Pages

Sunday, September 11, 2016

5. லடாக் சுற்றுப் பயணம் – 5/6-ஆம் நாள் – பேங்காங் ஏரிக்கு விஜயம்

ஆகஸ்டு 11, 2016

எங்கள் லடாக் சுற்றுலாவின் 5-ஆம் நாள் காலையில் பேங்காங் ஏரிக்கு செல்வதற்கு மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம்.  

லே ஊரிலிருந்து சுமார் 180 கி. மீ தொலைவில் 14270 அடி உயரத்தில் உப்புத் தண்ணீரைக் கொண்ட பேங்காங் ஏரி அமைந்திருக்கிறது. சுமார் 134 கி. மீ நீளமுள்ள இந்த ஏரியின் 20 கி. மீ தூரம் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஏரியின் ஒரு பகுதி திபெத் நாட்டுக்குள் வருகிறது.  சூரிய ஒளி பட்டு இந்த ஏரியின் நீர்  நீல நிறமாக அழகாகத் தோற்றமளிக்கிறது. உப்புத் தண்ணீரை கொண்டதாக இருந்தும் குளிர் காலத்தில் இந்த ஏரியின் நீர் முழுவதுமாக உறைந்துவிடுகிறது என்று கேள்விப்பட்டோம்.
உலகிலேயே மிக அதிக உயரத்தில் வாகனங்கள் செல்ல வசதியுள்ள பாதைகளின் வரிசையில் இரண்டாவது இடத்திலிருக்கும் சேங் லா (கணவாய்) 17688 அடி உயரத்தில் இந்த ஏரிக்குப் போகும் பாதையில் இருக்கிறது.  இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான இந்திய எல்லைப் பாதைகள் அமைக்கும் நிறுவனம் (INDIAN BORDER ROAD ORGANIZATION) இந்த பகுதிகளில் பாதைகளை அமைத்து சிறப்பாக பராமரித்தும் பாதுகாத்தும் வருகிறது.  பதட்டம் ஏற்படக்கூடிய இந்தியா – சீனா எல்லைப் பகுதி என்பதால் இந்திய ராணுவத்தினரை பல இடங்களிலும் காணலாம். பேங்காங் ஏரிக்கருகேயுள்ள இடங்களில் பல திரைப்படங்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாகப் பேசப்படுவை ஆமீர்கான் நடித்த “3 இடியட்ஸ்” மற்றும் மணிரத்தினத்தின் ‘தில் ஸே” படங்கள். இந்த ஏரியை சுற்றியுள்ள மலைப் பகுதிகள் பல காட்டு மிருகங்கள் வசிக்கும் இடமாக இருக்கின்றன.

லே ஊரிலிருந்து  கிளம்பி அமைதியான சிந்து நதியின் கரையோரமாகவே கொஞ்ச தூரம் செல்ல வேண்டும்.
காரு என்ற இடத்தில் கட்டாந்தரை மலைகளுக்கு நடுவே அழகான, பசுமையான ‘சக்தி’ என்ற ஊர். காரு ஊரைத் தாண்டினால் சேங் லா வரை செங்குத்தாக மலையேற வேண்டும்.
பனிப்பாறைகளின் (AVALANCHE) சரிவு ஏற்படக்கூடிய குறுகிய பாதைகள் வழியாக காரை ஓட்டிக்கொண்டு செல்வது திகிலூட்டும் அனுபவம்.  பேங்காங் செல்லும் வழியில் பெரும்பாலான பகுதிகளில்  பாதை மிகச் சீராகவே இருந்தது. சின்னச் சின்ன மலை ஓடைகளைத் தாண்டிச் செல்லவேண்டியிருந்தது. அந்த இடங்களில் ஏன் சிறிய பாலங்கள்  நம்மால் அமைக்க முடிவதில்லை என்பது எனக்குள் அடிக்கடி ஏற்படும் கேள்வி. சேங் லா தாண்டிவிட்டால் பேங்காங் ஏரி வரை ஒரே இறக்கம்தான். வழுக்கிக்கொண்டே போகவேண்டியதுதான். காரின் ப்ரேக் பக்காவாக இருக்க வேண்டும்.


