Pages

Wednesday, January 14, 2015

இந்தியாவில் விளையாட்டுத் துறை

ஒரு ஐம்பத்தைந்து ஆண்டுகள் பின் நோக்கிப் பார்த்த போது, எனக்கு ஞாபகம் வந்ததெல்லாம் திருநெல்வேலி டவுண் அம்மன் சன்னதித் தெருவில் நாங்கள் விளையாடிய கோலி, பம்பரம், முத்து செதுக்கல், வட்டில், குரங்கு பெடல் சைக்கிள், கண்ணா மூச்சி, பல்லாங்குழி, கிட்டிப்புல், கபடி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், (high jump, long jump), ஓட்டப் பந்தயம் போன்றவைதான். கொஞ்சம் கொஞ்சம் கிரிக்கெட். ஆர். பாலு என்றொரு பள்ளித் தோழர். கிரிக்கெட் என்றால் அவருக்கு உயிர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். எப்பொழுதும் ரேடியோ டிரான்சிஸ்டரை வைத்துக்கொண்டு உலகத்தில் எந்த மூலையில் கிரிக்கெட் போட்டி நடந்தாலும் கமெண்டரியைக் கேட்டுக் கொண்டிருப்பார். நன்றாக கிரிக்கெட் விளையாடவும் செய்வார். கொஞ்சம் வளர்ந்த பிறகு எனக்குத் தெரிந்ததெல்லாம் கிரிக்கெட் விளையாட்டு மட்டும்தான். கல்லூரி படிக்கும் காலங்களில் பல கிரிக்கெட் போட்டிகளுக்கு நாங்களே ஒவ்வொரு வீரருக்கும் எத்தனை ரன் எடுப்பார், எத்தனை விக்கெட் எடுப்பார் என்று நண்பர்களுடன் மணிக்கணக்கில் விவாதித்து, சண்டை போட்டு உண்மையான போட்டியில் நமது இந்திய விளையாட்டு வீரர்களின் சொதப்பலில் ஏமாந்திருக்கிறோம். சந்து போர்டே போன்றவர்கள் நாட்கணக்கில் விளையாடி நூறு ரன்கள் எடுத்ததை சலித்துக் கொண்டிருக்கிறோம். மற்ற விளையாட்டுகள் மேல் எனக்கு நாட்டம் செல்லவில்லை. முறையாக எந்த விளையாட்டையும் கற்றுக் கொள்ளவும் இல்லை. அதற்குரிய ஊக்கமும் இருந்ததில்லை. வீட்டில் மூத்த பையன். சீக்கிரம் படித்து முடித்துவிட்டு, சீக்கிரமாக வேலை பார்க்கத் தொடங்கி சீக்கிரமாக வீட்டை கவனித்துக்கொள்ள வேண்டும். இதற்கு மேல் எந்த லட்சியமும் அந்தக் காலத்தில் இருந்ததில்லை.

1972-ல் அமெரிக்கரான பாபி ஃபிஷர் மற்றும் ரஷ்யரான போரிஸ் ஸ்பாஸ்கி இடையே நடந்த செஸ் போட்டிகளின் போது டில்லி கரோல்பாக் ராமானுஜ மெஸ்ஸில் தங்கியிருந்தேன். அடுத்த அறையில் ஒரு செஸ் பிரியர். பாரதி என்று பெயர் ஞாபகம். தினமும் காலையில் அன்றன்று நடக்கும் போட்டியைப் பற்றி விலாவாரியாக விவரிப்பார். வாயைப் பிளந்துகொண்டு அவருடைய சுவாரஸ்யமான விவரித்தலைக் கேட்டதில் செஸ் விளையாட்டில் கொஞ்சம் ஆர்வம் ஏற்பட்டது.

பின்னர் 1980-ல் சென்னையில் பணியாற்றியபோது மிகப் பிரசித்தமான ஜான் போர்க் ஜான் மெக்கென்ரோ விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டி நடந்தது. அவர்களுக்கிடையே இருந்த போட்டி, பொறாமையை பற்றி என்னுடன் என் கீழ் வேலை பார்த்த இன்னொரு அதிகாரி விளக்கிச் சொன்னார். டென்னிஸ் விளையாட்டை பற்றியும் விளக்கிச் சொன்னதில் டென்னிஸ் மீது ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது. அந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் இறுதிப் போட்டியை தொடர்ந்து தொலலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பார்த்தேன். டென்னிஸ் விளையாட்டை ரசிக்கத் தொடங்கினேன்.. போர்க் மெக்கென்ரோ போட்டிகளைப் போல இதுவரை எந்த டென்னிஸ் போட்டியையும் நான் ரசித்ததில்லை. (என் முதல் அனுபவம் வேறு, இல்லையா?)

