இருந்த அச்சுமுறைகளில் இருந்ததில்லை.  

இவரது கண்டுபிடிப்பு மத்திய காலத்தில்  நிரந்தரமான ஒரு பெரும் மறுமலர்ச்சியையும், விஞ்ஞானப் புரட்சியையும் ஒரு புதிய அறிவு சார்ந்த  வளரும்-யுகத்தையும்  பொருளாதாரத்தையும் உருவாக்க காரணமாகியது. எல்லா மக்களுக்கும் கல்வியை கொண்டுபோய் சேர்த்து ஒரு புதிய சமுதாயத்தையே உருவாக்கியது. 

குட்டென்பெர்க்கின் ஆரம்ப வாழ்க்கை

குட்டென்பெர்க்கின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைவான தகவல்களே கிடைத்திருப்பதால் பொதுவாக  இவரைப் பற்றிய தகவல்கள் எல்லாமே வெறும் யூகம்தான். ஜெர்மனியில் மெயின்ஸ் நகரத்தில் ஒரு மேற்குடி குடும்பத்தில்  பிறந்தவர்1398 என்று உத்தேசம். . 14-ஆம் 15-ஆம் நூற்றாண்டுகளில் இவரது சந்ததியர் கிறிஸ்துவ  பாதிரியார்களுக்கு நாணயம் தயாரிக்கும் ஆஸ்தான தங்க ஆசாரிகளாக பரம்பரை பரம்பரையாக வேலை பார்த்து வந்திருப்பதனால், குட்டென்பெர்க்கின் தந்தையும் ஒரு தங்க ஆசாரியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று யூகிக்கிறார்கள்.

1411-ல் மெயின்ஸ் நகரத்தில் பாதிரியார்களுக்கு எதிராக நடந்த ஒரு எழுச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேறியபோது குட்டென்பெர்க் குடும்பமும் அல்டா வில்லா என்ற வேறொரு இடத்தில் அவரது தாய்க்கு சொந்தமான ஒரு தோட்டத்திற்கு இடம் பெயர்ந்தது. 1430-வாக்கில் அரசியல் நிலமை காரணங்களுக்காக ஸ்ட்ராஸ்பர்க் என்ற மற்றோரு ஊருக்கு மீண்டும் இடம் பெயர்ந்தனர்.  குட்டென்பெர்க் எர்ஃபர்ட் பல்கலைக் கழகத்தில் படித்தார் என்றும் தகவல்.

அடுத்த பதினைந்து ஆண்டுகள் அவர் என்ன செய்தார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. ஸ்ட்ராஸ்பர்க் ராணுவத்தில் ஒரு தங்க ஆசாரியாக வேலைக்குச் சேர்க்கப்பட்டார். ரத்தினக் கற்களை மெருகூட்டும் கலையை பல பணக்கார வியாபாரிகளுக்கு குட்டென்பெர்க் சொல்லிக்கொடுத்திருக்கிறார். ஆனால், அந்தக் கலையை எப்படி அவர் கற்றுக்கொண்டார் என்பது தெரியவில்லை

அச்சு இயந்திரம்

1439-ல் ஆசென் என்ற புனிதத் தலத்துக்கு வரும் யாத்ரீகர்களுக்கு விற்பனை செய்வதற்காக மெருகூட்டப்பட்ட உலோகக் கண்ணாடிகள் தயாரிக்கும் ஒரு வீணான முயற்சியில் குட்டென்பெர்க் இறங்கினார். இறந்து போன மத குருமார்கள் விட்டுப்போனப் பொருட்களிலிருந்து வெளிப்படும் ஒளியைக் கவரும் தன்மையுடையது இந்தக் கண்ணாடிகள் என்று மக்கள் நம்பினர். அந்த ஆண்டில் ஆசென் நகரம் சார்லே மாக்னே என்ற பேரரசரின் பொக்கிஷத்திலிருந்த  இறந்த புனிதர்கள் பலரின் விட்டுப் போன பொருட்களைக் காட்சிக்கு வைப்பதாக இருந்தது. ஆனால் வெள்ளப்பெருக்கின் காரணமாக அது ஒரு ஆண்டுக்குத்  தள்ளிப்போடப்பட்டது. அதனால், உலோகக் கண்ணாடிகளுக்காக முதலீடு செய்தவர்களின் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் குட்டன்பெர்க் திண்டாடினார். முதலீடு செய்தவர்களுக்கு ஒரு ரகசியத்தைப் அவர்களுடன் பங்கு கொள்வதாக அப்பொழுது அவர் வாக்களித்தார். அந்த ரகசியம் அவருடைய அச்சு இயந்திரம் சம்பந்தமாகத்தான் இருக்கக்கூடும் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