போகும் வழியில் கழிப்பறைகளைக் காண்பது அரிது.  இருக்கும் ஒன்றிரண்டு பொதுக் கழிப்பிடங்களும் சரியான பராமரிப்பு இல்லாமல் மிகவும் அசிங்கமாகவே காணப்பட்டன.  சுற்றுப் பயணம் செய்யும் பெண்களுக்கு கொஞ்சம் சிரமம்தான்.

துர்புக் என்ற ஊரில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுமாரான உணவை அளவோடு சாப்பிட்டு வயிற்றை ஓரளவு நிரப்பிக்கொண்டோம்.

போகும் வழியில் எல்லா இடங்களிலும் “ஜூலே” என்ற வாசகம் கொண்ட பலகைகள் நிறுத்தப்பட்டிருந்தன. “ஜூலே” என்றால் திபெத் மொழியில் ‘வணக்கம்’ என்று அர்த்தம் என்று ஓட்டுனர் கூறினார்.  நாங்களும் விளையாட்டாக எதிரே சந்தித்த பல வண்டிகளில் அமர்ந்திருந்தவர்களுக்கு ‘ஜூலே, ஜூலே” என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டே ஜாலியாகச் சென்றோம்.  

பேங்காங் ஏரிக்குச் சென்றடையும் முன்னே சற்று தூரத்தில் அழகான ஒரு வெட்டவெளி பள்ளத்தாக்கில் எங்கள் வண்டியை நிறுத்தினோம். நான்கு பக்கங்களிலும் மலை.
ஒரு பக்கத்தில் அழகிய ஒரு சிறு நதி. சிறிதும் பெரிதுமாக பல பாறைகள். தேனீர் அருந்துவதற்கு ஒரு கூடாரக் கடை. ரம்மியமான இடம். சொர்க்க லோகமே கீழிறங்கி வந்தது போல இருந்தது.
சிறிது நேரம் அங்கேயே நின்று பல புகைப்படங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் ஏரியை நோக்கி காரை செலுத்தினோம். மலையுச்சியிலிருந்து ஏரிக்கு இறங்கும் கடைசி இறக்கத்திலிருந்து நீல நிற ஏரியைப் பார்க்க முடிந்தது.
குறுகிய பாதையானதினால்  காரை நிறுத்தி புகைப்படம் எடுக்க முடியவில்லை.  


ஏரியை சென்றடைந்தபோது பலத்த சூறாவளிக் காற்று வீசிக்கொண்டிருந்தது. ஏரிக் கரையின் மேடான பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரங்களில் பல உணவு விடுதிகள். தேனீர் விற்கும் கடைகள். எல்லா கடைகளுமே தாங்கள்தான் “3 இடியட்ஸ்” படத்தின் ஏகபோக உரிமையாளர்கள் போல தங்கள் கடைகளை பற்றி விளம்பரப்படுத்திக்கொண்டிருந்தார்கள். வேகமாக அடித்த காற்றில் கூடாரங்கள் எங்கே பறந்துவிடுமோ என்று எனக்கு பயம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

காற்றைத் தொடர்ந்து மழையும் வந்துவிட்டால் ஏரியில் பொழுதைக் கழிக்க முடியாது என்று பயந்து ஏரியை நோக்கி ஓடினோம்.  ஏரிக்கருகே ஒரு பலகையில் கரீனா கபூர் ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டிருந்தாள்.  


ஏரிக்கரை இன்னொரு சொர்க்க லோகம் போலத் தோற்றமளித்தது. வெறும் வார்த்தைகளில் என்னதான் வர்ணித்தாலும் நேரில்  பார்ப்பது போல இருக்காது. அதனால் வர்ணிக்காமலே விட்டு விடுகிறேன். நாங்கள் பயந்தபடியே பலமாக மழை பிடித்துக்கொண்டது. கூடாரக் கடைகளுக்கு திரும்ப ஓடி வந்தோம். ஆனால், வெகு நேரம் மழை பெய்யவில்லை. சிறிது நேரத்திலேயே அடங்கிவிட்டது.  சூரியன் மீண்டும் பிரகாசமாக ஜொலித்தான்.

சாகச வீர பல இளைஞர்களும் இளைஞிகளும் (நூப்ரா பள்ளத்தாக்கு போலவே இங்கும்) மோட்டர் பைக் ஓட்டிக்கொண்டே லே ஊரிலிருந்து வந்திருந்தனர்.

