Pages

Thursday, November 12, 2015

இன்னுமொரு பயணக் கட்டுரை - பகுதி 2

11.11.2015

முதல் நாள் இரவில் நெல்லை ஜங்ஷனில் ஒரு லாட்ஜில் அறை எடுத்துக்கொண்டோம். இரண்டாம் நாள் அதிகாலையில் குளித்து முடித்துவிட்டு நேராக திருச்செந்தூர் செல்வதற்கு புறப்பட்டோம்.  பாளையங்கோட்டையைத் தாண்டுவதற்குள் என்னுடைய மாருதி 800-ன் இடது பின்சக்கர டயர் பங்க்சர் ஆகி விட்டது. எனக்கோ டயர் மாற்றத் தெரியாது. முயற்சியும் செய்ததில்லை. அதிகாலை வேளை. டயர் பங்க்சர் பார்ப்பவர் யாரும் கண்ணில் படவில்லை. ஒரு ஆட்டோ, டாக்சி, வேன் டிரைவர்கூட தென்படவில்லை. அரை மணி நேரம் அங்கும் இங்குமாக அலைந்ததுதான் மிச்சம். அதிர்ஷ்டவசமாக ஒரு வேன் எங்கள் பாதையில் வந்து கொண்டிருந்தது. அதை நிறுத்தி அதன் டிரைவரை டயர் மாற்றித் தருமாறு கேட்டுக்கொண்டேன். நல்லவராகத் தெரிந்தார். முகம் சுளிக்காமல் ஐந்தே நிமிடத்தில் மாற்றிக்கொடுத்தார். நாலு வழிப்பாதை மேம்பாலம் தாண்டியவுடன் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் டயர் பங்க்சர் பார்க்கும் கடை இருப்பதாகக் கூறினார். அவருடைய சிரமத்துக்காக பணம் கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார். ரொம்பவும் கட்டாயப்படுத்திய பின்பு வாங்கிக்கொண்டார். பணம், பணம் என்று அலையும் இந்த உலகில் இன்னும் இப்படி சிலர் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாகத்தான் இருந்தது. காரை ஓட்டிச்சென்று முதல் வேலையாக டயர் பங்சர் சரி செய்துகொண்டோம்.


இரண்டு நாள் முன்புதான் என் மனைவி மதுரையிலிருந்து திரும்பி வரும்பொழுது உடன் பயணம் செய்த ஒரு பெண்மணி மூலமாக ஒரு முக்கியமான தகவலைத் தெரிந்துகொண்டிருந்தாள். அந்தப் பெண்மணி கடைய நல்லூரில் வசிக்கும் அகில இந்திய அபங் பஜன் புகழ் ஸ்ரீ துக்காராம் கணபதி மஹராஜ் அவர்களின் துணைவியார். பார்ப்பதற்கு மிகவும் எளிமையான தோற்றம் கொண்டவர்கள். ஸ்ரீ துக்காராம்ஜி அபங் பக்தி பாடல்களைப் பாடி உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் மக்களை மகிழ்வித்தவர். அவர்களுடைய குழுவிலிருந்து எல்லோரும் நடையாகச் சென்று ஐப்பசி மாதம் ஏகாதசி அன்று திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்திருக்கும் விட்டலாபுரம் பண்டரி நாதரின் கோவிலில் பஜனை செய்வார்களாம். விட்டலாபுரம் பண்டரிநாதன் கோவிலைப் பற்றி நாங்கள் தெரிந்திருக்கவில்லை.  எங்கள் கார் டயர் பங்க்சர் பார்த்துக்கொண்டிருந்த நேரம்தான் அந்தக் குழு நடையாக பண்டரிநாதனின் பெயரை பாடிக்கொண்டு நடையாகச் எங்களை கடந்து சென்று கொண்டிருந்தது. எனக்கும் அந்த பண்டரிநாதனின் கோவிலுக்கு போக வேண்டும் என்று தோன்றியது.


