வடகிழக்குமானிலங்கள் – பகுதி 2 வடகிழக்குமானிலங்களில் நான் பணி புரிய நேரிட்டதே ஒரு எதிர்பாராத திடீர்
திருப்பம்.
அப்பொழுது
சென்னையில் பிரதானக் கிளையின் முக்கிய மேலாளராக பணி புரிந்துகொண்டிருந்தேன். வங்கியின்
பொது மேலாளரிடமிருந்து அவரை உடனே வந்து சந்திக்குமாறு உத்திரவு வந்தது. என்னவோ, ஏதோ
என்று கவலைப்பட்டபடியே ஓடினேன். அவரை சந்தித்தபோது அவர் கூறியது:
“வடகிழக்கு
மானிலங்களில் ஆறு புதிய கிளைகள் திறப்பதற்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து அனுமதி கிடைத்திருக்கிறது.
அந்த அனுமதி மார்ச் 31-ன்றோடு முடிந்துவிடும். மீண்டும் அனுமதி வாங்குவது கடினம். வடகிழக்குப்
பகுதியில் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியைக் காண வங்கி துடிக்கிறது. நீ நாளைக்கே விமானத்தைப்
பிடிக்கமுடியுமானால் குவாஹாத்தி போக வேண்டும். உன்னை அங்கே பிராந்திய மேலாளராக மாற்றுகிறோம்.
என்ன சொல்கிறாய்?”
இந்த
சந்திப்பு நடந்தது 1985 பிப்ரவரி முதல் வாரம். இரண்டு மாதத்துக்குள் ஆறு கிளைகளைத்
திறக்கவேண்டும். ஆறு கிளைகளும் கிராமப்புற பகுதிகளில். திறக்க முடிந்தால் எனக்குப்
பெருமை. திறக்க முடியாவிட்டால் நான் பலிகடா. இக்கட்டான நிலை எனக்கு.
சவாலை
ஏற்றுக்கொண்டேன். அந்த நிமிடத்திலேயே குவாஹாத்தி செல்வதற்கு ஒத்துக்கொண்டேன். வீட்டில்
மனைவியுடன் சண்டை, அவளை கலந்தாலோசிக்காமல் நான் முக்கியமான பல முடிவுகளை எடுத்து வருகிறேன்
என்று.
அடுத்த
நாள் இல்லை, ஐந்தாவது நாள் விமானத்தில் கல்கத்தா வழியாக குவாஹாத்திக்குப் பறந்தேன்.
குவாஹாத்தியில் இறங்கியவுடனேயே புதிய கிளைகள்
திறப்பதற்கு அனுமதி கிடைத்த ஊர்களை முதலில் பார்வையிடவேண்டும் என்று தீர்மானித்தேன்.
நவகான் என்ற பக்கத்து ஊரிலிருந்த கிளையைச் சேர்ந்த ஜீப்பில் இரண்டாவது நாள் பயணம் மேற்கொண்டேன்.
முன்பின் யாரையும் தெரியாது. அசாம் மொழி தெரிந்த உள்ளூர் அதிகாரி ஒருவரையும், எங்கள்
அலுவலகத்தில் வேலை பார்த்த விவசாய அதிகாரியையும் துணைக்கு வைத்துக்கொண்டேன். குவாஹாத்திக்கு
வெளியே நவகான் செல்லும் பாதையில் பாதையோர ஆஞ்சனேயர் கோவில். ஜீப்பை நிறுத்தி ஆஞ்சனேயரிடம்
என்னுடன் துணையிருந்து எடுத்த வேலையை முடித்துத் தருமாறு பிரார்த்திக்கொண்டேன்.
ஒரு
புதிய கிளை திறப்பதற்கு ரிசர்வ வங்கியின் வழிகாட்டல் படியான ஒரு கட்டிடம் கிடைக்கவேண்டும்.
பின்னர் அதை நிர்வகிப்பதற்கு உள்ளூர் மேலாளர் வேண்டும். அசாம் மொழி தெரிந்த இடை நிலை,
கடை நிலை ஊழியர்கள் வேண்டும். இவையெல்லாம் மார்ச் 31-க்குள் நடக்க வேண்டும்.
வடக்கு
நோக்கி ஜீப் பறந்தது. முதல் நிறுத்தம் நவகான் என்ற ஊர். எங்களுடைய கிளை இங்கே ஏற்கெனவே
இருந்தது.
நவகான்
ஊருக்கருகில் இரண்டு புதிய கிளைகளைத் திறக்க வேண்டும். அந்த இரண்டு கிராமங்களைச் சென்று
பார்த்தேன். சுற்று வட்டாரங்களில் விவசாயம்தான் முக்கியமான தொழில். தண்ணிருக்கு பஞ்சமில்லை.
ஊரை அடைவதற்கு கிராமப்புற பாதை. ஜீப், மோட்டர் பைக் செல்லலாம். மழை காலத்தில் பாதைகள்
துண்டிக்கப்படலாம். நடந்துதான் போக வேண்டியிருக்கும். ஒரு ஊர் –ஹாத்திபுக்ரி - பரவாயில்லை.