1444 வரை ஸ்ட்ராஸ்பர்க்கிலேயே வசித்து வந்த குட்டென்பெர்க் அச்சடிக்கும் இயந்திரத்தை தயாரிக்கும் முறையைப் பற்றி முதன் முதலாக வெளிப்படையாகப் பேசினார். இடைப்பட்ட காலத்தில் அவர் என்ன செய்து வந்தார், என்று ஒரு தகவலும் இல்லை. மீண்டும் இன்னுமொரு நான்கு ஆண்டுகளுக்கு நீண்ட இடைவெளிமெயின்ஸ் நகரத்துக்கு மீண்டும் திரும்பிய குட்டென்பெர்க் அவருடைய மைத்துனரிடம் கொஞ்சம் கடன் வாங்கினார். அச்சு இயந்திரத்துக்காகத்தான் இருக்க வேண்டும். இதற்கிடையில் கல்லில் அச்சு வடிக்கும் முறையைப் பின்பற்றி செப்பில் அச்சு வடிப்பதைப் பற்றி எங்கோ தெரிந்து கொண்டிருக்கிறார்.

1450-ல் அவரது அச்சு இயந்திரம் இயங்கத் தொடங்கியது. ஜெர்மனியில் எழுதப்பட்ட ஒரு கவிதை முதன்  முதலாக அச்சடிக்கப்பட்டது. பெரிய செல்வந்தரான  ஜோஹன் ஃபஸ்ட் என்பவரிடம் 800 கில்டர்கள் கடன் வாங்கினார். ஃபஸ்டின் மாப்பிள்ளையான பீட்டர் சாஃப்ஃபெர் என்பவரையும் தனக்கு கூட்டாக சேர்த்துக்கொண்டார். சாஃப்ஃபெர் பாரிசில் ஒரு எழுத்தாளராக இருந்திருக்கிறார். முதன் முதலாக அச்சு முகங்களையும் வடிவமைத்திருக்கிறார்.

சரித்திர புகழ் பெற்ற அவருடைகுட்டென்பெர்க் பைபிள்எப்பொழுது உதித்தது என்பது தெளிவாக இல்லை. ஆனால், அதை தயார் செய்வதற்கு இன்னும் 800 கில்டர்கள் ஃபஸ்டிடம் கடன் வாங்கியிருக்கிறார். 1452-ல் வேலை துவங்கியிருக்கிறது. அதே நேரத்தில் அவருடைய முதல் அச்சகம் வேறுபல லாபகரமான அச்சடிக்கும் வேலைகளையும் ஏற்றுக்கொண்டிருந்திருக்கிறது. இரண்டு அச்சகங்கள்ஒன்று பைபிளுக்காகவும் இன்னொன்று மற்ற சாதாரண வேலைகளுக்காகவும்இருந்திருக்கலாம் என்று யூகங்கள் சொல்கின்றன. சர்ச்சுகளின் ஆயிரக்கணக்கான அச்சு வேலைகள் மிகவும் லாபகரமாக இருந்திருக்கின்றன.

1455-ல் குட்டென்பெர்க்கின் 42-வரிகள் அடங்கிய பைபிள் அச்சடித்து முடிக்கப்பட்டது. காகிதத்திலும், மிருகத் தோல்களிலுமாக சுமார் 180 பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. ஐரோப்பா முழுவதையும் குட்டென்பெர்க் வசம் இந்த பைபிள் திருப்பியது.

