Pages

Tuesday, November 10, 2015

இன்னுமொரு பயணக் கட்டுரை - திருநெல்வேலி - பகுதி 1

11.11.2015

ஊர் சுற்றுவதற்கான இன்னொரு வாய்ப்பு கடந்த வாரம் என் தம்பியின் மூலமாகக் கிடைத்தது. அவன் குடும்பத்துடன் நானும் என் மனைவியும் கிளம்பி பாளையங்கோட்டையிலிருக்கும் எங்கள் குலதெய்வமான சாஸ்தா கோவிலுக்கு தரிசனத்துக்குச் சென்றோம்.


அங்கே தரிசனத்தை முடித்துக்கொண்டு நெல்லை டவுணில் காந்திமதி – நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்றோம். ஐப்பசி திருவிழாவை முன்னிட்டு கோவிலும் அதை சுற்றியிருக்கும் ரதவீதிகளும் கலகலப்பாக இருந்தன. கோவிலுக்குச் சொந்தமான இடத்தை ஒரு பெரிய தனியார் துணிக்கடை நிறுவனத்துக்கு வாடகைக்கு கொடுத்துவிட்டு, கோவிலுக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை. (இல்லை, கொஞ்சம் புரிந்திருக்கிறது!) எனது வாகனத்தை  நான் வளர்ந்த அம்மன் சன்னிதித் தெருவில் ஏதோ ஒரு வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு கோவிலுக்குச் சென்றேன். இந்தக் குறுகியத் தெருவிலா பதினெட்டு ஆண்டுகள்  நான் வாழ்ந்திருக்கிறேன் என்று எனக்கே ஒரு ஆச்சரியம். தெருவில் இரண்டு பக்கமும் அங்கங்கே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தெருவை இன்னும் குறுக்கிக் காட்டின. ஒரு காலத்தில் மிக ரம்மியமாக இருந்த இந்த தெரு இன்று எங்கேயும் ‘கோடௌவுன்’களாக காட்சியளிக்கிறது. மனதுக்குள் ஒரு சங்கடம்.  அந்தக் காலத்தில் இந்த தெருவில் வளர்ந்த சிறுவர் சிறுமியர்கள் வாழ்க்கையில் வளர்ந்து எங்கெங்கோ குடியேறிப் போய்விட்டார்கள். தங்கள் பூர்வீக வீட்டையும் பலர் விற்றுவிட்டார்கள். தெருவை பெரும்பாலும் வியாபாரிகள் ஆக்ரமித்துக் கொண்டு விட்டார்கள். அவர்களை குற்றம் சொல்ல முடியாது. எல்லா ஊர்களிலும்  நடந்திருப்பதுதான் - முக்கியமான கோவிலைச் சுற்றியிருக்கும் வீடுகள் இன்று வியாபாரஸ்தலங்களாகத்தான் இருக்கின்றன -  நான் இப்பொழுதிருக்கும் தென்காசியையும் சேர்த்து.

மிகப் பிரம்மாண்டமான, பழமையான காந்திமதி – நெல்லையப்பர் கோவில் என்றும் போல் எனக்குப் பிரமிப்பைக் கொடுக்கிறது. எவ்வளவு பெரிய  கோபுரம், எவ்வளவு பெரிய தேர், எவ்வளவு பெரிய நிலை வாசல், தெப்பக்குளம், பிரகாரம், சிற்பங்கள், மண்டபங்கள், தூண்கள்….சொல்லிக்கொண்டே போகலாம் கோவிலின் அழகைப் பற்றியும் பிரம்மாண்டத்தைப் பற்றியும். சுவாமி சன்னிதிக்கு எதிரே இருக்கும் நந்தி ஒவ்வொரு ஆண்டும் ஒரு நெல் அளவு வளர்ந்துகொண்டிருக்கிறது. அது மட்டும் மேல் கூரையை தொட்டுவிட்டால் உலகமே அழிந்துவிடும் என்று ஒரு காலத்தில் கூறிய கதையை நம்பியவர்களில் நானும் ஒருவன். அதே சன்னிதிக்கு இடது புறத்தில் தாமிரசபை. நடராஜர் நாட்டிய கோலத்தில் இருக்கிற அவரது விக்ரஹம் முன்னே தரையில் வட்டமான திருகு போன்ற ஒரு கல் இருக்கிறது. சிறுவனாக இருக்கும்பொழுது ஏதேனும் காரியம்  நடக்குமா, நடக்காதா என்று தெரிந்துகொள்ளவேண்டுமானால் அங்கே சென்று நடராஜரிடம் ப்ரார்த்தனை செய்து கைகளை அந்தத் திருகுமேல் வைத்துக்கொள்ளவேண்டும். கை தானாக நகர்ந்தால் காரியம் நடக்கும் என்று  நம்பியவர்களில் நானும் ஒருவன்.