பாளையங்கோட்டையைத் தாண்டினால் முதலில் வருவது க்ருஷ்ணாபுரம். அங்கே 18-ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலி பகுதிகளை ஆண்டு வந்த குமரப்ப க்ருஷ்ணப்ப நாயக்கர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான ஒரு வெங்கடாசலபதி கோவில் இருக்கிறது. திருவேங்கடநாதர் என்பது மூலவரின் பெயர். இந்தக் கோவில் சிற்பங்களுக்கு பெயர் பெற்றது. பல நுண்ணிய வேலைப்பாடுகளுடன் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆளுயர சிலைகள் இங்கே பல உள்ளன. கர்ணன், பீமன், தர்மர், கரும்பு வில்லை தாங்கி நிற்கும் மன்மதன், ரதி தேவி, வீரபத்ரர் போன்றவர்களின் முழு உருவ சிலைகள் அர்த்த மண்டபத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கின்றன. சிலைகளைப் பாதுகாக்கும் பொருட்டு சிலைகளைச் சுற்றி வேலி அமைக்கப்பட்டிருந்தது. இன்னொரு சிறிய சிலையில் யானைக்கும் பசுவுக்கும் ஒரே தலை. ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் யானை, மறு பக்கத்திலிருந்து பசு போல் தோற்றமளிக்கிறது. புராதன கோவில் கட்டிட, சிற்பக் கலையில் ஆர்வமுள்ள எல்லோரும் பார்க்க வேண்டிய கோவில். தை மாதம் கும்பாபிஷேகம் செய்யப்போவதாகச் சொன்னார்கள். ஆனால், அதற்குள் வேலைகள் முடிந்துவிடும் போல் தோன்றவில்லை. கும்பாபிஷேகத்துக்காக மூலவரை திரை போட்டு மூடியிருந்தார்கள். அதனால் உற்சவரை மட்டுமே தரிசனம் பண்ண முடிந்தது. புகைப்படங்கள் எடுக்க அனுமதியில்லை என்பதால் என்னால் புகைப்படங்கள் எடுக்க முடியவில்லை. பல முறை திருச்செந்தூர் சென்று வரும் வழியில் இந்தக் கோவிலில் தரிசனம் செய்ய முயற்சித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் போகும் நேரத்தில் இந்தக் கோவில் நடை அடைத்திருந்தது. சுமார் 55 ஆண்டுகள் முன்பு பள்ளியில் படிக்கும்பொழுது இந்தக் கோவிலுக்கு போய் வந்ததில் மிகவும் சமாதானம்.


கிருஷ்ணாபுரத்திலிருந்து கொஞ்ச தூரம் தள்ளி வருவது செய்துங்கநல்லூர். அங்கிருந்து பிரிந்து செல்லும் ஒரு கிராமப்புற சாலை வழியாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளே போனால் வருவது விட்டலாபுரம். பண்டரி நாதர் கோவிலுக்கு மிக அருகே எங்கு பார்த்தாலும் ஆடுகள் கூட்டம் கூட்டமாக சாலையை மறித்து உட்கார்ந்து கொண்டிருந்தன. காரின் ஹார்ன் கொடுத்தும் பயனில்லை. காரை விட்டு வெளியே இறங்கி அவைகளை விரட்டிய பிறகுதான் மேலே போக முடிந்தது. பெரிதுமில்லை, சிறிதுமில்லை என்பது மாதிரி ஒரு அருமையான கோவில்.  சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகர சாம்ராஜ்யம் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் தக்ஷிண பண்டரிபுரம் என்றழைக்கப்படுகிறது. ருக்மணி சத்யபாமா சமேத பாண்டுரங்கர் இங்கே காட்சியளிக்கிறார்.  விஜயநகர சாம்ராஜ்யத்தின் தளபதியான விட்டலராயர் திருவிதாங்கூர் பகுதிகளின் மீது படையெடுப்பதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த சமயத்தில் பாண்டுரங்கர் அவரது கனவில் தோன்றியிருக்கிறார். பாண்டுரங்கரின் ஆணையின் படி செய்துங்கநல்லூருக்கு வந்து பொருணை நதிக் கரையில் (தாமிரபரணியின் இன்னொரு பெயர்) புதைக்கப்பட்டிருந்த பாண்டுரங்கரின் சிலையை கண்டெடுத்து நாட்டார்புரம் என்றழைக்கப்பட்ட ஊரில் (இன்று அதன் பெயர் விட்டலாபுரம்) அதை பரதிஷ்டை செய்தார் என்று இந்தக் கோவிலின் தலபுராணம் சொல்கிறது. விட்டலராயர் பின்பு தென்புறமாக கன்னியாக்குமரிக்கு அருகேயுள்ள சுசீந்திரம் நகரை வந்தடைந்திருக்கிறார். அங்கே திருவிதாங்கூர் மன்னருடன் போரின்றி ஒரு உடன்படிக்கை செய்துகொண்டு ஒப்பந்ததில் கிடைத்த எல்லா செல்வங்களையும் பாண்டுரங்கர் கோவிலின் பூஜைகளுக்காக ஒதுக்கிவிட்டு திரும்பிச் சென்று விட்டார். விட்டலாபுரம் கோவில் மிக அமைதியாக இருந்தது. சிறிய ஊர். கோவிலைச் சுற்றி வீடுகள். அமைதியான ஊர்.