முயற்சி செய்தால் இடம் கிடைத்துவிடும். இரண்டாவது இடத்தில் – பெயர் நினைவில் இல்லை
-கட்டிடங்கள் என்று சொல்ல எதுவுமேயில்லை. எல்லாம் குடிசைகள். நாங்கள் போனவுடன் ஊர்
மக்கள் எங்களை சூழ்ந்துகொண்டார்கள். வங்கியின் கிளை திறக்கப்போகிறது என்ற செய்தி காட்டுத்
தீ போல ஊர் முழுவதும் பரவியிருக்கவேண்டும். “எப்பொழுது திறக்கப் போகிறீர்கள்? எங்களுக்கெல்லாம்
கடன் கொடுப்பீர்களா?” போன்ற பல கேள்விகளால் என்னை துளைத்தெடுத்தார்கள். சூழ்ந்திருந்த
எல்லோரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி ஒரே அச்சில் வடித்தவர்கள் போல் இருந்தார்கள். பெரும்பாலானவர்கள்
பங்களாதேஷிலிருந்து ஓடி வந்த அகதிகள். அவர்களுக்குச் சொந்தம் என்று எதுவும் கிடையாது.
மிகவும் பாவப்பட்ட ஏழைகள். கண்டிப்பாக அவர்களுக்கு உதவ வேண்டும். ஆனால், பிரச்சினை
என்னவென்றால் ஊரிலுள்ள மசூதியைத் தவிர வேறு கட்டிடம் எதையும் பார்க்கமுடியவில்லை. கிளை
திறப்பதற்கு ஒரு இடம் வேண்டும் என்றேன். எங்கள் மசூதியில் திறந்துகொள்ளுங்கள் என்றார்கள்.
‘மசூதியிலேயே கிளையா? ரிசர்வ் வங்கி அதை அனுமதிக்குமா?’ போன்ற கேள்விகளுக்கு என்னிடம்
அப்பொழுது விடையில்லை. “இல்லை, தனியார் இடம் கிடைத்தால் நல்லது,” என்றேன். எல்லோரும்
தங்கள் இடத்தை எடுத்துக்கொள்ளுமாறு முன் வந்தார்கள். ஆனால், ஒரு கட்டிடத்தை ரிசர்வ்
வங்கியின் வழிகாட்டலின் படி கட்டித்தர அவர்களில் யாருக்கும் வசதியில்லை. யாருக்கும்
அவர்கள் வசிக்குமிடம் சொந்தமில்லை. எல்லாம் புறம்போக்கு நிலம். விரைவில் முடிவெடுக்கிறோம்
என்று மட்டும் கூறி அங்கிருந்து விடை பெற்றுக்கொண்டேன். மனதுக்கு சங்கடமாகத்தான் இருந்தது.
அடுத்த
இடம் ஜோர்ஹாட். அங்கேயும் இரண்டு கிராமப்புறங்களில் கிளைகள் திறக்கவேண்டும். ஒன்று-
கொசைன்சத்ரா. கோலாகாட் என்ற ஒரு ஊருக்கு மிக அருகாமையிலிருந்தது. பிரச்சினையில்லை.
இன்னொன்று – ஹாத்திகோவா - உள்ளே தள்ளிப் போகவேண்டும். மிக எளிமையான, அழகான கிராமம்.
முதல் பார்வையிடலிலேயே உள்ளூரில் கொஞ்சம் வசதியான ஒருவர் தன் வீட்டின் இன்னொரு பகுதியை
மாற்றியமைத்து கிளை திறப்பதற்கு இடம் கொடுப்பதாக வாக்களித்தார். இடமும் சரியாக இருந்தது.
உடனேயே ஒப்புக்கொண்டென். ஒரே நாளில் இரண்டு கிளைகளுக்கான அஸ்திவாராம் போட்டாயிற்று.
குவாஹாத்திக்குத் திரும்பிவிட்டேன்.
வந்தவுடன்
அலுவலக ஊழியர்களின் யூனியனுடன் பேச்சு வார்த்தை. அவர்களின் முக்கியமான வேண்டுகோள் எல்லா
புதிய கிளைகளையும் உடனே திறந்துவிட வேண்டும். பல அசாமிய இளைஞர்களூக்கு வேலை வாய்ப்புக்கு
ஏற்பாடு செய்யவேண்டும். நான் குவாஹாத்தியில்
இறங்கியவுடனேயே வேலையில் இறங்கிவிட்டது பற்றி அவர்களுக்கு மகிழ்ச்சி.