நீதி மன்றத்தில் வழக்கு

1456-ல் குட்டென்பெர்க்குக்கும் ஃபஸ்ட்டுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு ஒரு பூசலில் முடிந்தது. ஃபஸ்ட் அவர் கொடுத்த கடன் முழுவதையும் திரும்பித் தருமாறு கேட்டார். தான் கொடுத்த பணத்தை குட்டென்பெர்க் முறையாக பயன்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கிடையே பைபிள் அச்சிடுவதில் ஏற்பட்ட செலவினால் குட்டென்பெர்க் வாங்கிய கடன் 20000 கில்டர்களுக்கு மேல் உயர்ந்து நின்றது. ஃபஸ்ட் குட்டென்பெர்க்குக்கு எதிராக ஆர்ச் பிஷப்பின் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்நீதி மன்றமும் வழக்கை ஃபஸ்ட்டுக்குச் சாதகமாக தீர்மானித்தது. பைபிள் அச்சடிக்கும் அச்சகத்தின் முழு உரிமையையும் அச்சடித்த பைபிளின் பாதி மீது இருந்த உரிமையையும் ஃபஸ்ட்டுக்குக் கொடுத்தது.

குட்டென்பெர்க் திவாலானார்.

ஆனால் 1459-ல் ஒரு புதிய அச்சு இயந்திரத்தைத் தயாரித்து பாம்பெர்க் என்ற இன்னொரு ஊரில் மீண்டும் பைபிளை அச்சடித்தார். 1460-ல் 754 பக்கங்கள் கொண்ட கத்தோலிக்க அகராதியின் 300 பிரதிகள் இவரது அச்சகத்தில்தான் தயார் செய்யப்பட்டன என்று  நம்பப்படுகிறது.
இதற்கிடையே ஃபஸ்ட்-சாஃப்ஃபெரின் அச்சகம் ஆகஸ்ட் 1457-ல் அச்சடித்தவரின் பெயருடனும் அச்சடித்த தேதியையும் குறிப்பிட்டு ஐரோப்பாவில் முதன் முறையாக ஒரு புத்தகத்தை வெளியிட்டனர். ஆனால், அதில் முதல் அச்சகத்தை கண்டுபிடித்த குட்டென்பெர்க்கைப் பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை.

குட்டென்பெர்க்கின் முதிய வயதில்

1462-ல் இரண்டு ஆர்ச் பிஷப்புக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மெயின்ஸ் நகரம் பகிஷ்கரிக்கப்பட்டதில் குட்டென்பெர்க் வெளியேற்றப்பட்டார். ஒரு முதியவராக, எல்ட்வில்லே என்ற இடத்துக்கு மாறிய குட்டென்பெர்க் அங்கும் இரண்டு சகோதரர்கள் அச்சகம் திறப்பதற்கு உதவினார்.

1465-ல் தான் குட்டென்பெர்க்கின் கண்டுபிடிப்பு முதன் முதலாக அங்கீகரிக்கப்பட்டது. ‘ஹாஃப்மேன்’ (HOFFMAN - அரச சபையின் சிறந்த பண்பாளர்) என்ற பட்டம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. இந்த அங்கீகாரத்தினால் குட்டென்பெர்க்கிற்கு மாதாமாதம் ஒரு உதவித் தொகையும், 2180 லிட்டர் தானியங்களும், 2000 லிட்டர் ஒயினும் வரியில்லாமல் கிடைத்தன. அவர் மீண்டும் மெயின்ஸ் திரும்பினாரா என்பது சரியாகத் தெரியவில்லை.

1468-ல் குட்டென்பெர்க் மரணம் எய்தினார். அவரது  நல்ல கண்டுபிடிப்புக்கு எந்த பெரிய அங்கீகாரமும் இல்லாமல் மெயின்ஸ் நகரத்திலிருந்த ஃப்ரான்ஸிஸ்கன் சர்ச்சில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பின்னால் இந்த சர்ச்சும் இடித்துத் தள்ளப்பட்டதில் அவரது கல்லறையும் காணாமல் போய்விட்டது.

1504-ல் தான், அச்சடிக்கும் முறையை கண்டுபிடித்ததாக குட்டென்பெர்க் பெயர் ஒரு புத்தகத்தில் அறிவிக்கப்பட்டது. 1567-ல் தான் முதன் முதலாக கற்பனையில் வரையப்பட்ட அவரது ஒரு படம் வெளியிடப்பட்டது.

