Pages

Thursday, December 31, 2015

2016-ல் எனது எதிர்பார்ப்புகள்:

மனைவி, குழந்தைகள், மருமகன், மருமகள், பேரக்குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் அவரவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை குறை கூறுவதோ, மதிப்பீடு செய்வதோ கூடாது.

ஆசைகள் இருப்பதில் எந்த தவறுமில்லை என்று கருதுகிறேன். ஆசைகள்தான் என்னை என் வாழ்க்கையில் முயற்சி செய்ய உந்துகோலாக இருந்திருக்கின்றன. முன்னேற வைத்திருக்கின்றன. சாதிக்க வைத்திருக்கின்றன. ஆனால் இதே ஆசைகள் தீவிர பற்றுதலாக மாறும்பொழுது நான் நானாக இருப்பதில்லை. அதனால் எந்தப் பொருளின் மீதும் பற்றில்லாத வாழ்க்கையை நடத்த வேண்டும். பற்றுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது, அதிகரிக்கிறது. எதிர்பார்ப்பையும் கைவிட வேண்டும்.

என்னை எனக்குள்ளேயே ஒடுக்கிக்கொள்ள பழகவேண்டும். நான் யார் என்பதை இதுவரை ஒரு அறிவாகத்தான் படித்தும், பார்த்தும், மற்றவர்களிடம் கேட்டும் அறிந்திருக்கிறேன். உணரவில்லை. உணர வேண்டும்.

எத்தனை நாட்கள் உயிரோடு வாழ்கிறேனோ அதுவரை ஆரோக்கியமாக இருக்க வேண்டும். எனது ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது என்பதை உணர்கிறேன். வாழ்க்கையில் இது வரை கடைபிடித்த பழக்க வழக்கங்களின் பலனை அனுபவிக்கிறேன் என்பதையும் உணர்கிறேன். கர்மபலனையும் மீறி ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறேன். தினப்படி வாழ்க்கையில் இன்னும் ஒழுக்கம், கட்டுப்பாடு தேவை. நாவினை கட்டுப்படுத்த வேண்டும் – பேச்சாக இருந்தாலும் சரி, உணவாக இருந்தாலும் சரி.

முன்கோபம், ஆத்திரம், பொறாமை, குற்ற உணர்ச்சி, மனக்காயம் இல்லாமல் நாட்களைக் கழிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் இதுவரை முயற்சி செய்து தோற்றிருக்கிறேன். 2016-ல் மீண்டும் இன்னும் தீவிரமாக முயல வேண்டும்.

முக்கியமான எதிர்பார்ப்பு – மீண்டும் பிறவாத வரம் வேண்டும். இந்த வாழ்க்கையிலேயே எல்லாவற்றையும் அனுபவித்தாகிவிட்டது. எந்தக் குறைகளும் இல்லை. எவரிடமும் எனக்கு குறைகள் இல்லை. இன்னொரு பிறவி வேண்டாம்.

இதுவரை அனுபவித்த நல்லது - கெட்டது, சந்தோஷமானது - வருத்தத்தைக் கொடுத்தது, வெற்றி – தோல்வி, எல்லாவற்றிற்கும் நன்றி. ‘நான் யார்’ என்பதை இந்த அனுபவங்களும் நான் தினமும் சந்திக்கும், கூடப்பழகும் மக்களும் எனக்குக் காட்டித் தந்திருக்கின்றனர். எல்லோருக்கும் நன்றி. இந்த வாழ்க்கைக்கு நன்றி.
 

No comments:

Post a Comment