கீழரத வீதியில் சரஸ்வதி அம்மன் கோவில் இருக்கும் இடமே தெரியாத அளவு அதையொட்டி பெரிய கடை. ஒரு காலத்தில் இந்தக் கோவில் எங்கள் மூதாதையர்களில் ஒருவருக்குப் பாத்தியப்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  அந்த இடத்தில் வெகு ஆண்டுகளாக எங்களுக்குத் தெரிந்த ஒருவர் பலசரக்குக் கடை வைத்திருந்தார். எதிரே மிக பிரபலமான மருத்துவர்களில் ஒருவராகிய டாக்டர் சந்திரசேகரின் மருத்துவ மனையிருந்தது. என் மிக நெருங்கிய பள்ளித் தோழன் ஆர். பாலுவின் வீடு பெரிய தேரையொட்டி இருந்தது. அவன் ஒரு கிரிக்கெட் பைத்தியம். கிரிக்கெட் போட்டிகள் நடக்கும் நாட்களில் ரேடியோவை விட்டு நகர மாட்டான். அவன் வீடு பூட்டிக் கிடந்தது. இன்று எங்கிருக்கிறான் என்று தகவல் இல்லை. அம்மன் சன்னதி தெரு முனையில் ஒரு சுக்குக் காஃபி கடை இருந்தது. அங்கே மிகச் சுவையான பக்கோடா கிடைக்கும். சுவாமி கோவிலுக்கு எதிர்புறம் ஒரு போத்தி ஹோட்டல். எப்பொழுதேனும் அவசரத் தேவையென்றால் போத்தி ஹோட்டல் சாம்பார்தான் எங்களுக்குக் கை கொடுத்திருக்கிறது. அதையொட்டி ஒரு கிராமஃபோன் கடை இருந்தது. இன்று அந்த இடத்தில் ஒரு பெரிய ரெஸ்டாரன்ட். மாறாதது லாலாவின் இருட்டுக் கடை அல்வாதான். என் தகப்பனார் அந்தக் கடைக்கு நிரந்தர வாடிக்கையாளர்.  அந்தக் கடையின் வாரிசுதாரர் இன்றும் எங்களை நன்கு ஞாபகம் வைத்துக்கொண்டிருக்கிறார். நாங்கள் சென்ற அன்று கடை திறக்கவில்லை.

அம்மன் கோவிலுக்கு வலது புறம் மார்க்கெட். மார்க்கெட்டின் ஒரு முனையில் டீ.ஏ.எஸ் ரத்தினம் பட்டினம் மூக்குப் பொடி கடை இருந்தது. மார்க்கெட் கட்டிடத்தின் மேலே பொது நூலகம். இன்றும் இருக்கிறது என்று சொன்னார்கள். பள்ளி நாட்களில் இந்த நூலகத்தில் என்னை விரட்டியடிக்கும் வரை உட்கார்ந்து நூல்களைப் படித்திருக்கிறேன். என்னுடைய ஆரம்பகால அறிவுக்கோவில் அது. கார் ஓட்டிச் செல்லும்பொழுது சாஃப்டர் பள்ளியைக் கடந்தபோது என்னையறியாமல் என் கன்னத்தில் போட்டுக்கொண்டேன். அது என்னுடை பிரதான அறிவுக்கோவில்.  அந்தப் பள்ளியின் கண்டிப்பான தலைமையாசிரியர் மறைந்த திரு.ஜான் ஆசீர்வாதம், பல முறை உதை கொடுத்த கணக்கு ஆசிரியர் மறைந்த திரு.ஜெசுமணி இருவரும் என் ஞாபகத்துக்கு வந்தனர்.  கணக்குப் பாடத்தில் என்னுடைய முக்கியமான குரு. இரண்டாவது குரு என்னுடன் படித்த மாதவன் என்ற நண்பர்.

கீழரத வீதியில் சப்பாத்தி ஸ்டால், வாகையடி முக்கு எல்லாம் மாறிவிட்டன. எங்கு பார்த்தாலும் வாகனங்களின் கூட்டம்.


திருநெல்வேலிக்கு இந்த முறை போன போது என்னுள் மலர்ந்த நினைவுகளைப் பற்றியும் எண்ணங்களைப் பற்றியும் மட்டுமே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். இன்னும் எவ்வளவோ சொல்லலாம். ஆனால், இப்பொழுது இல்லை.
                                                                                                பயணம் தொடரும்………….

No comments:

Post a Comment