1986-ல் தென் கொரியா சோல் நகரத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுகளை என் மனைவி விழுந்து விழுந்து தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறாள். வண்ணத் தொலைக்காட்சி நடைமுறைக்கு வந்து இரண்டு மூன்று ஆண்டுகளே ஆகியிருந்தன. நேரடி ஒளிபரப்பு. ஆனால், அந்த விளையாட்டுக்களை நான் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

பின்னர் 1987 -90-களில் எங்கள் குடியிருப்பில் மற்ற சக ஊழியர்களிடமிருந்து இறகுப் பந்து விளையாடக் கற்றுக்கொண்டேன். திறந்தவெளியில் விளையாட வேண்டியிருந்ததால், காலை நேரத்தில் ஆறு மணிக்கு விளையாட்டு தொடங்கிவிடும். தாமதமானால் காற்று காரணமாக விளையாட முடியாது. விளையாட விரும்பும் ஆட்களும் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் முதன் முதலாக அதிகாலையில் விழித்துக்கொள்ள பழகிக் கொண்டேன். இறகுப் பந்து விளையாடுவதில் பித்தாய் இருந்தேன். ஒரு நாள் ஓங்கி ஒரு ‘ஸ்மாஷ்’ கொடுக்கும் பொழுது தோள்பட்டை இறங்கிவிட்டது. ஒரு மாதத்துக்கு தோளில் தொட்டில் தொங்கியது. அவ்வளவுதான். இறகுப் பந்து விளையாட்டுக்கு ‘குட் பை’.

பிற்காலங்களில் கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் இந்த இரண்டு விளையாட்டுக்களுக்கு மேல் எந்த விளையாட்டிலும் நாட்டம் காட்டியதில்லை.

வயது ஏற ஏறத்தான் உடல் விளையாட்டுக்களை எவ்வளவு தூரம் நான் ஒதுக்கி வைத்திருந்தேன் என்பதை உணரத் தொடங்கினேன். வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்புதான் எனக்கு ஞானோதயமே ஏற்பட்டது. நான் ஒதுக்கித் தள்ளிய பல விஷயங்களைப் பற்றி நிறையவே அசை போட்டதில் நான் கண்டறிந்த உண்மை நமது நாட்டில் பொதுவாகவேஎன்னைப் போலவே - விளையாட்டுத் துறைக்கு, கிரிக்கெட் நீங்கலாக, யாரும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று.

2010-ல் நான் புத்தகங்கள் எழுதத்தொடங்கினேன். WHAT, IF OUR DREAMS COMEE TRUE! AN UNCOMMON MEETING WITH LORD SIVA என்ற நாவலை இரண்டு வருடங்கள் முன்பு எழுதி முடித்தேன். இதில், தாமிரபரணி நதிக்கரையில் ஒரு சிறிய கிராமத்தில் 1970-களில் ஒரு விளையாட்டு இயக்கமே துவங்குவதாக கற்பனை செய்து எழுதினேன். பல இளஞ்சிறார்களை தேசிய, மற்றும் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குத் தயார் செய்வதாக கற்பனை செய்து எழுதியிருந்தேன். அந்தக் கதையை எழுதும் பொழுது ஒலிம்பிக் விளையாட்டுக்களைப் பற்றியும், பல விளையாட்டு வீரர்களைப் பற்றியும், விளையாட்டுக் கருவிகளைப் பற்றியும், விளையாட்டு முறைகளைப் பற்றியும், பல புதிய சாதனைகளைப் பற்றியும், விவரமாக இண்டெர்னெட்டில் படித்துத் தெரிந்து கொண்டேன். நமது நாட்டில் கிரிக்கெட் பிரபலமான அளவு மற்ற விளையாட்டுக்கள் ஏன் பிரபலமாகவில்லை என்று மன வருத்தப்பட்டேன்.