விட்டலாபுரத்தில் பாண்டுரங்கனை தரிசித்துவிட்டு, நேராக திருச்செந்தூர் சென்றோம். திருச்செந்தூர் வளர்ந்துகொண்டே இருக்கிறது. கோவிலில் அன்று கூட்டமில்லாததால் நிம்மதியாக தரிசனம் செய்ய முடிந்தது. அன்று மாலைக்குள் பாப நாசம் செல்லவேண்டும் என்று திட்டமிட்டிருந்ததால் உடனேயே திரும்பி விட்டோம்.


மதியம் லாட்ஜில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு, நெல்லையில் சில தின்பண்டங்களை வாங்கிக்கொண்டு பாபநாசம் கிளம்பும்பொழுது மாலை மணி 04.30. பேட்டையில் ஏதோ ஒரு பாலத்தை சரி செய்து கொண்டிருந்ததால் மாற்று வழியில் எல்லா வாகனங்களையும் திருப்பிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் அது தெரியாமல் ஏதோ சின்ன  சின்ன முடுக்குகள் வழியாக காரை எடுத்துச் சென்று ரொம்பவே சிரமப்பட்டுப் போனோம். பேட்டை தாண்டியும் பாதைகள் பல இடத்தில் குண்டும் குழியுமாக இருந்தது. எங்கேயும் வேகம் எடுக்க முடியவில்லை. கொஞ்சம் பாத சரியாக இருக்கிறதே என்று நினைத்து வேகம் எடுத்தால் எதிர்பாராமல் ஒரு பெரிய பள்ளமோ அல்லது ஒரு  வேகத்தடையோ எதிர்படும். மிகக் கவனமாக ஓட்டிச்செல்ல வேண்டியிருந்தது.


பாபநாசம் அருகே இன்னொரு பாலம் சரிசெய்துகொண்டிருக்கிறார்களாம். அதனால், அம்பாசமுத்திரத்திலிருந்து ஆம்பூர் பாதை வழியாகப் போகவேண்டும் என்று போர்டு வைத்திருந்தார்கள். சுற்று வழி. பாதையோ மிக மோசம். எப்பொழுது வேண்டுமானாலும் மழை பெய்யலாம்போல் இருந்தது. பாபநாசம் சென்றடைந்தபோது மணி 6.00. மழையும் பிடித்துக்கொண்டது. கோவிலில் எங்கள் பிரார்த்தனையை முடித்துக்கொண்டு கிளம்பும்பொழுது மழை பலமாகவே பெய்யத் தொடங்கியது. பல  இடங்களில் மின்சாரம் இல்லை. எங்கும் இருட்டு. ஆண்டவனைப் வேண்டிக்கொண்டு கிளம்பிவிட்டோம்.  வழியில் ஒரு சில இடங்களில் சிறிய பாலங்கள் உடைந்திருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. எதைப் பற்றியும் யோசிக்காமல் வேகமாக பாபநாசத்திலிருந்து ஆம்பூர் வரை வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து விட்டேன். ஆம்பூர் வந்த பிறகுதான் மூச்சு வந்தது.


இரவு நேரத்தில் இப்பொழுதெல்லாம் வண்டி ஓட்டுவது மிகச் சிரமமாக இருக்கிறது. எதிரே வரும் மோட்டர்சைக்கிள், லாரி, கார் யாரும் ‘டிப்பரை’ பயன்படுத்துவதில்லை. கண்ணைக் கூச வைக்கும் வெளிச்சம். இடதுபுறமாக ரொம்ப ரிஸ்க் எடுத்துத்தான் ஓட்டவேண்டியிருக்கிறது.


மீண்டும் சொல்லத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் எந்த பாதை போட்டாலும் ஒரு மழைக்கு மட்டும் தாங்கும்படியாகத்தான் பாதை போடுகிறார்கள். வாகனங்களை ஓட்டிசெல்பவர்களுக்கோ அல்லது பயணிகளுக்கோ எந்த வசதியும் அரசாங்கம் செய்துகொடுப்பதில்லை. அல்லது அப்படி செய்துகொடுக்கும் ஒன்றிரண்டு இடங்களையும் மக்கள் சரியாகப் பயன்படுத்துவதில்லை. அதிகாரிகளே வெறுத்துப்போய் பராமரிப்பதில் ஒரு பலனுமில்லை என்று விட்டுவிடுகிறார்கள். இந்தக் கதை பல்லாண்டுகளாக தமிழகத்தில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. என்ன சொல்ல?                                             ….. நிறைவு

No comments:

Post a Comment