Pages

Sunday, September 04, 2016

4. லடாக் சுற்றுப் பயணத்தின் 3 மற்றும் 4-ஆம் நாள். நூப்ரா பள்ளத்தாக்குக்கு விஜயம்

09.08.16

இன்று நூப்ரா பள்ளத்தாக்குக்கு போவதாகத் திட்டம்

இமயமலையின் லடாக் மற்றும் கரக்கோரம் மலையுச்சிகளைப் பிரிக்கும் நூப்ரா பள்ளத்தாக்கு லே நகரத்திலிருந்து சுமார் 150 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. சிந்து நதியின் ஒரு கிளையான ஷியோக் நதியும் சியாச்சென் நதியும் சங்கமிக்குமிடத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 10000 அடி உயரத்தில் இந்தப் பள்ளத்தாக்கு உருவாகியிருக்கிறது. லே-யிலிருந்து இந்த இடத்துக்குப் போவதற்கு 18000 அடி உயரத்தில் உலகிலேயே மிக அதிக உயரத்தில் மோட்டர் வாகனங்கள் செல்ல வசதியுள்ள கார்டங் லா கணவாய் வழியாகச் செல்ல வேண்டும்.  லா என்ற வார்த்தை திபெத் மொழியில் கணவாயைக் (PASS) குறிக்கிறது.






டிஸ்கிட் இந்தப் பள்ளத்தாக்கின் முக்கியமான ஊர். இங்கிருந்து சற்று தூரத்தில் பல மைல்கள் நீளமான ஹண்டர் மணல் மேடுகள் (SAND DUNES) அமைந்துள்ளன.   இந்த ஒட்டகத்தின் மீது மணல் மேடுகளில் சவாரி செய்வதற்கு கால் மணி நேரத்துக்கு இருநூறு ரூபாய் வாங்குகிறார்கள்.  




முதுகில் இரண்டு முண்டுகள் கூடிய பாக்ட்ரியன் ஒட்டகங்கள் (BACTRIAN CAMEL) இங்கு பிரபலம். 


கார்டங் லா வழியாக நூப்ரா பள்ளத்தாக்கு வரை காரை ஓட்டிச் செல்லும் வழியில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் மலையடங்கிய நிலப்பரப்பில் ஏற்பட்ட பல நில அழுத்தங்களால் உண்டான செங்குத்தான இடுங்கிய பள்ளத்தாக்குகளை (CANYON) பார்த்துக்கொண்டே செல்வது மயிர்கூச்செரியும் அனுபவம்.

தூரத்தில் ஷியோக் நதி பள்ளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.  இவற்றை பார்க்கும் பொழுது அமெரிக்காவில் அரிசோனா மானிலத்தில் இருக்கும் ‘கிரான்டு கேன்யான்’ (GRAND CANYON) இடுங்கிய பள்ளத்தாக்கும் கோலராடோ (COLARADO) நதியும்தான் ஞாபத்துக்கு வந்தது.  

டிஸ்கிட் ஊரில் ஒரு மலையுச்சியில் ப்ரம்மாண்டமாக ஒரு புத்த விஹாரம் அமைந்திருக்கிறது. அதன் மேல் சுமார் 100-அடி உயரமுள்ள மைத்ரேயரின் உருவச்சிலை. வெகு தூரத்தில் வரும்பொழுதே இந்த விஹாரமும் மைத்ரேயரின் உருவச்சிலையும் கண்ணுக்குத் தெரிகிறது.    அருகிலுள்ள பனாமிக் என்ற இன்னொரு இடத்தில் ஒரு வென்னீர் ஊற்று (HOT SPRING) இருக்கிறது. நேரப் பற்றாக்குறையினால் எங்களுக்கு அங்கே போக முடியவில்லை.  கில்ஜித்-பால்டிஸ்தான் என்ற இடத்தில் ஷியோக் நதியையொட்டி இந்திய-பாக்கிஸ்தான் எல்லை மிக அருகில் இருக்கிறது.  

லே-யிலிருந்து நூப்ரா பள்ளத்தாக்கு செல்லும் பாதை ஒரு 25-30 கி.மீ தூரத்துக்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தது. பாதை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த 25-30 கி. மீ தூரம் பயணம் செல்பவர்களின் முதுகை சரியாகப் பதம் பார்த்துவிடுகிறது. மற்றபடி இந்தப் பாதை மிக  நன்றாகவே இருந்தது.  பல இளைஞர்களும் இளைஞ்ஞிகளும் மோட்டர் பைக் ஓட்டிக்கொண்டு இந்தப் பள்ளத்தாக்குக்கு வருகிறார்கள்.