சிறிது நேரத்துக்குப் பிறகு “3 இடியட்ஸ்” படமாக்கப்பட்ட இடத்திற்கு யாசீன் ஓட்டுனர் எங்களை காரில் அழைத்துச் சென்றார். போவதற்குப் பாதையென்று சொல்லிக்கொள்ளும் படியாக எதுவுமில்லை. கூழாங்கற்கள் நிறைந்திருந்த, மேடும் பள்ளமுமாக அமைந்திருந்த வெட்டவெளிப் பாதை வழியே பல சிறிய நீரோடைகளுக்கூடேயே போக வேண்டியிருந்தது. எங்கேனும் கார் நின்று விட்டாலோ, டயர் பங்க்சர் ஆனாலோ என்னாவது என்று உள்ளூரக் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. மீண்டும் மழை வேறு பிடித்துக்கொண்டது. “3 இடியட்ஸ்” படமாக்கப்பட்ட இடத்தை அடைந்தோம். எங்களிடன் மழைக்கான  மேலுடை எதுவுமில்லாததால் நானும் என் மனைவியும் காரை விட்டு கீழிறங்கவில்லை. காரின் கண்ணாடி வழியே பார்ப்பதற்கு அந்த இடம் மிகவும் அழகாக இருந்தது.  

அங்கிருந்து மீண்டும் ஏரிக் கரையோரமாகவே இன்னொரு கரடு முரடான வெளியில் காரை ஓட்டிச் சென்று  நாங்கள் தங்கவேண்டிய கூடார விடுதியைச் சென்றடைந்தோம்.

ஆம், அன்று இரவு எங்களுக்கு கூடார வாசம்தான்.  ஏரிக்கரையிலேயே  நிறுவப்பட்ட கூடாரங்களையே விடுதி அறைகளாகக் கொண்ட பல விடுதிகள் அங்கே இயங்கிக்கொண்டிருந்தன.  சிமெண்டால் கட்டப்பட்ட ஒரே ஒரு அறை மட்டும்  உணவுக்கூடமாக செயல்பட்டு வந்தது. பல கூடாரங்களில் அதுவுமில்லை.  கூடாரங்கள் பார்ப்பதற்கு அழகாகவும், சுத்தமாகவும், மிகவும் நேர்த்தியாகவும் காணப்பட்டன. எளிதில் அணுக முடியாத தொலை தூரத்தில் இவ்வளவு வசதியுடன் கூடாரங்கள் அமைப்பதற்கு மிகவும் சிரமப்பட்டிருப்பார்கள் என்று தோன்றியது.

நாங்கள் கொண்டு வந்திருந்த சிறிய பைகளை கூடாரத்தில் வைத்துவிட்டு வெளியே வந்தபொழுது எதிரே ஏரிக்கு மேலே மலைகளுக்கு முன்னே இரண்டு பிரம்மாண்டமான முழு வானவில்கள் தோன்றியிருப்பதைக் கண்டோம்.  
 நகர்புறங்களில் வெறும் கான்க்ரீட் கூரைகளையும் அழுக்கான பகுதிகளையுமே பொதுவாகப் பார்த்துப் பழகிய எங்களுக்கு இயற்கையான, பரந்த வெட்ட வெளியில் மிதமான குளிரில், ஏரிக்கருகே வானவில் நிறைந்து காணப்பட்ட வானத்தையும், சூரிய வெளிச்சத்தில் வண்ண வண்ணமாய் மின்னிய ஏரியின் நீரையும், ஏரிக்கு பின்னால் உயர்ந்து நிற்கும் மலைகளையும் இன்னொரு புறத்தில் மலையுச்சியில் இன்னும் உருகாத பனி உச்சிகளையும் பார்த்து மயங்கி நிற்கையில் அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண நாங்கள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள், அதிர்ஷ்டசாலிகள் என்று இறைவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டோம்.


மேடான பகுதியில் அமைந்திருந்த கூடாரத்திலிருந்து கீழே ஏரிக்குச் செல்வதற்கு சரியான பாதையெதுவுமில்லை. அதனால், கொஞ்சம் அங்குமிங்குமாக தாவித் தாவி, தாண்டித் சென்று ஏரியை அடைந்தோம். அங்கே இன்னும் பல சுற்றுலா பயணிகள் நீருக்கருகே விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஏரியின் நீர் ஜில்லென்று இருந்தது.
  

