3-ஆம்
பகுதி - வடகிழக்கு மானிலங்கள் – மலரும் நினைவுகள்
நான் வங்கியில் பணி புரிந்த 25 ஆண்டுகளில் மிகவும்
ரசித்த பகுதி என்று சொல்லக்கூடியவற்றில் குவாஹாத்திக்கு முக்கிய பங்கு உண்டு. அங்கே
பணி புரிந்த நாட்களில் பல சுவையான அனுபவங்கள். அதில் குறிப்பாக ஒன்றைப் பற்றி இங்கே
கண்டிப்பாக கூற வேண்டும்.
வடகிழக்கு
மானிலங்களில் விவசாயம் மிக முக்கியமான தொழில். நீர் வளம், நில வளம் மிக்க இடம் என்று
ஏற்கெனவே கூறியிருந்தேன். ஆனால் விவசாயம் செய்வதற்கு பல தடங்கல்கள் என்றும் கூறியிருந்தேன்.
அவற்றில் மிக முக்கியமானது ப்ரம்மபுத்ராவில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது. விவசாய
முறைகள் பழமையானவை. விவசாயிக்கு விளைபொருளுக்கான உரிய விலை கிடைக்காததால் தங்களுக்குத்
தேவைக்கு மேல் மக்கள் அதிகம் அவர்கள் பாடுபடுவதில்லை. இடைத் தரகர்களே அதிகமாக பயன்பெற்றனர்.
வடகிழக்கு
மானிலங்களின் விவசாயப் பொருட்களை சரியான முறையில் சந்தைக்கு கொண்டு வந்து விவசாயிக்கு
விவசாயம் செய்வதன் பலன் நேரடியாகப் போய்ச் சேரவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு மத்திய
அரசாங்கத்தின் ஒரு நிறுவனம் NERAMAC செயல்பட்டு வந்தது.அதற்கு புதியதாக ஒரு தலைவர்
நியமனம் செய்யப்பட்டிருந்தார். மிகவும் துடிப்பானவர். விவசாயிகளின் நலனில் மிகவும்
ஈடுபாடு கொண்டவர். வங்கிக் கணக்கு தொடங்குவதில் எங்களுக்கு அவருடன் தொடர்பு ஏற்பட்டது.
அவருடைய கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன.
சிட்ரோனலா
எண்ணை பற்றி அவர் கூறிய தகவல் என்னை அதிர வைத்தது. சிட்ரோனலா புல்லிலிருந்து எண்ணை
பிழிந்தெடுக்கப்படுகிறது. தேயிலைத் தோட்டங்களில் தேயிலை சீசன் முடிந்த பிறகும் அடுத்த
சீசன் தொடங்குவதற்கு முன்பும் எலுமிச்சை புல், சிட்ரோனலா புல் போன்ற புல் வகைகள் ஒரு
களையாக காடுபோல வளரும். இந்தப் புல்லை வெட்டியெடுத்து கரும்புச்சாறு பிழிந்தெடுக்கும்
இயந்திரம் பொல ஒரு சிறிய இயந்திரத்தில் பிழிந்தெடுத்து எண்ணையை பிரித்தெடுக்கிறார்கள்.
மிகவும் பழமையான முறை. வயல்களிலிருந்து புல்லை வெட்டி எடுக்கவேண்டும். மிகக் கடினமான
உடல் உழைப்பு தேவைப்படும். நிறைய வேலையாட்களும் கூலியாட்களும் தேவைப்படும். பெரும்பாலான
கூலியாட்கள் பிஹாரிலிருந்து பிழைப்புக்கு அசாமுக்கு வந்தவர்கள். பெரிய நகரங்களில் மருந்து,
சோப், சென்ட் போன்ற ஆடம்பர அழகுப்பொருட்களில் இந்த எண்ணை அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது.
பெரிய நகர மார்க்கெட்டுகளில் கிலோவுக்கு 200-300-க்கு விற்று வந்தார்கள். ஆனால் அசாமிலோ
அதற்கு விவசாயிக்கு கிடைத்த விலை ரூபாய் 20-30தான். பல இடைத்தரகர்கள் இந்த கூலி விவசாயிகளுக்கு
ரூபாய் 5000 – 10000 என்று கடன் கொடுத்து வைத்து அவர்களை கொத்தடிமைகளாகவே நடத்தி வந்தார்கள்.