எனது கனவு பலிக்கும் என்ற ஒரு நம்பிக்கை. சமீப காலமாக இந்தியாவில் விளையாட்டுத் துறையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு வருவதையும் கூர்ந்து கவனித்து வருகிறேன். எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும், நிச்சயமாக நாம் மாறி முன்னேறி வருகிறோம் என்பது தெரிகிறது. பொருளாதார தாராளமயமாக்கலின் விளைவாக நாம் பல நாடுகளில் நடப்பதை உடனுக்குடன் பார்த்துத் தெரிந்துகொண்டோம். மேலை நாடுகளைப் போல் நாமும் வளர வேண்டும் என்ற எண்ணம் இன்று பல இளைஞர்களிடையே நன்கு வேறூன்றியிருக்கிறது. அது விளையாட்டுத் துறையையும் பாதித்திருக்கிறது. வரவேற்கப்பட வேண்டிய விஷயம். கிரிக்கெட்டுக்கு மட்டுமே கிடைத்து வந்த அந்தஸ்தும் வரவேற்பும் இன்று பல விளையாட்டுக்களுக்கு கிடைக்கத் தொடங்கியிருக்கிறது. கிரிக்கெட்டில் முன்னணி வீரர்கள் ஆண்டுக்கு நூறு கோடிக்கும் மேலாக சம்பாதிப்பது தெரிகிறது. ஒரு நாள் 50/50, 20/20 போட்டிகளுக்கு நன்றி. கிரிக்கெட் விளையாட்டு என்றால் பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரம் கொடுக்கவும், ஸ்பான்ஸர் செய்யவும் தயாராக இருந்தது போக, இன்று மற்ற விளையாட்டுகளுக்கும் ஸ்பான்ஸர் செய்யத் தயாராக இருக்கிறார்கள். .பி.எல் கிரிக்கெட் போல கால் பந்து, டென்னிஸ், ஹாக்கி விளையாட்டுக்கும் .பி.எல் போன்ற அமைப்புகள் வந்து விட்டன. சமீபத்தில் நடந்த கால் பந்து ..பி.எல் விளையாட்டுக்கள் உதாரணம். ஹாக்கி விளையாட்டு மீண்டும் புனர் ஜென்மம் எடுத்திருக்கிறது. டென்னிஸ், பூ/இறகுப் பந்து விளையாட்டுக்களிலும் நமது வீரர்கள் முன்னை விட முன்னேறியிருக்கிறார்கள். ஒலிம்பிக்ஸில் ஒரு மெடலாவது வாங்க மாட்டோமா என்று ஏங்கிபது போய் இன்று பத்து இருபது மெடல்கள் வாங்கத் துவங்கியிருக்கிறோம், தங்க மெடல்கள் கம்மிதான். செஸ் விளையாட்டில் இன்றும் விஸ்வனாதன் ஆனந்த் உலக சாம்பியன் பட்டத்துக்கு போட்டி போடுகிறார்.

ஆனால், இன்னும் ஒட்டப் பந்தயம், floor games, artistic gymnastics, நீச்சல், கூடைப் பந்து, போன்ற பல விளையாட்டுக்களில் நாம் மிகவும் பின் தங்கியிருக்கிறோம். பெரும்பாலான இடங்களில் நல்ல மைதானங்களை, நீச்சல் குளங்களை இன்னும் நாம் வளர்க்கவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னே ரோட்டோரமாக நடக்கும் acrobat (கழைக்கூத்தாடி என்று தமிழில் சொல்வார்கள் என்று நினைக்கிறேன்) காட்சிகளை இன்றும் நினைத்தால் எனக்கு மயிர்கூச்செரிகிறது. என்னுடைய இளைய கால நினைவுகளைக் கொண்டே என்னுடைய WHAT, IF OUR DREAMS COME TRUE! நாவலில் சில கழைக்கூத்தாடிகளுக்கு முறையாக பயிற்சி கொடுத்து உலக சாம்பியன்களாக மாற்றுவதாக கற்பனை செய்திருந்தேன். நான் திருநெல்வேலியில் தெப்பக்குளத்தின் மண்டபத்தின் மேற்கூரையிலிருந்து குதித்து நீச்சல் அடித்ததை நினைவில் கொண்டு ஒரு கோவில் குளத்தையே பயன்படுத்தி பல நீச்சல் வீரர்களை உருவாக்குவதாக கற்பனை செய்திருந்தேன். பி.டி.உஷா, ஷைனி ஏப்ரஹாம் போன்ற ஓட்டப் பந்தயக்காரர்கள் நிறைய தோன்ற வேண்டுமானால் பல மைதானங்களை நாம் உருவாக்க வேண்டும். இன்று பல பள்ளிகளில் மைதானங்களே கிடையாது. மைதானங்கள் இருக்கும் பள்ளிகள் அவைகளை சரியாகப் பராமரிப்பதில்லை. மாணவர்களை வெறும் மதிப்பெண்கள் வாங்கும் இயந்திரமாக மாற்றிய பெருமை தமிழக அரசுக்கு உண்டு. அரசுக் கொள்கைகளை பள்ளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர். அரசுப் பள்ளிகள் மட்டும் படிப்பிலும் சரி, விளையாட்டிலும் சரி, மற்ற கலை போன்ற துறைகளிலும் சரி பொதுவாக பின் தங்கியே இருக்கின்றன. இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் வேலை என்றால் எல்லோரும் ஓடிப்போய்விடுவார்கள் என்பது போய், இன்று பல லட்சங்கள் கொடுத்து அரசு மற்றும் அரசுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் வேலையை வாங்கத் தயாராக இருக்கின்றனர். ஆனால், இறுதியில் என்ன பலன் கிடைத்திருக்கிறது?