குட்டென்பெர்க் அச்சடித்த புத்தகங்கள்

குட்டென்பெர்க் அச்சடித்த புத்தகங்களில் அச்சடித்தவரின் பெயரும் தேதியும் எங்கும் குறிப்பிடவில்லையாதலால் அவர் எத்தனை புத்தகங்கள் அச்சடித்தார் என்பதெல்லாம் பொதுவாக யூகங்கள்தான். ஆனால், 1450-1455-களில் பல புத்தகங்களை அச்சடித்தார் என்று நம்புகிறார்கள். சர்ச்சுகளின் ஆவணங்கள் பல அவரது அச்சகத்தில் தயார் செய்யப்பட்டன. லத்தீன் மொழியின் இலக்கணப் புத்தகம் அவரால் அச்சடிக்கப்பட்டது. அவரது 42 வரிகள் கொண்ட பைபிள் 30 ஃப்ளாரின்களுக்கு விற்கப்பட்டது. வசதியுள்ளவர்கள் மட்டுமே வாங்கக்கூடிய விலைகையெழுத்துப் பிரதிகள் எழுதி முடிக்க ஆண்டுகள் ஆகும், செலவும் அதிகம். அவர் அச்சடித்த புத்தகங்களில் 48 மட்டும் பிழைத்திருந்தது. அவற்றில் இரண்டு இன்றும் பிரிட்டிஷ் பொது நூலகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

குட்டென்பெர்க்கின் அச்சடிக்கும் முறையைப் பற்றி பல ஆராய்ச்சியாளர்கள் வித விதமான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள்.

குட்டென்பெர்க்கின் கண்டுபிடிப்பின் பின் விளைவுகள்

குட்டென்பெர்க் அவரது தொழிலில் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால் அவரது கண்டுபிடிப்பு பற்றிய செய்தி காட்டுத் தீ போல ஐரோப்பா முழுவதும் பரவி ஒரு புதிய மறுமலர்ச்சியை முதலில் ஐரோப்பாவிலும் பின்னர் மற்ற  நாடுகளிலும் ஏற்படுத்தி. விஞ்ஞானப் புரட்சிக்கும் வித்திட்டதுஅடுத்த நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக பல பிரமிக்கத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தது.

குட்டென்பெர்க் அச்சடிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடிக்கும் வரை, எழுத்தறிவு, கல்வியறிவு என்பது ஒரு சில வசதி படைத்தவர்களுக்கும் மத குருமார்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது. குறிப்பாக, ஐரோப்பாவில் கடவுளின் வார்த்தைகளாக பைபிளில் சொல்லப்பட்டதெல்லாம் லத்தீன் மொழியில் எழுதப்பட்டிருந்ததால் லத்தீன் மொழி அறிந்திருந்த மத குருமார்கள் எதைச் சொன்னார்களோ அதையே பொதுவாக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. மக்களாக பைபிளை படித்துத் தெரிந்துகொள்ள  முடியாத நிலை. குட்டென்பெர்க் முதன் முதலாக பைபிளை அச்சடித்து வெளியிட்டபோது, பலர் கைகளில் பைபிள் போய்ச் சேர்ந்ததுபைபிளில் சொன்னதை அறிந்துகொள்ள பலர் தங்கள் படிப்பறிவை வளர்த்துக் கொண்டார்கள். படித்துத் தெரிந்துகொண்ட பலர் அதுவரை பைபிளில் கூறப்பட்டதை சுயமாக சிந்தித்துப் பார்த்து, புரிந்துகொண்டு விளக்கம் கொடுக்க துவங்கினர். கடவுளின் வார்த்தைகளை தாங்களே சுயமாகத் தெரிந்துகொண்டதால் பாதிரியார்களின் ஆதிக்கம் குறையத் தொடங்கியது.

மேலும் லத்தீன் மொழியத் தவிர வேற்று மொழிகளிலும் பைபிள் அச்சடிக்கப்பட்டதால் பல ஐரோப்பிய நாடுகளில் லத்தின் மொழியின் முக்கியத்துவம் குறைந்து அந்தந்த நாடுகளின் மொழிகள் வளரத் தொடங்கின.