இந்த
நிலையை மாற்றவேண்டும் என்று கருதினார் நெராமாக்கின் தலைவர். விவசாயிக்கு குறைந்தது
50-60 ரூபாய் கிலோவுக்கு கிடைக்குமாறு ஏற்பாடு செய்யவேண்டும் என்றார். ஆனால் அந்த ஏழை
விவசாயிகள் இடைத் தரகர்களையே காலம் காலமாக அதிகமாக நம்பினர். புதிய இடைத்தரகர்களை
– அது அரசாங்கமாகவே இருந்தாலும் கூட அவர்கள் நம்புவார்களா என்று தெரியவில்லை.
விவசாயிக்கு
நியாயமான விலை கிடைக்கவேண்டும் என்ற முதல் குறிக்கோளுடன் ஒரு திட்டம் தீட்டினோம். விவசாயிகளுக்கு
எங்களது வங்கி அவர்களது பழைய கடனை அடைப்பதற்கும் புதிய தேவைகளுக்கும் நேரடியாகக் கடன்
வழங்கும். இடைத்தரகர்களின் கிடுக்குப்பிடியிலிருந்து விவசாயிகள் வெளிவர இது உதவும்.
இரண்டாவது எண்ணை கொள்முதல் செய்ய சிட்ரோனலா எண்ணை உற்பத்தி செய்யும் இடத்துக்கே நாம்
சென்று விட வேண்டும். விவசாயிகளை பெரிய ஒரு நகரத்துக்கு எண்ணையைக் கொண்டு வந்து கொடு
என்றால் வர மாட்டார்கள். வாரம் ஒரு முறையாவது இப்படி அவர்கள் இடத்துக்கே சென்று எண்ணையை
கொள்முதல் செய்து கையோடு பணத்தையும் கொடுத்துவிட வேண்டும். கையோடு பணத்தையும் கொடுத்துவிடுவது
மிகவும் முக்கியம். அப்பொழுதுதான் விவசாயிகள் நம்மை நம்புவார்கள். ஒவ்வொரு முறையும்
எண்ணைக்காக கொடுக்கும் பணத்தில் ஒரு சிறிய பகுதியை அவர்களது வங்கிக் கடனை அடைப்பதற்கு
பிடித்துக்கொள்ள வேண்டும். இதற்கு நேராமேக், வங்கி, விவசாயி மூன்று பேரும் ஒரு கூட்டு
ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். இதுதான் எங்கள் திட்டம்.
முதலில்
திக்பாய் என்ற ஊரைத் தேர்ந்தெடுத்தோம். அந்த ஊருக்கு வெளியே உள்ள ஒரு சில கிராமங்களில்
தண்டோரா போட்டு எங்கள் திட்டத்தை அறிவிக்க வைத்தோம். கிராம அதிகாரிகள் நன்கு ஒத்துழைத்தார்கள்.
அந்த கிராமத்துக்கு நாங்கள் கொள்முதல் செய்ய வரப்போகும் தேதியையும், ஒரு கிலோ எண்ணைக்கு
ரூபாய் 60 கொடுப்போம் என்ற தகவலையும் முன்னறிவிக்க ஏற்பாடு செய்தோம்.
வங்கியும்,
நெராமேக் நிறுவனமும் கொள்முதலில் தலையிடப்போகிறது என்ற தகவல் கண்டிப்பாக இடைத்தரகர்களுக்கு
அதிர்ச்சியைக் கொடுத்திருக்கவேண்டும். கொள்முதல் செய்வதற்கு நாங்கள் நிச்சயித்திருந்த
நாளுக்கு ஒன்றிரண்டு நாட்கள் முன்னதாக எங்களுக்குத் தொலைபேசி மூலமாக மிரட்டல்கள் வந்தன.
ஊரில் காலெடுத்து வைத்தால் கை, கால்கள் முறிக்கப்படும் என்று மிரட்டல்கள் விட்டார்கள்.
எனக்கு உள்ளூரக் கொஞ்சம் நடுக்கம்தான்.
நெராமேக்
தலைவர் அசாம் டி.ஜி.பியிடம் பேசினார். நானும் பேசினேன். நம்மூர்காரர்தான் ஐ.ஜி.பியாக
இருந்தார். எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதாக உறுதியளித்தனர்.
நிச்சயிக்கப்பட்ட
நாளன்று ஒரு பெரிய போலீஸ் படையுடன், ஒரு ஜீப்பில் பெரிய பீப்பாய் ஒன்றை ஏற்றிக்கொண்டு,
ஒரு பெட்டி நிறைய வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட கணிசமான பணத்தையும் வைத்துக்கொண்டு
திக்பாயில் ஒரு கிராமத்துக்குள் நுழைந்தோம். அங்கங்கே சிட்ரோனலா எண்ணை பிழிவது நடந்து
கொண்டிருந்தது. வழியில் கிராம மக்கள் வரிசையாக நின்று எங்கள் பரிவாரத்தை அதிசயத்துடன்
பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
கிராமத்தின் நடுவில் ஒரு திறந்த கீத்துக்கொட்டகைக்குள் எங்கள்
கடையைத் திறந்தோம். ஒலிப்பெருக்கியில் எங்கள் அறிவிப்பு தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.