கடந்த  இரண்டு ஆண்டுகளாக ஆர்கேடியா என்ற தலைப்பில் அரசுப் பள்ளிகளுக்காக மட்டுமே பல போட்டிகளை நடத்தி ரொக்கப் பணமாக பரிசுகளைக் கொடுத்தோம். 2013-ல் 578 மாணவர்களும், 2014-ல் 400 மாணவர்களும் கலந்து கொண்டனர். 2014-ல் போட்டி அன்று மழை காரணமாக திடீரென்று அரசு விடுமுறை அறிவித்து விட்டனர். ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் கூட போட்டிக்கு வரத் தயாராக இருந்த போது அவர்களைக் கூட்டிக்கொண்டு வர ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் பல மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொள்ளவில்லை. கலந்த கொண்ட மாணவர்களின் உற்சாகத்தைக் காணக் கண் கோடி வேண்டும். அவ்வளவுதான் என்னால் செய்ய முடிந்தது.

சமீபத்தில் ஒரு நண்பர் என்னிடம் ‘சுற்று வட்டாரத்தில் சிறு குழந்தைகளுக்காக ஏதேனும் விளையாட்டுப் பள்ளிக்கூடங்கள் (SPORTS SCHOOL) இருக்கிறதா’ என்று கேட்டார். “ஏன், நீங்களே ஒரு விளையாட்டுப் பள்ளிக்கூடத்தை ஆரம்பிக்கக் கூடாது? நீங்கள் ஆரம்பித்தால், என்னால் முடிந்த எல்லா உதவிகளையும் செய்யத் தயாராயிருக்கிறேன்.” என்று பதில் கூறினேன். (ஆனால், இன்று ஒரு பள்ளியை ஆரம்பிக்க அரசாங்கம் போட்டிருக்கிற விதி முறைகளைப் பின்பற்ற வேண்டுமென்றால் எவராலும் பள்ளிகளைத் தொடங்க முடியாது என்று பலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள். எல்லாம் ‘சம்திங், சம்திங்’ கொடுத்துதான் நடத்த வேண்டியிருக்கிறது என்று கூறுகிறார்கள்.) அரசாங்கமாக எதைத் தொடங்கினாலும் அதில் ஒன்று ஊழல் இருக்கும் அல்லது அரசியல் இருக்கும்.

“ஏன் நம்மால் பல விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியவில்லை?” என்று தொடர்ந்து ஏங்குகிறேன்.


இந்தியாவில் விளையாட்டுத் துறையின் நிலமை என்ன என்பதையும் 2014-ல் அதன் சாதனை என்ன என்பதையும் பல செய்தித் தாள்களில் படித்துப் பார்த்து நான் தெரிந்து கொண்டதில் சிலவற்றை இரண்டாம் பாகமாக கொடுத்திருக்கிறேன்
                                                                                                                                                                                                                                                                                                                                 ........................ தொடரும்

No comments:

Post a Comment