நதிக்கரையோரத்தில் மிகக் குறைந்த வசதிகளே கொண்ட ஒரு கூடாரத்தில்தான் அன்று தங்கவேண்டும்.  இப்படிப் பல கூடாரங்களை அமைத்தே ஒரு சில விடுதிகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.



கூடாரத்தில் இரவைக் கழிப்பது என்பது இதுவரை வாழ்க்கையில் நாங்கள் அனுபவிக்காத ஒன்று. மிகவும் எதிர்பார்ப்புடனும் மனக் கிளர்ச்சியுடனும் ‘HIMALAYAN DESERT CAMP’  என்ற அந்த ஹோட்டலை அடைந்தோம்.  ஹோட்டலை அடைந்து அந்தக் கூடாரங்களையும், அவற்றின் எடுப்பான அமைப்பையும், உள்ளே நேர்த்தியான வசதிகளையும் பார்த்தபொழுது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.   கூடாரம் அமைந்திருந்த திறந்த வெட்டவெளி, தூரத்தில் கொஞ்சமாகத் தெரிந்த நதி, ஒரு சில பறவைகளின் பாட்டுக்களைத் தவிர வேறு எந்த சத்தமும் கேட்காத அமைதி, இதமான குளிர், வில் அம்பு எரியும் வீர சாகச விளையாட்டுக்களுக்கு (ARCHERY) வசதி, கால் பந்து மைதானம், டேபிள் டென்னிஸ் விளையாட உள்ளரங்கம், வரிசையாக அமைந்திருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட கூடாரங்கள், இவை எல்லாவற்றுக்கும் மேலாக அருமையான இரவு உணவு எல்லாமே மிக அம்சமாக எங்களை அசத்தியது. இரவு 9 மணிக்கு அங்குமிங்குமாக வானத்தில் காணப்பட்ட ஒரு சில நட்சத்திரக் கூரைக்கு அடியில் திறந்த வெளியில் மரக்கட்டைகளை எரித்து (CAMP FIRE) அதைச் சுற்றி சுற்றுப் பயணிகள் அமர்ந்திருக்க இருவர் கிடார் இசைக்கருவியுடன் பாட ஆரம்பிக்க…ஆஹா, சொர்க்கமே பூமிக்கு வந்துவிட்டது போல இருந்தது. கண்காணாத, எளிதில் சென்று வர முடியாத ஒரு அத்வானக் காட்டில் இவ்வளவு வசதிகளா என்று ஆச்சரியப்படோம். 

என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, எனக்கும் என் மனைவிக்கும் மட்டும் சற்று கூடுதல் வசதிகொண்ட ‘LUXURY’ வகை கூடாரம் ஒதுக்கப்பட்டது.

நூப்ராவில் கூடாரத்தில் தங்கியது மிக இனிமையான, புதுமையான அனுபவம். இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு இங்கே தங்க மாட்டோமா என்று ஒரு ஏக்கம் மனதில் ஏற்பட்டது. தொலைபேசியில்லை. அலைபேசியில்லை. இயற்கையான சூழ்னிலை. மிதமான குளிர். மனதை சாந்தப்படுத்த அருமையான இடம்.  மேல்நாட்டுக்காரர்கள் பலர் இங்கேயே ஒரு சில நாட்கள் தங்கியிருந்து பல மலைப் பகுதிகளுக்கு நடந்தே (TREKKING) சென்று வருகிறார்கள்.   நேரத்தை  நிதானமாக,  மெதுவாக ஓட்டுகிறார்கள். விசாரித்துப் பார்த்ததில் ஒரு நாளைக்கான கூடார வாடகை சுமார் 8000 ரூபாய் மட்டுமே. ‘ஆம் ஆத்மி’களுக்கு கண்டிப்பாக சரிப்பட்டு வராது.


 ‘அங்கேயே இருக்க முடியவில்லையே’ என்ற மன வருத்தத்துடன் அடுத்த நாள் காலை டிஸ்கிட் புத்த விஹாரத்துக்குச் சென்று விட்டு நூப்ரா பள்ளத்தாக்கை விட்டுக் கிளம்பினோம்.




லே திரும்பி வந்த பிறகு ஒரு நாள் முழுவதும் எனக்கு முதுகு வலி. இருந்தும் நூப்ரா அனுபவம் மனதில் ஓடிக்கொண்டிருந்ததால் முதுகு வலியை அதிகமாக பொருட்படுத்தவில்லை.

அதைத் தவிர, அடுத்த நாள் நாங்கள் மிக அதிக எதிர்பார்ப்புடன் காத்திருந்த பேங்காங் ஏரிக்கு செல்லவேண்டும் என்ற உணர்வுடன் அருமையான இரவு உணவை அளவோடு உண்டு தூங்கச் சென்று விட்டோம்.

No comments:

Post a Comment