நெராமேக்கின் தலைவரும் எங்களில் ஒருவராக நின்று கொண்டிருந்தார்.
சிறிது
நேரத்துக்கு யாருமே முன் வரவில்லை. எங்களுக்கெல்லாம் ஏமாற்றம். கிலோவுக்கு அறுபது ரூபாய்
போதவில்லையோ என்றும் ஒரு சந்தேகம். நாங்கள் கொண்டுசென்ற பீப்பாய் காலியாக வானத்தைப்
பார்த்துக்கொண்டிருந்தது.
மெதுவாக
ஒரு விவசாயி ஒன்றிரண்டு லிட்டர் எண்ணையை கொண்டுவந்து கொடுத்து கையோடு பணத்தையும் பெற்றுக்கொண்டார்.
அவர் முகத்தில் பெருமிதம். மகிழ்ச்சி. பிறகு இன்னொருவர் வந்தார். அப்புறம் இன்னொருவர்…
ஒரு இரண்டு மணி நேரத்தில் சுமார் நூறு கிலோ எண்ணை கொள்முதலாகியது.
முதல்
முயற்சி வெற்றி. அடுத்த நாள் எங்களுக்கு கிடைத்த செய்தி எங்களை இன்னும் அதிக வியப்பில்
ஆழ்த்தியது. சிட்ரோனலா எண்ணையின் கொள்முதல் விலையை இடைத்தரகர்கள் எழுபது ரூபாக்கு ஏற்றியிருந்தனர்.
“இந்த
திருப்பத்தைத்தான் நான் எதிர்பார்த்தேன். விவசாயிக்கு நியாயமான விலை கிடைக்கவேண்டும்
என்பதுதான் எங்களது குறிக்கோள். இந்த வியாபாரத்தை நாமே நடத்த வேண்டும் என்பதில்லை,”
என்று நெராமேக் தலைவர் கூறினார்.
இதே
போல் டின்சுகியாவில் ஆரஞ்சு பழம், திரிபுராவில் தேங்காய், இஞ்சி, அன்னாசிப் பழம் இவற்றின்
மார்க்கெட்டிங்கையையும் விரிவுபடுத்த நாங்கள் திட்டமிட்டோம். டின்சுகியாவில் தோட்டத்தில்
ஆரஞ்சுப் பழத்தின் கொள்முதல் விலை 20-30 பைசா. அதே ஆரஞ்சு குவாஹாத்தியில் மார்க்கெட்டில்
இரண்டு ரூபாய். திரிபுராவில் தேங்காய் தோப்பில் ஒரு தேங்காய்க்குக் கிடைப்பது ஐம்பது
பைசா. மார்க்கெட்டிலோ இரண்டு, மூன்று ருபாய். இஞ்சியும் அப்படித்தான். அன்னாசி, பலாப்பழம்
அடிமட்ட விலையில் கொட்டிக்கிடக்கும். திரிபுராவில் பழங்களைப் பதப்படுத்தி பழரசம், ஜாம்
தயாரிப்பதற்கு நெராமேக்கின் தலைவர் திட்டம் தீட்டினார். தொழிற்சாலைக்கு தேர்ந்தெடுத்த
இடத்தில் பயங்கரவாதிகள், ஊடுருவிகளின் தொந்தரவையும் மீறி துணிவோடு செயல்பட்டார். திரிபுராவின்
அன்றைய முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு எல்லா வசதிகளையும் செய்துகொடுத்தார் என்று
கேள்விப்பட்டேன்.
விவசாயிகளின்
இடத்திலேயே வங்கியின் வேலைப்பாடுகளை வைத்துக்கொள்ள வேண்டுமானால், அன்றைய காலக்கட்டத்தில்
ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவைப்பட்டது. மேலும் பல இடங்கள் பாதுகாப்பில்லாதவை. ரிசர்வ்
வங்கியில் வரையறைக்குள் உட்பட்டு சில திட்டங்களைச் செயல்படுத்துவது என்பது இயலாதது
என்பதால் நெராமேக்கின் எல்லா திட்டங்களிலும் எங்களால் ஈடுபடமுடியவில்லை. மேலும் எங்களுக்கு
கிளைகள் குறைவாகவே இருந்தன. நல்ல எண்ணம் இருந்தாலும் செயல்பட முடியாத சூழ்னிலை.
…இன்னும்
தொடரும்
No comments:
Post a Comment