இரவு உணவு பிரமாதமாக இருந்தது. வாரத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் தேவையான உணவுப் பொருட்கள் வந்து சேருமாம். அப்படிப்பட்ட ஒரு இடத்தில் அருமையான சூப், பருப்புக் குழம்பு, காய்கறிகள், சப்பாத்தி, அப்பளம், இனிப்புப் பண்டம், பச்சைக் காய்களில் ‘சலாட்’ என்று அசத்தினார்கள்.

மின்சார வசதியில்லாத  இடம். அதனால் ஜெனரேட்டர் கொண்டே கூடாரங்களில் வெளிச்சத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்.  இரவு பதினொன்று மணிக்கெல்லாம் ஜெனரேட்டரை நிறுத்திவிட்டதால் எங்கும் இருட்டுதான்.
இருந்தும் நன்கு சாப்பிட்டுவிட்டு இரவு நன்றாகத் தூங்கினோம். ஏரிக்கருகே இருந்தும் அந்த உயரத்தில் அதிக குளிரில்லாதது எங்களுக்கு  நிம்மதியாக இருந்தது.  

வழக்கம் போல் காலை ஐந்தரை மணிக்கெல்லாம் எனக்கு விழிப்பு ஏற்பட்டு விட்டது.  கூடாரத்தை விட்டு வெளியே வந்தேன்.



சூரியன் ஏற்கெனவே வானத்தில் தோன்றியிருந்தான். ரம்மியமான, மனதுக்கு இதமான, அமைதியான, மிகவும் அழகான சூழ்னிலை. ஏரியின் நீர் சூரிய ஒளியில் மினுமினுத்துக் கொண்டிருந்தது. மீண்டும் இறைவனுக்கு நன்றி சொன்னேன்.   உணவுக் கூடத்தை நோக்கி நடந்தேன். சூடான தேனீர் தயாராக இருந்தது. குளிப்பதற்கு வென்னீர்கூட ஏற்பாடு செய்திருந்தார்கள். கூடாரத்தில் குழாயில் தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. சூடான, அருமையான பூரி, ஸப்ஜி காலை உணவாகக் கொடுத்தார்கள்.  அங்கேயே இருந்துவிடலாம் போலத்தான் இருந்தது.


பேங்காங் ஏரியையும் அதை சுற்றியிருந்த இடத்தையும் விட்டு கிளம்புவதற்கு மனதேயில்லை. திரும்பி வரும் வழியில் பல இடங்களில் காரை நிறுத்தி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.




காட்டில் வாழும் காட்டெருமை, மர்மோட், மலையாடுகள் போன்ற ஒரு சில காட்டு மிருகங்களையும் பார்த்தோம்.
சேங் லா-வில் ராணுவ வாகனங்களின் மிகப் பெரிய  அணி வகுப்பு கீழே இறங்குவதற்குக் காத்துக்கொண்டிருந்தது. மடமடவென்று அவர்கள் கீழே இறங்கும் முன்னே நாங்கள் முந்திக்கொண்டோம். வழியில் லே எல்லையில் ஒரு பஞ்சாபி ஹோட்டலில் சுவையான பரோட்டாவை உண்டுவிட்டு எங்கள் அறைக்கு வந்து மதியம் நன்றாகத் தூங்கினோம்.


மாலையில் மார்க்கெட்டில் இன்னொரு பஞ்சாபி ஹோட்டலில் அருமையான மசாலா போட்ட தேனீர் குடித்தோம்.  மீண்டும் கடை கடையாக என்ன கிடைக்கிறது என்று வேடிக்கை பார்த்தோம். வழக்கம் போல இரவு உணவும் மிகவும் சுவையாக இருந்தது. அடுத்த நாள் மிக தொலை தூரத்துக்கு போகும் திட்டம் எதுவுமில்லையென்பதால் அன்று நன்றாகவே வயிறு முட்ட உண்டு, நன்கு தூங்கினோம்.                                               
மன்னிக்கவும். இன்னும் ஒரு கடைசிப் பகுதிக்கு காத்திருக்கவும்.






No comments:

Post a Comment