ஒரு
சில தினங்களுக்குப் பிறகு வடக்கு லக்கிம்பூருக்குப் பயணம், அங்கே இரண்டு கிளைகளுக்கு
அனுமதி கிடைத்திருந்தது. முதன் முதலாக ப்ரம்மபுத்ராவை விமானத்தில் மூன்று முறை கடந்து
பிரமித்தேன். ஒரு ஊரின் பெயர் கோய்லாமாரி. இன்னொன்று இப்பொழுது நினைவில் இல்லை. கோய்லாமாரியை
ஒரு ஊர் என்று சொல்வதைவிட ஒரு தேயிலைத் தோட்டம் என்றுதான் சொல்லவேண்டும். அங்கே தேயிலைத்
தோட்டத்தை விட்டால் வேறெதுவுமேயில்லை. தோட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கான
பல குடிசைகள். பரம ஏழைகள். தோட்டத்தில் மேலாளரின் ஒரு பெரிய பங்களா. முன்பின் அறிமுகமில்லாவிட்டாலும்
அந்த மேலாளர் நன்கு உபசரித்து அந்த தோட்டத்தைப் பற்றி விவரமாகக் கூறினார். அவர் சொன்னதில் முக்கியமான தகவல் என்னவென்றால் அந்த
தோட்டத்தில் அடிக்கடி புலிகள் சுற்றி வருமாம். குறைந்தது இரண்டு மூன்று குடும்பங்கள்
புலியால் அழிந்திருக்கின்றன என்றார். ஒரு ஐம்பது அறுபது தொழிலாளிகளுக்காக ஒரு புதிய
கிளையை எப்படித் திறப்பது?
மற்றொரு
ஊருக்கு - பெயர் மறந்துவிட்டது - அப்பொழுது போக முடியாது என்று சொன்னார்கள். கனமழை
இல்லாத நாட்களில் படகு மூலமாக ஒரு ஆற்றை கடந்துதான் அந்த ஊருக்கு போகமுடியுமாம். மழை
காலங்களில் போவது சாத்தியமில்லை. ஒரு ஊரையே அணுக முடியாது என்றால் அங்கே ஒரு வங்கியின்
கிளையை எப்படித் திறப்பது?
வடகிழக்கு
மானிலங்களில் பெரும்பாலான கிராமங்கள் இப்படித்தான். மிகவும் பின் தங்கியவை. ஒரு வங்கியின்
கிளையைத் திறப்பதற்கு பாதுகாப்பான கட்டிடம் தேவை. அந்த பகுதிகளில் ஊடுருவிகள், பயங்கரவாதிகளினால்
அடிக்கடி பல அசந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எளிதாக எட்டமுடியாத இடங்களில் வேலை
பார்ப்பதற்கு அலுவலர்கள் கிடைப்பது மிகக் கடினம். உள்ளுரிலேயே படித்த இளைஞர்களை வேலைக்கு
அமர்த்திக்கொள்ளலாம் என்றால் சட்டம் அனுமதிக்கவில்லை. இந்த ஊர்கள் வளர்ச்சியடைய வேண்டுமென்றால்
மிகக் கடினமாக தன்னலமற்று உழைப்பும், பலரின் ஒத்துழைப்பும் வேண்டும்.
ஒன்றிரண்டு
மாதங்களில் மூன்று கிளைகளை மட்டுமே என்னால் திறக்க முடிந்தது.
நவ்கானில்
எங்களுக்கு அனுமதி கிடைத்த ஊரில் ஒன்று அந்த நேரத்தில் அசாமின் நிதி அமைச்சரின் தொகுதியில்
அமைந்திருந்தது. சரி, அவரைப் போய் சந்திக்கலாம். உதவி கேட்கலாம் என்று போனேன். எந்தவித
படாடோபமுமில்லாமல் தன்னைக் காண எனக்கு அனுமதி கொடுத்தார். மிக எளிமையானவர். நானும்
அவரிடம் அந்த ஊரில் மசூதியைத் தவிர வேறு கட்டிடமேயில்லை, கட்டிடம் கட்டுவதற்கு கடன்
வசதி செய்துகொடுத்தாலும் ரிசர்வ் வங்கியின் பல வரைமுறைகளுக்குட்பட்டு அங்கே ஒரு கட்டிடத்தை
உருவாக்குவது சிக்கனமற்றது என்பதையும் எடுத்துக்கூறி அரசாங்கமே ஒரு சிறிய கட்டிடத்தை
கட்டித் தருமாறு கேட்டுக்கொண்டேன். எவ்வளவோ முயன்றும் அது நடக்கவில்லை. மற்ற இரண்டு
ஊர்களும் கிளைகள் திறப்பதற்கு அப்பொதைக்கு லாயக்கற்ற இடங்கள் என்பதையும் என் மேலதிகாரிகளுக்கும்,
உள்ளூர் ரிசர்வ் வங்கிக்கும் தெரிவித்து விட்டேன். இடையில் தேர்தல்கள் வந்துவிட்டன.
அசாம் கன பரிஷத்தின் சூறைக்காற்றில் அரசாங்கமே மாறிவிட்டது. புதிய அரசாங்கம், புதிய
கொள்கைகள், புதிய எதிர்பார்ப்புகள். மத்தியில் ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்தார்.
புதிய உற்சாகம். வடகிழக்கு மானிலங்களின் வளர்ச்சிக்காக வடகிழக்கு கௌன்சில் ஒன்றை நிறுவி
அதை செயல்படுத்துவதற்கு மத்திய அரசாங்கத்திலிருந்து ஒரு பெரிய அணியையே ஏவினார்.
Very interesting keep it up
ReplyDelete