இஸ்லாமியர்கள் அரபி மொழியில் புத்தகங்கள் அச்சடிப்பதை எதிர்த்தார்கள். 1493-ல் ஹீப்ரூ மொழியில்தான் ஓட்டோமான் பேரரசில் அசையும் முறையில் அச்சடிப்பது தொடங்கியது. துருக்கியில் மத சம்பந்தப்பட்ட நூல்கள் அச்சடிப்பது ஒரு பாவமாகக் கருதப்பட்டு தண்டனைக்குட்பட்டதானது. 16-ஆம் நூற்றாண்டில் இறுதியில்தான் மத சம்பந்தமில்லாத அச்சடித்த புத்தகங்கள் அனுமதிக்கப்பட்டன. இருந்தாலும் பல புத்தகங்கள் இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. 19-ஆம்  நூற்றாண்டு வரை அச்சடிக்கும் தொழில் இஸ்லாமிய நாடுகளில் அதிகமாக வேரூன்றவில்லை. யூதர்கள் நாட்டிலும் ஜெர்மனியில் உற்பத்தியாகும் புத்தகங்களுக்கு தடைகள் விதித்தனர். அதனால் ஹீப்ரூ மொழியில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள் இத்தாலியில் மிக அதிகமாக வெளியாயின. மத குருமார்களும் அரசுகளும் புத்தகங்களில் வெளிவரும் விஷயங்களை மிகக் கடுமையான தணிக்கைக்கு உட்படுத்தினர். மீறுபவர்களுக்கு தூக்குத் தண்டனைகூட கொடுக்கப்பட்டது.

அச்சடிக்கப்பட்ட புத்தகங்கள், துண்டுப் பிரச்சாரங்கள், கவிதைகள் பல புரட்சிகரமான கருத்துக்களை பலருக்கும் கொண்டுபோய் சேர்த்ததால் அன்றைய காலத்தில் இருந்த ஆட்சியாளர்களையும் மதத் தலைவர்களையும் குட்டென்பெர்க்கின் அச்சு இயந்திரம் மிரளச் செய்தது. 16-ஆம் நூற்றாண்டில் இருந்த மார்டின் லூதர் தன்னுடைய கருத்துக்களை அச்சடித்து வினியோகித்ததன் மூலம் ப்ராடெஸ்டன்ட் மறுமலர்ச்சி உருவாகுவதற்குக் காரணமானார்.

குட்டென்பெர்க்கின் கண்டுபிடிப்பு அன்று வரை கையெழுத்துப் பிரதிகளாக இருந்த பல நூல்களை எல்லோருக்கும் போய்ச் சேரும்படியாக பெருமளவு அச்சடித்து வினியோகம் செய்ய வசதி செய்து கொடுத்தது.     அதனால் கல்வி அறிவு விரிவாகியது.  ஐரோப்பாவில் அடுத்த நானூறு ஆண்டுகளில் புத்தகங்கள் உற்பத்தி ஒரு சில மில்லியன் களிலிருந்து ஒரு பில்லியன் அளவுக்கு வளர்ந்தது.

பல விஷயங்களைப் பற்றி அச்சடித்து வினியோகித்ததால் பொதுவாக மக்களின் அறிவு தாகம் பல மடங்கு பெருகியது. பின்னால் வந்த சந்ததியினர் அறிவை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க ஏதுவாகியது.  ஒரு விஷயத்தைப் பற்றி பலர் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவும், அதைப் பற்றிய உண்மைகளை ஆராய்ந்து கண்டுகொள்ளவும், அதை விவாதிக்கவும், மற்றவர்களுக்குத் தெரிவிக்கவும் வழி செய்தது. புதிய விரிவுரைகளை, கற்பனைகளை வளர்த்து புரட்சி ஏற்பட காரணமாகியது.   ஆராய்ந்து அறிந்துகொள்ளும் மனப்பான்மையின் வளர்ச்சியால் விஞ்ஞானப் புரட்சி ஏற்படும் சூழ்நிலையைத் தோற்றுவித்தது. மனித குலத்தின் விழிப்புணர்வு பெருகியது.

அச்சடித்தல் ஒரு புதிய தொழிலாக பெருகியது. கல்வி அறிவை வலியுறுத்தியது. புதிய கல்வி நிலையங்கள் தோன்றின. புதிய எழுத்தாளர்கள் பிறந்தனர். பிழைகளை திருத்தியமைத்தல், அச்சுக் கோர்த்தல், அச்சடித்தல், புத்தகத்தை தைத்தல், புத்தகங்களை விற்றல் போன்ற தொழில்களில் பல புதிய  வல்லுனர்கள் உருவாகினர். புதிய நூலகங்கள் உருவாகின.

விளம்பரம் ஒரு புதிய தொழிலாக பெருமளவு வளர்ந்தது. ஊடகங்கள் வளர்ச்சி பெற்றன.

எழுத்தாளர்களுக்கு அவர்கள் எழுத்துக்களின் மிது அதுவரை இருந்திராத தனிப்பட்ட காப்புரிமை வழக்கத்துக்கு வந்தது.

அச்சடிக்கும் தொழிலின் வளர்ச்சி

குட்டென்பெர்க் காலத்துக்குப் பிறகு  அச்சடிக்கும் தொழில் இத்தாலியிலிருக்கும் வெனிசுக்கு மாறியது. பல முக்கிய கிரேக்க, லத்தீன் மொழிகளின் எழுத்துக்கள் வெனிஸ் நகரில் அச்சடிக்கப்பட்டன. அச்சடிக்கும் காகிதம் தயாரிப்பதிலும் அதன் வியாபாரத்திலும் இத்தாலி ஏற்கெனவே சிறந்து விளங்கியதால் அச்சடிக்கும் தொழில் அங்கே தழைத்தோங்கியது. மேலும், இத்தாலியின் பொருளாதாரம் அன்று சிறப்பாக இருந்ததால் கல்வி அறிவு மிக வேகமாக பரவுவதற்கும் காரணமானது..

ஆரம்ப நாட்களில் அச்சடித்த புத்தகங்களுக்கு இன்று பெரிய மவுசு. குட்டென்பெர்க் இருந்த காலத்தில் அவருடைய கண்டுபிடிப்பைப் பெரியதாக மதிக்காத ஐரோப்பா இன்று அவருக்கு  பல இடங்களில் சிலை வைத்திருக்கிறது.. இரண்டாவது மில்லேனியத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளராக குட்டென்பெர்க்கையும் அவரது அச்சடிக்கும் இயந்திரத்தை மிகச் சிறந்த கண்டுபிடிப்பாகவும் அங்கீகரித்திருக்கிறார்கள் விண்வெளியில் ஒரு சிறுகோளுக்கு 777 குட்டென்பெர்கா என்று பெயரிட்டு அவரை கௌரவித்திருக்கிறார்கள்.

ப்ரொஜக்ட் குட்டென்பெர்க்

பல நல்ல புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்கும் ஒரு  பரந்த   நல்ல நோக்கத்தோடு ப்ரொஜக்ட் குட்டென்பெர்க்” 1971, ஜனவரியில் மைக்கேல் ஹார்ட் என்பவரால் அரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கு வெளி நாடுகளில் ஏக வரவேற்பு. காப்புரிமையில்லாத 45000 ஆங்கிலப் புத்தகங்கள் இதுவரை டிஜிட்டல் வடிவமாக்கப்பட்டிருக்கின்றன.

முடிவுரை

குட்டென்;பெர்க்கின் அச்சடிக்கும் இயந்திரத்துக்குப் பிறகு, இன்னொரு புரட்சிகரமான கண்டுபிடிப்பு என்று சொல்ல வேண்டுமானால் அது இன்று பரவலாக கிராமங்களில் கூட பயன்படுத்தப்படும் இன்டெர்னெட் தான். இன்டெர்னெட்டின் கண்டுபிடிப்புக்குப் பிறகு உலகம் ராக்கெட் வேகத்தில் மாறிப்போய் விட்டது.

(பின் குறிப்பு: இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல தகவல்கள் விக்கிப்பீடியாவில் கிடைத்தது. www.wikipedia.com க்கு நன்றி)

(இந்தக் கட்டுரையை எழுத தூண்டுகோலாக இருந்த JOHN NAUGHTON அவர்கள் எழுதிய "FROM GUTENBERG TO ZUCKERBERG" புத்தகத்திற்கும் நன்றி.)



No comments:

Post a Comment